12.01.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உபகாரம் செய்கின்ற தந்தையின் குழந்தைகளாகிய உங்களது பணி அனைவருக்கும் உபகாரம் செய்வதாகும். அனைவருக்கும் தந்தையை ஞாபகப்படுத்தி அவர்களுக்கு ஞானத்தைத் தானம்; செய்யுங்கள்.

கேள்வி:
எக்குழந்தைகளை பாபா மகாராத்திகள் என்று அழைக்கின்றார்? அவர்களின் அடையாளங்கள் என்ன?

பதில்:
நன்றாகக் கற்று பிறருக்குக் கற்பிப்பவர்களும், சதா தம் மீது வியாழ சகுனங்களைக் கொண்டிருப்பவர்களும், தமது சொந்த முன்னேற்றத்திலும் பிறரின் முன்னேற்றத்திலும் எப்பொழுதும் அக்கறை செலுத்துபவர்களும்;, யக்ஞத்தின் சேவை செய்வதில் தமது எலும்புகளைக் கொடுத்து பாபாவின் பணியில் உதவியாளர்கள் ஆகுபவர்களுமே மகாராத்திகள். அத்தகைய மகாராத்திக் குழந்தைகளைப் பற்றி பாபா கூறுகின்றார்: இவர்கள் எனது தகுதிவாய்ந்த குழந்தைகள்.

ஓம் சாந்தி.
இந்நாட்களில் குழந்தைகளாகிய நீங்கள் சிவஜெயந்திக்காக ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கின்றீர்கள். வாழ்த்து மடல்கள் போன்றனவும் அச்சடிக்கப்படுகின்றன. தந்தை பல தடவைகள் விளங்கப்படுத்தியுள்ளார். அனைத்தும் பிரதானமாகக் கீதையிலேயே தங்கியுள்ளது. மனிதர்களினால் எழுதப்பட்டுள்ள கீதையைக் கற்றதால், அரைக்கல்பமாக நீங்கள் தொடர்ந்தும் கீழே இறங்கினீர்கள். அரைக்கல்பத்திற்குப் பகலும், அரைக்கல்பத்திற்கு இரவும் உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே புரிந்துகொள்கின்றீர்கள். பாபா இப்பொழுது நீங்கள் கடைய வேண்டிய தலைப்புகளைக் கொடுக்கின்றார். நீங்கள் எழுதலாம்: சகோதர, சகோதரிகளே, வந்து புரிந்துகொள்ளுங்கள்! கீதை என்ற ஒரேயொரு சமயநூலே ஞானத்திற்கான சமயநூல். ஏனைய அனைத்தும் பக்திக்கான சமயநூல்கள். அதி மங்களகரமான சங்கமயுகத்தில் எல்லையற்ற தந்தையும், பரமாத்மாவான பரமதந்தையுமான திரிமூர்த்தி சிவன் பேசுகின்ற ஞானத்திற்குரிய ஒரேயொரு சமயநூலே உள்ளது. அல்லது நீங்கள் எழுதலாம்: அவர் பிரம்மாவின் மூலம் கூறுவதால், உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சற்கதி கிடைக்கின்றது. கீதையின் ஞானத்தின் மூலம், நீங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அதன்பின்னர் மனிதர்களினால் பேசப்பட்ட பக்திக்கான கீதை 63 பிறவிகளுக்கு தொடர்ந்தும் உள்ளது. தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களுக்குச் சற்கதியை அருள்கின்றார். பின்னர் அதனை மீண்டும் நீங்கள் செவிமடுக்க வேண்டியதில்லை. ஞானத்தின் கீதையின் மூலம் பகல் தோன்றுகின்றது. ஞானக்கடலான தந்தை மாத்திரமே இதனைப் பேசுகின்றார். இதன் மூலமே 21 பிறவிகளுக்குச் சற்கதியும், முக்தியும் கிடைக்கின்றன, அதாவது, ஆட்ட அசைக்க முடியாத சத்தியயுக தேவ இராச்சியத்தில் நீங்கள் 100 வீதமான தூய்மையையும், சந்தோஷத்தையும், அமைதியையும் பெறுகின்றீர்கள். 21 பிறவிகளுக்கு மேலேறும் ஸ்திதி உள்ளது. மனிதர்களினால் எழுதப்படுகின்ற கீதையின் மூலம் கீழிறங்கும் ஸ்திதியே உள்ளது. பக்திக்குரிய கீதைக்கும், ஞானத்திற்குரிய கீதைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையிட்டு நீங்கள் மிகவும் நன்றாகக் கடைய வேண்டும். இதுவே மக்கள் அறியாதுள்ள பிரதான விடயம். நீங்கள் எழுதுகின்றீர்கள்: திரிமூர்த்தியின் ஜெயந்தியே ஸ்ரீமத் பகவத் கீதையின் ஜெயந்தியும், அனைவரின் சற்கதிக்கான ஜெயந்தியும் ஆகும்: சிவஜெயந்தி முழு உலகிற்கும் அமைதியை ஏற்படுத்துகின்றது என்றும் நீங்கள் அவர்களிடம் கூறலாம். பிரதானமான வார்த்தைகள் மிகவும் அவசியமானவை. அதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. மனிதர்களால் மனிதர்களுக்குச் சற்கதியை அளிக்க முடியாது என்பதையும் நீங்கள் அனைவருக்கும் கூறவேண்டும். அதிமங்களமான சங்கமயுகத்தில் கடவுள் சற்கதியை அருள்வதற்காக வருகின்றார், அது இப்பொழுது இடம்பெறுகின்றது. இவையே இரண்டு அல்லது மூன்று பிரதானமான விடயங்களாகும். சிவனுடைய கீதைக்கும், கிருஷ்ணருடையதிற்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது என்பதும் உண்மையே. சங்மகயுகத்தில் திரிமூர்த்தி கடவுள் சிவன் கூறுவதைச் செவிமடுப்பதால் சற்கதி கிடைக்கின்றது. அத்தகைய கருத்துக்களை ஒருவர் கடையும்பொழுதே, பிறர் மீது தாக்கம் இருக்கும். மனிதர்களால் மனிதர்களுக்கு என்றுமே சற்கதியை அருள முடியாது. ஆசிரியரும் சற்குருவுமான திரிமூர்த்தி பரமாத்மா பரமதந்தையான சிவன் மாத்திரமே இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்தில் அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். வாழ்த்து மடல்களில் சிறிதளவே எழுதுங்கள். வாழ்த்து மடல்களில் எழுதுங்கள்: தூய்மையற்ற கலியுகத்தின் சிப்பி போன்றுள்ள மனிதரை, வைரம் போன்ற தூய தேவராக மாறுவதற்கான கடவுளின் அழைப்பிதழ். இவ்வாறு நீங்கள் எழுதும்பொழுது, சற்கதியை அருள்பவரான தந்தைக்கான சிவஜெயந்தியே கொண்டாடப்படுகின்றது என்பதை மக்கள் சந்தோஷத்துடன் புரிந்துகொள்வார்கள். வார்த்தைகள் மிகவும் தெளிவாக எழுதப்பட வேண்டும். பக்தி மார்க்கத்தில் மக்கள் பல சமயநூல்களைக் கற்று, அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். இங்கே, தந்தையிடமிருந்து ஒரு விநாடியில் நீங்கள் முக்தியையும், சற்கதியையும் பெறுகின்றீர்கள். நீங்கள் தந்தைக்கு உரியவராகி, ஞானத்தைப் பெறும்பொழுது, நிச்சயமாகச் சற்கதியைப் பெறுகின்றீர்கள். முதலில் நீங்கள் முக்திக்குள் செல்வீர்கள். பின்னர், நீங்கள் எவ்வளவு முயற்சியைச் செய்துள்ளீர்களோ, அதற்கேற்ப நிச்சயமாகச் சற்கதியைப் பெறுவீர்கள். நீங்கள் நிச்சயமாக ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள், எனினும் அதனை ஆரம்பத்திலா அல்லது இறுதியிலா பெறுகின்றீர்கள் என்பதே விடயமாகும். நீங்கள் முதலில் ஜீவன்முக்தியைப் பெறுகின்றீர்கள்; பின்னர் நீங்கள் பந்தன வாழ்க்கை வாழ்கின்றீர்கள். அத்தகைய பிரதானமான கருத்துக்களைக் கிரகித்தால், உங்களால் பெருமளவு சேவை செய்ய முடியும். நீங்கள் தந்தையை அறிந்திருந்தால், பிறருக்கும் அவரது அறிமுகத்தைக் கொடுங்கள். நீங்கள் பிறருக்கு அறிமுகத்தைக் கொடுக்காது விட்டால், உங்களுக்கு எந்த ஞானமும் இல்லை என்பதே அர்த்தமாகும். நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள், ஆனால் அவர்களது பாக்கியத்தில் அது இல்லாதுள்ளது. நீங்கள் உபகாரியான தந்தையின் குழந்தைகள் என்பதால், நீங்கள் நன்மை செய்ய வேண்டும். அல்லது நீங்கள் சிவபாபாவின் குழந்தையாக உள்ளீர்கள் என்று கூற வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றீர்கள் என்றும், ஆனால் எவருக்கும் உபகாரம் செய்வதில்லை என்றும் தந்தை நினைப்பார். அவர்கள் செல்வந்தராயினும் ஏழைகளாயினும் நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். எவ்வாறாயினும் ஏழைகளுக்கு நேரம் இருப்பதால் அவர்களே முதலில் இந்த ஞானத்தைப் பெறுவார்கள். இது நாடகத்தில் அவ்வாறு நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது செல்வந்தர் ஒருவர் வருவாராயினும், அவரைத் தொடர்ந்து பலரும் வருவார்கள். இப்பொழுது அத்தகைய புகழ் தோன்றுமாயின், பலரும் இங்கே வருவார்கள். உங்களுக்குரியது இறை அந்தஸ்தாகும். நீங்கள் உங்களுக்கும், பிறருக்கும் நன்மை செய்கின்றீர்கள். தத்தமக்கு நன்மை செய்யாதவர்களால் பிறருக்கும் நன்மை செய்ய முடியாது. தந்தையே உபகாரியாவார். அவர் அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். நீங்கள் அவரது உதவியாளர்களும் ஆவீர்கள். அவை பக்தி மார்க்கத்தின் சகுனங்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சற்கதிக்கான பாதைக்கு ஒரே விதமான சகுனம் மாத்திரமே உள்ளது. தாமும் கற்று பிறருக்கும் கற்பிப்பவர்கள் மீது வியாழ பார்வை உள்ளது. அத்தகையவர்கள் மகாராத்திகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். உங்கள் இதயத்திடம் வினவுங்கள்: நான் ஒரு மகாராத்தியா? நான் இன்னாரைப் போன்று சேவை செய்கின்றேனா? காலாட்படையினரால் எவருக்கும் ஞானத்தைக் கொடுக்க முடியாது. நீங்கள் எவருக்கேனும் நன்மை செய்யாவிட்டால், உங்களை நீங்கள் உபகாரியான தந்தையின் குழந்தை என்று ஏன் அழைக்க வேண்டும்;? தந்தை உங்களை முயற்சி செய்யவே தூண்டுவார். இந்த யக்ஞத்தின் சேவைக்காக நீங்கள் உங்கள் எலும்புகளைக் கொடுக்க வேண்டும். எவ்வாறாயினும். உண்டு, பருகி, உறங்குதல் சேவை செய்வதாகுமா? அத்தகையவர்கள் பிரஜைகளின் பணிப்பெண்களும், வேலையாட்களும் ஆகுவார்கள். தந்தை கூறுகின்றார்: முயற்சி செய்து சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுங்கள். தகுதியான, கீழ்ப்படிவான குழந்தைகளைக் காணும்பொழுது, தந்தை பூரிப்படைகின்றார். லௌகீகத் தந்தையும் தனது குழந்தை மிகவும் நல்லதோர் அந்தஸ்தை அடைவதைக் காணும்பொழுது மிகவும் பூரிப்படைகின்றார். பரலோகத் தந்தையும் அதனையே கூறுகின்றார். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்கவே வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது பிறரையும் அவ்வாறு ஆக்க வேண்டும். உங்களை மாத்திரமே பராமரிப்பதில் என்ன பயனுள்ளது? அனைவரிடமும் சிவபாபாவை நினைவுசெய்யுங்கள் என்று கூறுங்கள். உணவு உண்ணும்பொழுது ஒருவருக்கொருவர் தந்தையை ஞாபகப்படுத்துங்கள். அப்பொழுது அனைவருமே கூறுவார்கள்: இவருக்குச் சிவபாபாவின் மீது பெருமளவு அன்பு உள்ளது. இது இலகுவானது, இல்லையா? இதனால் என்ன நட்டம் உள்ளது? இப் பழக்கத்தை நீங்கள் பதித்துக் கொண்டால், நீங்கள் உணவு உண்ணும்பொழுதும் தொடர்ந்தும் சிவபாபாவை நினைவுசெய்வீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இப்பொழுது, அனைவருமே கூவி அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எனவே நிச்சயமாக அவர்கள் தூய்மையற்றவர்கள். அந்த ஒரேயொருவரே தூய்மையாக்குபவர் என்பதால், சங்கராச்சாரியாரும் சிவபாபாவையே நினைவுசெய்கின்றார். மக்கள் அரைக் கல்பத்திற்குப் பக்தி செய்கின்றார்கள், பின்னர் கடவுள் வருகின்றார். இந்தக் கணக்கைப் பற்றி எவரும் அறியார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: யாகங்கள் செய்வதன் மூலமும், தபஸ்யா செய்வதன் மூலமும், தானம் போன்றவற்றினாலும் எவராலும் என்னைச் சந்திக்க முடியாது. கீதையும் இதில் அடங்குகின்றது. அந்தச் சமயநூல்களை வாசிப்பதன் மூலம் எவராலும் சற்கதியைப் பெற முடியாது. கீதை, வேதங்கள், உபநிடதங்கள் போன்றன அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கே உரியவை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இலகு இராஜயோகத்தையும் ஞானத்தையும் கற்பித்து, அதன் மூலம் நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெற உதவுகின்றார். இதுவே இராஜயோகம் என்று அழைக்கப்படுகின்றது. இதில் எந்த சமயம் சார்ந்த புத்தகங்களும் உள்ளன என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் ஓர் அந்தஸ்;தைப் பெறுவதற்காக, உங்களுக்கு ஆசிரியர் தூண்டுவதனால் நீங்கள் அவரைப் பின்பற்ற வேண்டும். அனைவரிடமும் கூறுங்கள்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். அவரே ஆத்மாக்களாகிய எங்கள் அனைவருக்கும் தந்தையாவார். சிவபாபாவை நினைவுசெய்வதன் மூலம், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. தொடர்ந்தும் ஒருவரையொருவர் எச்சரித்து, முன்னேற்றம் அடையுங்கள். நீங்கள் நினைவுசெய்வதை அதிகரிப்பதற்கு ஏற்ப, உங்களுக்கு அதிகளவு நன்மை செய்கின்றீர்கள். நீங்கள் நினைவு யாத்திரை மூலம் முழு உலகத்தையும் தூய்மையாக்குவீர்கள். நினைவுசெய்தவாறே உணவு தயாரியுங்கள். அப்பொழுது அவ்வுணவு சக்தியால் நிரம்பும். இதனாலேயே உங்கள் பிரம்ம போசனத்திற்குப் பெருமளவு புகழ் உள்ளது. அந்தப் பக்தர்கள் பிரசாதம் படைக்கும்பொழுது, இராமரது நாமத்தை தொடர்ந்தும் உச்சரிக்கின்றார்கள். அவர்கள் இராமரது பெயரால் தானம் செய்கின்றார்கள். உங்கள் புத்தியில் நீங்கள் தொடர்ந்தும் தந்தையின் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். நாள் முழுவதும் உங்கள் புத்தியில் ஞானமே இருக்க வேண்டும். தந்தையிடம் முழுப் படைப்பினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் உள்ளது. கடவுளே அதிமேலானவர். நீங்கள் அவரை நினைவுசெய்யும்பொழுது, உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வீர்கள். அவ்வாறாயின் நீங்கள் ஏன் வேறு எவரையும் நினைவுசெய்ய வேண்டும்? தந்தை கூறுகின்றார்: என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். ஆகையால் நீங்கள் ஏனைய அனைவரையும் துறக்க வேண்டும். இதுவே கலப்படமற்ற நினைவாகும். உங்களால் நினைவுசெய்ய முடியாதிருந்தால், அப்பொழுது முடிச்சு ஒன்றை இட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் சொந்த முன்னேற்றத்திற்காக நிச்சயமாக முயற்சி செய்து உயர்ந்ததோர் ஸ்திதியைப் பெற வேண்டும். சிவபாபாவே எங்களை ஆசிரியர்கள் ஆக்குகின்ற, எங்கள் ஆசிரியர் ஆவார். நீங்கள் அனைவருமே வழிகாட்டிகள். பாதையைக் காட்ட வேண்டியது வழிகாட்டிகளின் கடமையாகும். உங்களிடம் முன்னர் இந்த ஞானம் எதுவும் இருக்கவில்லை. அனைவரும் கூறுகின்றார்கள்: முன்னர், கல்வி சில சதப் பெறுமதியானதாகவே இருந்தது அது அவ்வாறே நிச்சயமாக இருந்தது. நாடகத்திற்கு ஏற்ப, நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, தொடர்ந்தும் கற்கிறீர்கள். ஒரு கல்பத்தின் பின்னரும் நீங்கள் அதனையே செய்வீர்கள். இறுதியில் நீங்கள் அனைத்தினதும் காட்சியைக் காண்பீர்கள். காட்சியைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்க மாட்டாது. பாபா மிகவும் விரைவாக காட்சிகளைப் பெற்றார். இன்ன இன்னார் ஓர் அரசர் ஆகுவார். இதுவே அவரது ஆடையாகவிருக்கும். ஆரம்பத்தில் குழந்தைகளாகிய நீங்கள் பல காட்சிகளைக் கண்டீர்கள். பின்னர் இறுதியிலும், நீங்கள் பல காட்சிகளைக் காண்பீர்கள். அப்பொழுது நீங்கள் நினைவுசெய்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய வெகு நாட்களாகத் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே கூறுகின்றார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உணவு வேளையின்பொழுது ஒருவருக்கொருவர் தந்தையை ஞாபகப்படுத்துங்கள். நினைவு செய்தவாறே உங்கள் உணவை உண்ணுங்கள். ஒரேயொரு சிவபாபாவின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள்.

2. யக்ஞத்திற்குச் சேவை செய்வதில் உங்கள் எலும்புகளைக் கொடுங்கள். தந்தையின் முழுமையான உதவியாளர்கள்; ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டிருந்து, பலவீனமான எண்ணங்களின் வலை எதனையும் முடித்து விடுவதால், வெற்றி நிறைந்தவர் ஆகுவீர்களாக.

இதுவரை, பெரும்பாலான குழந்தைகளில் பலவீனமான எண்ணங்களே வெளிப்படுகின்றன. அவர்கள் எண்ணுகின்றார்கள்: ஒன்று நடைபெறுமா அல்லது இல்லையா அல்லது என்ன நடைபெறும் என்று எனக்குத் தெரியாது. இந்தப் பலவீனமான எண்ணங்கள் ஒரு சுவர் ஆகுகின்றன, அந்தச் சுவரின் பின்னால் வெற்றி மறைந்துள்ளது. மாயை வீணான எண்ணங்களின் வலையொன்றை வீசுகின்றாள், நீங்கள் அந்த வலையில் சிக்கிக் கொள்கின்றீர்கள். ஆகவே புத்தியில் நம்பிக்கை கொண்டிருத்தல் எனும் விழிப்புணர்வு மூலம் வெற்றியை ஏற்படுத்துங்கள், வெற்றிக்கான உரிமையைக் கொண்டிருப்பதால், பலவீனமான எண்ணங்களை முடித்து விடுங்கள்.

சுலோகம்:
உங்களுடைய எரிமலைக் கண்ணாகிய உங்கள் மூன்றாவது கண்ணைத் திறந்து வைத்திருங்கள், அப்பொழுது மாயை சக்தியற்றவள் ஆகி விடுவாள்.

கோப , கோபியர் அனைவருக்கும் ஆழமான அன்பும் , நினைவும்.

வீட்டில் உங்கள் குடும்பத்துடன் இருந்து, ஒரு தாமரையைப் போன்ற வாழ்வை வாழும்பொழுது, நீங்கள் தொடர்ந்தும் வெற்றியுடன் முன்னேறிச் செல்கின்றீர்கள், இல்லையா? அன்பிற்கினிய கோபியர்கள் சேவையை மிக நன்றாக முன்னேற்றுவதற்கான முயற்சியைச் செய்வதில் ஈடுபட்டுள்ளார்கள். இது மிகவும் நல்லது. படிப்படியாக, அனைவரும் நிச்சயமாக எங்கள் பரம பூஜிக்கத் தகுதிவாய்ந்த தந்தையின் அறிமுகத்தைப் பெறப் போகின்றார்கள். பல மில்லியன்கணக்கானோரில் ஒரு கைப்பிடியளவினரால் மாத்திரமே இந்த மேன்மையான பேற்றைப் பெற இயலும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், அத்தகைய மலர்களே நிச்சயமாக வெளிப்படுவார்கள், இல்லையா? அச்சா. தொடர்ந்தும் சேவையை ஒரு துரித கதியில் அதிகரியுங்கள். அழிவற்ற ஞானச் செல்வம் எனும் பொக்கிஷம் முற்றிலும் தனித்துவமானதும், முடிவற்றதும் ஆகும், குழந்தைகள் அனைவரும் அதனைத் தந்தையிடமிருந்து தொடர்ந்தும் பெறவுள்ளார்கள். ஒருவர் அதனை அடையும்பொழுது, அவர் பிறவிபிறவியாக அனைத்துப் பொக்கிஷங்களும் நிறைந்தவர் ஆகுகின்றார். இது அவ்வாறான விடயமாகும். அன்பிற்கினிய கோப, கோபியரே, அது சரியா, இல்லையா? என்று எனக்குக் கூறுங்கள்,

கோப, கோபியரான நீங்கள் அனைவரும் புலன்களுக்கு அப்பாற்பட்ட சந்தோஷத்தால் நிறைந்துள்ள ஒரு வாழ்வின் அனுபவத்துடன் தொடர்ந்தும் முன்னேறுகின்றீர்கள். பாருங்கள், அன்பிற்கினிய கோப, கோபியரே. பிராமணக் குலம் வளர்ச்சியடையும் பொழுது மாத்திரமே, அனைவருக்கும் நன்மை இருக்கும். அப்பொழுது பிராமணர்களான நீங்கள் நிச்சயம் தேவர்கள் ஆகுவீர்கள். சிலர் தங்கள் இல்லற வாழ்க்கையில் முன்னேறுகின்றார்கள், பிராமணக் குல அங்கத்தவராகவும் முன்னேறுகின்றார்கள், அதாவது, வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுதும், அவர்கள் தூய வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கணவன், மனைவி இருவரும் ஒரே தந்தையின் குழந்தைகளே, அவர்கள் அத்தகைய தூய தாரணையைப் பேணுகின்றார்கள். எவ்வாறாயினும், அனைவரும் பரமாத்மாவான பரமதந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். இதுவே ஸ்ரீமத்தைப் பின்பற்றுவது என அறியப்பட்டுள்ளது. அத்தகைய தாரணையைக் கொண்டிருப்பவர்களே பிராமணக் குல அங்கத்தவர்கள் என்று கூறப்படுகின்றனர். இப்பொழுது அவர் எங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும், தர்மராஜும் ஆகி விட்டதால், நாங்கள் ஏன் அவரது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகி, எதிர்காலத்தில் அமைதிக்கும் சந்தோஷத்திற்குமான முழு உரிமையையும் அடையும் வகையில், தூய்மைக்கான முழு உரிமையையும் கோரக்கூடாது?

அன்பிற்கினிய கோப, கோபியரே, எனக்குக் கூறுங்கள், இந்த இரகசியத்தை நீங்கள் இலகுவாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள், இல்லையா? நீங்கள் மரணித்து வாழ்வதற்குப் பயப்படவில்லை, அல்லவா? நீங்கள் ஒவ்வொருவரும் இக் கடிதத்தைத் தனிப்பட்ட முறையில் உங்கள் பெயரால் தயவுசெய்து ஏற்றுக் கொண்டு, அதை உங்களுக்கான ஒரு கடிதமாகக் கருதி வாசியுங்கள் அல்லது செவிமடுங்கள். ஒவ்வொருவரும் தாயின் அன்பைத் தனிப்பட்ட முறையில் உங்கள் பெயால் பெற வேண்டும். தாயின் ஆழமான, முடிவற்ற அன்பானது ஒவ்வொரு கோப, கோபியருக்கும் தனிப்பட்ட முறையில் பெயரால் உள்ளது. அச்சா. ஒரு துரித கதியில் உங்கள் பாக்கியத்தை மிகவும் உயர்வானதாக ஆக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பதே ஓர் உபகாரியாக இருப்பதாகும். பரமதந்தையே உங்களுக்கு அதியுயர்வான ஆஸ்தியைக் கொடுப்பதற்கு வந்துள்ளார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளதால், நிச்சயமாக அதைப் பெற வேண்டும். இப்பொழுது நான் விடை பெறுகின்றேன். ஓம் சாந்தி.
 


தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி:
தந்தை பிரம்மா எனது, எனது என்பது அனைத்தையும் ஒரேயொரு எனது என்பதில் அமிழ்த்தியுள்ளார். என்னுடையவர் ஒரேயொரு தந்தையே, வேறு எவருமல்ல. இவ்விதமாகத் தந்தை பிரம்மாவைப் பினபற்றுங்கள். உங்கள் ஒருமுகப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். பின்னர் நீங்கள் விரும்பியபடி உங்களுக்கு எங்கு வேண்டுமோ உங்களுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமோ எவ்விதமாக வேண்டுமோ அவ்வாறு உங்கள் மனம் ஒருமுகப்படும். இந்த ஒருமுகப்படும் சக்தி மூலம் நீங்கள் இயல்பாகவே நிலையான, ஸ்திரமான தேவதை ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள்.