06.01.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     08.04.84     Om Shanti     Madhuban


சங்கம யுகத்தின் உரிமைகளை அடைவதன் மூலம், நீங்கள் உலக இராச்சியத்திற்கான உரிமையைப் பெற்றுள்ள ஒருவர் ஆகுவீர்கள்.


இன்று, பாப்தாதா சுய இராச்சியத்திற்கான உரிமையைக் கோரியுள்ள மேன்மையான ஆத்மாக்களின் தெய்வீக சபையைப் பார்க்கிறார். மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், உலக இராச்சிய சபைக்கும் சுய இராச்சிய சபைக்கும் உரிமையைப் பெற்றுள்ளவர்கள் ஆகுகிறீர்கள். சுய இராச்சிய உரிமையைக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே உலக இராச்சியத்திற்கான உரிமையைப் பெறுவார்கள். இந்த இரட்டைப் போதை சதா உங்களிடம் உள்ளதா? தந்தைக்கு உரியவராக இருத்தல் என்றால், எண்ணற்ற உரிமைகளைப் பெறுதல் என்று அர்த்தம். நீங்கள் எத்தனை வகையான உரிமைகளைப் பெற்றுள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்களின் உரிமைகளின் மாலையை நினைவு செய்யுங்கள். நீங்கள் இறைவனின் குழந்தை ஆகியிருத்தலே முதல் உரிமை ஆகும். அதாவது, நீங்கள் மரியாதைக்கும் பூஜிப்பதற்கும் தகுதிவாய்ந்த அதிமேன்மையான ஆத்மா ஆகும் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். முதலில் தந்தையின் குழந்தை ஆகாமல் உங்களால் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகும் உரிமையைக் கோர முடியாது. ஆகவே, நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகியுள்ளீர்கள் என்பதே முதல் உரிமை ஆகும். நீங்கள் ஞானப் பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆகியுள்ளீர்கள் என்பதே இரண்டாவது உரிமை ஆகும். அதாவது, நீங்கள் சகல உரிமைகளையும் கோரியுள்ளீர்கள். நீங்கள் சகல சக்திகளுக்குமான உரிமையைக் கோரியிருப்பதே மூன்றாவது உரிமை ஆகும். உங்களுடைய பௌதீக அவயவங்கள் அனைத்தையும் வென்றவரான சுய இராச்சிய அதிகாரியாக இருத்தல் நான்காவது உரிமை ஆகும். இந்த உரிமைகள் அனைத்துடனும், நீங்கள் மாயையை வென்றவராகவும் அதனால் உலகை வென்றவராகவும், அதாவது, உலக இராச்சிய உரிமையைக் கொண்டுள்ள ஒருவராகவும் ஆகியுள்ளீர்கள். எனவே, இந்த உரிமைகள் அனைத்தையும் சதா உங்களின் விழிப்புணர்வில் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் சக்திசாலி ஆத்மா ஆகியுள்ளீர்கள். இந்த முறையில் நீங்கள் சக்திசாலி ஆகியுள்ளீர்கள், அல்லவா?

குறிப்பாக மூன்று விடயங்களைக் கிரகிப்பதன் மூலம், உங்களால் சுய இராச்சியத்தையும் உலக இராச்சியத்தையும் பெறுவதில் வெற்றி அடைய முடியும். மேன்மையான பணி எதிலும் வெற்றி பெறுவதன் அடிப்படையானது, துறவறமும் தபஸ்யாவும் சேவையும் ஆகும். இந்த மூன்றின் அடிப்படையில், வெற்றி ஏற்படுமா இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த மூன்றையும் கிரகிக்கும்போது, ஒரு விநாடியில் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. அது ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. எதைத் துறப்பது? ஒரு விடயத்தைத் துறத்தல், உங்களை இலகுவாகவும் இயல்பாகவும் அனைத்தையும் துறக்கச் செய்கிறது. சரீர உணர்வைத் துறத்தலே அந்த ஒரு துறவறம் ஆகும். இது இலகுவாக எல்லைக்குட்பட்ட நான்என்ற உணர்வைத் துறக்கச் செய்கிறது. எந்தவொரு எல்லைக்குட்பட்ட நான் என்ற உணர்வும் நீங்கள் தபஸ்யா செய்வதையும் சேவை செய்வதையும் தடுக்கிறது. எங்கு எல்லைக்குட்பட்ட நான் என்ற உணர்வு உள்ளதோ, அங்கு துறவறம், தபஸ்யா அல்லது சேவை இருக்க முடியாது. ஒரேயொரு விடயத்தைத் துறக்க வேண்டும். அது எல்லைக்குட்பட்ட நான் மற்றும் எனது என்பதே ஆகும். நான் என்பதும் எனது என்பதும் முடிவடைந்ததும் வேறு என்ன எஞ்சியுள்ளது? எல்லையற்றதே. நான் ஒரு தூய ஆத்மா. என்னுடையவர் வேறு எவரும் அன்றி ஒரேயொரு தந்தையே. எனவே, சர்வசக்திவானான எல்லையற்ற தந்தை உங்களுடன் இருக்கும்போது, உங்களிடம் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. இந்தத் துறவறத்துடன், உங்களால் தபஸ்யாவும் இயல்பாகவே செய்யக்கூடியதாக உள்ளது. தபஸ்யா என்றால் என்ன? நான் ஒரேயொருவருக்குச் சொந்தமானவன். நான் ஒரேயொருவரின் மேன்மையான வழிகாட்டல்களை மட்டுமே பின்பற்றுகிறேன். இதன் மூலமே உங்களின் ஸ்திதி இயல்பாகவே நிலையாகவும் ஸ்திரமானதாகவும் ஆகுகின்றது. ஒரேயொரு இறைவனின் விழிப்புணர்வை சதா கொண்டிருத்தலே தபஸ்யா ஆகும். நிலையான, ஸ்திரமான ஸ்திதியே உங்களின் மேன்மையான ஆசனம் ஆகும். தாமரை மலர் போன்றதொரு ஸ்திதியே உங்களின் தபஸ்யா ஆசனம் ஆகும். துறவறத்தினூடாக, உங்களின் தபஸ்யா இயல்பாகவே பெறப்படுகிறது. நீங்கள் துறவறத்தினதும் தபஸ்யாவினதும் சொரூபம் ஆகும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? சுயத்தின் உணர்வைத் துறத்தல் என்றால், நான் என்ற உணர்வு முடிந்துவிட்டது என்று அர்த்தம். நீங்கள் ஒரேயொருவரின் அன்பிலே திளைத்திருக்கும் தபஸ்விகள் ஆகுகிறீர்கள். அதன்பின்னர் உங்களால் சேவை செய்யாமல் இருக்க முடியாது. எல்லைக்குட்பட்ட நான் என்பதும் எனது என்பதும் உங்களை நிஜமான சேவை செய்வதற்கு அனுமதிப்பதில்லை. துறவறத்தினதும் தபஸ்யாவினதும் சொரூபங்களாக இருப்பவர்களே நிஜ சேவையாளர்கள் ஆவார்கள். உங்களுக்குள், நான் இதைச் செய்தேன் நான் இவ்வாறானவன் என்ற சரீர உணர்வு சிறிதளவேனும் இருந்தால், சேவையாளர் ஆகுவதற்குப் பதிலாக நீங்கள் என்னவாகுவீர்கள்? நீங்கள் பெயரளவில் மட்டுமே சேவையாளர் ஆகுவீர்கள். உங்களால் நிஜ சேவையாளர் ஆகமுடியாது. நிஜ சேவையின் அத்திவாரம் துறவறமும் தபஸ்யாவும் ஆகும். இத்தகைய துறவிகளும், தபஸ்வி சேவையாளர்களும் சதா வெற்றி சொரூபங்களாக இருப்பார்கள். வெற்றியும் சித்தியும் அவர்களின் கழுத்து மாலைகளாக இருக்கும். அவர்களிடம் இது பிறப்புரிமையாக இருக்கும். ஆகவே, உலகிலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதா இந்த மேன்மையான கற்பித்தல்களை வழங்குகிறார்: ஒரு துறவி ஆகுங்கள். ஒரு தபஸ்வி ஆகுங்கள். ஒரு நிஜ சேவையாளர் ஆகுங்கள்.

இன்றைய உலகம் மரண பயத்தால் நிரம்பியுள்ளது. (புயல்கள் வீசுகின்றன) இயற்கையின் கூறுகளில் குழப்பங்கள் ஏற்பட்டாலும், நீங்கள் அசைக்க முடியாதவர்கள், அல்லவா? தமோகுணி இயற்கையின் கடமை, குழப்பத்தை உருவாக்குவதாகும். அசைக்க முடியாத ஆத்மாக்களான உங்களின் கடமை, இயற்கையை மாற்றுவதாகும். எதுவும் புதியதல்ல! இவை அனைத்தும் நிகழ வேண்டியுள்ளது. குழப்பத்தினூடாகவே நீங்கள் அசைக்க முடியாதவர்கள் ஆகுவீர்கள். எனவே, சபையைச் சேர்ந்தவர்களும் சுய இராச்சிய அதிகாரிகளுமான மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா? இதுவும் இராஜ சபை, அப்படியல்லவா? இராஜ யோகிகள் என்றால் சுயத்தின் அரசர்கள் என்று அர்த்தம். இராஜயோகிகளின் சபை என்றால் சுய இராச்சிய அதிகாரிகளின் சபை என்று அர்த்தம். நீங்கள் அனைவரும் அரசியல் தலைவர்கள் ஆகிவிட்டீர்கள், அல்லவா? அவர்கள் தமது நாட்டின் அரசியல் தலைவர்கள். ஆனால் நீங்களோ சுயத்தின் தலைவர்கள். தலைவர் என்றால் அனைத்தையும் சரியான கோட்பாடுகளுக்கேற்பச் செய்பவர் என்று அர்த்தம். ஆகவே, நீங்கள் மதத்தினதும் இராச்சியத்தினதும் கோட்பாடுகளைப் பின்பற்றும் சுயதலைவர்கள் ஆவீர்கள். மிகச்சரியான, மேன்மையான கோட்பாடுகளே ஸ்ரீமத் ஆகும். மேன்மையான வழிகாட்டல்களே சரியான ஒழுக்கக் கோட்பாடுகள் ஆகும். இந்த ஒழுக்கக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களே வெற்றிகரமான தலைவர்கள் ஆவார்கள்.

பாப்தாதா உலகின் தலைவர்களைப் பாராட்டுகிறார். ஏனெனில், அவர்கள் பல்வகையினராக இருந்தாலும், குறைந்தபட்சம் முயற்சி செய்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் தமது நாட்டை நேசிக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் தமது இராச்சியம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்கிறார்கள். தமது பாரதத்தை மேன்மையடையச் செய்ய வேண்டும் என்ற அவர்களின் அன்பானது, இயல்பாகவே அவர்களை முயற்சி செய்யத் தூண்டுகிறது. இப்போது, இராச்சிய அதிகாரமும் மதத்தின் அதிகாரமும் ஒன்றாகச் சேரும் காலம் ஏற்படும். அப்போது, முழு உலகிலும் பாரதத்தின் வெற்றி முழக்கங்கள் ஒலிக்கும். பாரதமே கலங்கரை விளக்கமாக இருக்கும். அனைவரின் பார்வையும் பாரதத்தின் மீதே இருக்கும். அனைவரும் பாரதத்தைத் தூண்டுதலைத் தரும் தேசமாகவே அனுபவம் செய்வார்கள். பாரதம் அழியாத இடமாகும். இது அநாதியான தந்தை அவதரிக்கும் இடம் ஆகும். இதனாலேயே, பாரதத்தின் புகழ் எப்போதும் மகத்துவமானது. அச்சா.

நீங்கள் அனைவரும் உங்களின் இனிமையான இல்லத்தை வந்தடைந்துள்ளீர்கள். இங்கு வந்ததற்காகக் குழந்தைகள் அனைவரையும் பாப்தாதா பாராட்டுகிறார். நல்வரவுகள்! தந்தையின் வீட்டின் அலங்காரங்களுக்கு நல்வரவுகள். அச்சா.

சதா நிலையான மற்றும் ஸ்திரமான ஆசனத்தில் ஸ்திரமாக இருக்கும் வெற்றி நட்சத்திரங்கள் அனைவருக்கும், தபஸ்வி குழந்தைகளுக்கும், ஒரேயொரு பரமாத்மாவின் நினைவில் எப்போதும் இருக்கும் மகாத்மாக்களுக்கும் உலக உபகாரிகளுக்கும், மேன்மையான நல்லாசிகளையும் மேன்மையான தூய உணர்வுகளையும் கொண்டிருக்கும் சேவையாளர் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குஜராத் முதல் அமைச்சரைச் சந்திக்கிறார்:

தந்தையின் வீட்டிற்கும் உங்களின் வீட்டிற்கும் நல்வரவுகள்! சேவை செய்வதை நீங்கள் அதிகளவில் விரும்புகிறீர்கள் என்பதைத் தந்தை அறிவார். பலமில்லியன்களில் கையளவினர் மட்டுமே இத்தகைய சேவையாளர்கள். இதனாலேயே, நீங்கள் தொடர்ந்து நீங்கள் செய்யும் சேவையின் கடின உழைப்பிற்கான உடனடிப்பலனான அக சந்தோஷத்தை சதா பெறுவீர்கள். இந்த முயற்சியே வெற்றியின் அடித்தளம் ஆகும். கருவியாக இருக்கும் சேவையாளர்கள் அனைவரும் இந்த முயற்சியைச் செய்தால், பாரத இராச்சியம் சதா தொடர்ந்து வெற்றி பெறும். நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். இதற்கு உத்தரவாதம் உள்ளது. ஏனெனில், கருவிகள் ஆகுபவர்கள் நிச்சயமாகச் சேவையின் உடனடிப் பலனையும் எதிர்காலத்தின் பலனையும் பெறுவார்கள். ஆகவே, நீங்கள் சேவைக்கான கருவி ஆவீர்கள். கருவியாக இருக்கும் உணர்வில் இருந்து, சதா தொடர்ந்து சேவையில் முன்னேறுங்கள். கருவியாக இருக்கும் உணர்வு எங்குள்ளதோ, எங்கு நான் என்ற உணர்வு இல்லாமல் இருக்கிறதோ, அங்கு தொடர்ந்து முன்னேற்றம் நிகழும். கருவியாக இருக்கும் இந்த உணர்வானது இயல்பாகவே நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் விழித்தெழச் செய்யும். இன்று உலகில் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் இல்லாதிருப்பதற்கான காரணம், கருவிகளாக இருக்கும் உணர்வுகளைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நான் என்ற உணர்வு இருப்பதே ஆகும். அவர்கள் தங்களைக் கருவிகளாகக் கருதினால், அவர்கள் கரவன்ஹார் தந்தையையும் புரிந்து கொள்வார்கள். கரன்கரவன்ஹார் சுவாமி (செயற்படுகின்ற, மற்றவர்களைச் செய்வதற்குத் தூண்டுகின்ற பிரபு) எப்போதும் மேன்மையானவற்றைச் செய்வதற்கு உங்களைத் தூண்டுவார். நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆகுவதற்குப் பதிலாக, அவர்கள் இராச்சியத்தின் இல்லறத்தவர்கள் ஆகியுள்ளார்கள். இல்லறத்தவராக இருப்பதில் சுமை காணப்படுகிறது. நம்பிக்கைப் பொறுப்பாளராக இருப்பதில் இலேசானதன்மை உள்ளது. நீங்கள் இலேசானவர் ஆகும்வரை, உங்களுக்குள் தீர்மானிக்கும் சக்தி ஏற்படாது. நீங்கள் நம்பிக்கைப்பொறுப்பாளராக இருந்தால், நீங்கள் இலேசாக இருப்பதுடன் உங்களின் தீர்மானிக்கும் சக்தியும் மேன்மையாக இருக்கும். ஆகவே, எப்போதும் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆகுங்கள். கருவியாக இருக்கும் உணர்வானது பலனைத் தரும். நீங்கள் நிச்சயமாக இந்த விழிப்புணர்வின் பலனைப் பெறுவீர்கள். கருவியாக இருக்கும் இந்த உணர்வானது, எப்போதும் தொடர்ந்து உங்களுக்கு மேன்மையான பலனைக் கொடுக்கிறது. எனவே, உங்கள் சகபாடிகள் அனைவருக்கும் கருவியாகவும் நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் இருக்கும் உணர்வைக் கொண்டிருக்கும்படி நினைவூட்டுங்கள். இராச்சியத்தின் இந்தக் கோட்பாடுகள், முழு உலகிற்கும் மேன்மையான கோட்பாடுகளாக மாறும். பாரத இராச்சியத்தின் கோட்பாடுகளை முழு உலகமும் பிரதி செய்யும். எவ்வாறாயினும், இதற்கான அடிப்படையானது, நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற உணர்வைக் கொண்டிருத்தல் ஆகும். அதாவது, கருவியாக இருப்பதாகும்.

பாப்தாதா குமார்களைச் சந்திக்கிறார்:

குமார்கள் என்றால் சகல சக்திகளையும் சகல பொக்கிஷங்களையும் சேமித்து, மற்றவர்களைச் சக்திசாலிகள் ஆக்குபவர்கள் என்று அர்த்தம். நீங்கள் சதா இந்தச் சேவையைச் செய்வதில் மும்முரமாக இருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் மும்முரமாக இருந்தால், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் சிறிதளவில் வேலை எதுவும் இன்றி இருந்தாலும், வீணான எண்ணங்கள் ஏற்படும். சக்திசாலியாக இருப்பதற்கு, மும்முரமாக இருங்கள். உங்களின் சொந்த நேர அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் சரீரத்திற்கு ஒரு நேர அட்டவணையை ஏற்படுத்தியிருப்பதைப் போன்று, உங்களின் புத்திக்கும் நேர அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் புத்தியை மும்முரமாக வைத்திருப்பதற்கு ஒரு திட்டம் இடுங்கள். மும்முரமாக இருப்பதன் மூலம், நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். தற்போதைய நேரத்திற்கேற்ப, குமார் வாழ்க்கையில் மேன்மையாக இருத்தல் என்பது மிகவும் மகத்தான பாக்கியம் ஆகும். நீங்கள் ஒரு மேன்மையான பாக்கியசாலி ஆத்மா என்று எப்போதும் நினையுங்கள். நினைவிற்கும் சேவைக்கும் இடையே எப்போதும் சமநிலையைப் பேணுங்கள். சதா இந்தச் சமநிலையைப் பேணுபவர்கள், தொடர்ந்து ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அச்சா.

சதா இறையன்பில் திளைத்திருங்கள்.

இறையன்பானது ஆனந்தம் நிறைந்த ஊஞ்சல் ஆகும். இந்த சந்தோஷமான ஊஞ்சலில் ஆடியவண்ணம், சதா இறையன்பில் திளைத்திருங்கள். அப்போது எந்தவிதமான இக்கட்டான சூழ்நிலையோ அல்லது மாயையின் குழப்பமோ உங்களின் முன்னால் வரமுடியாது. இறையன்பானது எல்லையற்றதும் அசைக்க முடியாததும் ஆகும். அனைவரும் பெறத்தக்க வகையில் அது அளப்பரியது. எவ்வாறாயினும், இறையன்பை அடைவதற்கான வழிமுறை, பற்றற்றவராக இருத்தல் ஆகும். நீங்கள் எந்தளவிற்குப் பற்றற்றவராக இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு இறையன்பிற்கான உரிமையைக் கோருவீர்கள். எல்லைக்குட்பட்ட எதுவும் உங்களை ஆதிக்கத்திற்கு உள்ளாக்கவோ அல்லது அதை நோக்கி உங்களைக் கவரவோ முடியாதபடி இறையன்பில் திளைத்திருங்கள். ஆன்மீகத்தின் நறுமணம் சூழலில் பரவும்படியாக உங்களின் எல்லையற்ற பேறுகளில் சதா மூழ்கியிருங்கள். நீங்கள் நேசிக்கும் ஒருவரிடம் அனைத்தையும் அர்ப்பணிப்பதே அன்பின் அடையாளம் ஆகும். தந்தை குழந்தைகளான உங்களிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அதனால் அவர் அந்த அன்பிற்குப் பதில் அளிக்கும் வகையில் தினமும் ஒரு கடிதம் எழுதுகிறார். அவர் அன்பையும் நினைவுகளையும் கொடுக்கிறார். ஒரு சகபாடியாக, அவர் சதா அன்பின் பொறுப்பை நிறைவேற்றுகிறார். இந்த அன்பிற்காக உங்களின் பலவீனங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள். தந்தை குழந்தைகளான உங்களை நேசிக்கிறார். இதனாலேயே, அவர் சதா கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் யாராக இருந்தாலும், எத்தகையவர்களாக இருந்தாலும், நீங்கள் என்னுடையவர்களே. அதேபோன்று, நீங்களும் அன்பிலே திளைத்திருந்து, உங்களின் இதயபூர்வமாகக் கூறுகிறீர்கள்: பாபா, நீங்கள் எத்தகையவரோ, நீங்களே எங்களின் அனைத்துமாக இருக்கிறீர்கள். ஒருபோதும் பொய்மையின் இராச்சியத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். நீங்கள் நேசிக்கும் ஒருவரை நினைவு செய்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஏனெனில், இயல்பாகவே நீங்கள் அவரை நேசிப்பீர்கள். உங்களின் அன்பானது இதயபூர்வமாக உண்மையானதாகவும் சுயநலமற்றவதாகவும் இருக்க வேண்டும். எனது பாபா, அன்பான பாபா என நீங்கள் கூறுவதனால், உங்களால் நீங்கள் நேசிக்கும் ஒரேயொருவரை மறக்க முடியாது. தந்தையைத் தவிர வேறு எவரிடமிருந்தும் உங்களால் சுயநலமற்ற அன்பைப் பெற முடியாது. ஆகவே, வேறு எந்த நோக்கங்களுடனும் அவரை நினைவு செய்யாதீர்கள். ஆனால், சுயநலமற்ற அன்பிலே திளைத்திருங்கள். இறையன்பில் அனுபவசாலி ஆகுங்கள். ஏனெனில், இந்த அனுபவத்தினூடாக, நீங்கள் இலகுயோகியாகித் தொடர்ந்து பறப்பீர்கள். இறையன்பு உங்களைப் பறக்கச் செய்வதற்கு வழிவகுக்கிறது. பறப்பவர்களால் எந்தவிதமான ஈர்ப்பு விசையின் இழுவையிலும் அகப்பட்டுக் கொள்ள முடியாது. மாயையின் வடிவம் எத்தனை கவர்ச்சிகரமாக இருந்தாலும், பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களை அந்தக் கவர்ச்சியால் அடைய முடியாது. இறையன்பின் இழையானது, உங்களை வெகு தொலைவில் இருந்து இங்கே இழுக்கிறது. இந்த அன்பானது உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நீங்கள் ஒரு விநாடியேனும் இந்த அன்பிலே மூழ்கியிருந்தால், சகல வகையான துன்பங்களையும் நீங்கள் மறந்துவிடுவீர்கள். எல்லா வேளையும் சந்தோஷ ஊஞ்சலில் ஆட ஆரம்பிப்பீர்கள். உங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை யாராவது ஒருவரிடமிருந்து நீங்கள் பெற்றால், அது அன்பின் அடையாளம் ஆகும். தந்தை குழந்தைகளான உங்களிடம் மிகுந்த அன்பு வைத்திருப்பதனால், அவர் சந்தோஷத்திற்கும் அமைதியான வாழ்க்கைக்கும் நீங்கள் கொண்டிருக்கும் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறார். தந்தை உங்களுக்குச் சந்தோஷத்தை மட்டும் கொடுப்பதில்லை. ஆனால், அவர் உங்களைச் சந்தோஷப் பொக்கிஷத்தின் அதிபதிகளாகவும் ஆக்குகிறார். இத்துடன், உங்களின் மேன்மையான பாக்கிய ரேகையை வரைவதற்கான பேனாவையும் அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் பாக்கியத்தை உருவாக்க முடியும். இதுவே இறையன்பாகும். இறையன்பில் சதா திளைத்துத் தங்களை மறந்திருக்கும் குழந்தைகளின் பிரகாசத்தின் கதிர்கள், போதை, அனுபவம் என்பவை மிகவும் சக்திவாய்ந்தவை ஆகும். அவற்றால் எந்தவொரு பிரச்சனையும் அவர்களிடமிருந்து தொலைவில் இருப்பது மட்டுமன்றி, தமது கண்களை உயர்த்தி அவர்களைப் பார்க்கக்கூட மாட்டாது. அவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் இருக்காது.

குழந்தைகளான உங்களிடம் தந்தை மிகுந்த அன்பு வைத்திருப்பதனால், அவர் உங்களை அமிர்த வேளையில் இருந்தே பராமரிக்கிறார். நாளின் ஆரம்பம் மிக மேன்மையானது. இறைவனே உங்களை ஒரு சந்திப்பிற்காக, இதயபூர்வமான சம்பாஷணைக்காக அழைத்து, உங்களைச் சக்தியால் நிரப்புகிறார். தந்தையின் அன்புப் பாடல்களே உங்களை விழித்தெழச் செய்கின்றன. அவர் உங்களை அழைத்து, மிகுந்த அன்புடன் விழித்தெழச் செய்கிறார்: இனிமையான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே, வாருங்கள்! இத்தகைய அன்பான பராமரிப்பின் நடைமுறை வடிவம், இலகுவான யோகி வாழ்க்கை ஆகும். பொதுவாக, நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர் விரும்புவதையே செய்வீர்கள். குழந்தைகளான நீங்கள் குழம்பும் போது தந்தை அதை விரும்புவதில்லை. எனவே, ஒருபோதும் நான் என்ன செய்வது? சூழ்நிலை அவ்வாறிருந்தது, இதனாலேயே நான் குழப்பம் அடைந்தேன் எனக் கூறாதீர்கள். உங்களைக் குழப்பக்கூடிய ஒரு சூழ்நிலை உங்களின் முன்னால் வந்தாலும், குழப்பம் அடையும் ஸ்திதியை அடைய உங்களை அனுமதிக்காதீர்கள்.

பாப்தாதா குழந்தைகளான உங்களின் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளார். அதனால், தனது ஒவ்வொரு குழந்தையும் தன்னை விட முன்னணியில் செல்ல வேண்டும் என அவர் விரும்புகிறார். உலகிலும், நீங்கள் யாரிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கிறீர்களோ, அவர்களை உங்களை விட முன்னால் செல்ல வைப்பீர்கள். இது அன்பின் அடையாளம் ஆகும். பாப்தாதாவும் கூறுகிறார்: எனது குழந்தைகளில் எந்தவித பலவீனங்களும் எஞ்சியிருக்கக்கூடாது. அனைவரும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் சமமானவர்களாகவும் ஆகவேண்டும். நாளின் ஆரம்பமான அமிர்தவேளையில், உங்களின் இதயங்களைச் சம்பூரணமாக இறையன்பால் நிரப்புங்கள். உங்களின் இதயங்கள் இறையன்பாலும் இறை சக்திகளாலும் நிரம்பியிருந்தால், உங்களின் பற்றும் அன்பும் ஒருபோதும் வேறெந்தத் திசையிலும் செல்ல முடியாது.

இறையன்பை இந்த ஒரு பிறவியில் மட்டுமே பெற முடியும். 83 பிறவிகளாக நீங்கள் தேவாத்மாக்களிடமிருந்தும் சாதாரணமான ஆத்மாக்களிடமிருந்தும் அன்பைப் பெற்றீர்கள். இப்போது மட்டுமே நீங்கள் இறையன்பைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்களிடம் நீங்கள் வைக்கும் அன்பானது, இராச்சிய பாக்கியத்தை இழக்கச் செய்கிறது. ஆனால் இறையன்போ, நீங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறச் செய்கிறது. எனவே, இந்த அன்பின் அனுபவத்தில் திளைத்திருங்கள். நீங்கள் தந்தையின் மீது உண்மையான அன்பு வைத்திருந்தால், அதன் அடையாளம், சமமானவராகவும் கர்மாதீத் ஆகவும் ஆகுவதாகும். ஒரு கரவன்ஹார் (தூண்டுபவர்) ஆகிச் செயல்களைச் செய்யுங்கள். உங்களின் பௌதீக அவயவங்கள் உங்களைச் செயற்பட வைக்கக்கூடாது. ஆனால், நீங்கள் உங்களின் பௌதீக அவயவங்களைச் செயற்பட வைக்க வேண்டும். உங்களின் மனம், புத்தி அல்லது சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தின் கீழ் எந்தவிதமான செயல்களையும் செய்யாதீர்கள்.
 

ஆசீர்வாதம்:
நீங்கள் பலவீனமானவரில் இருந்து பலம் வாய்ந்தவர் ஆகுவதன் மூலம் அசாத்தியமானவற்றைச் சாத்தியமாக்கும் தைரியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

குழந்தைக்குத் தைரியம் இருந்தால், தந்தை உதவி செய்வார் என்ற ஆசீர்வாதத்தின் அடிப்படையில், நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆகவேண்டும் என்ற திடசங்கற்பம் முதலில் உங்களிடம் இருந்தது. தந்தை உங்களுக்குப் பலமில்லியன் மடங்கு உதவியை வழங்குகிறார். ஆத்மாக்களான நீங்கள் அநாதியாகவும் ஆதியாகவும் தூய்மையானவர்கள். நீங்கள் பல தடவைகள் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் தொடர்ந்து அவ்வாறு ஆகுவீர்கள் எனத் தந்தை கூறுகிறார். முன்னர் பல தடவைகள் என்பதை உணர்வதன் மூலம் நீங்கள் சக்திசாலிகள் ஆகியுள்ளீர்கள். பலவீனமாக இருப்பதில் இருந்து, நீங்கள் பலசாலிகள் ஆகியுள்ளீர்கள். இதனால் நீங்கள் நிச்சயமாக இந்த உலகைத் தூய்மையாக்கி அனைவருக்கும் காட்டுவீர்கள் என மக்களுக்குச் சவால் விடுக்கிறீர்கள். ரிஷிகளும் முனிவர்களும் மகாத்மாக்களும் சிரமம் என்று கருதியதை - இல்லறத்தில் இருந்தவண்ணம் தூய்மையாக இருத்தல் - நீங்கள் மிகவும் இலகுவானது என்று கூறுகிறீர்கள்.

சுலோகம்:
சத்தியப்பிரமாணம் செய்வதெனில் திடசங்கற்பத்தைக் கொண்டிருப்பதாகும். உண்மையான பக்தர்கள் ஒருபோதும் தமது சத்தியத்தை மீறுவதில்லை.

 

தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா அவரின் சாதாரணமான ரூபத்தில், அசாதாரணமான, அலௌகீக ஸ்திதியைக் கொண்டிருந்தார். அதேபோன்று, தந்தையைப் பின்பற்றுங்கள். நட்சத்திரங்களின் பால்வெளியில், விசேட நட்சத்திரங்களின் மினுமினுப்பும் பிரகாசமும் தொலைவில் இருந்து பார்க்கும்போது தனித்துவமானவையாகவும் அழகானவையாகவும் தோன்றுகின்றன. அதேபோன்று, நட்சத்திரங்களான நீங்கள், சாதாரணமான ஆத்மாக்களின் மத்தியில் விசேடமான ஆத்மாக்களாகத் தென்படுவீர்கள்.