04.06.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே காமதேனுவாகிய ஜெகதாம்பாளின் (விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற பசு) புதல்வர்களும் புதல்விகளும் ஆவீர்கள். நீங்கள் அனைவருடைய விருப்பங்களையும் பூர்த்தி செய்து, உங்கள் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் உண்மையான பாதையைக் காட்ட வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தையால் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன?

பதில்:
குழந்தைகளே, எல்லையற்ற தந்தை எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பதற்கு வந்துள்ளார், ஆகவே அனைவருக்கும் இச்செய்தியைக் கொடுப்பதே உங்கள் கடமை ஆகும். தந்தையின் உதவியாளர்களாகி, ஒவ்வொரு வீட்டையும் சுவர்க்கமாக ஆக்குங்கள். முட்களை மலர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்யுங்கள். தந்தையைப் போன்று ஆணவமற்றவராகவும், அசரீரியானவராகவும் ஆகி, அனைவருக்கும் உதவி செய்யுங்கள். எதிரியாகிய இராவணனின் பிடியிலிருந்து முழு உலகையும் விடுவிப்பதே குழந்தைகளாகிய உங்களின் பெரும் பொறுப்பு ஆகும்.

பாடல்:
தாயே ஓ தாயே, நீங்களே அனைவரினதும் பாக்கியத்தை உருவாக்குபவர்.

ஓம் சாந்தி.
பாரதத்தில் மாத்திரமே தாயின் இப்புகழ் பாடப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஜெகதாம்பாள் பாக்கியத்தை உருவாக்குபவர், ஆகவே அவருக்குக் காமதேனு என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது, விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்பவர் என்பதாகும். அவர் யாரிடமிருந்து இந்த ஆஸ்தியைப் பெறுகிறார்? சிவபாபாவிடமிருந்து இந்த ஆஸ்தியை ஜெகதாம்பாள், ஜெகத்பிதா இருவருமே பெறுகிறார்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்னும் நம்பிக்கை, குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது, ஆனால் புரிந்துகொள்ள முடியும். ஆத்மாவும் மனிதரும் உள்ளார்கள். ஆத்மா அழிவற்றவர், ஆனால் இக்கண்களின் மூலம் காணக்கூடிய சரீரம் அழியக்கூடியதாகும். ஓர் ஆத்மாவின் காட்சி பெறப்பட முடியும். விவேகானந்தர் (ஒரு மகாத்மா) ஓர் ஆத்மாவின் காட்சியைக் கண்டார் எனக் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அவரால் அதனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆத்மாவான உங்கள் காட்சியைக் கண்டால், அது உங்கள் தந்தையின் காட்சியையொன்றைப் பெறுவது போன்றதே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். ஓர் ஆத்மாவைப் போன்றே, ஆத்மாக்களின் தந்தையும் இருப்பார், அதில் எந்த வேறுபாடும் இல்லை. அது புத்தியின் மூலம் புரிந்துகொள்ளப்படுகிறது. இவரே தந்தையும் இவர்களே குழந்தைகளும் ஆவர். ஆத்மாக்கள் அனைவரும் அந்தத் தந்தையை நினைவுசெய்கிறார்கள். இக்கண்களின் மூலம் ஒருவருடைய சொந்த ஆத்மாவையோ அல்லது தந்தையையோ காண்பது சாத்தியமல்ல. அவர் பரந்தாமவாசியான, பரமாத்மாவான கடவுள் பரமன் ஆவார். பக்தி மார்க்கத்தில், அவர்கள் தீவிர பக்தி செய்யும்பொழுது, காட்சிகளைக் காண்கிறார்கள். அந்தக் கணத்தில் அந்த ஆத்மா அந்தச் சரீரத்தில் வருகிறார் என்பதல்ல. இல்லை, அந்த ஆத்மா சென்று, இன்னுமொரு பிறவியை எடுத்தார். பக்தி மார்க்கத்தில், மக்கள் என்ன உணர்வுகளுடன் யாரை வழிபட்டாலும், அவர்கள் அவரின் காட்சியையொன்றைப் பெறுகிறார்கள். அவர்கள் எண்ணற்ற உருவங்களை உருவாக்கியுள்ளார்கள். அது பொம்மை வழிபாடு என அழைக்கப்படுகிறது. அவற்றில் நம்பிக்கை வைத்திருப்பதனால், அவர்கள் தற்காலிகச் சந்தோஷத்துக்குரிய ஒரு சிறிய வெகுமதியைப் பெறுகிறார்கள். உங்களுடையது எல்லையற்ற சந்தோஷத்துக்கான ஒரு தனித்துவமான விடயமாகும். நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை அறிவீர்கள். பக்தி செய்வதனால், எவராலும் சுவர்க்கத்துக்குச் செல்ல முடியாதுள்ளது. பக்தி மார்க்கம் முடிவுக்கு வரும்பொழுது மாத்திரமே, அதாவது, உலகம் பழையதாகிவிடும் பொழுதே, கலியுகத்துக்குப் பின்னர் புதிய உலகமாகிய, சத்தியயுகம் வரும். இது எவருடைய புத்தியிலும் இருப்பதில்லை. சந்நியாசிகள் கூறுகிறார்கள்: இன்ன நபர் ஒளியினுள் இரண்டறக் கலந்தார், ஆனால் அது அவ்வாறல்ல. நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத் என அழைக்கப்படுகின்ற இறை விவேகத்தைப் பெற்றுள்ளீர்கள். வார்த்தைகள் மிகவும் சிறப்பானவை ஆகும். ஸ்ரீ ஸ்ரீ கடவுள் பேசுகிறார். அவரே எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குபவர், அதாவது, அவர் எங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாற்றுகிறார். நாங்கள் ஸ்ரீமத்தினூடாக உலக இராச்சியத்தைப் பெறுகிறோம். ஸ்ரீ ஸ்ரீ 108 மாலையின் பெரும் புகழும் உள்ளது. எட்டு இரத்தினங்களின் மாலையும் உள்ளது. சந்நியாசிகளும் அந்த மாலையைப் பயன்படுத்திச் ஜெபிக்கிறார்கள். அவர்கள் ஒரு பசுவின் வாய் (கோமுக்) என அழைக்கப்படுகின்ற ஒரு துணிப் பையை உருவாக்கி, அதனுள் தங்கள் கையை விட்டு, மாலையின் மணிகளை உருட்டுகிறார்கள். பாபா கூறினார்: சதா என்னை நினைவு செய்யுங்கள், மாலையின் மணிகளை உருட்டுவதே அதன் அர்த்தம் என அவர்கள் இதனைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது பரலோகத் தந்தை வந்து, பிரம்மாவினூடாக உங்களைத் தனக்குரியவர்கள் ஆக்கியுள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிரஜாபிதாவும் (மக்களின் தந்தை), பிரஜாமாதாவும் (மக்களின் தாய்) உள்ளார்கள். ஜெகதாம்பாள் மக்களின் தாய் எனவும், இலக்ஷ்மி உலகச் சக்கரவர்த்தினி எனவும் அழைக்கப்படுகிறார். நீங்கள் உலகத் தாய் அல்லது ஜெகதாம்பாள் எனக் கூறினாலும் அது ஒரேவிடயமே. நீங்கள் குழந்தைகள் என்பதால், இது ஒரு குடும்பம் ஆகும். குழந்தைகளாகிய நீங்களும் அனைவருடைய விருப்பங்களையும் பூர்த்தி செய்பவர்கள் ஆவீர்கள். நீங்களே ஜெகதாம்பாளின் புதல்வர்களும் புதல்விகளும் ஆவீர்கள். நீங்கள் உங்கள் சகோதர, சகோதரிகளுக்குப் பாதையைக் காட்டுகிறீர்கள் என்னும் போதை உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். இது மிகவும் இலகுவானதாகும். பக்தி மார்க்கத்தில் பல சிரமங்கள் உள்ளன. ஹத்தயோகம், பிராணாயாமம் செய்யும் (மூச்சுப் பயிற்சிகள்) பலர் உள்ளார்கள். அவர்கள் ஆறுகளில் நீராடச் செல்கிறார்கள். அவர்கள் அதிகளவு தொல்லைகளுக்கு ஆளாகுகிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: நீங்கள் களைப்படைந்து விட்டீர்கள். அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையுடனான தங்களின் உறவுமுறை என்ன என்பதைப் புரிந்துகொள்கின்ற பிராமணர்களுக்கு மாத்திரமே அது விளங்கப்படுத்தப்படுகிறது. சிவபாபா என்னும் வார்த்தைகள் பொருத்தமானவை ஆகும். நீங்கள் உருத்திர பாபா எனக் கூற மாட்டீர்கள், நீங்கள் சிவபாபா என்று மாத்திரமே கூறுகிறீர்கள். இது மிகவும் இலகுவானதாகும். எண்ணற்ற வேறு பெயர்கள் உள்ளன, ஆனால் சிவபாபா என்பதே மிகச்சரியானதொன்றாகும். சிவன் என்றால் ஒரு புள்ளி என்று அர்த்தமாகும், உருத்திரர் என்றால் ஒரு புள்ளி என்று அர்த்தமல்ல. அவர்கள் சிவபாபா எனக் கூறினாலும், எதனையும் புரிந்துகொள்வதில்லை. சிவபாபாவும் சாலிகிராம்களாகிய நீங்களும் உள்ளீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் தலைமீது ஒரு பொறுப்பு உள்ளது. பாரதம் அந்நியர்களிடமிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என காந்திஜி எண்ணினார். அது ஓர் எல்லைக்குட்பட்ட விடயமாக இருந்தது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களைப் பொறுப்பானவர்கள் ஆக்குகிறார். குறிப்பாக பாரதமும், பொதுவாக உலகமும் எதிரியாகிய இராவணனான மாயையிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அந்த எதிரி உலகத்துக்குப் பெருந் துன்பத்தை விளைவித்துள்ளான், ஆகவே நீங்கள் இப்பொழுது அவனை வெற்றி கொள்ள வேண்டும். காந்திஜி அந்நியர்கள் அனைவரையும் பாரதத்தை விட்டுச் செல்ல வைத்தார். இராவணனும் ஒரு பெரிய அந்நியன் ஆவான். இராவணன் துவாபர யுகத்தினுள் பிரவேசித்துள்ளான், அதனைப் பற்றி எவருமே அறியார். இராவணன் வந்து, முழு இராச்சியத்தையும் அபகரித்தான். அவனே பாரதத்தை மிகவும் கடனாளி ஆக்கியுள்ள மிகப்பழைய அந்நியன் ஆவான். அவனுடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், பாரதம் மிகவும் சீரழிந்ததாகிவிட்டது. இங்கிருந்து இந்த எதிரி வெளியே அனுப்பப்பட வேண்டும். நீங்கள் அவனை எவ்வாறு வெளியே அனுப்புவது என்பதற்கான ஸ்ரீமத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் தந்தையின் உதவியாளர்கள் ஆகவேண்டும். நீங்கள் எனக்குரியவர்கள் ஆகி, ஏனையோரின் கட்டளைகளைப் பின்பற்றினால், நீங்கள் வீழ்வீர்கள். உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாதிருக்கும். பாடப்பட்டுள்ளது: குழந்தைகள் தைரியத்தைக் கொண்டிருந்தால், தந்தை உதவி செய்கிறார். நீங்கள் கடவுளின் உதவியாளர்கள். குதா (கடவுள்) வந்து உங்களுக்கு உதவுகிறார். அவர்கள் அவரை நினைவுசெய்து கூறுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! உதவி செய்பவர்கள் சேவகர்;கள் என அழைக்கப்படுகிறார்கள். பாபா முற்றி;லும் ஆணவம் அற்றவர்! அவர் அசரீரியானவர் ஆவார். எவ்வாறு ஆணவமற்றவராகவும் விகாரமற்றவராகவும் ஆகுவது என அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் ஏனையோரையும் உங்களைப் போன்று, அதாவது, முட்களை மலர்களாக ஆக்க வேண்டும். நீங்கள் விகாரத்தில் ஈடுபட மாட்டீர்கள் என்னும் ஓர் உத்தரவாதத்தை அளிக்கிறீர்கள். அதுவே மிகப்பழைய எதிரி ஆகும். அது வெற்றி கொள்ளப்பட வேண்டும். சிலர் எழுதிக் கூறுகிறார்கள்: பாபா, நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டோம், ஆனால் ஏனையோர்களோ பாபாவுக்குக் கூறுவதுமில்லை. அவர்கள் தங்கள் சொந்தப் பெயரையும் சற்குருவின் பெயரையும் அவதூறு செய்வதுடன், தங்களுக்கே ஓர் இழப்பையும் ஏற்படுத்துகிறார்கள். நீங்களே சிவபாபாவின் பேரர்களும், பேத்திகளும் என்பதையும், பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிரம்மா சிவபாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகிறார், குழந்தைகளாகிய நீங்களும் அவரிடமிருந்தே அதனைப் பெறுகிறீர்கள். ஒரு கல்பத்தின் முன்னரும் நீங்கள் பாபாவிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாவே புரிந்துகொள்கிறார். ஆத்மாவே ஒரு சரீரத்தை விட்டு நீங்கி, இன்னுமொன்றைப் பெறுகிறார். சரீரத்துக்கே ஒரு பெயர் கொடுக்கப்படுகிறது. சிவபாபா உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதற்காக ஒரு சரீரத்தைக் கடனாகப் பெறுகிறார். கடவுள் சிவன், பிரம்மாவின் வாயினூடாகப் பேசுகிறார். ஓர் ஆத்மா சரீரத்தை விட்டுச் செல்லும் பொழுது என்ன நடக்கிறது அல்லது எவ்வாறு அவர் (ஆத்மா) வருகிறார் என்னும் பெரிய விபரங்களுக்குள் செல்ல வேண்டியதில்லை. அவ்விடயங்களுக்குள் செல்வதில் எந்த நன்மையும் இல்லை. அது ஒரு காட்சியே ஆகும். நடைபெறுபவை அனைத்தும் ஒரு காட்சியே ஆகும். சூட்சும உலகத்துக்கான பாதை இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. பலர் வந்து செல்கிறார்கள். அதில் ஞானத்துக்கான அல்லது யோகத்துக்கான கேள்வியே கிடையாது. அவர்கள் போக்கைப் படைக்கிறார்கள், ஆத்மா வந்து, உணவு அளிக்கப்பட்டு, பருகுவதற்கு ஒரு பானமும் அளிக்கப்படுகிறது. அவை அனைத்தும் சம்பாஷணை ஆகும். பாபா குழந்தைகளாகிய உங்கள் மீது அதிகளவு அன்பு கொண்டுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: பாப்தாதா, நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். சிவனும், பிரஜாபிதா பிரம்மாவும் உள்ளார்கள். பிரம்மா மாத்திரமே முப்பாட்டனார் என அழைக்கப்படுகிறார். வம்சாவளி விருட்சம் மிகப் பெரியதாகும். நீங்கள் இவரை சிவபாபா என அழைக்க முடியாது. இதுவே மனிதர்களின் வம்சாவளி விருட்சம்: இது பௌதீக உலகத்துக்குரிய ஒரு விடயமாகும். அனைத்து வம்சாவளிகளிலும், முதலாவதான இதுவே பிரதானமானதாகும். இது ஒரு பெரிய நாடகமாகும். புரிந்துகொள்ளாத சிலர் இருந்தபொழுதும், குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது மிகச்சரியாகப் புரிந்துகொள்கிறீர்கள். அவர்கள் குறைந்தபட்சம் சிவபாபாவே அனைவரினதும் தந்தை என்பதையாவது புரிந்துகொள்ள வேண்டும். பாட்டனாரிடமிருந்தே ஆஸ்தி பெறப்பட வேண்டும். இவரும் அவரிடமிருந்தே அதனைப் பெறுகிறார். நல்லது, பிரம்மாவை மறந்து விடுங்கள்: நிச்சயதார்த்தத்தின் பின்னர் என்ன நடக்கின்றது? பின்னர் இடையில் இருப்பவர் நினைவு செய்யப்படுவதில்லை. இவர் இடையில் இருப்பவர். அவரே உங்களோடு நிச்சயதார்த்தத்தை மேற்கொள்கிறார். பாபா கூறுகிறார்: ஓ குழந்தைகளே. அவர் ஆத்மாக்களுடன் பேசுகிறார். ஆத்மாக்கள் அவரை நினைவு செய்கிறார்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். பாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்தால், நீங்கள் தொடர்ந்தும் தூய்மை ஆகுவீர்கள்; வேறெந்த வழிமுறையும் கிடையாது. பின்னர் நான் உங்களை மௌன தாமத்திலிருந்து சுவர்க்கத்துக்கு அனுப்புவேன். இது பிறந்த வீடாகும். அது புகுந்த வீடாகும். பிறந்த வீட்டில் நகை அணிவது நியதியல்ல, ஆனால் இந்நாட்களில் அது நாகரிகமாகி விட்டது. இந்நேரத்தில், நீங்கள் உங்கள் புகுந்த வீட்டுக்குச் செல்லும்பொழுது, அவை அனைத்தையும் அணிவீர்கள் என்பதை அறிவீர்கள். திருமணத்தின் முன்னர், குமாரியிடமிருந்து அனைத்தும் அகற்றப்படுகிறது அவள் பழைய ஆடைகளை அணிகிறாள். உங்களைப் புகுந்த வீட்டுக்கு அனுப்புவதற்காக பாபா உங்களை அலங்கரிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 21 பிறவிகளுக்கு, நீங்கள் அநாதியாகப் புகுந்த வீட்டில் இருப்பீர்கள். எவ்வாறாயினும், அதற்கு, நீங்கள் நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும், நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் உங்கள் இல்லறத்தில் இருக்கும்பொழுது, தாமரையைப் போன்று தூய்மையாக இருக்க வேண்டும். இது உங்களுடைய இறுதிப்பிறவி ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: முன்னர், அது கலப்படமற்ற சதோபிரதான் பக்தியாக இருந்தது, அது இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டது. பம்பாயில், அவர்கள் கணேஷை வழிபடுகிறார்கள், அதில் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகிறார்கள். அவர்கள் தேவர்களின் சிலைகளை உருவாக்கி, அவற்றைப் பராமரித்து, பின்னர் அவற்றை மூழ்கடிக்கிறார்கள்;. அவர்கள் அவற்றை அழிக்கிறார்கள். அவை அனைத்தும் ஓர் அற்புதம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது கண்டுகொள்கிறீர்கள், ஆனால் பாரம்பரியமும், சம்பிரதாயங்களும் எவை என்பதை உங்களால் விளங்கப்படுத்த முடியும். அவர்கள் ஓர் இறைவிக்குப் பிறப்பைக் கொடுக்கிறார்கள், அதனை வழிபட்டு, அதற்கு உணவு அளித்து, கொண்டாட்டங்களை நடத்தி, பின்னர் அவர்கள் அதனை மூழ்கடிக்கிறார்கள். அது ஓர் அற்புதம்! அவர்கள் கிருஷ்ணருடனான துளசியின் (ஒரு புனிதமான மூலிகைத் தாவரம்) திருமணத்தைக் காட்டுகிறார்கள். அவர்கள் திருமண விழாவைப் பெரும் ஆடம்பரத்துடன் கொண்டாடுகிறார்கள். வெளிநாட்டவர்கள் அத்தகைய கதைகளைச் செவிமடுக்கும்பொழுது, அது அநேகமாக அவ்வாறே இடம்பெற்றது என நினைக்கிறார்கள். அவர்கள் பல கதைகளை உருவாக்கியுள்ளார்கள். இங்கு, அது சூதாடுவதற்கான கேள்வியல்ல, இருப்பினும் பாண்டவர்கள் சூதாடினார்கள் எனவும், திரௌபதி பணயம் வைக்கப்பட்டாள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பல்வேறு கதைகளை எழுதியுள்ளார்கள். அவை அனைத்தினூடாகவும் இராஜயோகம் என்னும் விடயம் முற்றிலும் இழக்கப்பட்டுள்ளது. தந்தை இப்பொழுது கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! இது மிகவும் இலகுவானதாகும். நீங்கள் 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்துக்கு, அதாவது, பாற்கடலுக்குச் செல்கிறீர்கள் என்பது உங்கள் புத்தி;யில் பிரவேசிக்க வேண்டும். இது நச்சுக்கடல் ஆகும். நீங்கள் நச்சுக்கடலிலிருந்து வெளியேறி, பாற்கடலுக்குச் செல்கிறீர்கள். உங்களுடையது புதிய விடயங்களாகும். இதனைச் செவிமடுக்கும் மக்கள் வியப்படைவார்கள். உண்மையில் நீங்கள் சுவர்க்கத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். எவராலும் எங்கள் இராச்சியத்தை அபகரிக்க முடியாது. இந்நேரத்தில், பல்வேறு பிரிவினைகள் உள்ளன. அவர்கள் தொடர்ந்தும் சண்டையிடுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்: இராவணனே உங்கள் உண்மையான எதிரி. கல்பம் கல்பமாக, நீங்கள் அவனை வெற்றி கொள்கிறீர்கள். நீங்களே மாயையை வென்றவர்களாகவும் உலகை வென்றவர்களாகவும் ஆகுபவர்கள். இது வெற்றிக்கும் தோல்விக்குமான ஒரு விளையாட்டு ஆகும். நீங்கள் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் சித்தியடையடையாமல் இருக்க முடியாது. விநாசம் முன்னிலையில் உள்ளது. இரத்த ஆறு பாயும். பலர் காரணமின்றி மரணிப்;பார்கள். இது நரகம், அதாவது, தூய்மையற்ற, சீரழிந்த உலகம் என அழைக்கப்படுகிறது. அனைவரும் பாடுகிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் நட்சத்திரங்கள் என்பதைப் போன்று, நானும் ஒரு நட்சத்திரம். நானும் நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டுள்ளேன். எவரும் அதிலிருந்து விடுவிக்கப்பட முடியாது. எனக்கு இப்பழைய உலகத்துக்கு வருவதற்கான தேவை என்ன உள்ளது! நான் பரந்தாமவாசி ஆவேன். இந்நாடகத்தில் ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாகத்தை நடிக்கிறார்கள். கவலைப்படுவதற்கான கேள்வியே கிடையாது. இங்கு, நீங்கள் போதையில் நிலைத்திருப்பதனால், கவலையற்றிருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள். தந்தை உங்களைத் தொந்தரவு செய்வதில்லை. நினைவில் நிலைத்திருந்து, ஏனையோரையும் பாபாவை நினைவு செய்யத் தூண்டுங்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பதற்கு வந்துவிட்டார். நீங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த அழைப்பிதழைக் கொடுக்க வேண்டும். நீங்கள் இந்தளவுக்குச் செய்ய வேண்டும். குழந்தைகளாகிய உங்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. மாயையைப் பாருங்கள்; அவள் முற்றாகவே உண்மை அனைத்தையும் அழிக்கிறாள். பாரதம் அதிகளவு சந்தோஷமற்றதாக ஆகிவிட்டது. மாயை உங்களுக்குத் துன்பத்தை விளைவிக்கிறாள். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு உதவி செய்து, முட்களை மலர்களாக மாற்ற வேண்டும். உங்கள் பிராமண குலத்தில் எவ்வகையான மலர்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சேவை செய்தால், ஓர் அந்தஸ்தைப் பெறுகிறீர்கள், இல்லாவிட்டால், நீங்கள் பிரஜைகளில் ஒருவர் ஆகுகிறீர்கள். இதில் முயற்சி உள்ளது. சேவையில் ஈடுபட்டுள்ள பல குழந்தைகள் உள்ளார்கள். இங்கு வருவதற்குப் பல புதல்விகளுக்கு அனுமதி (வீட்டில்) கிடையாது. அவர்கள் அதிகளவு துன்புறுத்தப்படுகிறார்கள். இதற்குத் தைரியம் தேவையாகும். நீங்கள் அச்சம் அடையக்கூடாது. நீங்கள் துணிவாக இருப்பது அவசியமாகும். நீங்களும் அனைத்துப் பற்றிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். பற்றும் குறைந்ததல்ல. அது மிகவும் வலிமையானதாகும். ஒருவர் செல்வந்தக் குடும்பத்திலிருந்து வந்திருப்பின், அவளைத் தரையைப் பெருக்குமாறு அல்லது பாத்திரம் கழுவுமாறு கேட்பதனால், முதலில் அவளுடைய சரீர உணர்வை பாபா துண்டிக்கிறார். பாபா அவர்களுக்குப் பரீட்சைகளை வைப்பார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஸ்ரீமத்துக்கேற்ப, நீங்கள் தந்தையின் உண்மையான உதவியாளர்கள் ஆகவேண்டும். உங்கள் சொந்த மனதின் கட்டளைகளை அல்லது ஏனையோரின் கட்டளைகளைப் பின்பற்றாதீர்கள். பற்றிலிருந்து விடுபட்டிருங்கள், தைரியத்தைக் கொண்டிருந்து, உங்களைச் சேவையில் ஈடுபடுத்துங்கள்.

2. தற்சமயத்தில், நாங்கள் பிறந்த வீட்டில் இருக்கிறோம், ஆகவே இங்கு நாங்கள் எவ்விதமான நாகரிகத்தையும் பின்பற்ற முடியாது. ஞான இரத்தினங்களின்; மூலம் உங்களை அலங்கரியுங்கள். தூய்மையாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
ஒரு புண்ணியாத்மாவாகவிருந்து துன்பத்தை சந்தோஷமாகவும், இகழ்ச்சியைப் புகழ்ச்சியாகவும் மாற்றுவீர்களாக.

புண்ணியாத்மா என்றுமே துன்பத்தை விளைவிக்கவோ அல்லது எவரிடமிருந்தும் துன்பத்தை எடுப்பவரோ அல்ல. மாறாக அவர் துன்பத்தை, சந்தோஷத்தின் வடிவில் எடுப்பதுடன், இகழ்ச்சியைப் புகழ்ச்சியாக கருதுவார். அத்தகையவரை ஒரு புண்;ணியாத்மா என உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களை அவமதிக்கின்ற அல்லது உங்களுக்குத் துன்பத்தை விளைவிக்கின்ற ஓர் ஆத்மாவை குற்றம் சுமத்துகின்ற பார்வையினால் அல்லாது உங்களுடைய கருணை வடிவத்தில், கருணையான பார்வையினால் பாருங்கள். அவர் உங்களை அவமதிக்கலாம், ஆனால் அவருக்கு மலர்களைக் கொடுங்கள்: அப்பொழுது நீங்கள் ஒரு புண்ணியாத்மா எனப்படுவீர்கள்.

சுலோகம்:
பாப்தாதாவை தமது கண்களில் அமிழ்த்திக் கொள்பவர்கள் உலகின் கண்களான, உலகின் ஒளியாவார்கள்.