13.01.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     10.04.84     Om Shanti     Madhuban


இறையன்பே பிராமண வாழ்க்கையின் அடிப்படை.


இன்று, பாப்தாதா தனது அன்பான, ஒத்துழைக்கும் இலகுயோகி ஆத்மாக்களைப் பார்க்கிறார். நீங்கள் அனைவருமே யோகி ஆத்மாக்கள். இதை யோகிகளின் ஒன்றுகூடல் என்று கூற முடியும். இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் யோகி ஆத்மாக்களே. அதாவது, இறைவனால் நேசிக்கப்படும் ஆத்மாக்களே. இறைவனால் நேசிக்கப்படுவர்கள் உலகினாலும் நேசிக்கப்படுவார்கள். நீங்கள் பரமாத்மாவினால் நேசிக்கப்படுபவர்கள், நீங்கள் இறைவனாலும் நேசிக்கப்படுபவர்கள், அத்துடன் உலகினாலும் நேசிக்கப்படுபவர்கள் என்ற ஆன்மீக போதையும் ஆன்மீகப் பெருமையும் ஆன்மீக சுயமரியாதையும் சதா உங்களுக்குள் இருக்கிறதா? அவர்கள் ஒரு விநாடி அல்லது அரைவிநாடி திருஷ்டியைப் பெற விரும்புகிறார்கள். இதற்கான தாகத்துடன் பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை மகத்தான விடயமாகக் கருதுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் இறையன்பிற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இறைவனால் நேசிக்கப்படுபவர்கள். இது மகத்தானதொரு பாக்கியம் ஆகும்! தற்காலத்தில் ஒவ்வோர் ஆத்மாவும் குழந்தைப்பருவத்தில் இருந்து மரணம் வரை எதை விரும்புகிறார்கள்? எதையும் புரிந்து கொள்ளாத சிறுகுழந்தையும் தனது வாழ்க்கையில் அன்பையே விரும்புகிறார். பின்னர் அவர்கள் பணத்தை விரும்புகிறார்கள். ஆனால், முதலில் அவர்களுக்கு அன்பே தேவைப்படுகிறது. அவர்களுக்கு அன்பு கிடைக்காவிடின், தமது வாழ்க்கையை நம்பிக்கையற்ற வாழ்க்கையாக, இனிமையற்ற வாழ்க்கையாக அவர்கள் கருதுகிறார்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் இறையன்பைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இறைவனால் நேசிக்கப்படுகிறீர்கள். இதைவிட மகத்தானது வேறு ஏதாவது உள்ளதா? அன்பு இருந்தால், உலகம் இருக்கும். வாழ்க்கை இருக்கும். அன்பு இல்லாவிடின், வாழ்க்கையும் இல்லை. உலகமும் இல்லை. நீங்கள் அன்பைப் பெறும்போது, உலகையே பெறுகிறீர்கள். இந்த அன்பை உங்களின் மேன்மையான பாக்கியமாகக் கருதுகிறீர்களா? இந்த உலகமே இதற்கான தாகத்துடன் உள்ளது. அவர்கள் அதன் ஒரு துளிக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால், குழந்தைகளான நீங்கள் இறையன்பை உங்களின் சொத்தாகப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இறையன்பால் பராமரிக்கப்படுகிறீர்கள். அதாவது, நீங்கள் பிராமண வாழ்க்கையில் முன்னேறுகிறீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் அன்புக்கடலில் அமிழ்ந்திருக்கிறீர்களா? அல்லது, நீங்கள் அதை வெறுமனே செவிமடுக்கிறீர்களா அல்லது அறிந்தவராக இருக்கிறீர்களா? அதாவது, நீங்கள் கடற்கரையில் நின்றுகொண்டு, அதைப் பற்றிச் சிந்தித்தவண்ணம், தொடர்ந்து அவதானிக்கிறீர்களா? அதைப் பற்றிச் செவிமடுத்தல் அல்லது அறிதல் மட்டும் என்றால் கடற்கரையில் நிற்றல் என்று அர்த்தம். அதை ஏற்றுக்கொண்டு அதில் அமிழ்ந்திருத்தல் என்றால் அன்புக்கடலில் அமிழ்ந்திருத்தல் என்று அர்த்தம். இறைவனால் நேசிக்கப்பட்டபின்னர், கடலில் அமிழ்ந்திருப்பதை, கடலில் திளைத்திருப்பதை நீங்கள் அனுபவம் செய்யாவிட்டால், இறைவனுக்குச் சொந்தமானவர் ஆகியபின்னரும் நீங்கள் எதையாவது அடையவில்லை, ஆனால் தாகத்துடன் இருப்பவர்கள் என்றே அர்த்தம். நெருக்கமாக வந்தபின்பும் தாகத்துடன் இருத்தல் என்றால் இதை என்னவென்று சொல்வது? யார் உங்களைத் தனக்குரியவர் ஆக்கியுள்ளார் என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! யாரால் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள்? யாரால் நீங்கள் பராமரிக்கப்படுகிறீர்கள்? எனவே, என்ன நிகழும்? சதா அன்பிலே அமிழ்ந்திருக்கும்போது, உங்களால் எந்தவொரு பிரச்சனைகள் அல்லது எந்தவகையான குழப்பத்தின் ஆதிக்கத்திற்கும் உட்பட முடியாது. நீங்கள் உங்களை சதா தடைகளை அழிப்பவர்களாகவும் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வுகளின் சொரூபமாகவும் மாயையை வென்றவர்களாகவும் அனுபவம் செய்வீர்கள்.

ஞானத்தின் ஆழமான விடயங்களை நினைவு செய்ய முடியவில்லை என உங்களில் சில குழந்தைகள் கூறுகிறீர்கள். எவ்வாறாயினும், ஒரு விடயத்தை நினைவு செய்யுங்கள். நீங்கள் இறைவனால் நேசிக்கப்படுகிறீர்கள். இறையன்பிற்கான உரிமை உங்களுக்கு உள்ளது. இந்த ஒரு விழிப்புணர்வுடன் நீங்கள் சதா சக்திசாலி ஆகுவீர்கள். இது இலகுவானது, அப்படியல்லவா? நீங்கள் இதையும் மறந்தால், சிக்கல் நிறைந்த பாதைகளுக்குள் அகப்பட்டுக் கொள்வீர்கள். இந்த ஒரு விடயம், நீங்கள் சகல பேறுகளின் உரிமையையும் பெறச் செய்யும். ஆகவே, எப்போதும் இறைவனாலும் அனைவராலும் நேசிக்கப்படுபவராக இருப்பதை நினைவு செய்வதுடன் அதை அனுபவம் செய்யுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? இது இலகுவானது, அப்படியல்லவா? அச்சா. நீங்கள் இப்போது அதிகளவில் செவிமடுத்துவிட்டீர்கள். இப்போது, அவை அனைத்தையும் கிரகியுங்கள். கிரகித்தல் என்றால் சமமானவர் ஆகுதல் என்று அர்த்தம். உங்களுக்குப் புரிகிறதா?

இறையன்பிற்குத் தகுதிவாய்ந்த குழந்தைகள் அனைவருக்கும், அன்பிலே அமிழ்ந்திருக்கும் மேன்மையான ஆத்மாக்கள் அனைவருக்கும், அன்பின் பராமரிப்பிற்கான உரிமையுடன் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும், ஆன்மீகப் பெருமையுடன் இருந்து, ஆன்மீக போதையில் இருக்கும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

நீங்கள் அனைவரும் இலகுயோகி ஆத்மாக்கள், அல்லவா? சகல உறவுமுறைகளினதும் நினைவானது உங்களை இலகுயோகி ஆக்குகிறது. உறவுமுறை இருக்கும்போது, உங்களுக்கு அனைத்தும் இலகுவானது ஆகுகிறது. இலகுயோகி ஆத்மாவாக இருக்கும் விழிப்புணர்வானது, இலகுவாக சகல பிரச்சனைகளையும் முடிவடையச் செய்கிறது. ஏனெனில், இலகுயோகி என்றால் சதா தந்தையின் சகவாசத்தை அனுபவம் செய்தல் என்று அர்த்தம். சர்வசக்திவானான தந்தையின் சகவாசம் உங்களுக்கு இருக்கும்போது, சகல சக்திகளும் உங்களிடம் இருக்கும்போது, பிரச்சனைகள் அனைத்தும் தீர்வுகளின் ரூபமாக மாற்றம் அடையும். ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது, அதைத் தந்தையிடம் கொடுத்துவிடுங்கள். பிரச்சனையைத் தனியே விட்டுவிடுங்கள்! இத்தகைய உறவுமுறையின் உரிமையால், பிரச்சனைகள் முடிவடைகின்றன. நான் என்ன செய்வது? இல்லை! தந்தை பிரச்சனையைப் பற்றி அறிவார். நான் பற்றற்றவராக இருக்கிறேன். இறைவனால் நேசிக்கப்படுகிறேன். அப்போது, சுமைகள் அனைத்தும் தந்தைக்குரியவை ஆகுகின்றன. நீங்கள் இலேசானவர் ஆகுகிறீர்கள். நீங்கள் இலேசானவர் ஆகும்போது, சகல விடயங்களும் இலேசானவை ஆகுகின்றன. அவற்றைப் பற்றிய சிறிதளவு எண்ணம் ஏற்பட்டாலும், நீங்கள் பாரமானவர் ஆகுவதுடன், விடயங்களும் பாரமானவை ஆகுகின்றன. ஆகவே, நான் இலேசானவன், பற்றற்றவன் என நினையுங்கள். அனைத்தும் இலேசானவை ஆகிவிடும். இதுவே வழிமுறை ஆகும். இந்த வழிமுறையால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கடந்தகால கர்மக்கணக்குகள் தீர்க்கப்பட்டாலும், நீங்கள் அதை ஒரு சுமையாக அனுபவம் செய்ய மாட்டீர்கள். நீங்கள் அனைத்தையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானித்தால், அது கடந்தகாலம் முடிவடைவதைப் போன்றே காணப்படும். நீங்கள் நிகழ்காலத்தின் சக்தியால் அனைத்தையும் பற்றற்ற பார்வையாளராகப் பார்க்கிறீர்கள். நீங்கள் சேமிக்கிறீர்கள். அத்துடன் தீர்க்கிறீர்கள். சேமிக்கும் சக்தியால், தீர்க்கும் சுமை உங்களுக்கு இருப்பதில்லை. ஆகவே, எப்போதும் நிகழ்காலத்தை நினைவு செய்யுங்கள். ஒரு பக்கம் பாரமாகும்போது, இயல்பாகவே மறுபக்கம் இலேசானதாக ஆகும். எனவே, நிகழ்காலம் சுமையுடன் இருந்தால், கடந்தகாலம் இலேசானது ஆகும். அல்லவா? நிகழ்காலத்தின் பேறுகளை எப்போதும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். அனைத்தும் இலேசானவை ஆகும். கடந்தகாலத்தின் கணக்கினை இலேசானது ஆக்குவதற்கான வழிமுறை, நிகழ்காலத்தைச் சக்திவாய்ந்தது ஆக்குவதாகும். நிகழ்காலம் எவ்வாறாயினும் சக்திவாய்ந்ததாகவே உள்ளது. நிகழ்காலத்தின் பேறுகளை உங்களின் முன்னால் வைத்திருங்கள். அனைத்தும் இலகுவானது ஆகிவிடும். கடந்தகாலம், சிலுவையில் அறைவதில் இருந்து முள் போன்று மாறிவிடும். இது என்ன? ஏன் இது இவ்வாறு உள்ளது? என்ற கேள்விகள் இருக்கமாட்டாது. இல்லை. அது கடந்துசென்றுவிட்டது. நீங்கள் ஏன் கடந்தகாலத்தைப் பார்க்கிறீர்கள்? எங்கு அன்பு உள்ளதோ, அங்கு தடைகள் சுமையாகத் தோன்றாது. அவை ஒரு விளையாட்டுப் போன்றே தென்படும். உங்களின் கர்மக்கணக்குகள் அனைத்தையும் நிகழ்காலத்தின் சந்தோஷ ஆசீர்வாதங்களாலும் மருந்துகளாலும் தீருங்கள்.

பாப்தாதா ஆசிரியர்களைச் சந்திக்கிறார்:

நீங்கள் ஒவ்வோர் அடியிலும் சதா வெற்றியை அனுபவம் செய்பவர்கள், அல்லவா? நீங்கள் அனுபவசாலி ஆத்மாக்கள், அல்லவா? அனுபவமே அனைத்திலும் மகத்தான அதிகாரம் ஆகும். அனுபவத்தின் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வோர் அடியிலும் ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெறுவார்கள். சேவையில் கருவியாக இருக்கும் வாய்ப்பைப் பெறுவதும் சிறப்பியல்பின் அடையாளம் ஆகும். நீங்கள் எத்தகைய வாய்ப்புக்களைப் பெற்றாலும், தொடர்ந்து அவற்றுடன் முன்னேறுங்கள். நீங்கள் சதா முன்னேறுவதுடன், மற்றவர்களையும் முன்னேறச் செய்யும் கருவிகள் ஆவீர்கள். கருவியாக இருக்கும் உணர்வானது நீங்கள் வெற்றி அடையச் செய்கிறது. பணிவான கருவியாக இருக்கும் சிறப்பியல்பை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள். இந்தச் சிறப்பியல்பும் உங்களை எப்போதும் விசேடமானவர் ஆக்கும். கருவியாக இருக்கும் பாகமானது, எப்போதும் உங்களுக்கு ஓர் உயர்த்தியைக் கொடுக்கிறது. மற்றவர்களுக்குக் கருவியாகுதல் என்றால், நீங்கள் சம்பூரணமானவர் ஆகுதல் என்று அர்த்தம். திடசங்கற்பத்துடன் தொடர்ந்து வெற்றி பெறுங்கள். வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. இந்தத் திடசங்கற்பம் உங்களுக்கு இருந்தால், இயல்பாகவே வெற்றி உங்களுக்கு முன்னால் செல்லும்.

நீங்கள் பிறந்த கணத்தில் இருந்தே பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். எனவே, நீங்கள் வேந்தர்கள் அனைவரிலும் மகத்தானவர்கள், அல்லவா? நீங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே சேவையாளராக இருக்கும் பாக்கியத்துடன் வந்துள்ளீர்கள். நீங்கள் உங்களின் பாக்கியத்தை விழித்தெழச் செய்தவண்ணம் வந்துள்ளீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் பலரின் மேன்மையான பாக்கியத்தை உருவாக்குவதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே, எப்போதும் ஆஹா, எனது மேன்மையான பாக்கியத்தின் மேன்மையான ரேகை என்பதை நினைவு செய்யுங்கள். நீங்கள் தந்தையைக் கண்டடைந்துள்ளீர்கள். சேவையைப் பெற்றுள்ளீர்கள். சேவைக்காக ஓரிடத்தைப் பெற்றுள்ளீர்கள். சேவையுடன் கூடவே, நீங்கள் மேன்மையான ஆத்மாக்களைக் கொண்ட மேன்மையான குடும்பத்தையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எதைப் பெறவில்லை? நீங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அனைத்தையும் பெற்றுள்ளீர்கள். எப்போதும் இந்த சந்தோஷத்துடன் இருங்கள். சரியான வழிமுறையைப் பயன்படுத்தித் தொடர்ந்து முன்னேறுங்கள். நீங்கள் கருவிகளாக இருக்கும் வழிமுறையால், சேவை தொடர்ந்து வளரும்.

பாப்தாதா குமார்களைச் சந்திக்கிறார்:

குமார் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருத்தல், அனைத்திலும் மகத்தான பாக்கியம் ஆகும். நீங்கள் பல சிக்கல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். குமார்கள் என்றால் பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள ஆத்மாக்கள் என்று அர்த்தம். குமார் வாழ்க்கை என்றால் பந்தனத்தில் இருந்து விடுபட்ட வாழ்க்கை என்று அர்த்தம். எவ்வாறாயினும், குமார் வாழ்க்கையில் சுதந்திரமாக இருத்தல் என்றால் சுமையைச் சேர்த்தல் என்று அர்த்தம். லௌகீகக் குடும்பத்துடன் இருந்தவண்ணம் அலௌகீகச் சேவை செய்ய வேண்டும் என்பதே குமார்களுக்கு பாப்தாதாவின் வழிகாட்டல் ஆகும். தொடர்புகளை உருவாக்குவதற்கான வழிமுறை லௌகீகச் சேவை ஆகும். இதில் மும்முரமாக இருங்கள். உங்களால் அலௌகீகச் சேவை செய்ய முடியும். உங்களின் குடும்பத்துடன் வாழும்போது, அலௌகீகச் சேவை செய்யுங்கள். உங்களின் புத்தியானது பாரமாக இருக்காது. உங்களின் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சேவை செய்யுங்கள். லௌகீகச் சேவையை சேவைக்குரிய ஒரு வழிமுறையாகக் கருதியவண்ணம் செய்யுங்கள். அந்த லௌகீக வசதிகள் உங்களுக்குச் சேவை செய்வதற்கான பல வாய்ப்புக்களைக் கொடுக்கும். இறை சேவை செய்வதே உங்களின் இலக்கு ஆகும். அவையே அதற்;கான வழிமுறைகள் ஆகும். இதைப் புரிந்துணர்வுடன் செய்யுங்கள். குமார்கள் என்றால் தைரியத்தைக் கொண்டிருப்பவர்கள் என்று அர்த்தம். நீங்கள் விரும்பியதை உங்களால் செய்ய முடியும். இதனாலேயே, சரியான வழிமுறையைப் பயன்படுத்தி வெற்றி பெறுங்கள் என பாப்தாதா எப்போதும் உங்களுக்கு அறிவுரை கூறுகிறார். குமார்கள் என்றால் சதா யோகிகள் என்று அர்த்தம். ஏனெனில் குமார்களின் உலகம் ஒரேயொரு தந்தையே. தந்தை உங்களின் முழு உலகமாக இருக்கும்போது, அந்த உலகைத் தவிர வேறு எங்கே உங்களின் புத்தி செல்லும்? அனைத்தும் ஒரேயொருவராக இருக்கும்போது, ஒரேயொருவரின் நினைவே காணப்படும். ஒரேயொருவரை நினைத்தல் மிகவும் இலகுவானது ஆகும். நீங்கள் பலவற்றில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். அனைத்தும் ஒரேயொருவரில் அமிழ்ந்துள்ளது. சதா உங்களின் ஒவ்வொரு செயலினூடாகவும் சேவை செய்யுங்கள். உங்களின் திருஷ்டியிலும் வார்த்தைகளிலும் சேவையைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது. நீங்கள் நேசிக்கும் ஒரேயொருவரை வெளிப்படுத்தும் உற்சாகம் இருக்க வேண்டும். உங்களின் ஒவ்வோர் அடியிலும் தந்தையும் சேவையுமே இருக்க வேண்டும். அச்சா.

கர்மாதீத் மற்றும் சரீரமற்ற ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான வழிமுறை.

1. எல்லைக்குட்பட்ட எனது, எனது என்ற சரீர உணர்வில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள்.

2. லௌகீக (உலகம் சார்ந்த) மற்றும் அலௌகீகச் (ஆன்மீகம்) செயல்களிலும் உறவுமுறைகளிலும் சுயநல நோக்கங்களில் இருந்து விடுபட்டவராக இருங்கள்.

3. உங்களின் கடந்தகாலப் பிறவிகளின் செயல்களின் கர்மக்கணக்குகளில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள். அத்துடன் உங்களின் நிகழ்கால முயற்சிகளின் பலவீனங்களால் ஏற்பட்ட வீணான சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களின் ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள்.

4. சேவையில், ஒன்றுகூடலில் அல்லது சடப்பொருளில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை, உங்களின் ஆதியான அல்லது மேன்மையான ஸ்திதியை அசைத்தால், அது பந்தனத்தில் இருந்து விடுபட்ட ஸ்திதி ஆகாது. இந்த பந்தனத்தில் இருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள்.

5. இந்தப் பழைய உலகின் உங்களின் பழைய இறுதிச் சரீரத்தின் எந்த வகையான நோயும் உங்களின் மேன்மையான ஸ்திதியைத் தளம்பல் அடையச் செய்யாதீர்கள். இதில் இருந்தும் விடுபட்டவர் ஆகுங்கள். நோய் வருவது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களின் ஸ்திதி தளம்பல் அடைவதெனில், அது பந்தனத்தில் அகப்பட்டிருப்பதன் அடையாளம் ஆகும். சுயத்தைப் பற்றிய எண்ணங்களையும் ஞானத்தைப் பற்றிய எண்ணங்களையும் உருவாக்கி, ஒரு நலம்விரும்பி ஆகுங்கள். சரீரத்தின் நோயைப் பற்றிய எண்ணங்களில் இருந்து விடுபட்டவர் ஆகுங்கள். இதுவே கர்மாதீத் ஸ்திதி எனப்படுகிறது.

கர்மயோகியாகி, சதா கர்ம பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பதுடன் எப்போதும் தந்தைமீது அன்புடையவராக இருங்கள். இதுவே கர்மாதீத் மற்றும் சரீரமற்ற ஸ்திதி ஆகும். கர்மாதீத் என்றால் செயல்களைச் செய்யாமல் இருத்தல் என்று அர்த்தம் அல்ல. செயல்களைச் செய்யாமல் இருக்காதீர்கள். ஆனால், செயலின் எந்தவொரு பந்தனத்திலும் அகப்படுவதில் இருந்து அப்பாற்பட்டிருங்கள். ஒரு பணி எத்தனை பெரியதாக இருந்தாலும், நீங்கள் பணிபுரிவதைப் போன்று இருக்கக்கூடாது. ஆனால் நீங்கள் விளையாட்டை விளையாடுவது போன்றே இருக்க வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும், ஓர் ஆத்மா உங்களின் முன்னால் கர்மக்கணக்குகளைத் தீர்ப்பதற்கு வந்தாலும், சரீரத்தினூடாக எந்தவொரு கர்ம வேதனை உங்களின் முன்னால் தொடர்ந்து வந்தாலும், எல்லைக்குட்பட்ட ஆசைகளில் இருந்து விடுபட்டவராக இருங்கள். இதுவே சரீரமற்ற நிலை எனப்படுகிறது. உங்களிடம் இந்தச் சரீரம் இருப்பதனால், உங்களின் பௌதீகப் புலன்களால் நீங்கள் உங்களின் பாகத்தைச் செயற்களத்தில் நடிப்பதனால், உங்களால் ஒரு விநாடியேனும் செயல்களைச் செய்யாமல் இருக்க முடியாது. எவ்வாறாயினும், செயல்களைச் செய்யும்போது செயலின் பந்தனத்திற்கு அப்பாற்பட்டிருத்தலே கர்மாதீத் மற்றும் சரீரமற்ற ஸ்திதி ஆகும். ஆகவே, பௌதீகப் புலன்களினூடாக கர்ம உறவுமுறைக்குள் வாருங்கள். ஆனால் எந்தவொரு கர்ம பந்தனத்தினாலும் கட்டுப்படாதீர்கள். கர்மத்தின் அழியக்கூடிய பலனின் ஆசையின் ஆதிக்கத்திற்கு உட்படாதீர்கள். கர்மாதீத் என்றால் கர்மத்தின் ஆதிக்கத்திற்கு உட்படாதிருத்தல் என்று அர்த்தம். அத்துடன் ஒரு அதிபதியாக, ஒரு அதிகாரியாக இருந்தவண்ணம் உங்களின் பௌதீகப் புலன்களுடன் உறவுமுறையைக் கொண்டிருத்தல் என்றும், நீங்கள் தற்காலிக ஆசைகளில் இருந்து பற்றற்றவராக இருந்தவண்ணம் உங்களின் பௌதீகப் புலன்களைச் செயற்பட வைத்தல் என்றும் அர்த்தம். ஆத்மாவான, அதிபதியான நீங்கள், செயல்களில் தங்கியிருக்கக்கூடாது. ஆனால், ஓர் அதிகாரியாகித் தொடர்ந்து செயல்களைச் செய்யுங்கள். செயல்களைச் செய்பவராகிச் செயல்களைச் செய்யுங்கள். இதுவே கர்மத்துடன் உறவுமுறையைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. கர்மாதீத் ஆத்மா உறவுமுறையையே கொண்டிருப்பார். பந்தனத்தை அல்ல.

கர்மாதீத் என்றால் அப்பாற்பட்டிருத்தல், அதாவது, சரீரத்திடமிருந்தும், சரீர உறவுகளில் இருந்தும், லௌகீக மற்றும் அலௌகீக உறவுமுறைகளுடனும் பந்தனங்களுடனும் தொடர்புடைய உடமைகளில் இருந்தும் பற்றற்றவராக இருத்தல் ஆகும். உறவுமுறை என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும், சரீரத்துடன் அல்லது சரீர உறவுமுறைகளுடன் ஏதாவது தங்கியிருத்தல் இருந்தால், அது பந்தனம் ஆகுகிறது. கர்மாதீத் ஸ்திதியில், கர்மத்தின் உறவுமுறையினதும் கர்ம பந்தனத்தினதும் இரகசியங்களை அறிந்திருப்பதனால், எப்போதும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒருபோதும் குழப்பம் அடைவதில்லை. இத்தகையதோர் ஆத்மா, தனது கடந்த பிறவிகளின் கர்மக்கணக்குகளின் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருப்பார். கடந்த பிறவிகளின் கர்மக்கணக்குகளின் பின்விளைவாக, சரீரத்தில் ஏதாவது நோய் ஏற்பட்டால் அல்லது ஏனைய ஆத்மாக்களின் சம்ஸ்காரங்களினால் மனதில் முரண்பாடுகள் ஏற்பட்டால், ஒரு கர்மாதீத் ஆத்மா ஒருபோதும் கர்ம வேதனையின் ஆதிக்கத்திற்கு உட்பட மாட்டார். ஆனால் ஒரு அதிபதியாகி, அந்தக் கணக்கைத் தீர்ப்பார். கர்மயோகியாக இருத்தலும் கர்ம வேதனையைத் தீர்த்தலும் கர்மாதீத் ஆகுவதன் அடையாளம் ஆகும். யோகத்தினால், ஒரு புன்னகையுடன் அவர் கர்ம வேதனையைச் சிலுவையில் அறையப்படுவதில் இருந்து ஒரு முள் போன்று மாற்றி, அதை அழித்துவிடுவார். அதாவது, அவர் அந்தக் கர்ம வேதனையை முடித்துவிடுவார். கர்மவேதனையை உங்களின் கர்மயோகி ஸ்திதியால் மாற்றக்கூடியதாக இருத்தலே கர்மாதீத் ஸ்திதி ஆகும்.

வீணான எண்ணங்கள், சில கர்ம பந்தனங்களின் சூட்சும இழைகள் ஆகும். கர்மாதீத் ஆத்மா ஒருவர் தீங்கான ஒன்றிலும் நல்லதையே காண்பார். இத்தகையதோர் ஆத்மா, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றே கூறுவார். நான் நல்லவன். தந்தை நல்லவர். நாடகமும் நல்லதே. இந்த எண்ணம், பந்தனங்களை வெட்டும் கத்தரிக்கோல் போன்று செயற்படும். பந்தனங்கள் வெட்டப்பட்டதும் நீங்கள் கர்மாதீத் ஆகுவீர்கள். சரீரமற்ற ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, ஆசைகளின் அறிவில் இருந்து விடுபடுங்கள். எல்லைக்குட்பட்ட ஆசைகளில் இருந்து விடுபட்டுள்ள இத்தகையதோர் ஆத்மா, அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் தந்தைக்குச் சமமான, காமதேனுவாக இருப்பார். தந்தையின் பொக்கிஷக்களஞ்சியங்கள் எப்போதும் பொக்கிஷங்களால் நிறைந்திருப்பதைப் போன்று, அங்கு எந்தவொரு பேறும் குறைவில்லாமல் இருப்பதைப் போன்று, எப்போதும் தந்தையைப் போன்று சகல பொக்கிஷங்களாலும் நிறைந்தவராக இருங்கள். உலகநாடகச் சக்கரத்தில் உங்களின் பாகத்தை நடிக்கும்போது, துன்பத்தின் பலவகையான சுழற்சிகளில் இருந்து விடுபட்டிருத்தலே ஜீவன்முக்திக்குரிய ஸ்திதி ஆகும். இத்தகையதொரு ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு, சகல உரிமைகளையும் கொண்டவராக, உங்களுடைய பௌதீகப் புலன்கள் அனைத்தையும் செயற்படச் செய்யும் அதிபதியாக ஆகுங்கள். செயலைச் செய்யுங்கள். அந்தச் செயல் முடிவடைந்தவுடனே, பற்றற்றவர் ஆகுங்கள். இதுவே சரீரமற்ற ஸ்திதிக்கான பயிற்சி ஆகும். ஆத்மாவின் ஆதியான, அநாதியான ரூபம் சுதந்திரமானது. ஆத்மாவே அரசனும் அதிபதியும் ஆவார். மனதின் பந்தனம் எதுவும் இருக்கக்கூடாது. மனதில் ஏதாவது பந்தனம் இருந்தால், இந்த ஒரு பந்தனம் ஏனைய பல பந்தனங்களைக் கொண்டுவரும். எனவே, சுய இராச்சிய அதிகாரி ஆகுங்கள். அதாவது, பந்தனத்தில் இருந்து விடுபட்டதோர் அரசன் ஆகுங்கள். இதற்கு, உங்களின் தடை (பிரேக்) சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். நீங்கள் எதைப் பார்க்க வேண்டுமோ, அதை மட்டும் பாருங்கள். நீங்கள் எதைக் கேட்க வேண்டுமோ, அதை மட்டும் கேளுங்கள். இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தி உங்களிடம் இருந்தால், உங்களால் இறுதியில் திறமைச்சித்தி அடைய முடியும். அதாவது, நீங்கள் முதல் பிரிவிற்குள் வருவீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய்மையை இலகுவாக உங்களின் ஆதியான, அநாதியான விசேடமான நற்குணமாக ஏற்றுக் கொள்ளும் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவீர்களாக.

பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவதன் விசேடமான அடிப்படை தூய்மை ஆகும். நீங்கள் எந்தளவிற்கு சகல வகையான தூய்மையையும் கிரகிக்கிறீர்களோ, அந்தளவிற்கு ஒவ்வொரு வழிமுறையிலும் பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர் ஆகுவீர்கள். தூய்மையை ஒரு ஒழுங்குமுறையுடன் ஆதியாகவும் அநாதியாகவும் விசேட குணமாக ஏற்றுக் கொள்பவர்கள், ஒரு ஒழுங்குமுறையுடன் பூஜிக்கப்படுகிறார்கள். தமது தூய மனோபாவம், தூய பார்வை, தூய அதிர்வலைகளுடன், தமது கனவுகளிலேனும் தூய்மையை இழக்காதவர்களாக இருந்தவண்ணம், ஞானி மற்றும் அஞ்ஞானி (ஞானம் இல்லாதவர்கள்) ஆத்மாக்களுடன் தொடர்பில் வரும்போது, தமது உறவுமுறைகளையும் தொடர்புகளையும் நன்கு பூர்த்தி செய்பவர்களே, ஒழுங்குமுறையாகப் பூஜிக்கப்படுகிறார்கள்.

சுலோகம்:
புற உலகில் வாழும்போதும், அவ்யக்த தேவதையாகச் சேவை செய்யுங்கள். உலக நன்மைக்கான பணி விரைவான கதியில் பூர்த்தியாகும்.

தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர் ஆகுவதற்கான விசேட முயற்சி.
நீங்கள் தந்தை பிரம்மாவிடம் அன்பு வைத்திருந்தால், தந்தையைப் போன்று தேவதை ஆகுங்கள். உங்களின் தேவதை ரூபத்தின் ஒளி எப்போதும் உங்களின் முன்னால் புலப்பட வேண்டும். நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். உங்களின் எதிர்கால ரூபமும் உங்களுக்குப் புலப்பட வேண்டும். இப்போது, இதைத் துறந்து, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகையதோர் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் முழுமைநிலைக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.