07.02.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    29.10.87     Om Shanti     Madhuban


சரீரம், மனம், செல்வம், உறவுமுறைகளின் சக்திகள்.


இன்று, சர்வசக்திவான் தந்தை தனது சக்திசாலிக் குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் சக்திசாலி ஆகியுள்ளார். ஆனால் வரிசைக்கிரமமாகவே. சகல சக்திகளும் தந்தையிடமிருந்து பெற்ற ஆஸ்தி ஆகும். ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து பெற்ற ஆசீர்வாதம் ஆகும். தந்தையினதும் ஆசீர்வாதங்களை அருள்பவரினதும் இரட்டை உறவுமுறையினூடாக, ஒவ்வொரு குழந்தையும் பிறப்பின்போது இந்த மேன்மையான பேற்றினைப் பெறுகிறார். பிறப்பின்போது, தந்தை உங்களுக்குச் சகல சக்திகளினதும் உரிமையைக் கொடுத்தார். அதாவது, அவர் உங்களுக்கு உங்களின் பிறப்புரிமையை வழங்குகிறார். அத்துடன்கூடவே, ஆசீர்வாதங்களை அருள்பவராக, நீங்கள் பிறப்பு எடுத்தவுடனேயே, அவர் உங்களை மாஸ்ரர் சர்வசக்திவானாக ஆக்கி, உங்களுக்குச் சகல சக்திகளும் கிடைப்பதாக என்ற ஆசீர்வாதத்தையும் உங்களுக்குக் கொடுக்கிறார். சகல குழந்தைகளும் ஒரேயொருவரிடமிருந்து சமமாக இந்த இரட்டை உரிமையைப் பெற்றுள்ளார்கள். ஆனால், அதைக் கிரகிக்கும் உங்களின் சக்தியே உங்களை வரிசைக்கிரமம் ஆக்குகிறது. தந்தை குழந்தைகள் அனைவரையும் சதா சகல சக்திகளும் நிறைந்தவர்களாக ஆக்குகிறார். ஆனால், குழந்தைகள் தமது கொள்ளளவிற்கேற்பவே சக்திசாலிகள் ஆகுகிறார்கள். பொதுவாக, உலக வாழ்க்கையிலோ அல்லது ஆன்மீக வாழ்க்கையிலோ, சக்திகளே வெற்றிக்கான அடிப்படையாக விளங்குகின்றன. எந்தளவிற்கு அதிக சக்திகள் உங்களிடம் உள்ளதோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் வெற்றி அடைவீர்கள். பிரதானமான சக்திகள், சரீரத்தினதும் மனதினதும் செல்வத்தினதும் உறவுமுறைகளினதும் சக்திகள் ஆகும். நான்கும் அத்தியாவசியமானவை. இந்த நான்கில் ஒரு சக்தியேனும் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிலையான, முழுமையான வெற்றி இருக்க முடியாது. ஆன்மீக வாழ்க்கையிலும், நான்கு சக்திகளும் அத்தியாவசியமானவை.

இந்த ஆன்மீக வாழ்க்கையில், ஆத்மாக்களினதும் சடப்பொருளினதும் நல்ல ஆரோக்கியம் அத்தியாவசியமானது. ஆத்மா ஆரோக்கியமாக இருக்கும்போது, உங்களின் சொந்த ஸ்திதியால், உங்களின் சரீரங்களின் கணக்கு அல்லது உங்களின் சரீரத்தின் நோய், ஒரு சிலுவையில் இருந்து ஒரு முள் போல் ஆகிவிடும். அத்துடன் நீங்களும் உங்களை ஆரோக்கியமாக அனுபவம் செய்வீர்கள். அப்போது உங்களின் முகத்தில் நோயின் அல்லது வேதனையின் எந்தவிதமான அறிகுறிகளும் இருக்காது. நீங்கள் உங்களின் நோயைப் பற்றிப் பேசவும் மாட்டீர்கள். கர்ம வேதனையைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, நீங்கள் கர்மயோகா ஸ்திதியைப் பற்றியே பேசுவீர்கள். ஏனென்றால், நோயைப் பற்றிப் பேசுவது, அந்த நோயை அதிகரிக்கவே செய்யும். இத்தகையதோர் ஆத்மா ஒருபோதும் நோயின் வேதனையை அனுபவம் செய்ய மாட்டார். தனது வேதனையைப் பற்றிப் பேசுவதன் மூலம் அவர் துன்ப அலையைப் பரப்ப மாட்டார். அதற்குப் பதிலாக, மாற்றத்திற்கான சக்தியுடன், அவர் எந்தவொரு வேதனையையும் திருப்தியாக மாற்றிவிடுவார். அவர் திருப்தியாக இருப்பதுடன், மற்றவர்களிலும் திருப்தி அலையை உருவாக்குவார். அதாவது, அவர் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாகி, சக்திகளின் ஆசீர்வாதங்களுடன், காலத்திற்கேற்ப சகித்துக் கொள்ளும் சக்தியை அல்லது ஏற்றுக் கொள்ளும் சக்தியைப் பயன்படுத்துவார். நீங்கள் சர்வசக்திவான் தந்தையிடமிருந்து பெறுகின்ற ஆசீர்வாதம் அல்லது சக்திகளின் ஆஸ்தியைத் தேவைப்படும் வேளையில் பயன்படுத்தினால், இந்த ஆசீர்வாதங்கள் அல்லது நல்லாசிகள் உங்களுக்கு ஒரு மருந்தைப் போல் செயற்படும். ஏனென்றால், இந்த சக்திகளால் உங்களுக்குத் தேவையான வடிவில், சூழ்நிலைக்கேற்ப, அவற்றைப் பயன்படுத்த நீங்கள் விரும்பும் நேரத்தில், விரும்பும் வழிமுறையில் உங்களுடன் ஒத்துழைக்க முடியும். உங்களால் இந்த சக்திகளை அல்லது ஆசீர்வாதங்களைக் கடவுளிடமிருந்து நீங்கள் விரும்பும் விதத்தில் பெற முடியும். ஒரு நிமிடத்தில் குளிர்மையின் வடிவிலும், மறு நிமிடம் எரிக்கும் வடிவிலும் பெற முடியும். அவற்றால் நீரின் குளிர்மையை நீங்கள் அனுபவிக்கச் செய்ய முடியும். அத்துடன் நெருப்பில் எரியும் அனுபவத்தையும் கொடுக்க முடியும். அவற்றால் ஒரு மருந்தைப் போல் செயல்பட முடியும். அத்துடன் உங்களைச் சக்திசாலிகள் ஆக்குவதற்கு போஷாக்கான உணவைப் போன்றும் செயல்பட முடியும். இந்தச் சக்திகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்தும் அதிகாரி ஆகுங்கள். மாஸ்ரர் சர்வசக்திவான்களான உங்களுக்கு இந்தச் சக்திகள் அனைத்தும் சேவையாளர்களே. அவற்றில் எந்த ஒரு சக்திக்கும் நீங்கள் கட்டளை இட்டதும், ஆமாம், எனது பிரபுவே! என அது கூறி, உங்களுடன் ஒத்துழைக்கும். எவ்வாறாயினும், அவற்றிடம் இருந்து சேவையைப் பெற்றுக் கொள்பவர்களும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். எனவே, உங்களால் சரீரத்தின் சக்தியை ஆத்ம சக்தியின் அடிப்படையில் சதா அனுபவம் செய்ய முடியும். அதாவது, சதா ஆரோக்கியமாக இருப்பதை உங்களால் அனுபவம் செய்ய முடியும்.

இந்த அலௌகீக பிராமண வாழ்க்கை ஒரு சதா ஆரோக்கியமான வாழ்க்கை ஆகும். ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து நீங்கள், சதா ஆரோக்கியமாக இருப்பீர்களாக என்ற ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள். சில குழந்தைகளால் தேவைப்படும் நேரத்தில், தாம் பெற்ற ஆசீர்வாதங்களைப் பயன்படுத்தவோ அல்லது நன்மையைப் பெற்றுக்கொள்ளவோ முடியாதிருப்பதை பாப்தாதா பார்க்கிறார். அல்லது, அவர்களால் தமது சேவையாளர்களான இந்தச் சக்திகளிடமிருந்து, எல்லையற்ற முறையில் எல்லையற்ற புத்தியுடன் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது என்றே சொல்லப்பட முடியும். மாஸ்ரர் சர்வசக்திவானின் ஸ்திதி என்பது சிறிய விடயமல்ல. அது மேன்மையானதொரு ஸ்திதியாகும். அத்துடன் பரமாத்மாவிடமிருந்து நேரடியாகப் பெற்ற ஒரு பரம பட்டம் ஆகும். இந்தப் பட்டத்தையிட்டு உங்களிடம் எவ்வளவு போதை உள்ளது? இந்தப் பட்டம் பல பணிகளை வெற்றியடையச் செய்யும். எனவே, இது கடவுளிடமிருந்து கிடைக்கும் ஒரு பட்டமாகும். அது அதிகளவு சந்தோஷத்தாலும் சக்தியாலும் நிறைந்துள்ளது. நீங்கள் இந்தப் பட்டத்தின் ஸ்திதி என்ற ஆசனத்தில் அமர்ந்திருந்தால், நீங்கள் இந்தச் சக்திகள் அனைத்தையும் எப்போதும் உங்களுக்குச் சேவை செய்வதற்குத் தயாராக இருப்பதை அனுபவம் செய்வீர்கள். அவை உங்களின் கட்டளைகளுக்காகக் காத்திருக்கும். எனவே, ஆசீர்வாதத்தையும் ஆஸ்தியையும் பயன்படுத்துங்கள். நீங்கள் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற சுயமரியாதையில் ஸ்திரமாக இல்லாவிட்டால், உங்களின் சக்திகளை உங்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வைத்திருப்பதற்குப் பதிலாக, நீங்கள் சதா தந்தையிடம் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட சக்தியைக் கொடுக்கும்படி கேட்பீர்கள். அல்லது, உங்களுக்காக ஒரு பணியைச் செய்யும்படி கேட்பீர்கள். அல்லது, இது நிகழவேண்டும் அல்லது அது நிகழ வேண்டும் எனக் கேட்பீர்கள். ஆகவே, வேண்டுகோள் விடுப்பவர்களால் ஒருபோதும் சதா சந்தோஷமாக இருக்க முடியாது. ஒன்று, பூர்த்தியாகும். இன்னொன்று பின்னர் ஆரம்பமாகும். எனவே, ஒரு மாஸ்ரராகி, யோகியுக்த் ஆகி, உங்களின் பணியாட்களிடமிருந்து விவேகத்துடன் சேவையைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இயல்பாகவே சதா ஆரோக்கியமாக இருப்பதை அனுபவம் செய்வீர்கள். இது சரீரத்தின் சக்தியின் பேறு என்று அழைக்கப்படுகிறது.

அதேபோல், மனதின் சக்தி உள்ளது. அதாவது, மேன்மையான எண்ணத்தின் சக்தி. மாஸ்ரர் சர்வசக்திவானின் ஒவ்வோர் எண்ணமும், தான் விரும்பியதை, தான் விரும்பியபோது செய்யக்கூடியவாறு அதிகளவு சக்தி உடையது. அத்துடன் அதை நிகழச் செய்கிறது. ஏனென்றால், அவரின் எண்ணங்கள் எப்போதும் தூய்மையானவை, மேன்மையானவை, நன்மைசெய்யக்கூடியவை. எனவே, எங்கு நன்மை செய்வதற்கான மேன்மையான எண்ணங்கள் உள்ளதோ, அவை நிச்சயமாக வெற்றி பெறும். ஏனென்றால், நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவானாக இருப்பதனால், உங்களின் மனதால் அதன் மாஸ்ரரை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அதனால் உங்களைத் துன்பத்தை அனுபவிக்கச் செய்ய முடியாது. மனம் ஒருமுகப்படுகிறது. அதாவது, அது ஓரிடத்தில் ஸ்திரமாக இருக்கும். அது அலைபாயாது. அப்போது உங்களால் உங்களின் மனதை நீங்கள் விரும்பிய இடத்தில், நீங்கள் விரும்பியபோது ஸ்திரப்படுத்த முடியும். அப்போது மனதால் ஒருபோதும் துக்கப்பட முடியாது. ஏனென்றால், அது உங்களின் சேவையாளராக, உங்களின் வேலையாளாக ஆகும். எனவே, இது உங்களின் அலௌகீக வாழ்க்கையில் ஓர் ஆஸ்தியாக, ஆசீர்வாதமாகப் பெற்ற மனதின் சக்தியாகும்.

அதேபோல், மூன்றாவது செல்வத்தின் சக்தியாகும். அதாவது, ஞானச் செல்வத்தின் சக்தியாகும். ஞானச் செல்வம் இயல்பாகவே நீங்கள் பௌதீகமான செல்வத்தைப் பெறச் செய்யும். எங்கு ஞானச் செல்வம் உள்ளதோ, இயற்கையும் இயல்பாகவே ஒரு சேவகன் ஆகும். பௌதீகச் செல்வம் பௌதீக வசதிகளுக்கானது. ஞானச் செல்வத்தால், நீங்கள் இயல்பாகவே சகல பௌதீகமான வசதிகளையும் பெறுவீர்கள். இதனாலேயே, ஞானச் செல்வமே சகல செல்வங்களிலும் அரசன் ஆகும். எங்கு அரசன் இருக்கிறாரோ, பௌதீக வசதிகளை இயல்பாகவே பெற முடியும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஏதாவது பௌதீகமான விடயங்களைப் பெறுவதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியிருந்தால், ஞானச் செல்வம் குறைவாக இருக்கிறது என்பதே அதன் அர்த்தமாகும். உண்மையில், ஞானச் செல்வம் உங்களைப் பல்கோடீஸ்வரர் ஆக்குகிறது. கடவுளின் பெயரால் அனைத்தையும் செய்வது, இயல்பாகவே நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றியை ஏற்படுத்தும். கடவுளின் செல்வத்தை உடையவர்கள், கடவுளுக்கு அனைத்தையும் செய்பவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் எதையும் நினைக்க வேண்டியதே இல்லை. இயல்பாகவே அனைத்துத் தேவைகளும் தொடர்ந்து கிடைக்கும். அவர்களிடம் அதிகளவு சக்தி இருக்கும். இந்த ஞானச் செல்வமானது அவர்களைப் பல பிறவிகளுக்கு அரசர்க்கெல்லாம் அரசர்களாக ஆக்கும். எனவே, நீங்களும் இலகுவாக செல்வத்தின் சக்தியைப் பெறுகிறீர்கள்.

அதேபோல், உறவுமுறைகளின் சக்தியும் உள்ளது. உறவுமுறைகளின் சக்தியின் பேற்றினை அடையும் தூய ஆசை உள்ளது. ஏனென்றால், உறவுமுறைகளினூடாக, அன்பினதும் ஒத்துழைப்பினதும் பேறு உள்ளது. இந்த அலௌகீக வாழ்க்கையில், நீங்கள் இரட்டை முறையில் உறவுமுறைகளின் சக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் எவ்வாறு இரட்டை முறையில் உறவுமுறைகளின் சக்தியைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்று, சகல உறவுமுறைகளையும் தந்தையுடன் வைத்திருத்தல். இரண்டாவது, தெய்வீகக் குடும்பத்துடனான உறவுமுறைகள். எனவே, இது இரட்டை உறவுமுறை. தந்தையுடனும், ஒருவரோடு ஒருவரும் வைத்திருத்தல். எனவே, உறவுமுறைகளினூடாக, நீங்கள் சதா சுயநலமற்ற அன்பையும் அழியாத அன்பையும் அழியாத ஒத்துழைப்பையும் பெறுகிறீர்கள். ஆகவே, உங்களுக்கும் உறவுமுறைகளின் சக்தி உள்ளது. தந்தைக்கு ஏன் குழந்தைகள் தேவைப்படுகிறார்கள்? குழந்தைகளுக்கு ஏன் தந்தை தேவைப்படுகிறார்? ஒத்துழைப்பிற்காகவே. தேவைப்படும் நேரத்தில் நீங்கள் ஒத்துழைப்பைப் பெறுவதற்காகவே. ஆகவே, இந்த அலௌகீக வாழ்க்கையிலும், நான்கு சக்திகளின் பேறுகளை ஆசீர்வாதமாகவும் ஆஸ்தியாகவும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். நான்கு வகையான சக்திகளையும் நீங்கள் பெற்றதும் ஒவ்வொரு கணமும் உங்களின் ஸ்திதி என்னவாக இருக்கும்? எப்போதும் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான். நீங்கள் எப்போதும் இந்த ஸ்திதியில் அமர்ந்தவண்ணம் ஸ்திரமாக இருக்கிறீர்களா? இந்த ஸ்திதியே வேறொரு வார்த்தைகளில், சுயத்தின் அரசனாக இருத்தல் அல்லது ஒரு இராஜயோகியாக இருத்தல் எனப்படுகிறது. ஓர் அரசனின் பொக்கிஷக் களஞ்சியம் எப்போதும் நிறைந்திருக்கும். எனவே, ஓர் இராஜயோகி என்றால் சகல சக்திகளின் பொக்கிஷக் களஞ்சியம், சதா நிறைந்திருக்கும் ஒருவர் என்று அர்த்தம். உங்களுக்குப் புரிகிறதா? இது மேன்மையான பிராமணரின் அலௌகீக வாழ்க்கை என்று அழைக்கப்படுகிறது. எனவே, எப்போதும் ஓர் அதிபதியாகி, சகல சக்திகளையும் பயன்படுத்துங்கள். கொள்ளளவிற்கேற்ப என்று இருப்பதற்குப் பதிலாக, சதா சக்திசாலி ஆகுங்கள். வேண்டுகோள் விடுப்பவர் ஆகாதீர்கள். ஆனால், சதா சந்தோஷமானவராக இருங்கள். அச்சா.

அனைவருக்கும் மதுவனத்திற்கு வருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் அடைந்த இந்தப் பாக்கியத்தை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். பாக்கியத்தை அருள்பவரை உங்களுடன் வைத்திருத்தல் என்றால், உங்களின் பாக்கியத்தை உங்களுடன் வைத்திருப்பதாகும். மூன்று பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளார்கள். மூன்று வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நதிகள் இப்போது ஒன்றுகலந்துள்ளன. இது திரிவேணி சங்கமம் எனப்படுகிறது. பாக்கியங்களை அருள்பவரான பாப்தாதா, உங்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்குகிறார். இந்த ஆசீர்வாதங்களைப் பயன்படுத்துவது உங்கள் ஒவ்வொருவரையும் பொறுத்த விடயமாகும். அச்சா.

முழுமையான ஆஸ்திக்கும் ஆசீர்வாதத்திற்கும் உரிமையுடைய எங்கும் உள்ள மேன்மையான ஆத்மாக்களுக்கும், சகல மேன்மையான மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாக்களுக்கும், சதா திருப்தியின் அலைகளைப் பரப்பும் சகல திருப்தியான ஆத்மாக்களுக்கும், கடவுளின் பெயரால் செயல்படுவதன் மூலம் தமது தொடர்புகள் அனைத்திலும் எப்போதும் வெற்றி பெறும் மகாத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் சக்தி நிறைந்த நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

சிறந்த உலகிற்கான குளோபல் ஒத்துழைப்பு என்ற நிகழ்ச்சித் திட்டத்திற்காக அவ்யக்த பாப்தாதாவின் தூண்டுதல்கள்.

இந்தத் தலைப்பு எத்தகையதென்றால், அனைவரும் தாமாகவே முன்வந்து தமது ஒத்துழைப்பைக் கொடுப்பார்கள். அவர்களின் ஒத்துழைப்பினூடாக, அவர்கள் ஓர் உறவுமுறையிலும் வருவார்கள். இதனாலேயே, அவ்வாறு முன்வருதல் தானாகவே வரும். இந்தச் சேவையில் முன்னேறும் சேவையாளர்கள் நல்லாசிகளும் தூய உணர்வுகளும் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். உங்களின் நல்லாசிகளுக்கான பலனை நீங்கள் பெறாமல் போவது என்பது சாத்தியமே இல்லை. சேவையாளர்களின் நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் நிலமானது இலகுவாகப் பழத்தைக் கொடுப்பதற்குக் கருவியாகும். பழம் தயாராக உள்ளது. நிலமே சிறிதளவு பண்படுத்தப்பட வேண்டும். பழம் விரைவாக வெளிவரும். ஆனால், அதற்காக நிலத்திற்கு உரம் போட வேண்டும். அந்த நிலம் இப்போது தயாராகுகிறது.

உண்மையில், அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும். ஆனால், இன்னமும், விசேட துறைகளைச் சேர்ந்த ஆத்மாக்கள் நெருக்கமாக வரவில்லை. அரசியல் அல்லது மதம் என்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சேவை செய்திருந்தாலும், அவர்கள் ஒத்துழைப்பவர்களாகி, முன்னால் வந்து தேவைப்படும் நேரத்தில் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு, நீங்கள் ஒரு சக்திவாய்ந்த அம்பை எய்ய வேண்டியது அவசியம். ஒரு சக்திவாய்ந்த அம்பு என்றால் சகல ஆத்மாக்களுக்கும் ஒத்துழைப்பு என்ற நல்லாசிகளையும் சந்தோஷம் என்ற நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருத்தல் எனப் பார்க்கப்படுகிறது. நீங்கள் இதைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு பணியும் இலகுவாக வெற்றியடையும். தற்சமயம், நீங்கள் அனைவரும் வெவ்வேறாக வேறு வகையான சேவைகளைச் செய்வீர்கள். எவ்வாறாயினும், ஆரம்ப நாட்களில், யாராவது ஒருவர் ஒரு செயலைச் செய்வதற்குச் செல்லும்போது, அவர் முழுக் குடும்பத்திடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார். அந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இலகுவாக்கிவிடும். எனவே, சேவை செய்யும்போது இந்தச் சேர்க்கையும் இருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் எந்தவொரு பணியைச் செய்ய முன்னரும், அனைவரின் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் பெற்று, அந்தப் பணியை அனைவரின் திருப்தியின் சக்தியால் நிரப்புங்கள். அப்போது மட்டுமே சக்திவாய்ந்த பலன் வெளிப்படும். இப்போது, நீங்கள் மிகக்கடினமாக உழைக்க வேண்டியதில்லை. அனைவரும் வெறுமையாகி விட்டார்கள். சிரமப்பட்டு உழைக்க வேண்டிய தேவையில்லை. அவர்கள் மிகவும் வெறுமையாகி விட்டார்கள். அதனால் அவர்களை நீங்கள் ஊதினால், அவர்கள் பறந்து இங்கு வந்துவிடுவார்கள். தற்காலத்தில், அனைவரும் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு ஏதாவதொரு சக்தி தேவை என நினைக்கிறார்கள். அது அரசாங்கமாக இருக்கலாம் அல்லது மதமாக இருக்கலாம். உள்ளே, அவர்கள் தேடுகிறார்கள். பிராமண ஆத்மாக்களுக்குச் சேவை செய்யும் வழிமுறையில் ஒரு வேறுபாடு இருக்க வேண்டும். அது ஒரு மந்திரம் ஆகிவிடும். தற்சமயம், நீங்கள் அந்த மந்திரத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள். நீங்கள் 50 வருடங்களாக கடினமாக உழைத்தீர்கள். அவை அனைத்தும் நிகழ வேண்டியிருந்தது. நீங்கள் அனுபவசாலிகள் ஆகினீர்கள். இப்போது, அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றி என்ற தலைப்பை ஒவ்வொரு பணியிலும் பயன்படுத்தும் இலக்கை வைத்திருங்கள். இதுவே பிராமணர்களின் தலைப்பாகும். எவ்வாறாயினும், உலகிலுள்ள மக்களுக்கு, சிறந்த உலகிற்கு குளோபல் ஒத்துழைப்பு என்ற தலைப்பு இருக்கட்டும். அச்சா.

அனைவரின் வெற்றியின் நடைமுறை ரூபம் இப்போது புலப்படும். பிழையாகிப் போன எந்தவொரு பணியையும் உங்களின் திருஷ்டியாலும் உங்களின் ஒத்துழைப்பாலும் இலகுவாகச் சரியாக்க முடியும். இந்தக் காரணத்தால், பின்னர் அவர்கள் பக்தி மார்க்கத்தில் நன்றியுடன் அழைப்பார்கள். இந்த வெற்றி அனைத்தும் உங்களிடம் நடைமுறையில் வரும். ஒரு வெற்றி ரூபமாக, ஆமாம், இது உங்களுக்கு நிகழும் என நீங்கள் கூறமாட்டீர்கள். ஆனால், உங்களின் வழிகாட்டல்கள் இயல்பாக அவர்களை வெற்றியடையச்; செய்யும். அப்போது மட்டுமே பிரஜைகள் இலகுவாக உருவாக்கப்படுவார்கள். அவர்கள் எங்கும் இருந்து வெளிவந்து உங்களிடம் வருவார்கள். இந்த வெற்றிக்குரிய பாகம் இப்போது தொடரும். ஆனால் நீங்கள் முதலில் மிக சக்திசாலிகள் ஆகவேண்டும். அதனால் நீங்கள் அந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அப்போது மட்டுமே வெளிப்படுத்துகை நிகழும். இல்லாவிட்டால், வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியவர்கள் அந்த வெற்றியில் தாமே அகப்பட்டுக் கொண்டால், என்ன நிகழும்? எனவே, இந்த விடயங்கள் அனைத்தும் இங்கேயே ஆரம்பிக்க வேண்டும். தந்தையின் புகழ், அவர் சத்திரசிகிச்சை நிபுணர், அவர் பொறியியலாளர், அவர் சட்டத்தரணி, அவரே நீதிபதி என்பதாகும். அனைவரும் இதை நடைமுறையில் அனுபவம் செய்வார்கள். அப்போது மட்டுமே அனைவரின் புத்தியும் எங்கும் இருந்து நீக்கப்பட்டு, இந்தத் திசைக்கு வரும். இப்போது, பெரிய சனக்கூட்டம் உங்களிடம் வரப்போகிறது. இந்தக் காட்சியையே பாப்தாதா பார்க்கிறார். சிலவேளைகளில், அவர் இந்த நிகழ்காலக் காட்சியைப் பார்க்கிறார். இவற்றில் பெரியதொரு வேறுபாடு காணப்படுகிறது. நீங்கள் யார்? தந்தைக்கு அது தெரியும். நீங்கள் ஒருபோதும் நினைக்காத, கனவிலும் நினைத்திராத மிக, மிக அற்புதமான விடயங்கள் இடம்பெறப் போகின்றன. தற்சமயம் ஒரு திரைச்சேலை சிலவேளைகளில் சிறிதளவு அகப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல், இதுவும் சிறிதளவு அகப்பட்டுள்ளது, அவ்வளவே. நீங்கள் ஒரு கொடியை ஏற்றும்போது, சிலவேளைகளில் அது எங்கேயாவது அகப்பட்டு நின்றுவிடுகிறது. அதேபோல், தற்சமயம் அனைத்தும் சிறிதளவு எங்கேயாவது அகப்பட்டு நின்றுள்ளது. நீங்கள் யாராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், நீங்கள் மிகவும் மகத்தானவர்கள். உங்களின் சிறப்பியல்புகள் வெளிப்படுத்தப்படும்போது மட்டுமே நீங்கள் விசேடமான இஷ்ட தெய்வங்கள் ஆகுவீர்கள். இறுதியில், தேவர்களின் மாலையும் வெளிப்படப் போகிறது. ஆனால், முதலில் சிறிய தாக்கூர்கள் (இறை விக்கிரகங்கள்) அலங்கரிக்கப்பட்டு தயார் ஆகவேண்டும். அதன்பின்னர் பக்தர்கள் வருவார்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா திருப்தியானவராகவும் மலர்ச்சியானவராகவும் இருந்து, உங்களின் சொந்த ஓய்வைத் தியாகம் செய்து சேவை செய்வீர்களாக.

ஒரு சேவையாளர் என்பவர் தனது சொந்த ஓய்வை இரவு பகலாகத் தியாகம் செய்து, சேவையிலும் ஓய்வை அனுபவம் செய்வார். இத்தகைய ஆத்மாக்களுடன் தொடர்பில் வருபவர்கள் அல்லது அவர்களுடன் வாழ்பவர்கள் அல்லது அவர்களுடன் ஓர் உறவுமுறையில் வருபவர்கள், குளிர்மை, சக்தி, அமைதியின் அருவியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போல் நெருக்கத்தை அனுபவம் செய்வார்கள். அவர்கள் மேன்மையான நடத்தைகளைக் கொண்ட சேவையாளர்கள் ஆகுவார்கள். அனைவரின் ஆசைகளையும் எல்லா வேளையும் பூர்த்தி செய்யும் காமதேனு ஆகுவார்கள். இத்தகைய சேவையாளர்கள் இயல்பாகவே மலர்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.

சுலோகம்:
ஞான சொரூபம் ஆகுவதற்கு, ஒவ்வொரு கணமும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். தந்தைக்கும் கல்விக்கும் சமமான அன்பு இருக்க வேண்டும்.