11.10.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    31.03.86     Om Shanti     Madhuban


சகல சக்திகளால் நிரம்பியவராகி, ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான வருடம்.


இன்று, சகல பொக்கிஷங்களினதும் அதிபதி, தனது மாஸ்ரர் குழந்தைகளைப் பார்க்கிறார். குழந்தைகளான நீங்கள் எந்தளவிற்கு அதிபதிகள் ஆகியுள்ளீர்கள் என்பதை அவர் பார்க்கிறார். இந்த வேளையில் அதிபதிகளாக இருக்கும் சம்ஸ்காரங்கள், இப்போது சகல பொக்கிஷங்களினதும் சக்திகளினதும் அதிபதிகளாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களை எதிர்கால உலகின் அதிபதிகள் ஆக்குகிறது. எனவே, பாபா எதைக் கண்டார்? நீங்கள் அனைவரும் குழந்தைகளாக இருப்பதையும், குழந்தைகளான நீங்கள் பாபாவும் நானும் என்றிருப்பதில் மிகவும் ஆழ்ந்த அன்பைக் கொண்டிருப்பதையும் அவர் பார்த்தார். உங்கள் அனைவருக்கும் ஒரு குழந்தையாக இருக்கும் போதை உள்ளது. ஆனால், அதிபதியாகவும் குழந்தையாகவும் இருத்தல் என்றால், சம்பூரணமானவராகவும் தந்தைக்குச் சமமானவராகவும் இருத்தல் என்று அர்த்தம். எனவே, குழந்தையாக இருக்கும் ஸ்திதிக்கும் ஓர் அதிபதியாக இருக்கும் ஸ்திதிக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருப்பதைத் தந்தை கண்டார். அதிபதியாக இருத்தல் என்றால், நீங்கள் உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும், இயல்பாகவே உங்களின் ஸ்திதி முழுமையானதாக இருக்கும். இதுவே ஓர் அதிபதியாக இருத்தல், அதாவது, ஒரு குழந்தையாகவும் அதிபதியாகவும் இருத்தல் என்று அர்த்தம். அதிபதியாக இருப்பதன் சிறப்பியல்பானது, எந்தளவிற்கு அதிபதியாக இருக்கும் போதை உங்களிடம் உள்ளதோ, அந்தளவிற்கு உலக சேவையாளருக்கான சம்ஸ்காரங்கள் சதா உங்களில் வெளிப்படுத்தப்பட்ட ரூபத்தில் புலப்படும். எந்தளவிற்கு ஓர் அதிபதியாக இருக்கும் போதை உங்களிடம் உள்ளதோ, அந்தளவிற்கு ஓர் உலக சேவையாளராக இருக்கும் போதையும் அதேவேளை உங்களிடம் காணப்படும். இரண்டும் சமமாக இருக்கும். இதுவே தந்தைக்குச் சமமான அதிபதியாக ஆகுதல் என்று அர்த்தம். எனவே, குழந்தையாகவும் அதிபதியாகவும் இருக்கும் இரண்டு ரூபங்களும் சதா செயலில் புலப்படுகிறதா அல்லது ஞானத்தில் மட்டும் இருக்கிறதா என பாபா பெறுபேற்றிலே கண்டார். ஞானத்திற்கும் நடைமுறையில் இடுவதற்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது. சில நல்ல குழந்தைகள் எவ்வாறு தமது நடைமுறைச் செயல்களில் தந்தைக்குச் சமமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் பாபா கண்டார். இப்போதும், சில குழந்தைகள் தமது குழந்தைப்பருவ ஸ்திதியிலேயே இருக்கிறார்கள். ஓர் அதிபதியாக இருக்கும் ஆன்மீக போதையுடன் அவர்கள் சிலவேளைகளில் தந்தைக்குச் சமமாக இருக்கும் சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கிறார்கள். எவ்வாறாயினும், ஏனைய வேளைகளில், அந்த ஸ்திதியில் ஸ்திரப்படுத்திக் கொள்ள முயற்சி செய்வதில் அவர்களின் நேரம் கழிகிறது.

குழந்தைகள் அனைவருக்கும் தந்தைக்குச் சமமாக வருகின்ற மேன்மையான இலக்கு உள்ளது. இலக்கு சக்திவாய்ந்தது. ஆனால் இது இப்போது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள், தொடர்புகளில் இருக்க வேண்டும். இதில் ஒரு வேறுபாடு ஏற்படுகிறது. சில குழந்தைகள் தமது எண்ணங்களில் மட்டும் சமமாக இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கிறார்கள். சிலர் தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் அந்த ஸ்திதியில் இருக்கிறார்கள். சிலவேளைகளில், அவர்கள் செயல்களின் நிலையையும் அடைகிறார்கள். எவ்வாறாயினும், அவர்கள் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் வரும்போது, அது சேவைக்கான உறவுமுறைகளோ அல்லது குடும்பத்தின் உறவுமுறைகளோ, அதன் சதவீதம் குறைந்துவிடுகிறது. தந்தைக்குச் சமமாக இருத்தல் என்றால், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகளில் ஒரே வேளையில் தந்தைக்குச் சமமாக இருக்கும் ஸ்திதியில் இருத்தல் என்று அர்த்தம். சிலர் இந்த ஸ்திதியை இரண்டு பாடங்களில் பேணுகிறார்கள். சிலர் மூன்று பாடங்களில் பேணுகிறார்கள். ஆனால் பாபா கூறுகின்ற நான்கு பாடங்களிலும் இந்த ஸ்திதியில் இருத்தல் என்று வரும்போது, அவர்கள் சிலவேளைகளில் ஒன்றாகவும் சிலவேளைகளில் இன்னொன்றாகவும் ஆகுகிறார்கள். பாப்தாதா எப்போதும் குழந்தைகளில் அதிகபட்ச அன்பானவராக இருக்கிறார். அவ்யக்த ரூபத்தை பௌதீக ரூபத்தில் உங்களைச் சந்திக்கச் செய்வது மட்டுமே அன்பின் ரூபம் இல்லை. ஆனால் அன்பின் ரூபம் உங்களைச் சமமானவர் ஆக்குகிறது. பாப்தாதா பற்றில் இருந்து விடுபட்டவர் (பற்றற்றவர்) ஆகுகிறார் எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால் இது பற்றில் இருந்து விடுபடுவதல்ல. இது விசேடமான அன்பின் ரூபம் ஆகும்.

நீண்ட காலப்பகுதிக்கான பேறுகளைப் பொறுத்தவரை இப்போது மிகச் சிறிதளவு நேரமே எஞ்சியுள்ளது என பாப்தாதா உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளார். இதனாலேயே, நீண்ட காலப்பகுதி என்பதற்கு, குழந்தைகளான நீங்கள் திடசங்கற்பம் என்ற தபஸ்யாவினால் அதை அடைவதற்கு, அதாவது, உங்களைப் பலசாலிகளாகவும் முதிர்ச்சியானவர்களாகவும் ஆக்குவதற்கு பாப்தாதா குறிப்பாக நேரத்தை உங்களுக்கு வழங்கியுள்ளார். உண்மையில், நீங்கள் சமமமானவர்களாகவும், தடைகளை வென்றவர்களாகவும், தீர்வுகளின் சொரூபங்களாகவும் ஆகுவீர்கள் என்ற எண்ணத்தை பொன்விழாவிற்காக நீங்கள் அனைவரும் கொண்டிருந்தீர்கள். அந்தச் சத்தியங்கள் அனைத்தும் தந்தையின் சித்திரகுப்த (கணக்குவழக்குகளைக் குறிப்பவர்) ரூபத்தில் அவரின் கணக்குப் புத்தகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இன்றும், சில குழந்தைகளுக்கு திடசங்கற்பமான எண்ணம் ஏற்பட்டது. அர்ப்பணித்தல் என்றால் உங்களைச் சகல பேறுகளாலும் முதிர்ச்சியானவர் ஆக்குதல் என்று அர்த்தம். அர்ப்பணித்தல் என்றால், எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் என்ற நான்கிலும் தந்தைக்குச் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் கொடுத்த கடிதங்களும் உங்களின் எண்ணங்களும் பாப்தாதாவிடம் சூட்சும வதனத்தில் எல்லா வேளைக்குமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சூட்சும வதனத்தில் அனைவரின் பைல்களும் உள்ளன. உங்களின் ஒவ்வொருவரினதும் இந்த எண்ணம் அநாதியாகியுள்ளது.

இந்த வருடம், திடசங்கற்பத்தின் தபஸ்யாவுடன் உங்களின் ஒவ்வோர் எண்ணத்தையும் அமரத்துவமாகவும் அநாதியாகவும் ஆக்குவதற்கும், திடசங்கற்பத்தின் பயிற்சியால் மீண்டும் மீண்டும் உங்களுடன் ஆன்மீக உரையாடலைச் செய்யவும், உங்களுக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்தி, அவதாரம் என்ற உங்களின் ரூபத்துடன் செயல்படவும், இந்த ஸ்திதிகளை நிரந்தரமானதாகவும் பலமானதாகவும் ஆக்குவதற்கும் பாப்தாதா உங்களுக்கு நேரத்தை வழங்குகிறார். இவற்றுடன்கூடவே, நீங்கள் குறிப்பாக உங்களின் தூய எண்ணங்களின் சக்தியை சேமிக்கும் கணக்கையும் அதிகரிக்க வேண்டும். மேலும் அகநோக்குடையவர் ஆகுவதன் மூலம் தூய எண்ணங்களின் சக்தியை அனுபவம் செய்வதற்கான அதிக தேவை இப்போதுள்ளது. தூய எண்ணங்களின் சக்தியால், உங்களால் இலகுவாக உங்களின் வீணான எண்ணங்களை முடிக்க முடியும். உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் உங்களால் மற்றவர்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய எண்ணங்களின் சக்தியின் விசேட அனுபவமானது, இப்போது இலகுவாக சகல வீணான எண்ணங்களையும் முடித்துவிடும். உங்களின் வீணான எண்ணங்களை முடிப்பது மட்டுமன்றி, உங்களின் நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும், உங்களின் தூய எண்ணங்களால் மற்றவர்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இப்போது உங்களுக்காக இந்தத் தூய எண்ணங்களின் களஞ்சியத்தைச் சேமிப்பதற்கான மிகப்பெரும் தேவை உள்ளது. உங்களுக்கு முரளியைக் கேட்பதில் பெரும் விருப்பம் உள்ளது. முரளி என்றால் பொக்கிஷம் என்று அர்த்தம். முரளியின் ஒவ்வொரு கருத்தையும் சக்தியாகச் சேமித்தல் என்றால் தூய எண்ணங்களின் சக்தியை அதிகரித்தல் என்று அர்த்தம். இதை ஒவ்வொரு கணமும் ஒரு சக்தியாகப் பயன்படுத்துங்கள். நீங்கள் இப்போது இந்தச் சிறப்பியல்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். எந்தளவிற்கு இப்போது நீங்கள் தூய எண்ணங்களின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து அனுபவம் செய்கிறீர்களோ, அந்தளவிற்கு இலகுவாக நீங்கள் மனதின் மூலம் சேவை செய்வதில் அனுபவசாலி ஆகுவீர்கள். அனைத்திற்கும் முதலில், நீங்கள் உங்களுக்காகத் தூய எண்ணங்களின் சக்தியைச் சேமிக்க வேண்டியது அவசியமாகும். அதன்பின்னர் நீங்கள் தந்தையுடன் சேர்ந்து, உலக உபகாரிகளாகவும் உலகை மாற்றுபவர்களாகவும் ஆகுவீர்கள். தூய எண்ணங்களின் சக்தியால் உலகை மாற்றும் பெரிய பணியைச் செய்வது இன்னமும் எஞ்சியுள்ளது. தற்சமயம், தந்தை பிரம்மா, அவ்யக்த ரூபத்தில், இப்போது உங்கள் அனைவரையும் தூய எண்ணங்களின் சக்தியால் பராமரிக்கிறார். சேவையின் வளர்ச்சிக்காக அவர் உங்களுடன் ஒத்துழைப்பதுடன் உங்களை முன்னேறவும் செய்கிறார். இதுவே தூய எண்ணங்களின் சக்தியால் இடம்பெறும் விசேடமான சேவை ஆகும். எனவே, தந்தை பிரம்மாவைப் போன்றவராகி, உங்களின் இந்தச் சிறப்பியல்பை அதிகரியுங்கள். ஏனென்றால் நீங்கள் இப்போது இதை தபஸ்யாவின் ரூபத்தில் பயிற்சி செய்ய வேண்டும். தபஸ்யா என்றால் திடசங்கற்பத்துடன் பயிற்சி செய்தல் என்று அர்த்தம். சாதாரணமான எதையும் தபஸ்யா என்று அழைக்க முடியாது. எனவே, பாபா இப்போது தபஸ்யா செய்வதற்கு உங்களுக்கு நேரத்தை வழங்குகிறார். அவர் ஏன் இதை இந்த நேரத்தில் வழங்குகிறார்? ஏனென்றால், இந்த நேரம் உங்களின் நீண்ட காலப்பகுதி என்ற கணக்கில் சேமிக்கப்படும். அனைவரும் நீண்ட காலப்பகுதிக்கு பேற்றினை அனுபவம் செய்வதற்கு பாப்தாதா கருவியாக இருக்கிறார். குழந்தைகள் எல்லோரும் நீண்ட காலப்பகுதிக்கு இராச்சிய பாக்கியத்திற்கான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார். எனவே, நீண்ட காலப்பகுதிக்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, நீங்கள் அனைத்தையும் தபஸ்யாவின் வடிவில் பயிற்சி செய்வதற்கு, பாபா உங்களுக்கு இந்த விசேடமான காலத்தைத் தருகிறார். ஏனென்றால், நீங்கள் அனைவரும் அருள்பவர்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகி, அனைவருக்கும் இவற்றைக் குறுகிய காலத்தில் கொடுக்க வேண்டிய ஒரு காலம் வரும். எனவே, சகல பொக்கிஷங்கள் என்ற உங்களின் கணக்கை நிரப்புவதற்கு பாபா உங்களுக்கு காலத்தை வழங்குகிறார்.

இன்னுமொரு விடயம்: நீங்கள் தடைகளை அழிப்பவர்களாகவும் தீர்வுகளின் சொரூபங்களாகவும் ஆகுவீர்கள் எனச் சத்தியம் செய்தீர்கள். எனவே உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் தடைகளை அழிப்பவர்கள் ஆகுவதற்காகக் குறிப்பாகத் திடசங்கற்பமான எண்ணங்களும், திடசங்கற்பமும் இருக்க வேண்டும். அது எண்ணங்களில் மட்டும் இருக்கக்கூடாது. ஆனால், நடைமுறையிலும் அவ்வாறு ஆகவேண்டும். எனவே, இந்த வருடம், பாப்தாதா மேலதிகமான வாய்ப்பை வழங்குகிறார். தடைகளை அழிப்பவர் ஆகும் இந்த விசேடமான வாய்ப்பைப் பெற விரும்பும் எவராலும் இந்த வருடம் அதைப் பெற முடியும். இந்த வருடத்திற்கு ஒரு விசேடமான ஆசீர்வாதம் உள்ளது. எவ்வாறாயினும், இந்த ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, நீங்கள் இரண்டு விடயங்களில் விசேடமான கவனம் செலுத்த வேண்டும். முதலில், தந்தைக்குச் சமமானவராக, சதா அருள்பவர் ஆகுங்கள். பெறுகின்ற எதிர்பார்ப்பு எதையும் வைத்திருக்காதீர்கள். நீங்கள் மரியாதையை அல்லது அன்பைப் பெற்றால் நீங்கள் அன்பானவர்களாக இருப்பீர்கள் என நீங்கள் நினைக்கக்கூடாது. அல்லது, நீங்கள் மரியாதையைப் பெற்றால் நீங்கள் மரியாதையைக் கொடுப்பீர்கள் என நினைக்கக்கூடாது. இல்லை. நான் அருள்பவரின் குழந்தையாக இருந்து கொடுக்க வேண்டும். எனக்குள் பெறுவதற்கான எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாது. மேன்மையான செயல்களைச் செய்யும்போது, அதற்குப் பலனாக எதையும் பெறுகின்ற எதிர்பார்ப்பு எனக்குள் இருக்கக்கூடாது. மேன்மையான செயல்களின் பலன், மேன்மையானதே. இந்த ஞானம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் செய்யும் வேளையில் இந்த எண்ணம் இருக்கக்கூடாது. எனவே, முதலில், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆகுவதற்கு, சதா அருள்பவர் ஆகுங்கள். இரண்டாவதாக, தடைகளை அழிப்பவர் ஆகுங்கள். எனவே, குறிப்பாக ஏற்றுக் கொள்ளும் சக்தியில் கவனம் செலுத்துங்கள். ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளும் சக்தியும் அத்தியாவசியமானதே. நீங்கள் கடலின் குழந்தைகள். கடலின் சிறப்பியல்பு, ஏற்றுக் கொள்வதே ஆகும். ஏற்றுக்கொள்ளும் சக்தியைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே நல்லாசிகளையும் உபகார உணர்வுகளையும் கொண்டிருக்க முடியும். ஆகவே, ஓர் அருள்பவர் ஆகுங்கள். கடலாகவும், ஏற்றுக் கொள்ளும் சக்தியின் சொரூபமாகவும் ஆகுங்கள். எப்போதும் இந்த இரண்டு சிறப்பியல்புகளையும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துங்கள். சிலவேளைகளில், சில குழந்தைகள் தாம் அதைச் செய்ய வேண்டும் என்றே நினைத்தோம், ஆனால் செயல் என்று வந்தபோது, ஏதோவொன்று மாறிவிட்டது என்று கூறுகிறார்கள். எனவே, இந்த வருடம், நீங்கள் குறிப்பாக ஒரே நேரத்தில் நான்கு பாடங்களிலும் சமநிலையை ஏற்படுத்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? எனவே, உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேமித்து, அருள்பவர்களாகி, இயல்பான முறையில் அருள்வதற்கான சம்ஸ்காரங்களைக் கிரகிப்பதற்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தடைகளை அழிப்பவர்கள் ஆகுவதற்கும் மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குவதற்கும் எல்லா வேளையும் உங்களின் இலக்கத்தை நிச்சயிப்பதற்கான வாய்ப்பொன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் தபஸ்யா செய்வதுடன், மற்றவர்களின் தடைகளை முடிப்பதற்கும் ஒத்துழையுங்கள். நீங்கள் எந்தளவிற்குத் தலைவணங்க வேண்டியிருந்தாலும், இவ்வாறு தலைவணங்குதல் என்பது சதா ஊஞ்சல்களில் ஆடுவதாகும். மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரை மிகுந்த அன்புடன் தொட்டிலில் போட்டு ஆட்டுவார்கள். அதேபோன்று. தந்தை தனது மடியென்ற தொட்டிலில் குழந்தைகளான உங்களை வைத்து ஆட்டுகிறார். எதிர்காலத்தில், இரத்தினங்கள் பதித்த ஊஞ்சல்களில் நீங்கள் ஆடுவீர்கள். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்களாகி, ஊஞ்சல்களில் வைத்து ஆட்டப்படுவீர்கள். எனவே, தலைவணங்குவதும் இறப்பதும் மகத்துவமானவை. நான் ஏன் தலைவணங்க வேண்டும்? மற்றவர் தலைவணங்கட்டுமே. உங்களை இதி;ல் தாழ்ந்தவராகக் கருதாதீர்கள். இவ்வாறு தலைவணங்குதல் மகத்துவமானதே. இவ்வாறு இறத்தல் உண்மையில் இறப்பதல்ல. ஆனால் அநாதியான பேறுகளுடன் வாழ்தல் என்று அர்த்தம். ஆகவே, சதா தடைகளை அழிப்பவர்களாகி, மற்றவர்களையும் அவ்வாறு ஆக்குங்கள். முதல் பிரிவில் வருகின்ற வாய்ப்பை எவர் பெற விரும்பினாலும், அவரால் அதைச் செய்ய முடியும். வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான இந்த விசேடமான நேரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பாப்தாதா உங்களுக்குக் கூறுகிறார். எனவே, இந்த நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்த வண்ணம் தபஸ்யா செய்யுங்கள்.

மூன்றாவதாக, காலத்திற்கேற்ப, எந்தளவிற்கு அமைதியின்மையும் குழப்பமும் நிறைந்த சூழல் அதிகரிக்கிறதோ, அந்தளவிற்கு உங்களின் புத்தியின் இணைப்பு, மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால், தொடுகைச் சக்தி மற்றும் பிடித்துக் கொள்ளும் சக்தி இரண்டும் மிகவும் அத்தியாவசியமானவை. முதலில், உங்களின் புத்தியால் உங்களால் பாப்தாதாவின் வழிகாட்டல்களைப் பிடித்துக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். இணைப்புத் தெளிவாக இல்லாவிட்டால், உங்களின் சொந்த மனதின் கட்டளைகள் பாப்தாதாவின் வழிகாட்டல்களி;ல் கலந்துவிடும். அவை கலந்துவிட்ட பின்னர், நீங்கள் அந்த வேளையில் ஏமாற்றப்படுவீர்கள். உங்களின் புத்தி எந்தளவிற்குத் தெளிவாக இருக்கிறதோ, அந்தளவிற்கு உங்களால் பாப்தாதாவின் வழிகாட்டல்களை அதிகளவில் பிடித்துக்கொள்ள முடியும். உங்களின் புத்தி எந்தளவிற்குத் தெளிவாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக உங்களுக்கான சக்திகள், சேவைக்கான வளர்ச்சிக்கும் அருள்பவராக இருப்பதற்கும் மற்றவர்களுக்கு வழங்குவதற்குமான சக்திகள் இலகுவாகத் தொடர்ந்து அதிகரிக்கும். அந்த வேளையில் உங்களுக்கு ஒரு தொடுகை ஏற்படும். இதுவே குறிப்பிட்டதோர் ஆத்மாவிற்குச் சேவை செய்வதற்கான மிகச்சரியான வழிமுறையாகும். அத்துடன் சுய முன்னேற்றத்திற்கான மிகச்சரியான வழிமுறையாகும். எனவே, தற்சமயம், இந்த இரண்டு சக்திகளும் மிகவும் அவசியமானவை. அவற்றை அதிகரிப்பதற்கு, நீங்கள் சிக்கனமானவராகவும் ஒரேயொருவருக்குச் சொந்தமானவராகவும் (ஏக்நாமி) ஆகவேண்டும். எனவே, நீங்கள் வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். மற்றவர்களிடம் பற்று வைப்பது வேறு விடயம். எவ்வாறாயினும் பற்று என்பது தவறானது. ஆனால், மற்றவர்களின் சுபாவத்தின் ஆதிக்கமானது உங்களின் சொந்த ஸ்திதியில் குழப்பத்தை விளைவிக்கும். மற்றவர்களின் சம்ஸ்காரங்கள் உங்களின் புத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தும். அந்த வேளையில், உங்களின் புத்தியில் தந்தை இருப்பாரா அல்லது ஏதாவது சம்ஸ்காரங்கள் இருக்குமா? புத்தியானது பற்றினால் அல்லது முரண்பாட்டினால் ஆதிக்கத்திற்கு உள்ளாகி இருந்தாலும், புத்தியின் இணைப்பு சதா தெளிவாக இருக்க வேண்டும். வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருத்தல் என்றால் சதா ஒரேயொருவருடன் இருத்தல் (ஏக்நாமி) என்று அர்த்தம். சிக்கனம் என்றால் என்ன? பௌதீகமான செல்வத்தைச் சேமித்தல் மட்டும் சிக்கனம் இல்லை. அதுவும் அவசியமே. ஆனால், காலம், எண்ணங்கள், சக்திகளும் செல்வமே ஆகும். அதனால் இவை அனைத்திலும் சிக்கனம் இருக்க வேண்டும். அவற்றை வீணாக்காதீர்கள். சிக்கனமாக இருத்தல் என்றால் உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரித்தல் என்று அர்த்தம். ஏக்நாமி மற்றும் சிக்கனம் (எக்கொனமி) என்பவற்றின் சம்ஸ்காரங்களை உடையவர்களால் தொடுகை மற்றும் பிடித்தல் என்ற இரண்டு சக்திகளையும் அனுபவம் செய்ய முடியும். விநாச காலத்தில் உங்களால் இவற்றை அனுபவம் செய்ய முடியாது. இந்தப் பயிற்சி இந்த வேளையிலேயே தேவைப்படுகிறது. இந்தப் பயிற்சியால் மட்டுமே உங்களால் சரியான நேரத்தில் மேன்மையான வழிகாட்டல்களையும் முக்தியையும் பெற முடியும். விநாசத்திற்கு முன்னர் இன்னமும் சிறிது காலம் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். நல்லது, அது பத்து வருடங்களாகக்கூட இருக்கலாம். ஆனால், பத்து வருடங்களின் பின்னர் நீங்கள் இந்த முயற்சியைச் செய்ய நினைத்தால், உங்களால் அதைச் செய்ய முடியாது. எவ்வளவுதான் நீங்கள் முயன்றாலும், உங்களால் அதைச் செய்ய முடியாதிருக்கும். நீங்கள் பலவீனம் அடைவீர்கள். உங்களின் முடிவும் போராடுவதிலேயே கழியும். வெற்றிகரமானதாக இருக்காது. நீங்கள் வெள்ளி யுகத்திற்குரியவர்கள் ஆகப் போவதில்லை, அல்லவா? சிரமப்படுதல் என்றால் வில்லையும் அம்பையும் வைத்திருத்தல் என்று அர்த்தம். சதா அன்பிலே திளைத்திருந்து, சந்தோஷமாக இருத்தல் என்றால் ஒரு முரளிதாராக (புல்லாங்குழலை வைத்திருப்பவர்), சூரிய வம்சத்தில் ஒருவராக ஆகுதல் என்று அர்த்தம். முரளி உங்களை நடனமாடச் செய்கிறது. ஆனால் வில்லும் அம்பும் இலக்கை அடிக்க முயற்சி செய்வதில் உங்களைச் சிரமப்பட வைக்கிறது. எனவே, நீங்கள் வில்லும் அம்பும் உடையவர்கள் ஆகக்கூடாது. ஆனால் புல்லாங்குழலை உடையவர் ஆகவேண்டும். ஆகவே, இறுதியில் முறைப்பாடு செய்து, மேலதிகமாகச் சிறிதளவு நேரம் வேண்டும் எனக் கேட்காதீர்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள், கருணை காட்டுங்கள்! இது நடைபெறாது. இதனாலேயே, பாபா முன்கூட்டியே உங்களுக்குக் கூறுகிறார். நீங்கள் இறுதியில் வந்தாலென்ன அல்லது ஆரம்பத்தில் வந்தாலென்ன, காலத்திற்கேற்ப, அனைவருக்கும் இறுதி நிலையை அடைவதற்கான காலம் இதுவாகும். எனவே, நீங்கள் துரித கதியில் செல்ல வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

எங்கும் உள்ள அன்பான குழந்தைகள் அனைவருக்கும், பாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கும், திருப்தியுடன் இருக்கும் குழந்தைகளுக்கும், எப்போதும் சந்தோஷ ஆளுமையைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், எப்போதும் பரந்த, எல்லையற்ற இதயங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும், எல்லையற்ற, பரந்த புத்திகளைக் கிரகிப்பவர்களுக்கும், எல்லையற்ற ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பு நிறைந்த நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆகி, உங்களின் எதிரிகளான ஐந்து விகாரங்களை மாற்றி, அவற்றை ஒத்துழைக்கச் செய்பவர் ஆகுவீர்களாக.

வெற்றியாளர் ஒருவர் நிச்சயமாகத் தனது எதிரியின் ரூபத்தை மாற்றுவார். எனவே, நீங்களும் உங்களின் எதிரிகளான, விகாரங்களை மாற்றுகிறீர்கள். அவற்றை அவற்றின் ஒத்துழைக்கும் ரூபத்தில் நீங்கள் மாற்றுகிறீர்கள். அதனால் அவை எப்போதும் உங்களுக்குத் தலைவணங்கும். காமம் என்ற விகாரத்தை நல்லாசிகளாக மாற்றுங்கள். கோபத்தை ஆன்மீக போதையாக மாற்றுங்கள். பேராசையை கவர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றுங்கள். பற்றை அன்பாக மாற்றுங்கள். சரீர அகங்காரத்தை சுய மரியாதையாக மாற்றுங்கள். நீங்கள் மாயையை வென்றவராகவும் உலகை வென்றவராகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
எனது என்ற உணர்வானது நிஜத்தங்கத்தில் கலந்த கலப்படம் ஆகும். இது அதன் மதிப்பைக் குறைக்கிறது. அதனால், எனது என்ற உணர்வை முடித்துவிடுங்கள்.