03-08-2022 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! எப்போது புத்தியில் ஞானம் இருக்கிறதோ அப்போது பாபாவின் நினைவு நிரந்தரமாக இருக்கும். ஞானயுக்த் புத்தியினால் ஆன்மீக யாத்திரையை செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்.

கேள்வி:
ஈஸ்வரன் வள்ளல், இருப்பினும் ஈஸ்வரன் பெயரில் தானம் செய்யக் கூடிய பழக்கம் ஏன் நடந்துக் கொண்டிருக்கிறது?

பதில்:
ஏனென்றால், ஈஸ்வரனை தன்னுடைய வாரிசாக்கிக் கொள்கிறார்கள். இதனுடைய பலன் அடுத்த பிறவியில் அவர் கொடுப்பார் என நினைக்கிறார்கள். ஈஸ்வரனின் பெயரில் கொடுத்தல் என்றால், அவரை தன்னுடைய குழந்தையாக மாற்றிக் கொள்வதாகும். பக்தி மார்க்கத்தில் கூட குழந்தையாக மாற்றுகிறீர்கள். அதாவது அனைத்தையும் அர்ப்பணம் செய்கிறீர்கள். ஆகையால், ஒருமுறை அர்ப்பணம் ஆவதற்கு ஈடாக அவர் 21 பிறவிகளுக்கு அர்ப்பணம் ஆகிறார். நீங்கள் கிளிஞ்சலை எடுத்து வருகிறீர்கள். பாபாவிடமிருந்து வைரத்தை எடுத்துக் கொள்கிறீர்கள். இதன் காரணமாகத் தான் சுதாமாவின் எடுத்துக் காட்டு உள்ளது.

பாடல்:
இரவு பயணியே களைப்படையாதீர்கள்.....

ஓம் சாந்தி.
குழந்தைகள் இந்த பாடலின் ஒரு வரியிலேயே புரிந்துக் கொண்டிருப்பீர்கள். பாபா குழந்தைகளே, என்று கூறும் போது ஆத்மாக்களாகிய நாம், நமக்கு பாபா வந்து புரிய வைக்கிறார் என புரிந்துக் கொள்ள வேண்டும். ஆத்ம அபிமானி (உணர்வுடையவர்) ஆக வேண்டும். ஆத்மா மற்றும் உடல் இரண்டு பொருட்கள் என அனைவரும் அறிகிறார்கள். ஆத்மாக்களாகிய நமக்கும் தந்தை இருப்பார் என்பதை அறியவில்லை. ஆத்மாக்களாகிய நாம் நிர்வாண தாமத்தில் வசிப்பவர்கள். இந்த விசயங்கள் புத்தியில் வரவில்லை. இந்த ஞானம் முற்றிலும் மறைந்து போய்விடுகிறது என பாபா கூறுகிறார் அல்லவா! இப்போது இந்த நாடகம் முடியப் போகிறது என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அபவித்திரமான பதீத ஆத்மாக்கள் வீட்டிற்குத் திரும்பப் போக முடியாது. ஒருவர் கூட போக முடியாது. இது நாடகம் ஆகும். அனைத்து ஆத்மாக் களும் இங்கே வந்த பிறகு தான் திரும்பிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள். பாபா நமக்கு ஆன்மீக யாத்திரையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். ஏ, ஆத்மாக்களே! இப்போது பாபாவை நினைக்கக் கூடிய யாத்திரை செய்ய வேண்டும் என்கிறார். பல பிறவிகளாக நீங்கள் உடல் மூலமான யாத்திரையை செய்து வந்தீர்கள். இப்போது இது உங்களுடைய ஆன்மீக யாத்திரை யாகும். சென்று பிறகு மரண உலகத்தில் திரும்ப வரக் கூடாது. மனிதர்கள் உலகீய யாத்திரை சென்று திரும்ப வருகிறார்கள். அது உலகீய தேக உணர்வுடன் கூடிய யாத்திரையாகும். இது ஆன்மீக யாத்திரையாகும். எல்லையற்ற தந்தையைத் தவிர வேறு யாரும் இந்த யாத்திரையைக் கற்பிக்க முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நினைவு யாத்திரை தான் அனைத்திற்கும் ஆதாரம் ஆகும். குழந்தைகள் எவ்வளவு நினைவு செய்தாலும் யாருக்குள் சிறிதாவது ஞானம் இருக்கிறதோ அவர்களுடைய நினைவு நிலையாக இருக்கும். 84 பிறவிகளின் சக்கரத்தின ஞானம் அல்லவா! இப்போது நம்முடைய 84 பிறவிகள் முடிவடைந்திருக்கிறது. இது 84வது பிறவி யின் சக்கரத்தின் யாத்திரை. இதற்கு வருவதும், போவதுமான யாத்திரை என கூறப்படுகிறது. அனைவருமே வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். வருதல் மற்றும் போதல். பிறவி எடுத்தனர், பிறகு விடுத்தனர். இதற்குத் தான் வருவதும் போவதும் என்று கூறப்படுகிறது. இப்போது நீங்கள் இந்த துக்க தாமத்தின் வருவதும் போவதுமான சக்கரத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இது துக்க உலகம் ஆகும். இப்போது உங்களுடைய பிறப்பு இறப்பு அனைத்தும் அமர லோகத்தில் நடக்க வேண்டும். அதற்காக முயற்சி செய்து கொண்டே அமர்நாத்திடம் வந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் பார்வதிகள். அமர்நாத்திடம் அமர கதையைக் கேட்கிறீர்கள். அவர் எப்போதும் அமரராக இருக்கிறார். நீங்கள் எப்போதும் அமரர் கிடையாது. நீங்கள் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வருகிறீர்கள். இப்போது உங்களுடைய சக்கரம் நரகத்தில் இருக்கிறது. இதிலிருந்து உங்களை விடுவித்து சொர்க்கத்தில் வருவதும் செல்வதுமாக மாற்றுகிறார். அங்கே உங்களுக்கு எந்த துக்கமும் இருக்காது. இது உங்களுடைய கடைசி பிறவியாகும். எப்படி அழிவு ஏற்படுகிறது, என நீங்கள் பார்த்துக் கொண்டே செல்வீர்கள். போர் நடக்கக் கூடாது. அல்லது அணுகுண்டுகளை சமுத்திரத்தில் போட்டு விடுங்கள் என்று இப்படி தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் பாவம், இவர்கள் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இப்போது நேரம் முடிவடையப் போகிறது என்பதை இவர்கள் அறியவில்லை.

இப்போது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். உலகத்தில் இருப்பவர்கள். இப்போது தான் கலியுகம் ஆரம்பம் ஆகியிருக்கிறது. இன்னும் 40000 வருடங்களுக்குப் பிறகு சங்கமம் வரும் என நினைக்கிறார்கள். இந்த வியங்களும் சாஸ்திரங்களில் இருந்து தான் வந்திருக்கிறது. நீங்கள் என்னென்ன வேத சாஸ்திரங்கள் படித்திருக்கிறீர்களோ, தான புண்ணியம் போன்றவைகளை பல பிறவிகளாக செய்து கொண்டு வந்தீர்களோ அது அனைத்தும் பக்தி மார்க்கம் (வழி) என பாபா கூறுகிறார். நாம் முதலில் பிராமணர்களாகவும் பிறகு தேவதைகளாவும் மாறுகின்றோம் என நீங்கள் அறிகிறீர்கள். பிராமண வர்ணம் அனைத்தையும் விட உயர்ந்தது. இது நடைமுறையின் வியம் ஆகும். பிராமணன் ஆகாமல் யாரும் தேவதா வர்ணத்தில் வர முடியாது. நாம் பிரம்மாவின் குழந்தை கள் என நீங்கள் நிச்சயம் செய்கிறீர்கள். சிவபாபாவிடமிருந்து தெய்வீக இராஜ்யத்தை அடைந்துக் கொண்டிருக் கிறீர்கள். இப்போது உங்களுடைய முயற்சி நடந்துக் கொண்டிருக்கிறது. ஓடவும் வேண்டியிருக்கிறது. நன்கு படித்து பிறகு மற்றவர்களையும் கூட படிக்க வையுங்கள். தகுதி அடைய வைத்தால் அவர்களும் சொர்க்கத்தின் சுகத்தைப் பார்க்கலாம் அனைவரும் கிருஷ்ணபுரியை நினைக்கிறார்கள். ஸ்ரீ ராமரை சிறிய வயதில் ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதில்லை. ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகவும் அன்பைக் காண்பிக் கிறார்கள். ஆனால் குருட்டு நம்பிக்கை யோடு, எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. இச்சமயம் இந்த முழு சிருஷ்டியும் தமோபிரதானமாக கருப்பாக இருக்கிறது என பாபா புரிய வைத்திருக்கிறார். பாரதம் மிகவும் அழகாக தங்க யுகமாக இருக்கிறது. இப்போது கலியுகத்தில் இருக்கிறது. நீங்களும் கலியுகத்தில் இருக்கிறீர்கள். இப்போது கோல்டன் ஏஜில் போக வேண்டும். பாபா பொற்கொல்லர் வேலையை செய்துக் கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆத்மாவில் இரும்பு, செம்பினுடைய அழுக்கு படிந்திருக்கிறது, அதை நீக்குகிறார். இப்போது உங்களுடைய ஆத்மா மற்றும் உடல் இரண்டும் பொய்யாக மாறி விட்டிருக்கிறது. இப்போது மீண்டும் நீங்கள் உண்மையான தங்கமாக மாற வேண்டும். உண்மை யான தங்கத்தில் நிறைய கலப்படம் கலந்திருப்பதால் ஒரேயடியாக முலாம் பூசப்பட்டதாக இருக்கிறது. உங்களுடைய ஆத்மாவில் இப்போது சிறிது தங்கம் இருக்கிறது. நகையும் பழையதாக இருக்கிறது. இரண்டு கேரட் தங்கம் எனலாம். பாபா வந்து ஸ்ரீமத் கொடுக்கிறார். பாரதம் முற்றிலும் சொர்க்கமாக இருந்தது. வேறு எந்த தர்மத்தின் இராஜ்யமும் இல்லை. பிறகு அந்த சொர்க்கத்தில் போவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் மாயை செய்ய விடுவதில்லை. மாயை உங்களை மிகவும் எதிர்க்கிறது. யுத்த மைதானத்தில் உங்களை மிகவும் தோல்வி அடைய வைக்கிறது. போகப் போக ஏதாவது புயலில் வந்து விடுகிறார்கள். விகாரத்தில் விழுந்து ஒரேயடியாக முகத்தைக் கருப்பாக்கிக் கொள்கிறார்கள். பாபா இப்போது நான் உங்களுடையவன் முகத்தை வெள்ளையாக்குகிறேன் என்கிறார். நீங்கள் விகாரத்தில் விழுந்து பிறகு முகத்தைக் கருப்பாக்கிக் கொள்ளாதீர்கள். யோகத்தினால் தங்களுடைய நிலையை சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். சுத்தம் செய்து செய்து முழு கலப்படமும் போய்விடும். ஆகையால் யோக பட்டியில் இருக்க வேண்டும். பொற் கொல்லர்கள் இந்த விஷயங்களை நன்கு புரிந்துக் கொள்வார்கள். தங்கத்தின் கலப்படம் நெருப்பில் போடுவதால் நீங்கி விடுகிறது. பிறகு தங்கம் உண்மையான தங்கமாக (திரவமாக) மாறுகிறது. எவ்வளவு நீங்கள் என்னை நினைக்கிறீர்களோ அவ்வளவு தூய்மையாகிக் கொண்டே போகிறீர்கள் என பாபா கூறுகிறார். பாபா ஸ்ரீமத் கொடுப்பார் வேறு என்ன செய்யவார். பாபா கருணை காட்டுங்கள் என்கிறார். இப்போது பாபா என்ன கருணை காட்டுவார். நினைவில் இருந்தால் துரு நீங்கி விடும் என பாபா கூறுகிறார். எனவே நினைவில் இருக்க வேண்டுமா? அல்லது இரக்கம் ஆசீர்வாதம் கேட்க வேண்டுமா? இதில் ஒவ்வொருவரும் தனக்காக கடினமாக உழைக்க வேண்டும்.

ஆன்மீகக் குழந்தைகளே ! இந்த யாத்திரையில் களைத்துப் போகாதீர்கள் என பாபா கூறுகிறார். அடிக்கடி பாபாவை மறக்காதீர்கள் எவ்வளவு நினைக்கிறீர்களோ அவ்வளவு நேரம் நீங்கள் பட்டியில் இருப்பது போன்றாகும். நினைக்கவில்லை என்றால் பட்டியில் இருப்பது போன்று அல்ல. இன்னும் உங்கள் மூலமாக விகர்மங்கள் நடக்கிறது. சேர்ந்துக் கொண்டே போகிறது. இதன் மூலமாக நீங்கள் கருப்பாகிக் கொண்டே போகிறீர்கள். கடினமாக உழைத்து வெள்ளையாகி பிறகு கருப்பாகி விட்டால், நீங்கள் 50 சதவீதம் கருப்பாக இருந்தீர்கள், இப்போது இன்னும் 100 சதவீதம் கருப்பாகி விடுவது போன்றாகும். காம விகாரம் உங்களை கருப்பாக்கி விட்டது. அது காமச்சிதையாகும். இது ஞான சிதையாகும். முக்கியமான வியம் காம விகாரத்தினுடையதாகும். வீட்டில் கூட இதனால் தான் சண்டைகள் ஏற்படுகிறது. இப்போது நீங்கள் தூய்மையாக இருந்தால் நல்லதல்லவா ! என குமாரி களுக்கு புரிய வைக்கப்படுகிறது. அனைவரும் குமாரிகளின் கால்களைத் தொட்டு வணங்குகிறார்கள். ஏனென்றால் தூய்மையாக இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் பிரம்மா குமாரிகள் அல்லவா. பிரம்மா குமாரி களாகிய நீங்கள் தான் பாரதத்தை சொர்க்கமாக மாற்றுகிறீர்கள். எனவே உங்களுடைய நினைவுச் சின்னம் பக்தி மார்க்கத்தில் இருந்து வருகிறது. குமாரிகளுக்கு நிறைய மரியாதை கொடுக்கிறார்கள். பிரம்மா குமாரிகளும் இருக்கிறார்கள். ஆனால் மாதர்கள் அதிகம் இருக்கிறார்கள். பாபாவே வந்து வந்தே மாதரம் என்கிறார். நீங்கள் பாபாவை வாரிசாக்கிக் கொள்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் ஈஸ்வரனுக்கு ஏன் தானம் கொடுக்கிறீர்கள். பாபா குழந்தைகளுக்குக் கொடுக்கிறார் அல்லவா? பிறகு ஈஸ்வரனுக்கு ஏன் தானம் கொடுக்கிறீர்கள்? ஈஸ்வரனின் பெயரில் செய்கிறார்கள், கிருஷ்ணரின் பெயரில் செய்கிறார்கள். கிருஷ்ணர் உங்களுக்கு என்னவாக இருக்கிறார். நீங்கள் அவருக்குக் கொடுக்கிறீர்கள். ஏதாவது பொருள் இருக்க வேண்டும் அல்லவா! கிருஷ்ணர் ஏழை அல்லவே இருப்பினும் ஈஸ்வரனின் பெயரில், கிருஷ்ணரின் பெயரில் என்கிறார்கள். அப்படி நடப்பதில்லை. அவரோ சத்யுகத்தின் இளவரசனாக இருக்கிறார். நான் எல்லோருடைய மனோவிருப்பங்களையும் நிறைவேற்று கிறேன். கிருஷ்ணர் மனோ விருப்பங்களை நிறைவேற்றுவது கிடையாது என பாபா புரிய வைக்கிறார். அவர்களோ கிருஷ்ணரை ஈஸ்வரன் என நினைத்துக் கொண்டு கிருஷ்ணா அர்ப்பணம் என்கிறார்கள். உண்மையில் பலனை கொடுக்கக் கூடியவன் நானே! பக்தி மார்க்கத்தின் அனைத்து விஷயங்களும் புரிய வைக்கப்படுகிறது. சிவபாபாவிற்கு நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றால், நிச்சயமாக குழந்தையாகி விட்டீர்கள் அல்லவா? பக்தி மார்க்கத்தில் கூட குழந்தைகள், இங்கே கூட குழந்தைகள், பக்தி மார்க்கத்தில் அல்ப காலத்தின் பலன் கிடைக்கிறது. இப்போதோ நேரடியாக இருக்கிறார். ஆகவே, உங்களுக்கு 21 பிறவிகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது. இங்கேயோ முழுமையாக அர்ப்பணம் ஆக வேண்டும். நீங்கள் ஒரு முறை அர்ப்பணம் ஆகிவிட்டால் இவர் 21 முறை அர்ப்பணம் ஆகிறார். நீங்கள் பாபாவிடமிருந்து வைரத்தை அடைவதற்காக கிளிஞ்சல்களை எடுத்து வருகிறீர்கள். நாம் ஒரு பிடி அவலை சிவபாபாவின் பண்டாராவில் போடுகிறோம் என உள்ளுக்குள் நினைத்துக் கொள்கிறார்கள். சுதாமாவின் வியம் இப்போதையது ஆகும். சிவபாபா உங்களுக்கு என்னவாக வேண்டும். நீங்கள் அவருக்குக் கொடுக்கிறீர்கள். குழந்தை என்றால் நீங்கள் பெரியவர்களாகி விட்டீர்கள் அல்லவா? ஒன்று கொடுத்தால் லட்சம் பெறலாம் என புரிந்துக் கொள்கிறீர்கள். கொடுக்கக்கூடிய வள்ளல் அவர் ஒருவரே. சாதுக்கள் உங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. பக்தி மார்க்கத்தில் கூட நான் கொடுக்கிறேன். ஆகவே, பாபா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என கேட்கிறார். சிலருக்குப் புரிகிறது, சிலருக்குப் புரிவதில்லை. நாம் சிவபாபாவிற்கு பலி கொடுக் கிறோம் என நீங்கள் அறிகிறீர்கள். நம்முடைய உடல், மனம், பொருள் அனைத்தும் அவருடையதாகும். அவர் நமக்கு 21 பிறவிகளுக்கு ஆஸ்தியைக் கொடுப்பார். பணக்காரர்களின் இதயம் உடைந்து போகும். பாபாவின் பெயரே ஏழைப்பங்காளன் என்பதாகும். நீங்கள் தங்களின் இல்லற விவகாரத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாபா கூறுகிறார். நீங்கள் இங்கேயே அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஸ்ரீமத்படி மட்டும் நடந்துக் கொண்டே இருங்கள், என்னை மட்டும் நினையுங்கள், அவ்வளவு தான் ! பக்தி மார்க்கத்தில் நீங்கள் எனக்கு ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை என பாடுகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு விசயங்கள் புரிய வைக்கப்படுகிறது. அனைவரும் ஒரே மாதிரி புரிந்துக் கொள்ளக் கூடியவர்கள் கிடையாது. கடைசியில் வருவார்கள். பிறகு உங்களுக்குள்ளும் பலம் இருக்கும். கேட்டவுடன் வந்து பிடித்துக் கொள்வார்கள். பாபா நமக்கு 21 பிறவி களுக்கு சொர்க்கத்தின் அதிபதியாக்குகிறார் என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டால் ஒரு நொடி கூட விட மாட்டார்கள். இந்த பாபா தன்னுடைய அனுபவத்தைக் கூறுகிறார் அல்லவா? இவரோ வைர வியாபாரியாக இருக்கிறார். இப்படி இருந்து கொண்டே எப்படி ஆகிவிட்டார். போதும், பாபா மூலமாக சக்கரவர்த்தி பதவி கிடைக்கிறது பாருங்கள். வினாசத்தையும் பார்த்தார் இராஜ்யத்தையும் பார்த்தார். போதும் இந்த அடிமைத் தனத்தை விட்டு விடு என்றார். சாட்சாத்காரம் கிடைத்தது. ஆனால் ஞானம் இல்லை. எனக்கு இராஜ்ஜிய பதவி கிடைக்கிறது. போதும், பாபா சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை அளிக்க வந்திருக்கிறார் என்றால், உடனே பிடித்துக் கொள்ள வேண்டும் அல்லவா. பாபா இது அனைத்தும் தங்களுடையது. தங்களின் வேலையில் ஈடுபடுத்தி யாயிற்று. பாபாவும் அனைத்தையும் இந்த தாய்மார்களின் கையில் ஒப்படைத்து விட்டார். மாதர் களின் கமிட்டியை உருவாக்கினார். அவர்களிடம் கொடுத்து விட்டார். பாபா தான் அனைத்தையும் செய்வித்தார். பாபாவிடமிருந்து 21 பிறவிகளுக்கு சக்கரவர்த்தி பதவி கிடைக்கிறது என புரிந்துக் கொண்டார். எனவே, இப்போது நீங்களும் அடையலாம் அல்லவா? பாபா உடனடியாக அடிமைத் தனத்தை விட்டு விட்டார். எப்போது விட்டாரோ அப்போதிலிருந்து மிகவும் குஷியில் வந்து விட்டார். பலமுறை நாம் தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்திருக்கிறோம். பாபா பிரம்மா குமார் குமாரிகள் மூலமாக பலமுறை ஸ்தாபனை செய்திருப்பார். இப்படிபட்ட வியம் என்றால் ஏன் தாமதப்படுத்த வேண்டும். பாபாவிடமிருந்து நாம் 21 பிறவிகளுக்கு நிச்சயமாக ஆஸ்தி அடைய வேண்டும். பாபா வீடு வாசலைத் துறக்க வைக்கவில்லை. நல்லது, அவைகளையும் நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தந்தையை மட்டும் நினையுங்கள். நாம் பாபா வினுடையவர்களாக ஆகியிருக்கிறோம் என்ற போதை இருக்க வேண்டும். பாபா இன்னார், மிகவும் நன்கு நிச்சய புத்தி உடையவராக, புத்திசாலியாக இருக்கிறார், நிறைய பேருக்கு புரிய வைக்கிறார் என பாபாவிற்கு எழுதுகிறார்கள். ஆனால் நம்மிடம் நிச்சய புத்தி வருவதில்லை. பாபாவை சந்திக்கவே இல்லை, இறந்து போகிறார்கள் என்றால், பாபாவிடமிருந்து எப்படி ஆஸ்தி கிடைக்கும்? இங்கேயோ பாபாவின் மடியை அடைய வேண்டும் அல்லவா? நிச்சயம் ஏற்பட்டது. சரீரத்தை விட்டு விட்டனர். கடின உழைப்பு எதுவும் செய்யவில்லை. கலியுகத்திலிருந்து சத்யுகத்தினராக மாற வில்லை என்றால், பொதுவாக பிரஜைகளாகத் தான் பிறவி எடுப்பார்கள். ஒரு வேளை குழந்தையாகி, நன்கு உறுதியாகி பிறகு உடலை விட்டால் வாரிசாகி விடுவார்கள். வாரிசாவதில் எந்த கஷ்டமும் கிடையாது. சிலர் சூரிய வம்சத்தினர் இராஜ்ய பதவியை அடைகிறார்கள். சிலர் சேவை செய்து செய்து கடைசியில் ஒரு பிறவிக்காவது இராஜ்ய பதவியின் தலைப்பாகையைப் (கிரீடம்) பெறுவார்கள். அதில் எந்த சுகமும் கிடையாது. இராஜ்யத்தின் சுகம் முதலில் தான் இருக்கிறது. பிறகு கலைகள் குறைந்துக் கொண்டே போகிறது. குழந்தைகள் முயற்சி செய்து தாய் தந்தையைப் பின்பற்ற வேண்டும். மம்மா, பாபாவின் சிம்மாசனத்தில் அமருவதற்குத் தகுதி அடையுங்கள். ஏன் மனமுடைந்து போக வேண்டும். முயற்சி செய்து பின்பற்றுங்கள். சூரிய வம்சத்தின் சிம்மாசனத்திற்கு அதிபதியாகுங்கள். சொர்க்கத்திற்கு வாருங்களேன். தேர்ச்சி அடையவில்லை என்றால், சந்திர வம்சத்தில் சென்று விடுவீர். இரண்டு கலைகள் குறைந்து போகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தையிடம் ஆசீர்வாதம் கேட்பதற்குப் பதிலாக நினைவு யாத்திரையில் ஈடுபட்டிருக்க வேண்டும் ஆன்மீக யாத்திரையில் ஒரு போதும் களைப்படையக் கூடாது.

2. சிவபாபாவை தன்னுடைய வாரிசாக்கிக் கொண்டு அவரிடமும் முழுமையிலும் முழுமையாக அர்ப்பணம் ஆக வேண்டும். தாய் தந்தையைப் பின்பற்ற வேண்டும். 21 பிறவிக்கான இராஜ்ய பதவியின் சுகத்தை எடுக்க வேண்டும்.

வரதானம்:
நிமித்த உணர்வினுடைய அப்பியாசத்தின் மூலம் சுயத்தையும் மற்றும் அனைவரையும் முன்னேற்றக்கூடிய விலகிய மற்றும் அன்பானவர் ஆகுக.

நிமித்தம் ஆவதற்கான பார்ட் சதா விலகியவராகவும் அன்பானவராகவும் ஆக்குகிறது. நிமித்த உணர்வின் அப்பியாசம் இயல்பானதாகவும் சகஜமானதாகவும் இருக்குமானால் சதா சுயத்தின் முன்னேற்றம் மற்றும் அனைவரின் முன்னேற்றம் ஒவ்வோரடியிலும் நிறைந்திருக்கும். அந்த ஆத்மாக்கள் எடுத்து வைக்கும் அடி தரையில் அல்லாமல் ஸ்டேஜ் மீது இருக்கும். நிமித்தமாகியுள்ள ஆத்மாக்களுக்கு சதா இது ஸ்மிருதி சொரூபத்தில் இருக்கும் - அதாவது உலகத்திற்கு முன்னால் பாபாவுக்கு சமமான உதாரணமாக இருக்கிறோம்.

சுலோகன்:
சுகம் தரும் வள்ளலின் குழந்தைகள் நீங்கள் சதா சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருங்கள். துக்கத்தின் அலைகளில் வராதீர்கள்.