02.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உண்மையான தந்தை கூறுகின்ற அனைத்து விடயங்களும் உண்மையானவை ஆகும். இத்தகைய உண்மையான தந்தைக்கு உண்மையானவராக இருங்கள். பொய்மை அல்லது ஏமாற்றுதல் என்பவற்றை உங்களுக்குள் கொண்டிருக்காதீர்கள்.

கேள்வி:
சங்கமத்தில் எந்த வேறுபாட்டைக் குழந்தைகளாகிய நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்கின்றீர்கள்?

பதில்:
பிராமணர்கள் என்ன செய்கின்றார்கள், சூத்திரர்கள் என்ன செய்கின்றார்கள், ஞான மார்க்கம் என்றால் என்ன, பக்தி மார்க்கம் என்றால் என்ன, பௌதீக சேனையினரின் போர்க்களம் எது, உங்களுடைய போர்க்களம் எது என்பதாகும். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இந்த வேறுபாடுகள் அனைத்தையும் புரிந்துகொள்கின்றீர்கள். சத்திய யுகத்திற்கும், கலியுகத்திற்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகளை வேறு எவருமே புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பாடல்:
தாயே, ஓ தாயே அனைவருக்கும் பாக்கியத்தை அருள்பவர் நீங்களே!

ஓம் சாந்தி.
இது பாரதத் தாய்மாரின் புகழாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனின் புகழ் உள்ளது. இது ஒரு தாயின் புகழ் மாத்திரம் அல்ல. ஒரு தாயால் மாத்திரம் எதுவும் செய்ய முடியாது, நிச்சயமாக ஒரு சேனை தேவைப்படுகிறது. அனைத்துச் சேனைகளும் இல்லாமல் எவ்வாறு எதுவும் நிகழ முடியும்? சிவபாபா, ஒருவரேயாவார். அவருக்கென்று ஒரு சேனை இல்லாவிடில், தாய்மாரோ, குழந்தைகளோ இருக்க முடியாது, எனவே பிரம்ம குமாரிகள், குமாரர்கள் எவருமே இருக்கமுடியாது. பெரும்பான்மையினர் தாய்மாரே ஆவர், இதனாலேயே தாய்மார்கள் புகழப்படுகின்றனர். மறைமுகமான சிவசக்தி சேனையாகிய பாரதத் தாய்மார் வன்முறை அற்றவர்கள். அவர்கள் எந்த வன்முறையுமே செய்வதில்லை. இரு வகையான வன்முறைகள் உள்ளன: ஒன்று காம வாளைப் பயன்படுத்தல், மற்றையது துப்பாக்கியால் சுடுதல், கோபப்படுதல், கொலை செய்தல் போன்ற பௌதீக வன்முறைகள். இந்நேரத்தில், பௌதீகச் சேனைகள் அனைத்தும் இரு வகையான வன்முறைகளையும் செய்கின்றன. தற்காலத்தில் அவர்கள் பெண்களுக்குக்கூட துப்பாக்கி போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்பிக்கிறார்கள். அவர்கள் பௌதீகச் சேனையைச் சேர்ந்த தாய்மார், இத்தாய்மாரோ ஆன்மீக சேனையைச் சேர்ந்த தெய்வீக சமுதாயத்தினர். அவர்கள் எவ்வாறு பயிற்சி செய்வது போன்றவற்றைக் கற்கின்றார்கள். நீங்கள் யுத்தகளத்திற்கு ஒருபோதுமே செல்லாதிருந்திருக்கலாம். அவர்கள் பெருமளவு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் காம விகாரத்தில் கூட ஈடுபடுகிறார்கள். அங்கே திருமணம் செய்யாத பெண்கள் மிக அரிதாகவே உள்ளனர். அவர்கள் அச்சேனையில் அதிகளவு விடயங்களைக் கற்கின்றார்கள். சிறு குழந்தைகளுக்குக் கூடக் கற்பிக்கப்படுகின்றது. அது ஒரு சேனையாகும், இதுவும் ஒரு சேனையே ஆகும். இச்சேனையைப் பற்றிய விடயங்கள் பெருமளவில் இக்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், உண்மையில் என்ன நிகழ்கின்றது என்பது உங்களுக்கு மாத்திரமே தெரியும்: நீங்கள் எவ்வளவு மறைமுகமானவர்கள், சிவசக்தி சேனை என்ன செய்கின்றது, நீங்கள் எவ்வாறு உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அது யுத்தகளம் என அழைக்கப்படுகிறது. உங்களது யுத்தகளம் மறைமுகமானது. இந்த மேடை யுத்தகளம் என அழைக்கப்படுகிறது. முன்னர் பெண்கள் யுத்த களத்திற்குச் சென்றதில்லை. அதனை இங்கேயுள்ள அனைத்துடனும் ஒப்பிடலாம். இரு சேனைகளிலும் பெண்கள் உள்ளனர். ஆனால் அங்கே பெரும்பான்மையினர் ஆண்கள், இங்கோ பெரும்பான்மையினர் பெண்களே ஆவர். இதுவே ஞான மார்க்கத்திற்கும், பக்தி மார்க்கத்திற்கும் இடையிலான இறுதியான வேறுபாடாகும். சத்திய யுகத்தில் எந்த வேறுபாடுமே இல்லை. பாபா வந்து, பிராமணர்கள் செய்வதற்கும், சூத்திரர்கள் செய்வதற்கும் இடையிலான வேறுபாட்டைக் காண்பிக்கிறார். இங்கே இரு வகையினரும் யுத்த களத்திலேயே உள்ளனர். சத்திய யுகம் அல்லது கலியுகத்திற்கான கேள்விக்கே இடமில்;லை. இது சங்கம யுகத்திற்கான விடயமாகும். பாண்டவர்களாகிய நீங்கள் சங்கம யுகத்தைச் சேர்ந்தவர்கள், கௌரவர்கள் கலியுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கலியுகத்தின் காலப்பகுதியை மிக நீண்டதாகக் காட்டியுள்ளனர். இதனால் அவர்கள் சங்கமம் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். படிப்படியாக, அவர்கள் இவ்விடயங்களை உங்கள் மூலமாகப் புரிந்துகொள்ள வருவார்கள். எனவே, புகழானது ஒரு தாய்க்கு மாத்திரம் உரியதல்ல, இது சக்தி சேனை ஆகும். ஒரேயொரு கடவுளே அதிமேலானவர். நீங்கள் ஒரு சக்கரத்திற்கு முன்னர் இருந்த அதே சேனை ஆவீர்கள். பாரதத்தை தெய்வீக ஆட்சியாளர்களைக் கொண்ட ஓர் இராச்சியமாக மாற்ற வேண்டியது உங்கள் பணியாகும். நீங்கள் முதலில் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். பின்னர் நீங்கள் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர்களாகவும், சத்திரிய வம்சத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஆகினீர்கள். எவ்வாறாயினும் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே புகழப்படுகிறார்கள். நீங்கள் முதலில் சூரிய வம்சத்திற்கு, அதாவது சுவர்க்கத்திற்கு வருவதற்கான முயற்சியைச் செய்கிறீர்கள். சத்தியயுகம் சுவர்க்கம் என அழைக்கப்படுகிறது. திரேதாயுகம் உண்மையில் சுவர்க்கம் என அழைக்கப்படுவதில்லை. இன்னார் இன்னார் சுவர்க்கவாசியாகினார் என்றுகூட அவர்கள் கூறுகின்றனர். அவர் திரேதாயுகத்திற்கு, அதாவது இராமர் சீதையின் இராச்சியத்திற்குச் சென்றுவிட்டார் என அவர்கள் கூறுவதில்லை. ஸ்ரீ கிருஷ்ணரின் இராச்சியம் வைகுந்தத்தில் இருந்ததை பாரத மக்கள் அறிவார்கள். இருந்தும், அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரைத் துவாபர யுகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். மனிதர்கள் உண்மையை அறியவில்லை. சத்தியத்தை அவர்களுக்குக் கூறுகின்ற சத்குருவை அவர்கள் கண்டறியவில்லை. சத்தியம் அனைத்தையும் கூறி, உங்களைச் சத்தியமானவராக ஆக்குகின்ற அந்த ஒருவரை நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: குழந்தைகளே, ஒருபோதும் பொய் கூறவோ, அல்லது ஏமாற்றவோ வேண்டாம். உங்களுடையது எதுவுமே மறைந்திருக்க முடியாது. ஒருவர் எவ்வகையான செயல்களைச் செய்கின்றாரோ, அதற்கேற்பவே பிரதிபலன் இருக்கும். தந்தை உங்களுக்கு நற்செயல்களைக் கற்பிக்கிறார். எவருடைய பாவங்களுமே கடவுளிடமிருந்து மறைக்கப்பட முடியாது, கர்ம வேதனையும் கடுமையானதாகவே இருக்கும். இது உங்களது இறுதிப்பிறவியாக இருந்தபோதிலும் நீங்கள் தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். ஏனெனில், பல பிறவிகளுக்கான கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் காசியில் எவ்வாறு தங்களை அர்ப்பணிக்கிறார்கள் என்பதை பாபா விளங்கப்படுத்தியுள்ளார். ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து, இன்னொரு பிறவியை எடுக்கும்வரைக்கும் அவர் வேதனைப்பட வேண்டும். பெருமளவு வலியைச் சகித்துக் கொள்ள வேண்டும். பாவச் செயல்களுக்கான கர்ம வேதனையில் நோய் போன்றவை ஒரு வகையானவை, தண்டனை மற்றொரு வகையாகும். அந்நேரத்தில் ஆத்மாவால் எதுவும் கூறமுடியாது. அவர் விரக்திக் கூக்குரலிடுகிறார். பாவாத்மாக்கள் இங்கேயும், அங்கேயும் தண்டனையை அனுபவம் செய்கிறார்கள். சத்தியயுகத்தில் பாவம் எதுவும் இல்லை. அங்கே நீதிமன்றமோ, நீதிபதியோ அல்லது கருப்பையாகிய சிறையில் ஏதாவது தண்டனையோ இல்லை. அங்கே, கருப்பை ஒரு மாளிகையைப் போன்றது. கிருஷ்ணர் தனது பெருவிரலைச் சூப்பியவாறே ஓர் ஆலிலையில் மிதந்து வந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. அது கருப்பையாகிய மாளிகையையே குறிக்கிறது. சத்தியயுகத்தில் குழந்தைகள் மிகுந்த சௌகரியமாகப் பிறக்கின்றார்கள். அங்கே ஆரம்பம் முதல் மத்தியூடாக இறுதிவரைக்கும் சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. இவ்வுலகில் ஆரம்பம் முதல் மத்தியூடாக இறுதிவரைக்கும் துன்பத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. நீங்கள் சந்தோஷ உலகத்திற்கு செல்வதற்காக இப்பொழுது கற்கின்றீர்கள். இந்த மறைமுகமான சேனை தொடர்ந்தும் வளரும். எந்தளவிற்கு நீங்கள் பலருக்கும் பாதையைக் காட்டுகிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். நினைவு செய்தலுக்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பெற்றுக்கொண்ட எல்லையற்ற ஆஸ்தியை இப்பொழுது இழந்துவிட்டீர்கள், அதை இப்பொழுது மீண்டும் ஒரு தடவை பெறுகிறீர்கள். தற்காலத்தில் லௌகீக, பரலோகத் தந்தைமார் இருவருமே நினைவு செய்யப்படுகின்றனர். சத்தியயுகத்தில், லௌகீகத் தந்தை மாத்திரமே நினைவு செய்யப்படுகின்றார். பரலோகத் தந்தையை நினைவு செய்வது அவசியமில்லை. ஏனெனில் அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இந்த ஞானம் பாரத மக்களுக்கானது. இது மற்றைய சமயத்தவர்களுக்கானதல்ல. எவ்வாறாயினும், மற்றைய சமயங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் வெளிப்படுவார்கள். அவர்கள் வந்து யோகத்தைக் கற்பார்கள். நீங்கள் யோகத்தை விளங்கப்படுத்துவதற்காக அழைக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, உங்களை நீங்கள் ஆயத்தப்படுத்த வேண்டும். அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: நீங்கள் பாரதத்தின் புராதன யோகத்தை மறந்துவிட்டீர்;களா? கடவுள் கூறுகின்றார்: மன்மனாபவ! பரமாத்மாவாகிய பரமதந்தை அசரீரியான குழந்தைகளுக்குக் கூறுகிறார்: என்னை நினைவு செய்வதன் மூலம் என்னிடம் வருவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் புலனங்கங்கள் மூலமாகச் செவிமடுக்கிறீர்கள். ஆத்மாவாகிய நான் இப்புலனங்கங்களின் ஆதாரத்துடன் பேசுகிறேன். நானே அனைவரினதும் தந்தை ஆவேன். அனைவரும் எனது புகழைப் பாடுகிறார்கள்: சர்வசக்திவான், ஞானக்கடல், சந்தோஷக்கடல். பரமாத்மாவாகிய சிவனின் புகழ் என்ன, கிருஷ்ணரின் புகழ் என்ன போன்ற தலைப்புகள் சிறந்தவை. இப்பொழுது நீங்களாகவே சீர்தூக்கிப் பாருங்கள்: கீதையை உபதேசிப்பவர் யார்? இது மிகவும் சக்திவாய்ந்த தலைப்பாகும். நீங்கள் இதனை விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் அதிகக் காலம் எடுக்கமாட்டீர்கள் என அவர்களுக்குக் கூறுங்கள். அவர்கள் ஒரு நிமிடத்தை அளித்தாலும் அதுவே போதுமானது. கடவுள் கூறுகின்றார்: மன்மனாபவ! என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள், நீங்கள் சுவர்க்கத்திற்கான ஆஸ்தியைப் பெறுவீர்கள். யார் இதனைக் கூறினார்? அசரீரியான பரமாத்மா பிரம்மாவின் சரீரத்தின் மூலமாகப் பிராமணக் குழந்தைகளுக்கு இதனைக் கூறினார். அவர்கள் பாண்டவ சேனை எனவும் அழைக்கப்படுகின்றனர். நீங்களே மக்களை ஓர் ஆன்மீக யாத்திரைக்கு அழைத்துச் செல்கின்ற வழிகாட்டிகள். பாபா அத்தகைய கட்டுரைகளைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தெளிவான வகையில், இவ்விடயங்களை எவ்வாறு விளங்கப்படுத்தலாம் என்பது பற்றிச்; சிந்திக்க வேண்டும்: தந்தையை நினைவு செய்வதன் மூலம் மாத்திரமே நீங்கள் முக்தியும், ஜீவன்முக்தியுமான ஆஸ்தியைப் பெறுவீர்கள். நாங்கள் பிரம்ம குமாரர்களும், குமாரிகளும் ஆவோம். உண்மையில், நீங்களும் அவர்களே, ஆனால் நீங்கள் தந்தையை இனங்கண்டு கொள்ளவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையால் தேவர்களாக மாற்றப்படுகிறீர்கள். பாரதத்தில் மாத்திரமே இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. சிறு குழந்தைகள்கூட பெரிய ஒன்றுகூடல்களில் சத்தமாக விளங்கப்படுத்தும்போது அது அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் மாத்திரமே ஞானத்தைக் கொண்டுள்ளீர்கள் என்பதையும், நீங்களே கடவுளின் பாதையைக் காட்டுகிறீர்கள் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். அசரீரியான பரமாத்மா கூறுகிறார்: ஓ ஆத்மாக்களே, என்னை நினைவு செய்யுங்கள், உங்களது பாவங்கள் அழிக்கப்படும். பிறவி பிறவியாகக் கங்கைகளில் நீராடுவதாலும், யாத்திரைகள் செல்வதாலும் நீங்கள் தொடர்ந்தும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். பாரதமே ஏறி, இறங்குகின்ற ஸ்திதிகளில் செல்கிறது. தந்தை இராஜயோகத்தைக் கற்பித்து, ஏறும் ஸ்திதியைக் கொண்டுவருகிறார். அதாவது, அவர் உங்களைச் சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆக்குகிறார்;. பின்னர் மாயையாகிய இராவணன் உங்களை நரகத்தின் அதிபதிகளாக ஆக்குகிறான். எனவே. அது இறங்கும் ஸ்திதியாகும். பிறவிபிறவியாக அங்கே படிப்படியான இறங்கும் ஸ்திதியே உள்ளது. ஞானம் ஏறும் ஸ்திதியாகும். பக்தி இறங்கும் ஸ்திதியாகும். ஒருவர் பக்தி செய்தபின்னர் கடவுளை அறிகிறார் என்றுகூட அவர்கள் கூறுகின்றனர். எனவே, நிச்சயமாகக் கடவுள் ஞானத்தை அளிக்கிறார். அவரே ஞானக்கடல் ஆவார். சத்குரு ஞானத் தைலத்தைக் கொடுக்கும்போது அறியாமை என்ற இருள் அகல்கின்றது. பரமாத்மாவாகிய பரமதந்தை ஒருவரே சத்குருவும் ஆவார். சத்குரு அன்றி, ஏனைய குருமார்கள் புகழப்படுவதில்லை. அவர் மாத்திரமே ஜீவன்முக்தியை அருள்பவரும், தூய்மையாக்குபவரும், விடுதலையளிப்பவரும் ஆவார். குழந்தைகளாகிய நீங்கள்; இப்பொழுது கடவுளின் வாசகங்களைச் செவிமடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஒருவரைச் சதா நினைவு செய்வதன் மூலம் ஆத்மாக்களாகிய நீங்கள் அமைதிதாமத்திற்குச் செல்வீர்கள். அது அமைதிதாமம் ஆகும். மற்றையது சந்தோஷ தாமம் ஆகும், இது துன்பதாமம் ஆகும். அவர்;கள் இந்தளவிற்காவது புரிந்துகொள்ளவில்லையா? தந்தையே வந்து தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குகிறார். எல்லையற்ற தந்தையே எல்லையற்ற சந்தோஷத்தை அளிப்பவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இராவணன் உங்களுக்கு எல்லையற்ற துன்பத்தைக் கொடுக்கின்றான். அவன் மிகப்பெரிய எதிரியாவான். இராவணனின் இராச்சியம் தூய்மையற்றதாகக் கருதப்படுவது ஏன் என்பதை எவருமே அறியமாட்டார்கள். இவையனைத்தினதும் அர்த்தத்தைத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார். அனைவரிலும் ஐந்து விகாரங்களும் உள்ளதாலேயே இராவணனின் உருவம் பத்துத் தலைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. புலவர்களும், பண்டிதர்களும்கூட இதனை அறியமாட்டார்கள். எப்பொழுது முதல், எவ்வளவு காலத்திற்கு இராமரின் இராச்சியம் தொடர்கிறது என்பதைத் தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார். அவர் இந்த எல்லையற்ற வரலாற்றையும், புவியியலையும் விளங்கப்படுத்துகிறார். இராவணனே பாரதத்தின் எல்லையற்ற எதிரி ஆவான். அவன் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்தியுள்ளான்! பாரதம் சுவர்க்கமாக இருந்தது என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள்;: குழந்தைகளே, அல்பாவாகிய தந்தையையும், பீற்றாவையும் நினைவு செய்யுங்கள்;. பரமாத்மாவாகிய பரமதந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார், பின்னர் இராவணன் நரகத்தை ஸ்தாபிக்கிறான். நீங்கள் சுவர்க்கத்தை உருவாக்குகின்ற தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். இல்லறத்தில் இருந்தவாறே திருமணம் முதலானவற்றுக்குச் செல்லலாம், ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களது ஜீவனோபாயத்திற்கான செயல்களைச் செய்யும்போது நீங்கள் நிச்சயதார்த்தம் செய்துள்ளவரை நினைவு செய்யுங்கள். அவரது வீட்டிற்கு நீங்கள் செல்லும்வரை, தொடர்ந்து செயல்களைச் செய்யுங்கள், ஆனால் உங்களது புத்தி தந்தையை மறந்துவிடுவதற்கு அனுமதிக்காதீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தண்டனையிலிருந்து விடுதலை பெறுவதற்கு, உங்கள் கணக்குகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள். சத்தியமான தந்தையிடமிருந்து எதனையுமே மறைக்காதீர்கள். பொய் பேசுவதையும், ஏமாற்றுவதையும் துறந்துவிடுங்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்.

2. தனக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கும் தந்தை எவ்வாறு நன்மை செய்கிறாரோ, அதேபோல் அனைவருக்கும் நன்மை செய்யுங்கள். தந்தையின் உண்மையான அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்.

ஆசீர்வாதம்:
இறை சம்ஸ்காரங்களை பயன்படுத்துவதன் மூலம் அவற்றை பலனளிக்கச் செய்து வெற்றி சொரூபங்கள் ஆகுவீர்களாக.

இறை சம்ஸ்காரங்களை பணியில் பயன்படுத்துகின்ற குழந்தைகள் இயல்பாகவே தமது வீணான எண்ணங்களை முடிக்கின்றார்கள். ஒன்றைப் பலனளிக்கச் செய்வது என்றால் அதனைப் பாதுகாப்பது அல்லது அதனை அதிகரிப்பது என்று அர்த்தமாகும். உங்களுடைய பழைய சம்ஸ்காரங்களை தொடர்ந்தும் பயன்படுத்துவதும் இறை சம்ஸ்காரங்களை புத்தி என்ற பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைத்திருப்பதும் என்றிருக்கக் கூடாது. உங்களில் பலருக்கு உங்களுடைய நல்ல பொருட்களை உங்கள் அலுமாரியிலும், உங்கள் பணத்;தை வங்கியிலும் வைத்திருக்கின்ற பழக்கம் உள்ளது. அவர்களுக்கு பழைய பொருட்களின்மீது விருப்பம் இருப்பதால், அவற்றையே எப்பொழுதும் பயன்படுத்துவார்கள். இங்கே அவ்வாறு செய்யாதீர்கள். இங்கே, உங்கள் எண்ணங்களினால், வார்த்தைகளினால், சக்திமிக்க மனோபாவங்களினால் நீங்கள் அனைத்தையும் தகுதிவாய்ந்தது ஆக்கினால் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
நானும் தந்தையும் இந்தப் பாதுகாப்புக் குடை உங்களுடன் இருந்தால், எந்தத் தடையும் உங்கள் முன் நிலைத்திருக்காது.