08-03-2020 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுவனம் 04/12/85


எண்ணங்களின் மொழியே, அதிமேன்மையான மொழி ஆகும்.

இன்று, பாப்தாதாவின் முன்னால் இரட்டை ரூபத்தில் உள்ளவர்களின் இரட்டை ஒன்றுகூடல் உள்ளது. இரண்டும் அன்பான குழந்தைகளின் ஒன்றுகூடல்களே. ஒன்று, பௌதீக ரூபத்தில் உள்ள குழந்தைகளின் ஒன்றுகூடல். மற்றைய ஒன்றுகூடல், சூட்சும வடிவில் உள்ள அன்பான குழந்தைகளின் ஒன்றுகூடல். அன்புக்கடலான தந்தையுடன் சந்திப்பைக் கொண்டாடும்போது, எங்கும் உள்ள குழந்தைகள் தமது சூட்சும வடிவங்களில் பாப்தாதாவின் முன்னால் தமது அன்பை வெளிப்படுத்துகிறார்கள். பாப்தாதா குழந்தைகள் அனைவரினதும் அன்பான எண்ணங்களை, அவர்களின் இதயபூர்வமான ஊக்கமும் உற்சாகமும் மிக்க பல்வகையான எண்ணங்களைச் செவிமடுக்கிறார். அவர்களின் இதயபூர்வமான பல்வகை உணர்வுகளுடன், குழந்தைகள் தமது உரிமைகளைப் பற்றிக் கூறும் இனிய விடயங்களையும் பாப்தாதா செவிமடுக்கிறார். ஏனெனில், அவர்களுக்கு அன்பான உறவுமுறைக்கான உரிமை உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தனது இதயத்தின் நிலைமையையும், தனது பல்வகையான செயற்பாடுகளின் சூழ்நிலைகளின் நிலைமைகளையும், தமது சேவைச் செய்திகளையும் கண்களின் மொழியாலும் மேன்மையான, அன்பான எண்ணங்களின் மொழியாலும் தந்தையின் முன்னால் தெளிவாகச் சொல்கிறார்கள். பாப்தாதா குழந்தைகள் எல்லோரினதும் இதயபூர்வமான சம்பாஷணைகளை மூன்று ரூபங்களில் செவிமடுக்கிறார். ஓர் உரையாடல், கண்களின் மொழியினூடாக நடக்கிறது. இரண்டாவது உரையாடல், உணர்வுகளின் மொழியாலும், மூன்றாவது உரையாடல் எண்ணங்களின் மொழியாலும் நடக்கின்றன. வார்த்தைகளின் மொழி பொதுவானது. ஆனால் இந்த மூன்று மொழிகளும் ஆன்மீக யோகி வாழ்க்கையின் மொழிகள் ஆகும். இதை ஆன்மீகக் குழந்தைகளும் ஆன்மீகத் தந்தையும் மட்டுமே அறிவார்கள். அனுபவம் செய்வார்கள். நீங்கள் எந்தளவிற்கு அகநோக்காகவும் இனிமையான மௌனத்தில் ஸ்திரமாகவும் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமான அனுபவங்களை உங்களால் இந்த மூன்று மொழிகளாலும் ஆத்மாக்கள் அனைவருக்கும் கொடுக்க முடியும். இந்த அலௌகீக மொழிகள் மிகவும் சக்திவாய்ந்தவை. பெரும்பாலான மக்கள் இப்போது வார்த்தைகளின் மொழியைக் கேட்பதிலும் பேசுவதிலும் களைப்படைந்து விட்டார்கள். வார்த்தைகளின் மொழியைச் பேசும்போது, ஒரு சந்தர்ப்பத்தைத் தெளிவுபடுத்த நேரம் எடுக்கும். ஆனால், கண்களின் மொழியோ, சமிக்ஞைகளைக் கொடுக்கும் மொழி ஆகும். மனதின் உணர்வுகளின் மொழியானது, உங்களின் முகபாவனைகளால் வெளிப்படுத்தப்படும். உங்களின் முகபாவனை, உங்களின் மன உணர்வுகளையும் வெளிப்படுத்தும். உதாரணமாக, ஒருவர் இன்னொருவரின் முன்னால் செல்லும்போது, அந்த நபர் அன்புடன், வெறுப்புடன் அல்லது சுயநலமான நோக்கங்களுடன் வந்துள்ளாரா என்பதை அவரின் கண்களும் முகச்சாயல்களும் காட்டும். எனவே, உங்களால் முகபாவனையினூடாக உணர்வுகளின் மொழியை அறிந்து கொள்ளவும் பேசவும் முடியும். அதேபோன்று, எண்ணங்களின் மொழியே அதிமேன்மையான மொழி ஆகும். ஏனெனில், எண்ணத்தின் சக்தியே அதிமேன்மையான சக்தி ஆகும். அது ஆதி சக்தி ஆகும். அனைத்திலும் விரைவான மொழி, எண்ணங்களின் மொழியே ஆகும். ஒருவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், உங்களுக்குத் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகள் எவையும் இல்லாவிட்டாலும், உங்களால் அவருக்கு எண்ணங்களின் மொழியால் ஒரு செய்தியைக் கொடுக்க முடியும். இறுதியில், இந்த எண்ணங்களின் மொழியே பயன்படும். விஞ்ஞானத்தின் வசதிகள் அனைத்தும் செயலிழந்து போனதும், மௌனத்தின் வசதிகளான இவையே பயனுள்ளதாக இருக்கும். எவ்வாறாயினும், இணைப்பொன்றை ஏற்படுத்துவதற்கு, அந்தத் தொடர்பு எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். ஒரேயொரு தந்தையுடன் அவர் உங்களுக்குக் கொடுத்த ஞானத்தால் சதா மும்முரமாக இருப்பதை எந்தளவிற்கு அதிகமாகப் பயிற்சி செய்கிறீர்களோ, அவர் உங்களுக்குக் கொடுத்த ஞானத்தால் எந்தளவிற்குச் சேவை செய்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் தொடர்பு (லைன்) அந்த மேன்மையான எண்ணங்களால் தெளிவானதாக இருக்கும். வீணான எண்ணங்களாலேயே எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படுகின்றன. நீங்கள் எந்தளவிற்கு வீணானவை அனைத்தையும் முடித்து, சக்திவாய்ந்த எண்ணங்களை உருவாக்குகிறீர்களோ, அந்தளவிற்கு வார்த்தைகளின் மொழியை அனுபவம் செய்வது போல், எண்ணங்களின் மேன்மையான மொழியை மக்கள் அனுபவம் செய்வார்கள். ஒரு விநாடியில், எண்ணங்களின் மொழியால், வார்த்தைகளின் மொழியை விட அதிகமான அனுபவத்தை எவருக்கும் கொடுக்க முடியும். மூன்று நிமிட உரையின் சாரத்தை உங்களால் எண்ணங்களின் மொழியால் ஒரு விநாடியில் கொடுக்க முடியும். நினைவுகூரப்படும் ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி’ என்ற அனுபவத்தை அவர்கள் பெறச் செய்ய முடியும்.

அகநோக்கில் உள்ள ஆத்மாக்களின் மொழி, இந்த ஆன்மீக மொழியே ஆகும். இப்போது, காலத்திற்கேற்ப, இந்த மூன்று மொழிகளாலும் நீங்கள் இலகுவான வெற்றியைப் பெறுவீர்கள். குறைந்தளவு முயற்சியும் குறைந்தளவு நேரமும் தேவைப்படும். ஆனால் வெற்றி இலகுவாக இருக்கும். எனவே, இப்போது இந்த ஆன்மீக மொழியைப் பயிற்சி செய்யுங்கள். எனவே, இன்று, பாப்தாதா குழந்தைகளின் இந்த மூன்று மொழிகளினூடாக அவர்கள் சொல்வதைக் கேட்பதுடன், குழந்தைகள் எல்லோருக்கும் பதிலும் அளிக்கிறார். எல்லோருடைய ஆழ்ந்த அன்பின் ரூபத்தைப் பார்த்து, பாப்தாதா அந்த அன்பு அனைத்தையும் அன்புக்கடலில் அமிழ்த்துகிறார். அனைவரின் நினைவும் ஒரு ஞாபகார்த்தம் ஆகவேண்டும் என அவர் எல்லோருக்கும் மேன்மையான ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறார். ஒவ்வொருவரின் மனதிலும் உள்ள வெவ்வேறு உணர்வுகளை அறிந்து, குழந்தைகள் அனைவருக்கும் அந்த உணர்வுகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் பாப்தாதா, ‘நீங்கள் அனைவரும் எப்போதும் தடைகளில் இருந்து விடுபட்டிருப்பீர்களாக, நீங்கள் சக்திசாலி ஆகுவீர்களாக, நீங்கள் சகல சக்திகளாலும் நிரம்பியவர்கள் ஆகுவீர்களாக’ என்ற தூய ஆசிகளைக் கொடுக்கிறார். தந்தையின் தூய ஆசிகளால், குழந்தைகளின் தூய விருப்பங்கள் எவையாயினும், சந்தர்ப்பத்திற்கேற்ப எந்த ஒத்துழைப்பினதும் நல்லாசிகளினதும் உணர்வுகளாயினும், அந்தத் தூய விருப்பங்கள் அனைத்தும் தொடர்ந்து பாப்தாதாவின் மேன்மையான ஆசிகளால் நிறைவேறும். தொடர்ந்து முன்னேறும்போது, சிலவேளைகளில், கடந்தகாலத்தின் கர்மக்கணக்குகள் சில குந்தைகளின் முன்னால் பரீட்சைத்தாளின் வடிவில் வரும். அது சரீரத்தில் ஏற்படும் நோயாகவோ, மனதின் வீணான புயல்களாகவோ, உறவுமுறைகள் அல்லது தொடர்புகளின் ரூபத்திலோ இருக்கலாம். சிலவேளைகளில், நெருங்கி ஒத்துழைப்பவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்குப் பதில், சிறிதளவு முரண்பாடு ஏற்படும். எவ்வாறாயினும், அந்தப் பழைய கணக்குகளும் பழைய கடன்களும் தீர்க்கப்படுகின்றன. ஆகவே, குழப்பங்களில் அகப்பட்டுக் கொள்வதற்குப் பதிலாக, உங்களின் புத்திகளைச் சக்திவாய்ந்தவை ஆக்குங்கள். உங்களின் புத்திகளின் சக்திகளால், அந்தப் பழைய கடன்களைக் கடன்களாக அனுபவிப்பதற்குப் பதிலாக, நீங்கள் எப்போதும் அவற்றை சதா உங்களைச் சித்தி அடையச் செய்வதற்குப் பொறுப்பானவை என்றே உணர்வீர்கள். என்ன நடக்கின்றதென்றால், உங்களின் புத்தியில் சக்தி இல்லாததால், நீங்கள் அந்தக் கடனை ஒரு சுமையாக அனுபவம் செய்கிறீர்கள். பின்னர் அந்தச் சுமையால், உங்களின் புத்தியால் சரியான தீர்மானத்தை எடுக்க முடியாமல் போகிறது. சரியான தீர்மானத்தை எடுக்காததால், அந்தச் சுமை உங்களை மேலும் கீழேயே இழுத்துச் செல்லும். அப்போது உங்களால் வெற்றியின் உச்சத்தைத் தொட முடியாமல் இருக்கும். இதனாலேயே, கடன் தீர்க்கப்படுவதற்குப் பதிலாக, சிலவேளைகளில், அது அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆகவே, உங்களின் பழைய கடன்களைத் தீர்ப்பதற்கான வழிமுறை, உங்களின் புத்திகளை சதா தெளிவாக வைத்திருப்பதே ஆகும். உங்களின் புத்தியில் எந்தவிதச் சுமையையும் வைத்திருக்காதீர்கள். உங்களின் புத்தியை எந்தளவிற்கு இலேசாக வைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு புத்தியின் சக்தியானது இலகுவாக நீங்கள் வெற்றி பெறச் செய்யும். எனவே, பயப்படாதீர்கள். சுமையை உருவாக்கும் ‘ஏன் இது நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது? இது இப்படியாகத்தான் இருக்க வேண்டும்….’. என்ற வீணான எண்ணங்களை முடித்துவிடுங்கள். உங்களின் புத்தியின் தொடர்பைத் தெளிவாக வைத்திருங்கள். அதை இலேசாக வைத்திருங்கள். அப்போது, உங்களின் தைரியத்தாலும் தந்தையின் உதவியாலும், நீங்கள் தொடர்ந்து வெற்றியைப் பெறுவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?

இலேசாகவும் ஒளியாகவும் ஆகுவதற்குப் பதில், நீங்கள் இரட்டைச் சுமையை எடுத்துக் கொள்கிறீர்கள். கடந்தகாலக் கணக்குகளினதும் வீணான எண்ணங்களினதும் கணக்குகளின் இரட்டைச் சுமை, உங்களை மேலே எடுத்துச் செல்லுமா அல்லது கீழே கொண்டுவருமா? இதனாலேயே, பாப்தாதா குறிப்பாகக் குழந்தைகளான உங்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கிறார்: எப்போதும் உங்களின் புத்திகளில் உள்ள எந்தவொரு சுமையையும் தொடர்ந்து நீக்குங்கள். எந்தவகையான சுமையும் புத்தியின் யோகத்தை, கர்மக்கணக்குகளின் வேதனையாக மாற்றிவிடும். ஆகவே, எப்போதும் உங்களின் புத்திகளை இலேசாக வைத்திருங்கள். ஆகவே, யோக சக்தியும் புத்தியின் சக்தியும் எந்தவகையான வேதனையையும் முடித்துவிடும்.

சேவைக்காக அனைவரும் கொண்டிருக்கும் வெவ்வேறு வகையான உற்சாகமும் பாப்தாதாவை வந்தடைந்துள்ளன. எந்தளவிற்கு ஒருவர் நேர்மையான இதயத்துடன் சுயநலமற்ற முறையில் சேவை செய்கிறாரோ, அந்தளவிற்குப் பிரபுவானவர் சந்தோஷம் அடைகிறார். பிரபு சந்தோஷப்படுவதன் அடையாளம், உங்களின் இதயத்தின் திருப்தியும் சேவையில் வெற்றியும் ஆகும். நீங்கள் இதுவரை செய்தவை அனைத்தும் நல்லதே. நீங்கள் இன்னமும் செய்யவிருக்கும் அனைத்தும் நல்லவையே. நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது, அது மேலும் சிறப்பானது ஆகும். இதனாலேயே, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களின் ரூபத்தில் அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார்: சதா தொடர்;ந்து முன்னேறி, சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் தொடர்ந்து வளருங்கள். இந்த ஆசீர்வாதத்துடன், பாப்தாதா பலமில்லியன் மடங்கு அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். கையால் கடிதங்கள் எழுதிய அல்லது தமது மனங்களால் கடிதங்கள் எழுதிய குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா பதிலையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறார்: நீங்கள் மேன்மையான முயற்சி செய்தவண்ணம் எப்போதும் இந்த மேன்மையான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வீர்களாக. இத்தகைய மேன்மையான அன்பான உணர்வுகளுடன், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

08ஃ03ஃ2020 மதுவனம் அவ்யக்த பாப்தாதா ஓம் சாந்தி 08ஃ12ஃ85

குழந்தையும் அதிபதியும்

இன்று, பாப்தாதா தனது சக்திசேனையைப் பார்க்கிறார். இந்த ஆன்மீக சக்தி சேனையினர் மனதை வென்றவர்களாகவும் உலகை வென்றவர்களாகவும் இருக்கிறார்களா என்றும் பார்க்கிறார். மனதை வென்றவராக இருத்தல் என்றால், வீணானவற்றையும் மனதின் எதிர்மறையான எண்ணங்களையும் வென்றவராக இருத்தல் என்று அர்த்தம். இதனாலேயே, ‘நீங்கள் மனதை வென்றால், உலகை வெல்வீர்கள்’ என்பது நினைவுகூரப்படுகிறது. உங்களின் எண்ணங்களின் சக்தியை, அதாவது, உங்களின் மனதின் சக்தியை எந்தளவிற்கு உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் உலக இராச்சியத்திற்கான உரிமையைக் கோருவீர்கள். இந்த வேளையில், நீங்கள் இறை குழந்தைகள். இப்போது குழந்தைகளாக இருப்பவர்கள் மட்டுமே உலக அதிபதிகள் ஆகமுடியும். ஒரு குழந்தை ஆகாமல் உங்களால் அதிபதி ஆகமுடியாது. எல்லைக்குட்பட்ட அதிபதியாக இருக்கும் எல்லைக்குட்பட்ட போதையை முடித்து, ஒரு குழந்தை ஆகுங்கள். அப்போது மட்டுமே குழந்தையால் அதிபதி ஆகமுடியும். இதனாலேயே, பக்தி மார்க்கத்தில், ஒரு நாட்டின் தலைவர் எத்தனை பெரியவராக இருந்தாலும், அவர் பெருஞ்செல்வத்தின் அதிபதியாகவும் குடும்பத்தின் அதிபதியாகவும் இருந்தாலும், தந்தையின் முன்னால், பிரார்த்தனை செய்யும்போது, ‘நான் உங்களின் குழந்தை!’ என்றே சொல்வார். ‘நான் இன்ன தலைவர்’ என அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார். பிராமணக் குழந்தைகளான நீங்களும் குழந்தைகள் ஆகுகிறீர்கள். இதனாலேயே, நீங்கள் இப்போது கவலையற்ற சக்கரவர்த்திகளும், எதிர்கால உலகின் அதிபதிகளும் ஆவீர்கள். அதாவது, நீங்கள் சக்கரவர்த்திகள் ஆகுவீர்கள். குழந்தையாகவும் அதிபதியாகவும் இருக்கும் விழிப்புணர்வானது, எப்போதும் உங்களுக்கு அசரீரியாகவும் அகங்காரமற்ற ஸ்திதியிலும் இருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு குழந்தை ஆகுவதெனில், உங்களின் எல்லைக்குட்பட்ட வாழ்க்கையை மாற்றுதல் என்று அர்த்தம். நீங்கள் ஒரு பிராமணர் ஆகும்போது, உங்களின் பிராமண வாழ்க்கையைப் பற்றிக் கற்றுக்கொண்ட முதலாவதும் இலகுவானதுமான பாடம் என்ன? குழந்தைகள், ‘பாபா!’ என்று சொன்னார்கள். தந்தையும் ‘குழந்தையே!’ எனச் சொன்னார். இந்த ஒரு வார்த்தையின் பாடம் உங்களை ஞானம் நிறைந்தவர் ஆக்குகிறது. நீங்கள் ‘குழந்தை’ என்ற ஒரு வார்த்தையின் பாடத்தைக் கற்றிருந்தால், நீங்கள் சகல ஞானத்தையும் கற்றுள்ளீர்கள். அது இந்த ஓர் உலகைப் பற்றியது மட்டுமன்றி, மூவுலகங்களையும் பற்றியதாகும். இன்றைய உலகில், மக்கள் எத்தனை ஞானம் நிறைந்தவர்களாக இருந்தாலும், அவர்களால் மூவுலகங்களின் ஞானத்தை அறிந்து கொள்ள முடியாது. இதைப் பொறுத்தவரை, அந்த ஒரு வார்த்தையைக் கற்ற உங்களின் முன்னால், அந்த மகத்தான ஞானம் நிறைந்தவர்களும் அறியாமையில் இருப்பவர்களே. நீங்கள் மிக இலகுவாக மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். பாபாவும் குழந்தைகளும்: அனைத்தும் இந்த இரண்டு வார்த்தைகளில் அடங்கியுள்ளன. முழு மரமும் விதையில் அமிழ்ந்திருக்கும்போது, ஒரு குழந்தை (பச்சே) ஆகுவதெனில், சதா மாயையிடமிருந்து பாதுகாப்பாக (பச்சே ஹ_) இருத்தல் என்று அர்த்தம். மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். அதாவது, நீங்கள் குழந்தைகள் என்ற விழிப்புணர்வுடன் இருங்கள். ‘நான் ஒரு குழந்தை!’, அதாவது, நான் பாதுகாக்கப்பட்டுள்ளேன் என்ற விழிப்புணர்வுடன் எப்போதும் இருங்கள். இந்தப் பாடம் கஷ்டமானதா? இது இலகுவானதல்லவா? எனவே, நீங்கள் ஏன் அதை மறக்கிறீர்கள்? சில குழந்தைகள் தாம் அதை மறக்கக்கூடாது என நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் ஏன் மறக்கிறீர்கள்? அது ஆழமாகப் பதிந்துள்ள ஒரு சம்ஸ்காரம் அல்லது அது மிகப் பழைய சம்ஸ்காரம் என அவர்கள் பதில் அளிக்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் மரணித்து வாழ்வதனால், இறக்கும்போது என்ன நிகழும்? உங்களுக்கு இறுதிக்கிரியைகள் செய்வார்கள், அல்லவா? பழையதைத் தகனம் செய்யும்போதே உங்களால் புதியதொரு பிறவியை எடுக்க முடியும். இறுதிக் கிரியைகள் செய்திருந்தால், எங்கிருந்து பழைய சம்ஸ்காரங்கள் மீண்டும் வந்தன? ஒரு உடலை எரிக்கும்போது, பெயர், உருவம் என்ற சுவடுகள் அனைத்தும் முடிந்துவிடுகின்றன. எனவே, நீங்கள் அந்த நபரைப் பற்றிப் பேசும்போது, ‘இன்னார் இவ்வாறிருந்தார்...’ என்றே நீங்கள் கூறுவீர்கள். ‘இன்னார் இவ்வாறு இருக்கிறார்....’ என நிகழ்காலத்தில் சொல்ல மாட்டீர்கள். எனவே, உடலைத் தகனம் செய்ததும், உடல் முடிந்துவிடுகிறது. பிராமண வாழ்க்கையில் நீங்கள் எதைத் தகனம் செய்கிறீர்கள்? உங்களிடம் அதே உடல் இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களின் பழைய சம்ஸ்காரங்களையும் பழைய ஞாபகங்களையும் பழைய சுபாவத்தையும் எரித்துவிடுகிறீர்கள். இதனாலேயே, இது மரணித்து வாழ்தல் என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தகனக் கிரியைகளைச் செய்தபின்னர், எங்கிருந்து பழைய சம்ஸ்காரங்கள் மீண்டும் வரமுடியும்? தகனம் செய்யப்பட்ட ஒருவர் உங்களின் முன்னால் வந்தால் அதை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? நீங்கள் அதை ஓர் ஆவி என்றே அழைப்பீர்கள். எனவே, இங்கும், எரிக்கப்பட்ட சம்ஸ்காரங்கள் மீண்டும் வெளியில் வந்தால், அதை என்னவென்று சொல்வது? அதுவும் மாயையின் ஆவியே. அப்படியல்லவா? ஆவிகளை விரட்டுவார்கள். அவற்றைப் பற்றிப் பேச மாட்டார்கள். அவற்றை உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் என அழைத்து, நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். நீங்கள் பழைய விடயங்களை விரும்பினால், நிஜத்தில் உங்களின் ஆதி சம்ஸ்காரங்களான பழைய விடயங்களை நினைவு செய்யுங்கள். இவை மத்தியகாலத்தின் சம்ஸ்காரங்கள். இவை அனைத்திலும் பழையவை அல்ல. மத்தி என்பது மத்தியகாலம். எனவே, மத்தியை நினைவு செய்வதெனில், கடலின் மத்தியில் துன்பத்திற்கு உள்ளாகுதல் என்று அர்த்தம். எனவே, இத்தகைய பலவீனமான விடயங்களைப் பற்றி நினைக்காதீர்கள். எப்போதும், குழந்தையும் அதிபதியும் என்ற இரண்டு வார்த்தைகளை நினைவு செய்யுங்கள். குழந்தையாக இருக்கும் விழிப்புணர்வானது, இயல்பாகவே அதிபதியாக இருக்கும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். எவ்வாறு ஒரு குழந்தை ஆகுவது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஒரு குழந்தை ஆகுங்கள். அதாவது, சகல சுமைகளில் இருந்தும் இலேசானவர் ஆகுங்கள். சிலவேளைகளில் ‘உங்களுடையது’ என்றும், சிலவேளைகளில் ‘என்னுடையது’ என்றும் சொல்வது, அதைக் கடினம் ஆக்குகிறது. பணியைக் கஷ்டமாகக் கருதும்போதே, ‘உங்களுக்கு உங்களின் பணியைப் பற்றித் தெரியும்!’ என நீங்கள் சொல்கிறீர்கள். அது இலகுவாக இருக்கும்போது, ‘எனது’ என நீங்கள் சொல்கிறீர்கள். ‘எனது’ என்ற உணர்வை முடித்தல் என்றால், ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருத்தல் என்று அர்த்தம். ஒரு யாசகர் போன்று ஆகுங்கள் எனத் தந்தை சொல்கிறார். அந்த வீடு, அதாவது அந்தச் சரீரமும் உங்களுடையது அல்ல. நீங்கள் அதைக் கடனாகவே பெற்றுள்ளீர்கள். பாபா அதை உங்களுக்கு இறை சேவைக்காகக் கடனாகக் கொடுத்துள்ளார். உங்களை ஒரு தர்மகர்த்தா ஆக்கியுள்ளார். இது உங்களிடம் நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கும் இறைவனின் பெறுமதிவாய்ந்த சொத்து ஆகும். உங்களிடமிருந்த அனைத்தையும், இது ‘உங்களுடையது’ எனக்கூறி, நீங்கள் அதைத் தந்தையிடம் கொடுத்தீர்கள். நீங்கள் இந்த சத்தியத்தைச் செய்தீர்கள், அல்லவா? அல்லது, நீங்கள் அதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் இந்தச் சத்தியத்தைச் செய்தீர்களா? அல்லது, அரைவாசி உங்களுடையதும் அரைவாசி என்னுடையதும் என்றுள்ளதா? நீங்கள் ஏற்கனவே பாபாவிடம் ‘உங்களுடையது’ எனக்கூறியவற்றை, இப்போதும் உங்களுடையதாகக் கருதி நீங்கள் பயன்படுத்தினால் என்ன நிகழும்? அதனூடாக நீங்கள் சந்தோஷத்தை அனுபவிப்பீர்களா? நீங்கள் வெற்றி பெறுவீர்களா? ஆகவே, அதை நீங்கள் பாபாவிற்குச் சொந்தமாகவும், உங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் நீங்கள் கருதினால், நீங்கள் இயல்பாகவே ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருக்கும் சந்தோஷத்தையும் போதையையும் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, இந்தப் பாடத்தை சதா உறுதியாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இந்தப் பாடத்தை உறுதியாக்கிக் கொண்டீர்கள், அல்லவா? அல்லது, உங்களின் சொந்த இடங்களுக்குச் சென்றதும் இதை மறந்துவிடுவீர்களா? எதையும் மறக்காதவர்கள் ஆகுங்கள். அச்சா.

ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருக்கும் ஆன்மீக போதையை சதா கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், சதா ஒரு குழந்தையாக இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பவர்களுக்கும், அதாவது, ஒரு கவலையற்றற சக்கரவர்த்தியாக இருக்கும் விழிப்புணர்வை சதா கொண்டிருப்பவர்களுக்கும், தமக்கு நம்பிக்கைப் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டவற்றைச் சேவைக்காகச் சதா பயன்படுத்தும் குழந்தைகளுக்கும், புதிய ஊக்கத்தையும் புதிய உற்சாகத்தையும் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:

நீங்கள் உங்களை மாற்றி, ‘விசேடமானவர்’ என்ற வார்த்தையின் விழிப்புணர்வினால் உங்களின் முழுமை என்ற இலக்கை அடைவீர்களாக.

‘நான் ஒரு விசேடமான பணிக்குக் கருவியாக இருக்கும் ஒரு விசேடமான ஆத்மா’ என்ற விழிப்புணர்வை எப்போதும் கொண்டிருப்பதுடன் சிறப்பியல்பையும் வெளிப்படுத்துங்கள். குறிப்பாக ‘விசேடம்’ என்ற வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். உங்களின் பேச்சு விசேடமானதாக இருக்க வேண்டும். நீங்கள் பார்ப்பது விசேடமானதாக இருக்க வேண்டும். நீங்கள் செய்வது விசேடமானதாக இருக்க வேண்டும். உங்களின் சிந்தனையும் விசேடமானதாக இருக்க வேண்டும். அனைத்தையும் விசேடம் ஆக்குவதன் மூலம், நீங்கள் இலகுவாக சுயத்தை மாற்றுபவராகவும் உலகை மாற்றுபவராகவும் ஆகுவீர்கள். அத்துடன் இலகுவாக முழுமையை அடையும், அதாவது, உங்களின் இறுதி இலக்கைச் சென்று அடையும் இலட்சியத்தை நிறைவேற்றுவீர்கள்.

சுலோகம்:

தடைகளைக் கண்டு பயப்படுவதற்குப் பதிலாக, அவற்றைப் பரீட்சைத்தாள்களாகக் கருதி, சித்தி எய்துங்கள்.