10.11.23        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையைப் போன்று முரளிதரர்கள் (புல்லாங்குழல் வாசிப்பவர்கள்) ஆகவேண்டும். முரளிதரர் குழந்தைகளே தந்தையின் உதவியாளர்கள் ஆகுகின்றனர். அத்தகைய குழந்தைகளையிட்டுத் தந்தை பூரிப்படைகின்றார்.

பாடல்:
எக்குழந்தைகளின் புத்தி மிகவும் பணிவானதாகின்றது?

பதில்:
அழிவற்ற ஞானரத்தினங்களைத் தானம் செய்து உண்மையான கொடையாளிகளாக ஆகுபவர்களினதும், சாமர்த்தியமான விற்பனையாளர்களாக ஆகுபவர்களினதும் புத்தியானது சேவை செய்வதன் மூலம் மிகவும் பணிவானதாகவும், மிகவும் சுத்திகரிக்கப்பட்டதாகவும் ஆகுகின்றது. நீங்கள் தானம் செய்யும்போது, ஒருபோதும் எவ்வித அகங்காரத்தையும் கொண்டிருக்கக்கூடாது. சிவபாபா உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றையே நீங்கள் கொடுக்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வில் எப்பொழுதும் இருக்க வேண்டும். சிவபாபாவின் நினைவில் இருப்பதில் நன்மையே ஏற்படுகின்றது.

பாடல்:
நீங்களே தாயும், தந்தையும்....

ஓம் சாந்தி.
“நீங்களே தாயும், தந்தையும்” என்ற பாடலை வெறுமனே இசைப்பதன் மூலம் அவரது பெயர் நிரூபிக்கப்படுவதில்லை. நீங்கள் முதலில் “ஓம் நமசிவாய” என்ற பாடலையும், பின்னர் “நீங்களே தாயும், தந்தையும்” என்ற பாடலையும் இசைப்பீர்களாயின், அவர்கள் ஞானத்தை அறிந்து கொள்வார்கள். மக்கள் ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயத்திற்கோ, அல்லது கிருஷ்ணரின் ஆலயத்திற்கோ செல்லும்போது, தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, எதையும் புரிந்துகொள்ளாமல், “நீங்களே தாயும், தந்தையும்” எனக் கூறுகின்றனர். எனவே, நீங்கள் முதலில் “ஓம் நமசிவாய” என்ற பாடலையும், பின்னர் “நீங்களே தாயும், தந்தையும்” என்ற பாடலையும் இசைப்பீர்களாயின், அவர்கள் அவரது புகழை அறிந்துகொள்வார்கள். இப்பாடல்கள் புதிதாக வருபவர்களுக்கு மிகவும் சிறந்தவை. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கத்தக்க வகையில் அதை இயற்றுகின்றார்கள். தந்தையின் பெயர் சிவன் ஆகும். சிவனை சர்வவியாபகர் எனக் கூறமுடியாது. அவ்வாறு கூறுவோமாயின், அனைவரது புகழும் ஒரேமாதிரியாகிவிடும். அவரது பெயர் சிவன் ஆகும். வேறு எவருமே தங்களுக்கு சிவன் என்ற பெயரைக் கொடுக்கமுடியாது. அவரது வழிகளும், முறைகளும் தனித்துவமானவை. அவை தேவர்கள் உட்பட அனைத்து மனிதர்களுடையதை விடவும் முற்றிலும் வேறுபட்டவை. தாயும், தந்தையுமானவரால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கற்பிக்க முடியும். சந்நியாசிகள் மத்தியில் தாய்மார்கள் இல்லை. இதனாலேயே அவர்களால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. அவர்களால் “ஓம் நமசிவாய" என எவருக்கும் கூறமுடியாது. நீங்கள் சரீரதாரி ஒருவருக்கு “ஓம் நமசிவாய" எனக் கூறமுடியாது. இவை அனைத்தும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. சிலவேளைகளில் நல்ல குழந்தைகள்கூட சில கருத்துக்களைத் தவறவிட்டுவிடுகிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதுகிறார்கள். இந்த விடயத்தில், இதயத்தில் சுத்தம் இருக்கவேண்டும். அனைத்திலும் உண்மையை பேசவும், அனைத்திலும் உண்மையாக இருக்கவும் காலம் எடுக்கும். நீங்கள் சரீர உணர்விற்கு வருவதால் அந்நியோன்னியம் போன்றவை ஏற்படுகின்றது. வேறு பல விடயங்களும் இதற்குள் அடங்கும். இதுவரை உங்களில் எவருமே ஆத்ம உணர்விற்கு வந்துவிட்டதாகக் கூறமுடியாது. அவ்வாறிருந்திருந்தால், நீங்கள் உங்களது கர்மாதீத நிலையை அடைந்திருப்பீர்கள். அனைவரும் வரிசைக்கிரமமானவர்களே. சில குழந்தைகள் மிகவும் தகுதியற்றவர்களாக இருக்கின்றார்கள். பாபாவின் சேவையை யார் செய்கின்றார்கள் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. அவர்கள் சிவபாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர்வதன் மூலம் மாத்திரமே உருத்திரனின் மாலையில் நெருக்கமாக வருவதுடன், ஒரு சிம்மாசனத்தில் அமர்வதற்குத் தகுதி வாய்ந்தவர்களாகவும் ஆகமுடியும். தங்களது லௌகீகத் தந்தையின் உதவியாளர்களாக ஆகுகின்ற, தகுதிவாய்ந்த குழந்தைகளே அவரது இதய சிம்மாசனத்தில் அமர்வார்கள். இது எல்லையற்ற தந்தையின் அழிவற்ற ஞான இரத்தின வியாபாரமாகும். எனவே தந்தை தனது வியாபாரத்தில் தனக்கு உதவி செய்பவர்களையிட்டு பூரிப்படைகிறார். அழியாத ஞான இரத்தினங்களை நீங்கள் கிரகிப்பதுடன் மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டவேண்டும். சிலர் தங்களைக் காப்புறுதி செய்துவிட்டதாகவும் அதனால் அதன் வெகுமதியைத் தாங்கள் பெறுவார்கள் எனவும் நினைக்கிறார்கள். இங்கு நீங்கள் பலருக்குத் தானம் செய்யவேண்டும். அழியாத ஞான இரத்தினங்களைத் தானம் செய்வதன் மூலம் தந்தையைப் போன்று கொடையாளி; ஆகுங்கள். உங்களுடைய புத்தியை ஞான இரத்தினங்களால் நிரப்புவதற்காகத் தந்தை வருகிறார். இங்கு செல்வம் என்ற கேள்விக்கே இடமில்லை. தகுதிவாய்ந்த குழந்தைகளை மாத்திரமே தந்தை விரும்புகிறார். இந்த வியாபாரத்தை எவ்வாறு செய்வது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையெனில், உங்களை எவ்வாறு வியாபாரியான முரளிதரரின் குழந்தைகள் என அழைக்கமுடியும்? நீங்கள் எவ்வித வியாபாரமும் செய்யவில்லையெனில், உங்களையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு வியாபாரி விற்பனையாளரின் திறமையைப் பார்க்கும்போது அவருக்கு ஒரு பங்கை வழங்கிவிடுகிறார். அதுபோன்று உங்களால் ஒரு பங்கைப் பெறமுடியாது. இவ்வியாபாரத்தைச் செய்வதால் உங்கள் புத்தி மிகவும் பணிவானதாகின்றது. சேவை செய்வதனால் உங்களது புத்தி நன்றாகச் சீரமைக்கப்படுகிறது. பாபாவும், மம்மாவும் தங்களது அனுபவத்தை எடுத்துரைக்கின்றனர். பாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த பாபா ஞானத்தை மிக நன்றாகக் கிரகித்து, முரளியையும் மிக நன்றாக நடத்துகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அச்சா. சிவபாபா இவரில் இருக்கின்றார். அவரோ முரளிதரர். எனினும், இந்த பாபாவும் அனைத்தையும் அறிவார். இல்லையெனில், அவர் எவ்வாறு அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வார்? நீங்கள் எப்பொழுதும் சிவபாபாவே இந்த ஞானத்தைப் பேசுவதாகக் கருத வேண்டும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். சிவபாபாவை நினைவுசெய்வதால் உங்களுக்கு நன்மையே ஏற்படுகின்றது. சிவபாபா இவரிலேயே வருகின்றார். மம்மா தனக்கேயுரிய விதத்தில் பேசுகிறார். அவரது பெயர் போற்றப்பட வேண்டும். ஏனெனில், பெண்கள் உயர்த்தி வைக்கப்பட வேண்டும். “அவள் எப்படியானவளாக இருந்தாலும், அவள் என்னுடையவள், அவளை நான் பராமரிக்க வேண்டும்” எனக் கூறப்படுகின்றது. கணவன்மாரே இவ்வாறு கூறுகின்றனர். ஒரு மனைவி “அவர் எப்படியானவராக இருந்தாலும், அவர்; என்னுடையவர்” எனக் கூறமாட்டாள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் எப்படியானவர்களாக இருந்தாலும், நீங்கள் என்னுடையவர்களே. எனவே, நான் உங்களைப் பராமரிக்க வேண்டும். தந்தையின் பெயரே போற்றப்படுகின்றது. இங்கே, தந்தையின் பெயர் எப்படியோ போற்றப்படவே செய்கின்றது. அத்துடன், சக்திகளின் பெயர்களும் போற்றப்பட வேண்டும். அவர்கள் சேவை செய்வதற்கு மிசச்சிறந்த வாய்ப்பைப் பெறுகின்றார்கள். நாளுக்கு நாள் சேவை மிகவும் இலகுவானதாகின்றது. ஞானமும் பக்தியும், அதாவது பகலும் இரவும் இருக்கின்றது. சத்திய, திரேதா யுகங்கள் சந்தோஷமான பகலாகும், துவாபர, கலியுகங்கள் துன்பமான இரவாகும். சத்தியயுகத்தில் பக்தி இருக்கமாட்டாது. இது மிக இலகுவானது. ஆனால், இது உங்களது பாக்கியத்தில் இல்லையெனில், உங்களால் இதைக் கிரகிக்க முடியாது. நீங்கள் மிக இலகுவான கருத்துக்களைப் பெறுகின்றீர்கள். சென்று, இவற்றை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களை ஈடேற்றுங்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தினருடன் வசிப்பவர்கள், எனவே உங்களால் இவ்விடயங்களை எவருக்கும் மிக எளிதாக விளங்கப்படுத்த முடியும். பரலோகத் தந்தை மாத்திரமே ஜீவன்முக்தியை அருள்பவர். அத்துடன், அவரே ஆசிரியரும், சற்குருவுமாவார். ஏனையவர்கள், துவாபரயுகம் முதல் அனைவரையும் சீரழிந்த நிலைக்கே கொண்டு சென்றனர். சீரழிந்தவர்களும் பாவாத்மாக்களுமே கலியுகத்தில் உள்ளனர். சத்திய யுகத்தில் பாவாத்மாக்களைப் பற்றியே குறிப்பிடப்படவில்லை. கூன்முதுகுடையவர்களும், கல்லுப் புத்தியைக் கொண்டவர்களும், அஜாமிலைப் போன்ற பாவாத்மாக்களும் இப்பொழுதே உள்ளனர். அரைக் கல்பம் சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. பின்னர், பக்தி ஆரம்பமாகின்றது, உங்கள் ஸ்திதி கீழிறங்க ஆரம்பிக்கின்றது. நீங்கள் நிச்சயமாக வீழ்ச்சி அடைய வேண்டும். நீங்கள் சூரிய வம்சத்தவராக இருந்து, பின்னர் வீழ்ச்சி அடைந்து சந்திர வம்சத்தவராகின்றீர்கள். பின்னர், நீங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைகிறீர்கள். துவாபர யுகம் முதல் நீங்கள் சந்திக்கின்ற அனைவரும் உங்களைக் கீழேயே கொண்டு சென்றனர். நீங்கள் மாத்திரமே இப்பொழுது இதனை அறிவீர்கள். நாளுக்கு நாள் நீங்கள் தொடர்ந்தும் பலத்தைப் பெறுவீர்கள். நீங்கள் சாதுக்களுக்கும், புனிதர்களுக்கும் விளங்கப்படுத்தும் வழிமுறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். இறுதியில் பரமதந்தை பரமாத்மா ஏன் சர்வவியாபகராக இருக்கமுடியாது என்பதை அவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். நீங்கள் விளங்கப்படுத்துவதற்குப் பல கருத்துக்களை உபயோகிக்கலாம். முதலில், பக்தி கலப்படமற்றதாக இருந்தது. பின்னர் அது கலப்படமாகின்றது. கலைகள் குறைவடைய ஆரம்பிக்கின்றன. இப்பொழுது எந்தக் கலைகளுமே எஞ்சியிருக்கவில்லை. எவ்வாறு கலைகள் குறைவடைகின்றன என்பது விருட்சத்தின் படத்திலும், சக்கரத்தின் படத்திலும் காட்டப்படுகின்றன. இது விளங்கப்படுத்துவதற்கு மிக இலகுவானது. எவ்வாறாயினும், இது உங்கள் பாக்கியத்தில் இல்லையெனில், உங்களால் அவற்றை விளங்கப்படுத்த முடியாது. நீங்கள் ஆத்ம உணர்விற்கு வருவதில்லை. நீங்கள் உங்களது பழைய சரீரத்தில் சிக்குண்டுள்ளீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் பழைய சரீரத்தின் மீதுள்ள பற்றுக்கள் அனைத்தையும் நீக்கி, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நீங்கள் ஆத்ம உணர்விற்கு வரவில்லையெனில், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியாது. ஒரு மாணவன் எல்லா நேரங்களிலும் தான் கடைசியாக இருப்பதை விரும்பமாட்டான். அவனது நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் அனைவரும் அவன் தனது கல்வியில் கவனம் செலுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்வார்கள். இங்கேயும், ஒருவர் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லையெனில், அவரது நிலை என்னவாக இருக்கும் என்பது புரிந்துகொள்ளப்படுகின்றது. யார் பிரஜைகளாகுவார்கள், யார் பணிப்பெண்களாகவும், வேலைக்காரர்களாகவும் ஆகுவார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடியும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்மை செய்யுங்கள். இதுவே விதிமுறையாகும். ஒரு வீட்டில் மூத்த சகோதரர் ஒருவர் இருக்கும்போது, இளையவருக்கு உதவி புரிவது அவரது கடமையாகும். “புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கின்றது” என்பது இதனையே குறிக்கின்றது. தந்தை கூறுகிறார்: தானம் செய்வதால், உங்களது செல்வம் குறைந்துவிட மாட்டாது. நீங்கள் செல்வத்தைத் தானம் செய்யவில்லையெனில், செல்வத்தைப் பெற்றுக்கொள்ளவும் மாட்டீர்கள், உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் பெறமுடியாது. நீங்கள் மிகச் சிறந்த வாய்ப்பொன்றைப் பெறுகின்றீர்கள். நீங்கள் கருணை நிறைந்தவர்கள் ஆகவேண்டும். சாதுக்கள், புனிதர்கள் மீதும் நீங்கள் கருணை கொண்டிருக்க வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: வந்து, புரிந்துகொள்ளுங்கள். பாரத மக்களுக்கு நிலையான சந்தோஷம் எனும் ஆஸ்தியை ஒவ்வொரு கல்பத்திலும் வழங்குபவராகிய பரலோகத் தந்தையை நீங்கள் அறியமாட்டீர்கள். எவருமே இதனை அறியமாட்டார்கள். அரசாங்க அலுவலகர்கள்கூட சீரழிந்த நிலையிலிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். எனவே, யாரால் அவர்களை மேன்மையானவர்கள் ஆக்கமுடியும்? தற்காலத்தில் சாதுக்களின் சமுதாயத்திற்குப் பெருமளவு மதிப்புள்ளது. தந்தை அவர்கள்மீதும்கூட (சாதுக்கள்மீதும், புனிதர்கள்மீதும்) கருணை கொண்டிருப்பதாக அவர்களுக்கு நீங்கள் எழுதும்போது, அவர்கள் ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் மேலும் முன்னேறும்போது, உங்கள் பெயர் போற்றப்படும். பலர் தொடர்ந்தும் உங்களிடம் வருவார்கள். பல கண்காட்சிகளும் இடம்பெறும். இறுதியில், நிச்சயமாகச் சிலர் விழித்தெழுவார்கள். சந்நியாசிகள்கூட விழித்தெழுவார்கள். அவர்கள் வேறு எங்குதான் செல்வார்கள்? ஒரேயொரு கடையே உள்ளது. தொடர்ந்தும் பெருமளவு முன்னேற்றம் இடம்பெறும். நீங்கள் விளங்கப்படுத்துவதற்கென பல சிறந்த படங்கள் உருவாக்கப்படும். எனவே, எவரும் வந்து கற்கலாம். வைக்கோற்போர் தீ மூட்டப்படும்போது மக்கள் விழித்தெழுவார்கள், ஆனால் அப்போது மிகவும் தாமதமாகிவிடும். குழந்தைகளுக்கும் இது பொருந்தும். இறுதியில் உங்களால் எவ்வளவு தூரத்திற்கு ஓட முடியும்? ஓர் ஓட்டப்பந்தயத்தில்கூட சிலர் முதலில் மெதுவாகவே ஓடுவார்கள். சிலர் மாத்திரமே பரிசைப் பெறுவார்கள். இதுவும்கூட உங்களது குதிரைப் பந்தயமேயாகும். ஆன்மீக யாத்திரை என்ற இப்பந்தயத்தில் ஓடுவதற்கு ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் தேவைப்படுகின்றனர். தந்தையை நினைவு செய்வதும் ஞானமேயாகும், இல்லையா? வேறு எவரிடமும் இந்த ஞானம் இல்லை. ஞானத்தின் மூலமாக மனிதர்கள் வைரத்தைப் போன்றவர்களாகவும், அறியாமை காரணமாக சிப்பியைப் போன்றவர்களாகவும் ஆகின்றார்கள். தந்தை உங்களது சதோபிரதான் வெகுமதியை உருவாக்குவதற்காக வருகின்றார். பின்னர் இந்த வெகுமதி படிப்படியாகக் குறைவடையும். நீங்கள் இக்கருத்துக்கள் அனைத்தையும் கிரகித்துப் பின்னர் செயற்பட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மகாதானிகள் ஆகவேண்டும். பாரதம் மகாதானி என அழைக்கப்படுகின்றது. ஏனெனில், நீங்கள் இங்கேயே உங்களது சரீரம், மனம், செல்வம் ஆகியவற்றைத் தந்தையிடம் அர்ப்பணிக்கின்றீர்கள். பின்னர் தந்தையும் அனைத்தையும் உங்களிடம் அர்ப்பணிக்கின்றார். பாரதத்தில் பல மகாதானிகள் உள்ளனர். ஏனைய மனிதர்கள் யாவரும் மூட நம்பிக்கையில் சிக்குண்டுள்ளனர். இங்கே நீங்கள் கடவுளின் புகலிடத்தினுள் பிரவேசித்திருக்கின்றீர்கள். இராவணன் உங்களைச் சந்தோஷமற்றவர்கள் ஆக்கிவிட்டான். எனவே, நீங்கள் இராமரிடம் (கடவுள்) அடைக்கலம் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் துன்பக் குடிலில் இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் துன்பமற்ற குடிலுக்கு, அதாவது சுவர்க்கத்திற்குச் செல்லவிருக்கின்றீர்கள். நீங்கள் சுவர்க்கத்தைப் படைப்பவராகிய தந்தையிடம் அடைக்கலம் பெற்றிருக்கிறீர்கள். சிலர் குழந்தைப் பருவத்தில் பலவந்தமாக கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் இப்புகலிடத்தில் எவ்வித சந்தோஷத்தையும் அனுபவம் செய்ய மாட்டார்கள். அது அவர்களது பாக்கியத்தில் இல்லை. அவர்கள் இராவணனாகிய மாயையிடம் அடைக்கலம் பெற விரும்புகின்றார்கள். அவர்கள் கடவுளுடைய புகலிடத்தை விட்டு இராவணனாகிய மாயையின் மடிக்குச் செல்வது பெரும் விந்தையாகும். 'ஓம் நமசிவாய" என்ற பாடல் மிகவும் சிறந்தது. நீங்கள் இப்பாடலை இசைக்கலாம். மக்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. இதன் சரியான அர்த்தத்தை ஸ்ரீமத்திற்கேற்ப உங்களால் விளங்கப்படுத்த முடியும் என நீங்கள் கூறலாம். அவர்கள் தொடர்ந்தும் பொம்மைகளுடன் விளையாடுகிறார்கள். நாடகத்தின்படி, இப்பாடல்களிலிருந்தும் நீங்கள் உதவி பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தைக்குரியவர்களாக இருந்தும், சேவாதாரிகளாக இல்லையெனில், அவரின் இதய சிம்மாசனத்தில் எவ்வாறு அமரமுடியும்? சில குழந்தைகள் தகுதியற்றவர்களாகி, பெரும் துன்பத்தை விளைவிக்கின்றார்கள். இங்கு, உங்கள் தாயார் மரணித்தாலும் அல்வா சாப்பிடுங்கள். உங்கள் மனைவி மரணித்தாலும்கூட அல்வா சாப்பிடுங்கள். நீங்கள் அழுது புலம்பக்கூடாது. நீங்கள் நாடகத்தின்மீது உறுதியாக இருக்கவேண்டும். மம்மாவும், பாபாவும் சென்றுவிடுவார்கள். அத்துடன் மிக விசேஷமான குழந்தைகளும் முன்கூட்டியே சென்றுவிடுவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் பாகத்தை நடிக்கவேண்டும். இதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நாங்கள் பற்றற்ற பார்வையாளர்களாக இருந்து நாடகத்தை அவதானிக்கின்றோம். உங்கள் ஸ்திதி எப்போதும் மலர்ச்சியாக இருக்கவேண்டும். பாபாவும்கூட அக்கறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்;. அவர்கள் நிச்சயமாக வருவார்கள் என்று நியதி கூறுகிறது. மம்மாவும், பாபாவும் முழுமையடைந்து விட்டார்கள் என்றில்லை. முழுமையான ஸ்திதி இறுதியிலேயே வரும். தற்சமயத்தில் எவரும் தான் முழுமையடைந்துவிட்டதாகக் கூறமுடியாது. குறைபாடுகளும், முரண்பாடுகளும் இருந்ததால், பத்திரிகைகளில் பிரம்மகுமாரிகள் பற்றிய வதந்திகள் வந்தன. இவை அனைத்தும் முன்னைய சக்கரத்திலும் நிகழ்ந்துள்ளன. எனவே கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? நீங்கள், உங்களின் 100 வீத ஸ்திதியை இறுதியில் பெறுவீர்கள். நீங்கள் கருணை நிறைந்தவர்களாகி, மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்கும்போதே உங்களால் தந்தையின் இதய சிம்மாசனத்தில் அமரமுடியும். நீங்கள், உங்களைக் காப்புறுதி செய்வீர்களாயின், அது வேறு விடயமாகும். நீங்கள் அதை உங்களுக்காகவே செய்கின்றீர்கள். நீங்கள் இந்த ஞான இரத்தினங்களை மற்றவர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். நீங்கள் தந்தையை முழுமையாக நினைவு செய்யாவிடில் உங்;கள் தலைமீதுள்ள பாவச்சுமை அதிகரிக்கும். கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர். அவர்கள் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். இரவு வேளையில் நினைவைக் கொண்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சியேற்படுகிறது. இந்த ஆன்மீக மணவாளனை அதிகாலையில் நினைவு செய்யவேண்டும். பாபா, நீங்கள் மிகவும் இனிமையானவர். எவ்வாறிருந்த என்னை நீங்கள் எவ்வாறு ஆக்குகிறீர்கள் எனப் பாருங்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் இதயத்தை எப்பொழுதும் உண்மையானதாக வைத்திருங்கள். எப்பொழுதும் உண்மையையே பேசுங்கள், அனைத்திலும் எப்பொழுதும் உண்மையானவர்களாக இருங்கள். நீங்கள் சரீர உணர்விற்கு வந்து, உங்களை மிகவும் திறமைசாலி எனக் கருதாதீர்கள். ஒருபோதும் அகங்காரம் கொண்டிருக்காதீர்கள்.

2. ஒரு பற்றற்ற பார்வையாளராகி, நாடகத்தை அவதானியுங்கள். நாடகத்தில் உறுதியாக இருங்கள். எதனைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்கள் ஸ்திதியை எப்பொழுதும் மலர்ச்சியானதாக வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:
சுய இராச்சியத்தின் அதிகாரத்தை கொண்டிருப்பதன் மூலம் உலக இராச்சியத்தின் அதிகாரத்தை பெறுகின்ற ஒரு மாஸ்டர் சர்வ சக்திவான் ஆகுவீர்களாக.

இந்த நேரத்தில் சுய இராச்சியத்தின் அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள், அதாவது, தமது பௌதீக புலன்களை வெற்றி கொண்டவர்கள், உலக இராச்சியத்தின் அதிகாரத்தை பெற முடியும். சுய மரியாதையின் அதிகாரத்தை கொண்டிருப்பவர்களால் மாத்திரமே உலக இராச்சியத்தின் அதிகாரத்தை பெற முடியும். எனவே, சோதனை செய்யுங்கள்: இந்த ஆத்மாவான நான், எனது சக்திகளான மனம், புத்தி, சம்ஸ்காரங்கள் என்ற ஆத்ம சக்திகளின் அதிகாரியாக இருக்கின்றேனா? எனது மனம் என்னை கட்;டுப்படுத்துகின்றதா அல்லது நான் எனது மனதை கட்டுப்படுத்துகின்றேனா? எனது சம்ஸ்காரங்கள் தம்பால் என்னை ஈர்ப்பதில்லை, ஈர்கின்றனவா? சுய மரியாதையின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற ஸ்திதியை கொண்டிருப்பவர்கள், சதா மாஸ்டர் சர்வசக்திவான் ஸ்திதியில் இருக்கிறார்கள். அவர்கள் எந்த சக்தியினது குறைபாடும் அற்றவர்கள்.

சுலோகம்:
சகல பொக்கிஷங்களின் திறவுகோலான ~~மெரா பாபா|| (எனது பாபா) என்பதை உங்களுடன் வைத்திருக்கும் போது, வேறு எதுவும் உங்களை ஈர்க்க மாட்டாது.