15-03-2020 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுவனம் 11/12/85


உண்மையான சேவையாளரின் அடையாளங்கள்.

இன்று, அன்புக்கடலான பாப்தாதா தனது அன்பான குழந்தைகளைப் பார்க்கிறார். அவர் ஒவ்வொரு குழந்தையினதும் மூன்று சிறப்பியல்புகளைப் பார்க்கிறார். எந்தளவிற்கு ஒவ்வொரு குழந்தையும் மூன்று சிறப்பியல்புகளாலும் நிரம்பியுள்ளார்? இந்த மூன்று சிறப்பியல்புகளும், அன்பு, ஒத்துழைப்பு, அதாவது, இலகுயோகம், சக்தி சொரூபமாக இருத்தல், அதாவது, செயல்படும்போது ஓர் உயிர்வாழும் ஒளி மற்றும் சக்தி வீடாக இருத்தல் என்பவை ஆகும். உங்களின் எண்ணம், வார்த்தை, செயலினூடாக நடைமுறையில் இந்த மூன்று ரூபங்களையும் எவரும் அனுபவம் செய்ய வேண்டும். இந்தச் சிறப்பியல்புகள் உங்களுக்காக மட்டுமன்றி, மற்றவர்களும் இந்த மூன்று சிறப்பியல்புகளையும் அனுபவம் செய்ய வேண்டும். தந்தை அன்புக்கடலாக இருப்பதைப் போன்று, ஞானம் உள்ள அல்லது ஞானம் இல்லாத எந்தவோர் ஆத்மாவும் மாஸ்ரர் கடல்களின் முன்னால் வரும்போது, மாஸ்ரர் அன்புக்கடல்கள் தமக்கு அன்பு அலைகளின் அனுபவத்தைக் கொடுப்பதாக அனுபவம் செய்ய வேண்டும். கடற்கரைக்குச் செல்லும் எவரும், இயல்பாகவே குளிர்மையையும் அமைதியையும் அனுபவம் செய்வதைப் போன்று, மாஸ்ரர் அன்புக்கடல்களினூடாக அவர்கள் ஆன்மீக அன்பை அனுபவம் செய்ய வேண்டும். அத்துடன் தாங்கள் உண்மையான அன்பைப் பெறும் ஓரிடத்தை வந்தடைந்து விட்டோம் என்பதையும் உணர வேண்டும். ஆன்மீக அன்பு சூழலில் ஆன்மீக நறுமணமாக அனுபவம் செய்யப்பட வேண்டும். நீங்கள் தந்தையிடம் அன்பு வைத்திருப்பதாக நீங்கள் எல்லோரும் கூறுகிறீர்கள். நீங்கள் அவரிடம் உண்மையான அன்பு வைத்திருப்பதைத் தந்தையும் அறிவார். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது அன்பின் நறுமணத்தை உலகில் பரப்ப வேண்டும். நீங்கள் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இந்த நறுமணத்தின் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். இவர் ஒரு மேன்மையான ஆத்மா என ஒவ்வோர் ஆத்மாவும் சொல்ல வேண்டும். தந்தைக்கு மட்டும் அன்பானவராக இருக்காதீர்கள். ஆனால் சதா எல்லோரிடமும் அன்பாக இருங்கள். அனைவரும் எல்லா வேளையும் இந்த இரண்டு சிறப்பியல்புகளையும் அனுபவம் செய்யும்போது, நீங்கள் மாஸ்ரர் அன்புக்கடல் என்று அழைக்கப்படுவீர்கள். இன்றைய உலகம் உண்மையான, ஆத்ம உணர்வு அன்பிற்கான பசியுடன் இருக்கிறது. எங்கும் சுயநலமான அன்பைப் பார்க்கையில், அவர்களின் இதயங்கள் அந்த அன்பிற்கு அப்பால் சென்றுவிட்டன. இதனாலேயே, அனைவரும் ஆத்ம உணர்வு அன்பைச் சில கணங்களுக்கேனும் அனுபவம் செய்தாலும் அதைத் தமது வாழ்க்கையின் ஆதாரமாகக் கருதுகிறார்கள்.

உங்களின் செயல்களிலும் சேவையிலும் மற்றவர்களுக்கான அன்பெனும் சிறப்பியல்பைக் கொண்டு வருவதில் எந்தளவிற்கு நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார். ‘நான் மிகவும் அன்பானவன்’ என நினைத்து, உங்களின் சொந்த மனதில் களிப்படையவில்லை, அல்லவா? உங்களிடம் அன்பு இல்லாவிட்டால், எவ்வாறு நீங்கள் தந்தைக்குச் சொந்தம் ஆகியிருப்பீர்கள்? எவ்வாறு பிராமண வாழ்க்கையில் முன்னேறி இருப்பீர்கள்? உங்களின் சொந்த மனதில் நீங்கள் திருப்தியுடன் இருக்கிறீர்கள் என்பதை பாப்தாதா அறிவார். உங்களுக்குப் போதுமான அளவு உங்களிடம் உள்ளது. அது நல்லதே. ஆனால், குழந்தைகளான நீங்கள் அனைவரும் தந்தையின் சேவையாளர்கள். தந்தை உங்கள் அனைவரையும் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆக்கி, சரீரங்கள், மனங்கள், செல்வம் என்பனவற்றைச் சேவைக்காக உங்களிடம் கொடுத்துள்ளார். ஒரு சேவையாளரின் கடமை என்ன? ஒவ்வொரு சிறப்பியல்பையும் சேவையில் பயன்படுத்துவதே. உங்களின் சிறப்பியல்பைச் சேவையில் பயன்படுத்தாவிட்டால், அந்தச் சிறப்பியல்பு வளராது. அது அப்படியே இருக்கும். இதனாலேயே, சில குழந்தைகள் இப்போது தந்தைக்குச் சொந்தமாக இருப்பதை அனுபவம் செய்வதுடன், தினமும் வகுப்பிற்குச் செல்கிறார்கள், தமது முயற்சிகளில் முன்னேறிச் செல்கிறார்கள், சகல கோட்பாடுகளையும் பின்பற்றுகிறார்கள். எனினும் அவர்களின் முயற்சிகளில் இருந்து அவர்கள் பெற வேண்டிய முன்னேற்றத்தை அவர்களால் அனுபவம் செய்ய முடியாமல் உள்ளது. அவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களால் வளர முடியவில்லை. இதற்கான காரணம் என்ன? அவர்கள் சேவைக்காகத் தமது சிறப்பியல்புகளைப் பயன்படுத்துவதில்லை. சேவை என்பது வெறுமனே ஞானத்தையும் ஏழு நாள் பாடநெறியையும் கொடுப்பதில்லை. ஞானத்தைக் கூறுதல் துவாபர யுக ஆரம்பத்தில் இருந்தே தொடர்கிறது. எவ்வாறாயினும், இந்த பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பானது, எதையாவது விவரித்தல், அதாவது, எதையாவது கொடுத்தல் என்பதாகும். பக்தி மார்க்கத்தில், விவரித்தல் என்றால் எதையாவது பெறுதல் என்று அர்த்தம். ஆனால், இந்த வேளையில் விவரித்தல் என்றால் எதையாவது கொடுத்தல் என்று அர்த்தம். ஏனெனில், நீங்கள் அருள்பவரின் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் கடலின் குழந்தைகள் ஆவீர்கள். உங்களுடன் தொடர்பில் வரும் எவரும் எதையாவது எடுத்துக் கொண்டு செல்லும் அனுபவத்துடன் செல்ல வேண்டும். எதையாவது செவிமடுத்து விட்டுச் செல்வதாக மட்டும் இருக்கக்கூடாது. அவர்கள் ஞானத்துடன், அன்புச் செல்வத்துடன், நினைவின் சக்தி என்ற செல்வத்துடன், சக்திகளின் செல்வத்துடன், ஒத்துழைப்பின் செல்வத்துடன் செல்ல வேண்டும். அதாவது, அவர்கள் தமது கைகளில், அதாவது, தமது புத்திகளில் இவற்றை நிரப்பிக் கொண்டு செல்வார்கள். இதுவே உண்மையான சேவை ஆகும். ஒரு விநாடி திருஷ்டியால், வெகு சில வார்த்தைகளால், உங்களின் சக்திவாய்ந்த மனோபாவத்தினதும் உங்களின் தொடர்பினதும் அதிர்வலைகளால், நீங்கள் ஓர் அருள்பவராகிக் கொடுக்க வேண்டும். இத்தகைய சேவையாளர்களே உண்மையான சேவையாளர்கள் ஆவார்கள். இந்த முறையில் கொடுப்பவர்கள், சதா ஒவ்வொரு கணமும் வளர்ச்சியை, தாம் ஒவ்வொரு கணமும் வளர்ச்சி அடைவதை அனுபவம் செய்வார்கள். இல்லாவிடின், நீங்கள் பின்னால் செல்லாவிட்டாலும், நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் முன்னேறவும் முடியாதிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். எனவே, அருள்பவர்களாகி, ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். அதேபோன்று, நீங்கள் உங்களுக்கு மட்டும் ஒத்துழைப்பவர்களாகவும் இலகு யோகிகளாகவும் இருக்கிறீர்களா? உங்களின் ஊக்கம், உற்சாகம், ஒத்துழைப்பின் அலைகள் மற்றவர்களையும் ஒத்துழைக்கச் செய்ய வேண்டும். உங்களின் ஒத்துழைப்பின் சிறப்பியல்பால், ஆத்மாக்கள் அனைவரும் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதை உணர வேண்டும். தங்களுக்கு எந்த நேரத்திலும் பலவீனமான ஸ்திதி ஏற்படும்போது அல்லது இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது, நீங்களே அவர்களுக்கு முன்னேறுவதற்கு உதவி செய்பவர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். ஆத்மாக்களான உங்களிடம் ஒத்துழைப்பிற்கான சிறப்பியல்பு உள்ளது என்பதை அனைவரும் அனுபவம் செய்ய வேண்டும். இதுவே உங்களின் சிறப்பியல்பைச் சேவையில் பயன்படுத்துதல் எனப்படுகிறது. நீங்கள் தந்தையுடன் ஒத்துழைக்கிறீர்கள். ஆனால் தந்தை உலகிற்கே ஒத்துழைக்கிறார். இவரும் தந்தையைப் போல அனைவருடனும் ஒத்துழைக்கிறார் என்ற அனுபவத்தின் வார்த்தைகள் சகல குழந்தைகளைப் பற்றியும் அவர்களிடம் இருந்து வெளிப்பட வேண்டும். வெறுமனே ஒன்று அல்லது இரண்டு நபர்களுடன் தனிப்பட்ட முறையில் ஒத்துழைக்காதீர்கள். அது சுயநலத்துடன் ஒத்துழைத்தல். அது எல்லைக்குட்பட்ட முறையில் ஒத்துழைத்தல். உண்மையான, ஒத்துழைக்கும் ஆத்மாக்கள் எல்லையற்ற முறையில் ஒத்துழைப்பார்கள். உங்கள் அனைவரினதும் பட்டம் என்ன? நீங்கள் உலக உபகாரிகளா அல்லது உங்களின் நிலையத்திற்கு மட்டும் உபகாரம் செய்பவர்களா? நீங்கள் உங்கள் நாட்டின் உபகாரிகளா அல்லது உங்களின் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் உபகாரம் செய்பவர்களா? இத்தகைய பட்டம் உங்களிடம் இல்லையல்லவா? உலக உபகாரிகளான நீங்கள் உலக அதிபதிகள் ஆகப் போகிறீர்களா அலலது உங்களின் சொந்த இடங்களுக்கு மட்டும் அதிபதிகள் ஆகப்போகிறீர்களா? தனது சொந்த நிலையத்தின் எல்லைகளுக்குள் இருக்கும் ஒருவர், தனது சொந்த மாளிகைக்கு மட்டுமே அதிபதி ஆகுவார். எவ்வாறாயினும், நீங்கள் இப்போது எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை அல்ல. எனவே, அனைவருக்கும் ஒத்துழைக்கும் சிறப்பியல்பைப் பயன்படுத்துவதே, ஒத்துழைக்கும் ஆத்மாவாக இருத்தல் எனப்படுகிறது. இந்த வழிமுறையால், சக்திசாலி ஆத்மா ஒருவர் சகல சக்திகளையும் தனக்காக மட்டுமன்றி, சேவையில் அனைவருக்காகவும் பயன்படுத்துவார். எவருக்காயினும் சகித்துக் கொள்ளும் சக்தி இல்லாவிட்டால், அது உங்களிடம் இருந்தால், அவருக்கு அந்தச் சக்தியைக் கொடுப்பதே, அதைச் சேவையில் பயன்படுத்துதல் எனப்படுகிறது. நான் சகித்துக் கொள்கிறேன் என நினைக்காதீர்கள். உங்களின் சகித்துக் கொள்ளும் நற்குணத்தின் ஒளியும் சக்தியும் மற்றவர்களைச் சென்று அடைய வேண்டும். கலங்கரைவிளக்கத்தின் வெளிச்சம் அதற்கு மட்டும் உரியதல்ல. அது மற்றவர்களுக்கும் ஒளியைக் கொடுத்து, அவர்களுக்குப் பாதையைக் காட்டுகிறது. இத்தகைய சக்தி ரூபம் ஆகுங்கள். அதாவது, வெளிச்சவீடாகவும் சக்தி வீடாகவும் ஆகி, மற்றவர்களுக்கு அதன் நன்மையின் அனுபவத்தைக் கொடுங்கள். அவர்கள் பலவீனம் என்ற இருளில் இருந்து சக்தி என்ற வெளிச்சத்திற்குள் வருவதை அனுபவம் செய்ய வேண்டும். இந்த ஆத்மா தனது சொந்த சக்தியால் நானும் சக்திசாலி ஆகுவதற்கு உதவுவார் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதன் அர்த்தம் என்னவென்றால், ஒரு கருவியாக இருப்பதன் மூலம் அந்த ஆத்மா தந்தையுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கு நீங்கள் உதவுவீர்கள் என்பதே ஆகும். நீங்கள் ஒருவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்து அவரை உங்களிடம் சிறைப்படுத்துவீர்கள் என்பதல்ல. இத்தகைய ஆத்மாக்கள், தமது சிறப்பியல்புகளை, தந்தையின் பரிசைத் தாம் மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம் என்ற விழிப்புணர்வுடனும் சக்தியுடனுமே சேவையில் பயன்படுத்துவார்கள். உண்மையான சேவையாளர்களின் அடையாளங்கள், அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் தந்தை புலப்படுவார். அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்குத் தந்தையை நினைவூட்டும். அவர்களின் ஒவ்வொரு சிறப்பியல்பும், அருள்பவரை நோக்கிக் காட்டுவதற்கான சமிக்ஞையாக இருக்க வேண்டும். மக்கள் சதா தந்தையை மட்டுமே பார்க்க வேண்டும். அவர்கள் உங்களைப் பார்க்கக்கூடாது. ஆனால் எப்போதும் தந்தையையே பார்க்க வேண்டும். யாராவது உங்களுடன் ஒத்துழைத்தல், நீங்கள் ஒரு உண்மையான சேவையாளராக இருப்பதன் அடையாளம் இல்லை. உங்களின் சிறப்பியல்பாலேயே ஒருவர் உங்களுடன் மிகவும் ஒத்துழைக்கிறார் என ஒருபோதும் சிறிதளவு எண்ணத்தையும் கொண்டிராதீர்கள். ஒத்துழைக்கும் ஆத்மாவிற்கு ஒத்துழைப்புக் கொடுப்பது உங்களின் கடமை ஆகும். அவர்கள் தந்தையைப் பார்க்காமல் உங்களைப் பார்த்தால், அது சேவை அல்ல. அது துவாபர யுக குருமார்கள் செய்ததைப் போல், ஆத்மாக்களைத் தந்தையிடமிருந்து அப்பால் திருப்புவது ஆகும். அவர்கள் தந்தையை மறக்கும்படி நீங்கள் செய்தீர்கள். நீங்கள் சேவை செய்யவில்லை. அது ஆத்மாக்களை விழச் செய்வதே. அவர்களை ஏறச் செய்வது அல்ல. அது புண்ணியம் இல்லை. ஆனால் பாவமே. ஏனெனில், தந்தை இல்லாதபோது, அங்கு பாவமே இருக்கும். ஆகவே, உண்மையான சேவையாளர்கள், ஆத்மாக்களை சத்தியமானவருடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்தச் செய்வார்கள்.

சிலவேளைகளில், பாப்தாதா உங்களின் இலட்சியம் என்னவென்பதையும், அந்த இலட்சியத்திற்கென உங்களிடம் உள்ள தகைமைகளையும் பார்த்து உங்களையிட்டு வியப்படைகிறார். நீங்கள் ஆத்மாக்களைத் தந்தையிடம் வந்தடையச் செய்ய வேண்டும். அதற்குப் பதில், நீங்கள் அவர்களை உங்களிடம் வரச் செய்கிறீர்கள். தெய்வீகத் தந்தைமார்கள் ஆகாதீர்கள். சிலவேளைகளில், ஆத்மாக்களான நீங்கள் நேரான பாதையை எடுப்பதற்குப் பதில், பக்கங்களில் உள்ள வீதிகளில் நின்றுவிடுவதை பாப்தாதா கண்டார். உங்களின் பாதைகள் மாறுகின்றன. இதனாலேயே, நீங்கள் தொடர்ந்து முன்னேறினாலும், உங்களின் இலக்கிற்கு நெருக்கமாகச் செல்வதில்லை. எனவே, உண்மையான சேவையாளர் என்று யார் அழைக்கப்படுவார் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? இந்த மூன்று சிறப்பியல்புகளையும் எல்லையற்ற பார்வையுடனும் எல்லையற்ற மனோபாவத்துடனும் சேவையில் பயன்படுத்துங்கள். அச்சா.

அருள்பவரின் குழந்தைகளான சதா அருள்பவர்களுக்கு, ஒவ்வோர் ஆத்மாவையும் நிரம்பியவர்கள் ஆக்குபவர்களுக்கு, சதா ஒவ்வொரு பொக்கிஷத்தையும் சேவைக்காகப் பயன்படுத்தி, அதனால் முன்னேறுபவர்களுக்கு, அனைத்தையும் இறைபரிசாகக் கருதி, மற்றவர்களுக்கு இறைவனின் புனித பிரசாதத்தைக் கொடுப்பவர்களுக்கு, சதா ஒரேயொருவரை நோக்கி சமிக்ஞை செய்பவர்களுக்கும் மற்றவர்களைத் திருப்திப்படுத்துபவர்களுக்கும், எல்லோருடனும் எப்போதும் ஒத்துழைக்கும் உண்மையான சேவையாளர்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார் - குமாரிகள்:

இந்தச் சேனை என்ன செய்வார்கள்? இராணுவம் எப்போதும் வெற்றியாளர்களே. வெற்றி பெறுவதற்கே இராணுவம் உள்ளது. எதிரிகளுடன் சண்டை செய்வதற்கே இராணுவம் உள்ளது. எனவே, உங்களின் எதிரியான மாயையை வெல்வதே உங்கள் அனைவரின் பணி ஆகும். எப்போதும் உங்களின் இந்தப் பணியை அறிந்து, உங்களால் எந்தளவிற்கு விரைவாக முடியுமோ அந்தளவிற்குத் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். ஏனெனில், காலம் துரித கதியில் சென்று கொண்டிருக்கிறது. காலத்தின் வேகம் துரிதமாக இருந்து, உங்களின் வேகம் மெதுவாக இருந்தால், உங்களால் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியாது. ஆகவே, உங்கள் வேகத்தைக் கூட்டுங்கள்! மெதுவாகச் செல்பவர்கள் இரையாகி விடுவார்கள். சக்திசாலிகள் எப்போதும் வெற்றி பெறுவார்கள். எனவே, நீங்கள் அனைவரும் வெற்றியாளர்களா?

எப்போதும் சேவையாளராக இருக்கும் இலக்குடன், தொடர்ந்து சேவையில் முன்னேறிச் செல்லுங்கள். ஏனெனில், குமாரிகளுக்கு எந்தவிதமான பந்தனங்களும் கிடையாது. நீங்கள் விரும்பிய அளவு சேவையை உங்களால் செய்ய முடியும். நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர் என்றும் நீங்கள் தந்தைக்காகவே இருக்கிறீர்கள் என்றும் கருதியவண்ணம் எப்போதும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். சேவைக்குக் கருவிகள் ஆகுபவர்கள் இயல்பாகவே சந்தோஷத்தையும் சக்தியையும் பெறுவார்கள். பலமில்லியன்களில் கையளவினர் மட்டுமே சேவையின் பாக்கியத்தைப் பெறுவார்கள். குமாரிகள் எப்போதும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள். உங்களின் விழிப்புணர்வில் உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபத்தை வைத்திருந்தவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னரும், அந்தச் செயல் ஒரு பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாவிற்குப் பொருந்துமா எனச் சோதித்துப் பாருங்கள். அவ்வாறு இல்லாவிட்டால், அதை மாற்றுங்கள். பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் ஒருபோதும் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் மகத்தானவர்கள். ஒரு குமாரி 100 பிராமணர்களை விட மகத்தானவர். எனவே, குமாரிகளான நீங்கள் ஒவ்வொருவரும் 100 பிராமணர்களை உருவாக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும். குமாரிகளான நீங்கள் என்ன அற்புதமான திட்டங்களைப் பற்றி நினைத்தீர்கள்? ஓர் ஆத்மாவிற்கு நன்மை செய்வதை விட மகத்தானது என்ன? நீங்கள் எப்போதும் உங்களுக்குள் சந்தோஷத்தை அனுபவம் செய்பவர்கள் அல்லவா? சிலவேளைகளில், உங்களிடம் ஞானத்தின் சந்தோஷம் உள்ளது. சிலவேளைகளில், நினைவின் சந்தோஷம் உள்ளது. சிலவேளைகளில், அன்பின் சந்தோஷம் உள்ளது. சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் மேலும் சந்தோஷமே. சங்கமயுகம் சந்தோஷத்திற்குரிய யுகம் ஆகும். அச்சா.

பாப்தாதாவின் பார்வை எப்போதும் குமாரிகளின் மீது உள்ளது. குமாரிகள் தங்களை எவ்வாறு ஆக்கிக் கொள்கிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தவிடயம். எனினும், பாப்தாதா உங்கள் அனைவரையும் உலக அதிபதிகள் ஆக்குவதற்காகவே வந்துள்ளார். உலக அதிபதியாக இருக்கும் சந்தோஷமும் போதையும் எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டும். எப்போதும் சேவையில் களைப்பற்றவராகத் தொடர்ந்து முன்னேறுங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:

கரவன்ஹார் (செய்பவர்) மற்றும் கரவன்ஹார் (செய்யத் தூண்டுபவர்) என்ற விழிப்புணர்வினால் நீங்கள் ஒளிக்கிரீடத்தை அணிந்திருப்பவர் ஆகுவீர்களாக.

நான் ஒரு கருவி, கர்மயோகி, கரவன்ஹார் (செய்பவர்). தந்தை கரவன்ஹார் (செய்வதற்குத் தூண்டுபவர்). இந்த இயல்பான விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால், நீங்கள் சதா ஒளிக்கிரீடத்தை அணிந்திருப்பதுடன் கவலையற்ற சக்கரவர்த்தியாகவும் இருப்பீர்கள். தந்தையும் நானும் மட்டுமே. மூன்றாம் நபர் கிடையாது. இதை அனுபவம் செய்யும்போது, நீங்கள் இலகுவாக ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுவீர்கள். இத்தகைய சக்கரவர்த்திகள் ஆகுபவர்கள், மாயையை வென்றவர்களாகவும் தமது பௌதீகப் புலன்களை வென்றவர்களாகவும் சடப்பொருளை வென்றவர்களாகவும் ஆகுவார்கள். எவ்வாறாயினும், தவறுதலாகவேனும், யாராவது ஒருவர் தன்மீது வீணான உணர்வுகளினதும் நோக்கங்களினதும் சுமையை வைத்தால், கிரீடத்திற்குப் பதிலாக, அவரின் தலையில் பல கவலைகளின் கூடைகளே இருக்கும்.

சுலோகம்:

சகல பந்தனங்களில் இருந்தும் விடுபடுவதற்கு, சகல சரீர உறவுமுறைகளிடமும் பற்றை வென்றவர் ஆகுங்கள்.


--ஓம் சாந்தி---