02.12.18     Avyakt Bapdada       Tamil Lanka  Murli     05.03.84    Om Shanti     Madhuban


அமைதி சக்தியின் முக்கியத்துவம்.


அமைதிக்கடலான தந்தை, அமைதியின் அவதாரங்களான தனது குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்திருக்கிறார். இன்றைய உலகில், மிகவும் முக்கியமான விடயம் அமைதி ஆகும். குழந்தைகளான நீங்கள் அந்த அமைதியை அருள்பவர்களாக இருக்கிறீர்கள். மக்கள் எந்தளவிற்கு அழியக்கூடிய செல்வத்தால் அல்லது அழியக்கூடிய வழிமுறைகளால் அமைதியைப் பெற முயற்சி செய்தாலும், அவர்களால் உண்மையான, அழியாத அமைதியை அதன் மூலம் பெற முடியாது. இன்றைய உலகம் செல்வம் நிறைந்ததாக இருப்பதுடன், சந்தோஷத்திற்கான சகல வசதிகளைக் கொண்டிருந்தாலும், அது அழியாத, நிரந்தரமான அமைதியில் ஒரு யாசகராகவே உள்ளது. மாஸ்ரர் அமைதியை அருள்பவர்களாகவும் அமைதியின் பொக்கிஷக்களஞ்சியங்களாகவும் அமைதியின் சொரூபங்களாகவும் உள்ள ஆத்மாக்களான நீங்கள், அமைதியை வேண்டி நிற்கும் இத்தகைய ஆத்மாக்களுக்கு ஒரு துளி அமைதியைக் கொடுத்து, அவர்களின் தாகத்தைத் தீர்த்து, அமைதிக்கான அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். அமைதியற்ற குழந்தைகளைப் பார்க்கும்போது, பாப்தாதா அவர்களில் கருணை கொள்கிறார். அவர்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். விஞ்ஞான சக்தியால் அவர்கள் பல இடங்களைத் தொட்டுவிட்டார்கள். பல விடயங்களைச் செய்து விட்டார்கள். அவர்களால் பகலை இரவாகவும் இரவைப் பகலாகவும் மாற்றக்கூடியதாக உள்ளது. ஆனால், அவர்களால் தமது ஆதி தர்மமான அமைதியைப் பெற முடியாமல் உள்ளது. எந்தளவிற்கு அவர்கள் அமைதியைத் துரத்திச் சென்றாலும், தற்காலிகப் பேறான அமைதியைப் பெற்ற பின்னர், அமைதியின்மையே பெறுபேறாகக் கிடைக்கிறது. கடவுளிடமிருந்து ஆத்மாக்கள் அனைவரும் பெறும் பிறப்புரிமை, அழியாத அமைதியே ஆகும். ஆனால், அவர்கள் தமது பிறப்புரிமைக்காக அதிகளவு முயற்சி செய்கிறார்கள். இது ஒரு விநாடிக்குரிய பேறு ஆகும். எவ்வாறாயினும், முழுமையான அறிமுகம் இல்லாமையால், ஒரு விநாடிக்குரிய பேற்றினைப் பெறுவதற்கு அவர்கள் அதிகளவில் தளம்புகிறார்கள். அவர்கள் சத்தமிட்டு அழைப்பதுடன், துயரத்துடனும் இருக்கிறார்கள். அமைதிக்காக அலைந்து திரியும் உங்களின் சகோதர ஆத்மாக்களுக்காக சகோதர திருஷ்டியைக் கொடுங்கள். இந்த திருஷ்டியால் அவர்களின் உலகமே மாற்றும்.

அமைதியின் அவதார ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் சதா அமைதியின் சொரூபங்களாக ஸ்திரமாக இருக்கிறீர்களா? நீங்கள் எல்லா வேளைக்கும் அமைதியின்மைக்கு விடை கொடுத்து விட்டீர்கள், அல்லவா? அமைதியின்மைக்கு விடை கொடுக்கும் விழாவைக் கொண்டாடிவிட்டீர்களா? அல்லது, நீங்கள் இப்போது அதைச் செய்யப் போகிறீர்களா? இன்னமும் அமைதியின்மைக்கு விடை கொடுக்கும் விழாவைக் கொண்டாடாதவர்கள் இப்போது இங்கு அதைச் செய்யப் போகிறீர்களா? இதற்கு நாம் ஒரு திகதியை நிச்சயிப்போமா? இப்போது இந்த விழாவைக் கொண்டாட விரும்புவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கனவுகளிலேனும் அமைதியின்மை இருக்கக்கூடாது. உங்களின் கனவுகளும் அமைதிநிறைந்தவை ஆகிவிட்டன, அல்லவா? தந்தை அமைதியை அருள்பவர். நீங்கள் அமைதி சொரூபங்கள் ஆவீர்கள். உங்களின் தர்மம்(மதம்) அமைதி. உங்களின் கர்மம் (செயல்) அமைதி. ஆகவே, எவ்வாறு அமைதியின்மை ஏற்படமுடியும்? உங்கள் அனைவரினதும் கர்மா என்ன? அமைதியைக் கொடுத்தல். இப்போதும், உங்களின் பக்தர்கள் ஆரத்தி காட்டும்போது, அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? அமைதியை அருள்பவர். எனவே, யாரின் ஆரத்தியை அவர்கள் பாடுகிறார்கள்? உங்களுடையதா அல்லது தந்தையினுடையது மட்டுமா? அமைதியை அருள்பவர்களான குழந்தைகள், சதா மகா அமைதியின் தானிகளாகவும், இந்த ஆசீர்வாதத்தைக் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நீங்கள் மாஸ்ரர் ஞான சூரியர்களாகி, உலகம் முழுவதும் அமைதிக்கதிர்களைப் பரப்புவர்கள். நீங்கள் தந்தையுடன் கூடவே மாஸ்ரர் ஞான சூரியர்களாக இருப்பதுடன், அமைதிக்கதிர்களைப் பரப்பும் மாஸ்ரர் சூரியர்கள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதல்லவா?

உங்களால் ஒரு விநாடியில் சுயதர்மத்தின் அறிமுகத்தைக் கொடுத்து, உங்களின் மனோபாவத்தால் மற்றவர்களை அவர்களின் ஆதிரூபத்தில் ஸ்திரப்படுத்த முடியுமா? என்ன மனோபாவம்? உங்களின் சகோதரர்களான இந்த ஆத்மாக்களும் தந்தையிடமிருந்து தமது ஆஸ்தியைப் பெற வேண்டும். இந்தத் தூய மனோபாவத்தால், அதாவது, இந்தத் தூய உணர்வுகளால், உங்களால் ஆத்மாக்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்க முடிகிறதா? ஏன்? தூய உணர்வுகளுக்கான பிரதிபலன் நிச்சயமாகக் கிடைக்கும். உங்கள் அனைவரிடமும் எந்தவிதமான சுயநல நோக்கங்களும் இல்லாமல், மேன்மையான ஆசிகளும் நல்லாசிகளும் உள்ளன. உங்களிடம் கருணையும் நலம்விரும்பும் உணர்வுகளும் உள்ளன. இந்த உணர்வுகளின் பலனை நீங்கள் பெறாமல் விடுதல் என்பது சாத்தியமல்ல. விதையொன்று சக்திநிறைந்ததாக இருக்கும்போது, நீங்கள் நிச்சயமாக பழத்தைப் பெறுவீர்கள். மேன்மையான ஆசிகள் என்ற இந்த விதைக்குத் தொடர்ந்து விழிப்புணர்வெனும் நீரை சதா ஊற்றுங்கள். நீங்கள் நிச்சயமாக உடனடியான புலப்படும் பழம் என்ற ரூபத்தில் சக்திவாய்ந்த பழத்தைப் பெறுவீர்கள். ஏதாவது நிகழுமா இல்லையா என்ற கேள்விக்கு இடமேயில்லை. சதா விழிப்புணர்வு என்ற பழத்தைக் கொண்டிருத்தல் என்றால், ஆத்மாக்கள் அனைவருக்கும் நல்லாசிகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். நீங்கள் நிச்சயமாக உலக அமைதி என்ற புலப்படும் பழத்தைப் பெறுவீர்கள். தந்தையுடன் கூடவே, குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஆத்மாக்கள் அனைவரினதும் பல பிறவிகளின் ஆசைகளையும் பூர்த்தி செய்கிறீர்கள். அதனால் அனைவரின் ஆசைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன.

அமைதியின்மையின் ஒலி இப்போது எங்கும் ஒலிக்கிறது. சகல திசைகளிலும் - தமது சரீரங்களில், மனங்களில், செல்வத்தில், உறவுமுறைகளில் மக்கள் அமைதியின்மையை அனுபவம் செய்கிறார்கள். பயத்தினால், அமைதியை அனுபவம் செய்வதற்குப் பதிலாக, தமது பேறுகளுக்கூடாக அவர்கள் அமைதியின்மையையே அனுபவம் செய்கிறார்கள். இன்றைய ஆத்மாக்கள் ஏதாவதொரு வகையான பயத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். அவர்கள் உண்கிறார்கள், செயல்களைச் செய்கிறார்கள், வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். தற்காலிகமான களிப்பை அனுபவம் செய்கிறார்கள். ஆனால், இவை அனைத்தும் பயத்துடனேயே செய்யப்படுகி;ன்றன. நாளை என்ன நிகழும் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே, எங்கு பயத்தின் சிம்மாசனம் இருக்கிறதோ, அங்கு ஒரு தலைவர் பயமென்ற கதிரையில் அமர்ந்திரக்கும்போது, மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்? அந்தத் தலைவர் எத்தனை பெரியவராக இருக்கிறாரோ, அந்தளவிற்கு அவர் அதிகமான பாதுகாப்பு உத்தியோகத்தர்களைக் கொண்டிருப்பார். ஏன்? ஏனெனில் பயமே அங்கு உள்ளது. ஆகவே, பயமென்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்போது, தற்காலிக களிப்பு எப்படியிருக்கும்? அது அமைதிநிறைந்ததாக இருக்குமா அல்லது அமைதியற்றதாக இருக்குமா? பயம் நிறைந்திருக்கும் இத்தகைய குழந்தைகளுக்கு சதா அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுப்பதற்கு, பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவரையும் அமைதியின் அவதாரங்களாகக் கருவிகள் ஆக்கியுள்ளார். அமைதி சக்தியால், எதையும் செலவழிக்காமல், உங்களால் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எவ்வளவு தொலைவிற்குச் செல்ல முடியும்? இந்த உலகிற்கும் அப்பால் செல்ல முடியும். உங்களால் மிக இலகுவாக உங்களின் இனிமையான இல்லத்தையும் சென்றடைய முடியும். அதற்கு ஏதாவது முயற்சி தேவையா? அமைதி சக்தியால் (மௌனம்) நீங்கள் எவ்வளவு இலகுவாக சடப்பொருளை வென்றவராகவும் மாயையை வென்றவராகவும் ஆகுவீர்கள்? எதனூடாக? ஆத்ம உணர்வு சக்தியால். அணு சக்தியும் ஆத்ம சக்தியும் ஒன்றிணையும்போது, ஆத்மாக்களின் சக்தியால் சதோபிரதான் புத்திகளினூடாக சந்தோஷத்திற்கான பணிகளை அணு சக்தியும் செய்யும்போது, இரண்டு சக்திகளின் ஒற்றுமையால், உலக அமைதி இந்தப் பூமியில் வெளிப்படுத்தப்படும். ஏனெனில் அமைதிநிறைந்த, சந்தோஷமான சுவர்க்க இராச்சியத்தில் இந்த இரண்டு சக்திகளும் இருக்கும். ஆகவே, சதோபிரதான் புத்தி என்றால், எப்போதும் மேன்மையான, உண்மையான செயல்களைச் செய்யும் புத்தி என்று அர்த்தம். சத்தியம் என்றால் அழியாதது என்று அர்த்தம். ஒவ்வொரு செயலையும் அழியாத தந்தையினதும் அழியாத ஆத்மாவினதும் விழிப்புணர்வில் செய்வதன் மூலம், பேறுகளும் அழியாதவை ஆகுகின்றன. இதனாலேயே, அவர்கள் உண்மைநிறைந்த செயல்களைப் பற்றிப் பேசுகிறார்கள். எனவே, நீங்கள் சதா அமைதியை வழங்கும் அமைதியின் அவதாரங்கள் ஆவீர்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

தமது சதோபிரதான் ஸ்திதியால், எப்போதும் உண்மையான செயல்களைச் செய்யும் ஆத்மாக்களுக்கும், தமது சக்திவாய்ந்த நல்லாசிகளால் ஆத்மாக்களுக்கு அமைதியின் பலனைக் கொடுக்கும் ஆத்மாக்களுக்கும், சதா மாஸ்ரர் அமைதியை அருள்பவர்களாகவும் அமைதி தேவர்களாகவும் இருந்து உலகம் முழுவதும் அமைதிக்கதிர்களைப் பரப்புவர்களுக்கும், தந்தையின் விசேடமான பணியில் ஒத்துழைக்கும் ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் பிரையன் ஜோசப்சன் (விஞ்ஞானி) பாப்தாதாவைச் சந்திக்கிறார்:

நீங்கள் அமைதி சக்தியை அனுபவம் செய்கிறீர்களா? அமைதி சக்தியானது முழு உலகையும் அமைதிநிறைந்தது ஆக்கும். நீங்களும் அமைதியை விரும்பும் ஓர் ஆத்மா அல்லவா? விஞ்ஞான சக்தியை மிகச்சரியாக மௌன சக்தியுடன் சேர்த்துப் பயன்படுத்துவதன் மூலம், உங்களால் உலகிற்கு நன்மையை ஏற்படுத்துவதற்குக் கருவி ஆகமுடியும். விஞ்ஞான சக்தியும் தேவையானதே. ஆனால், உங்களால் சதோபிரதான் புத்தியுடன் அதை மிகச்சரியாகப் பயன்படுத்த முடியும். இன்று, அதை மிகச்சரியான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்ற அறிவு குறைவாக உள்ளது. இந்த ஞானத்தின் அடிப்படையில், அதே விஞ்ஞானம் புதிய உலகை ஸ்தாபிப்பதற்குக் கருவி ஆகும். எவ்வாறாயினும், இந்த ஞானம் இல்லாததால், நீங்கள் அழிவை நோக்கிச் செல்கிறீர்கள். எனவே, இப்போது, அமைதி சக்தியின் அடிப்படையில், விஞ்ஞான சக்தியை மிக நல்ல பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கான கருவியாக ஆகுங்கள். நீங்கள் இதற்கும் நோபல் பரிசை வெல்லுவீர்கள், அல்லவா? ஏனெனில், இந்தப் பணிக்கான தேவை உள்ளது. குறிப்பாக எதற்காயினும் தேவை ஏற்படும்போது, யாராவது ஒருவர் அதற்குக் கருவி ஆகினால், அனைவரும் அந்த ஆத்மாவை மேன்மையான பார்வையுடன் மதிப்பார்கள். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்து கொண்டீர்களா? எனவே, தற்சமயம் விஞ்ஞானத்திற்கும் மௌனத்திற்கும் இடையிலுள்ள தொடர்பையும், இந்த இரண்டின் தொடர்பினால் எவ்வளவு வெற்றி பெற முடியும் என்பதையும் ஆராயுங்கள். நீங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர், அல்லவா? இப்போது இதைச் செய்யுங்கள். நீங்கள் இத்தகைய பெரியதொரு பணியைச் செய்ய வேண்டும். நீங்கள் இத்தகையதோர் உலகை உருவாக்குவீர்கள், அல்லவா? அச்சா.

பாப்தாதா யுகே குழுவைச் சந்திக்கிறார்:

நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் எப்போதும் தந்தையுடனேயே இருக்கிறார்கள். தந்தை எப்போதும் உங்களுடனேயே இருப்பதை நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் தந்தையின் சகவாசத்தில் இருந்து சிறிதளவேனும் அப்பால் நகர்ந்தாலும், மாயையின் பார்வை மிகக் கூர்மையானது. நீங்கள் சிறிதளவு அப்பால் சென்றுள்ளதை அவள் கண்டதும், உங்களைத் தனக்குரியவளாக அவள் ஆக்கிக் கொள்வாள். இதனாலேயே, நீங்கள் சிறிதளவேனும் அப்பால் செல்லக்கூடாது. சதா தந்தையின் சகவாசத்திலேயே இருங்கள். பாப்தாதாவே உங்களுடன் எல்லா வேளையும் இருப்பதற்கு முன்வரும்போது, இந்த சகவாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கல்பம் முழுவதும் உங்களால் வந்து எனது சகவாசத்தில் இருங்கள் எனக் கூறும் தந்தையின் சகவாசத்தைக் காண முடியாது. சத்தியயுகத்திலும் உங்களுக்கு இத்தகைய பாக்கியம் கிடைக்காது. சத்தியயுகத்திலும் நீங்கள் ஆத்மாக்களின் சகவாசத்திலேயே இருப்பீர்கள். கல்பம் முழுவதிலும் நீங்கள் எவ்வளவு காலத்திற்குத் தந்தையின் சகவாசத்தில் இருக்கிறீர்கள்? மிகக் குறுகிய காலத்திற்கே, அப்படியல்லவா? நீங்கள் இத்தகைய மகத்தான பாக்கியத்தை குறுகிய காலத்திற்கே பெறுகிறீர்கள். ஆகவே, நீங்கள் எப்போதும் அவருடன் இருக்க வேண்டும், அல்லவா? சதா உறுதியான ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் குழந்தைகளை பாப்தாதா பார்க்கிறார். இத்தகைய அன்பான குழந்தைகள் பாப்தாதாவின் முன்னால் இருக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் மிகவும் அழகானவர். வெவ்வேறான, தொலைவிலுள்ள பல இடங்களில் இருந்து மிகுந்த அன்புடன் பாப்தாதா உங்கள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து ஒன்றாகச் சேர்த்துள்ளார். இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் எப்போதும் பலம்வாய்ந்தவர்கள். அவர்களால் பலவீனம் ஆகமுடியாது. அச்சா.

தனிப்பட்ட சந்திப்பு:

ஒரு விசேடமான நடிகர் என்றால் எப்போதும் ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு விநாடியும் விழிப்பாக இருப்பவர் என்று அர்த்தம். அவர் கவனக்குறைவானவர் அல்ல.

நீங்கள் நடக்கும்போதும் அசையும் போதும் உண்ணும்போதும் பருகும்போதும் இந்த எல்லையற்ற உலக நாடக மேடையில் உங்களை ஒரு விசேடமான நடிகர் என சதா அனுபவம் செய்கிறீர்களா? விசேடமான நடிகர்கள் எப்போதும் தமது செயல்களில் கவனம் செலுத்துவார்கள். அதாவது, எல்லா வேளையும் தமது பாகங்களில் கவனம் செலுத்துவார்கள். ஏனெனில், நாடகம் முழுவதும் கதாநாயக நடிகரிலேயே தங்கியிருக்கும். எனவே, நீங்களே இந்த முழு நாடகத்திற்கும் அடிப்படையானவர்கள், அப்படியல்லவா? எனவே, விசேடமான ஆத்மாக்கள் அல்லது விசேடமான நடிகர்களான நீங்கள் எப்போதும் இத்தகைய கவனத்தைச் செலுத்துகிறீர்களா? விசேடமான நடிகர்கள் ஒருபோதும் கவனக்குறைவாக இருக்கமாட்டார்கள். அவர்கள் விழிப்பாகவே இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒருபோதும் கவனக்குறைவானவர்கள் ஆகுவதில்லை, அல்லவா? நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நான் அங்கு சென்றடைவேன். நீங்கள் இவ்வாறு நினைக்கவில்லை, அல்லவா? நீங்கள் அனைத்தையும் செய்கிறீர்கள். ஆனால் என்ன வேகத்தில்? நீங்கள் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். ஆனால் என்ன வேகத்தில் முன்னேறுகிறீர்கள்? வேகத்தில் வேறுபாடு காணப்படுகிறதல்லவா? நடக்கின்ற ஒருவருக்கும், விமானத்தில் பறக்கின்ற ஒருவருக்கும் இடையில் பெரியதொரு வேறுபாடு காணப்படும். நடக்கின்றவரும் முன்னேறிச் செல்கிறார், பறக்கின்றவரும் முன்னேறிச் செல்கிறார் என்றே கூறப்படும். ஆனால், இரண்டிலும் அதிகளவு வேறுபாடு உள்ளது. எனவே, பிரம்மாகுமார் ஆகியுள்ள நீங்கள் வெறுமனே முன்னேறிச் சென்றால், நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்றே அர்த்தம். ஆனால், என்ன வேகத்தில்? விரைவான வேகத்தில் செல்பவர்கள் மட்டுமே உரிய நேரத்தில் தமது இலக்கைச் சென்றடைவார்கள். இல்லாவிட்டால், அவர்கள் பின்தங்கிவிடுவார்கள். இங்கும் உங்களுக்கு ஒரு பேறு உள்ளது. ஆனால் அது சூரிய வம்சத்திற்குரியதா அல்லது சந்திர வம்சத்திற்குரியதா? இவை இரண்டிலும் வேறுபாடு உள்ளதல்லவா? எனவே, சூரிய வம்சத்திற்குரியவர் ஆகுவதற்கு, உங்களின் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள சாதாரணத்தன்மை அனைத்தையும் நீக்குங்கள். கதாநாயக நடிகர் ஒருவர் சாதாரணமாக நடித்தால், அனைவரும் அவரைப் பார்த்துச் சிரிப்பார்கள், அப்படியல்லவா? எனவே, இங்கும், நீங்கள் விசேடமான நடிகர் என்ற விழிப்புணர்வை எப்போதும் வைத்திருங்கள். எனவே, உங்களின் ஒவ்வொரு செயலும் விசேடமானதாக இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வோர் அடியும் விசேடமானதாக இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு எண்ணமும் மேன்மையானதாக இருக்க வேண்டும். வெறுமனே ஐந்து நிமிடங்களே சாதாரணமானவையாக இருந்தன என நினைக்காதீர்கள். ஐந்து நிமிடங்கள் என்பது வெறுமனே ஐந்து நிமிடங்கள் அல்ல. ஆனால் சங்கமயுகத்தின் ஐந்து நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை, அர்த்தபூர்வமானவை. ஐந்து நிமிடங்கள் ஐந்து வருடங்களை விட மகத்தானவை. எனவே, அதில் கவனம் செலுத்துங்கள். இதுவே தீவிர முயற்சியாளராக இருத்தல் எனப்படுகிறது. தீவிர முயற்சியாளர்களின் சுலோகம் என்ன? இப்பொழுதில்லையேல் எப்பொழுதும் இல்லை. எனவே, நீங்கள் எப்போதும் இதை நினைவு செய்கிறீர்களா? நீங்கள் எல்லா வேளைக்கும் இராச்சிய பாக்கியத்தைப் பெற விரும்பினால், நீங்கள் எல்லா வேளையும் கவனம் செலுத்த வேண்டும். குறுகிய காலத்திற்கு எல்லா வேளையும் கவனம் செலுத்துவதனால், நீங்கள் நீண்ட காலத்திற்கு நிலையான பேற்றினைப் பெற முடியும். எனவே, இந்த விழிப்புணர்வை எல்லா வேளைக்கும் வைத்திருங்கள். அத்துடன், நடக்கும்போதும் அசையும்போதும் நீங்கள் சாதாரணமானவர் ஆகாமல் இருப்பதற்காகச் சோதித்துப் பாருங்கள். தந்தை, பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். எனவே, அவரே அதியுயர்ந்தவர். ஆகவே, தந்தையைப் போன்றே குழந்தைகளும் அதியுயர்ந்தவர்கள், அதாவது, ஒவ்வொரு வகையிலும் மேன்மையானவர்கள் ஆவார்கள்.

எனவே, இப்போது உங்களின் முயற்சிகள் தீவிரமானவையாக இருக்க வேண்டும். உங்களின் சேவையில் குறைந்தளவு நேரமும் குறைந்தளவு முயற்சியும் செலவிடப்பட வேண்டும். ஆனால் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும். ஒருவர், பலரின் பணிகளைச் செய்ய வேண்டும். ஆகவே, இத்தகைய திட்டத்தைச் செய்யுங்கள். பஞ்சாப் மிகவும் பழையது. அது ஆரம்பத்தில் இருந்தே சேவையில் ஈடுபட்டுள்ளது. எனவே, ஆதி இடத்தில் இருப்பவர்கள், இப்போது சில ஆதி இரத்தினங்களைக் கண்டெடுக்க வேண்டும். எவ்வாறாயினும், பஞ்சாபைச் சிங்கம் என்று கூறுவார்கள். சிங்கம் கர்ச்சிக்கும். கர்ச்சிப்பது என்றால் உரத்த சத்தம் என்று அர்த்தம். இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் யார் இதைச் செய்கிறார்கள் என்றும் நாம் பார்ப்போம்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நினைவெனும் ஒழுங்குமுறையுடன் அமிர்த வேளையில் இருந்து இரவுவரை அனைத்தையும் மிகச்சரியாகச் செய்யும் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

அமிர்தவேளையில் இருந்து இரவுவரை நீங்கள் எதைச் செய்தாலும், அது நினைவெனும் ஒழுங்குமுறையுடன் செய்யப்பட வேண்டும். அப்போது ஒவ்வொரு செயலிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நடைமுறைப் பலனாக அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதே, அனைத்திலும் மகத்தான வெற்றி ஆகும். சதா சந்தோஷம் மற்றும் சுகத்தின் அலைகளில் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் இந்த உடனடிப் பலனைப் பெறுவீர்கள். எதிர்காலத்திலும் நீங்கள் பலனைப் பெறுவீர்கள். இந்த வேளைக்குரிய நடைமுறையான உடனடிப்பலனானது, உங்களின் எதிர்காலப் பல பிறவிகளின் பலனை விட மகத்தானது. நீங்கள் இப்போது எதையாவது செய்கிறீர்கள். உடனடியாக அதற்கான வெகுமதியைப் பெறுகிறீர்கள். இதுவே நடைமுறை உடனடிப் பலன் என்று அழைக்கப்படுகிறது.

சுலோகம்:
உங்களை ஒரு கருவியாகக் கருதியவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். நீங்கள் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருப்பீர்கள். நான் என்ற உணர்வும் இருக்காது.