10.05.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    08.01.86     Om Shanti     Madhuban


இந்தப் பூமியின் புனித நட்சத்திரங்கள்.


இன்று, ஞான சூரியனான தந்தை, பலவகையான சிறப்பியல்புகளால் நிறைந்துள்ள தனது விசேடமான நட்சத்திரங்களைப் பார்க்கிறார். ஒவ்வொரு நட்சத்திரத்தினதும் சிறப்பியல்பானது, உலக மாற்றத்திற்காக ஒளியை வழங்குவதே ஆகும். தற்காலத்தில், மக்கள் குறிப்பாக நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்கிறார்கள். ஏனெனில், நட்சத்திரங்களின் ஆதிக்கம் இந்தப் பூமியில் உள்ளது. விஞ்ஞானிகள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்கிறார்கள். பாப்தாதா தனது புனித நட்சத்திரங்களின் சிறப்பியல்புகளைப் பார்க்கிறார். ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களால் வெகு தொலைவில் இருந்தே பூமியின் மீது நல்ல அல்லது தீய ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடியதாக இருந்தால், புனித நட்சத்திரங்களான உங்களால் மிக இலகுவாக உலகை மாற்றுவதில் ஆதிக்கம் செலுத்த முடியும். அத்துடன் தூய்மையான, சந்தோஷமான, அமைதிநிறைந்த உலகை உருவாக்க முடியும். நீங்கள் பூமியின் நட்சத்திரங்கள். அவையோ வானத்தின் நட்சத்திரங்கள். பூமியின் நட்சத்திரங்களே, இந்த உலகைக் குழப்பத்தில் இருந்து காப்பவர்கள். அத்துடன் அதை ஒரு சந்தோஷமான, அழகான பொன்னுலகமாக ஆக்குபவர்கள். இந்த வேளையில், இயற்கையும் மனிதர்களும் குழப்பத்தை விளைவிப்பதற்குக் கருவிகளாக இருக்கிறார்கள். ஆனால், அதிமேன்மையான ஆத்மாக்களான நீங்கள், இந்த உலகம் சந்தோஷ மூச்சையும் அமைதி மூச்சையும் விடுவதற்குக் கருவிகள் ஆவீர்கள். பூமியின் நட்சத்திரங்களான நீங்கள், சகல பேறுகளின் சொரூபங்களான நட்சத்திரங்கள் ஆவீர்கள். நீங்கள் சகல ஆத்மாக்களினதும் சகல ஆசைகளையும் பூர்த்தி செய்பவர்கள். நீங்கள் அனைவரின் நம்பிக்கை அற்ற உணர்வுகளை நம்பிக்கையாக மாற்றும் மேன்மையான நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவீர்கள். எனவே, உங்களின் மேன்மையான ஆதிக்கத்தைச் சோதித்துப் பாருங்கள்: எந்தளவிற்கு எனக்குள் ஒரு அமைதி நட்சத்திரமாக, ஒரு புனித நட்சத்திரமாக, சந்தோஷ சொரூபமான நட்சத்திரமாக, சதா வெற்றி நட்சத்திரமாக, சகல ஆசைகளையும் சதா பூர்த்தி செய்யும் நட்சத்திரமாக, திருப்தி நட்சத்திரமாக இருப்பதன் பிரகாசமும் கீர்த்தியும் உள்ளன? எந்தளவிற்கு நீங்கள் உங்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகிறீர்கள்? உங்களின் ஆதிக்கத்தின் வேகம் என்ன? அந்த நட்சத்திரங்களின் வேகத்தை நீங்கள் சோதிப்பதைப் போன்று, உங்களின் ஆதிக்கத்தின் வேகத்தையும் சோதித்துப் பாருங்கள். ஏனெனில், தற்சமயம் புனித நட்சத்திரங்களான நீங்களே உலகிற்குத் தேவை. எனவே, பாப்தாதா சகல வகையான நட்சத்திரங்களையும் பார்த்தார்.

ஆன்மீக நட்சத்திரங்களான உங்களின் ஒன்றுகூடல் அதிமேன்மையானது. அத்துடன் அதிகளவு சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது! இந்த முறையில் உங்களைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாகக் கருதுகிறீர்களா? அந்த நட்சத்திரங்களைப் பார்ப்பதில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அனைவரும் உங்களைப் புனித நட்சத்திரங்களாகப் பார்க்க விரும்பும் காலம் இப்போது வருகிறது. அவர்கள் நட்சத்திரங்களான உங்களைத் தேடுவார்கள். இந்த அமைதி, சந்தோஷம், ஸ்திரத்தன்மையின் ஆதிக்கம் எங்கிருந்து வருகிறது என அவர்கள் வியப்பார்கள். அவர்கள் இதில் ஆராய்ச்சி செய்வார்கள். தற்சமயம், அவர்கள் சடப்பொருளை ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள். சடப்பொருளை ஆராய்ச்சி செய்வதில் களைப்படைந்ததும், அவர்கள் இந்த ஆன்மீக ஆராய்ச்சி செய்ய வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு முன்னர், புனித நட்சத்திரங்களான நீங்கள் உங்களைச் சம்பூரணமானவர்கள் ஆக்க வேண்டும். உங்களை ஒரு சிறப்பியல்பால், அது அமைதி என்ற நற்குணமோ அல்லது சக்தியோ எதனாலும் உங்களை நிரப்பிக் கொள்வதற்கு துரித கதியில் ஆயத்தங்களைச் செய்யுங்கள். நீங்களும் இதில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். உங்களிடம் சகல நற்குணங்களும் உள்ளன. ஆனால், குறைந்தபட்சம் ஒரு நற்குணத்தைச் சிறப்பியல்பாக்குவதன் மூலம் உங்களைச் சம்பூரணமானவர் ஆக்குங்கள். உதாரணமாக, மருத்துவர்கள் அனைவருக்கும் சகல நோய்களைப் பற்றியும் பொதுவான அறிவு உள்ளது. எவ்வாறாயினும், அத்துடன், சிலருக்குக் குறிப்பிட்டதொரு நோயைப் பற்றிய விசேடமான அறிவு இருக்கும். அந்தச் சிறப்பியல்பால், அவர்கள் அதில் பிரபல்யமானவர்களக இருப்பார்கள். நீங்கள் சகல நற்குணங்களும் நிறைந்தவர்கள் ஆகவேண்டும். ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சிறப்பியல்பில் அனுபவம்வாய்ந்தவர்கள் ஆகவேண்டும். நீங்கள் அதைச் சேவையில் பயன்படுத்தித் தொடர்ந்து முன்னேற முடியும். உதாரணமாக, பக்தியில், தேவிகளைப் புகழும்போது, ஒவ்வொருவரும் அவருக்கே உரிய சிறப்பியல்பால் நினைவு செய்யப்படுகிறார். ஒவ்வொருவரும் அந்தச் சிறப்பியல்பிற்கேற்ப வழிபடப்படுகிறார். அவர்கள் குறிப்பாக சரஸ்வதியை ஞான தேவியாக நம்பி வழிபடுகிறார்கள். அவர் சக்தி சொரூபமும் ஆவார். ஆனால், அவரின் சிறப்பியல்பால், மக்கள் அவரை ஞான தேவியாகவே வழிபடுகிறார்கள். அவர்கள் இலக்ஷ்மியை செல்வத்தின் தேவியாக வழிபடுகிறார்கள். அதேபோன்று, உங்களுக்குள் சகல நற்குணங்களும் சகல சிறப்பியல்புகளும் இருந்தாலும், குறிப்பாக ஒரு சிறப்பியல்பில் ஆராய்ச்சி செய்து, உங்களை அதில் ஆதிக்கம் செலுத்துபவர் ஆக்குங்கள். இந்த வருடம், ஒவ்வொரு நற்குணத்திலும் ஒவ்வொரு சக்தியிலும் ஆராய்ச்சி செய்யுங்கள். ஒவ்வொரு நற்குணத்தினதும் ஆழத்திற்குள் செல்லுங்கள். அதன் ஆழத்திற்குள் செல்லும்போது, உங்களால் அதன் மகத்துவத்தை அனுபவம் செய்ய முடியும். நினைவின் ஸ்திதிகளையும் முயற்சிகளின் ஸ்திதிகளையும் ஆழமாக ஆராய்ச்சி செய்யுங்கள். அவற்றின் ஆழத்திற்குள் செல்லுங்கள். ஆழமான அனுபவங்களைக் கொண்டிருங்கள். அனுபவக் கடலின் அடியாழத்திற்குச் செல்லுங்கள். மேற்பரப்பில் அலைகளில் அசைவதை அனுபவம் செய்வதை முழுமையான அனுபவசாலி என்று அழைக்க முடியாது. அகநோக்குடையவர் ஆகுங்கள். உங்களின் புத்தியை ஆழமான அனுபவங்களின் இரத்தினங்களால் நிரப்புங்கள். ஏனெனில், வெளிப்படுத்துகைக்கான நேரம் நெருங்கி வருகிறது. நிரம்பியவராகவும் சம்பூரணமானவராகவும் ஆகுங்கள். அப்போது ஆத்மாக்கள் அனைவரின் முன்னாலும் உள்ள அறியாமை என்ற திரை விலகும். உங்களின் சம்பூரணம் என்ற ஒளியால் அந்தத் திரை இயல்பாகவே திறக்கும். ஆகவே, இதை ஆராய்ச்சி செய்யுங்கள். தேடும் விளக்கு ஆகுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் பொன்விழாவைக் கொண்டாடுகிறீர்கள் எனக் கூற முடியும்.

அனைவரும் இதை உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் பொன்விழாவின் சிறப்பியல்பாக அனுபவம் செய்ய வேண்டும். உங்களின் திருஷ்டியினூடாக அவர்கள் பொன்னான சக்திகளை அனுபவம் செய்ய வேண்டும். ஒளிக்கதிர்கள் ஆத்மாக்களைத் தங்கமயமாக்குவதற்கான சக்தியைக் கொடுப்பதைப் போன்று, உங்களின் ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு செயலும் தங்கமாக இருக்க வேண்டும். நீங்கள் அவர்களைத் தங்கமயமாக்குவதற்குக் கருவிகள் ஆகுவீர்கள். பொன்விழாவிற்கான இந்த வருடத்தில், உங்களைத் தெய்வீகப் பிரபுவின் (பரஸ்நாத், கல்லை ஒரு இரத்தினமாக மாற்றும் தெய்வீகமானவர்) குழந்தைகளான மாஸ்ரர் தெய்வீகப் பிரபுக்களாகக் கருதிக் கொள்ளுங்கள். ஓர் ஆத்மா எவ்வளவுதான ஓர் இரும்பைப் போல் இருந்தாலும், தெய்வீகமான ஒருவரின் (பரஸ்) சகவாசத்தினால், இரும்பும் தெய்வீகமானதாக மாறும். இவர் இரும்பைப் போன்றவர் என நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக, நான் ஒரு தெய்வீகமானவர் என நினையுங்கள். தெய்வீகமானவரின் கடமை, இரும்பை தெய்வீகமானதாக மாற்றுவதே ஆகும். எப்போதும் இந்த இலக்கையும் அதன் தகைமைகளையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். அப்போது, புனித நட்சத்திரங்களின் ஆதிக்கத்தை இந்த உலகமே பார்க்கும். தற்சமயம், இன்னதோர் நட்சத்திரம் வருகிறது என அப்பாவி மக்கள் பயப்படுகிறார்கள். பின்னர், புனித நட்சத்திரங்கள் வருகிறார்கள் என அவர்கள் சந்தோஷப்படுவார்கள். புனித நட்சத்திரங்களின் பிரகாசம், எங்கும் அனுபவம் செய்யப்படுகிறது. அதிர்ஷ்ட நட்சத்திரங்கள், வெற்றி நட்சத்திரங்கள் வந்துள்ளார்கள், சந்தோஷ நட்சத்திரங்கள், அமைதி நட்சத்திரங்கள் வந்துள்ளார்கள் என்பது அனைவரின் உதடுகளில் இருந்து வெளிப்படும். தற்சமயம், அவர்கள் தமது பைனாகுலர்களின் மூலம் பார்க்கிறார்கள். ஆனால், அந்த வேளையில் அவர்கள் தமது மூன்றாம் கண்ணால், தமது தெய்வீகக் கண்ணால் பார்ப்பார்கள். எவ்வாறாயினும், இதுவே ஆயத்தம் செய்வதற்கான ஆண்டு ஆகும். உங்களை மிக நன்றாக ஆயத்தப்படுத்துங்கள். அச்சா. நிகழ்ச்சியில் நீங்கள் என்ன செய்வீர்கள்? பாப்தாதா இந்தக் காட்சியை சூட்சும வதனத்தில் தோன்றச் செய்தார். அவர் அந்தக் காட்சியில் எதைக் கண்டார்?

ஒரு கருத்தரங்கில் மேடையில் பேச்சாளர்களை மட்டுமே நீங்கள் அமர்த்துவீர்கள், இல்லையா? கருத்தரங்கு மேடை என்றால் பேச்சாளர்களின் மேடை என்று அர்த்தம். நீங்கள் இதை அவ்வாறே ஒழுங்கு செய்வீர்கள், இல்லையா? நீங்கள் எப்போதும் தலைப்புகளில் சொற்பொழிவு ஆற்றுவீர்கள். நீங்கள் அவற்றை நன்றாகச் செய்கிறீர்கள். ஆனால், இந்தப் பொன்விழாவில் சொற்பொழிவுகளுக்குக் குறைந்தளவு நேரமும் மகத்தான பெறுபேறும் இருக்க வேண்டும். அந்த நேரத்தில், வெவ்வேறு பேச்சாளர்கள் தமது சக்திவாய்ந்த சொற்பொழிவுகளை ஆற்றலாம். இதன் வடிவம் என்ன? ஒரு நாள், குறிப்பாக இதற்காக அரைநாள் நிகழ்ச்சியை நடத்துங்கள். வெளிநபர் ஒருவர் அல்லது ஒரு விசேடமான பேச்சாளர் சொற்பொழிவு வழங்கட்டும். ஆனால், அரை மணி நேரத்திற்கு, மேடையில் வெவ்வேறு வயதினர் இருக்க வேண்டும். அதாவது, ஒரு சிறுவன், ஒரு குமாரி, ஒரு தூய தம்பதி, ஒரு இல்லறத் தம்பதி, ஒரு வயதானவர் என்று இருக்க வேண்டும். இந்தப் பல்வகையினரும் மேடையில் அரைச் சந்திர வடிவில் அமர்ந்திருக்க வேண்டும். மேடை விளக்குகள் மிகவும் பிரகாசமானதாக இருக்கக்கூடாது. அவை சரியானதாக (தரமுள்ளதாக) இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது வாழ்க்கைகளை உருவாக்கிய, தமது வாழ்க்கைகளை மேன்மையாக்குவதற்குத் தாம் பெற்ற விசேடமான பொன்னான வாசகங்களை மூன்று நிமிடங்களுக்குப் பேச வேண்டும். ஒரு இளம் குமார் அல்லது ஒரு குமாரி, குழந்தைகள் பெற்ற பொன்னான வாசகங்களையும், குமாரி வாழ்க்கைக்காக குமாரிகள் பெற்ற பொன்னான வாசகங்களையும், இளம் பிரம்மச்சாரி தம்பதிகள் பெற்ற பொன்னான வாசகங்களையும், இல்லறத்தில் வாழும் நம்பிக்கைப் பொறுப்பாளர் ஆத்மாக்கள் பெற்ற பொன்னான வாசகங்களையும், வயதானவர்கள் பெற்ற பொன்னான வாசகங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் மூன்று நிமிடங்கள் பேச முடியும். இறுதியில், வந்திருக்கும் சபையினர் அனைவரும் பொன்னான வாசகங்களின் வடிவிலான ஒரு சுலோகனை அனைவருக்காகவும் மீண்டும் கூறலாம். எந்த நபர் பேசுகிறாரோ, அவரின் மீது ஒரு ஸ்பொட்லைற் விழுந்தால், அனைவரின் கவனமும் அந்த நபர் மீதே இருக்கும். மௌனத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும். ஒரு நாடகம் நடிக்கப்படுவதைப் போன்று அந்தக் காட்சி இருக்க வேண்டும். அது ஒரு சொற்பொழிவாக இருக்கட்டும். ஆனால் அது ஒரு காட்சியின் வடிவில் இருக்க வேண்டும். அவர்கள் மூன்று நிமிடங்களுக்கு அதிகம் ஆகாமல் மிகக் குறைவாகவே பேச வேண்டும். இதற்கான ஆயத்தங்களை முன்கூட்டியே செய்யுங்கள். அடுத்த நாள், இதே போன்றதொரு நிகழ்வு வெவ்வேறு பிரிவினரால் (தொழில்துறை) செய்யப்பட வேண்டும். உதாரணமாக, ஒருவர் மருத்துவர், இன்னொருவர் வர்த்தகர், இன்னொருவர் உத்தியோகத்தர். வெவ்வேறு தொழில்களைச் செய்பவர்கள் ஒவ்வொருவரும் மூன்று நிமிடங்கள் பேச வேண்டும். தனது பணியில் வெற்றிநிறைந்தவராக இருப்பதற்கு ஓர் உத்தியோகத்தராகக் கடமை ஆற்றும் வேளையில் அவர் என்ன பொன்னான தாரணையைக் கடைப்பிடிக்கிறார் என்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வெற்றிக்கான பிரதானமான கருத்தைப் பொன்னான வாசகத்தின் வடிவில் அவர் பகிரலாம். அது ஒரு சொற்பொழிவே. ஆனால், அது வேறு வடிவில் இருப்பதனால், இந்த இறை ஞானம் எவ்வாறு எல்லையற்றது என்பதையும் அது எவ்வாறு ஒவ்வொரு தொழிலுக்கும் விசேடமாக இருக்கிறது என்பதையும் அவர்கள் பார்ப்பார்கள். மூன்று நிமிட உரையின்போது, அவர்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாக மட்டும் இருக்கக்கூடாது. அந்தளவிற்கு மற்றவர்களும் ஓர் அனுபவத்தைப் பெற வேண்டும். அங்கு கேட்டுக் கொண்டிருப்பவர்கள் எந்தவிதமான குழப்பத்தை ஏற்படுத்தவோ அல்லது எதையாவது கூறவோ தைரியம் வராத அளவிற்கு அந்தச் சூழல் மௌனம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி நடந்து முடியும் வரை, நீங்கள் எண்ணக்கட்டுப்பாட்டு வேளைக்காக ஒரு பாடலை இசைத்ததும் எவ்வாறு அனைவரும் மௌனமான சூழலை உருவாக்குகிறீர்களோ, அதைப் போன்றதொரு சூழலை அனைவரும் பேண வேண்டும் என்ற இலக்கு ஒவ்வொரு பிராமணரிடமும் இருக்க வேண்டும். அந்த வேளையில் நீங்கள் வார்த்தைகள் இல்லாமல் மௌனத்தைப் பேணுகிறீர்கள். எவ்வாறாயினும், இந்த வேளையில், சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்கு, நீங்கள் வார்த்தைகளால் சொற்பொழிவு ஆற்றப் போவதில்லை. ஆனால், அமைதிக்கான சொற்பொழிவை ஆற்றப் போகிறீர்கள். நானும் ஒரு பேச்சாளன். நான் இதில் கட்டுப்பட்டு இருக்கிறேன். அமைதிக்கான சொற்பொழிவு எதிலும் குறைந்தது இல்லை. பிராமணர்களின் இந்தச் சூழலும் மற்றவர்களை அந்த அனுபவத்திற்குள் எடுத்துச் செல்லும். எந்தளவிற்கு சாத்தியமோ, அந்தளவிற்கு ஏனைய செயற்பாடுகளை முடித்துவிடுங்கள். பிராமணர்கள் அனைவரும் நிச்சயமாக சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்காகத் தமது ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும். யாராவது ஒருவருக்கு ஏதாவதொரு கடமை இருந்தால், அவர் முன்னால் அமர்ந்திருக்கக்கூடாது. முன்னால் எந்தவிதமான குழப்பமும் இருக்கக்கூடாது. அதை மூன்று மணிநேர பத்தியாகக் கருதுங்கள். அப்போது, அது ஒரு நல்ல சொற்பொழிவு என்று இல்லாமல், தமக்கு நல்லதொரு உணர்வு ஏற்பட்டது என அவர்கள் கூறுவார்கள். சொற்பொழிவுடன், அவர்களுக்கு அந்த உணர்வும் ஏற்பட வேண்டும். வருகின்ற பிராமணர்கள் அனைவரும், தாம் ஒரு பத்தியில் பங்குபற்றுவதற்காக வருகிறோம் என்ற புரிந்துணர்வுடன் வரவேண்டும். நீங்கள் ஒரு கருத்தரங்கைப் பார்ப்பதற்கென்று வரக்கூடாது. ஆனால், ஒத்துழைப்பைக் கொடுப்பதற்கு வாருங்கள். எனவே, இந்த முறையில், சக்திவாய்ந்த ஒரு சூழலை உருவாக்குங்கள். அந்த ஆத்மாக்கள் எவ்வளவு குழப்பத்துடன் இருந்தாலும், அவர்கள் திரும்பிச் செல்வதற்கு முன்னர் குறுகிய காலத்திற்கேனும் அமைதியையும் சக்தியையும் அனுபவம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். இங்கு 3000 பேர் அமர்ந்திருக்கிறார்கள் என அவர்கள் உணரக்கூடாது. ஆனால், இது ஒரு தேவதைகளின் ஒன்றுகூடல் என உணர வேண்டும். கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறும்போது, அவர்கள் சிரித்து மகிழலாம். ஆனால், கருத்தரங்கு நேரத்தில், சக்திவாய்ந்த சூழல் இருக்க வேண்டும். அப்போது, வருகின்ற ஏனையவர்களும் அவ்வாறே பேசுவார்கள். எத்தகைய சூழல் உருவாக்கப்படுகிறதோ, ஏனைய பேச்சாளர்களும் அந்தச் சூழலின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்கள். எனவே, குறுகிய காலத்திற்குள் அவர்களுக்குப் பல பொக்கிஷங்களைக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியைச் செய்யுங்கள். அது குறுகியதாகவும் இனிமையானதாகவும் இருக்க வேண்டும். பிராமணர்களான நாங்கள் மென்மையாகப் பேசினால், மற்றவர்களும் மென்மையாகவே பேசுவார்கள். அச்சா. நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? நீங்கள் உங்களை விசேடமான நட்சத்திரங்களாக வெளிப்படுத்துவீர்கள், இல்லையா? ஆகவே, இந்த பொன்விழாவிற்கான வருடத்தை உங்களைச் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆக்கும் வருடமாகக் கொண்டாடுங்கள். நீங்களும் குழப்பத்திற்கு உள்ளாகாதீர்கள். மற்றவர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்காதீர்கள். குழப்பத்தை உருவாக்குவதற்கு இயற்கையே போதுமானது. இயற்கை அதன் பணியைச் செய்கிறது. நீங்கள் உங்களுடைய பணியைச் செய்யுங்கள். அச்சா.

புனித நட்சத்திரங்களாகி, உலகைச் சந்தோஷமாகவும் அமைதிநிறைந்ததாகவும் ஆக்குபவர்களுக்கும், உலகையும் அதில் உள்ள அனைவரையும் தெய்வீகமானவர்கள் ஆக்கும் மாஸ்ரர் தெய்வீகப் பிரபுக்களுக்கும், அனுபவக்கடலின் ஆழத்திற்கு எப்போதும் செல்வதன் மூலம் தங்களுக்குள் அனுபவத்தின் இரத்தினங்களைச் சேமிப்பவர்களுக்கும், தேடும் விளக்குகளாகி அறியாமைத் திரையை நீக்குபவர்களுக்கும், தந்தையை வெளிப்படுத்தும் இத்தகைய விசேடமான நட்சத்திரங்களுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா ஆசிரியர்களுடன் பேசுகிறார்:

1) உலகைப் புதியதாக்கும் ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள், அல்லவா? உலகைப் புதியதாக்கும் புதிய ஊக்கமும் புதிய உற்சாகமும் உங்களுக்குள் எப்போதும் உள்ளதா அல்லது சில வேளைகளில் மட்டும் உள்ளதா? சிலவேளைகளில் மட்டும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதன் மூலம் புதிய உலகை ஸ்தாபிக்க முடியாது. சதா புதிய ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பவர்கள், புதிய உலகை ஸ்தாபிப்பதற்குக் கருவிகள் ஆகுகிறார்கள். புதிய உலகிற்கு நீங்கள் எந்தளவிற்குத் தொடர்ந்து நெருக்கம் ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு, புதிய உலகில் விசேடமான விடயங்களின் விரிவாக்கம் நிகழும். நீங்களே புதிய உலகிற்குச் செல்லப் போகிறவர்கள். நீங்களே உலகைப் புதியதாக்கப் போகின்றவர்கள். அதை உருவாக்குவதற்கு நேரமும் சக்தியும் தேவை. ஆனால், சக்திசாலி ஆத்மாக்கள் எப்போதும் தடைகளை அழித்து, தொடர்ந்து முன்னேறுவார்கள். எனவே, நீங்களே இத்தகைய புதிய உலகின் அத்திவாரங்கள். ஒரு கட்டடத்தின் அத்திவாரம் பலவீனமாக இருந்தால் என்ன நிகழும்? ஆகவே, உலகைப் புதுப்பிக்கும் கடமையைச் செய்பவர்கள், முயற்சி செய்து ஒரு பலமான அத்திவாரத்தை அமைக்க வேண்டும். அந்தக் கட்டடம் 21 பிறவிகளுக்கு நிலைக்கும்படியாக அதைப் பலமானது ஆக்குங்கள். எனவே, நீங்கள் உங்களின் கட்டடத்தை 21 பிறவிகளுக்காகத் தயாரித்து விட்டீர்கள், அல்லவா? அச்சா.

2) நீங்கள் உங்களைத் தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? இந்த வேளையில் நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். பின்னர் உலக இராச்சிய சிம்மாசனத்தில் நீங்கள் அமருவீர்கள். தந்தையின் நினைவைத் தமது இதயங்களில் அமிழ்த்தி இருப்பவர்களால் மட்டுமே இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க முடியும். குழந்தைகள் எப்போதும் தந்தையின் இதயத்தில் அமிழ்ந்திருப்பதைப் போல, எப்போதும் இயல்பாகவே குழந்தைகளின் இதயங்களில் தந்தையின் நினைவு இருக்க வேண்டும். தந்தையை விட வேறு என்ன இருக்கிறது? நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்ற சந்தோஷத்தையும் போதையையும் பேணுங்கள். அச்சா.

சற்குரு தினத்தில் காலை 6.00 மணிக்குப் பிரியாவிடை பெறும் வேளையில்.

எங்கும் உள்ள அன்பான, ஒத்துழைக்கும் குழந்தைகளின் மீது எப்போதும் வியாழ திசை இருக்கிறது. அத்துடன் விருட்சத்தின் விதையானவரும் இருக்கிறார். மற்றவர்களை மேன்மையாக்கும் சேவையில் நீங்கள் வியாழ திசையுடன் முன்னேறுகிறீர்கள். நீங்கள் சேவை மற்றும் நினைவு இரண்டிலும் வெற்றிகரமாக முன்னேறுகிறீர்கள். தொடர்ந்தும் அவ்வாறே செய்வீர்கள். குழந்தைகளுக்கு, சங்கமயுகமே வியாழ திசை ஆகும். சங்கமயுகத்தின் ஒவ்வொரு கணமும் வியாழனுக்குரியது, அதாவது, அதிர்ஷ்டம் நிறைந்தது. ஆகவே, நீங்கள் பாக்கியசாலிகள். நீங்கள் இறைவனுக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் பாக்கியத்தை உருவாக்குபவர்கள். நீங்கள் பாக்கிய உலகிற்கான உரிமையைக் கொண்டிருப்பவர்கள். எனவே, இத்தகைய சதா பாக்கியசாலிக் குழந்தைகளுக்கு அன்பும் நினைவும் காலை வணக்கங்களும்.

ஆசீர்வாதம்:
இறை கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் அடிப்படையில், நீங்கள் உலகிற்கே உதாரணம் ஆகும் இலகு யோகி ஆகுவீர்களாக.

உலகிற்கே உதாரணம் ஆகுவதற்கு, அமிர்த வேளையில் இருந்து இரவுவரை இறைகோட்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். குறிப்பாக அமிர்த வேளையின் முக்கியத்துவத்தை அறிந்து, அந்த வேளையில் சக்திவாய்ந்த ஒரு ஸ்திதியை உருவாக்குங்கள். நாள் முழுவதும் உங்களின் வாழ்க்கை மகத்தானது ஆகும். நீங்கள் அமிர்த வேளையில் உங்களை விசேட சக்தியால் நிரப்பி, சக்தி சொரூபமாக முன்னேறினால், எந்தவொரு பணியிலும் நீங்கள் கஷ்டப்பட மாட்டீர்கள். உங்களின் வாழ்க்கையை இறை கோட்பாடுகளுக்கு அமைய வாழ்வதன் மூலம், நீங்கள் இயல்பாகவே இலகு யோகி என்ற வாழ்க்கையை உருவாக்குவீர்கள். அதன்பின்னர், உங்களின் வாழ்க்கையைப் பார்த்து, உலகிலுள்ள அனைவரும் தமது வாழ்க்கைகளை உருவாக்கிக் கொள்வார்கள்.

சுலோகம்:
உங்களின் செயல்களின் மூலமும் உங்களின் முகத்தின் மூலமும் தூய்மையின் மகத்துவத்தின் அனுபவத்தைக் கொடுங்கள்.