10.02.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     19.04.84     Om Shanti     Madhuban


அன்பான உணர்வுகளைக் கொண்டிருப்பதுடன் ஞானியாகவும் உள்ள ஆத்மாக்களின் தகைமைகள்.


இன்று, எந்தக் குழந்தைகள் தமது பக்தி உணர்வுகளுடன் தந்தையிடம் வந்துள்ளார்கள் என்றும், எந்தக் குழந்தைகள் தந்தையை இனங்கண்டு, அவரிடமிருந்து பேறுகளைப் பெறுவதற்கு வந்துள்ளார்கள், அதாவது, மேன்மை அடையும் நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்றும் பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் பார்த்தார். இரு வகையான குழந்தைகளும் தந்தையின் வீட்டை வந்தடைந்துள்ளார்கள். அன்பான உணர்வுகளைக் கொண்டிருப்பவர்கள், தமது கொள்ளளவிற்கேற்பத் தமது அன்பின் பலனைப் பெறுகிறார்கள். அது சந்தோஷம், அமைதி, ஞானம், அன்பு என்ற பலனின் ரூபத்தில் உள்ளது. அவர்கள் பெறுவதையிட்டு சந்தோஷம் அடைகிறார்கள். எவ்வாறாயினும், அவர்களின் பக்தி உணர்வுகளுக்கும், தந்தையின் அறிமுகத்தைப் பெற்ற பின்னர் தந்தைக்காகவும் குடும்பத்திற்காகவும் உள்ள உணர்வுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. பக்தி உணர்வுகள் குருட்டு நம்பிக்கைக்குரிய உணர்வுகள் ஆகும். அது மறைமுகமாகச் சந்திக்கும் உணர்வாகும். அது தற்காலிகமான சுயநலமான அன்பின் உணர்வாகும். தற்சமயம் ஞானத்தின் அடிப்படையில் குழந்தைகளிடம் உள்ள அன்பான உணர்வு, பக்தி மார்க்கத்தின் உணர்வை விட அதிகளவு மேன்மையானது. ஏனெனில், அது தேவாத்மாக்களுக்கு மறைமுகமானது அல்ல. ஆனால் தந்தையிடம் நேரடியாக அன்பு கொள்வதாகும். இனங்காணுதல் உள்ளது. ஆனால், பக்தியின் அடிப்படையில் இனங்காண்பதற்கும் ஞானத்தின் அடிப்படையில் இனங்காண்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஞானத்தினூடாக இனங்காணுதல் என்றால் தந்தையை, அவரின் குணங்களையும் அவர் என்ன செய்கிறார் என்பதையும் அறிந்து கொள்வதாகும். அத்துடன் உங்களையும் உங்களின் குணங்களையும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்வதாகும். அதாவது, தந்தைக்குச் சமமாக ஆகுதல் ஆகும். நீங்கள் அனைவரும் அவரை அறிவீர்கள். ஆனால், பக்தி உணர்வுகளின் அடிப்படையில் அவரை அறிந்து கொள்வதற்கும் ஞானத்தின் அடிப்படையில் அவரை அறிந்து கொள்வதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, இன்று, பாப்தாதா பல குழந்தைகளின் அன்பான உணர்வுகளைப் பார்த்தார். உங்களின் அன்பான உணர்வுகளினூடாகத் தந்தையை அறிந்து கொள்வதாலும் உங்களால் பலனைப் பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறாயினும், முழுமையான ஆஸ்திக்கான உரிமையைக் கோருவதற்கும், வெறுமனே ஆஸ்திக்கான உரிமையைக் கோருவதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. சுவர்க்கத்தின் பாக்கியமும், ஜீவன்முக்திக்கான உரிமையும் அன்பான உணர்வுகளைக் கொண்டிருப்பவர்களாலும் ஞானத்தைக் கொண்டிருப்பவர்களாலும் இருவகையினராலும் பெறப்படுகிறது. பேற்றில் உள்ள ஒரேயொரு வேறுபாடு, அந்தஸ்தே ஆகும். இருவகையினரும் சந்தோஷத்துடன் பாபா என்று கூறுகின்றனர். எனவே, அவர்கள் நிச்சயமாக, பாபா என்று கூறுவதற்கும் பாபாவைப் புரிந்து கொள்வதற்குமான பலனை ஆஸ்தியாகப் பெறுவார்கள். அனைவரும் ஜீவன்முக்திக்கான உரிமையைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவார்கள். ஆனால், எட்டு இரத்தினங்களுக்கும் 108 இரத்தினங்களுக்கும் 16000 இற்கும் 900000 இற்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. 16000 மணிமாலை உள்ளது. 108 மணிமாலை உள்ளது. 108 மணிமாலையில் எட்டு விசேடமானவர்கள் உள்ளார்கள். அனைவரும் மாலையின் மணிகள் ஆகுகிறார்கள். இரண்டு வகையினரும் மணிகள் என்றே அழைக்கப்படுவார்கள். 16000 மாலையின் மணிகளும் சந்தோஷத்துடனும் போதையுடனும், எனது பாபா, எனது இராச்சியம் என்றே கூறுவார்கள். நீங்கள் இராஜ சிம்மாசனத்திற்கான உரிமையை அல்லது இராஜ அந்தஸ்தை, இராஜ குடும்பத்திற்கான உரிமையை அல்லது இராஜ குடும்பத்தினருடன் தொடர்பில் வருவதற்கான உரிமையைக் கோருவீர்களா என்பதிலேயே வேறுபாடு ஏற்படுகிறது.

பக்தி உணர்வுகளைக் கொண்ட ஆத்மாக்களும் ஞானி ஆத்மாக்களும் போதையைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இறைவனின் அன்பைப் பற்றிய மிக நல்ல விடயங்களைக் கூறுகிறார்கள். அன்பின் சொரூபங்களாக இருப்பதனால், அவர்கள் உலக உணர்வு அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். என்னுடையவர் ஒரேயொரு தந்தை மட்டுமே என்ற மிக நல்ல அன்பான பாடல்களையும் அவர்கள் பாடுகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் சக்தி சொரூபங்கள் இல்லை. அவர்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஆனால், சிறியதொரு மாயையின் தடை வந்தாலும், அன்பான உணர்வுகளைக் கொண்டுள்ள ஆத்மாக்கள் மிக விரைவாகப் பயப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களிடம் ஞானச் சக்தி இல்லை. ஒரு நிமிடம், அவர்கள் மிகவும் சந்தோஷமாகத் தந்தையின் பாடல்களைப் பாடுவதை நீங்கள் காண்பீர்கள். அடுத்த நிமிடம், மாயையின் சிறியதொரு தாக்குதலும் அவர்களின் சந்தோஷப் பாடல்களை நான் என்ன செய்வது, நான் எவ்வாறு இதைச் செய்வது? என்ன நிகழும்? எவ்வாறு அது நிகழும்? என்று மாற்றிவிடும். என்ன? ஏன்? போன்ற பாடல்களைப் பாடுவதில் அவர்கள் என்றும் சளைத்தவர்கள் இல்லை. எவ்வாறாயினும், ஞானி ஆத்மாக்கள், தங்களைத் தந்தையுடன் இருக்கும் மாஸ்ரர் சர்வசக்திவான்களாகக் கருதுவதனால், அவர்களால் மாயையை வெல்ல முடிகிறது. அவர்கள் ஏன்? என்ன? என்ற பாடல்களைப் பாடுவதில்லை. அன்பான உணர்வுகளைக் கொண்டுள்ள ஆத்மாக்கள் அன்பு சக்தியுடன் தொடர்ந்து முன்னேறுகிறார்கள். மாயைக்கு முகங்கொடுக்கும் சக்தி அவர்களிடம் இருப்பதில்லை. ஞானி ஆத்மாக்களால் சமமானவர் ஆகும் இலக்குடன் சகல சக்திகளையும் அனுபவம் செய்ய முடியும். அத்துடன் அவர்களால் மாயையை எதிர் கொள்ளவும் முடியும். இப்போது உங்களையே கேட்டுப் பாருங்கள்: நான் யார்? நான் அன்பான உணர்வுகளைக் கொண்டதோர் ஆத்மாவா அல்லது நான் ஞானி ஆத்மாவா? அன்பான உணர்வுகளைக் கொண்டுள்ள ஆத்மாக்களைக் காண்பதில் பாப்தாதா களிப்படைகிறார். எனது பாபா! எனக் கூறுவதன் மூலம் அவர்கள் குறைந்தபட்சம் உரிமையையேனும் கோரியுள்ளார்கள். உரிமையைக் கோருவதன் மூலம், அவர்கள் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளார்கள். நீங்கள் முழுமையான எண்ணிக்கையைப் பெற்றாலும் பெறாவிட்டாலும், நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களின் முயற்சிகளுக்கேற்ப உங்களின் மடிகளை உங்களால் நிரப்பிக் கொள்ள முடியும். ஏனெனில், எனது பாபா என நீங்கள் கூறும்போது, சாவியைப் பிரயோகித்துள்ளீர்கள். வேறு எந்தச் சாவியும் கிடையாது. ஏனெனில் பாப்தாதாவே கடல் ஆவார். அவர் எல்லையற்றவர். முடிவற்றவர். எடுப்பவர்கள், எடுத்துக் களைத்துவிடுகிறார்கள். அருள்பவர் ஒருபோதும் களைப்படைவதில்லை. அவர் என்ன முயற்சியைச் செய்ய வேண்டியுள்ளது? அவர் உங்களுக்கு திருஷ்டி கொடுத்து, அதன் மூலம் சகல உரிமைகளையும் வழங்குகிறார். எடுப்பவர்களும் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால், கவனக்குறைவினால், அவர்கள் அனைத்தையும் இழந்துவிடுகிறார்கள். தமது சொந்தப் பலவீனத்தால் அதை இழந்தபின்னர், அவர்கள் அதை மீண்டும் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. இழப்பதும் பெறுவதும், பெறுவதும் இழப்பதும் என்ற முயற்சியால் அவர்கள் களைத்துவிடுகிறார்கள். அவர்கள் எச்சரிக்கையாகவும் புத்திசாலித்தனத்துடனும் இருந்தால், நிலையான பேற்றின் சொரூபங்கள் ஆகுவார்கள். உதாரணமாக, சத்தியயுகத்தில், உங்களுக்குச் சேவகம் செய்வதற்காக உங்களுடன் பணிப்பெண்கள் எப்போதும் இருப்பார்கள். அதேபோன்று, தந்தைக்குச் சமமாக இருக்கும் மேன்மையான, ஞானி ஆத்மாக்களுக்கு, சகல சக்திகளும் நற்குணங்களும் சகபாடிகளாகத் தமது பொறுப்பை சதா நிறைவேற்றும். எந்த சக்தியை நீங்கள் அழைத்தாலும், எந்த நற்குணத்தை நீங்கள் அழைத்தாலும், அது உங்களின் முன்னால் ஜீ ஹஸீர்(ஆமாம், எனது பிரபுவே) என வந்துநிற்கும். இத்தகைய சுய இராச்சிய அதிகாரிகளே உலக இராச்சியத்திற்கான உரிமையைக் கோருகிறார்கள். எனவே, இதைக் கடினமான பணியாக நீங்கள் உணர மாட்டீர்கள், அல்லவா? நீங்கள் ஒவ்வொரு சக்தியுடனும் ஒவ்வொரு நற்குணத்துடனும் சதா வெற்றியாளராக உங்களை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் நடிக்கும் ஒரு நாடகத்தில், இராவணன் தனது சகபாடிகளுக்குச் சவால் விடுப்பது போன்றும், சுய அதிபதிகளான பிராமண ஆத்மாக்கள் தமது சக்திகளாலும் நற்குணங்களாலும் சவால் விடுப்பது போன்றும் காட்டுவதைப் போன்று, அத்தகைய சுய அதிபதிகள் ஆகிவிட்டீர்களா? அல்லது, அவசியமான வேளையில் உங்களால் அந்தச் சக்திகளைப் பயன்படுத்த முடியவில்லையா? பலவீனமான அரசனுக்கு எவரும் கீழ்ப்படிய மாட்டார்கள். அந்த அரசனே மக்களுக்குக் கீழ்ப்படிய நேரிடும். துணிவானதோர் அரசன் அனைவரையும் தனது கட்டளைகளின்படி நடக்கச் செய்து இராச்சியத்தை அடைந்துவிடுவார். ஆகவே, இலகுவான விடயங்களைச் சிரமமாக்கிப் பின்னர் களைப்படைதல் உங்களின் கவனக்குறைவின் அடையாளம் ஆகும். எவரும் கீழ்ப்படியாத அரசனை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? சகித்துக் கொள்ளும் சக்தி எனக்குள் இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டுள்ளேன். ஆனால் அதை மிகவும் காலம் தாழ்த்தியே நான் நினைத்தேன் எனச் சிலர் கூறுகின்றனர். அந்த வேளையில், நீங்கள் அதை நினைத்தாலும், உங்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. அந்த வேளையில் நீங்கள் அதை அழைத்தீர்கள், ஆனால் அது அடுத்த நாளே வந்தது என்பதே அதன் அர்த்தம். எனவே, இது உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதலா? அது நிகழ்ந்துவிட்டது எனக் கூறுதல் என்றால் உங்களின் சக்திகள் உங்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றே அர்த்தம். சரியான வேளையில் சேவை செய்யாத சேவையாளரை என்னவென்று சொல்வீர்கள்? ஆகவே, சுயத்தின் அதிபதியாகி, சகல சக்திகளையும் நற்குணங்களையும் உங்களுக்காகவும் அனைவருக்காகவும் சேவையில் பயன்படுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அன்பான உணர்வுகளை மட்டும் கொண்டிருப்பவராக அன்றி, சக்திவாய்ந்தவராகவும் ஆகுங்கள். அச்சா. நீங்கள் பல்வகை ஆத்மாக்களின் ஒன்றுகூடலைக் காண்பதில் சந்தோஷப்படுகிறீர்கள், அல்லவா? மதுவனத்தைச் சேர்ந்தவர்கள் பல வகையான ஒன்றுகூடல்களைக் காண்கிறார்கள். பல்வகையான குழுக்கள் வருகின்றன. பாப்தாதாவும் பூந்தோட்டத்தில் பல்வகைகளைக் காண்பதில் களிப்படைகிறார். நல்வரவாகுக! சிவனின் ஊர்வலம் என நினைவுகூரப்படுவதன் ஞாபகார்த்தத்தை நீங்கள் காண்கிறீர்கள். பாபா, பாபா என்று கூறியவண்ணம் நீங்கள் அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள். குறைந்தபட்சம் நீங்கள் மதுவனத்தை வந்தடைந்துள்ளீர்கள். நீங்கள் இப்போது உங்களின் இறுதி இலக்கை அடையவேண்டும். அச்சா.

தமது மேன்மையான உரிமைகளை எப்போதும் கோரும் வெற்றியாளர் ஆத்மாக்களுக்கும், தமது சகல உரிமைகளுடனும் சகல சக்திகளுடனும் சேவை செய்யும் சக்திசாலி ஆத்மாக்களுக்கும், அரச சிம்மாசனத்திற்கான உரிமையைக் கொண்டிருக்கும் உரிமையுள்ள ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா வெவ்வேறு குழுக்களைச் சந்திக்கிறார்:

பஞ்சாப் பிராந்தியம் : பஞ்சாபைச் சேர்ந்த நீங்கள் அனைவரும் மகாவீரர்கள், அல்லவா? நீங்கள் பயப்படுபவர்கள் இல்லை. நீங்கள் தந்தைக்குச் சமமான மேன்மையான, ஞானி ஆத்மாக்கள், அல்லவா? நீங்கள் எதற்கும் பயப்படுவதில்லை, அல்லவா? மரணமே மிகப்பெரிய பயம் ஆகும். நீங்கள் அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டீர்கள். ஏற்கனவே இறந்தவர்கள் எதற்கு மரணத்தையிட்டுப் பயப்பட வேண்டும்? நான் இன்னமும் இதைச் செய்ய வேண்டியுள்ளது. நான் இப்போது இதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கும்போதே, மரணத்தைப் பற்றிய பயம் ஏற்படுகிறது. உங்களால் அதைச் செய்ய முடியாமல் போகும்போது, மரணத்தைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் அனைவரும் உங்களின் பணியைப் பூர்த்தி செய்துவிட்டீர்கள். இப்போதும் என்றும் தயாராக இருக்கிறீர்கள். உங்களின் பழைய ஆடைகளை விட்டுவிடுவதற்கு நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்கள், அல்லவா? எனவே, நீங்கள் பயப்படுவதில்லை. உண்மையில், நீங்கள் பயப்படுகின்ற ஆத்மாக்களையும் சக்திசாலிகள் ஆக்குபவர்கள். நீங்கள் சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தைகள். பயத்தில் அகப்பட்டுள்ள ஆத்மாக்களுக்குத் துன்பப்படும் வேளையில் சந்தோஷத்தை வழங்குபவர்கள். உதாரணமாக, இருளில் விளக்கினைப் போடும்போது, எங்கும் ஒளி பரவும். அதேபோன்று, நீங்கள் துன்பமான வேளையில் சந்தோஷத்தை வழங்கும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். எனவே, எப்போதும் சந்தோஷத்தை வழங்கும் மேன்மையான உணர்வு உங்களுக்கு உள்ளதா? நீங்கள் சதா சந்தோஷத்தையும் அமைதியையும் கொடுக்க வேண்டும். நீங்கள் அமைதியை அருள்பவரின் குழந்தைகளான அமைதியை அருள்பவர்கள். எனவே, அமைதியை அருள்பவர்கள் யார்? அது தந்தை மட்டும் அல்ல. ஆனால், நீங்கள் அனைவரும் அவ்வாறானவர்களே. நீங்கள் என்ன சேவை செய்கிறீர்கள் என மக்கள் கேட்கிறார்கள். ஆகவே, இந்த நேரத்திற்கு அத்தியாவசியமான பணியையே நீங்கள் செய்கிறீர்கள் என அவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள். அச்சா. மக்கள் ஆடைகளைக் கொடுக்கிறார்கள். உணவைக் கொடுக்கிறார்கள். ஆனால், மிகவும் அவசியமான விடயம் அமைதியைக் கொடுப்பதே ஆகும். எனவே, அவர்களுக்குத் தேவையானவற்றை நாம் அனைவருக்கும் கொடுக்கிறோம். ஆகவே, இதை விட மகத்தான சேவை வேறு என்னவுள்ளது? உங்களின் மனம் அமைதிநிறைந்ததாக இருக்கும்போது, செல்வமும் பயனுள்ளதே. மனம் அமைதிநிறைந்ததாக இல்லாதபோது, செல்வத்தின் சக்தியும் உங்களுக்குத் துயரத்தையே தரும். நாடு முழுவதிலும் இந்த இடமே அமைதிக்கான இடம் என்பதை அனைவரும் அனுபவம் பெறும் வகையில், இப்போது சக்திவாய்ந்த அமைதியின் அலைகளை எங்கும் பரப்புங்கள். இங்கு சில கணங்கள் வந்தாலும் அவர்களால் அதிகளவு அமைதியை அனுபவம் செய்ய முடியும் என்பதை மற்றவர்கள் மூலம் அவர்கள் கேட்க வேண்டும். இந்த ஒலி எங்கும் பரவட்டும். இந்த சேவைத்தலமே அமைதியின் மூலை என்ற சத்தத்தைப் பரவச் செய்யுங்கள். இந்தச் சத்தம் எங்கும் பரவ வேண்டும். ஓர் ஆத்மா எத்தனை அமைதியற்றவராக இருந்தாலும், உதாரணமாக, ஒருவர் நோயுற்றதும் வைத்தியசாலைக்குச் செல்வதைப் போன்று, அமைதியற்ற இந்த வேளையில் அமைதியான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இத்தகைய அலையைப் பரப்புங்கள். இது எவ்வாறு பரவும்? இதற்கு, ஓரிரு ஆத்மாக்களை அழைத்து, அவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். ஒருவரில் இருந்து அது இரண்டு பேராக விரிவடையும். அவ்வாறே அதிகரிக்கும். குறிப்பாக, அமைதியற்றிருப்பவர்களை அழைத்து, அவர்களுக்கு அமைதியின் அனுபவத்தைக் கொடுங்கள். உங்களுடன் யார் தொடர்பில் வந்தாலும், அவர்களுக்கு அமைதியை அனுபவம் செய்யுங்கள்! என்ற செய்தியைக் கொடுங்கள். பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக இந்தச் சேவையைச் செய்ய வேண்டும். இந்தச் சத்தம் உரத்து ஒலிப்பதற்கான வாய்ப்பை இப்போது நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்கள் அலைந்து திரிகிறார்கள். அவர்களுக்கு ஓரிடம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு அந்த இடம் எங்கே உள்ளது என்பது தெரியாது. அதனால் அவர்கள் அதைத் தேடுகிறார்கள். அவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு, அது சரியான இடம் இல்லை என உணர்ந்ததும் அலைந்து திரிகிறார்கள். இத்தகைய அலையும் ஆத்மாக்களுக்கு ஓரிடத்தை உங்களால் இலகுவாகக் கொடுக்க முடியாதா? இப்போது இந்தச் சேவையைச் செய்யுங்கள். ஊரடங்குச்சட்டம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள், அல்லவா? உங்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுங்கள். பின்னர், அந்த ஆத்மாக்கள் அந்த ஒலியைப் பரப்புவார்கள். ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்களுக்காயினும் அவர்களுக்கு ஒரு யோகா முகாமை நடத்துங்கள். அவர்கள் சிறிதளவு அமைதியை அனுபவம் செய்தாலும், மிகவும் சந்தோஷம் அடைந்து உங்களுக்கு நன்றி கூறுவார்கள். எதையாவது செய்யும் இலக்கு இருந்தால், அதைச் செய்வதற்கும் ஒரு வழிமுறையை நீங்கள் கண்டுகொள்வீர்கள். ஆகவே, இப்போது இதைச் செய்து காட்டி, இந்த முறையில் பெயரைப் பெருமைப்படுத்துங்கள். தற்சமயம் கடினமாக இருக்கும் பஞ்சாபின் நிலத்தை அதே அளவிற்கு உங்களால் மென்மையானது ஆக்க முடியும்.

நீங்கள் எப்போதும் உங்களை இலேசான, ஒளியான தேவதைகளாக அனுபவம் செய்கிறீர்களா? சங்கமயுகத்தின் இறுதி ரூபம் தேவதையே ஆகும். பிராமண வாழ்க்கையின் பேறு, தேவதை வாழ்க்கை ஆகும். தேவதை என்பவர் சரீரங்களுடன் அல்லது சரீர உறவுகளுடன் எந்தவித உறவுமுறையையும் கொண்டிராதவர் ஆவார். நீங்கள் உங்களின் சரீரம் மற்றும் சரீர உறவுகளுடன் சகல உறவுமுறைகளையும் முடித்துவிட்டீர்களா? அல்லது, இன்னமும் சிறிதளவு உறவுமுறை காணப்படுகிறதா? சிறிதளவு பற்றின் சூட்சுமமான இழைகள் இருந்தாலும், உங்களால் மேலே பறக்க முடியாது. நீங்கள் கீழேயே வருவீர்கள். ஆகவே, தேவதைக்குப் பழைய உறவுமுறைகள் கிடையாது. உங்களின் வாழ்க்கை புதியதாக இருப்பதனால், அனைத்தும் புதியதாகவே இருக்கும். அனைத்தும் புதியதாக இருக்கும் - புதிய எண்ணங்கள், புதிய உறவுமுறைகள், புதிய தொழில். பழைய வாழ்க்கையின் எந்தவிதமான விழிப்புணர்வும் இப்போது உங்களின் கனவுகளிலேனும் வரக்கூடாது. நீங்கள் சிறிதளவு சரீர உணர்வுடையவர் ஆகினாலும், சிறிதளவு உறவுமுறை உள்ளது என்பதே அதன் அர்த்தமாகும். உறவுமுறை இல்லாவிட்டால், உங்களின் புத்தி அங்கு செல்ல முடியாது. உலகில் பல ஆத்மாக்கள் உள்ளனர். ஆனால் நீங்கள் அவர்களை நினைக்க மாட்டீர்கள், அல்லவா? ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. உங்களுடன் உறவுமுறை இருப்பவர்களை மட்டுமே நீங்கள் நினைப்பீர்கள். எனவே, சரீர உணர்வுடையவர் ஆகுவதெனில், சரீர உறவுமுறை உள்ளது என்றே அர்த்தம். சரீரத்தின் மீது சிறிதளவு பற்று காணப்பட்டாலும், எவ்வாறு உங்களால் பறக்க முடியும்? பாரமான ஒன்றை எந்தளவிற்கு மேலே நீங்கள் எறிந்தாலும், அது திரும்பிக் கீழேயே வரும். எனவே, தேவதை என்றால் இலேசான ஒருவர், சுமைகள் அற்றவர் என்று அர்த்தம். மரணித்து வாழ்தல் என்றால் சுமைகளில் இருந்து விடுபடுதல் என்று அர்த்தம். சிறிதளவேனும் எஞ்சியிருந்தால், அதை விரைவாக முடித்துவிடுங்கள். இல்லாவிடின், காலத்தின் விசில் ஊதியதும், அனைவரும் பறக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், சுமையுடன் இருப்பவர்கள் கீழேயே இருப்பார்கள். சுமையுடன் இருப்பவர்கள், பறப்பவர்களை அவதானிப்பவர்கள் ஆகுவார்கள்.

ஆகவே, சூட்சுமமான இழைகள் எவையும் எஞ்சியுள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இன்றைய விசேடமான ஆசீர்வாதத்தை நினைவு செய்யுங்கள்: நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள தேவதை ஆத்மாக்கள் ஆவீர்கள். நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள ஆத்மாக்கள். தேவதை என்ற வார்த்தையை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்களைத் தேவதைகளாகக் கருதுவதன் மூலம், நீங்கள் பறப்பீர்கள். ஆசீர்வாதங்களை அருள்பவரிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் நினைவு செய்தால், நீங்கள் எப்போதும் செழிப்பானவர்களாக இருப்பீர்கள்.

நீங்கள் எப்போதும் உங்களை அமைதிக்கான செய்தியைக் கொடுக்கும் அமைதித் தூதுவர்களாகக் கருதுகிறீர்களா? பிராமண வாழ்க்கையின் பணியானது செய்தியைக் கொடுப்பதே ஆகும். நீங்கள் ஒருபோதும் இந்தப் பணியை மறப்பதில்லை, அல்லவா? எந்தளவிற்கு நீங்கள் மேன்மையான ஆத்மாக்களின் மேன்மையான பணியைச் செய்துள்ளீர்கள் எனத் தினமும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எத்தனை பேருக்குச் செய்தியைக் கொடுத்துள்ளீர்கள்? எத்தனை பேருக்கு அமைதியைத் தானம் செய்துள்ளீர்கள்? நீங்கள் மகாதானிகள், செய்தியை வழங்கும் ஆசீர்வாதங்களை அருள்பவர்கள். உங்களிடம் எத்தனை பட்டங்கள் உள்ளன? இன்றைய உலகில், ஒருவர் பெரியதொரு பட்டத்தை வைத்திருந்தாலும், அவர் உங்களை விட இளையவரே. அங்கு, ஆத்மாக்களே பட்டங்களை வழங்குகிறார்கள். ஆனால் இங்கு, தந்தை குழந்தைகளான உங்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். எனவே, உங்களின் வெவ்வேறு பட்டங்களை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, சதா அந்தச் சந்தோஷத்துடனும் அந்தச் சேவையிலும் நிலைத்திருங்கள். பட்டத்தின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம், நீங்கள் இயல்பாகவே சேவையை நினைவுசெய்வீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சகல உரிமைகளையும் உடையவர்களாகி, ஒருமுகப்படுத்தல் சக்தியால் உங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு சூழ்நிலையையும் மாற்றுவீர்களாக.

ஒரு பிராமணரை, அதாவது, சகல உரிமைகளையும் கொண்டதோர் ஆத்மாவை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இத்தகையதோர் ஆத்மாவை அவரின் பலவீனமான சுபாவத்தால் அல்லது சம்ஸ்காரங்களாலும் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில், சுபாவம் - சுவ பாவ் - என்றால் சுயத்திற்கும் மற்றவர்களுக்கும் ஆத்ம உணர்வுகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். ஆகவே, பலவீனமான சுபாவத்தால் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது. உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரங்களின் விழிப்புணர்வானது இலகுவாக உங்களின் பலவீனமான சம்ஸ்காரங்களை மாற்றிவிடுகிறது. ஒருமுகப்படுத்தும் சக்தியானது இலகுவாக புறச்சூழ்நிலைகளை மாற்றி, அதிபதிக்குரிய ஸ்திதியின் ஆசனத்தில் உங்களை நிலைத்திருக்கச் செய்கிறது.

சுலோகம்:
ஞானி ஆத்மா ஒருவருக்கு கோபம் மிகக் கொடிய எதிரி ஆகும்.