05.01.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    30.03.85     Om Shanti     Madhuban


மூன்றின் பாடம்.


இன்று, பாப்தாதா தனது சதா சகபாடிகளாக இருக்கும் தனது குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். குழந்தைகளின் அதிகபட்ச அன்பினால் மட்டுமே அவர்கள் சதா சகபாடிகளாகவும் தந்தையுடன் ஒத்துழைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எங்கு அன்பு உள்ளதோ, அங்கு நீங்கள் நேசிப்பவரின் சதா ஒத்துழைக்கும் சகபாடிகள் ஆகுவீர்கள். எனவே, குழந்தைகள் அன்பானவர்களாக இருப்பதனால், தந்தையால் குழந்தைகள் இல்லாமல் எந்தவிதப் பணியையும் செய்ய முடியாது. குழந்தைகளாலும் தந்தையின்றி எந்தவிதப் பணியையும் செய்ய முடியாது. இதனாலேயே, ஸ்தாபனையின் ஆரம்பத்தில் இருந்து, பிரம்மாவை உருவாக்குவதுடன் கூடவே தந்தை பிராமணர்களையும் உருவாக்கினார். அவர் பிரம்மாவை மட்டும் உருவாக்கவில்லை. பிரம்மாவுடன் சேர்த்து, பிராமணக் குழந்தைகளும் உருவாக்கப்பட்டார்கள். ஏன்? குழந்தைகளான நீங்கள் ஒத்துழைக்கும் சகபாடிகள். எனவே, தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் சேர்த்து அதேவேளை என்ன நிகழுகிறது? சிவனின் பிறந்தநாள், பிரம்மாவின் பிறந்தநாளும் பிராமணர்களின் பிறந்தநாளும் ஆகும். எனவே, பாப்தாதாவும் குழந்தைகளும் அனைவரும் ஆதி படைப்புகள். அதனால் நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே தந்தையின் ஒத்துழைக்கும் சகபாடிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, இன்று, பாபா தனது ஒத்துழைக்கும் சகபாடிகளைச் சந்திக்கிறார். சகபாடி என்பவர், ஒவ்வோர் அடியிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுபவர் ஆவார். பின்பற்றுதல் என்றால், சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுதல் என்று அர்த்தம். ஒவ்வோர் அடியிலும் சகவாசத்தின் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள், அதாவது, தந்தையைப் பின்பற்றுபவர்களே உண்மையான சகபாடிகள் ஆவார்கள். அவர்கள் அநாதியான சகபாடிகள் ஆவார்கள். உண்மையான சகபாடிகளின் ஒவ்வோர் அடியும் இயல்பாகவே தந்தையை ஒத்ததாகவே இருக்கும். அவற்றில் எந்தவிதமான குழப்பமும் இருக்க முடியாது. உண்மையான சகபாடிகளுக்குத் தாம் இந்த வழியிலா அல்லது அந்த வழியிலா அடி எடுத்து வைப்பது என்பதற்கு முயற்சி செய்ய வேண்டியதில்லை. தந்தையின் பாதச்சுவடுகளில் உங்களின் அடிகளை எடுத்து வைப்பதன் மூலம், உங்களால் இயல்பாகவே உங்களின் அடிகளை வேறெங்கும் எடுத்து வைக்க முடியாது. உண்மையான சகபாடிகளான குழந்தைகளின் மனங்களில், புத்திகளில், இதயங்களில் என்ன அமிழ்ந்திருக்கும்? நான் தந்தைக்குச் சொந்தமானவன். தந்தை எனக்குச் சொந்தமானவர். தந்தையின் எல்லையற்ற பொக்கிஷங்களின் ஆஸ்தி எவையாயினும் அவை என்னுடையவை என்பது உங்களின் புத்திகளில் இருக்கும். உங்களின் இதயங்களில், இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவர் மட்டுமே இருக்கிறார். வேறு எதுவும் இருக்க முடியாது - இதயமும் இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரும் மட்டுமே. எனவே, தந்தை உங்களின் நினைவில் அமிழ்ந்திருப்பதனால், உங்களின் விழிப்புணர்விற்கேற்பவே உங்களின் ஸ்திதியும் இருக்கும். அதற்கேற்பவே இயல்பாக உங்களின் செயல்களும் இருக்கும். பக்தி மார்க்கத்தில், தமது நம்பிக்கையைக் காட்டுவதற்காகப் பக்தர்கள், எனது இதயத்தில் யார் இருக்கிறார்கள் என்று பாருங்கள்! எனக் கூறுவார்கள். நீங்கள் அவ்வாறு சொல்வதில்லை. ஆனால் அனைவரும் இயல்பாகவே அதை அனுபவம் செய்வார்கள். அதாவது, உங்களின் இதயங்களினூடாக இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரைக் காண்பார்கள். எனவே, உண்மையான சகபாடிகள் தந்தையைப் போன்று மாஸ்ரர் சர்வசக்திவான்கள் ஆவார்கள்.

இன்று, பாப்தாதா குழந்தைகளான உங்களைப் பாராட்டுவதற்காக வந்துள்ளார். இப்போது, ஒத்துழைக்கும் சகபாடிகளான குழந்தைகளான நீங்கள், உங்களின் சொந்த ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும், நினைவிலும் சேவையிலும் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். ஒவ்வொருவரின் மனதிலும் ஒரேயொரு திடசங்கற்பமான எண்ணம் உள்ளது: வெற்றிக் கொடி பறக்க வேண்டும். ஒரேயொரு ஆன்மீகத் தந்தையை வெளிப்படுத்தும் கொடியானது முழு உலகிலும் ஏற்றப்பட வேண்டும். இந்த உயர்ந்த கொடியின் கீழ், முழு உலகிலுமுள்ள ஆத்மாக்களும் தந்தை வந்துவிட்டார் என்ற பாடலைப் பாடுவார்கள். நீங்கள் இப்போது கொடியை ஏற்றும்போது, நீங்கள் அனைவரும் அந்தக் கொடியின் கீழ் நின்று பாடல்களைப் பாடுகிறீர்கள். பின்னர் என்ன நிகழும்? கொடி ஏற்றப்பட்டதும், அனைவரின் மீதும் மலர்கள் தூவப்படுகின்றன. அதேபோன்று, அனைவரின் இதயங்களில் இருந்தும் இந்தப் பாடல் இயல்பாகவே ஒலிக்கும்: அனைவரின் தந்தையும் ஒரேயொருவரே. முக்தி, ஜீவன்முக்தியை அருள்பவர் ஒரேயொரு தந்தையே. நீங்கள் இத்தகைய பாடல்களைப் பாடும்போது, மலர்கள் பொழிவதைப் போல, அழியாத அமைதி மற்றும் சந்தோஷம் பொழிவதை அனுபவம் செய்வீர்கள். தந்தை என நீங்கள் கூறியவுடனேயே, நீங்கள் ஆஸ்தியை அனுபவம் செய்வீர்கள். எனவே, உங்கள் அனைவருக்கும் உங்களின் மனங்களில் இந்த ஒரேயொரு ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. இதனாலேயே, குழந்தைகளான உங்களின் இதயங்களில் உள்ள ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பார்க்கையில், பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார் (பதாய்). உங்களுக்கு அவர் பிரியாவிடை (பிதாய்) கொடுக்க மாட்டார். பாராட்டுக்கள்! சங்கமயுகத்தின் ஒவ்வொரு கணமும் வாழ்த்துக்களுக்கான நேரம் ஆகும். எனவே, பாப்தாதா உங்களின் இதயபூர்வமான அன்பிற்காகவும் சேவையில் உங்களுக்கிருக்கும் அன்பிற்காகவும் குழந்தைகளான உங்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறார். உங்கள் அனைவருக்கும் சேவையில் சதா முன்னேறுவதற்கான உற்சாகம் உள்ளது. சேவையில் முன்னேறுவதற்கான உற்சாகம் இல்லாதவர்கள் எவரும் இருக்க முடியாது. உங்களிடம் ஊக்கமும் உற்சாகமும் இல்லாவிட்டால், நீங்கள் எவ்வாறு இங்கு வந்திருப்பீர்கள்? இதுவும் உற்சாகத்தின் அடையாளமே. உங்களிடம் ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. அது எல்லா வேளையும் நிலைத்திருக்கும். ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஒன்றாக முன்னேறிச் செல்லும் வேளையில், நீங்கள் அனைவரும் சதா தடைகளில் இருந்து விடுபட்டிருக்கிறீர்களா? ஊக்கமும் உற்சாகமும் மிகவும் நல்லது. ஆனால், தடைகளில் இருந்து விடுபட்ட சேவையைச் செய்வதற்கும், சதா தடைகளை வென்ற வண்ணம் செய்யும் சேவைக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. தடைகளில் இருந்து விடுபட்டிருத்தல் என்றால், நீங்கள் மற்றவர்களுக்கும் ஒரு தடை ஆகக்கூடாது. எந்த வகையான தடையாலும் பயப்படக்கூடாது. ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் இந்தச் சிறப்பியல்பையும் நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? அல்லது, உங்களுக்குத் தடைகள் ஏற்படுகின்றனவா? ஒன்று, தடைகள் உங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க வரும். இன்னொன்று, தடைகள் உங்களை அசைப்பதற்கு வரும். உங்களின் பாடத்தைக் கற்றுக் கொண்டு நீங்கள் உறுதியானவர்கள் ஆகினால், அந்தத் தடையானது அன்பாக மாறிவிடும். நீங்கள் அந்தத் தடையைக் கண்டு பயப்பட்டால், பதிவேட்டில் ஒரு கறை படிந்துவிடும். எனவே, இங்கு ஒரு வேறுபாடு ஏற்படும்.

பிராமணர் ஆகுவதெனில், மாயைக்குச் சவால் விடுத்தல் என்று அர்த்தம்: தடைகள் வரட்டும்! நான் வெற்றியாளர் ஆவேன். உன்னால் எதுவும் செய்ய முடியாது. முன்னர், நீங்கள் மாயையின் நண்பர்களாக இருந்தீர்கள். இப்போது, நீங்கள் சவால் விடுத்து, மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள் எனக் கூறுகிறீர்கள். நீங்கள் இந்தச் சவாலை விடுக்கிறீர்கள், அல்லவா? இல்லாவிடின், யாரை நீங்கள் வெற்றிகொள்வீர்கள்? உங்களை வெற்றி கொள்வீர்களா? நீங்கள் வெற்றி இரத்தினங்கள் ஆகும்போது, அது நீங்கள் மாயையை வென்றதனாலேயே அவ்வாறு ஆகினீர்கள், அப்படியல்லவா? நீங்கள் வெற்றி மாலையில் கோர்க்கப்பட்டீர்கள். அதனால் நீங்கள் பூஜிக்கப்பட்டீர்கள். எனவே, மாயையை வென்றவர் ஆகுதல் என்றால் வெற்றியாளர் ஆகுதல் என்று அர்த்தம். பிராமணர் ஆகுதல் என்றால், மாயைக்குச் சவால் விடுத்தல் என்று அர்த்தம். எவ்வாறாயினும், அவளுக்குச் சவால் விடுப்பவர்கள் அதை ஒரு விளையாட்டாகவே அனுபவம் செய்வார்கள். அதனால் அவள் வந்து, பின் செல்வாள். உங்களால் அவளைத் தொலைவிலேயே இனங்கண்டு, தொலைவிலேயே விரட்டி அடிக்க முடியும். நீங்கள் உங்களின் நேரத்தை வீணாக்குவதில்லை. நீங்கள் அனைவரும் மிக நன்றாகச் சேவை செய்கிறீர்கள். சேவை செய்வதுடன், தடைகளில் இருந்து விடுபட்ட சேவையின் பதிவேடு இருக்க வேண்டும். நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே தூய்மையின் பதிவேட்டை வைத்துள்ளீர்கள். ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எண்ணங்களிலேனும் தூய்மையின்மை இல்லாதவர்கள் யார்? நீங்கள் இந்தச் சிறப்பியல்பைத் தேடுகிறீர்கள், அல்லவா? தூய்மை என்ற இந்த ஒரு விடயத்தினால் மட்டும் எவரும் திறமைச் சித்தி எய்த மாட்டார்கள். எனவே, யார் தமது சொந்த ஸ்திதியில், தமது தொடர்புகளிலும் உறவுமுறைகளிலும், நினைவிலும், அசைக்க முடியாதவர்களாகவும், எந்த வகையான குழப்பத்தையும் அனுபவம் செய்யாமலும், சேவையில் எந்தவிதமான தடைகளின் ஆதிக்கத்திற்கு உட்படாமலும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் தடைகளின் ஆதிக்கத்திற்கு உட்படவும் கூடாது. மற்றவர்களுக்கும் ஒரு தடை ஆகக்கூடாது என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் சேமிக்கப்படுகின்றன. ஒன்று தூய்மை. மற்றையது, கலப்படமற்ற நினைவு. உங்களின் நினைவில் சிறிதளவேனும் தடை இருக்கக்கூடாது. இவ்வாறு, எப்போதும் உங்களைச் சேவையில் தடைகள் அற்றவராக வைத்திருங்கள். உங்களின் நற்குணங்களில் திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களைத் திருப்தியாகவும் ஆக்குங்கள். சகல நற்குணங்களையும் கிரகிப்பதற்கான கண்ணாடி, திருப்தி என்ற நற்குணமே ஆகும். எனவே, உங்களின் நற்குணங்களில், உங்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் திருப்திக்கான சான்றிதழை நீங்கள் பெற வேண்டும். இதுவே திறமைச்சித்தி எய்துவதன், எட்டு இரத்தினங்களில் ஒருவராக இருப்பதன் அடையாளம் ஆகும். நீங்கள் அனைத்திலும் ஓர் இலக்கத்தைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு பாடத்தில் மட்டும் திருப்தி அடைவதில்லை, அல்லவா? அதாவது, நான் சேவையில் ஓகே யாக இருக்கிறேன். ஆமாம், பாப்தாதா பாராட்டுகிறார். நீங்கள் எட்டில் ஒருவராகவும் விசேடமான அதியன்பிற்குரிய தேவர்களில் ஒருவராகவும் ஆகவேண்டும். நீங்கள் எட்டில் ஒருவர் ஆகினால், விசேடமான அதியன்பிற்குரிய தேவர்களில் ஒருவர் ஆகுவதிலும் நீங்கள் மகத்தானவர் ஆகுவீர்கள். இதற்கு, வருடம் முழுவதும் மூன்று விடயங்களை நினைவில் வைத்து, உங்களையே சோதித்துப் பாருங்கள். இந்த மூன்று விடயங்களில் ஒன்றேனும் உங்களுக்குள் எஞ்சியிருந்தால், உங்களின் எண்ணங்களிலேனும் இருந்தால், அவற்றுக்கு விடை கொடுங்கள். இன்று பாராட்டுக்கான தினம் ஆகும். நீங்கள் செல்வதற்காக விடை பெறும்போது, அந்த வேளையில் என்ன செய்வீர்கள்? (விரைவாகச் சென்று, விரைவாக வாருங்கள் தோளி கொடுக்கப்படுகிறது - சக்கரைக்கட்டிகள்,பாதாம் மற்றும் ஏலக்காய்) இங்கு மூன்று பொருட்கள் உள்ளன. எனவே, நீங்களும் பாப்தாதாவிற்கு மூன்று விடயங்களைக் கையளிப்பீர்கள், அல்லவா? இது பிரியாவிடை அல்ல. ஆனால் பாராட்டுக்கள். அதனாலேயே, உங்களின் வாய்கள் இனிப்பூட்டப்படுகின்றன. எனவே, இங்கு கொடுக்கப்படும் மூன்று பொருட்கள் எதற்காகக் கொடுக்கப்படுகின்றன? நீங்கள் விரைவாகத் திரும்பி வரவேண்டும் என்பதை நினைவுபடுத்துவதற்காகவே. இன்று, பாப்தாதாவும் சிலவேளைகளில் சேவையில் தடை ஆகுகின்ற மூன்று விடயங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லப் போகிறார். எனவே, பாப்தாதா குறிப்பாக மீண்டும் மூன்று விடயங்களில் உங்கள் கவனத்தை ஈர்க்கிறார். இவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே திறமைச் சித்தி எய்துவீர்கள்.

1. எந்தவொரு எல்லைக்குட்பட்டதிலும் எந்த வகையான பற்றும் வைக்காதீர்கள். தந்தைமீது பற்று வைப்பது வேறு விடயம். ஆனால், எல்லைக்குட்பட்ட பற்று எதுவும் இருக்கக்கூடாது.
2. உங்களுடன் அல்லது மற்றவர்களுடன் எந்த விதமான பதட்டமும் இருக்கக்கூடாது. எந்தவிதமான பற்றும் இருக்கக்கூடாது. மாயையுடன் போராடுவதற்குப் பதிலாக, ஒருவர் மற்றவருடன் எந்த வகையான முரண்பாடுகளும் இருக்கக்கூடாது.
3. எந்த வகையான பலவீனமான சுபாவமும் இருக்கக்கூடாது.

பற்று, பதட்டம், பலவீனமான சுபாவம். உண்மையில், சுபாவம் என்ற வார்த்தை மிகவும் நல்லது. சுவ பாவ் என்றால் சுயத்திற்கான உணர்வுகள் என்று அர்த்தம். சுயம் மேன்மையானது எனப்படுகிறது. மேன்மையான உணர்வுகள், சுயத்திற்கான உணர்வுகள், ஆத்ம உணர்வு. எவ்வாறாயினும், நீங்கள் பாவ்-சுவபாவ் (உணர்வுகளிலும் சுபாவத்திலும் முரண்பாடு) என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறீர்கள். எனவே, அவ்வப்போது உங்களின் பறக்கும் ஸ்திதியில் ஏற்படும் தடை அந்தப் பலவீனமான சுபாவமே ஆகும். இராஜரீகமான வார்த்தைகளில் கூறினால், எனது சுபாவம் இதுவே. உங்களின் சுபாவம் மேன்மை அடையும்போது, அது தந்தையைப் போன்றதாக இருக்கும். அது ஒரு தடை ஆகினால், அது ஒரு பலவீனமான சுபாவம் ஆகும். எனவே, உங்களுக்கு இந்த மூன்று வார்த்தைகளின் அர்த்தங்களும் தெரியும். பல வகையான பதட்டங்கள் உள்ளன. பதட்டத்திற்கான காரணம், நான் என்ற உணர்வே ஆகும். நான் இதைச் செய்தேன். என்னால் இதைச் செய்ய முடியும். நான் மட்டுமே இதைச் செய்வேன். நான் என்ற இந்த உணர்வே பதட்டத்தை உருவாக்குகிறது. இந்த நான் சரீர உணர்வாகும். நான் ஒரு மேன்மையான ஆத்மா என்பது ஒரு விடயம். நான் இன்னார், நான் விவேகி. நான் யோகி, நான் ஞானி, நான் சேவையில் முன்னணியில் இருக்கிறேன் என்பது வேறொரு விடயம். இந்த நான் என்ற உணர்வே பதட்டத்தை உருவாக்குகிறது. இதனாலேயே, சிலவேளைகளில், சேவையில் துரித கதி இருக்க வேண்டிய இடத்தில், அதன் வேகம் குறைகிறது. நீங்கள் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். ஆனால் உங்களால் வேகத்தை அதிகரிக்க முடிவதில்லை. வேகத்தை அதிகரிப்பதற்கான அடிப்படை, மற்றவர்களை முன்னேறச் செய்வதே ஆகும். சதா அவர்களை முன்னேறச் செய்வதற்கு உதவி செய்வதெனில், நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்று அர்த்தம். சேவையில் நான் என்ற உணர்வை நீங்கள் புரிந்து கொண்டீர்கள், அல்லவா? நான் என்ற இந்த உணர்வே துரித கதியை இல்லாமல் செய்கிறது. உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் இந்த மூன்று விடயங்களையும் கையளிப்பீர்கள்,அல்லவா? அல்லது, நீங்கள் அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்வீர்களா? துறப்பதன் மூலம் நீங்கள் பாக்கியத்தைப் பெறுதல் என இது அழைக்கப்படுகிறது. சதா அனைவருடனும் பகிர்ந்து உண்பதன் மூலம் அதை அதிகரியுங்கள். நீங்கள் துறவறத்தின் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் துறவின் பாக்கியமே சேவைக்கான வசதிகள் ஆகும். எவ்வாறாயினும், நான் என்ற உணர்வால் நீங்கள் இந்தப் பாக்கியத்தை எல்லைப்படுத்தினால், அது அதிகரிக்காது. மற்றவர்களையும் ஒத்துழைக்கச் செய்யுங்கள். சதா மற்றவர்களுடன் துறவின் பாக்கியப் பலனைப் பகிர்ந்தவண்ணம் முன்னேறிச் செல்லுங்கள். நான், நான் என்று சொல்லாதீர்கள். மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருடன் அதைப் பகிர்ந்து, ஒத்திசைவாக வேலை செய்து, தொடர்ந்து முன்னேறுங்கள். இப்போது சேவையின் மத்தியில் இந்த அதிர்வலைகள் புலப்படுகின்றன. எனவே, இதில் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டிருங்கள். இது, முதல் அடி எடுத்து வைப்பவர் அர்ச்சுனர் என்று அழைக்கப்படுகிறது. மற்றவர்களைப் பார்க்காதீர்கள். இவரும் இப்படிச் செய்கிறார். இது எல்லா நேரமும் நடக்கிறது. அதற்குப் பதிலாக, மற்றவர்களுக்குச் சிறப்பியல்புகளைக் காட்டுவதற்கு நான் ஒரு கருவி ஆகவேண்டும் எனக் கூறுங்கள். தந்தை பிரம்மாவின் சிறப்பியல்பு என்ன? அவர் எப்போதும் குழந்தைகளை முன்னணியில் வைத்தார். குழந்தைகள் என்னைவிடக் கெட்டிக்காரர்கள். குழந்தைகள் இதைச் செய்வார்கள். அவரிடம் அதிக துறவறம் இருந்தது. தனது துறவின் மூலம் தான் பெற்ற பாக்கியத்தையும் அவர் துறந்தார். யாராவது தான் பெற்ற அன்பால் அல்லது பேற்றினால் பிரம்மாவைப் புகழ்ந்தாலும், அவர் அவர்களுக்குத் தந்தையையே நினைவூட்டுவார். நீங்கள் பிரம்மாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறமாட்டீர்கள். நீங்கள் பிரம்மாவின் படத்தை வைத்திருக்கக்கூடாது. பிரம்மாவே அனைத்தும் என நினைக்காதீர்கள். இது, துறவின் மூலம் பெற்ற பாக்கியத்தையும் துறந்து, சேவையில் ஈடுபடுதல் எனப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் இரட்டை மகாதானிகள் ஆகுவீர்கள். இரண்டாவதாக, மற்றவர்கள் தானாக முன்வர வேண்டும். அவர்கள் உங்களை ஈர்க்கக்கூடாது. நீங்கள் உங்களைப் புகழ்ந்து, மற்றவர்களை உங்களை நோக்கிக் கவர்ந்தால், அதை என்னவென்று சொல்வது? நீங்கள் அதை முரளிகளில் கேட்டுள்ளீர்கள், அல்லவா? அவ்வாறு ஆகாதீர்கள். எவரையாவது உங்களை நோக்கி இழுக்கும் கயிறுழுத்தல் போட்டியில் ஒருபோதும் ஈடுபடாதீர்கள். அதில் எந்தவித வெற்றியும் இல்லை. அதிகமான முயற்சியும் குறைந்தளவு வெற்றியுமே இருக்கும். ஏனெனில், நீங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெற மாட்டீர்கள். நீங்கள் இலகுவாகப் பெறும் எதுவும் அனைவரின் ஆசீர்வாதங்களாலும் நிறைந்திருக்கும். உங்களுக்குப் புரிகிறதா?

பதட்டம் என்றால் என்ன? அன்றொரு நாள் பாபா பற்றைப் பற்றித் தெளிவாகக் கூறினார். எந்த வகையான பலவீனமான சுபாவமும் இருக்கக்கூடாது. நான் இந்தத் தேசத்தைச் சேர்ந்தவன், இதனால் எனது சுபாவம், நான் செயற்படும் முறை, வாழ்க்கை முறை என்பவை இவ்வாறுள்ளது என நினைக்காதீர்கள். இல்லை. தேசத்தால், மதத்தால் அல்லது சகவாசத்தால் எனது சுபாவம் இவ்வாறுள்ளது என்றில்லை. நீங்கள் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்கள்? சேவை செய்வதற்காகப் பெயரளவிலேயே உங்களுக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. எவரும் வெளிநாட்டவர் கிடையாது. நான் பாரதவாசி என்ற போதையும் எவருக்கும் இருக்கக்கூடாது. நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். பாரதவாசிகள் பிராமண ஆத்மாக்கள். வெளிநாட்டில் வசிப்பவர்களும் பிராமண ஆத்மாக்களே. இதில் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. பாரத மக்கள் இவ்வாறு, வெளிநாட்டவர்கள் அவ்வாறு என்றில்லை. ஒருபோதும் இத்தகைய வார்த்தைகளைப் பேசாதீர்கள். நீங்கள் அனைவரும் பிராமண ஆத்மாக்களே. அந்த இடங்கள் சேவைக்காக மட்டுமே. நீங்கள் ஏன் வெளிநாட்டுக்குச் சென்றீர்கள், என் அங்கு பிறந்தீர்கள், ஏன் பாரதத்தில் பிறக்கவில்லை என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் சேவை இடங்களைத் திறப்பதற்காகவே அங்கு சென்றீர்கள். இல்லாவிடின், பாரத மக்களுக்கு விசா எடுப்பதில் பல பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் அனைவரும் அங்கு இலகுவாக வசிக்கிறீர்கள். பல நாடுகளில் சேவை இடம்பெறுகிறது. எனவே, நீங்கள் சேவைக்காகவே வெளிநாட்டுக்குச் சென்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் பிராமண ஆத்மாக்களே. ஆகவே, உங்களில் எவரும் உங்களின் சுபாவத்தை எதிலும் தங்கியிருக்க அனுமதிக்காதீர்கள். தந்தையின் சுபாவமே குழந்தைகளின் சுபாவம் ஆகும். தந்தையின் சுபாவம் என்ன? ஒவ்வோர் ஆத்மாவிற்கும் சதா நலம் விரும்பும், கருணைநிறைந்த உணர்வுகளைக் கொண்டிருத்தலே அவரின் சுபாவம் ஆகும். அவரின் சுபாவம் அனைவரையும் உயர்த்துவதே. இது இனிமையான சுபாவம். பணிவான சுபாவம். எனது சுபாவம் இத்தகையது என ஒருபோதும் சொல்லாதீர்கள். எங்கிருந்து எனது என்பது வந்தது? கடுமையாகப் பேசுதல் எனது சுபாவம். வலிமையைப் பிரயோகித்தல் எனது சுபாவம். எனது சுபாவத்தாலேயே இது நிகழ்ந்தது. இதுவே மாயை! சிலருக்கு அகங்காரமான சுபாவம், பொறாமைப்படும் சுபாவம் அல்லது வலிமையைப் பிரயோகிக்கும் சுபாவம் உள்ளது. சிலருக்கு விரக்தி அடையும் சுபாவம் உள்ளது. அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், தங்களை நல்லவர்களாக அவர்கள் கருதுவதில்லை. அவர்கள் எப்போதும் தங்களைப் பலவீனமானவர்களாகவே கருதுவார்கள். என்னால் முன்னேற முடியவில்லை. என்னால் இதைச் செய்ய முடியாது. மனவிரக்தி அடையும் சுபாவத்தைக் கொண்டிருப்பதும் தவறானதே. அகங்காரம் கொள்ளாதீர்கள். ஆனால் உங்களின் சுய மரியாதையைப் பேணுங்கள். எனவே, இந்த வகையான சுபாவங்கள் அனைத்தும் பலவீனமான சுபாவங்கள் எனப்படுகின்றன. ஆகவே, வருடம் முழுவதும் இந்த மூன்று விடயங்களிலும் கவனம் செலுத்துங்கள். இந்த மூன்று விடயங்களிலும் இருந்து பாதுகாப்பாக இருங்கள். இதில் கஷ்டம் இல்லையல்லவா? உங்களின் சகபாடி (பாபா) ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒத்துழைக்கும் சகபாடியாக இருப்பார். சகபாடி என்பவர் சமமானவராக இருக்க வேண்டும். சகபாடிகளுக்கிடையே சமமான நிலை இல்லாவிட்டால், சகபாடிகளால் அன்பின் பொறுப்பை நிறைவேற்ற முடியாது. நல்லது, நீங்கள் இந்த மூன்று விடயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். எவ்வாறாயினும், சதா இந்த மூன்று விடயங்களில் இருந்தும் விலகி இருப்பதற்கு, மூன்று விடயங்களை நினைவு செய்யுங்கள். இன்று, பாபா மூன்றுகளுக்கான பாடத்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். சதா உங்களின் வாழ்க்கையில் சமநிலையைப் பேணுங்கள். அனைத்திலும் சமநிலை இருக்க வேண்டும். நினைவிலும் சேவையிலும் சமநிலை. சுய மரியாதையால் அகங்காரம் இல்லாமல் போகிறது. உங்களின் சுயமரியாதையில் ஸ்திரமாக இருங்கள். இந்த விடயங்கள் அனைத்தும் உங்களின் விழிப்புணர்வில் இருக்க வேண்டும். அதிகம் களிப்பூட்டுவதாகவும் இல்லை. அதிகம் சீரியஸாகவும் இல்லை. இரண்டிலும் சமநிலை இருக்க வேண்டும். நீங்கள் களிப்பாக இருக்க வேண்டிய வேளையில் களிப்பூட்டுபவராக இருங்கள். சீரியஸாக இருக்க வேண்டிய இடத்தில் சீரியஸாக இருங்கள். எனவே, முதலில் சமநிலை இருக்க வேண்டும். இரண்டாவதாக, எப்போதும் அமிர்த வேளையில் தந்தையிடமிருந்து விசேடமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். தினமும் அமிர்தவேளையில், பாப்தாதா குழந்தைகளான உங்களுக்குத் தனது ஆசீர்வாத மடியைத் திறக்கிறார். அதில் இருந்து நீங்கள் விரும்பிய அளவை எடுத்துக்கொள்ளலாம். எனவே, சமநிலை, ஆசீர்வாதங்கள். மூன்றாவதாக, ஆனந்தமான வாழ்க்கை. உங்களின் விழிப்புணர்வில் இந்த மூன்று விடயங்களையும் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மூன்று விடயங்களும் இயல்பாகவே முடிவிற்கு வந்துவிடும். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா. இப்போது வேறு மூன்று விடயங்களைப் பற்றிக் கேளுங்கள்.

நீங்கள் குறிப்பாக இலக்கை வைத்திருந்து, மூன்று விடயங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் அவற்றைத் துறக்க வேண்டும். ஏனையவற்றைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் கைவிட வேண்டியவற்றை எல்லா வேளைக்குமாகக் கைவிடவேண்டும், அப்படியல்லவா? நீங்கள் இவற்றை நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், பாபா உங்களுக்குக் கூறிய மூன்று விடயங்களை நீங்கள் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, தாரணையின் சொரூபம் ஆகுவதற்குக் குறிப்பாக அவற்றை நினைவு செய்யுங்கள். அனைத்திலும் உண்மை இருக்க வேண்டும். எதுவும் கலப்படமாக இருக்கக்கூடாது. இது நிஜம் (ரியாலிடி) எனப்படுகிறது. உங்களின் எண்ணங்களில், வார்த்தைகளில், அனைத்திலும் உண்மையாக இருத்தல். நேர்மையான இதயத்தைக் கண்டு பிரபு குதூகலம் அடைகிறார். சத்தியத்தின் அடையாளம் என்ன? சத்தியம் இருக்கும்போது ஆத்மா நடனம் ஆடுவார். நேர்மையானவர்கள் எப்போதும் தொடர்ந்து சந்தோஷத்தில் நடனம் ஆடுவார்கள். எனவே, ஒன்று நிஜம். அடுத்தது, இராஜரீகம் (ரோயல்டி). அற்ப விடயங்களிலும் உங்களின் புத்திகள் அடிமை ஆகக்கூடாது. இராஜரீகமான குழந்தைகளின் கண்கள் ஒருபோதும் சிறிய விடயங்களை நோக்கிச் செல்லாது. அவர்களின் கண்கள் ஈர்க்கப்பட்டால், அதை இராஜரீகம் என்று அழைக்க முடியாது. அவர்களின் புத்திகள் அற்ப விடயங்களுக்கு அடிமை ஆகினால், அதை இராஜரீகம் என்று அழைக்க முடியாது. இராஜரீகமானவர்கள் எப்போதும் பேறுகளின் சொரூபங்களாகவே இருப்பார்கள். அவர்களின் கண்களோ அல்லது புத்திகளோ எங்கும் ஈர்க்கப்பட மாட்டாது. எனவே, இது ஆன்மீக இராஜரீகம். ஆடைகளின் இராஜரீகம் அல்ல எனவே, நிஜம், இராஜரீகம். மூன்றாவது, ஒற்றுமை(யுனிற்றி). உங்களுக்கிடையே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் ஒற்றுமை புலப்பட வேண்டும். பிராமணர்கள் என்றால் ஒன்று என்று அர்த்தம். நூறாயிரம் பேர் அல்ல. ஆனால் ஒன்றே. இதுவே ஒற்றுமை எனப்படும். அங்கு, பல்வகையான நிலைகள் இருப்பதனால், ஒன்றும் பலர் ஆகுகின்றது. ஆனால் இங்கோ, பலர் இருந்தாலும், நீங்கள் ஒன்றாகின்றீர்கள். இதுவே ஒற்றுமை எனப்படுகிறது. நீங்கள் மற்றவர்களைப் பார்க்கக்கூடாது. நான் ஒற்றுமையாக இருக்கவே விரும்புகிறேன். ஆனால், இவர் ஒற்றுமையாக இருப்பதில்லை. நீங்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால், மற்றவர்களுக்கு ஒற்றுமை இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்பு ஏற்படாது. ஒருவர் கை தட்டுவதற்கு ஒரு கையைத் தூக்கும்போது, மற்றவர் தனது கையைக் கொடுக்காவிட்டால், அங்கு எந்தவிதமான சத்தமும் ஏற்படாது. யாராவது ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தாலும், நீங்கள் உங்களின் ஒற்றுமையைப் பேண வேண்டும். அப்போது, ஒற்றுமையைக் குலைக்க வருபவர்களால் எந்தவிதமான ஒற்றுமையின்மைக்கான பணியிலும் ஈடுபட முடியாது. அவர்களும் அந்த ஒற்றுமைக்குள் வரவேண்டியிருக்கும். எனவே, இந்த மூன்று விடயங்களை நினைவு செய்யுங்கள்: நிஜம், இராஜரீகம், ஒற்றுமை. இந்த மூன்று விடயங்களும் நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுவதற்கு உங்களுடன் ஒத்துழைக்கும். உங்களுக்குப் புரிகிறதா? இன்று, நீங்கள் மூன்றின் பாடத்தைக் கற்றீர்கள். தந்தை குழந்தைகளான உங்களையிட்டுப் பெருமைப்படுகிறார். வேறு எந்தவொரு தந்தைக்கும் இத்தகைய தகுதிவாய்ந்த, யோகி குழந்தைகள் இருக்க முடியாது. நீங்கள் தகுதிவாய்ந்தவர்கள். நீங்கள் யோகிகளும் ஆவீர்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள். கல்பம் முழுவதிலும் வேறு எவருக்கும் உங்களைப் போன்ற பல குழந்தைகள் இருக்க முடியாது. எனவே, பாப்தாதா குறிப்பாக அமிர்த வேளைக்கான நேரத்தை ஏன் பிராமணக் குழந்தைகளான உங்களுக்காக வைத்திருக்கிறார்? ஏனெனில், அந்த வேளையில், பாப்தாதா குறிப்பாக ஒவ்வொரு குழந்தையினதும் சிறப்பியல்பு, சேவை, நற்குணங்களைத் தனக்கு முன்னால் கொண்டுவருகிறார். அவர் வேறு என்ன செய்கிறார்? அவர் ஒவ்வொரு குழந்தையினதும் சிறப்பியல்பையும் சேவையையும் நற்குணங்களையும் அவற்றுக்கு விசேடமான ஆசீர்வாதங்களைக் கொடுத்து அவற்றை அழியாதவை ஆக்குகிறார். இதனாலேயே, குறிப்பாக அந்த நேரம் குழந்தைகளான உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது அமிர்த வேளையின் விசேடமான பராமரிப்பு ஆகும். பாப்தாதா ஒவ்வொருவருக்கும் அன்பினதும் ஒத்துழைப்பினதும் ஆசீர்வாதத்தின் பராமரிப்பைக் கொடுக்கிறார். அவர் என்ன செய்கிறார் என்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றும் உங்களுக்குப் புரிகிறதா? சிவபாபா சந்தோஷத்தை அருள்பவர். அமைதியை அருள்பவர். இவ்வாறே நீங்கள் சொல்கிறீர்கள், அப்படியல்லவா? தந்தை உங்களுக்குப் பராமரிப்பையும் கொடுக்கிறார். பெற்றோர் தமது குழந்தைகளைக் காலையில் தயார் செய்து, அவர்களைக் குளிப்பாட்டி, இப்போது, சென்று உண்டு, பருகி நாள் முழுவதும் படியுங்கள் எனக் கூறுவதைப் போன்று, பாப்தாதாவும் இந்தப் பராமரிப்பை அமிர்த வேளையில் கொடுக்கிறார். அதாவது, நாள் முழுவதற்குமான சக்தியால் அவர் உங்களை நிரப்புகிறார். இதுவே விசேடமான பராமரிப்பிற்கான நேரம் ஆகும். இதுவே மேலதிக ஆசீர்வாதங்களுக்கும் பராமரிப்புக்குமான நேரம் ஆகும். ஆசீர்வாதங்களின் மடி அமிர்த வேளையில் திறக்கிறது. உங்களில் எவரும் நேர்மையான இதயத்துடன் உங்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதங்கள் வேண்டுமோ, அதைப் பெற்றுக் கொள்ள முடியும். சுயநலமான நோக்கங்களுடன் அல்ல. சுயநல நோக்கங்கள் இருந்தால், இதை எனக்குக் கொடுங்கள்! என நீங்கள் கூறுவீர்கள். சுயநலமான நோக்கங்களுடன் கேட்டால், பாப்தாதா என்ன செய்வார்? உங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அந்தளவு சக்தியை உங்களுக்குக் கொடுப்பார். எவ்வாறாயினும், உங்களின் நோக்கங்கள் நிறைவேறியதும், அனைத்தும் முடிந்துவிடுகின்றன. தொடர்ந்து முன்னேறுங்கள். தொடர்ந்து பறந்து கொண்டே இருங்கள். இதற்கு, உங்களின் அமிர்த வேளையை எந்தளவிற்குச் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் முழு நாளும் இலகுவாக இருக்கும். உங்களுக்குப் புரிகிறதா?

திறமைச் சித்தி எய்த வேண்டும் என்ற இலக்கையும் தகைமைகளையும் வைத்திருந்து சதா தங்களை முன்னேற்றுபவர்களுக்கும், தந்தை பிரம்மாவைப் போன்று துறவறம் செய்வதன் மூலம் தாம் பெற்ற மேன்மையான பாக்கியத்தை சதா பகிர்ந்து கொடுப்பவர்களுக்கும், தமது பாக்கியத்தை மேன்மையாக்கும் முதலாம் இலக்கத் துறவிகளுக்கும், பேற்றிற்கான உரிமையை இலகுவாகக் கோருவதுடன், தாங்களும் முன்னேறி சேவையையும் முன்னேற்றுபவர்களுக்கும், ஒவ்வோர் அடியிலும் சதா ஒத்துழைக்கும் சகபடிகளாகி முன்னேறுபவர்களுக்கும், தமது விழிப்புணர்வையும் ஸ்திதியையும் சக்திநிறைந்தது ஆக்குவதுடன் சதா தந்தையைப் பின்பற்றுபவர்களுக்கும், கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் இத்தகைய ஒத்துழைக்கும் சகபாடிகளுக்கும், திருப்தியாக இருக்கும் கீழ்ப்படிவான குழந்தைகளுக்கும், அனைவரையும் சந்தோஷப்படுத்தும் இரகசியங்களை அறிந்தவர்களுக்கும், இத்தகைய மேன்மையான ஆத்மாக்களுக்கும், இத்தகைய மகத்தான புண்ணியாத்மாக்களுக்கும், இரட்டை மகாதானிக் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மனதின் எந்தவொரு பந்தனத்தில் இருந்தும் விடுபட்டு, முக்தியை அருள்பவர் ஆகுவதன் மூலம் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்களாக.

அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுதல், சங்கமயுக பிராமணர்களின் சிறப்பியல்பாகும். எவ்வாறாயினும், உங்களின் மனதிலுள்ள எண்ணங்களின் எந்தவிதமான பந்தனமும் நீங்கள் அக சந்தோஷத்தை அல்லது அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய அனுமதிக்காது. வீணான எண்ணங்கள், பொறாமை, கவனக்குறைவு அல்லது சோம்பேறித்தனமான எண்ணம் என்பற்றின் பந்தனத்தால் கட்டப்பட்டிருத்தல் என்றால் அவை மனதின் பந்தனங்கள் ஆகும். அகங்காரத்தால், இத்தகைய ஆத்மாக்கள் எப்போதும் மற்றவர்களைக் குறைகூறிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் இனங்காணும் சக்தி மறைந்துவிடுகிறது. இதனாலேயே, அவர்கள் இந்தச் சூட்சுமமான பந்தனங்களில் இருந்து விடுபட வேண்டும். அப்போது மட்டுமே அவர்களால் முக்தியை அருள்பவர்கள் ஆகமுடியும்.

சுலோகம்:
எந்தவொரு துன்பத்தின் அலையும் உங்களிடம் வராதபடி, உங்களின் சந்தோஷச் சுரங்கம் நிறைந்திருக்கட்டும்.


இந்த அவ்யக்த மாதத்தில், அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேடமான வீட்டுவேலை.
ஒருவர் எந்தளவிற்கு வீணான விடயங்களை உங்களின் முன்னால் பேசினாலும், நீங்கள் அந்த வீணானதை சக்திவாய்ந்ததாக மாற்றுங்கள். உங்களின் புத்தியில் எந்தவித வீணாதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் ஒரு வீணான வார்த்தையை ஏற்றுக் கொண்டாலும், அந்த வீணான வார்த்தை பல வீணான வார்த்தைகளுக்குப் பிறப்புக் கொடுக்கும். உங்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். குறைவாகப் பேசுங்கள். மெதுவாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள். உங்களால் இலகுவாக உங்களின் ஸ்திதியை அவ்யக்த் ஆக்கிக் கொள்ள முடியும்.