12.09.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    19.03.88     Om Shanti     Madhuban


நினைவில் சுவாரசியத்தை ஏற்படுவதற்கான வழிமுறைகள்.


இன்று, சட்டங்களை உருவாக்குபவரும், ஆசீர்வாதங்களை அருள்பவருமான பாப்தாதா, மாஸ்ரர் சட்டங்களை உருவாக்குபவர்களும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களுமான தனது குழந்தைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் சட்டத்தை உருவாக்குபவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் ஆகியுள்ளார். அதைப் பார்ப்பதுடன்கூடவே, குழந்தைகளின் அந்தஸ்து எத்தனை மகத்தானது என்பதையும் பாப்தாதா பார்த்தார். இந்தச் சங்கமயுகத்தின் பிராமண வாழ்க்கை மிகவும் முக்கியமானது. சட்டங்களை உருவாக்குபவரும் ஆசீர்வாதங்களை அருள்பவருமான பாபாவுடன்கூடவே, பிராமணர்களான நீங்களும் சட்டங்களை உருவாக்குபவர்கள். சரியான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பவர்கள். உங்களின் இப்போதுள்ள ஒவ்வொரு நடைமுறையும் எவ்வாறு சத்தியயுகத்தின் நடைமுறைகளாக மாறுகின்றன என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். ஆகவே, ஒவ்வொரு செயலுக்குமான தற்போதைய நடைமுறைகள் எதிர்காலத்திற்கும் தொடர்கின்றன. துவாபர யுகத்திலும், பக்தி மார்க்கத்தில், இந்த நேரத்தில் செய்யப்படும் மேன்மையான செயல்களுக்கான வழிமுறைகள், பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்கள் ஆகுகின்றன. எனவே, இந்த நேரத்தின் சட்டங்கள், உங்களின் வாழ்க்கையில் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபத்திலும் மேன்மையான சட்டங்களாகத் தொடர்கின்றன. அத்துடன் அவை வழிபடும் காலப்பகுதியிலும், அதாவது, பக்தி மார்க்கத்திலும் தொடர்கின்றன. பக்தி மார்க்கத்திலும், உங்களின் ஒவ்வொரு சட்டமும் ஒரு நடைமுறை, சம்பிரதாயமாகத் தொடர்கிறது. நீங்கள் சட்டங்களை உருவாக்குபவர்கள். ஆசீர்வாதங்களை அருள்பவர்கள். அத்துடன் சரியான வழிமுறைகளையும் வழங்குபவர்கள்.

உங்களின் பிரதானமான கோட்பாடுகள், வெற்றியைப் பெறுவதற்கான வழிமுறை ஆகுகின்றன. உதாரணமாக, உங்களின் பிரதானமான கோட்பாடு, ஒரேயொரு தந்தையே உள்ளார் என்பதாகும். பல தர்மாத்மாக்கள் இருக்கிறார்கள். பல மகாத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரேயொரு பரமாத்மாவே இருக்கிறார். உங்களின் இந்தப் பிரதானமான கோட்பாட்டினால், மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் அரைக்கல்பத்திற்குத் தந்தையிடமிருந்து உங்களின் வெற்றியைப் பெறுகிறீர்கள். வெகுமதியைப் பெறுதல் என்றால், வெற்றி சொரூபம் ஆகுதல் என்று அர்த்தம். ஒரேயொரு தந்தையே இருக்கிறார் என்பதையும், மகாத்மாக்களும் தர்மாத்மாக்களும் தந்தை இல்லை என்பதையும், அவர்கள் உங்களின் சகோதரர்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். தந்தையிடமிருந்தே ஆஸ்தி பெறப்படுகிறது. சகோதரரிடமிருந்து அல்ல. இந்தப் பிரதானமான கோட்பாட்டினால், நீங்கள் அரைக்கல்பத்திற்கு வெற்றி பெறுகிறீர்கள். பின்னர், பக்தி மார்க்கத்திலும், கடவுள் ஒருவரே என்ற கோட்பாடு, வெற்றி பெறுவதற்கான அடிப்படையாக அமைகிறது. பக்தியின் முதல் வடிவம், தந்தையை சிவலிங்க ரூபத்தில் வழிபடுவதாகும். இது கலப்படமற்ற பக்தி எனப்படுகிறது. எனவே, பக்தி மார்க்கத்திலும், தந்தை ஒரேயொருவரே என்ற ஒரு கோட்பாட்டினூடாகவே வெற்றி பெறப்படுகிறது. இந்த முறையில், உங்களின் ஒவ்வொரு கோட்பாடுகளினூடாகவும் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகிறீர்கள். உதாரணமாக, இந்த வாழ்க்கையின் பிரதானமான கோட்பாடு தூய்மையாகும். தூய்மை என்ற கோட்பாட்டினூடாகவே, ஆத்மாக்களான நீங்கள் எல்லா வேளையும் எதிர்கால ஒளிக்கிரீடத்தை வெற்றி ரூபத்தில் பெறுகிறீர்கள். இதன் ஞாபகார்த்தம் இரட்டைக்கிரீடமாகச் சித்தரிக்கப்படுகிறது. பக்தியில், அவர்கள் தமது இதயபூர்வமாக மிகச்சரியாக பக்தி செய்யும்போதெல்லாம், தூய்மையே தமது பிரதானமான கோட்பாடாக இருப்பதாகக் கருதுகிறார்கள். தூய்மை இல்லாமல் அவர்களால் பக்தியில் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். தற்காலிகமான காலப்பகுதிக்காயினும், அவர்கள் பக்தி செய்வதில் ஈடுபட்டிருக்கும் அந்த வேளைக்காவது தூய்மையைக் கடைப்பிடிக்கிறார்கள். எவ்வாறாயினும், தூய்மையே வெற்றிக்கான வழிமுறை என்ற கோட்பாட்டை அவர்கள் நிச்சயமாகக் கடைப்பிடிக்கிறார்கள். அதேபோல், ஞானத்தின் ஒவ்வொரு கோட்பாட்டைப் பற்றியும் தாரணையின் ஒவ்வொரு பிரதானமான கோட்பாட்டைப் பற்றியும் சிந்திப்பதற்கு உங்களின் புத்திகளைப் பயன்படுத்துங்கள். அத்துடன் எவ்வாறு ஒவ்வொரு கோட்பாடும் வெற்றிக்கான வழிமுறை ஆகும் என்றும் சிந்தியுங்கள். கடைவதற்கான இந்த வீட்டுவேலை உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்ட உதாரணங்களைப் பயன்படுத்தி இந்த முறையில் சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் சட்டத்தை உருவாக்குபவர்களாகவும் அத்துடன் வெற்றி சொரூபங்களாகவும் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, இன்றும், பக்தர்கள் என்ன வெற்றிக்காக ஆசைப்பட்டாலும், அந்தக் குறிப்பிட்ட வெற்றியை யார் மூலம் தாங்கள் பெறுவோம் என நம்புகிறார்களோ, அவர்கள் சென்று அந்தக் குறிப்பிட்ட தேவதேவியர்களை வழிபடுகிறார்கள். வெற்றியை அருள்பவரான தந்தையுடன் கூடவே, குழந்தைகளான நீங்களும் வெற்றியை அருள்பவர்கள் ஆகுகிறீர்கள் எனக் கருதுகிறீர்களா? சகல வெற்றிகளையும் தாங்கள் பெற்றால் மட்டுமே அவர்களால் மற்றவர்கள் வெற்றி பெறுவதற்குக் கருவிகள் ஆகமுடியும். வெற்றி (சித்தி) என்பது தவறான ஒரு விடயமல்ல. ஏனென்றால், உங்களின் வெற்றியானது மாயசித்து வேலைகளுடன் (ரித்தி-சித்தி) தொடர்புடையதல்ல. மாயசித்து வேலைகள் தற்காலிகமான காலத்திற்கே கவரக்கூடியவை. எவ்வாறாயினும், உங்களின் வெற்றியானது மிகச்சரியான வழிமுறையை அடிப்படையாகக் கொண்டது. ஏனென்றால், இறை வழிமுறையால் பெறப்படும் வெற்றியானது இறைவெற்றியாகும். கடவுள் அநாதியானவர். அதேபோல், இறை வழிமுறைகளும் அவற்றினால் பெறப்படும் வெற்றியும் அநாதியானதே. மாயசித்து வேலை செய்பவர்களுக்கு எல்லைக்குட்பட்ட ஞானமே உள்ளது. எனவே அவர்களின் வெற்றியும் தற்காலிகமானதே. எவ்வாறாயினும், உங்களின் வெற்றியானது, சரியான கோட்பாடுகள் என்ற வழிமுறையைப் பயன்படுத்துவதால் பெறப்படுகிறது. இதனாலேயே, நீங்கள் அரைக்கல்பத்திற்கு வெற்றி சொரூபங்கள் ஆகுகிறீர்கள். ஏனைய அரைக்கல்பத்திற்கு, உங்களின் கோட்பாடுகளால், பக்த ஆத்மாக்கள் தொடர்ந்து தமது கொள்ளளவிற்கேற்ற பலனைப் பெறுகிறார்கள். அத்துடன் அவர்கள் வெற்றியும் பெறுகிறார்கள். ஏனென்றால், காலத்திற்கேற்ப, பக்தியின் சக்தியும் தொடர்ந்து குறைவடைகிறது. துவாபர யுகத்தின் பக்த ஆத்மாக்கள், தமது சதோபிரதான் பக்தியின் சக்தியால், இன்றுள்ள பக்தர்களை விட மகத்தான வெற்றியைப் பெறுகிறார்கள். தற்சமயத்தின் பக்தி தமோபிரதானாக இருப்பதனால், மிகச்சரியான கோட்பாடுகளும் இருப்பதில்லை. எந்தவித வெற்றியும் கிடைப்பதில்லை.

எனவே, நீங்கள் யார் என்ற அந்தளவு போதை உங்களுக்கிருக்கிறதா? நீங்கள் எப்போதும் உங்களின் மேன்மையான சுய மரியாதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறீர்களா? இந்த ஆசனம் மிகவும் மேன்மையானது. நீங்கள் இந்த ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது, மீண்டும் மீண்டும் நீங்கள் குழப்பம் அடைய மாட்டீர்கள். இதுவே உங்களின் நிலை, இல்லையா? உங்களின் ஸ்திதி எத்தனை மகத்தானது: சட்டங்களை உருவாக்குபவர்கள், வெற்றியை அருள்பவர்கள்! நீங்கள் இந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும்போது, மாயையால் எதிர்ப்பை உருவாக்க முடியாது. நீங்கள் சதா பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்கள் குழப்பம் அடைவதற்கான காரணம் என்னவென்றால், மேன்மையான உணர்வெனும் உங்களின் ஆசனத்தில் இருந்து நீங்கள் சாதாரணமான உணர்வெனும் ஸ்திதிக்குச் செல்வதேயாகும். நினைவில் இருப்பதும் சேவை செய்வதும் உங்களின் நாளாந்த அட்டவணையில் சாதாரணமான செயல்கள் ஆகிவிடுகின்றன. எவ்வாறாயினும், நீங்கள் நினைவில் அமர்ந்திருக்கும்போது, உங்களின் மேன்மையான சுயமரியாதை என்ற ஏதாவதொரு ரூபத்தின் ஆசனத்தில் அமர்ந்திருங்கள். உங்களின் படுக்கையை விட்டு எழுந்திருந்து, யோகம் நடக்கும் இடத்தில், அது தியான அறையோ அல்லது பாபாவின் அறையோ, அங்கு சென்று நீங்கள் அமர்வதாக இருக்கக்கூடாது. அல்லது நாள் முழுவதும் நீங்கள் யோகத்தில் அமர்ந்திருப்பதாகவும் இருக்கக்கூடாது. உங்களின் சரீரம் அமர்வதற்குப் பொருத்தமானதோர் இடத்தை நீங்கள் கொடுப்பதைப் போல், அனைத்திற்கும் முதலில், உங்களின் புத்திக்கு நல்லதொரு ஸ்திதி என்ற இடத்தைக் கொடுங்கள். அனைத்திற்கும் முதலில், உங்களின் புத்திக்குப் பொருத்தமானதொரு இடத்தைக் கொடுத்துவிட்டீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். சரியான ஆசனத்தினால், உங்களுக்கு இயல்பாகவே இறைபோதை ஏற்படும். தற்காலத்தில், மக்கள் தமது கதிரையின் (பதவியின்) போதையைப் பற்றிப் பேசுகிறார்கள். உங்களின் ஆசனம், மேன்மையான ஸ்திதியாகும். சிலவேளைகளில், மாஸ்ரர் விதை எனும் ஸ்திதியின் ஆசனத்தில் உங்களை இருத்திக் கொள்ளுங்கள். சிலவேளைகளில், அவ்யக்த தேவதை என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள். சிலவேளைகளில், உலக உபகாரி என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள். ஒவ்வொரு நாளும் இந்த முறையில் வெவ்வேறு ஸ்திதிகள் என்ற ஆசனத்தில் அமர்ந்திருங்கள்.

ஒருவர் தனது ஆசனத்தில் சரியாக அமர்ந்திருக்காவிட்டால், அவர் ஸ்திரமாக இருக்கமாட்டார். சிலவேளைகளில், அவர் ஒரு திசையில் அசைவார். சிலவேளைகளில் இன்னுமொரு திசையில் அசைவார். அதேபோல், உங்களின் ஆசனத்தில் சரியாக நீங்கள் அமர்ந்திருக்காவிட்டால், உங்களின் புத்தி குழப்பம் அடையும். நீங்கள் இது அல்லது அது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இப்போது, நீங்கள் யார்? எனக் கேட்டால், மிக நல்ல, நீண்டதொரு பட்டியல் வெளிப்படும். எவ்வாறாயினும், ஒவ்வொரு கணமும், நீங்கள் உங்களை எவ்வாறு அறிந்துள்ளீர்களோ, அவ்வாறு உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். வெறுமனே உங்களை அறிந்து கொள்ளாதீர்கள். ஆனால், உங்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால், உங்களை அறிந்து கொள்வதனால், நீங்கள் சூட்சுமமான சந்தோஷத்துடன் இருப்பீர்கள் : ஆமாம், நான் இத்தகையவன். எவ்வாறாயினும், அவ்வாறே உங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். உங்களை அவ்வாறாகக் கருதி முன்னேறுவதன் மூலம், உங்களுக்குள் போதையும் ஏற்படும். ஒரு பதவியில் இருக்கும் ஒருவர் தனது ஆசனத்தில் அமர்ந்ததும், அவருக்குள் சந்தோஷம் ஏற்படும். ஆனால், அந்தச் சக்தி இருக்காது. எனவே, நீங்களும் அறிவீர்கள். ஆனால் நீங்கள் உங்களை அவ்வாறாகக் கருதியவண்ணம் செயல்பட வேண்டும். உங்களுக்குள் மீண்டும் மீண்டும் கேட்டு, சோதித்துப் பாருங்கள்: நான் எனது ஆசனத்தில் சரியாக அமர்ந்திருக்கிறேனா? அல்லது, சாதாரணமானதொரு ஸ்திதிக்குக் கீழே இறங்கி வந்துவிட்டேனா? மற்றவர்களுக்கு வெற்றியை ஏற்படுத்துபவர்கள், நிச்சயமாக ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி சொரூபங்களாகவே இருப்பார்கள். அவர்கள் அருள்பவர்களாக இருப்பார்கள். வெற்றியை அருள்பவர்கள், ஒருபோதும் தாம் செய்யும் முயற்சிகளில் அல்லது கடின உழைப்பில் இருந்து அவ்வளவு வெற்றியைக் காண முடியவில்லை, தமது நினைவுப் பயிற்சியில் அந்தளவு வெற்றியை அனுபவம் செய்ய முடியவில்லை என நினைக்க மாட்டார்கள். அவ்வாறு ஏற்படாவிட்டால், அவர்களின் ஆசனத்தில் அவர்கள் அமர்ந்திருக்கும் வழிமுறையானது மிகச்சரியானதாக இல்லை என்பதையே அது காட்டும்.

ஞானம் சுவாரசியமானது. சுவாரசியமான அனுபவங்கள் இயல்பாகவே சோம்பேறித்தனத்தை விரட்டிவிடும். சாதாரணமாக எனக்குத் தூக்கம் வருவதில்லை. ஆனால், நான் யோகத்தில் அமர்ந்ததும், நித்திரை வருகிறது எனச் சிலர் கூறுகிறார்கள். இது ஏன் நிகழுகிறது? நீங்கள் களைப்படைந்து விட்டீர்கள் என்பதல்ல. ஆனால், நீங்கள் உங்களின் புத்தியைச் சுவாரசியமான முறையிலும், இயல்பான முறையிலும் அதன் ஆசனத்தில் இருத்துவதில்லை. அதனால், ஒரு வழிமுறையில் மட்டும் இருத்தாதீர்கள். ஆனால், பல்வேறு வழிமுறைகளில் அதை இருத்துங்கள். ஒரே விடயத்தைப் பல்வேறு வழிமுறைகளில் பயன்படுத்தும்போது, அது மாற்றம் அடையும்போது, உங்களின் இதயத்தில் சந்தோஷம் ஏற்படும். ஏதாவதொரு உணவுப்பொருள் எவ்வளவுதான் ருசியானதாக இருந்தாலும், அதையே மீண்டும் மீண்டும் நீங்கள் உண்டு கொண்டிருந்தால், அல்லது, அதையே மீண்டும் மீண்டும் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால், என்ன நிகழும்? அதேபோல், விதை ரூபத்தில் இருங்கள் : சிலவேளைகளில் வெளிச்சவீட்டின் ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். சிலவேளைகளில் சக்தி வீட்டை அனுபவம் செய்யுங்கள். சிலவேளைகளில் மரத்தின் உச்சியில் உள்ள விதை ஆகுங்கள். சில வேளைகளில் உலகச் சக்கரத்தின் உச்சியில் நின்றவண்ணம் எல்லோருக்கும் சக்தியை வழங்குங்கள். நீங்கள் பெற்ற வெவ்வேறு பட்டங்களையும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிமுறைகளில் அனுபவம் செய்யுங்கள். சிலவேளைகளில், நான் பாபாவின் கண்களின் மணி ஆவேன். நான் தந்தையின் கண்களில் அமிழ்ந்துள்ளேன் என்ற ரூபத்தை அனுபவம் செய்யுங்கள். சிலவேளைகளில், நெற்றியில் உள்ள இரத்தினம் ஆகுங்கள். சிலவேளைகளில், இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். வெவ்வேறு ரூபங்களை அனுபவம் செய்யுங்கள். பல்வகைகளை அனுபவம் செய்யுங்கள். உங்களுக்கு அது சுவாரசியமாக இருக்கும். பாப்தாதா முரளியில் ஒவ்வொரு நாளும் உங்களுக்குப் பல்வகையான பட்டங்களை வழங்குகிறார். அவர் ஏன் அவ்வாறு செய்கிறார்? ஏனென்றால், நீங்கள் அந்த ஆசனங்களில் சரியாக அமர்ந்திருப்பதற்காகவே. அவ்வப்போது இதைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எவ்வாறு இதை மறந்து விடுகிறீர்கள் என்றும், ஆறு அல்லது எட்டு மணிநேரம் கடந்து சென்ற பின்னரே, நீங்கள் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கிறீர்கள் என்றும் முன்னர் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அதனாலேயே, ஏற்கனவே அரைநாள் கழிந்து விட்டது என்பதனால் உங்களுக்குள் சந்தோஷம் இல்லாமல் போகிறது. இது இயல்பான பயிற்சி ஆகட்டும். அப்போது மட்டுமே நீங்கள் சட்டத்தை அருள்பவர்களாகவும் வெற்றியை அருள்பவர்களாகவும் ஆகி, உலகிலுள்ள ஆத்மாக்கள் எல்லோருக்கும் நன்மை செய்ய முடிகிறது. உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

இன்று, மதுவனவாசிகளுக்கான தினமாகும். இரட்டை வெளிநாட்டவர்கள் தமக்கான நேரத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது நல்லதே. ஏனென்றால், மதுவனவாசிகளைப் பார்த்து அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். எங்களைப் புகழாதீர்கள், நாங்கள் அதிகளவு புகழைக் கேட்டுள்ளோம் என மதுவனவாசிகள் கூறுகிறார்கள். உங்களின் புகழைக் கேட்டு, நீங்கள் மகத்தானவர்கள் ஆகுகிறீர்கள். ஏனென்றால், அந்தப் புகழ்ச்சி ஒரு கவசம் ஆகுகிறது. ஒரு யுத்தகளத்தில், கவசம் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்தப் புகழ்ச்சியும் நீங்கள் எத்தனை மகத்தானவர்கள் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறது. மதுவனம் என்பது வெறுமனே மதுவனம் இல்லை. ஆனால் மதுவனம் என்பது ஓர் உலக மேடையாகும். மதுவனத்தில் வசிப்பது என்றால், உலக மேடையில் வசித்தல் என்று அர்த்தம். ஒரு மேடையில் இருப்பவர்கள் அதிகளவு கவனம் செலுத்துகிறார்கள். சாதாரணமான முறையில், மக்கள் எங்கே இருந்தாலும், அந்தளவு கவனம் செலுத்த மாட்டார்கள். எவ்வாறாயினும், ஒருவர் மேடையில் ஏறினால், எல்லா வேளையும், ஒவ்வொரு செயலிலும், அவர் அதிகளவு கவனம் செலுத்துவார். மதுவனம் ஓர் உலக மேடை. எங்கும் உள்ள ஆத்மாக்களின் பார்வையும் மதுவனத்தின் மேலேயே உள்ளது. எந்த நிலையிலும், எல்லோரின் கவனமும் எப்போதும் மேடையிலேயே உள்ளது. எனவே, மதுவனவாசிகள் சதா உலக மேடையில் ஸ்திரமாக இருப்பவர்கள்.

அத்துடன், மதுவனம் தனித்துவமான குவிந்த மாடமாகவும் (டோம்) உள்ளது. இந்த டோமில் சிறியதொரு சத்தம் செய்தாலும், அது எதிரொலிக்கும். மதுவனம் எத்தகையதொரு தனித்துவமான டோம் என்றால், மதுவனத்தில் செய்யும் சிறியதொரு சத்தமும் உலகெங்கும் எதிரொலிக்கும். தற்காலத்தில், சில ஞாபகார்த்த மண்டபங்கள் (பெயரளவில்) உள்ளன. அதில், நீங்கள் ஒரு சுவரைத் தொட்டால் அல்லது ஒரு சுவரில் சத்தம் எழுப்பினால், பத்துச் சுவர்களில் அது தொடர்ந்து சத்தம் எழுப்பும். ஒரே சுவரில் ஒருவர் தட்டுவது போன்றே அந்தச் சத்தம் இருக்கும். எனவே, மதுவனமும் இத்தகைய தனித்துவமான டோம் ஆகும். அதன் ஒலி மதுவனத்தை மட்டும் சென்றடைவதில்லை. ஆனால், அது எல்லாத் திசைகளிலும் பரவும். மதுவனத்தில் வசிப்பவர்கள் அதை உணராத வகையில் அது பரவும். இதுவே அதன் தனித்துவமாகும். இதனாலேயே, அது எங்கும் வெளியே பரவுகிறது. அதனால், இங்கு என்ன நிகழ்கிறதோ, அது இங்கு மட்டும் நிகழ்கிறது என்றோ, அல்லது இங்கு எதைப் பார்க்கிறோமோ, அது இங்கு மட்டுமே பார்க்கப்படுகிறது அல்லது இங்கு மட்டுமே பேசப்படுகிறது என ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்த ஒலியானது காற்றின் வேகத்தில் உலகினைச் சென்றடைகிறது. ஏனென்றால், எல்லோருடைய பார்வையும் புத்தியும் எப்போதும் மதுவனத்தின் மீதும் மதுவனத்தின் பாப்தாதாவின் மீதும் உள்ளன. மதுவனத்தின் தந்தை உங்களின் பார்வையில் இருக்கிறார். ஆகவே, மதுவனமும் உங்களின் பார்வையில் இருக்க வேண்டும், இல்லையா? மதுவனத்தின் பாபா இங்கிருந்தால், மதுவனமும் இங்கிருக்க வேண்டும். மதுவனத்தில் பாபா மட்டும் இல்லை. ஆனால், அங்கு குழந்தைகளும் இருக்கிறார்கள். எனவே, மதுவனவாசிகள் இயல்பாகவே எல்லோருடைய பார்வையிலும் இருப்பார்கள். எந்தவொரு பிராமணரையும், அவர் எவ்வளவு தொலைவில் வசித்தாலும், அவர் எதை நினைவு செய்கிறார் எனக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் மதுவனத்தையும் மதுவனத்தின் பாபா வையும் நினைவு செய்கிறார்கள். மதுவனவாசிகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் உள்ளது! உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

எங்கும் உள்ள, சேவை செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பேணும் எல்லோருக்கும், சதா ஒரேயொரு தந்தையின் அன்பிலே அமிழ்ந்திருப்பவர்களுக்கும், ஒவ்வொரு செயலினதும் மேன்மையான வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சதா வெற்றியை அனுபவம் செய்பவர்களுக்கும், சதா தங்களை உலக உபகாரிகளாகக் கருதி, ஒவ்வோர் எண்ணத்திலும் வார்த்தையிலும் தமது மேன்மையான நல்லாசிகளாலும் தூய உணர்வுகளாலும் சேவை செய்வதில் மும்முரமாக இருப்பவர்களுக்கும், தந்தையைப் போல் சதா களைப்பற்ற சேவையாளர் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

தனிப்பட்ட சந்திப்புக்கள்:
1. நீங்கள் உங்களை மேன்மையான கர்மயோகி ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? ஒரு கர்மயோகி ஆத்மா சதா செயலுக்கான உடனடிப் பலனை இயல்பான முறையில் அனுபவம் செய்வார். உடனடிப் பலனானது சந்தோஷமும் சக்தியும் ஆகும். எனவே, ஒரு கர்மயோகி ஆத்மா என்றால், உடனடிப் பலனான சந்தோஷத்தையும் சக்தியையும் அனுபவம் செய்பவர் ஆவார். தந்தை, குழந்தைகளான நீங்கள் சதா உடனடிப் பலனைப் பெறச் செய்கிறார். ஒரு நிமிடம், நீங்கள் செயலைச் செய்கிறீர்கள். செயலைச் செய்யும்போது, நீங்கள் சந்தோஷத்தையும் சக்தியையும் அனுபவம் செய்கிறீர்கள். எனவே, சதா நான் ஒரு கர்மயோகி ஆத்மா என்ற விழிப்புணர்வுடன் தொடர்ந்து முன்னேறுங்கள்.

2. எல்லையற்ற சேவையைச் செய்வதன் மூலம், நீங்கள் இயல்பாகவே எல்லையற்ற சந்தோஷத்தையும் அனுபவம் செய்கிறீர்கள், இல்லையா? எல்லையற்ற தந்தை, எல்லையற்றதற்கான உரிமைகள் அனைத்தையும் உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் எல்லையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து சேவை செய்வதன் மூலம், நீங்கள் யாருக்குக் கருவிகள் ஆகுகிறீர்களோ, அவர்களிடமிருந்து நீங்கள் பெறும் நல்லாசிகள் இயல்பாகவே உங்களுக்குச் சக்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். எங்கே அமர்ந்திருந்தாலும், நீங்கள் எல்லையற்ற சேவைக்கான பலனைப் பெறுகிறீர்கள். இந்த எல்லையற்ற போதையால், உங்களின் எல்லையற்ற கணக்கில் சேமித்துத் தொடர்ந்து முன்னேறுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு விநாடியில் உங்களின் சரீரம் என்ற ஆடையில் இருந்து பற்றற்றவர் ஆகுவதன் மூலம், சகல சக்திகளால் நிறைந்தவராகி, கர்ம வேதனையை வெற்றி கொள்வீர்களாக.

கர்ம வேதனையின் விசை ஏற்படும்போது, உங்களின் பௌதீக அங்கங்கள் அந்தக் கர்ம வேதனையை நோக்கி உங்களை இழுக்கும். அந்த வேளையில், அந்த வேதனையின் விளைவால், அதிகளவு வலி ஏற்படும்போது, கர்ம வேதனையை (கர்மபோக்) கர்மயோகாவாக மாற்றக்கூடியவர்கள், பற்றற்ற பார்வையாளர்களாகத் தமது பௌதீக அங்கங்களின் வேதனைக்கூடாகச் செல்பவர்கள், சகல சக்திகளாலும் நிறைந்த எட்டு வெற்றி இரத்தினங்கள் என்று அழைக்கப்படுவார்கள். இதற்கு, சரீரம் என்ற ஆடையில் இருந்து பற்றற்றவராக இருப்பதை நீண்ட காலத்திற்குப் பயிற்சி செய்யுங்கள். உலகின் கவர்ச்சியால் அல்லது மாயையின் கவர்ச்சியால் உங்களின் ஆடை இறுக்கம் ஆகக்கூடாது. அதாவது, அது உங்களை இழுக்கக்கூடாது. அப்போது மட்டுமே அதை இலகுவாக நீக்க முடியும்.

சுலோகம்:
அனைவரின் மரியாதையையும் பெறுவதற்கு, பணிவான இதயத்தைக் கொண்டிருங்கள். பணிவு மகத்துவத்தின் அடையாளம் ஆகும்.