13-11-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, இது சிக்கலான விளையாட்டாகும். நீங்கள் மீண்டும் மீண்டும் தந்தையை மறந்துவிடுகிறீர்கள். புத்தியில் நம்பிக்கை வைத்திருந்தால் நீங்கள் இவ்விளையாட்டில் சிக்கிக்கொள்ளமாட்டீர்கள்.

கேள்வி:

தீர்வு காலத்தைப் பார்க்கையில், குழந்தைகளாகிய உங்களுடைய கடமை என்ன?

பதில்:

வேறு எந்த விடயங்களிலும் ஈடுபடாது, இக்கல்வியில் மிகவும் மும்முரமாக இருத்தலே உங்கள் கடமையாகும். தந்தை உங்களைத் தனது கண்களில் அமர்த்தி, தனது கழுத்து மாலையாக்கி, உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார். அனைவரும் தமது கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்ப வேண்டும். தந்தை அனைவரையும் தன்னுடன் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவே வந்திருக்கின்றார்.

பாடல்:

தொலைதூர வாசி அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார்.

ஓம் சாந்தி. உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதை பொதுவாக உலகமும், குறிப்பாக பாரதமும் விரும்புகின்றது என்பதை ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். உலக அதிபதி மாத்திரமே உலகில் அமைதியை நிலவச் செய்கின்றார் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். உலகில் அமைதியைப் பரவச் செய்ய, தந்தையான கடவுளை மாத்திரமே ஒருவர் அழைக்க வேண்டும். எவ்வாறாயினும் தாம் யாரை அழைக்க வேண்டும் என்பதைக்கூட அப்பாவி மக்கள் அறியாதுள்ளார்கள். இது முழு உலகையும் குறிக்கின்றது. அவர்கள் முழு உலகிலும் அமைதி நிலவ வேண்டும் என விரும்புகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் தந்தையும் வசிக்கும் அமைதி தாமம் வேறானது. எல்லையற்ற தந்தை மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். இவ்வுலகில் இப்பொழுது எண்ணற்ற மனிதர்களும், சமயங்களும் உள்ளன. ‘ஒரேயொரு தர்மம் மாத்திரம் இருந்திருந்தால், அமைதி இருந்திருக்கும்’ என அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் சமயங்கள் அனைத்தும் ஒன்றிணைய முடியாது. திரிமூர்த்தியின் புகழும் உள்ளது. பலரும் திரிமூர்த்தி படத்தை வைத்திருக்கின்றார்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுவதை நீங்கள் அறிவீர்கள். எதன் ஸ்தாபனை? அது அமைதி மாத்திரமாக இருக்கமுடியாது. அமைதியுடன் சந்தோஷமும் ஸ்தாபிக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கு முன்னர், பாரதத்தில் அது அவர்களின் இராச்சியமாக இருந்தபோது, ஏனைய மனிதர்கள் அனைவரும் தத்தமது சரீரங்களை நீக்கி வீடு திரும்பியிருந்தனர். இப்பொழுது அவர்கள் ஒரேயொரு தர்மத்தையும் ஒரேயொரு இராச்சியத்தையும், ஒரேயொரு மொழியையும் விரும்புகின்றார்கள். தந்தை இப்பொழுது அமைதியையும், சந்தோஷத்தையும், செழிப்பையும் ஸ்தாபிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரேயொரு இராச்சியம் நிச்சயமாக இங்கே இருக்கும். ஒரேயொரு இராச்சியத்தின் ஸ்தாபனை இடம்பெறுகின்றது, இது புதியதொரு விடயமல்ல. அந்த ஒரேயொரு இராச்சியம் முன்பும் பல தடவைகள் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர், சமயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, விருட்சமும் தொடர்ந்து வளர்கின்றது, அப்பொழுது தந்தை வரவேண்டும். ஆத்மாக்களே செவிமடுத்து கற்கின்றார்கள். சம்ஸ்காரங்கள் ஆத்மாக்களிலேயே உள்ளது. ஆத்மாவாகிய நான் பல சரீரங்களை எடுக்கின்றேன். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இந்த நம்பிக்கையை அதிகரித்துக்கொள்ளவே உங்களுக்கு அதிக முயற்சி தேவை. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள்; இதனை மீண்டும் மீண்டும் மறக்கின்றோம். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது ஒரு சிக்கலான விளையாட்டு. இதில் நீங்கள் சிக்கிக் கொண்டுள்ளதைப் போன்றுள்ளது. வீட்டிற்கோ அல்லது உங்கள் இராச்சியத்திற்கோ எவ்வாறு திரும்பிச் செல்வது என்பது உங்களுக்குத் தெரியாது. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார், ஆனால் முன்னர் உங்களுக்கு எதுவும் தெரியாது. ஆத்மாக்களின் புத்தி கல்லைப் போலாகியுள்ளது. கற்புத்தியும் தெய்வீகப் புத்தியும் பாரதத்தில் நினைவுகூரப்பட்டுள்ளன. இங்கேயே கற்புத்தியுடைய அரசர்களும், தெய்வீகப் புத்தியுடைய அரசர்களும் இருக்கின்றார்கள். தெய்வீகப் பிரபுவிற்கானதொரு ஆலயமும் உள்ளது. உங்கள் பாகத்தை நடிப்பதற்காக நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை இப்பொழுது ஆத்மாக்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். முன்னர், உங்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இவ் உலகம் முட்காடு என அழைக்கப்படுகின்றது. முழு உலகமும் முட்காடாகும். பூந்தோட்டத்தில் தீப்பற்றி எரிவதைப் பற்றி நீங்கள் என்றுமே கேள்விப்பட்டதில்லை. காடே தீப்பற்றி எரியப் போகிறது. இதுவும் காடேயாகும். இது நிச்சயமாக தீப்பற்றி எரியும். வைக்கோற்போர் எரியூட்டப்படவுள்ளது. முழு உலகமும் வைக்கோற்போர் என அழைக்கப் படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையை அறிந்திருப்பதுடன் அவரின் நேர்முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் பாடுவதுண்டு: நான் உங்களுடன் மாத்திரமே அமர்வேன்…. அவை அனைத்தும் இப்பொழுது இடம்பெறுகின்றன. நீங்கள் நிச்சயமாக கடவுளின் வாசகங்களையே கற்கின்றீர்கள். கடவுள் குழந்தைகளாகிய உங்களுடன் மாத்திரமே பேசுகின்றார். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார், என்பதை நீங்கள் அறிவீர்கள். யார் கடவுள்? அசரீரியான சிவனே கடவுள் என அழைக்கப்படுகின்றார். இங்கேயே கடவுள் சிவன் வழிபடப்படுகின்றார். சத்தியயுகத்தில் வழிபாடு இடம்பெறுவதில்லை. அங்கே அவர்கள் அவரை நினைவு செய்வதும் இல்லை. பக்தர்கள் தமது பக்தியின் பலனாகவே சத்தியயுக இராச்சியத்தைப் பெறுகின்றார்கள். நீங்களே அதிகபட்ச பக்தி செய்தவர்கள் என்பதால் நீங்களே முதன்முதலில் தந்தையிடம் வருகின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள்;. அதன் பின்னர் நீங்கள் இராச்சியத்திற்குச் செல்வீர்கள். புதிய உலகில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவதற்கு குழந்தைகளாகிய நீங்கள் முழுமையாக முயற்சி செய்யவேண்டும். புதிய வீட்டிற்கு விரைவாகச் செல்வதற்கான ஆசை குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. ஆரம்பத்தில் மாத்திரமே ஒரு வீடு புதிதாக இருக்கின்றது. பின்னர் நாளடைவில் அது பழையதாகின்றது. ஒரு வீட்டிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. குழந்தைகள், பேரக் குழந்தைகள் போன்றோர் பழைய வீட்டில் இருப்பார்கள். அவர்கள் கூறுவார்கள்: இவ் வீடு எங்கள் பாட்டனாருக்கு அல்லது கொள்ளுப் பாட்டனாருக்குச் சொந்தமானது. பின்னர் பலரும் வருவார்கள். நீங்கள் எந்தளவிற்கு தீவிர முயற்சி செய்கின்றீர்களோ அந்தளவிற்கு முன்னதாக புதிய வீட்டிற்குச் செல்வீர்கள். நீங்கள் முயற்சி செய்வதற்கு தந்தை மிகவும் இலகுவான வழிகளைக் காட்டுகின்றார். பக்தியிலும் அவர்கள் அதிகளவு முயற்சி செய்கின்றார்கள். அதிகளவு பக்தி செய்தவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன. சில பக்தர்களுக்கு முத்திரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஞான மாலையைப் பற்றி எவரும் அறியமாட்டார்கள். முதலில் ஞானம் உள்ளது. அதன் பின்னர் பக்தி உள்ளது. அரைக் கல்பத்திற்கு, அதாவது சத்திய யுகத்திலும் திரேதா யுகத்திலும் ஞானம் உள்ளது என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். எப்பொழுதும் ஓர் ஆசிரியரிடம் முழு ஞானமும் இருக்கும். மாணவர்கள் வரிசைக்கிரமமாகவே புள்ளிகளைப் பெறுகின்றார்கள். அவர் எல்லையற்ற ஆசிரியர் ஆவார். நீங்கள் எல்லையற்ற மாணவர்கள். மாணவர்களாகிய நீங்கள் முன்னைய கல்பத்தைப்; போன்றே வரிசைக்கிரமமாக சித்தியடைவீர்கள். நீங்களே 84 பிறவிகளை எடுத்தவர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். 84 பிறவிகளிலும் உங்களுக்கு 84 ஆசிரியர்கள் இருந்தனர். நீங்கள் நிச்சயமாக மறுபிறவிகள் எடுக்க வேண்டும். முதலில் உலகம் நிச்சயமாக சதோபிரதானாக இருந்தது, பின்னர் அது பழையதாகவும் தமோபிரதானாகவும் ஆகுகின்றது. மனிதர்களும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். முதலில் விருட்சம் புதிதாகவும் சதோபிரதானாகவும் இருக்கின்றது. புதிய இலைகள் மிகவும் நன்றாகவுள்ளன. இது எல்லையற்ற விருட்சமாகும். பல சமயங்கள் உள்ளன. உங்கள் புத்தி இப்பொழுது எல்லையற்றதற்குள் செல்லவேண்டும். விருட்சம் மிகவும் பெரியது! முதன்முதலில் ஆதி சனாதன தேவ தேவியரின் தர்மம் உள்ளது. பின்னர் பல்வேறு சமயங்கள் வருகின்றன. நீங்கள் பல்வேறு வகையான 84 பிறவிகளை எடுத்திருக்கின்றீர்கள். அதுவும் அழியாததே. ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மாத்திரமே 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றுபவர்கள். எந்த மனித ஆத்மாவும் 8.4 மில்லியன் பிறவிகளை எடுப்பதில்லை. பல்வேறு வகையான மிருகங்கள் போன்றனவும் உள்ளன. அவற்றை எவராலும் கணக்கிடவும் முடியாது. ஒரு மனித ஆத்மா 84 பிறவிகளை எடுக்கின்றார். நீங்கள் இப்பொழுது உங்கள் பாகங்களை நடித்ததால், மிகவும் களைப்படைந்திருக்கின்றீர்கள். நீங்கள் சந்தோஷமிழந்திருக்கின்றீர்கள். ஏணியில் இறங்கும்போது, நீங்கள் சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். தமோபிரதானில் இருந்து தந்தை உங்களை மீண்டும் சதோபிரதான் ஆக்குகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் தமோபிரதான் உலகிற்கு ஒரு தமோபிரதான் சரீரத்தில் வருகின்றேன். இப்பொழுது முழு உலகமும் தமோபிரதானாகவே உள்ளது. முழு உலகிலும் எவ்வாறு அமைதி நிலவ முடியும் என மனிதர்கள் வினவுகின்றார்கள். உலகில் எப்பொழுது அமைதி நிலவியது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் வீட்டில் படங்கள் உள்ளன, அல்லவா? அவர்களின் இராச்சியம் இருந்தபோது, முழு உலகிலும் அமைதி நிலவியது. அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. புதிய உலகமே சத்தியயுகமான சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இப்பழைய உலகம் இப்பொழுது மாறவேண்டும். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. முழு உலகிலும் அவர்களின் இராச்சியம் மாத்திரமே இருந்தது. பலரும் இலக்ஷ்மி நாராயணனின் ஆலயத்திற்குச் செல்கின்றார்கள். அவர்களே இந்த பாரதத்தின் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதும், அவர்களின் இராச்சியத்தில் உண்மையில் அமைதியும் சந்தோஷமும் நிலவியது என்பதும் அவர்களின் புத்தியில் பதிவதில்லை. அவர்களின் இராச்சியம் 5000 வருடங்களுக்கு முன்னரே நிலவியது. அரைக் கல்பத்தின் பின்னர், உலகம் பழையது எனப்படுகின்றது. வியாபாரிகள் தமது கணக்குப் புத்தகத்தில் சுவஸ்திகாவை வரைவதுண்டு. அதற்கும் ஓர் அர்த்தம் உள்ளது. அவர்கள் அதனை கணேஷர் என அழைக்கின்றார்கள். கணேஷர்; தடைகளை அழிக்கின்ற ஒரு தேவர் என அவர்கள் கருதுகின்றார்கள். சுவஸ்திகாவில் நான்கு சமமான பிரிவுகள் உள்ளன. அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றார்கள். நினைவு யாத்திரையே உண்மையான தீபாவளியாகும், அதனூடாகவே 21 பிறவிகளுக்கு ஆத்மாக்களாகிய உங்களது ஒளி ஏற்றப்படுகின்றது. நீங்கள் அதிகளவு வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். இது புதிய உலகிற்கான உங்கள் புதிய கணக்காகும். நீங்கள் இப்பொழுது 21 பிறவிகளுக்கான வருமானத்தைச் சேர்க்கவேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: உங்களை ஆத்மாக்களெனக் கருதியவாறு செவிமடுக்கின்றீர்களா? உங்களை ஆத்மாக்களெனக் கருதியவாறு செவிமடுத்தால் நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார்! இவை கடவுளின் வாசகங்கள் ஆகும்! கடவுள் ஒருவரே. அவர் நிச்சயமாக வந்து ஒரு சரீரத்தை எடுக்கின்றார். ஏனெனில் அப்பொழுதே கடவுளின் வாசகங்கள் இருக்க முடியும். இதனை எவரும் அறியாததாலேயே அவர்கள் "நேற்றி, நேற்றி” (இதுவும் அல்ல, அதுவும் அல்ல) எனக் கூறுகின்றார்கள். அவர் பரமாத்மாவான பரமதந்தை என அவர்கள் கூறுகின்றார்கள். பின்னர் அவரை தமக்குத் தெரியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் சிவனை ‘பாபா’ என அழைக்கின்றார்கள், அத்துடன் அவர்கள் பிரம்மாவையும் ‘பாபா’ என்றே அழைக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் விஷ்ணுவை ‘பாபா’ என அழைப்பதில்லை. பிரஜாபிதாவும் பாபா ஆவார். நீங்கள் பிரம்மகுமாரர்கள், குமாரிகள் ஆவீர்கள். நீங்கள் ‘பிரஜாபிதா’ என்ற பட்டத்தைப் பயன்படுத்தாதபோது, அவர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். பிரம்மகுமாரர்கள், குமாரிகள் பலர் இருக்கின்றார்கள். ஆகையால் நிச்சயமாக பிரஜாபிதாவும் இருக்க வேண்டும். ஆகையால் நீங்கள் நிச்சயமாக ‘பிரஜாபிதா’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். பிரஜாபிதா தமது தந்தையே என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். புதிய உலகம் நிச்சயமாக பிரஜாபிதாவின் மூலமே உருவாக்கப்படுகின்றது. முதலில் நாங்கள் சகோதரர்கள் ஆவோம். பின்னர், நாங்கள் சரீரத்திற்குள் வரும்போது, சகோதர சகோதரிகள் ஆகுகின்றோம். தந்தையின் குழந்தைகள் அழியாத ஆத்மாக்கள் ஆவார்கள். அதன் பின்னர் சரீர வடிவில், நாங்கள் சகோதர சகோதரிகள் ஆவோம். ஆகையாலேயே பிரஜாபிதா பிரம்மா என்ற பெயர் உள்ளது. எவ்வாறாயினும், நாங்கள் பிரம்மாவை நி;னைவு செய்வதில்லை. லௌகீகத் தந்தையரும், உலகிற்கு அப்பாலுள்ள தந்தையும் மாத்திரமே நினைவு செய்யப்படுகின்றார்கள். எவரும் பிரஜாபிதா பிரம்மாவை நினைவு செய்வதில்லை. துன்ப நேரத்தில், மக்கள் பிரம்மாவை அன்றி, தந்தையையே (சிவபாபா) நினைவு செய்கின்றார்கள் ‘ஓ கடவுளே!’ என்றே அவர்கள் கூறுகின்றார்கள், ‘ஒ பிரம்மா! என அவர்கள் என்றுமே கூறுவதில்லை. சந்தோஷ நேரத்தில் அவர்கள் எவரையுமே நினைவு செய்வதில்லை. அங்கே, சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. இது எவருக்கும் தெரியாது. இந்நேரத்தில் உங்களுக்கு மூன்று தந்தையர் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் லௌகீகத் தந்தையையும் அப்பாலுள்ள தந்தையையுமே நினைவு செய்கின்றார்கள். சத்திய யுகத்தில் அவர்கள் தமது லௌகீகத் தந்தையரை மாத்திரமே நினைவு செய்கின்றார்கள். சங்கமயுகத்தில், நீங்கள் தந்தையர் மூவரையுமே நினைவு செய்கின்றீர்கள். உங்களுக்கும் லௌகீகத் தந்தை இருக்கின்றார். ஆனால் அவர் எல்லைக்குட்பட்டவர் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவரிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையே நீங்கள் பெறுகிறீர்கள். நாங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையைக் கண்டுகொண்டோம். அவரிடமிருந்து நாங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றோம். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுப்பதற்காக எல்லையற்ற தந்தை இப்பொழுது பிரம்மாவின் சரீரத்திற்குள் பிரவேசித்துள்ளார். அவருக்கு உரியவராகுவதால், நீங்கள் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இது உங்கள் பாட்டனாரின் ஆஸ்தியை பிரம்மாவின் ஊடாகப் பெறுவதைப் போன்றதாகும். அவர் கூறுகின்றார்: நான் உங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். என்னிடம் ஞானம் உள்ளது. மனிதர்களுக்கோ தேவர்களுக்கோ ஞானம் இருப்பதில்லை. என்னிடமுள்ள ஞானத்தை குழந்தைகளாகிய உங்களுக்கு நான் கொடுக்கின்றேன். இது ஆன்மீக ஞானமாகும். ஆன்மீகத் தந்தையிடம் இருந்து நீங்கள் ஓர் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இவ்வாறாக நீங்கள் ஞானக் கடலைக் கடையவேண்டும். ‘மனதை வென்றவர்கள் அனைத்தையும் வென்றவர்கள், மனதினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் அனைத்தினாலும் தோற்கடிக்கப்படுகின்றார்கள்’ என நினைவுகூரப்பட்டுள்ளது. உண்மையில், ‘மாயையை வெற்றி கொண்டவர்கள்’ என்றே கூறப்பட வேண்டும். ஏனெனில் மனதை வெற்றிகொள்ள முடியாது. மனிதர்கள் வினவுகின்றார்கள்: மன அமைதி எவ்வாறு இருக்க முடியும்? தந்தை வினவுகின்றார்: ஓர் ஆத்மா எவ்வாறு அமைதி வேண்டும் எனக் கேட்க முடியும்? ஆத்மாக்கள் அமைதி தாம வாசிகளாவார்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் பிரவேசிக்கும்போதே, அவர் நடிக்க ஆரம்பிக்கின்றார். தந்தை கூறுகின்றார்;: இப்பொழுது உங்கள் ஆதி தர்மத்தில் நிலைத்திருங்கள். உங்களை ஓர் ஆத்மாவெனக் கருதுங்கள். ஆத்மாவின் ஆதி தர்மம் அமைதியாகும். அமைதியை நீங்கள் வேறு எங்கு பெறமுடியும்? இதன் அடிப்படையிலேயே அரசியின் நெக்லஸ் உதாரணமாகக் கூறப்பட்டுள்ளது. சந்நியாசிகள் இந்த உதாரணத்தைக் கொடுத்த போதிலும் அவர்கள் அமைதியை தேடி காட்டிற்குச் செல்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்;: ஆத்மாக்களாகிய உங்களது தர்மம் அமைதியாகும். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காக அமைதி தாமத்தில் இருந்தே வருகின்றீர்கள், அதுவே உங்கள் வீடாகும். நீங்கள் ஒரு சரீரத்தினூடாகவே நடிக்க வேண்டும். உங்கள் சரீரத்திலிருந்து நீங்கள் பிரிந்திருக்கும்போது மயான அமைதி உள்ளது. ஓர் ஆத்மா இன்னொரு சரீரத்தை எடுக்கின்றார் என்பதால் நீங்கள் ஏன் எதனையிட்டும் கவலைப்பட வேண்டும்? அந்த ஆத்மா மீண்டும் வரப்போவதில்லை. எவ்வாறாயினும், பற்று உங்களைத் தொந்தரவு செய்கின்றது. அங்கே, பற்று உங்களைத் தொந்தரவு செய்வதில்லை. அங்கே ஐந்து விகாரங்கள் இருப்பதில்லை. அங்கே இராவண இராச்சியம் இருப்பதில்லை. அது இராம இராச்சியமாகும். அது எப்பொழுதும் இராவண இராச்சியமாகவே இருந்தால், மக்கள் களைப்படைந்து விடுவார்கள். அவர்களால் என்றுமே சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. நீங்கள் இப்பொழுது ஆஸ்திகர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் திரிகாலதரிசிகளும் ஆவீர்கள். மனிதர்களுக்குத் தந்தையைத் தெரியாது. ஆகையாலேயே அவர்கள் நாஸ்திகர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். கடந்த காலத்தில் இருந்த சமய நூல்கள் அனைத்தும் பக்தி மார்;க்கத்தைச் சேர்ந்தவை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது ஞான மார்க்கத்தில் இருக்கின்றீர்கள். தந்தை உங்களைத் தனது கண்களில் அமர்த்தி, மிகுந்த அன்புடன் உங்களைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். அவர் கூறுகின்றார்: நான் உங்கள் அனைவரையும் எனது கழுத்து மாலையாக்கி உங்களை மீண்டும் அழைத்துச் செல்கின்றேன். அனைவரும் அவரைக் கூவி அழைக்கின்றார்கள். காமச் சிதையில் அமர்ந்ததால், அவலட்சணம் ஆகியவர்களை அவர் ஞானச் சிதையில் அமர்த்துகின்றார். அவர்கள் தமது கணக்கை முடிக்கும்போது, அவர்களை அவர் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். இப்பொழுது கற்பதே உங்கள் கடமையாகும். நீங்கள் ஏன் வேறு விடயங்களில் ஈடுபட வேண்டும்? ‘மக்கள் எவ்வாறு மரணிப்பார்கள்?’ ‘என்ன நடக்கும்?’ அவ்விடயங்களில் நீங்கள் ஏன் ஈடுபட வேண்டும்? இது தீர்வுக் காலம் ஆகும். அனைவரும் தத்தமது கணக்கைத் தீர்த்துக்கொண்டு வீடு திரும்புவார்கள். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இந்த எல்லையற்ற நாடகத்தின் இரகசியம் உள்ளது. வேறு எவரிடமும் இது இருப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் உங்கள் எல்லையற்ற ஆஸ்தியைக் கோருவதற்காக பாபாவிடம் வருகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் உயிருள்ளவர்கள். தந்தை வந்து ஒரு சரீரத்தில் பிரவேசித்துள்ளார். தந்தை கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்திலேயே பிரவேசிக்கின்றேன். அவருக்கே தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது என்பதை நான் இங்கமர்ந்திருந்து அவருக்கு விளங்கப்படுத்துகின்றேன். ‘குழந்தைகளே, ஆத்ம உணர்வுடையவர்களாகி, தந்தையை நினைவு செய்யுங்கள்!’ என வேறு எவராலும் கூறமுடியாது: அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. நினைவு யாத்திரையில் நிலைத்திருந்து, தினமும் உண்மையான தீபாவளியைக் கொண்டாடுங்கள். உங்கள் புதிய கணக்கில் நீங்கள் 21 பிறவிகளுக்கான வருமானத்தைச் சேர்க்க வேண்டும்.
  2. நாடகத்தின் இரகசியத்தை உங்கள் புத்தியில் வைத்திருங்கள். இக்கல்வியைத் தவிர வேறு எதிலும் ஈடுபடாதீர்கள். உங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் தீர்த்துவிடுங்கள்.

ஆசீர்வாதம்:

ஒரு விளக்கிலிருந்து பெறப்படும் அன்புச் சுடரினால், ஏனைய பல விளக்குகளை ஏற்றுகின்ற ஓர் உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

தீபாவளியின் போது, ஒரு விளக்கிலிருந்து பல விளக்குகள் ஏற்றப்பட்டு, தீபமாலை கொண்டாடப்படுகின்றது. ஒரு விளக்கிலிருந்தும் சுடர் வெளிப்படுகின்றது. அவ்வாறே, விளக்குகளாகிய நீங்கள் அன்புச் சுடரை கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு விளக்கினதும் அன்பானது ஒரே விளக்குடன் இணைக்கப்படும் போது, உண்மையான தீபமாலை உருவாகின்றது. எனவே, விளக்குகளாகிய நீங்கள், உங்கள் ஆழமான அன்பினால் சுடரின் வடிவமாகுகிறீர்களா எனப் பாருங்கள். தமது சொந்த ஒளியினால், அறியாமை என்ற இருளை அகற்றுபவர்கள் உண்மையான சேவையார் ஆகுவார்கள்.

சுலோகம்:

"ஒரே பலமும், ஒரே நம்பிக்கையும்” என்ற ஒரு பாடத்தை எப்பொழுதும் உறுதியாக்கினால், உங்களால் எந்த ஒரு நீர்ச்சுழியிலிருந்தும் இலகுவாக வெளியேறிவிட முடியும்.


---ஓம் சாந்தி---