09.02.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    20.11.85     Om Shanti     Madhuban


சங்கமயுக பிராமணர்களின் அழகான, தனித்துவமான, மேன்மையான உலகம்.


இன்று, பிராமணர்களின் படைப்பாளரான தந்தை, தனது சிறிய, அழகான, அலௌகீக உலகைப் பார்க்கிறார். இந்த பிராமண உலகம், சத்தியயுக உலகத்துடன் ஒப்பிடும்போது அதிகபட்ச அழகும் தனித்துவமும் வாய்ந்தது. இந்த அலௌகீக உலகின் பிராமண ஆத்மாக்கள் அதிமேன்மையானவர்களும் விசேடமானவர்களும் ஆவார்கள். இந்த பிராமண ரூபம், தேவ ரூபத்தை விட அதிவிசேடமானது. அதன் தனித்துவமே, இந்த உலகின் புகழ்ச்சி ஆகும். இந்த உலகின் ஒவ்வோர் ஆத்மாவும் விசேடமானவர். ஒவ்வோர் ஆத்மாவும் சுய இராச்சிய அரசர் ஆவார். ஒவ்வோர் ஆத்மாவிடமும் விழிப்புணர்வின் திலகம், அழியாத திலகம், சுய இராச்சிய திலகம் உள்ளது. ஒவ்வோர் ஆத்மாவும் இறைவனின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே, ஆத்மாக்களான உங்கள் அனைவரிடமும் இந்த அழகிய உலகின் கிரீடமும் சிம்மாசனமும் திலகமும் உள்ளன. கல்பம் முழுவதும் இத்தகையதோர் உலகை நீங்கள் எப்போதாவது பார்த்துள்ளீர்களா அல்லது கேட்டுள்ளீர்களா? இந்த உலகில் ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் ஒரே தந்தையே இருக்கிறார். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்;. அவர்களுக்கு ஒரே மொழியும் ஞானமும் உள்ளன. அதாவது, உங்களிடம் வாழ்க்கையில் ஒரே மேன்மையான இலக்கும், ஒரே மனோபாவமும் ஒரே பார்வையும் ஒரே தர்மமும் ஒரே இறை கர்மமும் உள்ளன. இந்த உலகம் அழகாக இருப்பதைப் போன்று சிறியதாகவும் உள்ளது. இந்த முறையில், பிராமண ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் உங்களின் மனங்களில் இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள்: எமது சிறிய உலகம் தனித்துவமானதும் மிகவும் அழகானதும் ஆகும். நீங்கள் இந்தப் பாடலைப் பாடுகிறீர்களா? இந்தச் சங்கமயுக உலகைப் பார்க்கும்போது நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? இது தனித்துவமான உலகம் ஆகும். இந்த உலகின் நாளாந்த நேர அட்டவணையும் தனித்துவமானது. உங்களிடம் உங்களின் சொந்த இராச்சியமும் உங்களின் சொந்த ஒழுங்குமுறைகளும் உங்களின் சொந்த நடைமுறை சம்பிரதாயங்களும் உள்ளன. ஆனால் அவை அழகான நடைமுறைகள். அன்பும் அழகானது. நீங்கள் இத்தகைய உலகில் வாழும் பிராமண ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் இந்த உலகில் வாழ்கிறீர்கள், அல்லவா? நீங்கள் ஒருபோதும் உங்களின் உலகை விட்டு மீண்டும் பழைய உலகிற்குத் திரும்பிச் செல்வதில்லை, அல்லவா? இதனாலேயே, பழைய உலகிலுள்ள மக்களால் இந்த பிராமணர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. பிரம்மாகுமாரிகளின் அனைத்தும் அவர்களுக்கே உரியது, அவர்களிடம் சொந்த ஞானம் உள்ளது என அவர்கள் சொல்கிறார்கள். உங்களின் உலகம் புதியதாக இருப்பதனால், அனைத்தும் புதியதாகவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும், அல்லவா? நீங்கள் அனைவரும் உங்களுக்குள் பாருங்கள்: உங்களிடம் புதிய எண்ணங்களும் புதிய ஞானமும் புதிய உலகின் புதிய கர்மங்களும் உள்ளனவா? இந்தளவிற்கு நீங்கள் தனித்துவமானவர்கள் ஆகிவிட்டீர்களா? பழையவை எதுவும் எஞ்சியிருக்கவில்லை, அல்லவா? பழைய விடயங்களின் சிறிதளவு சுவடேனும் இருந்தால், அது உங்களைப் பழைய உலகிற்குக் கவர்ந்து செல்லும். மேன்மையான உலகில் இருந்து நீங்கள் கீழான உலகிற்குச் செல்வீர்கள். அது உயர்ந்ததாக, அதாவது, மேன்மையானதாக இருப்பதனால், அவர்கள் சுவர்க்கத்தை மேலேயும் நரகத்தைக் கீழேயும் காட்டுகிறார்கள். சங்கமயுக சுவர்க்கம் சத்தியயுக சுவர்க்கத்தை விட அதி உயர்ந்தது. ஏனெனில், நீங்கள் இப்போது இரண்டு உலகங்களிலும் ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். இங்கு, அனைத்தையும் பார்த்து அறிந்து கொள்ளும்போது, நீங்கள் பற்றற்றவராகவும் அன்பானவராகவும் ஆகுகிறீர்கள். இதனாலேயே, மதுவனம் சுவர்க்கமாக அனுபவம் செய்யப்படுகிறது. நீங்கள் மக்களிடம், சுவர்க்கத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், இப்போதே பாருங்கள் எனக் கூறுகிறீர்கள். அங்கு, நீங்கள் சுவர்க்கத்தைப் பற்றிப் பேச மாட்டீர்கள். இப்போது நீங்கள் போதையுடன் பிரகாசத்துடன், நாம் சுவர்க்கத்தைக் கண்டுள்ளோம்! எனக் கூறுகிறீர்கள். நீங்கள் மக்களுக்குச் சவால் விடுக்கிறீர்கள்: நீங்கள் சுவர்க்கத்தைக் காண விரும்பினால், எங்களிடம் வந்து, அதைப் பாருங்கள். நீங்கள் இதைப் பற்றி இவ்வாறே பேசுகிறீர்கள், அல்லவா? முதலில், சுவர்க்கத்தின் தேவதைகள் மிகவும் அழகானவர்கள் என நீங்கள் நினைத்ததுண்டு, செவிமடுத்ததுண்டு. ஆனால் அவர்களை யாரும் கண்டதில்லை. சுவர்க்கத்தில் இதுவும் இதுவும் இருக்கும். நீங்கள் அதைப் பற்றி அதிகம் செவிமடுத்துள்ளீர்கள். ஆனால் இப்போது நீங்களே சுவர்க்க உலகை வந்து அடைந்துள்ளீர்கள். நீங்களே சுவர்க்க தேவதைகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் அவலட்சணத்தில் இருந்து அழகானவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்போது இறக்கைகளைப் பெற்றுள்ளீர்கள், அல்லவா? நீங்கள் இத்தகைய தனித்துவமான ஞானத்தினதும் யோகத்தினதும் இறக்கைகளைப் பெற்றுள்ளீர்கள். அதன் மூலம் உங்களால் மூவுலகங்களுக்கும் பயணம் செய்ய முடியும். இத்தகைய துரித கதியில் செல்வதற்கான வழிமுறைகள் விஞ்ஞானிகளிடமும் கிடையாது. நீங்கள் அனைவரும் இறக்கைகளைப் பெற்றுள்ளீர்களா? எவரும் கைவிடப்படவில்லை, அல்லவா? இந்த உலகின் புகழானது, பிராமண உலகில் எந்தக் குறையும் இல்லை என்பதே ஆகும். இதனாலேயே, தந்தையைக் கண்டடைந்ததால், நாம் அனைத்தையும் பெற்று விட்டோம் என்ற புகழ் உள்ளது. ஓர் உலகத்திற்கு மட்டுமன்றி, நீங்கள் மூன்று உலகங்களுக்கும் அதிபதிகள் ஆகியுள்ளீரகள். இந்த உலகின் ஞாபகார்த்தம், அனைவரும் சதா தொடர்ந்து ஊஞ்சல்களில் ஆடுவதே ஆகும். ஊஞ்சல்களில் ஆடுதல் பாக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்த உலகின் சிறப்பியல்பு என்ன? சில வேளைகளில் நீங்கள் அதீந்திரிய சந்தோஷம் என்ற ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். சிலவேளைகளில் நீங்கள் அமைதி ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். சிலவேளைகளில் நீங்கள் ஞான ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். நீங்கள் இறைமடி என்ற ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். இறைமடியில் இருத்தல் என்றால் அன்பிலே திளைத்திருக்கும் ஸ்திதியில் ஆடுவதாகும். நீங்கள் மடியில் முற்றாக அமிழ்ந்திருப்பதைப் போன்று, நீங்கள் இறை மடியில் அமிழ்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அன்பிலே உங்களை மறந்துள்ளீர்கள். இந்த அலௌகீக மடியானது, ஒரு விநாடியில் பல பிறவிகளுக்கான வலியையும் துன்பத்தையும் மறக்கச் செய்கிறது. எனவே, தொடர்ந்து சகல ஊஞ்சல்களிலும் தொடர்ந்து ஆடுங்கள்.

உங்களின் கனவுகளிலேனும், நீங்கள் இத்தகையதோர் உலகிற்கான உரிமை உடையவர் ஆகுவீர்கள் என எப்போதாவது நினைத்தீர்களா? இன்று, பாப்தாதா தனது அழகான உலகைப் பார்க்கிறார். நீங்கள் இந்த உலகை விரும்புகிறீர்களா? நீங்கள் அதை நேசிக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் சிலவேளைகளில் அந்த உலகில் ஒரு பாதத்தையும் இந்த உலகில் ஒரு பாதத்தையும் வைப்பதில்லை, அல்லவா? நீங்கள் 63 பிறவிகளாக இந்த உலகைப் பார்த்து, அனுபவம் செய்துள்ளீர்கள். நீங்கள் எதைப் பெற்றீர்கள்? நீங்கள் எதையாவது பெற்றீர்களா அல்லது எதையாவது இழந்தீர்களா? நீங்கள் உங்களின் சரீரங்களை இழந்தீர்கள். மனதின் அமைதியையும் சந்தோஷத்தையும் தொலைத்தீர்கள். நீங்கள் உங்களின் செல்வத்தையும் இழந்தீர்கள். நீங்கள் சகல உறவுமுறைகளையும் இழந்தீர்கள். தந்தை உங்களுக்குக் கொடுத்த அழகான சரீரங்களை நீங்கள் எங்கே தொலைத்தீர்கள்? நீங்கள் பணத்தைச் சேமித்தால், அது கறுப்புப் பணம். தூய்மையான, சுத்தமான பணம் எங்கே சென்றது? உங்களிடம் சிறிது பணம் இருந்தாலும், அதில் எந்தவிதப் பயனும் இல்லை. நீங்கள் உங்களைக் கோடீஸ்வரர்கள் என்று அழைக்கிறீர்கள். ஆனால் உங்களால் அதைக் காட்ட முடியுமா? எனவே, நீங்கள் அனைத்தையும் இழந்தீர்கள். உங்களின் புத்திகள் இப்போதும் ஈர்க்கப்பட்டால், அதை என்னவென்று சொல்வது? அதை விவேகம் என்று சொல்ல முடியுமா? ஆகவே, எப்போதும் உங்களின் இந்த மேன்மையான உலகை உங்களின் புத்தியில் வைத்திருங்கள். சதா இந்த உலகின் சிறப்பியல்புகளை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து சக்திசாலி ஆகுங்கள். நினைவின் சொரூபங்கள் ஆகுங்கள். நீங்கள் இயல்பாகவே பற்றை வென்றவர்கள் ஆகுவீர்கள். பழைய உலகின் எதையும் உங்களின் புத்திகளுக்குள் எடுத்துக் கொள்ளாதீர்கள். எடுப்பதெனில், ஏமாற்றம் அடைதல் என்று அர்த்தம். ஏமாற்றம் அடைதல் என்றால் துன்பத்தை எடுத்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். எனவே, நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள்? மேன்மையான உலகிலா அல்லது பழைய உலகிலா? எப்போதும் அது என்ன, இது என்ன என்ற வேறுபாட்டை உங்களின் விழிப்புணர்வில் வெளிப்படும் வண்ணம் மிகத் தெளிவாக வைத்திருங்கள். அச்சா.

சிறிய, அழகான உலகில் வாழும் விசேடமான பிராமண ஆத்மாக்களுக்கும், சதா இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மாக்களுக்கும், சதா ஊஞ்சல்களில் ஆடும் ஆத்மாக்களுக்கும், இறைவனிடம் அன்பு கொண்டு, சதா பற்றற்று இருக்கும் குழந்தைகளுக்கும், தயவுசெய்து இறைவனின் நினைவுகளையும் இறைவனின் அன்பையும் நமஸ்காரங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பாப்தாதா சேவையாளர் ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:
சேவையாளர்கள் என்றால் துறவி மற்றும் தபஸ்வி ஆத்மாக்கள் என்று அர்த்தம். நீங்கள் எப்போதும் சேவைக்கான பலனைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், உங்களின் தியாகத்தாலும் தவத்தாலும் நீங்கள் சதா தொடர்ந்து முன்னேறுவீர்கள். உங்களை விசேட ஆத்மாக்களாகக் கருதுவதன் மூலம், சேவை செய்வதற்கும், எப்போதும் விசேட சேவையின் அத்தாட்சியைக் கொடுப்பதற்குமான இலக்கை வைத்திருங்கள். உங்களின் இலக்கு எத்தனை உறுதிவாய்ந்ததோ, அந்தளவிற்குக் கட்டடமும் உறுதியானதாக இருக்கும். எனவே, எப்போதும் உங்களைச் சேவையாளர்களாகக் கருதியவண்ணம் தொடர்ந்து முன்னேறுங்கள். தந்தை உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதைப் போன்று, நீங்கள் உங்களின் பிரஜைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்போதும் தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதுடன், தொடர்ந்து சேவையையும் தடைகளில் இருந்து விடுபடச் செய்யுங்கள். அனைவரும் சேவை செய்கிறார்கள். ஆனால், உங்களின் சேவை தடைகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். இதிலேயே நீங்கள் ஓரிலக்கத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், மாணவர்களான நீங்கள் அனைவரும் தடைகளில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். எந்தவிதமான தடைகளின் அலைகளும் இருக்கக்கூடாது. சூழல் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். இதுவே தடைகளில் இருந்து விடுபட்ட ஆத்மாவாக இருத்தல் எனப்படுகிறது. எந்தவிதமான தடைகளும் வராதவாறு நினைவின் சூழலை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டிருங்கள். கோட்டை இருக்கும்போது எதிரிகளால் உள்ளே வரமுடியாது. எனவே, தடைகளில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள். தடைகளில் இருந்து விடுபட்ட சேவையாளர்கள் ஆகுங்கள்.

பாப்தாதா வெவ்வேறு குழுக்களைச் சந்திக்கிறார்:
சேவை செய்து, திருப்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வெறுமனே சேவை செய்ய வேண்டியதில்லை. ஆனால் திருப்தி அடையும் சேவையைச் செய்யுங்கள். நீங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள். ஆசீர்வாதங்கள் நிறைந்த சேவை உங்களுக்கு இலகுவான வெற்றியைக் கொடுக்கும். நீங்கள் திட்டங்களுக்கேற்ப சேவை செய்ய வேண்டும். அதிகளவு சேவை செய்ய வேண்டும். அதைச் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் செய்யுங்கள். ஆனால் நிச்சயமாக இதில் கவனம் செலுத்துங்கள்: நான் செய்யும் சேவையில் நான் ஆசீர்வாதங்களைப் பெற்றேனா? அல்லது, நான் கடினமாக உழைத்தேனா? எங்கு ஆசீர்வாதங்கள் உள்ளதோ, அங்கு நீங்கள் கடினமாக உழைப்பதாக உணரமாட்டீர்கள். எனவே, நீங்கள் யாருடன் தொடர்பில் வந்தாலும், அவரிடமிருந்து நீங்கள் தொடர்ந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளும் இலக்கை இப்போது வைத்திருங்கள். நீங்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறும்போது, உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் அரைக்கல்பத்திற்குத் தொடர்ந்து ஆசீர்வாதங்களை வழங்கும். உங்களின் விக்கிரகங்களிடம் அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வருகிறார்கள், அல்லவா? அவர்கள் தேவ விக்கிரகங்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குச் செல்கிறார்கள், அல்லவா? எனவே, நீங்கள் இந்த வேளையில் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். இதனாலேயே, நீங்களும் தொடர்ந்து உங்களின் விக்கிரகங்களினூடாக ஆசீர்வாதங்களை வழங்குகிறீர்கள். விழாக்களையும் பேரணிகளையும் நடத்துங்கள். விஐபி களுக்கும் ஐபி களுக்கும் சேவைசெய்யுங்கள். அனைத்தையும் செய்யுங்கள். ஆனால் ஆசீர்வாதங்கள் நிறைந்த சேவையைச் செய்யுங்கள். (ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு என்ன வழிமுறையைப் பயன்படுத்த வேண்டும்?) ஹா ஜி என்ற பாடம் உறுதியாக இருக்க வேண்டும். எவருக்கும் இல்லை எனக் கூறி, அவர் தைரியத்தை இழக்கச் செய்யாதீர்கள். உதாரணமாக, அவர்கள் தவறாக இருந்தாலும், உடனடியாக, நீங்கள் தவறு எனச் சொல்லாதீர்கள். அனைத்திற்கும் முதலில், அவர்களை ஊக்கப்படுத்தி தைரியத்தைக் கொடுங்கள். அவருக்கு ஆம் என்று சொல்லுங்கள். அதன்பின்னர் அவருக்கு விளங்கப்படுத்துங்கள். அவர் புரிந்து கொள்வார். நீங்கள் உடனடியாக இல்லை என்று சொன்னால், அவரிடமிருந்த சிறிதளவு தைரியமும் இல்லாமல் போய்விடும். தவறு தவறாகவே இருக்கலாம். ஆனால், அவரைப் பிழை என நீங்கள் சொன்னால், அவர் ஒருபோதும் தன்னைப் பிழையாகக் கருதவே மாட்டார். எனவே, அனைத்திற்கும் முதலில் அவருக்கு ஆம் என்று சொல்லுங்கள். அவரின் தைரியத்தை அதிகரியுங்கள். பின்னர் அவரால் தன்னையே நிர்ணயிக்க முடியும். அவருக்கு மரியாதை கொடுங்கள். இந்த வழிமுறையைப் பின்பற்றுங்கள். அவர் தவறாகவே இருந்தாலும், அவர் நல்லவர் என்றே சொல்லுங்கள். முதலில் அவருக்குத் தைரியம் ஏற்பட வேண்டும். யாராவது விழுந்துவிட்டால், அவரை நீங்கள் மேலும் தள்ளிவிடுவீர்களா அல்லது அவரைத் தூக்கி விடுவீர்களா? முதலில் அவருக்கு ஏதாவது ஆதாரத்தைக் கொடுத்து, அவர் எழுந்திருக்கச் செய்யுங்கள். இதுவே பெருந்தன்மை எனப்படுகிறது. ஒத்துழைப்பவர்களைத் தொடர்ந்து ஒத்துழைக்கச் செய்யுங்கள். நீங்கள் முன்னால் இருக்கிறீர்கள். நானும் முன்னால் இருக்கிறேன். ஒன்றாகத் தொடர்ந்து முன்னேறுங்கள். ஒற்றுமையாகத் தொடர்ந்து முன்னேறுங்கள். வெற்றி ஏற்படும். அத்துடன் நீங்களும் திருப்திக்கான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். இத்தகைய ஆசீர்வாதங்களைப் பெறுவதில் மகத்தானவர்கள் ஆகுங்கள். நீங்கள் இயல்பாகவே சேவையில் மகத்தானவர்கள் ஆகுவீர்கள்.

சேவாதாரிகளிடம்:
சேவை செய்யும்போது, நீங்கள் உங்களை சதா கர்மயோகி ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதை அனுபவம் செய்கிறீர்களா? அல்லது, நீங்கள் கர்மத்தைச் செய்யும்போது, உங்களின் நினைவும் குறைந்து, உங்களின் புத்திகளும் அந்த வேலையிலேயே அதிகமாக ஈடுபடுகின்றனவா? ஏனெனில், நினைவில் இருந்தவண்ணம் கர்மங்களைச் செய்யும்போது, நீங்கள் ஒருபோதும் அந்தப் பணியைச் செய்வதனால் களைப்படைய மாட்டீர்கள். நினைவில் இருந்தவண்ணம் கர்மங்களைச் செய்பவர்கள் சதா சந்தோஷத்தையே அனுபவம் செய்வார்கள். நீங்கள் கர்மங்களைச் செய்கிறீர்கள். அதாவது, நீங்கள் கர்மயோகிகளாகச் சேவை செய்கிறீர்கள், அல்லவா? கர்மயோகிகள் என்ற பயிற்சியைக் கொண்டிருப்பவர்கள், எப்போதும் தமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் ஒவ்வோர் அடியிலும் மேன்மையானது ஆக்குவார்கள். எதிர்காலக் கணக்கு எப்போதும் நிரம்பியிருக்கும். நிகழ்காலக் கணக்கு எப்போதும் மேன்மையானதாக இருக்கும். இத்தகைய கர்ம யோகிகளாக இருந்தவண்ணம் நீங்கள் சேவை செய்யும் உங்களின் பாகங்களை நடிக்கிறீர்களா? நீங்கள் மறப்பதில்லை, அல்லவா? மதுவனத்தில் சேவையாளர்கள் இருக்கிறார்கள். எனவே, மதுவனம் இயல்பாகவே உங்களுக்குத் தந்தையை நினைப்பூட்டும். நீங்கள் சகல பொக்கிஷங்கள் என்ற உங்களின் கணக்குகளைச் சேமித்துள்ளீர்கள், அல்லவா? நீங்கள் சதா நிறைந்திருக்கும் வகையில் அதிகளவில் சேமித்துள்ளீர்கள். சங்கமயுகத்தில், உங்களின் பற்றரிகள் எப்போதும் சக்தியூட்டப்பட்டிருக்கும். துவாபர யுகத்தில் இருந்தே பற்றரிகள் பலவீனம் அடையத் தொடங்குகின்றன. சங்கமயுகத்தில், அவை எப்போதும் நிறைந்திருப்பதுடன் எப்போதும் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும். எனவே, நீங்கள் மதுவனத்திற்கு உங்களின் பற்றரிகளை நிரப்புவதற்கு வருவதில்லை. ஆனால் நீங்கள் கொண்டாடவே வருகிறீர்கள். தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையே அன்பு உள்ளது. இதனாலேயே ஒருவரையொருவர் சந்திப்பதும் அவர் கூறுவதைக் கேட்பதும் சங்கமயுகப் பண்டிகையின் ஒரு பாகம் ஆகும். அச்சா.

இளைஞர் பேரணியின் வெற்றிக்காக பாப்தாதாவின் மேன்மையான வாசகங்கள் என்ற ஆசீர்வாதம்
நீங்கள் இளைஞர் பிரிவை உருவாக்கலாம். நீங்கள் எதைச் செய்தாலும், திருப்தியாக இருங்கள். திருப்தியும் வெற்றியும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த வாழ்க்கை சேவைக்காகவே. நீங்கள் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் ஒரு பணியைச் செய்தால், எந்தவிதப் பிரச்சனையும் கிடையாது. ஒரு நிகழ்ச்சி இருக்கும்போது, நீங்களே அதைச் செய்ய வேண்டும் என நினைத்தால், அது வேறுவிடயம். எவ்வாறாயினும், உங்களின் சொந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் நீங்கள் எதையாவது செய்ய விரும்பினால், அதில் பிரச்சனை இல்லை. நீங்கள் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும், யார் உங்களைப் பார்த்தாலும், அதில் சேவையே உள்ளது. வெறுமனே பேசுவது மட்டும் சேவை அல்ல. உங்களின் முகமும் மலர்ச்சியாக இருக்க வேண்டும். ஆன்மீக முகமும் சேவை செய்யும். ஆன்மீக சந்தோஷத்தின் பிரகாசத்தைக் காட்டுவதன் மூலம், சேவை செய்வதுடன் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் சந்தோஷமாக முன்னேறும் இலக்கைக் கொண்டிருங்கள். எவரும் கட்டாயத்தின் பேரில் சேவை செய்யக்கூடாது. ஒரு நிகழ்ச்சி உருவாக்கப்பட்டிருப்பதனால், அதை அவர்கள் செய்ய வேண்டும் என்பதாக இருக்கக்கூடாது. அவர்கள் தமது சொந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செய்வதே சிறந்தது. இது நல்லது.

யாருக்காயினும் எதையாவது செய்வதற்கு உற்சாகம் இல்லாவிட்டால், அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதில்லை. அது பரவாயில்லை. எவ்வாறாயினும், பொன்விழாவிற்கு முன்னர் சகல பிரதேசங்களையும் உள்ளடக்க வேண்டும் என்ற இலக்கம் உங்களுக்கு உள்ளது. எனவே, பாதயாத்திரையில் செல்பவர்கள் தமது சொந்தக் குழுக்களில் செல்வதைப் போன்று, பேரூந்தில் வருபவர்களும் இருக்க வேண்டும். பேரூந்துகளில் சென்று ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு பிரசேத்திலும் சேவை செய்த வண்ணம் அவர்களால் டெல்லியைச் சென்றடைய முடியும். இரண்டு வகையான குழுக்களை உருவாக்குங்கள். ஒரு குழு தொடர்ந்து பேரூந்தில் சென்று, அவர்கள் பயணிக்கும் வழியெங்கும் சேவை செய்பவர்கள். மற்றைய குழுவினர், பாதயாத்திரையில் செல்பவர்கள். அப்போது, அது இரட்டைச் சேவையாக இருக்கும். நீங்கள் இளைஞர்கள். உங்களால் இதைச் செய்ய முடியும், இல்லையா? அவர்கள் தமது சக்தியை எங்கேயாவது பயன்படுத்த வேண்டியுள்ளது! அந்தச் சக்தியைச் சேவையில் பயன்படுத்துவது நல்லதே. அப்போது இரண்டு நோக்கங்களும் நிறைவேறும். சேவையும் நிறைவேறும். நீங்கள் இதை பாத யாத்திரை என்று அழைக்கிறீர்கள். அதுவும் நிறைவேறும். வெவ்வேறு பிராந்தியங்களும் முன்கூட்டியே அவர்களின் நேர்காணலுக்கான ஆயத்தங்களைச் செய்தால், அந்த ஒலியானது இயல்பாகவே பரவும். எவ்வாறாயினும், இது நிச்சயமாக ஓர் ஆன்மீக யாத்திரையாகத் தென்பட வேண்டும். பாதயாத்திரை மட்டும் தென்படுவதாக இருக்கக்கூடாது. ஆன்மீகத்தினதும் சந்தோஷத்தினதும் பிரகாசமும் இருக்க வேண்டும். அப்போது புதுமையும் புலப்படும். இது ஏனையவர்களின் பேரணிகளைப் போன்று சாதாரணமானதாக இருக்கக்கூடாது. நீங்கள் ஒற்றை யாத்திரிகர்களாக அன்றி, இரட்டை யாத்திரிகர்களாகத் தோன்ற வேண்டும். நீங்கள் நினைவு யாத்திரையிலும் இருப்பவர்கள் அத்துடன் பாத யாத்திரையும் செய்பவர்கள். உங்களின் முகங்களில் இரட்டை யாத்திரைகளின் விளைவும் தென்பட்டால், அது நன்றாக இருக்கும்.

உலகின் அரசியல் தலைவர்களுக்கு அவ்யக்த பாப்தாதாவின் தெய்வீகச் செய்தி (04ஃ12ஃ85):
உலகிலுள்ள ஒவ்வொரு அரசியல் தலைவரும் நல்லாசிகளுடனும் தூய உணர்வுகளுடனும் தனது நாட்டையும் தனது நாட்டு மக்களையும் முன்னேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். எவ்வாறாயினும், அவர்களின் உணர்வுகள் மிக மேன்மையானதாக இருந்தாலும், இருக்க வேண்டிய அளவு நடைமுறை அத்தாட்சி காணப்படுவதில்லை. இது ஏன்? ஏனெனில், இன்றைய மக்களினதும் பெரும்பாலான தலைவர்களினதும் மனதின் உணர்வுகள், சேவைக்கான உணர்வுகள், அன்பான உணர்வுகள் அனைத்தும் சுயநலமான, பொறாமை மிக்க நோக்கங்களாக மாறிவிட்டன. அந்த அத்திவாரத்தை முடிப்பதற்கு, அவர்கள் சடப்பொருளின் சக்தியால், விஞ்ஞானத்தின் சக்தியால், உலக அறிவின் சக்தியால், அரசாங்க அதிகாரத்தின் சக்தியால் பல முயற்சிகளைச் செய்கிறார்கள். எவ்வாறாயினும், உண்மையான சக்தி, மனதின் உணர்வுகளை இலகுவாக மாற்றக்கூடிய ஆன்மீகச் சக்தியே ஆகும். அவர்கள் அதில் குறைந்தளவு கவனமே செலுத்துகிறார்கள். இதனாலேயே, மாறிய உணர்வுகளின் விதையை இல்லாமல் செய்ய முடிவதில்லை. அது குறுகிய காலத்திற்கு அடக்கிவைக்கப்படுகிறது. பின்னர், காலத்திற்கேற்ப, அது மேலும் தீவிர வடிவில் வெளிப்படுகிறது. இதனாலேயே, ஆன்மீகக் குழந்தைகளுக்கு (ஆத்மாக்கள்) ஆன்மீகத் தந்தையின் செய்தியானது: சதா உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, ஆன்மீகத் தந்தையுடன் ஓர் உறவுமுறையைப் பேணி, அவரிடமிருந்து ஆன்மீக சக்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களின் சொந்த மனதின் தலைவர் ஆகுங்கள். அப்போது உங்களால் ஓர் அரசியல் தலைவராகி, மற்றவர்களின் மனங்களின் உணர்வுகளை மாற்ற முடியும். உங்களின் மனதின் எண்ணங்களும் மக்களின் நடைமுறைக் கர்மாவும் ஒத்ததாக ஆகும். இரண்டின் ஒத்துழைப்பினாலும், உங்களால் வெற்றியின் நடைமுறை அத்தாட்சியை அனுபவம் செய்யக்கூடியதாக இருக்கும். தன்னையே ஆளுவதற்கான உரிமை உடைய ஒருவரால் மட்டுமே சதா இராச்சியத்தை ஆள்வதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகமுடியும். அந்த சுய இராச்சியம் உங்களின் ஆன்மீகத் தந்தையால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பிறப்புரிமையின் சக்தியால், நீங்களும் சதா உண்மையுள்ளவராக இருக்கும் சக்தியை அனுபவம் செய்வதுடன் எப்போதும் வெற்றிநிறைந்தவர் ஆகுவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சதா சக்திநிறைந்த ஆத்மாவாகி, ஒன்றுகூடலில் இருக்கும்போது, உங்களின் இலக்கையும் அதன் தகைமைகளையும் சமம் ஆக்குவீர்களாக.

ஒன்றுகூடலில் ஒருவரையொருவர் பார்க்கும்போது, உங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படலாம். ஆனால், கவனக்குறைவும் ஏற்பட வாய்ப்புண்டு. இவர் இதைச் செய்கிறார், எனவே நானும் இவ்வாறு செய்தால் என்ன? என நீங்கள் நினைப்பீர்கள். எனவே, மேன்மையானவர் ஆகுவதற்கான உதவியை ஒன்றுகூடலில் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னரும், அனைத்திற்கும் முதலில், விசேட கவனம் செலுத்துவதுடன், உங்களைச் சம்பூரணமானவராக்கி, ஒரு மாதிரி ஆகுகின்ற இலக்கைக் கொண்டிருங்கள். நான் அதைச் செய்து, மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இந்த இலக்கானது மீண்டும் மீண்டும் வெளிப்பட வேண்டும். தொடர்ந்து உங்களின் இலக்கையும் அதன் தகைமைகளையும் ஒத்திசையச் செய்யுங்கள். நீங்கள் சக்திநிறைந்தவர் ஆகுவீர்கள்.

சுலோகம்:
கடைசிகாலப் பகுதியில் விரைவாகச் செல்வதற்கு, உங்களின் நேரத்தைச் சாதாரணமான அல்லது வீணான எண்ணங்களில் வீணாக்காதீர்கள்.