10.11.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli    06.03.85     Om Shanti     Madhuban


சங்கமயுகம் பண்டிக்கைக்கான யுகம், பிராமண வாழ்க்கை உற்சாகமான வாழ்க்கை.


இன்று, அதிபுனிதமான, அதிமேலான தந்தை தனது புனிதமான, சந்தோஷமான அன்னங்களுடன் ஹோலியைக் கொண்டாடுவதற்காக வந்துள்ளார். திரிமூர்த்தி தந்தை உங்களுக்கு மூன்று வகையான ஹோலியின் தெய்வீக அர்த்தத்தைக் கூறுவதற்காக வந்துள்ளார். சங்கமயுகம் புனிதமான யுகம் ஆகும். சங்கமயுகம் பண்டிக்கைக்கான யுகம் ஆகும். மேன்மையான ஆத்மாக்களான உங்களின் ஒவ்வொரு நாளும்;, ஒவ்வொரு கணமும் உற்சாகத்தால் நிறைந்துள்ள பண்டிகை ஆகும். ஞானம் அற்ற மக்கள் தங்களுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். எவ்வாறாயினும், மேன்மையான ஆத்மாக்களான உங்களுக்கு இந்த பிராமண வாழ்க்கை, உற்சாகமான வாழ்க்கை ஆகும். இது ஊக்கமும் சந்தோஷமும் நிறைந்த ஒரு வாழ்க்கை. இதனாலேயே, சங்கமயுகம் பண்டிகைக்கான யுகமாக உள்ளது. இறை வாழ்க்கை என்பது எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்துள்ள வாழ்க்கை ஆகும். நீங்கள் உங்களின் மேன்மையான வாழ்ககைகளை சதா சந்தோஷமாக ஆடியவண்ணம், ஞான அமிர்தத்தைப் பருகிய வண்ணம், சந்தோஷப் பாடல்களைப் பாடிய வண்ணம், உங்களின் இதயத்தில் அன்புடனும் கழிக்கிறீர்கள். ஞானம் அற்ற ஆத்மாக்கள் ஒரு நாள் கொண்டாடி, தற்காலிகமான உற்சாகத்தை அனுபவம் செய்கிறார்கள். பின்னர் அவர்கள் முன்பு எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறே ஆகிவிடுகிறார்கள். நீங்கள் பண்டிகைகளைக் கொண்டாடும்போது புனிதம் ஆகுவதுடன், மற்றவர்களையும் புனிதமானவர்கள் ஆக்குகிறீர்கள். அவர்களோ வெறுமனே கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்களோ அவ்வாறு ஆகுவதற்காகக் கொண்டாடுகிறீர்கள். மக்கள் மூன்று வகையான ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். முதலாவது எரிக்கும் ஹோலி. இரண்டாவது, மற்றவர்களை நிறமூட்டும் ஹோலி. மூன்றாவது, புண்ணிய சந்திப்பைக் கொண்டாடும் ஹோலி. இந்த மூன்று வகையான ஹோலி கொண்டாட்டங்களுக்கும் ஆன்மிக அர்த்தம் உள்ளன. ஆனால் அவர்களோ பௌதீகமாகவே அவற்றைத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இந்த சங்கமயுகத்தில், மகாத்மாக்களான நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர் ஆகும்போது, அதாவது, நீங்கள் ஹோலி ஆகும்போது, முதலில் என்ன செய்கிறீர்கள்? அனைத்திற்கும் முதலில், யோக அக்கினியில் உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் மற்றும் சுபாவங்களை எரிக்கிறீர்கள். அதன் பின்னர் மட்டுமே உங்களால் நினைவின் மூலம் தந்தையின் சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்பட முடியும். நீங்களும் முதலில் எரிக்கும் ஹோலியைக் கொண்டாடுகிறீர்கள். பின்னர் இறை சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்படுகிறீர்கள். அதாவது, நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகுகிறீர்கள். தந்தை ஞானக்கடல். எனவே, குழந்தைகளான நீங்களும் அவரின் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டு ஞான சொரூபங்கள் ஆகுகிறீர்கள். எனவே, தந்தையின் நற்குணங்கள் உங்களின் நற்குணங்கள் ஆகுகின்றன. தந்தையின் சக்திகள் உங்களின் பொக்கிஷங்கள் ஆகுகின்றன. அவை உங்களின் சொத்துக்கள் ஆகுகின்றன. சகபாடியின் சகவாசம் என்றென்றும் நிலைத்திருக்கிறது. அது பிறவி பிறவியாக நிலைத்திருக்கிறது. நீங்கள் சகபாடியின் சகவாசத்தால் நிறமூட்டப்படும்போது, ஆன்மீக நிறத்தின் ஹோலியை நீங்கள் கொண்டாடும்போது, ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும், தந்தையினதும் குழந்தைகளினதும் மேன்மையான சந்திப்பு சதா தொடர்ந்து இடம்பெறுகிறது. ஞானம் அற்ற மக்கள், உங்களின் இந்த ஆன்மீக ஹோலியைப் பின்னர் ஞாபகார்த்தமாகக் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். உற்சாகம் நிறைந்த உங்களின் நடைமுறை வாழ்க்கையின் வெவ்வேறு ஞாபகார்த்தங்களை அவர்கள் கொண்டாடி, தற்காலிகமான காலப்பகுதிக்கு சந்தோஷப்படுகிறார்கள். உங்களின் மேன்மையான வாழ்க்கைகளின் ஒவ்வோர் அடியிலும் நீங்கள் பெற்ற சிறப்பியல்புகளை அவர்கள் நினைவு செய்வதுடன், குறுகிய காலத்திற்குக் களிப்புடன் கொண்டாடுகிறார்கள். இந்த ஞாபகார்த்தத்தைப் பார்க்கும்போதும் கேட்கும்போதும், அது உங்களின் சிறப்பியல்புகள் என்பதனால் நீங்கள் களிப்படைகிறீர்கள், அல்லவா? நீங்கள் மாயையை எரிக்கிறீர்கள். அவர்கள் ஒரு ஹோலிகாவைச் செய்து அதை எரிக்கிறார்கள். அவர்கள் இத்தகைய சுவாரசியமான கதைகளை உருவாக்கியுள்ளார்கள். அதை நீங்கள் கேட்கும்போது, எவ்வாறு உங்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவர்கள் கதைகள் ஆக்கியுள்ளார்கள் என நீங்கள் வியப்படைகிறீர்கள். உங்களின் வெவ்வேறு பேறுகளின் ஞாபகார்த்தமாகவே அவர்கள் ஹோலி என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். நீங்கள் இப்போது சதா சந்தோஷமாக இருக்கிறீர்கள். உங்களின் சந்தோஷப் பேற்றின் ஞாபகார்த்தமாக அவர்கள் ஹோலியை அதிகளவு சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அந்த வேளையில் சகல துன்பங்களையும் மறக்கிறார்கள். ஆனால், நீங்களோ எல்லா வேளையும் துன்பத்தை மறந்துவிடுகிறீர்கள். உங்களின் சந்தோஷப் பேற்றின் ஞாபகார்த்தத்தை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.

அத்துடன், கொண்டாட்ட வேளையில், இளைஞர்கள், வயதானவர்கள் அனைவரும் மிகவும் இலேசாகி, இலேசான இதயத்துடன் ஹோலியைக் கொண்டாடுகிறார்கள். அந்தத் தினத்தில், அனைவரின் மனோநிலையும் மிகவும் இலேசாக இருக்கும். எனவே, நீங்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பதன் ஞாபகார்த்தமே இதுவாகும். நீங்கள் இறைவனின் சகவாசத்தால் நிறமூட்டப்படும்போது, இலேசாகவும் ஒளியாகவும் ஆகுகிறீர்கள், அல்லவா? எனவே, இந்தச் சிறப்பியல்பின் ஞாபகார்த்தமே உள்ளது. அத்துடன், அவர்கள் என்ன உறவுமுறையில் இருந்தாலும், இளைஞர்களும் வயதானவர்களும் அனைவரும் சமமாக இருக்கும் உணர்வைக் கொண்டிருப்பார்கள். ஒரு சிறிய பேரக்குழந்தையாக இருந்தாலும், அவன் தனது பாட்டனாருக்கு நிறம் பூசுவான். வயது, உறவுமுறைகள் என்ற உணர்வையே அவர்கள் மறந்துவிடுவார்கள். சமமாக இருக்கும் உணர்வையே கொண்டிருப்பார்கள். இதுவும் நீங்கள் குறிப்பாக வேறு எந்த உறவுமுறையின் திருஷ்டியும் இல்லாமல், சமமாக, அதாவது, சகோதரத்துவ ஸ்திதியில் இருப்பதன் ஞாபகார்த்தம் ஆகும். இது நீங்கள் சகோதரத்துவ ஸ்திதியில் சமமாக இருப்பதன் ஞாபகார்த்தம் ஆகும். அத்துடன், இந்தத் தினத்தில், அவர்கள் நீர்த் துவக்குகளில் பல்வகையான வர்ண நீரை நிரப்பி, ஒருவருக்கொருவர் தெளித்து நிறமூட்டுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் சேவையின் ஞாபகார்த்தமே இதுவாகும். உங்களின் திருஷ்டி எனும் தெளிப்பானால் எந்தவோர் ஆத்மாவிற்கும் நிறத்தைத் தெளித்து, அவர்களை அன்பின் சொரூபமாக, ஆனந்த சொரூபமாக, சந்தோஷ சொரூபமாக, அமைதி சொரூபமாக, சக்தி சொரூபமாக ஆக்குகிறீர்கள்? அந்த நிறம் நிரந்தரமாக இருக்கும் வகையில் நீங்கள் அவர்களுக்கு நிறமூட்டுகிறீர்கள். அதைக் கழுவ முடியாது. நீங்கள் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, ஒவ்வோர் ஆத்மாவும் சதா இந்த நிறத்தால் நிறமூட்டப்பட விரும்புகிறார்கள். எனவே, உங்கள் அனைவரிடமும் ஆன்மீக நிறங்களின் ஆன்மீக திருஷ்டியின் தெளிப்பான்கள் இருக்கிறதல்லவா? நீங்கள் ஹோலி விளையாடுகிறீர்கள், அல்லவா? உங்கள் அனைவரினதும் வாழ்க்கையின் ஞாபகார்த்தமே இந்த ஆன்மிக ஹோலி. நீங்கள் பாப்தாதாவுடன் புண்ணிய சந்திப்பைக் கொண்டாடி, அவரைச் சந்திப்பதன் மூலம் அவருக்குச் சமமானவர் ஆகுகிறீர்கள். நீங்கள் ஒன்றிணைந்தவர் ஆகும்படியாக புண்ணிய சந்திப்பைக் கொண்டாடினீர்கள். எவராலும் உங்களைப் பிரிக்க முடியாது.

இந்த நாளும் கடந்த காலத்திற்கான அனைத்தையும் மறப்பதற்கான நாள் ஆகும். நீங்கள் கடந்த 63 பிறவிகளை மறந்துவிட்டீர்கள், அல்லவா? நீங்கள் கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி இடுகிறீர்கள். இதனாலேயே, ஹோலியின் அர்த்தங்களில் ஒன்று, கடந்தது கடந்தாக இருக்கட்டும்! என்பதாகும். சிலருக்கிடையே எவ்வளவு கடுமையான விரோதம் இருந்தாலும், அது மறக்கப்படுகிறது. அதன்பின்னர், அது சந்திப்பைக் கொண்டாடும் நாளாகக் கருதப்படுகிறது. நீங்களும் ஆத்மாக்களின் எதிரியான அசுர சம்ஸ்காரங்களையும் அசுர சுபாவத்தையும் மறந்து, இறைவனுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுகிறீர்கள், அல்லவா? பழைய சம்ஸ்காரங்கள் உங்களின் விழிப்புணர்வில், உங்களின் எண்ணங்களிலேனும் பிரவேசிக்க முடியாது. இவ்வாறு மறக்கின்ற உங்களின் சிறப்பியல்பின் ஞாபகார்த்தமும் கொண்டாடப்படுகின்றது. எனவே, உங்களிடம் எத்தனை சிறப்பியல்புகள் உள்ளன என்பதைக் கேட்டீர்களா? அவர்கள் உங்களின் ஒவ்வொரு நற்குணத்திற்கும் சிறப்பியல்புக்கும் செயலுக்கும் வெவ்வேறு ஞாபகார்த்தங்களைச் செய்துள்ளீர்கள். ஆகவே, அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஞாபகார்த்தமாகவும், அவர்களை நினைக்கும்போது மற்றவர்களுக்கு சந்தோஷம் ஏற்படுகின்ற ஆத்மாக்கள் எத்தனை மகத்தானவர்கள்? நீங்கள் யார் என்பதைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் எவ்வாறாயினும் புனிதமானவர்கள். ஆனால், அத்துடன் நீங்கள் விசேடமானவர்கள்.

இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்கு உங்களின் மகத்துவத்தின் ஞாபகார்த்தத்தைப் பற்றித் தெரியாவிட்டாலும், உலக மக்கள் உங்களின் நினைவின் முக்கியத்துவத்தை நினைவு செய்து, அதைக் கொண்டாடுகிறார்கள். ஹோலி என்றால் என்னவென்பதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? நீங்கள் அனைவரும் பாபாவின் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். உங்களால் தந்தையைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாத அளவிற்கு நீங்கள் அன்பெனும் நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். நீங்கள் அன்பிலே மூழ்கியிருந்த வண்ணம் தொடர்ந்து உண்டு, பருகி, நடந்து, ஆடிப் பாடுங்கள். நீங்கள் வேகமான நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள், அல்லவா? அல்லது, நிறம் பலவீனமாக உள்ளதா? நீங்கள் எந்த நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள்: வேகமானதா அல்லது மெதுவானதா? நீங்கள் கடந்ததைக் கடந்ததாக ஆக்கிவிட்டீர்களா? கடந்த காலத்தின் விடயங்கள் தவறுதலாகவேனும் நினைவு செய்யப்படக்கூடாது. நான் என்ன செய்வது? அது நினைவிற்கு வருகிறதே? என நீங்கள் கூறுகிறீர்கள். அது தவறுதலாக வருகிறது. புதிய பிறவி, புதிய விடயங்கள், புதிய சம்ஸ்காரங்கள், புதிய உலகம். பிராமணர்களின் இந்த உலகமும் புதிய உலகமே. பிராமணர்களின் மொழியும் புதியதே. ஆத்மாக்களின் மொழி புதியதல்லவா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கடவுளின் சகல விடயங்களும் புதியவை. எனவே, மொழியும் புதியது. நடைமுறை, சம்பிரதாயங்களும் புதியவை. தொடர்புகளும் உறவுமுறைகளும் புதியவை. அனைத்தும் புதியவை ஆகியுள்ளன. பழையவை அனைத்தும் முடிந்துவிட்டன. புதியது ஆரம்பமாகிவிட்டது. நீங்கள் பழைய பாடல்களை அன்றி, புதிய பாடல்களையே பாடுகிறீர்கள். என்ன? ஏன்? என்பவை பழைய பாடல்கள். ஆஹா!ஆஹா!ஓஹோ! இவை புதிய பாடல்கள். எனவே, நீங்கள் என்ன பாடல்களைப் பாடுகிறீர்கள்? நீங்கள் சோகப் பாடல்களைப் பாடுவதில்லை, அல்லவா? சோகத்தில் அழுவதற்கு இந்த உலகில் பலர் இருக்கிறார்கள். நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. எனவே, நீங்கள் அநாதியான ஹோலியைக் கொண்டாடினீர்கள். அதாவது, நீங்கள் கடந்த காலத்தைக் கடந்ததாக்கிவிட்டு, சம்பூரணமாகத் தூய்மையானவர் ஆகினீர்கள். நீங்கள் தந்தையின் சகவாசம் என்ற நிறத்தால் நிறமூட்டப்பட்டுள்ளீர்கள். எனவே, நீங்கள் ஹோலியைக் கொண்டாடினீர்கள், அல்லவா?

தந்தையும் நீங்களும் எப்போதும் ஒன்றாகவே இருப்பீர்கள். நீங்கள் சங்கமயுகத்தில் சதா ஒன்றாக இருப்பீர்கள். உங்களைப் பிரிக்க முடியாது. நீங்களும் பாபாவும் மட்டுமே இருக்கிறீர்கள் என்ற ஊக்கமும் உற்சாகமும் உங்களின் இதயத்தில் உள்ளதல்லவா? அல்லது, திரைக்குப் பின்னால் மூன்றாவதாக ஒருவர் இருக்கிறாரா? சிலவேளைகளில் எலியும் சிலவேளைகளில் பூனையும் வெளிப்படவில்லை, அல்லவா? அனைத்தும் முடிந்துவிட்டன, அல்லவா? நீங்கள் இப்போது தந்தையைக் கண்டடைந்திருப்பதனால், நீங்கள் அனைத்தையும் அடைந்துள்ளீர்கள். வேறு எதுவும் எஞ்சியிருப்பதில்லை. வேறெந்த உறவுமுறைகளும் இல்லை. வேறெந்தப் பொக்கிஷங்களோ அல்லது சக்திகளோ அல்லது நற்குணங்களோ அல்லது ஞானமோ அல்லது பேறுகளோ எஞ்சியிருப்பதில்லை. எனவே, இதைவிட உங்களுக்கு வேறென்ன வேண்டும்? இதுவே ஹோலியைக் கொண்டாடுதல் எனப்படுகிறது. உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் அதிகளவு களிப்புடன் இருக்கிறீர்கள். நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள். ஒரு சிப்பியேனும் இல்லாத சக்கரவர்த்திகள். துன்பம் அற்ற இடத்தின் சக்கரவர்த்திகள். வேறு எவராலும் இத்தகைய களிப்புடன் இருக்க முடியாது. உலகின் அதி செல்வந்தராக இருந்தாலும், உலகின் அதி பிரபல்யமானவராக இருந்தாலும், வேதங்களைக் கற்ற ஒரு மகா பண்டிதராகவோ, தீவிர பக்தராகவோ, முன்னணி விஞ்ஞானியாகவோ அல்லது வேறெந்தத் தொழிலைச் சேர்ந்த எவராகவோ இருந்தாலும், அவரால் சிரமம் அற்ற இத்தகைய களிப்பான வாழ்க்கையை வாழ முடியாது. இங்கு அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. கவலைகள் எவையும் இல்லை. உங்களிடம் தூய, சாதகமான எண்ணங்களே உள்ளன. நீங்கள் நலம்விரும்பிகள். கல்பம் முழுவதும் சுற்றிவந்து, இத்தகைய களிப்பான வாழ்க்கை வாழும் எவரையாவது கண்டுபிடிக்க முடியுமா எனப் பாருங்கள். அவ்வாறு உங்களால் முடியுமாயின், அவரை இங்கே கொண்டு வாருங்கள்! இதனாலேயே, மதுவனத்தில், தந்தையின் உலகில், களிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற பாடலை நீங்கள் பாடுகிறீர்கள். நீங்கள் உண்ணும்போது, களிப்பு உள்ளது. நீங்கள் தூங்கும்போது, களிப்பு உள்ளது. தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு தூங்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. தந்தையுடன் தூங்கச் செல்லுங்கள். உங்களுக்கு எந்தவித மாத்திரையும் தேவைப்படாது. நீங்கள் தனியாகத் தூங்கினாலேயே, உயர் குருதி அழுத்தம் அல்லது வலி இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அப்போதே, நீங்கள் மாத்திரை எடுக்க வேண்டியுள்ளது. பாபா உங்களுடன் இருக்கட்டும். பாபா, நான் இப்போது உங்களுடன் தூங்கப் போகிறேன் எனக் கூறுங்கள். இதுவே மாத்திரை. ஆரம்பத்தில் மாத்திரைகள் இல்லாததைப் போன்றதொரு காலம் வரும். உங்களுக்கு அது நினைவிருக்கிறதல்லவா? ஆரம்பத்தில், நீண்ட காலத்திற்கு மாத்திரைகள் இருக்கவில்லை. ஆமாம், நீங்கள் பாலின் மேலே உள்ள சிறிதளவு ஆடையை அல்லது சிறிதளவு வெண்ணையை உண்டீர்கள். நீங்கள் ஒருபோதும் மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, ஆரம்பத்தில் அந்தப் பயிற்சி உங்களுக்குக் கொடுக்கப்பட்டதல்லவா? உங்களின் சரீரங்கள் பழையவை. இறுதியிலும், ஆரம்பத்தில் இருந்த அந்த நாட்கள் மீண்டும் திரும்பும். அனைவரும் தொடர்ந்து தனித்துவமான காட்சிகளைக் காண்பார்கள். ஒன்றுகூடலின் அதே பத்தி காணப்படும். அப்போது சேவை முடிந்துவிடும். இப்போது, சேவையின் காரணத்தினால், நீங்கள் அங்கும் இங்கும் பரந்து வாழ்கிறீர்கள். அந்த வேளையில், நதிகள் அனைத்தும் கடலுடன் சங்கமம் ஆகும். எவ்வாறாயினும், அந்த நேரம் மிகவும் இக்கட்டானது. உங்களிடம் சகல வசதிகள் இருந்தாலும், அவை செயற்படாது. இதனாலேயே, உங்களின் புத்திகளின் அலைவரிசைகள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அப்போதுதான், அந்த வேளையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தொடுகை ஏற்படும். நீங்கள் ஒரு விநாடி தாமதம் ஆகினாலும், இழந்துவிடுவீர்கள். அவர்கள் ஒரு விநாடி பட்டனை அழுத்துவற்குத் தாமதமாகினால் என்ன நிகழும்? அதேபோன்று, இங்கும், நீங்கள் தொடுகையைப் பெறுவது ஒரு விநாடி தாமதித்தாலும், இங்கு வருவது உங்களுக்குச் சிரமம் ஆகிவிடும். அவர்களும் அதிகளவு கவனம் செலுத்தியவண்ணம் அங்கு அமர்ந்திருப்பார்கள். அதேபோன்று, இங்கும், இது புத்தியின் தொடுகை ஆகும். ஆரம்பத்தில், பலர் வீடுகளில் இருந்தபோது, வாருங்கள், அங்கு செல்லுங்கள்! இப்போது இங்கு வாருங்கள்! என்ற ஒலி அவர்களை அழைத்தது. அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு அங்கு வந்தார்கள். அதேபோன்று, இறுதியிலும், தந்தையின் ஒலி உங்களை வந்தடையும். குழந்தைகள் அனைவரும் பௌதீகமாக அழைக்கப்பட்டதைப் போன்று, அவர் குழந்தைகள் அனைவரையும் வாருங்கள், வாருங்கள்! என சூட்சுமமான முறையில் அழைப்பார். அவ்வளவுதான்! வந்து, அவருடன் செல்லுங்கள். இதனாலேயே, உங்களின் புத்தியானது எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். உங்களின் புத்தி வேறெங்கேயாயினும் ஈர்க்கப்பட்டால், நீங்கள் தந்தை உங்களை அழைப்பதைத்; தவறவிட்டுவிடுவீர்கள். இவை அனைத்தும் நிகழவுள்ளன.

ஆசிரியர்களான நீங்கள் எவ்வாறாயினும் இங்கு வந்துவிடுவீர்கள் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கு தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுத்து, அங்கு ஒரு விசேட பணியைச் செய்யக்கூடிய சாத்தியமும் உள்ளது. நீங்கள் மற்றவர்களுக்குச் சக்தியைக் கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் யாரையாவது உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதுவும் நிகழலாம். ஆனால், அது தந்தையின் வழிகாட்டல்களுக்கேற்பவே நிகழ வேண்டும். உங்களின் சொந்த கட்டளைகளுக்கேற்பவோ அல்லது உங்களின் பற்றினாலோ இல்லை. ஓ, எனது நிலையம்! நான் இன்ன மாணவரை என்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும். இவர் விசேடமானவர். அவர் ஓர் உதவியாளர்! என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அவ்வாறும் இருக்கக்கூடாது. நீங்கள் யாருக்காவது காத்திருந்தால், நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள். நீங்கள் இந்தளவிற்கு ஆயத்தமாக இருக்கிறீர்கள், அல்லவா?இதுவே என்றும் தயாராக இருத்தல் எனப்படுகிறது. அனைத்தும் எப்போதும் மூட்டைகட்டித் தயாராக இருக்க வேண்டும். அந்த வேளையில் நீங்கள் மூட்டை கட்டுவதைப் பற்றி நினைக்கக்கூடாது: நான் இதைச் செய்ய வேண்டும், நான் அதைச் செய்ய வேண்டும். சாகார் தினங்களில், எவ்வாறு சேவையாளர் குழந்தைகளின் பெட்டிகள் எப்போதும் தயாராக இருந்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கிறது. புகைவண்டி வருவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது, நீங்கள் இப்போது செல்ல வேண்டும் என்ற உத்தரவை அவர்கள் பெறுவார்கள். எனவே, அவர்களின் பெட்டி, படுக்கைகள் எப்போதும் தயாராக இருக்கும். அவர்கள் ஏற வேண்டிய புகைவண்டி, முதல் நிலையத்தில் வந்திருக்கும்போதே, அவர்கள் தமது நிலையத்திற்குச் செல்வார்கள். நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள், அல்லவா? இங்கும், உங்களின் மனதின் ஸ்திதி என்ற பெட்டி, படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும். தந்தை உங்களை அழைத்தவுடன், குழந்தைகள் அங்கு நிற்க வேண்டும். இதுவே என்றும் தயாராக இருத்தல் எனப்படுகிறது. அச்சா.

பாபாவின் சகவாசத்தின் நிறத்தால் எப்போதும் நிறமூட்டப்பட்டிருப்பவர்களுக்கும், கடந்தகாலத்தைக் கடந்ததாக்கிவிட்டு, தமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மையாக்குபவர்களுக்கும், சதா இறைவனுடன் சந்திப்பைக் கொண்டாடுபவர்களுக்கும், நினைவில் இருந்தவண்ணம் ஒவ்வொரு செயலையும் செய்பவர்களுக்கும், அதாவது, தமது ஒவ்வொரு செயலையும் ஒரு ஞாபகார்த்தம் ஆக்குபவர்களுக்கும், சதா சந்தோஷத்தில் ஆடிப்பாடுபவர்களுக்கும், சங்கமயுகத்தில் களிப்புடன் கொண்டாடுபவர்களுக்கும், தந்தைக்குச் சமமாக இருப்பதுடன் அவரின் ஒவ்வோர் எண்ணத்தையும் அறிந்து கொள்ளும் குழந்தைகளுக்கும், தமது புத்திகளை எப்போதும் மேன்மையாகவும் தெளிவாகவும் வைத்திருப்பவர்களுக்கும், இத்தகைய புனிதமான, சந்தோஷமான அன்னங்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

குழந்தைகள் அனைவரினதும் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், பாப்தாதா ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்:
இந்தத் தேசத்தில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் குழந்தைகள் அனைவரிடமிருந்தும் அன்பும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த கடிதங்களையும் செய்திகளையும் பாப்தாதா பெற்றுள்ளார். அவற்றில் சிலது, அவர்களின் முயற்சிகளுக்கான சத்தியங்களாக இருந்தன. பாப்தாதா புனித அன்னங்களான உங்கள் அனைவருக்கும், தந்தையைப் போன்றே நானும் என்ற விசேட சுலோகனை நினைவூட்டுகிறார். இது உங்களின் விழிப்புணர்வில் ஆசீர்வாதத்தின் ரூபத்தில் உள்ளது. நீங்கள் எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னர் அல்லது எந்தவோர் எண்ணத்தை உருவாக்க முன்னர், அனைத்திற்கும் முதலில் சோதித்துப் பாருங்கள்: இந்த எண்ணம் தந்தையின் எண்ணமா? தந்தையின் செயல்கள் எனது செயல்களாக உள்ளனவா? ஒரு விநாடியில் சோதித்து, அதை நடைமுறையில் இடுங்கள். அப்போது நீங்கள் தந்தைக்குச் சமமான, சதா சக்திசாலி ஆத்மாவாகி வெற்றியை அனுபவம் செய்வீர்கள். வெற்றி உங்களின் பிறப்புரிமை. இத்தகைய இலகுவான பேற்றினை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். நான் ஒரு வெற்றி நட்சத்திரம். எனவே, வெற்றியை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. எப்போதும் உங்களின் கழுத்தில் வெற்றி மாலையின் மணிகள் போடப்பட்டிருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு செயலிலும் தொடர்ந்து வெற்றியை அனுபவம் செய்யுங்கள். இன்று, இந்த ஹோலி ஒன்றுகூடலில், பாப்தாதா தனிப்பட்ட முறையில் புனித அன்னங்களான உங்கள் அனைவரையும் பார்த்து, உங்களுடன் ஹோலி கொண்டாடுகிறார். அவர் அனைவரையும் அன்புடன் பார்த்து, அனைவரின் சிறப்பியல்பின் பல்வகை நறுமணங்களையும் நுகர்கிறார். ஒவ்வொருவரின் சிறப்பியல்பின் நறுமணமும் மிகவும் இனிமையானது. சிறப்பியல்புடன் இருக்கும் விசேட ஆத்மா ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும், தந்தை இந்தப் பாடலைப் பாடுகிறார்: ஆஹா! எனது இலகு யோகிக் குழந்தையே! ஆஹா! எனது பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிக் குழந்தையே! எனவே, நீங்கள் அனைவரும் உங்களின் சிறப்பியல்பிற்கும் பெயருக்கும் ஏற்ப தனிப்பட்ட முறையில், அன்பையும் நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் எப்போதும் பாப்தாதாவின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருங்கள். மாயையைக் கண்டு பயப்படாதீர்கள். அது ஒரு சிறிய விடயம். அது எதுவும் பெரியதல்ல. சிறிய விடயத்தைப் பெரியது ஆக்காதீர்கள். பெரிய விடயத்தைச் சிறியது ஆக்குங்கள். நீங்கள் மேலே இருந்தால், பெரிய விடயமும் மிகச் சிறியதாகிவிடும். நீங்கள் கீழே இருந்தால், சிறிய விடயங்களும் பெரியதாகவே தோன்றும். இதனாலேயே, உங்களிடம் பாப்தாதாவின் சகவாசமும் அவரின் கரமும் உள்ளன. ஆகவே, பயப்படாதீர்கள்.

பறந்துகொண்டே இருங்கள். பறக்கும் ஸ்திதியால், ஒரு விநாடியில் அனைத்திற்கும் அப்பால் செல்லுங்கள். தந்தையின் சகவாசம் உங்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், தொடர்ந்தும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். அச்சா. உங்கள் ஒவ்வொருவரையும் நீண்ட காலம் பிரிந்து, இப்போது கண்டெடுக்கப்பட்ட, விசேடமான, அதியன்பிற்குரிய குழந்தை என பாப்தாதா அழைத்து உங்கள் அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். அச்சா. (அதன்பின்னர் குழந்தைகள் அனைவரும் பாப்தாதாவுடன் ஹோலியும் பிக்னிக்கும் கொண்டாடினார்கள்.)

ஆசீர்வாதம்:
அதிமேலான தந்தை, அதிமேலான சுயம், அதிமேலான பணி என்பவற்றின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் நீங்கள் தந்தைக்குச் சமமானவராகவும் சக்திசாலியாகவும் ஆகுவீர்களாக.

இன்றைய உலகில், ஒரு விஐபி இன் குழந்தை தன்னையும் ஒரு விஐபி யாகவே கருதுவார். எவ்வாறாயினும், எவரும் தந்தையைவிட அதியுயர்ந்தவர் இல்லை. நாங்கள் அதிமேலான தந்தையின் குழந்தைகளான அதிமேலான ஆத்மாக்கள். இந்த விழிப்புணர்வு உங்களைச் சக்திசாலிகள் ஆக்கும். அதிமேலான தந்தை, அதிமேலான சுயம், மற்றும் அதிமேலான பணியின் விழிப்புணர்வைக் கொண்டிருப்பவர்கள், தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுகிறார்கள். ஆத்மாக்களான உங்களைத் தவிர, இந்த முழு உலகிலும் எவரும் அதிமேலானவரும் அதியுயர்ந்தவரும் கிடையாது. இதனாலேயே, நீங்கள் புகழப்படுகிறீர்கள். பூஜிக்கப்படுகிறீர்கள்.

சுலோகம்:
முழுமை என்ற கண்ணாடியில் உங்களின் சூட்சுமமான பற்றுகளைச் சோதித்துப் பார்த்து, அவற்றில் இருந்து விடுதலை அடையுங்கள்.