04.04.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    06.12.87     Om Shanti     Madhuban


மேன்மையான மனோபாவத்தைக் கொண்டிருப்பதே வெற்றியின் அடிப்படையாகும்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள தனது புனித அன்னங்களின் ஒன்றுகூடலைப் பார்க்கிறார். ஒவ்வொரு புனித அன்னமும் தனது மேன்மையான ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். தமது ஆசனங்களில் அமர்ந்திருக்கும் இந்தப் புனித அன்னங்களின் ஒன்றுகூடலானது, அலௌகீகமானதும், கல்பம் முழுவதிலும் தனித்துவமானதும் ஆகும். ஒவ்வொரு புனித அன்னமும் தனது சிறப்பியல்புகளால் அதிகபட்சம் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். சிறப்பியல்புகளே மேன்மையான அலங்காரமாகும். அலங்கரிக்கப்பட்ட புனித அன்னங்கள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் சிறப்பியல்புகள் என்ற அலங்காரத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். நீங்கள் அனைவரும் அலங்கரிக்கப்பட்டுள்ளீர்கள். ஏனென்றால், உங்களுக்கு இந்தப் பிராமணப் பிறப்பைக் கொடுத்தவுடனேயே, நீங்கள் ஒரு விசேடமான ஆத்மா ஆகுவீர்களாக என்ற ஆசீர்வாதத்தையும் பாப்தாதா உங்களுக்குக் கொடுத்துவிட்டார். அது வரிசைக்கிரமமாக இருந்தாலும், இறுதி இலக்கத்திலுள்ள ஆத்மாவும் ஒரு விசேடமான ஆத்மாவே. பிராமண வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதென்றால், நீங்கள் விசேடமான ஆத்மாக்களுக்குள் ஒருவராகக் கணக்கிடப்படுகிறீர்கள். நீங்கள் பிராமணக் குடும்பத்தில் இறுதி இலக்கத்தில் இருந்தாலும், உலகிலுள்ள பல ஆத்மாக்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் ஒரு விசேடமான ஆத்மாவாக நினைவு செய்யப்படுகிறீர்கள். இதனாலேயே, பலமில்லியன்களில் ஒரு கைப்பிடி என்றும் அந்தக் கைப்பிடியில் வெகு சிலர் என்றும் நினைவுகூரப்படுகிறது. எனவே, பிராமணர்களின் ஒன்றுகூடல் என்றால் விசேடமான ஆத்மாக்களின் ஒன்றுகூடல் என்று அர்த்தம்.

இன்று, பாப்தாதா எதைப் பார்த்தார் என்றால், தந்தை அனைவரையும் சமமாகச் சிறப்பியல்புகளால் அலங்கரித்தாலும், சிலர் அந்த அலங்காரத்தைக் கிரகித்து, பொருத்தமான நேரத்தில் அதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஏனையோரோ, அவர்களால் ஒன்றில் அதைக் கிரகிக்க முடியவில்லை. அல்லது, அவர்களால் அதைச் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியவில்லை. உதாரணமாக, தற்காலத்தில் அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், நேரத்திற்கேற்றபடி தங்களை அலங்கரித்துக் கொள்கிறார்கள். அது பார்ப்பதற்கு மிக நன்றாக உள்ளது. நேரத்திற்கேற்ப, அவர்களின் அலங்காரமும் இருக்கும். இது ஞானம் நிறைந்தவராக இருத்தல் எனப்படுகிறது. தற்காலத்தில், மக்கள் பல்வகையான அலங்காரத் தொகுதிகளை (நகை செற்கள்) வைத்திருக்கிறார்கள். பாப்தாதாவும் உங்களுக்குப் பல சிறப்பியல்புகள் மற்றும் மேன்மையான நற்குணங்கள் என்ற பல்வகையான செற்களைக் கொடுத்துள்ளார்;. ஓர் அலங்காரம் எத்தனை விலைமதிப்பற்றதாக இருந்தாலும், அது நேரத்திற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால், அது எவ்வாறிருக்கும்? அதேபோல், தந்தையும் அனைவருக்கும் சிறப்பியல்புகள், நற்குணங்கள், சக்திகள், ஞான இரத்தினங்கள் என்ற அலங்காரங்களை வழங்கியுள்ளார். ஆனால், அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவதிலேயே நீங்கள் வரிசைக்கிரமமானவர்கள் ஆகுகிறீர்கள். உங்கள் அனைவரிடமும் இந்த அலங்காரங்கள் அனைத்தும் உள்ளன. ஒவ்வொரு சிறப்பியல்பிற்கும் நற்குணத்திற்கும் காலத்திற்கேற்ப அதற்கேயுரிய முக்கியத்துவம் உள்ளது. அவை உங்களிடம் இருந்தாலும், நீங்கள் அவற்றைப் பயன்படுத்தாவிட்டால், அவை விலைமதிப்பற்றதாக இருந்தாலும், அவற்றுக்கு எந்தவித மதிப்பும் இருக்காது. எந்தவொரு பணிக்கும் நீங்கள் ஒரு சிறப்பியல்பைக் கிரகிக்க வேண்டியிருந்தால், அந்தக் குறிப்பிட்ட சிறப்பியல்பானது அந்த வேளையில் பெறுமதி மிக்கதாகும். உதாரணமாக, அன்னங்கள் கற்களையும் இரத்தினங்களையும் வேறுபிரிக்கக்கூடியவை. அவை இரத்தினங்களை மட்டும் வேறுபடுத்தி, அவற்றை மட்டுமே உள்ளெடுக்கும். அவை கற்களை ஒதுக்கிவிட்டு, இரத்தினங்களையும் முத்துக்களையும் மட்டுமே உள்ளெடுக்கும். இத்தகைய புனித அன்னங்கள் என்றால், நேரத்திற்கேற்ற சிறப்பியல்புகளையும் நற்குணங்களையும் தேர்ந்தெடுத்து, அந்த வேளையில் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் என்று அர்த்தம். இது வேறுபிரித்தறியும் சக்தியையும் தீர்மானிக்கும் சக்தியையும் கொண்ட புனித அன்னம் எனப்படுகிறது. எனவே, வேறுபிரித்தறியும் சக்தியும் தீர்மானிக்கும் சக்தியுமே உங்களை முன்னணியில் எடுத்துச் செல்லக்கூடிய இரண்டு சக்திகளாகும். இந்த இரண்டு சக்திகளையும் நீங்கள் கிரகித்தால், உங்களால் சரியான நேரத்தில் அந்தச் சிறப்பியல்புடன் ஒரு பணியைச் செய்ய முடியும். எனவே, புனித அன்னங்களான நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இரண்டு சக்திகளையும் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த வேளையில் இந்த இரண்டு சக்திகளில் ஏதாவது ஒன்று உங்களை ஏமாற்றுகிறதா? அதைச் செய்ய வேண்டிய அந்த நேரத்திற்குப் பின்னர் நீங்கள் வேறுபிரித்தறிந்து, தீர்மானம் எடுத்தால், அந்த நேரம் ஏற்கனவே கடந்து சென்றுவிட்டது. முதலாம் இலக்கப் புனித அன்னங்களாக இருப்பவர்களுக்கு, இந்த இரண்டு சக்திகளும் எப்போதும் அந்த வேளையில் சரியாகச் செயல்படும். அந்த நேரம் கடந்து சென்றபின்னர் இந்தச் சக்திகள் செயல்பட்டால், நீங்கள் இரண்டாம் இலக்கத்தின் பாகமாகவே ஆகுவீர்கள். மூன்றாம் இலக்கத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! எப்போதும் புனிதமான (தூய) புத்தியைக் கொண்டிருக்கும் அன்னங்களால் மட்டுமே சரியான நேரத்தில் ஒரு பணியைச் செய்யக்கூடியதாக இருக்கும்.

ஹோலி என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஹோலி என்றால் தூய்மை என்பது ஓர் அர்த்தம். ஹிந்தியில் ஹோ லி என்றால் கடந்தகாலம் கடந்து சென்றுவிட்டது என்று அர்த்தம். எனவே, ஹோலி புத்தியைக் கொண்டிருப்பவர்கள், அதாவது, தூய, சுத்தமான புத்தியைக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் கடந்ததைக் கடந்ததாக விட்டுவிடும் பயிற்சியை எப்போதும் கொண்டிருப்பவர்கள், எப்போதும் ஹோலியாக இருப்பார்கள். அதாவது, அவர்கள் ஆன்மீக நிறத்தால் நிறமூட்டப்பட்டிருப்பார்கள். அவர்கள் எப்போதும் தந்தையின் சகவாசத்தினால் நிறமூட்டப்பட்டிருப்பார்கள். எனவே, ஹோலி என்ற இந்த ஒரு வார்த்தை மூன்று விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதன் மூன்று அர்த்தங்களின் சிறப்பியல்பைக் கொண்டிருப்பவர்கள், அதாவது, இந்த வழிமுறையை அறிந்து கொண்ட அன்னங்கள், ஒவ்வொரு கணமும் வெற்றி பெறுகிறார்கள். எனவே, இன்று, பாப்தாதா இந்தப் புனித அன்னங்களின் ஒன்றுகூடலில் உள்ள புனித அன்னங்களின் சிறப்பியல்பைப் பார்த்தார். ஒரு பௌதீகப் பணியோ அல்லது ஆன்மீகப் பணியோ, இரண்டிலும் வெற்றி அடைவதற்கான அடிப்படை, வேறுபிரித்தறியும் சக்தியும் தீர்மானிக்கும் சக்தியுமே ஆகும். நீங்கள் யாராவது ஒருவருடன் தொடர்பில் வரும்போது, அவர்களின் நோக்கங்களையும் உணர்வுகளையும் வேறுபிரித்தறியாவிட்டால், பின்னர் அவற்றை வேறுபிரித்தறிந்தாலும், மிகச்சரியாகத் தீர்மானிக்காவிட்டால், உங்களால் மனிதர்களுடன் அல்லது சூழ்நிலைகளில் இரண்டிலும் வெற்றி பெற முடியாது. நீங்கள் மனிதர்களுடன் உறவுமுறையை ஏற்படுத்த வேண்டும். சூழ்நிலைகளை வெற்றி கொள்ளவும் வேண்டும். வாழ்க்கையில் இவை இரண்டிற்கும் முகங்கொடுக்க நேரிடும். எனவே, முதலாம் இலக்கப் புனித அன்னம் என்றால், இரண்டு சிறப்பியல்புகளாலும் நிறைந்திருப்பவர் என்று அர்த்தம். இதுவே இன்றைய ஒன்றுகூடலின் செய்திகளாகும். இந்த ஒன்றுகூடல் என்றால் பாபாவின் முன்னால் இங்கு அமர்ந்திருப்பவர்கள் மட்டும் என்று அர்த்தமல்ல. பாப்தாதாவின் முன்னால், உங்கள் அனைவருடனும், எங்கும் உள்ள குழந்தைகள் எல்லோரும் வெளிப்பட்டுள்ளார்கள். பாப்தாதா முழு எல்லையற்ற குடும்பத்துடனும் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதுடன், இதயபூர்வமாகவும் கலந்துரையாடுகிறார். பிராமண ஆத்மாக்கள் எல்லோரும் தமது நினைவின் சக்தியால் மதுவனத்தில் வந்துள்ளார்கள்! பாப்தாதா குறிப்பாக, ஒவ்வொரு குழந்தையினதும் வழிமுறையின் ரேகையும் வெற்றியின் ரேகையும் எந்தளவிற்குத் தெளிவாக இருக்கிறது என்பதையும், ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எவ்வாறு வழிமுறை பிரயோகிக்கப்படுகிறது என்பதையும், அந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் பெறுபேறாக அவர்கள் எந்தளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்பதையும் பார்த்தார். இந்த இரண்டு ரேகைகளும் எவ்வளவு தெளிவாக உள்ளது? அவை எத்தனை நீளமாக உள்ளன? அதாவது, வழிமுறையைப் பயன்படுத்தும் மிகச்சரியான வழியின் மூலமும் வெற்றி பெறுவதன் மூலமும் அவர்கள் தமது கணக்குகளில் எந்தளவினைச் சேமித்திருக்கிறார்கள்? வழிமுறைக்கான அத்திவாரம், மேன்மையான மனோபாவத்தைக் கொண்டிருப்பதாகும். மனோபாவம் மேன்மையானதாக இருந்தால், வழிமுறை சரியானதாக இருக்கும். வழிமுறை சரியானதாக இருந்தால், வெற்றியும் நிச்சயமாக மேன்மையானதாகவே இருக்கும். எனவே, வழிமுறைக்கும் அதன் வெற்றிக்குமான விதையானது, உங்களின் மனோபாவமே. எப்போதும் மேன்மையான சகோதரத்துவ ஆத்ம உணர்வு மனோபாவத்தைக் கொண்டிருங்கள். இதுவே பிரதானமான விடயம். ஆனால், அத்துடன்கூடவே, ஒவ்வோர் ஆத்மாவுடனும் தொடர்பில் வரும்போது, எப்போதும் நன்மை செய்யும், அன்பான, ஒத்துழைப்பான, சுயநலமற்ற, எப்போதும் பாவகரமான எண்ணங்களில் இருந்து விடுபட்ட மனோபாவம் இருக்க வேண்டும். வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்ட மனோபாவம் இருக்க வேண்டும். சிலவேளைகளில், சில ஆத்மாக்களின் மீது வீணான அல்லது பாவகரமான எண்ணங்களின் மனோபாவம் உங்களுக்கு உள்ளது. உங்களின் மனோபாவத்திற்கும் பார்வைக்குமேற்பவே, நீங்கள் அந்த ஆத்மாவின் பணிகளினதும் செயல்களினதும் உலகைக் காண்பீர்கள். சிலவேளைகளில், பாபா இதைக் குழந்தைகளில் கேட்கிறார், பார்க்கிறார். இந்த மனோபாவத்தால், நீங்கள் அதைப் பற்றிப் பேசுகிறீர்கள். அந்த நபர் எத்தகைய நல்லதொரு பணியைச் செய்தாலும், வீணானதன்மையின் மனோபாவம் உங்களுக்கிருப்பதால், அந்த ஆத்மாவிற்காக வெளிப்படும் வார்த்தைகளும் எப்போதும், இவர் எப்போதும் இப்படித்தான், அவர் எப்போதும் அப்படித்தான் என்பதாகவே இருக்கும். எனவே, இந்த வகையான மனோபாவத்தால், அந்த ஆத்மாவின் செயல்களின் உலகம் (களம்) அவ்வாறிருப்பதாகவே நீங்கள் உணர்வீர்கள். இந்த உலகில், நீங்கள் எல்லோரும் மூக்குக்கண்ணாடிகளின் உதாரணத்தைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் என்ன நிறக் கண்ணாடிகளை அணிகிறீர்களோ, நீங்கள் பார்க்கும் அனைத்தும் அந்த நிறமாகவே தெரியும். அதேபோல், உங்களின் மனோபாவம் என்னவோ, அந்த மனோபாவம் உங்களின் பார்வையை மாற்றும். உங்களின் பார்வை உலகையே மாற்றும். மனோபாவம் என்ற விதை எப்போதும் மேன்மையானதாக இருந்தால், வழிமுறையும் பெறுபேறும் நிச்சயமாக வெற்றிநிறைந்தாகவே இருக்கும். எனவே, அனைத்திற்கும் முதலில், உங்களின் மனோபாவத்தின் அத்திவாரத்தைச் சோதித்துப் பாருங்கள். அது மேன்மையான மனோபாவத்தைக் கொண்டிருத்தல் என்று அழைக்கப்படுகிறது. எந்தவோர் உறவுமுறை அல்லது தொடர்பில், மேன்மையான மனோபாவத்திற்குப் பதிலாக, கலந்த ஒரு மனோபாவம் காணப்பட்டால், நீங்கள் எத்தனை வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலும், அதில் வெற்றி ஏற்படமாட்டாது. இது ஏனென்றால், மனோபாவமே விதையாகும். வழிமுறையே மரமாகும். பெறுபேறே பழமாகும். விதை பலவீனமாக இருந்தால், அந்த மரம் எவ்வளவு பரந்து விரிந்திருந்தாலும், அதில் வெற்றிக்கான பழம் உருவாகாது. பாபாவும் தாதாவும் குழந்தைகளின் இந்த மனோபாவத்தையும் வழிமுறையையும் பற்றி விசேடமாக இதயபூர்வமாகக் கலந்துரையாடினார்கள்.

சுய முன்னேற்றத்திற்கும் சேவையில் வெற்றி பெறுவதற்கும், பாபாவும் தாதாவும் தமது இதயபூர்வமான கலந்துரையாடலில் ஒரு சுவாரசியமான சுலோகனைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நீங்கள் அனைவரும் இந்த சுலோகனை ஒருவருக்கொருவர் பயன்படுத்துகிறீர்கள். ஒவ்வொரு பணியிலும், நீங்கள் முதலில் என்ற சுலோகனை நினைவு செய்கிறீர்கள், அல்லவா? நீங்கள் முதலில் என்பது ஒன்று. மற்றையது, நான் முதலில் என்பதாகும். நீங்கள் முதலில் நான் முதலில் என்ற இரண்டு சுலோகன்களும் அத்தியாவசியமானவை. எவ்வாறாயினும், இதயபூர்வமான சம்பாஷணை செய்யும்போது, பாபாவும் தாதாவும் புன்னகை செய்தார்கள். நான் முதலில் என்று இருக்க வேண்டிய நேரத்தில், நீங்கள் அதை நீங்கள் முதலில் என்று ஆக்குகிறீர்கள். நீங்கள் முதலில் என்று நீங்கள் சொல்ல வேண்டிய நேரத்தில், நீங்கள் அதை நான் முதலில் என்று ஆக்குகிறீர்கள். நீங்கள் அதை மாற்றிவிடுகிறீர்கள். சுய மாற்றத்திற்கான எதுவும் வரும்போது, நீங்கள் முதலில் என நீங்கள் கூறுகிறீர்கள். இவர் மாறினால், நான் மாறுவேன். எனவே, அது நீங்கள் முதலில் என்பதாகும், அல்லவா? சேவைக்கான ஏதாவது வாய்ப்பு வரும்போது அல்லது ஒரு சூழ்நிலைக்கு முகம்கொடுக்கும்போது, நீங்கள் முயற்சி செய்து, நான் முதலில் என்று ஆக்கிவிடுகிறீர்கள். நானும் ஏதாவதாக இருக்கிறேன். நானும் எதையாவது பெற வேண்டும். எனவே, நீங்கள் முதலில் எனச் சொல்ல வேண்டிய இடத்தில் நான் முதலில் என நீங்கள் கூறுகிறீர்கள். சதா உங்களின் சுய மரியாதையில் ஸ்திரமாக இருந்து, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்றால், நீங்கள் முதலில் எனக் கூறுவதாகும். வார்த்தைகளால் நீங்கள் முதலில் எனக் கூறிவிட்டு, உங்களின் செயல்கள் வேறுபட்டதாக இருக்கக்கூடாது. நீங்கள் உங்களின் சுய மரியாதையில் ஸ்திரமாக இருந்து, மரியாதை கொடுக்க வேண்டும். மரியாதை கொடுத்து, சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பதன் அடையாளம் என்ன? எப்போதும் இதில் இரண்டு விடயங்களைச் சோதித்துப் பாருங்கள்.

ஒன்று, அகங்காரத்திற்கான மனோபாவம். மற்றையது, அவமரியாதை செய்யும் மனோபாவம். தனது சுயமரியாதையில் ஸ்திரமாக இருந்து, ஓர் அருள்பவராக, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவருக்கு, அவமரியாதை செய்யும் மனோபாவம் அல்லது அகங்காரத்திற்கான மனோபாவம் இருக்கமாட்டாது. இவர் எப்போதும் இவ்வாறு செய்கிறார். இவர் எப்போதும் அவ்வாறு செய்கிறார். இதுவும் அந்த ஆத்மாவிற்கு இராஜரீகமான முறையில் அவமரியாதை செய்வதாகும். உங்களின் சுய மரியாதையில் ஸ்திரமாக இருப்பதும், மரியாதை கொடுப்பதும், நீங்கள் முதலில் எனக் கூறுவதாகும். உங்களுக்குப் புரிகிறதா? சுய முன்னேற்றத்திற்கான எந்தவொரு சூழ்நிலையிலும், நான் முதலில் என்ற சுலோகனை நீங்கள் எப்போதும் நினைத்தால், அதன் பெறுபேறு என்னவாக இருக்கும்? நான் முதலில் என்றால் அர்ச்சுனரைப் போல் முதலடி எடுத்து வைப்பவர் என்று அர்த்தம். அர்ச்சுனர் என்றால் ஒரு விசேடமான ஆத்மா, ஒரு தனித்துவமான ஆத்மா, அலௌகீக ஆத்மா, அலௌகீக விசேடமான ஆத்மா என்று அர்த்தம். தந்தை பிரம்மா நான் முதலில் என்ற சுலோகனுடன் எப்போதும் வாழ்ந்து, அர்ச்சுனர் ஆகினார். அதாவது, முதலாம் இலக்க ஆத்மா ஆகினார். உங்களுக்கு முதலாம் இலக்கத்தைப் பற்றி, அதாவது, முதல் பிரிவைப் பற்றிக் கூறப்பட்டது. உண்மையில், முதலாம் இலக்கத்தில் ஒரு நபரே இருக்க முடியும். எனவே, இரண்டு சுலோகன்களும் அத்தியாவசியமானவை. எவ்வாறாயினும், இலக்கங்கள் எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன என உங்களுக்குக் கூறப்பட்டது. யாராவது சரியான வேளையில் சிறப்பியல்புகளைப் பயன்படுத்தாவிட்டால், இலக்கம் மாறிவிடுகிறது. அவற்றைச் சரியான நேரத்தில் பயன்படுத்துபவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அதாவது, அவர்கள் முதலாம் இலக்கத்தவர்கள் ஆகுகிறார்கள். எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். ஏனென்றால், இந்த வருடம், பாப்தாதா உங்களுக்கு சுயத்தைச் சோதிக்கும் விடயங்களைப் பற்றியே கூறுகிறார். உங்களின் பாபா உங்களுக்குப் பல்வேறுபட்ட விடயங்களைக் கூறியுள்ளார்தானே? எனவே, இன்று, இவற்றைச் சோதித்துப் பாருங்கள். நான் நீங்கள் என்று சொல்வதற்குப் பதில், நான் என்றும், நான் என்று சொல்வதற்குப் பதில், நீங்கள் என்றும் சொல்கிறேனா? இதுவே மிகச்சரியான வழிமுறை எனப்படுகிறது. நீங்கள் மிகச்சரியான வழிமுறையைப் பயன்படுத்தும்போது, நிச்சயமாக வெற்றி ஏற்படும். இந்த மனோபாவத்திற்கான வழிமுறை உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இரண்டு விடயங்களைச் சோதித்துப் பாருங்கள்: அவமரியாதை அல்லது அகங்காரத்திற்கான மனோபாவம் எதுவும் இருக்கக்கூடாது. இவை இரண்டும் இல்லாமல் போனால், நீங்கள் மரியாதையைப் பெறுவீர்கள். நீங்கள் அதைக் கேட்டாலென்ன கேட்காவிட்டாலென்ன, மனிதர்களும் இயற்கையும் எப்போதும் இயல்பாகவே தொடர்ந்து உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். உங்களின் எண்ணங்களிலேனும், மரியாதையைப் பெறுகின்ற சிறிதளவு ஆசை இருந்தாலும், உங்களால் அதைப் பெற முடியாது. பணிவானவராக இருத்தல் என்றால், நீங்கள் முதலில் எனக் கூறுவதாகும். பணிவான ஸ்திதியானது இயல்பாகவே மற்றவர்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்க வைக்கும். உங்களின் சுய மரியாதைக்குச் சவால் விடுக்கும் சூழ்நிலைகள் வந்தால், நீங்கள் முதலில் எனக் கூறுவதெனில், தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். மரியாதை கொடுப்பதில், தந்தை பிரம்மா எப்போதும் உலகத் தாயான, ஜெகதாம்பா, அன்னை சரஸ்வதியை முன்னால் வைத்தார். அதன்பின்பே தந்தை பிரம்மா இருந்தார். அன்னை பிரம்மாவாக அவர் இருந்தாலும், மரியாதை கொடுக்கும் விடயத்தில் அவர் தாய் ஜெகதாம்பாவையே முன்னால் வைத்தார். அவர் ஒவ்வொரு பணியிலும் குழந்தைகளை முன்னால் வைத்தார். ஆனால், முயற்சிக்கான ஸ்திதியைப் பொறுத்தவரை, அவர் தன்னை ஓர் எஞ்சினின் வடிவில் முன்னாலேயே வைத்திருந்தார். எஞ்சின் எப்போதும் முன்னாலேயே இருக்கும். சாகார் பாபாவின் வாழ்க்கையில், நான் எதைச் செய்கிறேனோ, என்னைப் பார்க்கும் மற்றவர்களும் அதையே செய்வார்கள் என்பதை நீங்கள் எப்போதும் கண்டீர்கள். எனவே, வழிமுறை, சுய முன்னேற்றம், தீவிர முயற்சிக்கான ரேகை என்பவற்றைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் தன்னை முன்னால் வைத்திருந்தார். எனவே, இன்று, பாபா வழிமுறை மற்றும் வெற்றிக்கான ரேகைகளைச் சோதித்துப் பார்த்தார். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, இதை மாற்றாதீர்கள். இதை மாற்றுவது என்றால், உங்களின் பாக்கியத்தை மாற்றிக் கொள்ளுதல் என்று அர்த்தம். புனித அன்னங்கள் ஆகுங்கள். எப்போதும், சரியான நேரத்தில் வேறுபிரித்தறியும் சக்தியாலும் தீர்மானிக்கும் சக்தியாலும் பரந்த, எல்லையற்ற புத்தியைக் கொண்டவர் ஆகுங்கள். எப்போதும் உங்களின் மனோபாவத்தின் விதை மேன்மையானதாக இருக்க வேண்டும். அத்துடன் தொடர்ந்து மேன்மையான வழிமுறையையும் வெற்றியையும் அனுபவம் செய்யுங்கள்.

பாப்தாதாவிற்குக் குழந்தைகளின் மீது அன்புள்ளது என உங்களுக்கு முன்னரே கூறப்பட்டது. அன்பின் அடையாளம் என்ன? ஒருவரை நேசிப்பவரால் அவர்களின் மீதுள்ள பலவீனங்களைக் காணச் சகிக்க முடியாது. அவர் எப்போதும் தன்னையும் தான் நேசிப்பவரையும் முழுமையாகவும் சமமாகவும் இருப்பதையே விரும்புவார். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, உங்களின் கவனம் சதா இதை நோக்கித் திருப்பப்படுகிறது. நீங்கள் சோதிக்கவும் வேண்டும். இதுவே உங்களை முழுமையானவர் ஆக்கும் உண்மையான அன்பாகும். அச்சா.

இப்போது, இங்கிருக்கும் பெரும்பாலானோர் எங்கும் உள்ள பழைய குழந்தைகள் ஆவார்கள். பழையவர்கள் என்பதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? பழையவர்கள் என்றால் அனைத்திலும் பலம்வாய்ந்தவர்கள் என பாப்தாதா அழைக்கிறார். பழையவர்கள் என்றால் பலமானவர்கள் என்று அர்த்தம். அனுபவமும் உங்களைப் பலசாலிகள் ஆக்குகிறது. நீங்கள் மாயை என்ற பூனை சிறிதளவில் வந்தாலும், பயப்படுகின்ற பலவீனமானவர்கள் இல்லை. இங்கு வந்திருக்கும் நீங்கள் எல்லோரும் பழைய, பலமானவர்கள், இல்லையா? இந்தச் சந்திப்பிற்கான வாய்ப்பில், நீங்கள் அனைவரும் நான் முதலில் என்று கூறியிருப்பது பரவாயில்லை. எவ்வாறாயினும், ஒவ்வொரு பணியிலும், சட்டங்களும் நன்மைகளும் உள்ளன. நான் முதலில்; என நீங்கள் கூறியதும், ஆயிரக்கணக்கானவர்கள் வருவது என்பதல்ல. பௌதீக உலகில், சட்டங்கள் உள்ளன. அதேபோல் நன்மைகளும் உள்ளன. சூட்சும வதனத்தில், சட்டங்களைப் பற்றிய கேள்வியே கிடையாது. அங்கு சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவையில்லை. அவ்யக்த சந்திப்பிற்கு முயற்சி தேவைப்படுகிறது. ஆனால், பௌதீக சந்திப்பு இலகுவாக இடம்பெறுகிறது. இதனாலேயே, நீங்கள் எல்லோரும் இங்கே ஓடோடி வருகிறீர்கள். எவ்வாறாயினும், காலத்திற்கேற்ப, எந்தளவிற்குச் சட்டங்கள் உள்ளனவோ, அந்தளவிற்கு அதில் நன்மைகளும் இருக்கும். பாப்தாதா சிறியதொரு சமிக்கை கொடுத்தாலும், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என எங்களுக்குத் தெரியவில்லை என நீங்கள் சொல்கிறீர்கள். ஏதாவது நிகழவிருந்தால், உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு அது நிகழாது. சாகார் பாபா அவ்யக்த் ஆகியபோது, அவர் உங்களுக்குச் சொன்னாரா? சடுதியாக நிகழும் எதுவும் அலௌகீகமானது, அழகானது. இதனாலேயே, பாப்தாதா கூறுகிறார்: சதா என்றும் தயாராக இருங்கள். என்ன நிகழ்ந்தாலும் அது அனைத்திலும் சிறப்பானதே. உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

புனித அன்னங்கள் அனைவருக்கும், பரந்த, எல்லையற்ற, மேன்மையான, சுத்தமான புத்திகளை ஏற்படுத்திக் கொள்ளும் புத்திசாலிக் குழந்தைகள் அனைவருக்கும், சக்திகள் அனைவருக்கும், சரியான நேரத்தில் தமது சிறப்பியல்புகள் அனைத்தையும் பயன்படுத்தும் ஞானி மற்றும் யோகி ஆத்மாக்களான குழந்தைகள் அனைவருக்கும், தந்தையைப் போல் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் எப்போதும் கொண்டிருக்கும் முழுமையான குழந்தைகள் அனைவருக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒன்றிணைந்த ரூபத்தில் இருந்தவண்ணம், மாஸ்ரராக இருக்கும் விழிப்புணர்வுடன் அதியுயர்ந்த அதிகாரத்தை அனுபவம் செய்வீர்களாக.

அனைத்திற்கும் முதலில், உங்களின் விழிப்புணர்வில் சரீரம் மற்றும் ஆத்மா என்ற ஒன்றிணைந்த ரூபத்தை வைத்திருங்கள். சரீரம் படைப்பாகும். ஆத்மாவே படைப்பவர். இதை வைத்திருப்பதன் மூலம், நீங்கள் இயல்பாகவே மாஸ்ரராக இருக்கும் விழிப்புணர்வில் இருப்பீர்கள். மாஸ்ரர் என்ற விழிப்புணர்வுடன், நீங்கள் உங்களை அதியுயர்ந்த அதிகாரி என அனுபவம் செய்வீர்கள். நீங்களே சரீரத்தைச் செயல்பட வைப்பவர். இரண்டாவதாக, தந்தையும் குழந்தையும் (சிவசக்தி) என்ற ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வினால் உங்களால் உங்களின் அதிகாரத்துடன் மாயையின் எந்தவிதமான தடைகளையும் வெற்றி கொள்ள முடியும்.

சுலோகம்:
விரிவாக்கம் அனைத்தையும் ஒரு விநாடியில் அமிழ்த்தி, ஞானத்தின் சாரத்தை அனுபவம் செய்வதுடன், மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தைக் கொடுங்கள்.