10.05.22        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


இனிய குழந்தைகளே, உங்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுத்து, உங்களைச் சதா சந்தோஷமானவர்களாகவும் அமைதி நிறைந்தவர்களாகவும் ஆக்குவதற்காகத் தந்தை வந்துள்ளார், அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றி, இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்பதுடன், ஏனையோருக்கும் கற்பியுங்கள், அப்பொழுது நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள்.

கேள்வி:
முழுச் சக்கரத்திலும் தவற விடக்கூடாத, எந்த வாய்ப்பை இந்நேரத்தில் மாத்திரம் நீங்கள் பெறுகிறீர்கள்?

பதில்:
இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் ஆன்மீக சேவை செய்வதற்கும், மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குமான வாய்ப்பைப் பெறுகின்றீர்கள். இவ்வாய்ப்பைத் தவற விடாதீர்கள். ஆன்மீக சேவையில் ஈடுபட்டவராகுங்கள். சேவை செய்பவராகுங்கள். குமாரிகள் குறிப்பாக இறை அரசாங்க சேவையைச் செய்யவேண்டும். மம்மாவை முற்றாகப் பின்பற்றுங்கள். குமாரிகள் தந்தைக்குரியவர்களாகி, தொடர்ந்தும் லௌகீக சேவையைச் செய்தாலும், முட்களை மலர்களாக மாற்றுகின்ற சேவையைச் செய்யவில்லை எனில், அதுவும் தந்தையை அவமரியாதை செய்வது போன்றதாகும்.

பாடல்:
விழித்தெழுங்கள், ஓ மணவாட்டிகளே, விழித்தெழுங்கள்! புதிய யுகம் வர இருக்கின்றது.

ஓம் சாந்தி.
மணவாட்டிகளான உங்களுக்கு விளங்கப்படுத்தியவர் யார்? மணவாட்டிகளுக்காக மணவாளன் வந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. பல மணவாட்டிகள் இருக்கின்றார்கள்! ஒரு மணவாளன் பல மணவாட்டிகளைக் கொண்டிருப்பதும் அற்புதமே! கிருஷ்ணர் 16,108 இராணிகளைக் கொண்டிருந்தார் என மக்கள் கூறுகின்றார்கள், ஆனால் அது அவ்வாறு இருக்கவில்லை. சிவபாபா கூறுகின்றார்: எனக்கு மில்லியன் கணக்கான மணவாட்டிகள் உள்ளார்கள். நான் மணவாட்டிகள் அனைவரையும் என்னுடன் திரும்பவும் இனிய வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். பாபா மீண்டும் ஒருமுறை தன்னுடன் திரும்பவும் உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார் என்பதை மணவாட்டிகளான நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். உயிர் வாழும் ஆத்மாக்களே மணவாட்டிகள் ஆவார்கள். எங்களுக்கு ஸ்ரீமத்தை வழங்குவதற்கும், எங்களை அலங்கரிப்பதற்கும் மணவாளன் வந்துள்ளார் என்பது உங்கள் இதயங்களில் இருக்கின்றது. அனைவருக்கும் வழிகாட்டல்கள் கொடுக்கப்படுகின்றன. ஒரு கணவன் தனது மனைவிக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பார், ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பார்; ஒரு புனிதர் தனது சீடருக்கு வழிகாட்டல்களைக் கொடுப்பார், ஆனால் இவருடைய வழிகாட்டல்கள் தனித்துவமானவையும், ஏனைய அனைவரிலிருந்தும் வேறுபட்டவையும் ஆகும். இதனாலேயே அவை ஸ்ரீமத் என்றழைக்கப்படுகின்றன. ஏனைய அனைத்தும் மனிதர்களின் கட்டளைகளே. அவர்கள் அனைவரும் சரீரங்களின் ஜீவனோபாயத்திற்காக வழிகாட்டல்களை வழங்குகின்றனர். சாதுக்கள், புனிதர்கள் அனைவரும் தங்;கள் சரீரங்களின் ஜீவனோபாயத்திற்கான அக்கறையைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பிறருக்குச் செல்வந்தர்கள் ஆகுவதற்கான வழிகாட்டல்களையே தொடர்ந்தும் கொடுக்கின்றார்கள். சாதுக்களினதும், குருமார்களினதும் வழிகாட்டல்களே மிகவும் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன, ஆனால் அவர்களும் தமது சொந்த ஜீவனோபாயத்திற்காக அதிகளவு செல்வத்தைச் சேர்த்துக்கொள்கின்றார்கள். எனக்கென்று சொந்தமாக ஒரு சரீரம் கிடையாது. நான் எனது வயிற்றுக்காக எதனையும் செய்வது கிடையாது. நீங்களும் உங்களுடைய சொந்த வயிற்றுக்கான (சுயத்திற்கான) அக்கறையை, அதாவது, நீங்கள் சக்கரவர்த்திகளாகவும், சக்கரவர்த்தினிகளாகவும் ஆக வேண்டும் என்ற அக்கறையைக் கொண்டுள்ளீர்கள். அனைவரும் தங்கள் வயிற்றின் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள். சிலர் வெறும் பார்லி சப்பாத்தியை உண்ணும் அதேவேளை, பிறரோ அசோகா ஹோட்டலில் உண்கின்றார்கள். சாதுக்கள் செல்வத்தைச் சேர்த்து, மிகப்பெரிய ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டுகின்றார்கள். சிவபாபா சரீர ஜீவனோபாயத்திற்காக எதனையும் செய்வதில்லை. அவர் உங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்காக அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார். பின்னர் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுவீர்கள். நான் என்றென்றும் ஆரோக்கியமானவர் ஆகுவதற்காக முயற்சி செய்வதில்லை. நான் சரீரமற்றவர், குழந்தைகளாகிய உங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்கே நான் வருகின்றேன். சிவபாபா அசரீரியானவர். ஏனைய அனைவரும் தங்கள் சொந்த வயிற்றுக்கான அக்கறையைக் கொண்டுள்ளார்கள். துவாபர யுகத்தில், தத்துவங்களின் ஞானத்தையும், பிரம்ம தத்துவத்தின் ஞானத்தையும் உடைய மகத்தான சந்நியாசிகள் இருந்தார்கள். நினைவில் இருக்கும் வழக்கத்தை அவர்கள்; கொண்டிருந்ததால், வீட்டில் இருந்தவாறே அனைத்தையும் பெற்றுக்கொண்டார்கள். அனைவருக்கும் ஒரு வயிறு உள்ளது; அனைவருக்கும் உணவு தேவை. எவ்வாறாயினும், அவர்கள் யோகத்தில் நிலைத்திருக்கின்றனர், இதனாலேயே அவர்கள் தடுமாறித் திரிய வேண்டியதில்லை. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குச் சதா சந்தோஷமாக இருப்பதற்கான பாதையைக் காட்டுகின்றார். பாபா தனது வழிகாட்டல்களை வழங்கி, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். நீங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பீர்களாக! நீங்கள் அமரத்துவமானவர்களாக இருப்பீர்களாக! அவருடைய வழிகாட்டல்களே அதிசிறந்தவை. மனிதர்கள் பல வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார்கள். சிலர் தமது பரீட்சைகளில் சித்தி எய்தி, சட்டநிபுணர்;கள் ஆகுகின்றார்கள், ஆனால் அவை அனைத்தும் தற்காலிகமான காலப் பகுதிக்கானது. அவர்கள் தங்களினதும், தங்கள் குழந்தைகளினதும் வயிற்றுக்காக முயற்சி செய்கின்றார்கள். இப்பொழுது பாபா உங்களுக்கு ஸ்ரீமத் வழங்குகின்றார்: ஓ குழந்தைகளே, மனிதர்கள் உலக அதிபதிகளாகும் வகையில், ஸ்ரீமத்தைப் பின்பற்றி, இந்த ஆன்மீகக் கல்வியைக் கற்றிடுங்கள், அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். பின்னர் தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதால், அவர்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வந்தர்களாகவும் ஆகுவார்கள். அவரே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர். தந்தையின் குழந்தைகளான நீங்கள் ஆன்மீக சத்திரசிகிச்சை நிபுணர்கள். இதில் எவ்விதச் சிரமமும் கிடையாது. ஆத்மாக்களுக்கு வாயினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளாகிய நீங்கள் அதிமேன்மையான சேவையைச் செய்ய வேண்டும். வேறு எவராலுமே உங்களுக்கு அத்தகைய வழிகாட்டல்களை வழங்க முடியாது. இப்பொழுது நாங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியிருப்பதனால், தந்தையின் பணியைச் செய்ய வேண்டுமா அல்லது லௌகீகத் தொழிலைச் செய்ய வேண்டுமா? பாபாவிடமிருந்தான அழிவற்ற ஞான இரத்தினங்களால் நாங்கள் எங்களுடைய புத்தியை நிரப்புகின்றோம். அவர்கள் சிவனுக்கு முன்னால் சென்று கூறுகின்றார்கள்: எங்களுடைய புத்தியை நிரப்புங்கள்! தாங்கள் 10 அல்லது 20 ஆயிரங்களைப் பெறுவார்கள் என்று அவர்கள் நினைக்கின்றார்கள். அவர்கள் அதனைப் பெற்றுவிட்டால், அவருக்குத் தம்மை அர்ப்பணித்து விடுகிறார்கள். அவர்கள் அவருக்கு அத்தகைய மகத்தான விருந்தோம்பலை வழங்குகின்றார்கள்! அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இப்பொழுது அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை வழங்கி, அவர்களுக்கு எல்லையற்ற வரலாற்றையும், புவியியலையும் கூறுங்கள். இது மிகவும் இலகுவாகும். எல்லைக்குட்பட்ட வரலாற்றிலும், புவியியலிலும் அதிகளவான விடயங்கள் இருக்கின்றன. எல்லையற்ற தந்தை எங்கு வசிக்கின்றார், எவ்வாறு இங்கு அவர் வருகின்றார், எவ்வாறு ஆத்மாக்களாகிய எங்களில் 84 பிறவிகளின் பாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பவையே எல்லையற்ற வரலாறும், புவியியலும் ஆகும். அதிகளவு விளங்கப்படுத்தாதீர்கள். அல்பாவையும், பீற்றாவையும் மாத்திரம் விளங்கப்படுத்துங்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் தந்தையை நினைவுசெய்து, உலக அதிபதிகள் ஆகுகின்றோம். இப்பொழுது நீங்களும் கற்று, ஏனையோருக்கும் கற்பிக்க வேண்டும். அல்பா என்றால் அல்லா. பீற்றா என்றால் இராச்சியம். நீங்கள் இந்த வியாபாரத்தைச் செய்ய வேண்டுமா அல்லது லௌகீக வியாபாரத்தைச் செய்து, இருநூறு அல்லது நானூறு ரூபாய்களைச் சம்பாதிக்கப் போகின்றீர்களா என்பது பற்றி இப்பொழுது சிந்தியுங்கள். பாபா கூறுகின்றார்: ஒரு புத்திரி திறமைசாலியாக இருந்தால், அவளுடைய உறவினர்கள் தங்கள் சரீரங்களின் ஜீவனோபாயத்தைத் தொடர்வதற்காக அவர்களுக்கு எதனையாவது என்னால் கொடுக்க முடியும். எவ்வாறாயினும், புத்திரி நல்லவராகவும், சேவை செய்யக்கூடியவராகவும், உள்ளும் புறமும் சுத்தமானவராகவும், நேர்மையானவராகவும், மிகவும் இனிமையாகப் பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டும். உண்மையில் ஒரு குமாரியின் சம்பாத்தியம் அவளுடைய பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருக்க முடியாது. பாபாவுக்கு உரியவராகிய பின்னரும், நீங்கள் தொடர்ந்தும் லௌகீகத் தொழிலில் பெருமளவு கவனம் செலுத்துவீர்களாயின், அது பாபாவை அவமரியாதை செய்வது போன்றதாகும். தந்தை கூறுகின்றார்: மனிதர்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குங்கள். குழந்தைகள் லௌகீக சேவை செய்வதில் தமது தலையை அடித்துக் கொள்கின்றார்கள்! பாடசாலைகளைத் திறப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இப்பொழுது குழந்தைகளான நீங்கள் எந்தச் சேவையைச் செய்ய வேண்டும் என உங்கள் புத்தியின் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்: இறை அரசாங்கத்தின் சேவையையா அல்லது அந்த அரசாங்கத்தின் சேவையையா? இந்த பாபாவும் நகை வியாபாரத்தைச் செய்து கொண்டிருந்தார். பின்னர் இவர் அவ்வாறாகுவதற்கு, அழியாத ஞான இரத்தினங்களின் வியாபாரத்தைச் செய்ய வேண்டும் என சிரேஷ்ட பாபா (சிவபாபா) கூறினார். அவர் நான்கு கரங்களுடைய ரூபத்தின் காட்சியை இவருக்குக் காட்டினார். இப்பொழுது இவர் உலக இராச்சியத்தைக் கோர வேண்டுமா அல்லது அதனைச் செய்ய வேண்டுமா? இதுவே அனைத்திலும் சிறந்த வியாபாரமாகும். மிக நல்ல வருமானமாயினும், பாபா இவருள் பிரவேசித்து, அல்பாவையும் பீற்றாவையும் நினைவுசெய்யுமாறு இவருக்கு வழிகாட்டல்களை வழங்கினார். இது மிகவும் இலகுவானது! சிறிய குழந்தைகளாலும்கூட கற்க முடியும். சிவபாபாவால் ஒவ்வொரு குழந்தையையும் புரிந்துகொள்ள முடியும். இவராலும் கற்க முடியும். இவர் வெளியில் உள்ள அனைத்தையும் அறிந்தவரும் (பஹர்யாமி), சிவபாபா உள்ளே இருப்பவற்றை அறிந்தவரும் (அந்தர்யாமி) ஆவார்கள். ஒவ்வொருவருடைய வார்த்தைகள், முகம் மற்றும் செயல்களிலிருந்து இந்த பாபாவாலும் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். புத்திரிகளாகிய உங்களுக்கு ஒருமுறை மாத்திரமே ஆன்மீக சேவை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதா அல்லது முட்களை முட்களாகவே இருக்க விடுவதா என்பது உங்கள் இதயத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றிச் சிந்தித்தீர்களா? அசரீரியான கடவுள் பேசுகின்றார்: உங்கள் சொந்தச் சரீரங்கள் உட்பட, உங்கள் சரீர உறவுகள் அனைத்தையும் துண்டித்து விடுங்கள். உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். தந்தை பிராமணர்களாகிய உங்களுடன் மாத்திரமே பிரம்மாவின் சரீரத்தின் மூலம் பேசுகின்றார். அந்தப் பிராமணர்களும் கூறுகின்றார்கள்: தேவர்களாகவுள்ள பிராமணர்களுக்கு வந்தனங்கள். அவர்களோ பௌதீகப் படைப்புக்கள், ஆனால் நீங்களோ வாய்வழித்தோன்றல்கள். பாபாவுக்கு நிச்சயமாகக் குழந்தை பிரம்மா தேவை. ஆகவே அவர்கள் இருவரும் ஒருவராகின்றார்கள். குமார்க்கா, பாபாவுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றார்கள்? சிலர் 6 பில்லியன் குழந்தைகள் என்று கூறுகின்றார்கள், பிரம்மா மாத்திரம் என்று சிலர் கூறுகின்றார்கள். அவருக்குத் திரிமூர்த்தி குழந்தைகள் இருக்கின்றனர் எனவும் உங்களால் கூற முடியும், ஆனால் ஒவ்வொருவரின் தொழிலும் வேறுபட்டதாகும். பிரம்மா விஷ்ணுவின் தொப்பூள்க்; கொடியிலிருந்து தோன்றினார். விஷ்ணு பிரம்மாவின் தொப்பூள்க்; கொடியிலிருந்;து தோன்றினார். ஆகவே அவர்கள் இருவரும் ஒன்;றே. விஷ்ணு 84 பிறவிகளை எடுத்தாலும், பிரம்மா 84 பிறவிகளை எடுத்தாலும், இரண்டும் ஒரே விடயமே. பின்னர் சங்கரரும் இருக்கின்றார். சங்கரர் சிவன் அல்ல. இல்லை, அவர்கள் திரிமூர்த்தி என அழைக்கப்படுகின்றார்கள், ஆனால் நியாயமான குழந்தைகள் இருவர் உள்ளார்கள். இவை அனைத்தும் ஞான விடயங்களாகும். புத்திரிகளாகிய நீங்கள் இந்தச் சேவையைச் செய்வதா அல்லது உங்கள் சாதாரண தரக் கல்வியைக் கற்பதா சிறந்தது? அங்கே அவர்கள் தற்காலிகமான சந்தோஷத்தையும், சிறியதொரு சம்பளத்தையும் பெறுவார்கள். இங்கே நீங்கள் உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்குச் செழிப்பானவர்களாக முடியும். ஆகவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரு குமாரி பந்தனத்திலிருந்து விடுபட்டவர். நீங்கள் தூய்மையானவர்கள் என்ற காரணத்தினால், குமாரிகளாகிய உங்களால் திருமணம் செய்த பெண்களை விடவும் முன்னேறிச் செல்ல முடியும். மம்மாவும் ஒரு குமாரியே. இதில் பணம் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் அதிகமாக முன்னேறிச் சென்றார், எனவே, குமாரிகளாகிய நீங்களும் அவரைப் பின்பற்ற வேண்டும். முட்களை மலர்களாக மாற்றுங்கள். இந்த இறை கல்வியைக் கற்கின்ற வாய்ப்பையா அல்லது அந்தக் கல்வியையா நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்? குமாரிகளுக்காக ஒரு கருத்தரங்கு இருக்க வேண்டும். திருமணம் செய்த பெண்கள் தமது கணவன் போன்றோரை நினைவுசெய்கின்றார்கள். சந்நியாசிகளும் பெருமளவு நினைவு செய்கின்றார்கள். குமாரிகள் அந்த ஏணியில் ஏறக்கூடாது. நீங்கள் வைத்திருக்கின்ற சகவாசம் உங்களைப் பெருமளவு நிறமூட்டுகின்றது. அவள் ஒரு முக்கியஸ்தரின் மகனைப் பார்த்ததும், அவளின் இதயம் அவன் மீது பற்றுக் கொண்டு, அவனைத் திருமணம் செய்து விடுகின்றாள். பின்னர் அனைத்து விளையாட்டும் முடிவடைந்து விடும்! ஒரு நிலையத்தில் ஞானத்தைக் கேட்டுவிட்டு வெளியே சென்றதும், விளையாட்டு முழுவதும் முடிடைந்து விடுகின்றது. இது மதுவனம். அத்தகைய பலர் இங்கு வந்து, தாங்கள் வீட்டுக்குத் திரும்பியதும் ஒரு நிலையத்தை திறக்கப் போவதாகக் கூறுகின்றார்கள், ஆனால் வெளியே சென்றதுமே அவர்கள் மறைந்து விடுகின்றார்கள்! இங்கே அவர்கள் ஞானக் கருத்துக்;களைப் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால் அவர்கள் வெளியே சென்றதுமே அந்த போதை மறைந்து விடுகின்றது. மாயை பெருமளவு எதிர்ப்புக்களை உருவாக்குகின்றாள். மாயையும் கூறுகின்றாள்: ஆகா! இவர் பாபாவை இனங்கண்டபொழுதும், பாபாவை நினைவுசெய்வதில்லை, ஆகவே நான் அவளைக் குத்துவேன். பாபா, எங்களைத் தாக்க வேண்டாம் என்று மாயையிடம் கூறுங்கள் என்று கேட்காதீர்கள். இது ஒரு யுத்த களமாகும். ஒருபக்கம் இராவணனின் சேனையும், மறுபக்கம் இராமரின் சேனையும் இருக்கின்றன. தைரியசாலிகளாகி, இராமரின் பக்கத்திற்கு வாருங்கள். அசுர சமுதாயத்தைத் தேவ சமுதாயமாக மாற்றுகின்ற தொழிலைச் செய்யுங்கள். யாருக்கெல்லாம் நீங்கள் பௌதீகக் கல்வியைக் கற்பிக்கின்றீர்களோ, அவர்கள் கல்வியை நிறைவுசெய்து, வளரும்; வேளையில் விநாசமும் அவர்களின் முன்னிலையில் வந்துவிடும். உங்களால் அதன் அறிகுறிகளைப் பார்க்க முடியும். கிறிஸ்தவ சகோதரர்கள் இருவரும்(அமெரிக்கா, ரஷ்யா) ஒன்றுசேர்ந்தால், யுத்தம் நடைபெற மாட்டாது என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். எவ்வாறாயினும், அது நியதி அல்ல. அவர்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது யோக சக்தி மூலம் இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இதுவே சிவபாபாவிடமிருந்து பாரதத்தின் புராதன ஞானத்தையும், யோகத்தையும் கற்று, பாரதத்தை வைரமாக மாற்றுகின்ற சிவசக்தி சேனையாகும். தந்தை ஒரு சக்கரத்தின் பின்னர் வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். நீங்கள் அனைவரும் இராவணனின் சிறையில் இருக்கின்றீர்கள். நீங்கள் துன்பக் குடிலில் இருக்கின்றீர்கள்; அனைவருமே துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள். பின்னர் இராமர் வந்து, அனைவரையும் விடுதலை செய்து, துன்பமற்ற குடிலாகிய, சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஸ்ரீமத் கூறுகின்றது: முட்களை மலர்களாக மாற்றுவதுடன், மனிதர்களைத் தேவர்களாக மாற்றுங்கள். நீங்கள் மாஸ்டர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர்கள். நீங்கள் இந்த வியாபாரத்தையே செய்ய வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால் மாத்திரமே நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். தந்தை உங்களுக்கு அறிவுரை கூறுகின்றார். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இது எனது வேண்டுகோள், ஆனால் அதை நிறைவேற்றுவதும், நிறைவேற்றாமல் விடுவதும் உங்கள் விருப்பமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சேவாதாரி ஆகுவதற்கு, உள்ளும், புறமும் சுத்தமானவராகவும், நேர்மையானவராகவும் இருங்கள். உங்கள் உதடுகள் மூலம் மிகவும் இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை உங்கள் சரீரத்திலிருந்தும், சரீர உறவினர்களிலிருந்தும் அகற்றுங்கள். நீங்கள் வைத்துள்ள சகவாசத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

2. தந்தையைப் போல், மாஸ்டர் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகுங்கள். ஆன்மீக சேவையைச் செய்து, ஓர் உண்மையான வருமானத்தை ஈட்டுங்கள். ஆன்மீகத் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, ஓர் ஆன்மீக சமூக சேவையாளர் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் நானும் என்னுடைய பாபாவும் எனும் வழிமுறை மூலம் ஜீவன்முக்தி ஸ்திதியை அனுபவம் செய்து, ஓர் இலகுயோகி ஆகுவீர்களாக.

ஒரு பிராமணர் ஆகுவதெனில், உங்கள் சரீரம், உங்கள் சரீர உறவுமுறைகள், வசதிகளின் பந்தனங்கள் எதிலிருந்தும் விடுதலை பெற்றிருப்பது என்று அர்த்தமாகும். உங்கள் சரீர உறவுமுறைகள் உங்கள் சரீரத்துடன் ஒரு தொடர்பைக் கொண்டிருப்பதில்லை, ஆனால் ஆத்மாவுடனேயே தொடர்பைக் கொண்டு;ள்ளன. ஒருவர் இன்னுமொருவரின் ஆதிக்கத்திற்குட்பட்டால், அது ஒரு பந்தனமாகும். எவ்வாறாயினும், ஒரு பிராமணராக இருப்பதெனில், வாழ்வில் விடுதலை பெற்றிருப்பது (ஜீவன்முக்தி அடைந்திருத்தல்) என்பதாகும். உங்கள் பௌதீக அங்கங்களின் ஆதாரம் உங்களுக்கு இருக்கும்வரையில், நீங்கள் செயல்களைச் செய்யவே வேண்டும், ஆனால் நீங்கள் கர்மத்தின் கர்ம பந்தனங்களைக் கொண்டிராமல்;, கர்ம உறவுமுறைகளையே கொண்டிருங்கள். இவ்விதமாக விடுதலை அடைந்திருப்பவர்கள் சதா வெற்றி சொரூபங்களாக இருக்கின்றனர். இதற்குப் பயன்படுத்த வேண்டிய இலகுவான வழிமுறை நானும் எனது பாபாவும்! என்பதாகும். இந்த நினைவானது உங்களை ஓர் இலகு யோகியாகவும், ஒரு வெற்றி சொரூபமாகவும், பந்தனங்கள் எதனிலிருந்தும் விடுபட்டவராகவும் ஆக்குகின்றது.

சுலோகம்:
நான், என்னுடைய என்ற கலப்படத்தை முடித்துவிடுவதே, ஒரு நிஜத் தங்கம் ஆகுவதாகும்.

மாதேஷ்வரிஜியின் பெறுமதிமிக்க, மேன்மையான வாசகங்கள்.

கீதை கூறுகின்றது: ஓ கீதையின் கடவுளே, வந்து நீங்கள் செய்த சத்தியத்தை நிறைவேற்றுங்கள். ஆகவே, முன்னைய கல்பத்தில் தான் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவதற்கு, கீதையின் கடவுளே இப்பொழுது வந்துவிட்டார். அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, பாரதத்தில் உச்சக்கட்ட அதர்மம் உள்ளபொழுது, எனது சத்தியத்தை நிறைவேற்றுவதற்கு, நான் நிச்சயமாக வருகின்றேன். நான் வருகின்றேன் என்றால் நான் ஒவ்வொரு யுகத்திலும் வருகின்றேன் என்று அர்த்தமல்ல. அனைத்து யுகங்களிலும் தர்மத்தின் அவதூறு இருக்கவில்லை. தர்மத்தின் அவதூறு கலியுகத்தில் மாத்திரமே நடைபெறுகின்றது. ஆகவே, கலியுகத்தின் இறுதியில் கடவுள் வருகின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் கலியுகம் வருகின்றது, எனவே அவர் நிச்சயமாக ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றார். ஒவ்வொரு கல்பத்திலும் நான்கு யுகங்கள் உள்ளன. இது ஒரு கல்பம் என்று அறியப்படுகின்றது. அரைக் கல்பத்திற்கு, சத்திய, திரேதா யுகங்களில், ஆத்மாக்கள் சதோகுணியாகவும், சதோபிரதானாகவும் இருப்பதால், அங்கே கடவுள் வருவதற்கான அவசியம் இல்லை. துவாபர யுகத்தில், ஏனைய சமயங்கள் ஆரம்பிக்கின்றன, ஆனால் அங்கேயும் தர்மத்தின் உச்சக்கட்ட அவதூறு இருப்பதில்லை. கலியுகத்தைத் தவிர, அந்த மூன்று யுகங்களிலும் கடவுள் வருவதில்லை என்பதையே இது காட்டுகின்றது. இந்த யுகத்தின் இறுதியிலேயே தர்மத்தின் உச்சக்கட்ட அவதூறு உள்ளது. எனவே, இந்நேரத்தில் கடவுள் வந்து, அதர்மத்தை அழித்து, சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார். அவர் துவாபர யுகத்தில் வந்திருப்பின், அப்பொழுது துவாபர யுகத்தின் பின்னர் சத்திய யுகம் இருந்திருக்க வேண்டும். ஆகவே, அப்பொழுது ஏன் கலியுகம் ஏற்பட்டது? கடவுள் காரிருள் மிக்க கலியுகத்தை ஸ்தாபித்தார் என்று கூற முடியாது. அது அவ்வாறிருக்க முடியாது. இதனாலேயே கடவுள் கூறுகின்றார்: நான் ஒருவரே, நான் ஒருமுறையே வருகின்றேன். நான் அதர்மத்தை, அதாவது, கலியுகத்தை அழித்து, சத்திய யுகத்தை ஸ்தாபிப்பதால், சங்கம யுகத்திலேயே எனது வருகைக்கான காலம் உள்ளது. அச்சா.