03.10.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.03.88     Om Shanti     Madhuban


வார்த்தைகளினதும் செயல்களினதும் சக்திகள் இரண்டையும் சேமிப்பதற்கான இறை திட்டம்.


இன்று, ஆன்மீகத் தீச்சுடர் தனது ஆன்மீக விட்டில் பூச்சிகளைப் பார்க்கிறார். சகல திசைகளிலும் உள்ள விட்டில்பூச்சிகள் அன்பில் வீழ்ந்துள்ளார்கள். அதாவது, அவர்கள் தங்களைத் தீச்சுடருக்கு அர்ப்பணித்துள்ளார்கள். தங்களை அர்ப்பணித்த, அதாவது, அன்பில் வீழ்ந்த எண்ணற்ற விட்டில்பூச்சிகள் உள்ளன. எவ்வாறாயினும், அவ்வாறு தியாகம் செய்த பின்னர், தீச்சுடரின் மீதுள்ள அன்பினால் ஆத்மாக்கள் தீச்சுடரைப் போல் ஆகும் அந்தத் தியாகம் வரிசைக்கிரமமாக உள்ளது. உண்மையில், அவர்களின் இதயங்களில் அன்பு இருப்பதனாலேயே அந்தத் தியாகம் இடம்பெறுகிறது. இதயத்தின் ஆழமான அன்பிற்கும் வெறுமனே அன்புடன் இருப்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. எல்லோரிடமும் அன்பு உள்ளது. அந்த அன்பினாலேயே தியாகம் ஏற்படுகிறது. இதயபூர்வமான அன்பைக் கொண்டிருப்பவர்களே தந்தையின் இதயத்தில் இருக்கும் விடயங்களையும் அவரின் எதிர்பார்ப்புக்களையும் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்றுகிறார்கள். இதயபூர்வமான அன்பைக் கொண்டிருப்பவர்கள் தந்தையின் இதயத்தின் எதிர்பார்ப்புக்களையும் ஆசைகளையும் நிறைவேற்றுகிறார்கள். இதயபூர்வமான அன்பைக் கொண்டிருத்தல் என்றால், தந்தையின் இதயத்தால் பேசப்படும் எவையும் குழந்தைகளின் இதயங்களில் அமிழ்ந்திருக்கும். அவர்களின் இதயங்களில் என்ன அமிழ்ந்துள்ளதோ, அவை இயல்பாகவே அவர்களின் செயல்களிலும் அமிழ்ந்திருக்கும். அன்பை மட்டும் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு, சில விடயங்கள் அவர்களின் இதயங்களில் அமிழ்ந்திருக்கும். சில விடயங்கள் அவர்களின் தலைகளில் அமிழ்ந்திருக்கும். அவர்களின் இதயங்களில் அமிழ்ந்திருப்பவை செயலில் போடப்படும். அவர்களின் தலைகளில் என்ன அமிழ்ந்துள்ளதோ, அதில் இருந்து, நாம் இதைச் செய்யலாமா வேண்டாமா? அல்லது, இதைச் செய்யவே வேண்டும், அது சரியான நேரத்தில் நிகழும் போன்ற பல எண்ணங்கள் தோன்றும். இவ்வாறான பல எண்ணங்கள் ஏற்படுவதனால், அது எண்ணங்களின் மட்டத்தில் மட்டுமே இருக்கும். செயலில் போடப்படமாட்டாது.

எனவே, இன்று, நீங்கள் எல்லோருமே உங்களைத் தியாகம் செய்துள்ளீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் உங்களைத் தியாகம் செய்திருக்காவிட்டால், உங்களைப் பிராமணர்கள் என்று அழைக்க முடியாது. தந்தைமீதுள்ள அன்பினால், தந்தை உங்களுக்கு என்ன கூறியுள்ளாரோ அதைச் செய்யும் தியாகத்தைச் செய்ய வேண்டும். அதாவது, நான் என்ற உணர்வை நீங்கள் துறக்க வேண்டும். அது அகங்காரமோ அல்லது பலவீனமோ, இரண்டையும் துறக்க வேண்டும். இதுவே தியாகம் எனப்படுகிறது. தங்களைத் தியாகம் செய்யும் பலர் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தியாகத்தைச் செய்யும் தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள் வரிசைக்கிரமமானவர்களாக இருக்கிறார்கள்.

இன்று, இந்த ஒரு மாதத்திற்கான பெறுபேற்றை மட்டுமே பாப்தாதா பார்க்கிறார். இந்தப் பருவகாலத்தில், ஆத்மாக்களான நீங்கள் தந்தைக்குச் சமமானவர் (பாப்சமான்) ஆகுவதற்காகக் குறிப்பாகப் பல சமிக்கைகளைப் பல்வேறு நேரங்களில், பல்வேறு வழிமுறைகளில் பாப்தாதா வழங்கியுள்ளார். இதுவே பாப்தாதாவின் இதயத்தில் உள்ள விசேடமான, மேன்மையான ஆசையாகும். நீங்கள் பல பொக்கிஷங்களையும் பல ஆசீர்வாதங்களையும் பெற்றுள்ளீர்கள். ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நீங்கள் இங்கே ஓடோடி வந்துள்ளீர்கள். குழந்தைகள் இத்தகைய அன்புடன் அவரைச் சந்திப்பதற்கு வருகிறார்கள் என்பதனாலும் அவர்களும் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதனாலும் தந்தையும் மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், தந்தையின் இதயத்தில் உள்ள எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் யார் நிறைவேற்றப் போகின்றீர்கள்? தந்தை உங்களுக்குக் கூறிய விடயங்களில் எந்தளவினை நீங்கள் நடைமுறையில் கடைப்பிடிக்கிறீர்கள்? எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ற மூன்றினதும் பெறுபேறு என்ன? உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் உங்களின் மனம் எந்தளவிற்குச் சக்திவாய்ந்தாக இருக்கிறது? நீங்கள் அமர்ந்திருந்து இந்த விடயங்களைக் கடைந்தாலே, அது சுய முன்னேற்றத்திற்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும், மேன்மையான மனங்களைக் கொண்டுள்ள மேன்மையான ஆத்மாக்களான உங்களுக்கு, அதாவது, சக்திவாய்ந்த எண்ணங்களையும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பவர்களுக்கு, உங்களின் மனதின் சக்தியின் கண்ணாடி எது? இவற்றின் கண்ணாடி, உங்களின் வார்த்தைகளும் செயல்களுமேயாகும். அஞ்ஞானி ஆத்மாக்களுடனோ அல்லது ஞானி ஆத்மாக்களுடனோ, இரண்டு வகையான ஆத்மாக்களுடனும் உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் உங்களின் வார்த்தைகளும் செயல்களும் ஒரு கண்ணாடியாக இருக்கும். உங்களின் வார்த்தைகளும் செயல்களும் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் நிறைந்திருக்காவிட்டால், உங்களின் மனதின் சக்தியின் நடைமுறை ரூபத்தை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? தூய, சக்திவாய்ந்த மனங்களைக் கொண்டிருப்பவர்கள், இயல்பாகவே சக்திநிறைந்த, தூய வார்த்தைகளையும் செயல்களையும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் நல்லாசிகளால் நிறைந்திருப்பார்கள். சக்திவாய்ந்த மனம் என்றால், அவர்களின் நினைவின் சக்தியானது மேன்மையானதாகவும் சக்திவாய்ந்தாகவும் இருக்கும். அவர்கள் இலகு யோகிகளாக இருப்பார்கள். அவர்கள் இலகுயோகிகளாக இருப்பது மட்டுமன்றி, இலகுவான கர்ம யோகிகளாகவும் இருப்பார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் நினைவைச் சக்திவாய்;ந்தது ஆக்குவதில் கவனம் செலுத்துவதையும் தமது நினைவை இலகுவானதாகவும் நிலையானதாகவும் ஆக்குவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதையும் பாப்தாதா பார்த்தார். அவர்கள் இதில் முன்னேறுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் முன்னேறுவார்கள். அவர்களுக்குத் தந்தையிடம் நல்ல அன்பு உள்ளது. இதனாலேயே, அவர்கள் நினைவில் கவனம் செலுத்துகிறார்கள். ஏனென்றால், நினைவின் அடிப்படை அன்பேயாகும். தந்தையுடனான இதயபூர்வமான சம்பாஷணை செய்வது என்று வரும்போது, எல்லோரும் மிக நன்றாகச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், சிலவேளைகளில் யாராவது ஒருவருடன் முரண்பாடு ஏற்பட்டதும் கடும் பார்வை பார்ப்பதுடன், நீங்கள் ஏன் இதைச் சரி செய்யக்கூடாது? எனத் தந்தையிடம் முறைப்பாடும் செய்கிறார்கள். அந்தக் கண் அன்பினாலும் கனிவினாலும் நிறைந்துள்ளது. ஆனால் அவர்கள் ஒன்றுகூடலுக்குள் வந்ததும், அவர்கள் செயல்களைச் செய்து குடும்பத்துடன் தொடர்பில் வர ஆரம்பித்ததும், ஒன்றுகூடலில் அதிகளவு வார்த்தைகள் விரயமாக்கப்படுகின்றன. அதாவது, அது வார்த்தைகளின் சக்தியில் புலப்படுகிறது.

வார்த்தைகளின் சக்தி வீணாக்கப்படுவதனால், தந்தையை வெளிப்படுத்தும் அனுபவத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் உள்ள சக்தி அல்லது அதற்குத் தேவையான விசேடமான ஒரு பொருள் குறைந்து விடுகிறது. அவர்கள் தாம் கேட்பதை விரும்புகிறார்கள். அது வேறு விடயம். ஏனென்றால் தந்தை கூறிய விடயங்களையே நீங்கள் மீண்டும் கூறுகிறீர்கள். எனவே, நிச்சயமாக அவர்கள் அதை விரும்புவார்கள். எவ்வாறாயினும், வார்த்தைகளின் சக்தி வீணாக்கப்படுவதனால், சக்தி சேமிக்கப்படுவதில்லை. இதனாலேயே, தந்தையை வெளிப்படுத்தும் ஒலியைப் பரப்புவதில் இன்னமும் ஒரு தாமதம் காணப்படுகிறது. சாதாரணமான வார்த்தைகள் அதிகளவில் பேசப்படுகின்றன. அதற்குப் பதிலாக, அலௌகீக வார்த்தைகள், தேவதைகளின் வார்த்தைகள் இருக்க வேண்டும். இந்த வருடம், இதைக் குறிப்பாகக் கீழ்க்கோடிடுங்கள். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள்: அவரின் வார்த்தைகள் ஒரு தேவதையின் வார்த்தைகளாக - ஒரு சில வார்த்தைகளும் இனிமையான வார்த்தைகளும் - இருந்தன. பலனைத் தரக்கூடிய வார்த்தைகள் மிகச்சரியானவை. ஆனால், பலனைத் தராத வார்த்தைகள் வீணானவை. வியாபார நடவடிக்கைகளுக்கான வார்த்தைகளாக இருந்தாலும், செயல்களைச் செய்வதற்காகவும் நீங்கள் வார்த்தைகளைப் பேச வேண்டியிருந்தாலும், அதிகளவு வார்த்தைகளைப் பேசாதீர்கள். நீங்கள் இப்போது சக்தியைச் சேமிக்க வேண்டும். எவ்வாறு நீங்கள் நினைவினால் மனதின் சக்தியைச் சேமிக்கிறீர்களோ, நீங்கள் மௌனமாக அமர்ந்திருக்கும்போது, எண்ணங்களின் சக்தியைச் சேமிக்கிறீர்களோ, அவ்வாறே, வார்த்தைகளின் சக்தியையும் சேமியுங்கள்.

பாபா உங்களுக்கு வியப்பான ஒரு விடயத்தைப் பற்றிச் சொல்கிறேன். பாப்தாதாவின் உலகில், எல்லோருடைய சேமிப்புப் பெட்டிகளும் உள்ளன. உங்களின் நிலையங்களிலும் ஒரு பெட்டி (பாபாவின் பெட்டி) உள்ளதல்லவா? தந்தையின் உலகில், குழந்தைகளின் சேமிப்புப் பெட்டிகள் உள்ளன. நாள் முழுவதும், நீங்கள் ஒவ்வொருவரும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ற மூன்று சக்திகளையும் சேமிக்கிறீர்கள். அதுவே உங்களின் சேமிப்புப் பெட்டி ஆகும். எந்தளவு மனதின் சக்தியையும் வார்த்தைகளின் சக்தியையும் செயல்களின் சக்தியையும் நீங்கள் சேமித்துள்ளீர்கள் என்ற முழுக்கணக்கும் உள்ளது. நீங்கள் உங்களின் சேமிப்பு மற்றும் செலவின் கணக்கையும் அனுப்புகிறீர்கள்தானே? எனவே, பாப்தாதா உங்களின் சேமிப்புப் பெட்டிகளைப் பார்த்தார். என்ன வெளிப்பட்டது? உங்களின் கணக்கில் நீங்கள் எவ்வளவைச் சேமித்துள்ளீர்கள்? ஒவ்வொருவரின் பெறுபேறும் தனியானது. பல பெட்டிகள் நிறைந்திருந்தன. ஆனால் அவற்றில் சதங்களே இருந்தன. சிறுவர்கள் தமது சேமிப்புப் பெட்டியில் சதங்களைச் சேர்க்கும்போது, அவர்களின் பெட்டி மிகவும் பாரமாக இருக்கும். எனவே, பாபா குறிப்பாக இதை அதிகளவில் வார்த்தைகளின் பெறுபேற்றில் கண்டார். நீங்கள் நினைவில் கவனம் செலுத்துகிறீர்கள். ஆனால், நீங்கள் வார்த்தைகளில் அதிகளவு கவனம் செலுத்துவதில்லை. எனவே, இந்த வருடம், வார்த்தைகளினதும் செயல்களினதும் சக்திகளைச் சேமிப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். அரசாங்கமும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை உருவாக்குகிறார்கள்தானே? ஆமாம், எண்ணங்களின் சக்தியே பிரதானமானது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். எவ்வாறயினும், எண்ணங்களின் சக்தியுடன்கூடவே, வார்த்தைகளும் செயல்களும் குறிப்பாகத் தொடர்புடையன. ஏனென்றால், அவை உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் தெளிவாகப் புலப்படுகின்றன. எண்ணங்கள் மறைமுகமானவை. ஆனால், இவை தெளிவாகப் புலப்படும். உங்களின் வார்த்தைகளைச் சேமிப்பதற்கான வழிமுறையானது: குறைவாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள், மரியாதையுடன் பேசுங்கள் என்பதேயாகும். தந்தை பிரம்மா மரியாதையுடன் பேசியதால் இளையவர்களையும் வயதானவர்களையும் தனக்குச் சொந்தமாக்கினார். இந்த வழிமுறையைப் பயன்படுத்தி எந்தளவிற்கு நீங்கள் முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு விரைவாக வெற்றி மாலை தயார் ஆகிவிடும். எனவே, இந்த வருடம் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? சேவையுடன் கூடவே, சேவை செய்யும்போது விசேடமாக இந்தச் சக்திகளை நீங்கள் சேமிக்க வேண்டும்.

நீங்கள் எல்லோரும் சேவைக்காக அதிசிறந்த திட்டத்தைச் செய்துள்ளீர்கள். இப்போதும், திட்டங்களுக்கேற்ப பாரதத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ இடம்பெறும் சேவையானது நல்லது. நீங்கள் தொடர்ந்து நல்ல சேவை செய்வீர்கள். ஒரு பெறுபேற்றினை விடச் சிறந்த பெறுபேற்றினை உருவாக்கும் நல்லாசிகளுடன் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவதைப் போல், சேவையிலும், ஒன்றுதிரட்டிய முறையில் நீங்கள் திருப்தியாக இருப்பதுடன், மற்றவர்களையும் திருப்திப்படுத்தும் விசேடமான எண்ணம் இருக்க வேண்டும். ஏனென்றால், மூன்று வகையான சேவைகள் ஒரே வேளையில் இடம்பெறுகின்றன. 1. சுயத்தில் திருப்தியாக இருத்தல், அதாவது, சுயசேவை. 2. ஒன்றுகூடலில் திருப்தி, அதாவது, குடும்பத்திற்கான சேவை. 3. உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு வார்த்தைகளின் மூலம் அல்லது வேறொரு வழிமுறையின் மூலம் சேவை செய்தல். ஒரே வேளையில் மூன்று வகையான சேவைகள் இடம்பெறும். நீங்கள் எத்தகைய நிகழ்ச்சியை உருவாக்கினாலும், அதில் மூன்று வகையான சேவைகள் அமிழ்ந்துள்ளன. நீங்கள் உலக சேவைக்கான வழிமுறையிலும் பெறுபேற்றிலும் கவனம் செலுத்துவதைப் போல், ஏனைய இரண்டு வகையான சேவைகளான சுயசேவைக்கும் ஒன்றுகூடலின் சேவைக்கும் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் என்ற மூன்றும் தடைகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அப்போது மட்டுமே நீங்கள் சேவையில் முதலாம் இலக்க வெற்றியைப் பெறுகிறீர்கள் எனக் கூறப்படுகிறது. மூன்றிலும் வெற்றி நிறைந்தவர் ஆகுவதெனில், ஓரிலக்கத்தைக் கோருதல் என்று அர்த்தம். இந்த வருடம், மூன்று வகையான சேவைகளிலும் ஒரே வேளையில் வெற்றி ஏற்பட வேண்டும். இந்த முரசங்கள் ஒலிக்கட்டும். முரசங்கள் ஒரு மூலையில் மட்டும் அடிக்குமாக இருந்தால், அந்த ஒலி கும்பகர்ணனின் (தூங்கும் அரக்கன்) காதுகளைச் சென்றடைய மாட்டாது. இந்த முரசங்கள் எல்லாத் திசைகளிலும் அடிக்கும்போது, கும்பகர்ணர்கள் எல்லோரும் விழித்தெழுவார்கள். தற்சமயம், ஒருவர் விழித்தெழுகிறார். இன்னொருவர் தூங்கச் செல்கிறார். இரண்டாவது நபர் விழித்தெழும்போது, மூன்றாவது நபர் தூங்கச் செல்கிறார். அவர்கள் சிறிதளவு விழித்தெழுந்து, இது நல்லது எனக் கூறிவிட்டு மீண்டும் தூங்கச் சென்று விடுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் விழித்தெழுந்து, ஓஹோ பிரபு! (கடவுள் எத்தனை அற்புதமானவர்!) என வார்த்தைகளில் அல்லது தமது மனங்களில் கூறித் தமது முக்திக்கான ஆஸ்தியைக் கோரினால் மட்டுமே, நிறைவு ஏற்படும். அவர்கள் விழித்தெழுந்தால் மட்டுமே அவர்களால் தமது முக்திக்கான ஆஸ்தியைக் கோர முடியும். எனவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? ஒருவரோடு ஒருவர் ஒத்துழையுங்கள். மற்றவர்களைப் பாதுகாப்பதன் மூலம், நீங்கள் உங்களைப் பாதுகாப்பீர்கள். அதாவது, உங்களால் உங்களின் கணக்கில் சேமிக்கக்கூடியதாக இருக்கும்.

சேவைக்கான திட்டங்களுடன் நீங்கள் எந்தளவிற்கு மற்றவர்களை நெருக்கமாகக் கொண்டு வருகிறீர்களோ, அந்தளவிற்குச் சேவையின் பெறுபேறு நடைமுறையில் புலப்படும். செய்தியைக் கொடுக்கும் சேவையை நீங்கள் செய்து வருகிறீர்கள். அதை நீங்கள் தொடர்ந்தும் செய்ய வேண்டும். ஆனால் இந்த வருடம், நீங்கள் வெறுமனே செய்தியை மட்டும் கொடுக்கக்கூடாது. நீங்கள் அவர்களை ஒத்துழைப்பவர்களாகவும் ஆக்க வேண்டும். அதாவது, அவர்களை நெருங்கிய தொடர்பில் கொண்டு வாருங்கள். அவர்களை ஒரு படிவத்தை நிரப்பும்படி செய்கிறீர்கள். அது எப்படியும் தொடரும். ஆனால், இந்த வருடம், தொடர்ந்து முன்னேறுங்கள். அவர்களை ஒரு படிவத்தை நிரப்பும்படி செய்யுங்கள். ஆனால் அத்துடன் விட்டுவிடாதீர்கள். அவர்களை ஓர் உறவுமுறைக்குள் கொண்டு வாருங்கள். என்ன வகையான நபர் என்பதைப் பொறுத்து அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குங்கள். நீங்கள் சிறியதொரு நிகழ்ச்சியைச் செய்தாலும், இதுவே உங்களின் இலக்காக இருக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்காக அல்லது அவர்கள் படிவத்தை நிரப்பும்போது மட்டும் அவர்களை ஒத்துழைப்பவர்கள் ஆக்காதீர்கள். ஆனால், ஒத்துழைப்புடன் அவர்களை நெருக்கமானவர்கள் ஆக்குங்கள். அவர்களுடன் ஒரு தொடர்பை அல்லது உறவுமுறையை உருவாக்குங்கள். அதன்பின்னர் நீங்கள் மேற்கொண்டு முன்னேறும்போது, சேவைக்கான வடிவமும் மாறும். நீங்களாக எதையும் செய்ய வேண்டியிருக்காது. உங்களுடன் உறவுமுறையில் இருக்கும் மக்கள் உங்களின் சார்பாகப் பேசுவார்கள். நீங்கள் ஆசீர்வாதங்களையும் திருஷ்டியையும் மட்டும் கொடுக்க வேண்டும். தற்காலத்தில், அவர்கள் சங்கராச்சாரியாரை ஒரு கதிரையில் இருத்தி வைக்கிறார்கள். அதேபோல், அவர்கள் உங்களை ஒரு வெள்ளிக் கதிரையில் அன்றி, பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் என்ற கதிரையில் இருத்தி வைப்பார்கள். அவர்கள் களத்தைத் தயார் செய்வதற்குக் கருவிகள் ஆகுவார்கள். நீங்கள் உங்களின் திருஷ்டியால் விதைகளை விதைக்க வேண்டும், ஒரு சில ஆசீர்வாத வார்த்தைகளைப் பேச வேண்டும். அப்போது வெளிப்படுத்துகை நிகழும். அதிலிருந்து, உங்களின் மூலம் தந்தை புலப்படுவார். தந்தையின் திருஷ்டியினதும் அவரின் அன்பினதும் அனுபவத்தினால் வெளிப்படுத்துகையின் ஒலியானது கேட்க ஆரம்பிக்கும்.

நீங்கள் இப்போது சேவையின் பொன்விழாவைப் பூர்த்தி செய்துள்ளீர்கள். இப்போது, மற்றவர்கள் சேவை செய்வார்கள். நீங்கள் பார்வையாளர்களாக இருந்து சந்தோஷப்படுவீர்கள். உதாரணமாக, பாப்பரசர் என்ன செய்கிறார்? பெரியதொரு கூட்டத்தில் அவர் திருஷ்டி கொடுத்து, ஒரு சில ஆசீர்வாத வார்த்தைகளைப் பேசுகிறார். மற்றவர்கள் நீண்ட சொற்பொழிவு ஆற்றுவதற்குக் கருவிகள் ஆகுவார்கள். தந்தை உங்களுக்கு இந்த விடயங்களைக் கூறியுள்ளார் என நீங்கள் கூறுவீர்கள். இவர்கள் கூறியது எதுவாயினும் அவை தந்தையின் வார்த்தைகளே. அவரைப் போல் வேறு எவரும் இல்லை என மற்றவர்கள் கூறுவார்கள். எனவே, இத்தகைய கரங்கள் படிப்படியாகத் தயார் ஆகும். நிலையங்களைப் பார்த்துக் கொள்வதற்கான கரங்கள் தயாராகி விட்டார்கள்தானே? அதேபோல், அனுபவத்தைப் பெற்று உங்களின் சார்பாக மேடையில் பேசக்கூடியவர்களும் தோன்றுவார்கள். அவர்கள் உங்களைப் புகழ்பவர்களாக மட்டுமன்றி, ஞானத்தின் ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவுபடுத்தி, இந்த இறை ஞானமே சரியானது என்பதை நிரூபிப்பதற்கும் கருவிகள் ஆகுவார்கள். எவ்வாறாயினும், இது நிகழ வேண்டும் என்றால், இத்தகைய அன்பான, ஒத்துழைக்கும் மக்களைத் தொடர்பில் கொண்டுவந்து, பின்னர் அவர்களுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்துங்கள். இந்த முழு செயல் திட்டத்தினதும் இலக்கு என்னவென்றால், நீங்கள் சக்தியாகவும்(மைற்) அவர்கள் மைக்காகவும் ஆகும் வகையில் அவர்களை ஒத்துழைக்கச் செய்வதாகும். ஒத்துழைப்பிற்கான இந்தச் சேவையின் இலக்கானது, மைக்குகளைத் தயார் செய்வதாகும். அவர்கள் தமது சொந்த அனுபவத்தின் அடிப்படையில், உங்களினதும் தந்தையினதும் ஞானத்தை வெளிப்படுத்துவார்கள். இலகுவாகவும் இயல்பாகவும் மற்றவர்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மைக்குகளைத் தயார் செய்யுங்கள். சேவையின் இலட்சியம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் செய்த இந்த நிகழ்ச்சிகளில் இருந்து என்ன வெண்ணெய் பிரித்தெடுக்கப்படும்? அதிகளவு சேவை செய்யுங்கள். எவ்வாறாயினும், இந்த வருடம் ஒரு செய்தியைக் கொடுப்பதுடன்கூடவே இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய தகுதிவாய்ந்தவர்கள் யார் என்பதைப் பார்ப்பதற்கு உங்களின் கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது, அவர்களை வெவ்வேறு வழிமுறைகளில் தொடர்பில் கொண்டு வாருங்கள். நீங்கள் ஒரு நிகழ்ச்சியைச் செய்து, அதன்பின்னர் இன்னொரு நிகழ்ச்சியையும் அதன்பின் இன்னொரு நிகழ்ச்சியையும் செய்வதாகவும், முதல் குழுவிலுள்ள மக்கள் அங்கேயே விடப்பட்டு, அண்மையில் நடந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் இருக்கக்கூடாது. இங்கும், நீங்கள் தொடர்பில் உள்ளவர்களுடன் சேகரிக்கும் சக்தியுடன் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சேகரியுங்கள். இறுதியில் உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களினதும் உறவுமுறையில் இருப்பவர்களினதும் ஒரு மாலை உருவாகும். உங்களுக்குப் புரிகிறதா? வேறு என்ன எஞ்சியுள்ளது? பாபாவைச் சந்திக்கும் நிகழ்வு.

இந்த வருடம், ஆறுமாதகாலச் சேவையின் பெறுபேற்றினை பாப்தாதா பார்க்க விரும்புகிறார். சேவைக்காக நீங்கள் என்ன திட்டங்களை உருவாக்கியிருந்தாலும், எங்கும் எல்லோருடனும் ஒத்துழைத்து, சேவை செய்வதற்காகச் சுற்றிவரப் பயணம் செய்யுங்கள். இளையவர்களுக்கும் முதியவர்களுக்கும் எல்லோரிலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தூண்டி, சேவையின் மூன்று விடயங்களிலும் அவர்களை முன்னேறச் செய்யுங்கள். இதனாலேயே, இந்த வருடம் பாப்தாதா உங்களுக்கு முழுமையாகச் சேவை செய்துள்ளார். இரவையும் பகலாக மாற்றியுள்ளார். இது இப்போது மூன்று வகையான சேவைகளினதும் பலனை உண்பதற்கான வருடமாகும். இந்த வருடம் இங்கு வருவதற்கான வருடமல்ல. ஆனால், பழத்தை உண்பதற்கான வருடமாகும். (அந்த வருடம் மதுவனப் பருவகாலம் இருக்கப்போவதில்லை) இந்த வருடம், நீங்கள் இங்கே வருவதற்கு எதுவும் நிச்சயிக்கப்படவில்லை. தந்தையிடமிருந்து சகாஷ் (ஒளி, சக்தியின் சூட்சுமமான கதிர்கள்) சதா உங்களுடன் இருக்கும். நாடகத்தில் என்ன நிச்சயிக்கப்பட்டுள்ளதோ, அது உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நாடகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயத்தை நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிகளவில் சேவை செய்யுங்கள். ஆறு மாதங்களில் பெறுபேற்றைப் பார்க்க முடியும். இப்போது தந்தையின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். நீங்கள் எங்கே பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும், ஒவ்வொருவரின் எண்ணங்களும் வார்த்தைகளும் செயல்களும் தந்தையின் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றி வைப்பதாக அமைய வேண்டும். முதலில், மதுவனத்தில் இந்த உதாரணத்தைச் செய்து காட்டுங்கள். முதலில், சேமிப்புத் திட்டத்தின் மாதிரி ஒன்றை மதுவனத்தில் உருவாக்குங்கள். அனைத்திற்கும் முதலில் இந்த வங்கியில் சேமியுங்கள். மதுவனவாசிகள் எல்லோரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளார்கள். பாபாவைச் சந்திக்க வேண்டிய சிலர் இன்னமும் இருக்கிறார்கள். இந்த வருடம் அது விரைவில் நிறைவேறும். ஏனென்றால், தந்தைக்கு எல்லாக் குழந்தைகளின் மீதும் அன்புள்ளது. உண்மையில், ஒவ்வொரு குழந்தையும் தந்தையிடமிருந்து ஒவ்வோர் அடியிலும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார். இதயபூர்வமான அன்பைக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஒவ்வோர் அடியிலும் ஆசீர்வாதங்களுடன் முன்னேறுகிறார்கள். தந்தையின் ஆசீர்வாதங்கள் வெறுமனே வார்த்தைகளில் மட்டுமில்லை. ஆனால் அவை இதயத்தில் இருந்து வருகின்றன. இதயபூர்வமான ஆசீர்வாதங்கள் எப்போதும் இதயத்தில் சந்தோஷ அனுபவத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். இதுவே இதயபூர்வமான ஆசீர்வாதங்களின் அடையாளமாகும். தமது சொந்த இதயங்களில் இதயபூர்வமான ஆசீர்வாதங்களைக் கிரகிப்பவர்களின் அடையாளம், அவர்கள் சதா சந்தோஷமாகவும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் முன்னேறுவதேயாகும். அவர்கள் ஒருபோதும் எங்கும் அகப்பட்டுக் கொள்வதில்லை அல்லது எதையிட்டும் குழப்பம் அடைவதில்லை. அவர்கள் எதற்காகவும் ஒருபோதும் நிற்பதில்லை. ஆசீர்வாதங்களால் அவர்கள் தொடர்ந்து பறக்கிறார்கள். ஏனைய அனைத்தும் கீழே விடப்பட்டு விடுகிறது. பறப்பவர்களைப் பக்கக்காட்சிகளாலும் நிறுத்த முடியாது.

இன்று, இந்தப் பருவகாலத்தில் சேவை செய்த குழந்தைகளை, தமது இதயபூர்வமாகக் களைப்பற்ற முறையில் சேவை செய்தவர்களை பாப்தாதா பாராட்டுகிறார். சேவையாளர்களுக்கு விசேடமான பாராட்டுக்கள். நீங்கள் மதுவனத்திற்கு வந்து, மதுவனத்தின் அலங்காரங்கள் ஆகினீர்கள். மதுவனத்தின் அலங்காரம் ஆகிய குழந்தைகளை பாப்தாதா பாராட்டுகிறார். பொறுப்பாக இருக்கும் கருவி ஆத்மாக்களான, தந்தையைப் போல் சதா களைப்பற்றவர்களாக இருந்து தமது சேவையால் எல்லோருக்கும் புத்துணர்ச்சியூட்டும் மேன்மையான ஆத்மாக்களுக்கும் பாராட்டுக்கள் வழங்கப்படுகின்றன. இரதத்திற்கும் வாழ்த்துக்கள் உண்டு. எங்கும் உள்ள சேவையாளர் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் தடைகளில் இருந்து விடுபட்டவண்ணம் முன்னேறுகிறீர்கள். அதேபோல் நீங்கள் தொடர்ந்து முன்னேற வேண்டும். இங்கு வந்துள்ள இந்தத் தேசத்தையும் வெளிநாடுகளையும் சேர்ந்த குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் புத்துணர்ச்சிக்கும் வாழ்த்துக்கள். எவ்வாறாயினும், இந்தப் புத்துணர்ச்சியை வெறுமனே ஆறு மாதங்களுக்காக மட்டும் வைத்திருக்காமல், என்றென்றும் அதைப் பேணுங்கள். புத்துணர்ச்சியைப் பொறுத்தவரை, மேலும் புத்துணர்ச்சி பெறுவதற்காக இங்கே வாருங்கள். ஏனென்றால், குழந்தைகள் எல்லோருக்கும் தந்தையின் பொக்கிஷங்களுக்கான உரிமை எப்போதும் உள்ளது. தந்தையும் பொக்கிஷங்களும் எப்போதும் உங்களுடன் இருக்கின்றன. இவையிரண்டும் எப்போதும் உங்களுடன் இருக்கும். கீழ்க்கோடிடப்பட்ட விடயங்களில் உங்களை உதாரணமாக்கி, இந்தப் பரீட்சையில் மேலதிகமான மதிப்பெண்களைப் பெறுங்கள். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். ஆனால் உங்களை ஓர் உதாரணம் ஆக்குங்கள். அதிலும், யார் முதலடி எடுத்து வைக்கிறார்களோ அவர்களே அர்ச்சுனர்கள். அதாவது, முதலாம் இலக்கத்தவர் ஆகுகிறார்கள். அடுத்த தடவை பாப்தாதா வரும்போது, தேவதைகளின் செயல்கள், தேவதைகளின் வார்த்தைகள், தேவதைகளின் எண்ணங்கள் எப்போதும் ஒவ்வொருவரிலும் புலப்பட வேண்டும். இத்தகைய மாற்றம் ஒன்றுகூடலில் தென்பட வேண்டும். தேவதைகளின் வார்த்தைகளும் செயல்களும் எத்தனை தனித்துவமானது என்பதை எல்லோரும் அனுபவம் செய்ய வேண்டும். பாப்தாதா இந்த மாற்றத்திற்கான விழாவைப் பார்க்க விரும்புகிறார். நீங்கள் உங்களின் வார்த்தைகளை ஒரு நாளேனும் பதிவு செய்து பார்த்தால், இவை அனைத்தையும் மிகத் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்வீர்கள். சோதித்துப் பாருங்கள். எவ்வளவு வீணாக்கப்படுகிறது என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். மனதின் பதிவுநாடாவினால் அதைச் சோதித்துப் பாருங்கள். பௌதீகமான பதிவுநாடாவினால் அல்ல. சாதாரணமான வார்த்தைகளும் வீணானவற்றின் கணக்கிலேயே சேகரிக்கப்படுகின்றன. நான்கு வார்த்தைகளுக்குப் பதிலாக, நீங்கள் 24 வார்த்தைகளைப் பேசினால், அந்த 20 எந்தக் கணக்கில் சேர்க்கப்படும்? ஆகவே, உங்களின் சக்தியைச் சேமியுங்கள். அப்போது நீங்கள் பேசும் இரண்டு வார்த்தைகள் ஆசீர்வாதங்களும் ஒரு மணிநேரச் சொற்பொழிவின் பணியைச் செய்யும். அச்சா.

தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ள ஆன்மீக விட்டில் பூச்சிகள் எல்லோருக்கும், தந்தைக்குச் சமமானவர் ஆகவேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் முன்னேறும் விசேடமான ஆத்மாக்கள் எல்லோருக்கும், தமது பறக்கும் ஸ்திதியுடன் சதா எந்த விதமான பக்கக்காட்சிகளையும் கடந்து செல்லும் இலேசான, ஒளியான குழந்தைகளுக்கும், ஆன்மீகத் தீச்சுடரான பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
உங்களின் புத்தியில் நம்பிக்கை நிறைந்தவராகி, உங்களின் நன்மை செய்யும் உணர்வுகளால் ஆத்மாக்கள் எல்லோருடைய சம்ஸ்காரங்களையும் மாற்றுவீர்களாக.

உங்களின் புத்தியில் உங்களுக்கு தந்தைமீது 100மூ நம்பிக்கை இருக்கிறது. அதனால் யார் உங்களை அசைக்க முயற்சி செய்தாலும், அவர்களால் அசைக்க முடியாது. அதேபோல், தெய்வீகக் குடும்பத்திலோ அல்லது உலக சமுதாயத்திலோ உள்ள ஆத்மாக்கள் என்ன வகையான பரீட்சையை உங்களுக்குக் கொடுத்தாலும், அவர்கள் கோபத்துடன் உங்களை எதிர்த்தாலும், உங்களை இகழ்ந்தாலும் அல்லது அவமதித்தாலும், அவர்களால் உங்களை அசைக்க முடியாது. இதற்கு, ஆத்மாக்கள் எல்லோர் மீதும் நன்மை செய்யும் உணர்வுகளை வைத்திருங்கள். இந்த உணர்வுகள் அவர்களின் சம்ஸ்காரங்களை மாற்றும். இதில் நீங்கள் பொறுமையை இழக்கக்கூடாது. சரியான நேரத்தில் நிச்சயமாகப் பலன் வெளிப்படும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

சுலோகம்:
தூய்மை சக்தியால், உங்களின் எண்ணங்களைத் தூய்மையாகவும் சுத்தமாகவும் ஆக்குங்கள். ஞானத்தால் அவற்றை நிரப்பி, உங்களின் பலவீனங்களை முடித்துவிடுங்கள்.