04-04-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 06.12.1987


வெற்றிக்கான ஆதாரம் -- சிரேஷ்ட விருத்தி (உள்ளுணர்வு)

இன்று பாப்தாதா தம்முடைய நாலாபுறம் உள்ள புனித அன்னப்பறவைகளின் சபையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வோர் அன்னப்பறவையும் தனது சிரேஷ்ட ஸ்திதியின் ஆசனத்தின் மீது அமர்ந்துள்ளார். அனைத்து ஆசனதாரி புனித அன்னப்பறவைகளின் சபை முழுக்கல்பத்திலும் அலௌகிகமானதும் தனிப்பட்டதும் ஆகும். ஒவ்வோர் அன்னப்பறவையும் தன்னுடைய விசேஷ தாக்களால் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டுள்ளார். விசேஷதாக்கள் சிரேஷ்ட அலங்காரமாகும். அலங்கரிக்கப் பட்ட அன்னப்பறவைகள் எவ்வளவு பிரியமானவர்களாக உள்ளனர்! பாப்தாதா ஒவ்வொருவரின் விசேஷதாக்களின் அலங்காரத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். அலங்கரிக்கப் பட்ட சபை, ஏனென்றால் பாப்தாதா பிராமண ஜென்மம் எடுத்ததுமே, குழந்தைப் பருவத்திலிருந்தே விசேஷ ஆத்மா பவ என்ற வரதானத்தைக் கொடுத்து விட்டார். வரிசைக்கிரமமாக இருந்த போதிலும் கடைசி நம்பரும் கூட விசேஷஆத்மா தான். பிராமண வாழ்க்கையில் வருவது என்றாலே விசேஷ ஆத்மாவில் வந்தே விட்டார். பிராமணப் பரிவாரத்தில் கடைசி நம்பராக இருந்தாலும் உலகத்தின் அநேக ஆத்மாக்களோடு ஒப்பிடும் போது அவரும் விசேஷமானவராகப் பாடப் படுகிறார். ஆகவே கோடியில் சிலர், அந்தச் சிலரிலும் ஒரு சிலர் எனப் பாடப் பட்டுள்ளனர். ஆக, பிராமணர்களின் சபை என்றால் விசேஷ ஆத்மாக்களின் சபை.

இன்று பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார் -- விசேஷதாக்களின் அலங்காரத்தையோ பாப்தாதா அனைவருக்கும் ஒரே சமமமாகத் தான் செய்வித்துள்ளார். ஆனால் சிலர் அந்த அலங்காரத்தை தாரணை செய்து சமயப் பிரமாணம் காரியத்தில் ஈடுபடுத்துகின்றனர். மற்றும் சிலரோ தாரணை செய்ய முடிவதில்லை, அல்லது சிலர் சமயத்தின் பிரமாணம் காரியத்தில் ஈடுபடுத்த முடிவதில்லை. எப்படி இப்போதைய ராயல் குடும்பத்தினர் சமயப் பிரமாணம் அலங்கரித்துக் கொள்கின்றனர் என்றால் எவ்வளவு நன்றாக உள்ளது! எப்படி சமயமோ அப்படி அலங்காரம். இதைத் தான் ஞானம் நிறைந்தவர் எனச் சொல்வது. தற்போது அலங்காரத்தின் வெவ்வேறு செட்களை (அணிகலன்கள்) வைத்துள்ளனர் இல்லையா? ஆக, பாப்தாதா அநேக விசேஷதாக்களின், அநேக சிரேஷ்ட குணங்களின் எத்தனை விதமான செட்கள் கொடுத்துள்ளார்? எவ்வளவு தான் விலைமதிக்க முடியாத அலங்காரமாக இருந்தாலும் சமயப் பிரமாணம் இல்லை என்றால் என்னவாகத் தோன்றும்? அந்த மாதிரி விசேஷதாக் களின், குணங்களின், சக்திகளின், ஞான ரத்தினங்களின் அநேக அலங்காரங்களை பாபா அனைவருக்குமே கொடுத்துள்ளார். ஆனால் சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்துவதில் வரிசைக் கிரமமாக ஆகி விடுகின்றனர். இவை அனைத்துமே அலங்காரங்கள் தாம் என்றாலும் ஒவ்வொரு விசேஷதா அல்லது குணங்களின் மகத்துவம் சமயத்தின் படி ஏற்படுகிறது. இருந்த போதிலும் சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்தவில்லை என்றால் விலைமதிக்க முடியாததாக இருந்த போதிலும் அதற்கு மதிப்பு இருப்பதில்லை. எந்தச் சமயம் எந்த விசேஷதாவை தாரணை செய்வதற்கான காரியம் உள்ளதோ, அந்த விசேஷதாவுக்குத் தான் மதிப்பு உள்ளது. எப்படி அன்னம், கற்கள் மற்றும் ரத்தினங்கள் -- இரண்டையும் கண்டறிந்து வேறுபடுத்தி தாரணை செய்கிறது. கல்லை விட்டுவிடு கிறது. மற்றப்படி ரத்தினங்கள் -- முத்துகளை தாரணை செய்கிறது. அது போல் புனித அன்னப்பறவை என்றால் சமயப் பிரமாணம் விசேஷதா அல்லது குணத்தைக் கண்டறிந்து, அதே சமயத்தில் பயன்படுத்த வேண்டும். அவர்கள் தாம் கண்டறியும் சக்தியுள்ள புனித அன்னப்பறவை எனச் சொல்லப் படுவார்கள். ஆக, கண்டறிவது மற்றும் நிர்ணயம் செய்வது -- இந்த இரண்டு சக்திகள் தாம் நம்பரை முன்னால் கொண்டு செல்கின்றன. எப்போது இந்த இரண்டு சக்திகளும் தாரணை ஆகின்றனவோ, அப்போது சமயப் பிரமாணம் அதே விசேஷதா மூலம் காரியமாற்ற முடியும். ஆகவே ஒவ்வொரு புனித அன்னப் பறவையும் தன்னுடைய இந்த இரண்டு சக்திகளையும் சோதித்துப் பாருங்கள். இரண்டு சக்திகளும் சமயத்தில் ஏமாற்றாமல் உள்ளனவா? சமயம் கடந்து போன பிறகு கண்டறிந்தீர்கள், நிர்ணயமும் செய்தீர்கள். ஆனால் சமயமோ கடந்து போய் விட்டது இல்லையா? யார் நம்பர் ஒன் புனித அன்னமாக உள்ளனரோ, அவர்களுக்கு இந்த இரண்டு சக்திகளும் சதா சமயத்தின் பிரமாணம் காரியம் செய்கின்றன. சமயத்திற்குப் பிறகு இந்த சக்திகள் காரியமாற்றுமானால் இரண்டாவது நம்பரில் வந்து விடுவார்கள். மூன்றாம் நம்பரின் விஷயத்தையோ விட்டு விடுங்கள். மேலும் யாருடைய புத்தி பவித்திரமாக உள்ளதோ, அவர்கள் தாம் சமயத்தில் இந்தக் காரியத்தைச் செய்ய முடியும்.

ஹோலி என்பதன் அர்த்தம் சொல்லப் பட்டுள்ளது இல்லையா? ஒன்று, ஹோலி என்றால் பவித்திரமானவர். மற்றும் இந்தியில் ஹோ லீ என்றால் நடந்தது நடந்து முடிந்து விட்டது. ஆக, யாருடைய புத்தி ஹோலியாக, அதாவது தூய்மையாக உள்ளதோ மற்றும் சதா எந்த விநாடி, எந்தச் சூழ்நிலை கடந்து சென்று விட்டதோ, அது முடிந்து போனது என்ற இந்த அப்பியாசம் உள்ளதோ, அத்தகைய புத்தி உள்ளவர்கள் சதா ஹோலியாக, அதாவது ஆன்மிக நிறத்தினால் நிறமேற்றப் பட்டவராக இருப்பார்கள். சதா பாபாவின் துணையின் நிறத்தினால் நிறமேற்றப் பட்டிருப்பார்கள். ஆக, ஒரே ஹோலி என்ற சொல் மூன்று ரூபத்தில் பயன்படுகிறது. இதில் இந்த மூன்று அர்த்தங்களின் விசேஷதாக்களும் உள்ளன. அதாவது எந்த அன்னப் பறவைகளுக்கு இந்த விதி வருகிறதோ, அவர்கள் ஒவ்வொரு சமயமும் வெற்றியடைகின்றனர். ஆக, இன்று பாப்தாதா புனித அன்னப்பறவைகளின் சபையில் புனித அன்னப்பறவைகள் அனைவரின் இந்த விசேஷதாவைப் பார்த்துக் கொண்டிருக் கின்றனர். ஸ்தூல காரியம் என்றாலும் சரி, ஆன்மிகக் காரியம் என்றாலும் சரி, இரண்டிலும் வெற்றிக்கான ஆதாரம் கண்டறியும் மற்றும் நிர்ணயம் செய்வதற்கான சக்திகள். யாருடைய தொடர்பில் வந்தாலும், எது வரை அவர்களின் உணர்வு மற்றும் பாவனையைக் கண்டறிய முடிய வில்லையோ, அப்போது இரண்டு காரியங்களிலும் வெற்றி கிடைப்பதில்லை -- மனிதராக இருந்தாலும் சரி, சூழ்நிலையாக இருந்தாலும் சரி, ஏனென்றால் மனிதர்களின் சம்மந்தத்தில் வரவேண்டி உள்ளது மற்றும் பரிஸ்திதிகளையும் கடந்து செல்ல வேண்டி உள்ளது. வாழ்க்கையில் இந்த இரண்டு விஷயங்களுமே வருகின்றன. ஆகவே நம்பர் ஒன் புனித அன்னப் பறவை என்றால் இரண்டு விசேஷதாக்களும் நிறைந்தவர்கள். இது தான் இன்றைய இந்த சபையின் செய்தி. இந்த சபை, அதாவது வெறுமனே முன்னால் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமல்ல. பாப்தாதாவின் முன்னாலோ உங்களோடு கூடவே நாலாபுறமும் உள்ள குழந்தைகளும் கூட இமர்ஜ் ஆகின்றனர். எல்லையற்ற பரிவாரத்தின் நடுவில் பாப்தாதா சந்திப்பை நிகழ்த்துகிறார் அல்லது ஆன்மிக உரையாடல் செய்கிறார். பிராமண ஆத்மாக்கள் தங்கள் நினைவின் சக்தி மூலம் தாங்களும் மதுவனத்தில் ஆஜராகியுள்ளனர். மற்றும் பாப்தாதாவும் இந்த விசேஷ விஷயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது ஒவ்வொரு குழந்தையின் விதியின் ரேகை மற்றும் சித்தியின் லைன், இந்த இரண்டு ரேகைகளும் எவ்வளவு தெளிவாக உள்ளன? ஆரம்பத்திலிருந்து இது வரை விதி எப்படி இருந்துள்ளது மற்றும் விதியின் பலன் சொரூபமாக சித்தி எவ்வளவு அடைந்துள்ளோம்? இரண்டு ரேகைகளும் எவ்வளவு தெளிவாக உள்ளன மற்றும் எவ்வளவு நீளமாக, அதாவது விதி மற்றும் சித்தியின் கணக்கு எவ்வளவு யதார்த்த ரூபத்தில் சேமிப்பாகியுள்ளது? விதியின் ஆதாரம் சிரேஷ்ட விருத்தியாகும். சிரேஷ்ட விருத்தி (உள்ளுணர்வு) உள்ளதென்றால் யதார்த்த விதியும் உள்ளது மற்றும் யதார்த்த விதி உள்ளதென்றால் சித்தி சிரேஷ்டமாகவே இருக்கும். ஆக, விதி மற்றும் சித்தியின் விதையாக விருத்தி உள்ளது. சிரேஷ்ட விருத்தி -- சதா சகோதர-சகோதரன் என்ற ஆத்மிக விருத்தி இருக்க வேண்டும். இதுவோ முக்கிய விஷயம் தான். ஆனால் அதோடு கூடவே தொடர்பில் வந்து கொண்டே ஒவ்வோர் ஆத்மாவிடமும் நன்மையின், அன்பின், சகயோகத்தின், சுயநலமற்ற தன்மையின் நிர்விகல்ப விருத்தி (தீய சங்கல்ப மல்லாத உள்ளுணர்வு) இருக்க வேண்டும். வீண் அல்லாத சங்கல்ப விருத்தி இருக்க வேண்டும். அநேக தடவை எந்த ஓர் ஆத்மாவின் மீதும் வீண் சங்கல்பம் அல்லது விகல்பத்தின் விருத்தி இருக்குமானால், விருத்தி எப்படியோ, அது போலவே அந்த ஆத்மாவின் காரியம், கர்மத்தின் சிருஷ்டி காணப்படும். அவ்வப்போது குழந்தைகள் சொல்வதைக் கேட்கவும் செய்கின்றனர் மற்றும் பார்க்கவும் செய்கின்றனர். விருத்தியின் காரணத்தால் வர்ணனையும் செய்கின்றனர். அவர்கள் எவ்வளவு தான் நல்ல காரியம் செய்தாலும் விருத்தி வீணானதாக இருக்கும் காரணத்தால் சதா அந்த ஆத்மாவின் முன்பாக வார்த்தையும் அந்த மாதிரி வெளிப்படுகிறது -- இவரோ இப்படித் தான், இருப்பதோ அது போலத் தான் என்று. ஆக, இந்த விருத்தி அவர்களின் கர்ம ரூப சிருஷ்டி அது போலவே அனுபவம் செய்விக்கிறது. எப்படி நீங்கள் இந்த உலகத்தில் கண்களின் பார்வைக்கான கண்ணாடியின் உதாரணம் சொல்கிறீர்கள் -- எந்த நிறத்தின் கண்ணாடி அணிவீர்களோ, காட்சியும் அதே நிறத்தில் தான் காணப்படும். அது போல இதில் எப்படிப்பட்ட விருத்தி இருக்கிறதோ, விருத்தி திருஷ்டியை மாற்றி விடுகிறது. விருத்தியின் விதை சதா சிரேஷ்டமானதாக இருக்குமானால் விதி மற்றும் சித்தி வெற்றி பூர்வமானதாக இருக்கவே செய்யும். ஆகவே முதலில் விருத்தியின் அஸ்திவாரத்தை சோதித்துப் பாருங்கள். அது சிரேஷ்ட விருத்தி எனச் சொல்லப் படும். ஏதேனும் சம்மந்தம்-தொடர்பில் சிரேஷ்ட விருத்திக்கு பதிலாக கலப்படமாக இருக்குமானால், எவ்வளவு தான் விதியைக் கையாண்டாலும் சித்தி ஏற்படாது. ஏனென்றால் விதையாக இருப்பது விருத்தி மற்றும் விருட்சம் என்பது விதி மற்றும் பழம் (பலன்) சித்தியாகும். விதை பலவீனமாக இருக்குமானால் விருட்சம் எவ்வளவு தான் விஸ்தார மாக இருந்தாலும் சித்தி ரூப பழம் இருக்காது. இந்த விருத்தி மற்றும் விதியினைப் பற்றி பாப்தாதா குழந்தைகளிடம் ஒரு விசேஷ ஆன்மிக உரையாடல் செய்து கொண்டிருந்தார்.

சுய முன்னேற்றத்திற்காக அல்லது சேவையின் வெற்றிக்காக ஒரு ரமணீகரமான ஸ்லோகன் நினைவுள்ளதா? ஒன்று முதலில் தாங்கள் -- இந்த ஸ்லோகன் நினைவுள்ளது இல்லையா? ஒன்று முதலில் தாங்கள். இரண்டாவது முதலில் நான். இரண்டு ஸ்லோகன்கள் -- முதலில் தாங்கள் மற்றும் முதலில் நான். இரண்டுமே அவசியம். ஆனால் பாப்தாதா ஆன்மிக உரையாடல் செய்து கொண்டே புன்சிரித்துக் கொண்டிருந்தார். எங்கே முதலில் நான் என்பது இருக்க வேண்டுமோ, அங்கே முதலில் தாங்கள் எனச் சொல்லி விடுகிறார்கள். எங்கே முதலில் தாங்கள் எனச் சொல்ல வேண்டுமோ, அங்கே முதலில் நான் எனச் சொல்லி விடுகின்றனர். மாற்றி விடுகின்றனர். எப்போது ஏதாவது சுய மாற்றத்தின் விஷயம் வருகிறதோ, அப்போது முதலில் தாங்கள் எனச் சொல்கிறீர்கள். இவர் மாறினால் நான் மாறுவேன். அப்போது முதலில் தாங்கள் என்று ஆகிறதல்லவா? மேலும் எப்போது ஏதாவது சேவையின் அல்லது ஏதாவது அந்த மாதிரி பரிஸ்திதியை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகிறது என்றால் முயற்சி செய்கின்றனர் -- முதலில் நான், நானும் இருக்கிறேன், எனக்கும் ஏதாவது கிடைத்தாக வேண்டும்.” ஆக, எங்கே முதலில் தாங்கள் எனச் சொல்ல வேண்டுமோ, அங்கே நான் எனச் சொல்லி விடுகின்றனர். சதா சுவமானத்தில் நிலைத்திருந்து மற்றவர்களுக்கு மதிப் பளித்தல் வேண்டும். அதாவது முதலில் தாங்கள் எனச் சொல்ல வேண்டும். வெறுமனே வாயினால் முதலில் தாங்கள் எனச் சொல்லிக் கொண்டு, கர்மத்தில் வேறு மாதிரி இருக்கக் கூடாது. சுவமானத்தில் நிலைத்திருந்து சுவமான் கொடுக்க வேண்டும். சுவமான் கொடுப்பது அல்லது சுவமானத்தில் நிலைத்திருப்பது என்பதன் அடையாளம் என்னவாக இருக்கும்? அதில் இரண்டு விஷயங்களை சதா செக் பண்ணுங்கள்.

ஒன்று, அபிமானத்தின் விருத்தி, இரண்டாவது அவமானத்தின் விருத்தி. யார் சுவமானத்தில் நிலைத்திருக்கிறார்களோ, மற்றும் மற்றவர்களுக்கு சுவமான் தரக்கூடியவராக இருக்கிறார்களோ, அவர்களிடம் இந்த இரண்டு விருத்திகளும் இருக்காது -- அபிமானத்தின் விருத்தியும் இருக்காது, அவமானத்தின் விருத்தியும் இருக்காது. இவரோ இப்படித் தான் செய்கிறார், இவர் இப்படித் தான் இருக்கிறார் -- ஆக, இதுவும் ராயல் ரூபத்தில் அந்த ஆத்மாவுக்கு அவமானமாகும். சுவமானத்தில் நிலைத்திருந்து சுவமான் கொடுப்பது -- இது தான் முதலில் தாங்கள் எனச் சொல்வதாகும். புரிந்ததா? மேலும் சுய முன்னேற்றத்தின் விஷயங்கள் என்ன உள்ளனவோ, அதில் சதா முதலில் நான் என்ற ஸ்லோகன் நினைவிருக்குமானால் ரிசல்ட் என்னவாகும்? முதலில் நான் என்றால் ஓட்டே ஸோ அர்ஜுன் (சேவை, புருஷôர்த்தம் முதலியவற்றில் நான் முதலில் என்று தன்னை முன்னிறுத்தி முதல் நம்பரில் வருபவர்). அர்ஜுன் என்றால் விசேஷஆத்மா. அர்ஜுன் என்றால் அசாதாரணமான ஆத்மா, அலௌகிக ஆத்மா, அலௌகிக விசேஷஆத்மா. எப்படி பிரம்மா பாபா சதா முதலில் நான் என்ற ஸ்லோகன் மூலம் ஓட்டே ஸோ அர்ஜுன் ஆனார் இல்லையா? அதாவது நம்பர் ஒன் ஆத்மா. நம்பர் ஒன் பற்றி சொல்லப் பட்டது -- நம்பர் ஒன் டிவிஷன். அது போல் நம்பர் ஒன்னாகவோ ஒருவர் தாம் இருப்பார் இல்லையா? ஆக, இரண்டு ஸ்லோகன்களுமே அவசியம். ஆனால் கேட்டீர்கள் இல்லையா -- நம்பர் எந்த ஆதாரத்தில் உருவாகிறது என்று? யார் சமயப் பிரமாணம் எந்த ஒரு விசேஷதாவையும் காரியத்தில் ஈடுபடுத்துவதில்லையோ, அப்போது நம்பர் முன்னே பின்னே ஆகி விடுகிறது. சமயத்தில் யார் காரியத்தில் ஈடுபடுத்துகிறார்களோ, அவர்கள் வெற்றி (வின்) பெறுகிறார்கள். அதாவது ஒன் ஆகி விடுகிறார்கள். ஆகவே இதைச் செக் பண்ணுங்கள் -- ஏனென்றால் இவ்வருடம் சுயத்தைச் சோதிப் பதற்கான விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். வெவ்வேறு விஷயங்கள் சொல்லப் பட்டன இல்லையா? ஆக, இன்று இந்த விஷயங்களை சோதித்துப் பாருங்கள் -- தாங்கள் என்பதற்கு பதிலாக நான், நான் என்பதற்கு பதிலாக தாங்கள் என்று சொல்லாமல் இருக்கிறீர்களா? இது தான் யதார்த்த விதி எனச் சொல்லப் படும். எங்கே யதார்த்த விதி உள்ளதோ, அங்கே சித்தி இருக்கவே செய்யும். மேலும் இந்த விருத்திக்கான (உள்ளுணர்வு) விதி சொல்லப் பட்டது -- இரண்டு விஷயங் களை சோதித்துப் பார்க்க வேண்டும் -- அபிமானத்தின் விருத்தியும் இருக்கக் கூடாது, அவமானத்தின் விருத்தியும் இருக்கக் கூடாது. எங்கே இந்த இரண்டும் இல்லாதிருக்கிறதோ, அங்கே தான் சுவமானத்தின் பிராப்தி உள்ளது. நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும், யோசித்தாலும் யோசிக்கா விட்டாலும், மனிதர், இயற்கை -- இரண்டுமே சதா தாமாகவே சுவமான் கொடுத்துக் கொண்டே இருக்கும். சங்கல்பத்தில் கூட சுவமானத்தின் பிராப்திக்கான ஆசையினால் சுவமான் கிடைக்காது. (நிர்மான்) பணிவுள்ளவர் ஆக வேண்டும். அதாவது முதலில் தாங்கள் எனச் சொல்ல வேண்டும். பணிவான ஸ்திதி தானாகவே சுவமான் கிடைக்கச் செய்யும். சுவமானத்தின் பரிஸ்திதிகளில் முதலில் தாங்கள் எனச் சொல்வது என்றால் பாப் சமான் ஆவதாகும். எப்படி பிரம்மா பாபா சதா சுவமான் கொடுப்பதில் முதலில் ஜெகதம்பா, முதலில் சரஸ்வதியாகிய அம்மா, பின்னால் பிரம்மா தந்தையை வைத்தார். பிரம்மா மாதாவாக இருந்தாலும் சுவமான் கொடுப்பதற்காக ஜெகதம்பா அம்மாவை முன்னால் வைத்தார். ஒவ்வொரு காரியத்திலும் குழந்தைகளை முன்னால் வைத்தார். மற்றும் புருஷôர்த்தத்தின் ஸ்திதியில் சதா தன்னை முதலில் நான் என்று இஞ்சின் ரூபத்தில் பார்த்தார். இஞ்சின் முன்னால் உள்ளது இல்லையா? சதா இந்த சாகார் (பிரம்மா) வாழ்க்கையில் பார்த்தோம் -- அதாவது நான் எதைச் செய்கிறேனோ, என்னைப் பார்த்து அனைவரும் செய்வார்கள். ஆக, விதியில், சுய முன்னேற்றத்தில் அல்லது தீவிர புருஷôர்த்தத்தின் வரிசையில் சதா முதலில் நான் என்பதை வைத்தார். ஆக, இன்று விதி மற்றும் சித்தியின் ரேகைகளை சோதித்துக் கொண்டிருந்தார். புரிந்ததா? ஆக, மாற்றி விடக் கூடாது. இந்த மாற்றி விடுதல் என்றால் பாக்கியத்தை மாற்றுவதாகும். சதா புனித அன்னப்பறவை ஆகி, நிர்ணய சக்தி, கண்டறியும் சக்தியை சமயத்தில் காரியத்தில் கொண்டுவரக் கூடிய விசால புத்தி உள்ளவர் ஆகுங்கள். மேலும் சதா விருத்தி ரூப விதையை சிரேஷ்டமாக்கி, விதி மற்றும் சித்தியை சதா சிரேஷ்டமானதாக அனுபவம் செய்து கொண்டே செல்லுங்கள்.

இதற்கு முன்பும் சொல்லியிருக்கிறோம், அதாவது பாப்தாதாவுக்குக் குழந்தைகள் மீது அன்பு உள்ளது. அன்பின் அடையாளம் என்ன? அன்புள்ளவர் சிநேகியின் குறையைப் பார்க்க முடிவதில்லை. சதா தன்னை மற்றும் சிநேகி ஆத்மாவை சம்பன்ன சமான் ஆத்மாவாகப் பார்க்க விரும்புவார். புரிந்ததா? ஆகவே அடிக்கடி கவனத்தை ஈர்க்கிறார், செக்கிங் செய்விக்கிறார் -- இது தான் சம்பன்னமாக்கு வதற்கான உண்மையான அன்பாகும். நல்லது.

இப்போது எல்லாப் பக்கங்களில் இருந்தும் பழைய குழந்தைகள் பெரும்பான்மையாக வந்துள்ளனர். பழையவர் என்று யாரைச் சொல்கிறார்கள்? அர்த்தத்தை அறிவீர்கள் இல்லையா? பாப்தாதா பழையவர்களுக்குச் சொல்கிறார் -- அனைத்து விஷயங்களிலும் பக்கா. பழையவர் என்றால் பக்கா. அனுபவமும் பக்கா ஆக்குகிறது. மாயா என்ற பூனை வருகிறது என்றால் பயந்து விடுகிற அந்த மாதிரி கச்சா (பக்குவமடையாதவர்) இல்லை. அனைவரும் பழையவர்கள், பக்காவாக இருப்பவர்கள் வந்திருக்கிறீர்கள் இல்லையா? சந்திப்பதற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்வதற்காக அனைவரும் முதலில் நான் என்று சொல்வார்களானால் அதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால் ஒவ்வொரு காரியத்திலும் விதிமுறையும் உள்ளது, லாபமும் உள்ளது. அவ்யக்த வதனத்தில் விதிமுறையின் விஷயம் கிடையாது. அங்கே விதியை உருவாக்க வேண்டியதில்லை. அவ்யக்த சந்திப்பிற்காக முயற்சி செய்ய வேண்டி உள்ளது. சாகார் சந்திப்பு சகஜமாக உள்ளது. அதனால் ஓடி வருகிறீர்கள். ஆனால் சமயப் பிரமாணம் எவ்வளவு விதிமுறையோ அவ்வளவு லாபம் உள்ளது. பாப்தாதா கொஞ்சம் சமிக்ஞை கொடுத்தாலும் புரிந்து கொள்கின்றனர் -- இப்போது என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏதேனும் நடக்க வேண்டும் என்றாலும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. சாகார் பாபா அவ்யக்த மானார் என்றால் சொல்லி விட்டுப் போனாரா என்ன? எது திடீரென நடக்கிறதோ, அது அலௌகிக அன்பானதாக இருக்கும். அதனால் பாப்தாதா சொல்கிறார் - சதா எவர்-ரெடியாக இருங்கள். எது நடக்குமோ, அது நல்லதிலும் நல்லதாகவே நடக்கும். புரிந்ததா? நல்லது.

அனைத்து புனித அன்னப் பறவைகளுக்கும், அனைத்து விசால புத்தி உள்ள, சிரேஷ்ட தூய்மையான புத்தியை தாரணை செய்யக்கூடிய, புத்திவான் குழந்தைகளுக்கு, சர்வ சக்திகளை, சர்வ விசேஷதாக்களை சமயப் பிரமாணம் காரியத்தில் கொண்டுவரக்கூடிய ஞானம் நிறைந்த ஆத்மாக்கள், யோகம் நிறைந்த ஆத்மாக்களுக்கு, சதா பாப் சமான் சம்பன்னமாகக் கூடிய, ஊக்கம்-உற்சாகத்தில் இருக்கக்கூடிய சம்பன்ன குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

வரதானம்:

எஜமான் தன்மையின் நினைவு மூலம் மிக உயர்ந்த அத்தாரிட்டியின் அனுபவம் செய்யக்கூடிய இணைந்த சொரூபதாரி ஆகுக.

முதலில் தன்னுடைய சரீரம் மற்றும் ஆத்மாவின் இணைந்த ரூபத்தை நினைவில் வையுங்கள். சரீரம் என்பது படைப்பு, ஆத்மா படைப்பவர். இதனால் எஜமான் தன்மை தானாகவே நினைவில் இருக்கும். எஜமான் தன்மையின் நினைவு மூலம் தன்னை மிக உயர்ந்த அத்தாரிட்டியாக அனுபவம் செய்வீர்கள். சரீரத்தை நடத்துபவராக இருப்பீர்கள். இரண்டாவது -- பாபா மற்றும் குழந்தை (சிவசக்தி) என்ற இணைந்த சொரூபத்தின் நினைவினால் மாயாவின் விக்னங்களை அத்தாரிட்டியுடன் கடந்து செல்வீர்கள்.

சுலோகன்:

ஸ்லோகன் : விஸ்தாரத்தை ஒரு விநாடியில் சுருக்கி ஞானத்தின் சாரத்தை அனுபவம் செய்யுங்கள் மற்றும் செய்வியுங்கள்.