14.02.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    14.11.87     Om Shanti     Madhuban


நேர்மையான இதயத்துடன் புரிந்துணர்தலே சுய மாற்றத்திற்கான அடிப்படை.


இன்று, உலகை மாற்றுபவரும், உலக நன்மையாளருமான பாப்தாதா, தனது அன்பான, ஒத்துழைக்கும், உலக மாற்றத்தை ஏற்படுத்தும் குழந்தைகளைப் பார்க்கிறார். உங்களின் சுய மாற்றத்தினூடாக, நீங்கள் ஒவ்வொருவரும் உலக மாற்றத்திற்கான சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் நிச்சயமாக இந்த உலகை மாற்ற வேண்டும் என்ற அதே ஊக்கமும் உற்சாகமும் உங்கள் அனைவரின் மனங்களிலும் உள்ளது. அத்துடன் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையும் உங்களிடம் உள்ளது. அதாவது, மாற்றம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது எனக் கூற முடியும். நீங்கள் பெயரளவில் பாப்தாதாவின் ஒத்துழைக்கும் இலகு யோகிக் குழந்தைகளாகி, உங்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மேன்மையானது ஆக்குகிறீர்கள்.

இன்று, பாப்தாதா உலகை மாற்றும், கருவிக் குழந்தைகளைப் பார்த்தார். குறிப்பாக அவர் ஒரு விடயத்தைப் பார்த்தார். அனைவரும் ஒரு பணிக்குக் கருவிகளாக இருக்கிறீர்கள். அனைவரின் இலக்கும் சுய மாற்றமும் உலக மாற்றமும் ஆகும். எனினும், சுய மாற்றத்திற்கும் உலக மாற்றத்திற்கும் கருவிகளாக இருக்கும் வேளையில், ஏன் அது வரிசைக்கிரமம் ஆகுகிறது? சில குழந்தைகள் சுய மாற்றத்தை மிக இலகுவாகவும் விரைவாகவும் ஏற்படுத்துகிறார்கள். ஆனால், ஏனையோர் ஒரு கணம் மாற்றத்தைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால், அவர்களின் சொந்த சம்ஸ்காரங்களும், மாயையால் அல்லது பஞ்சபூதங்களால் அல்லது பிராமணக் குடும்பத்தினூடாகத் தீர்க்க வேண்டிய கர்மக்கணக்குகளால் ஏற்படும் சூழ்நிலைகள், மாற்றத்திற்கான மேன்மையான உற்சாகத்தைப் பலவீனம் ஆக்குகிறது. அத்துடன் சில குழந்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் தைரியம் இல்லாதிருக்கிறது. எங்கு தைரியம் இல்லையோ, அங்கு ஊக்கமோ அல்லது உற்சாகமோ இருக்காது. சுய மாற்றம் இல்லாமல், உலக மாற்றத்திற்கான பணியில் நீங்கள் விரும்பும் வெற்றியைப் பெற முடியாது. இது ஏனென்றால், இந்த அலௌகீக, இறை சேவை ஒரே வேளையில் இடம்பெறும் மூன்று வகையான சேவைகளைக் காட்டுகிறது. ஒரே வேளையில் இடம்பெறும் இந்த மூன்று வகையான சேவைகளும் எவை? 1. மனோபாவம் 2. அதிர்வலைகள். 3. வார்த்தைகள். பணிவும் சுயநலமற்ற தன்மையும் உள்ள ஒரு கருவியாக, இவற்றின் அடிப்படையில் சக்திசாலி ஆகுங்கள். இவ்வாறே நீங்கள் விரும்பும் வெற்றியை உங்களால் பெற முடியும். இல்லாவிட்டால், சேவை இடம்பெறும். சேவையில் ஏற்படும் ஏதாவது வெற்றியால், நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் குறுகிய நேரத்திற்கு சந்தோஷப்படுத்துவீர்கள். ஆனால், உண்மையில் நீங்கள் விரும்பிய, பாப்தாதா விரும்பிய வெற்றி ஏற்படுவதில்லை. குழந்தைகளான உங்களுக்குள் சந்தோஷம் இருப்பதையிடடு பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால், உங்களின் கொள்ளளவிற்கேற்பக் கிடைத்த பெறுபேறு, நிச்சயமாக இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவரின் இதயத்தில் குறிக்கப்படும். அவர் நிச்சயமாக நன்று, நன்று என்று கூறுவார். ஏனென்றால், எப்போதும் ஒவ்வொரு குழந்தைக்குமான தந்தையின் பார்வையும் ஆசீர்வாதங்களின் மனோபாவமும் என்னவென்றால், இன்றில்லாவிட்டால், நாளை, இந்தக் குழந்தைகள் நிச்சயமாக வெற்றி சொரூபங்கள் ஆகுவார்கள் என்பதேயாகும். எவ்வாறாயினும், ஆசீர்வாதங்களை அருள்பவராக இருப்பதுடன், அவர் ஆசிரியராகவும் இருக்கிறார். இதனாலேயே, அவர் உங்களின் கவனத்தை எதிர்காலத்தை நோக்கி ஈர்க்கிறார்.

எனவே, இன்று, பாப்தாதா உலக மாற்றப்பணியினதும் உலக மாற்றத்தை ஏற்படுத்தும் குழந்தைகளினதும் பெறுபேறுகளைப் பார்த்தார். வளர்ச்சி காணப்படுகிறது. சத்தம் எங்கும் பரவுகிறது. வெளிப்படுத்துகைக்கான திரைச்சேலை திறக்க ஆரம்பித்து விட்டது. எங்கும் உள்ள ஆத்மாக்களில், தாம் நிச்சயமாக நெருக்கமாக வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதைக் கேட்டுள்ளார்களோ, அதை இப்போது காண வேண்டும் என்ற விருப்பமாக மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும், நாடகத்தின்படி, தந்தையினதும் சில மேன்மையான கருவி ஆத்மாக்களினதும் சக்திவாய்ந்த விளைவின் பெறுபேற்றையே இப்போது காணக்கூடியதாக இருக்கிறது. இந்த முறையில் பெரும்பாலானோர் வெற்றி பெற்றால், பிராமணர்கள் அனைவரும் மிக விரைவில் வெற்றி சொரூபங்களாக வெளிப்படுத்தப்படுவார்கள். வெற்றிக்கு அடிப்படையான, உங்களாலும் ஏனைய மனிதர்களாலும் தந்தையாலும் விரும்பப்படும் சுய மாற்றம் தற்சமயம் குறைவாக இருப்பதை பாப்தாதா கண்டார். எனவே, இந்த சுய மாற்றம் குறைவாக இருப்பது ஏன்? ஒரு குறிப்பிட்ட சக்தி இல்லாதிருப்பதே இதற்கான பிரதானமான காரணம் ஆகும். புரிந்துணர்வு சக்தியே அந்த விசேடமான சக்தியாகும்.

எந்தவொரு மாற்றத்திற்கும் இலகுவான அடிப்படை, புரிந்துணர்வு சக்தியாகும். உங்களிடம் புரிந்துணர்வு சக்தி ஏற்படும்வரை, உங்களால் அனுபவத்தைப் பெற முடியாது. உங்களுக்கு அனுபவம் ஏற்படும்வரை, பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பின் அத்திவாரம் உறுதியாக முடியாது. ஆரம்பத்தில் இருந்து உங்களின் பிராமண வாழ்க்கையை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள்.

முதலாவது மாற்றம்: நான் ஓர் ஆத்மா, தந்தை என்னுடையவர். எதன் அடிப்படையில் இந்த மாற்றம் நிகழ்கிறது? ஆமாம், நான் ஓர் ஆத்மா, இந்த ஒரேயொருவர் மட்டுமே எனது தந்தையாவார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்போதே. இந்தப் புரிந்துணர்வு நீங்கள் ஓர் அனுபவத்தைப் பெறச் செய்கிறது. அப்போது மட்டுமே மாற்றம் நிகழ்கிறது. நீங்கள் இதை உணரும்வரை, நீங்கள் சாதாரணமான வேகத்தில் தொடர்ந்து செயல்படுகிறீர்கள். ஆனால், புரிந்துணர்வு சக்தி உங்களை அனுபவசாலி ஆக்கும் அந்தக் கணம், நீங்கள் தீவிர முயற்சியாளர் ஆகுகிறீர்கள். அதேபோல், மாற்றத்திற்கான குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும், அது படைப்பவரையோ அல்லது படைப்பையோ பற்றியதாக இருந்தாலும், நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் உணரும்வரை, ஆமாம், இதுவே அந்த நேரம், இதுவே அதே யோகம், நானே அந்த மேன்மையான ஆத்மா என உணரும்வரை, உங்களின் செயல்பாடுகளில் அதே ஊக்கமோ அல்லது உற்சாகமோ இருக்காது. சிலரிடம், சூழலின் தாக்கத்தினால் குறுகிய காலத்திற்கு மாற்றம் ஏற்படும். ஆனால், அது எல்லா வேளைக்கும் இருக்காது. புரிந்துணர்வு சக்தியானது எல்லா வேளைக்கும் இலகுவான மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதேபோல், சுய மாற்றத்தில் புரிந்துணர்வு சக்தி உங்களுக்குள் இல்லாவிட்டால், எல்லா வேளைக்கும் மேன்மையான மாற்றம் ஏற்படாது. இதில், குறிப்பாக இரண்டு விடயங்களில் புரிந்துணர்வு தேவைப்படுகிறது. 1. உங்களின் சொந்தப் பலவீனங்களைப் பற்றிய புரிந்துணர்வு. 2. சூழ்நிலையினதும் அந்தச் சூழ்நிலைக்குக் கருவியாகும் நபரின் மனதின் ஆசைகளும் உணர்வுகளும், ஒரு புறச் சூழலால் அந்த நபரின் பலவீனம் அல்லது அவரின் ஸ்திதிக்கான புரிந்துணர்வு. அந்தச் சூழ்நிலையினூடான பரீட்சைக்கான காரணத்தை அறிந்து கொள்வதன் மூலம், உங்களின் மேன்மையான ரூபமான, நான் மேன்மையானவன், எனது ஸ்திதி மேன்மையானது, அந்தச் சூழ்நிலை ஒரு பரீட்சைத்தாள் மட்டுமே என்பதன் மூலம் அதில் சித்தி எய்தும் புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்தப் புரிந்துணர்வு இலகுவாக மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நீங்களும் சித்தி அடைவீர்கள். மற்றவர்களின் ஆசைகளைப் பற்றிய புரிந்துணர்வும், அவர்களின் சுய முன்னேற்றத்திற்கு என்ன தேவை என்ற புரிந்துணர்வுமே உங்களின் சுய முன்னேற்றத்திற்கான அடிப்படையாகும். எனவே, புரிந்துணர்வு சக்தி இல்லாமல் சுய மாற்றம் நிகழ முடியாது. இதிலும், ஒன்று நேர்மையான இதயத்துடனான புரிந்துணர்வு. மற்றையது, கெட்டித்தனமான முறையில் இருக்கும் புரிந்துணர்வு. ஏனென்றால், நீங்கள் மிகவும் ஞானம் நிறைந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். ஆகவே, நேரத்தைக் கருத்தில் கொள்வதன் மூலம், உங்களின் பணியைச் சரியென நிரூபிப்பதற்கும், உங்களின் பெயரைப் பெருமைப்படுத்தவும், நீங்கள் அந்த வேளையில் புரிந்துணர்வைக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், அந்தப் புரிந்துணர்விற்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி இருக்காது. எனவே, இதயபூர்வமான புரிந்துணர்வே, இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரிடமிருந்து ஆசீர்வாதங்களை நீங்கள் பெறச் செய்யும். ஆனால், கெட்டித்தனமான புரிந்துணர்வு, உங்களையும் மற்றவர்களையும் குறுகிய காலத்திற்கே சந்தோஷப்படச் செய்யும்.

மூன்றாவது வகையான புரிந்துணர்வானது, உங்களின் மனம் எதையாவது சரியென ஏற்றுக் கொள்ளாது. உங்களின் மனச்சாட்சியும் அது சரியல்ல என்றே சொல்லும். ஆனால், ஒரு மகாராத்தி என்ற தோற்றத்தைப் பேணுவதற்கு, அல்லது, குடும்பத்தில் உங்களைப் பலவீனமாக அல்லது எதிலும் குறைவாகக் காட்ட விரும்பாததால், நீங்கள் தொடர்ந்து உங்களின் மனச்சாட்சியைக் கொல்வீர்கள். இந்த முறையில் உங்களின் மனச்சாட்சியைக் கொல்வதும் ஒரு பாவமே ஆகும். எவ்வாறு தற்கொலை செய்வது ஒரு பாவமோ, அதேபோல், இதுவும் பாவக்கணக்கிலேயே சேரும். இதனாலேயே, பாப்தாதா தொடர்ந்து புன்னகைப்பதுடன், தொடர்ந்து அவர்களின் மனங்களில் உள்ள உரையாடல்களையும் செவிமடுக்கிறார். அவை மிக அழகான உரையாடல்கள். இந்த வகையான புரிந்துணர்வைக் கொண்டிருப்பவர்கள், வேறு எவருக்கும் என்ன தெரியும்? என நினைப்பதே பிரதானமான விடயமாகும். இது தொடர்ந்தும் நிகழ்கிறது. எவ்வாறாயினும், தந்தை ஒவ்வொரு இலையைப் பற்றியும் அறிவார். அவருக்குக் கூறும்போது மட்டுமே அவர் எதைப் பற்றியாவது அறிவார் என்பதல்ல. ஆனால், அதைப் பற்றி அறிந்திருந்தாலும், அவர் அறியாதவர் போல் இருக்கிறார். கள்ளங்கபடமற்ற தன்மையுடன், தனது கள்ளங்கபடமற்ற ரூபத்தால் அவர் குழந்தைகளைச் செயல்பட வைக்கிறார். அவர் அறிந்திருந்தும் ஏன் கள்ளங்கபடமற்றவர் ஆகுகிறார்? ஏனென்றால், அவரே கருணைநிறைந்த தந்தையாவார். அதனால், நீங்கள் அந்தப் பாவத்துடன் மேலதிகமாக வேறு பாவத்தையும் சேர்க்காமல் இருக்க வேண்டும் என்ற கருணை அவருக்கு உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா? இத்தகைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாகி, புத்திசாலியான தந்தையின் அல்லது கருவி ஆத்மாக்களின் முன்னால் வருகிறார்கள். இதனாலேயே, தந்தை கருணைநிறைந்தவராகவும் கள்ளங்கபடமற்ற பிரபுவாகவும் ஆகுகிறார்.

பாப்தாதாவிடம் ஒவ்வொரு குழந்தையினதும் ஒவ்வொரு செயலினதும் மனதின் ஒவ்வொரு எண்ணத்தினதும் மிகத் தெளிவான கணக்கு உள்ளது. அவர்களின் இதயங்களில் என்ன உள்ளது என்பதைப் பற்றி அறிய வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு குழந்தையினதும் ஒவ்வோர் இதயத்துடிப்பும் தெளிவாக உள்ளது. இதனாலேயே, ஒவ்வொருவரின் இதயத்திலும் என்ன உள்ளது என்பதைப் பற்றி அவருக்குத் தெரியாது என அவர் கூறுகிறார். ஏனென்றால், அதைப் பற்றி அறிய வேண்டிய தேவையில்லை. இது ஏற்கனவே தெளிவாகவே உள்ளது. ஒவ்வொரு கணத்தின் இதயத்துடிப்பினதும், மனதின் ஒவ்வோர் எண்ணத்தினதும் அட்டவணை பாப்தாதாவின் முன்னால் உள்ளது. அதைப் பற்றி அவரால் உங்களிடம் கூற முடியும். அவரால் அதைப் பற்றிக் கூற முடியாது என்பதல்ல. நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் அதற்கான திகதி, இடம், நேரம் என்பனவற்றையும் அவரால் சரியாகக் கூற முடியும். அவரால் அனைத்தையும் கூறமுடியும். எவ்வாறாயினும், அவை அனைத்தையும் அறிந்தும் அவர் எதையும் கருத்தில் கொள்ளாதவராகவே இருக்கிறார். எனவே, இன்று பாபா முழுமையான அட்டவணையையும் பார்த்தார்.

சுய மாற்றம் துரித கதியில் நிகழாததற்கான காரணம், நேர்மையான இதயத்துடனான புரிந்துணர்வு இல்லாதிருப்பதே ஆகும். புரிந்துணர்வு சக்தியால் உங்களுக்கு மிக இனிமையான அனுபவங்களைக் கொடுக்க முடியும். நீங்கள் இதைப் புரிந்து கொள்கிறீர்கள், அல்லவா? சிலவேளைகளில், உங்களைத் தந்தையின் கண்களின் இரத்தினமாக விளங்கும் ஓர் ஆத்மாவாகக் கருதிக் கொள்ளுங்கள். அதாவது, கள்களில் அமிழ்ந்துள்ள மேன்மையான புள்ளியாக உங்களை உணருங்கள். புள்ளியால் மட்டுமே கண்களில் அமிழ முடியும். சரீரத்தால் கண்களில் அமிழ முடியாது. சிலவேளைகளில், உங்களை நெற்றியிலுள்ள ஓர் பிரகாசிக்கும் இரத்தினமாகக் கருதிக் கொள்ளுங்கள். சிலவேளைகளில், நீங்கள் ஒரு பிரகாசிக்கும் நட்சத்திரம் என உணருங்கள். சிலவேளைகளில், நீங்கள் தந்தை பிரம்மாவின் ஒத்துழைக்கும் வலது கரம், பௌதீகமான பிராமண ரூபத்தில் இருக்கும் பிரம்மாவின் கரம் என அனுபவம் செய்து உணருங்கள். சிலவேளைகளில், நீங்கள் ஓர் அவ்யக்த தேவதை ரூபம் என உணருங்கள். புரிந்துணரும் சக்தியால், பல தனித்துவமான, அளெலகீக அனுபவங்களைப் பெறுங்கள். ஞானத்தின் ரூபத்தில் அவற்றைப் பற்றி வெறுமனே பேசாமல், அவற்றை உணருங்கள். இந்த வகையான புரிந்துணர்வு சக்தியை அதிகரியுங்கள். அப்போது, மற்றைய வகையான புரிந்துணர்வான, பலவீனங்களின் புரிந்துணர்வு இயல்பாகவே மிகத் தெளிவாகிவிடும். சக்திவாய்ந்த ஒரு கண்ணாடியில் ஒரு சிறிய கறையும் மிகத் தெளிவாகத் தெரியும். உங்களால் அதை மாற்றக்கூடியதாக இருக்கும். எனவே, உங்களுக்குப் புரிகிறதா? புரிந்துணர்வு சக்தியே சுய மாற்றத்தின் அடிப்படை. சக்திகளைப் பயன்படுத்துங்கள். அவற்றை எவ்வளவு என எண்ணி, ஆமாம், என்னிடம் இந்தச் சக்தி உள்ளது, என்னிடம் இந்தச் சக்தியும் உள்ளது என நினைத்து சந்தோஷப்படாதீர்கள். ஆனால், சதா அவற்றை ஒவ்வொரு பணியிலும் உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் சேவைக்காகவும் பயன்படுத்துங்கள். உங்களுக்குப் புரிகிறதா? சில குழந்தைகள் கேட்கிறார்கள்: தந்தை இதை எல்லா வேளையும் செய்கிறாரா? எவ்வாறாயினும், தந்தையால் என்ன செய்ய முடியும்? அவர் உங்கள் ஒவ்வொருவரையும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அவர் உங்களைத் தன்னுடன் எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதால், அவருக்கு இத்தகைய சகபாடிகள் தேவைப்படுகிறார்கள். ஆகவே, அவர் தொடர்ந்து உங்களைப் பார்க்கிறார். தொடர்ந்து உங்களுக்குச் செய்திகளைக் கூறுகிறார். அதன்மூலம் சகபாடிகளான உங்களால் சமமானவர்கள் ஆகமுடியும். பின்னால் தொடர்பவர்களைப் பற்றிய கேள்வியே இல்லை. அவ்வாறு தொடர்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் சகபாடிகள் சமமானவர்களாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் சகபாடிகளா அல்லது ஊர்வலத்தில் ஒரு பகுதியினரா? அந்த ஊர்வலம் மிக நீண்டதாக இருக்கும். இதனாலேயே சிவனின் ஊர்வலம் மிகவும் பிரபல்யமானது. அந்த ஊர்வலத்தில் பல்வகையானவர்களும் இருப்பார்கள். ஆனால் சகபாடிகள் தந்தையைப் போல் இருக்க வேண்டும். அச்சா.

இதுவே கிழக்குப் பிராந்தியம் ஆகும். கிழக்குப் பிராந்தியம் என்ன செய்கிறது? வெளிப்படுத்துகைக்குரிய சூரியனை நீங்கள் எங்கே உதிக்கச் செய்வீர்கள்? தந்தை அவதரித்துள்ளார் என்பது இப்போது பழைய செய்திகள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பழைய இராச்சியமாக (பிரம்மாபாபாவின் ஆரம்ப இடமான கல்கத்தா) இருக்கும் மிக நல்ல போதை உங்களுக்கு உள்ளது. ஆனால், இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்போது ஏதாவது புதுமையின் சூரியன் உதிக்கட்டும். அதன் மூலம், கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து புதுமையின் சூரியன் உதித்துள்ளது என்பது அனைவரின் உதடுகளில் இருந்தும் வெளிப்படும். இதுவரை எவரும் செய்திராத பணியைச் செய்வதன் மூலம், இதை நடைமுறையில் செய்து காட்டுங்கள். நீங்கள் நிகழ்ச்சிகளையும் கருத்தரங்குகளையும் நடத்தினீர்கள். ஐபி களுக்குச் சேவை செய்தீர்கள். அத்துடன் பத்திரிகைகளின் மூலமும் சேவை செய்தீர்கள். ஆனால் அனைவரும் அதைச் செய்கிறார்கள். எனவே, இப்போது ஏதாவது புதுமையின் பிரகாசத்தைக் காட்டுங்கள். உங்களுக்குப் புரிகிறதா?

தந்தையின் வீடு உங்களுடைய வீடாகும். நீங்கள் இங்கு சௌகரியமாக வந்துள்ளீர்கள். இதயங்களுக்குச் சௌகரியம் அளிப்பவர், உங்களுக்குப் பௌதீகமான வசதியையும் வழங்குகிறார். இதயத்துக்கு சௌகரியம் இல்லாவிட்டால், சௌகரியத்திற்கான சகல வசதிகளும் இருந்தாலும், நீங்கள் அசௌகரியமாகவே உணர்வீர்கள். உங்களிடம் இதயத்தின் சௌகரியம் உள்ளது. அதாவது, இராமர் எப்போதும் உங்களின் இதயத்தில் உங்களுடன் இருக்கிறார். இதனாலேயே, நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சௌகரியத்தை அனுபவம் செய்கிறீர்கள். நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்கள், இல்லையா? அல்லது, வருவதும் போவதும் உங்களைச் சஞ்சலத்திற்கு உள்ளாக்குகிறதா? எவ்வாறாயினும், அதை இனிய நாடகத்திற்கான விதி எனக் கருதுங்கள். நீங்கள் மேளாவைக் கொண்டாடுகிறீர்கள், இல்லையா? தந்தையைச் சந்தித்தல், குடும்பத்தைச் சந்தித்தல், மேளாவைக் கொண்டாடுதல் அனைத்தும் இனிய விதியே ஆகும். அச்சா.

அதி சக்திசாலி மேன்மையான ஆத்மாக்கள் அனைவருக்கும், ஒவ்வொரு சக்தியையும் சரியான நேரத்தில் பயன்படுத்தும் அதிதீவிர முயற்சியாளர் ஆத்மாக்களுக்கும், தமது சுய மாற்றத்தினூடாக எப்போதும் தாம் விரும்பும் வெற்றியைச் சேவையில் பெறும் சந்தோஷமான இதயத்தைக் கொண்ட குழந்தைகளுக்கும், இதயங்களுக்குச் சௌகரியம் அளிக்கும் தந்தையின் முன்னால் உள்ள நேர்மையான இதயங்களுடன் சதா தெளிவாக இருக்கும் வெற்றி சொரூபங்களுக்கும், பாப்தாதாவின் இதயபூர்வமான அன்பும் நினைவுகளும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா ஒரு குழுவைச் சந்திக்கிறார்:

நீங்கள் உங்களை எப்போதும் தந்தையின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருக்கும் விசேடமான ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? எங்கு தந்தையின் பாதுகாப்புக் குடை உள்ளதோ, அங்கு நீங்கள் எப்போதும் மாயையிடமிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள். மாயையால் அந்தக் குடையின் கீழ் வரமுடியாது. நீங்கள் இயல்பாகவே கடினமாக உழைப்பதில் இருந்து வெகு தொலைவில் இருப்பதுடன், எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏனென்றால், எங்கு கடின உழைப்பு இருக்கிறதோ, அங்கு அது உங்களை மகிழ்ச்சியாக இருப்பதற்கு அனுமதிக்காது. உதாரணமாக, குழந்தைகள் படிக்கும்போது, அதில் கடின உழைப்பு இருக்கும். அவர்களின் பரீட்சைக்காலங்களில் அவர்கள் கடினமுயற்சி செய்வார்கள். அவர்கள் விளையாடவோ அல்லது மகிழ்ச்சியாக இருக்கவோ மாட்டார்கள். பின்னர் அந்தக் கடினமுயற்சி முடிவடைந்ததும், அவர்களின் பரீட்சைகள் முடிந்ததும், மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே, எங்கு கடினமுயற்சி உள்ளதோ, அங்கு மகிழ்ச்சி இருக்க முடியாது. எங்கு மகிழ்ச்சி உள்ளதோ, அங்கு கடின உழைப்பு இருக்கமுடியாது. பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பதெனில், சதா மகிழ்ச்சியாக இருப்பதாகும். ஏனென்றால், இங்கு, நீங்கள் உயர் படிப்பைப் படித்தாலும், இது அதியுயர்ந்த கல்வியாக இருந்தாலும், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள், நீங்கள் ஏற்கனவே சித்தி எய்திவிட்டீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளது. இதனாலேயே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். இது கல்பம், கல்பத்திற்கான படிப்பு ஆகும். இது எதுவும் புதியதல்ல. எனவே, சதா மகிழ்ச்சியாக இருப்பதுடன், தொடர்ந்து மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான செய்தியைக் கொடுங்கள். தொடர்ந்து சேவை செய்யுங்கள். ஏனென்றால், நீங்கள் தொடர்ந்து சேவையின் பலனை இந்த வேளையிலும் எதிர்காலத்திலும் பெறுவீர்கள். நீங்கள் சேவை செய்தால் மட்டுமே அதன் பலனைப் பெறுவீர்கள்.

விடைபெறும் வேளையில், மூத்த சகோதர, சகோதரிகளுடன் பேசுகிறார்:

பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் சமமானவர்கள் ஆக்குவதற்கு, தூய ஆசிகளுடன் குழந்தைகள் பறக்க வேண்டும் என விரும்புகிறார். கருவி சேவையாளர்கள் நிச்சயமாகத் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகப் போகிறார்கள். எப்படியாவது, தந்தை உங்களை அவ்வாறு ஆக்க வேண்டும். ஏனென்றால், அவர் எவரையும் வெறுமனே தன்னுடன் அழைத்துச் செல்ல மாட்டார். தந்தைக்கும் தனது பெருமை உள்ளது. தந்தை சம்பூரணமாக இருந்து, சகபாடிகள் ஊனமுற்றவர்களாக அல்லது முடமானவர்களாக இருந்தால், அது பொருத்தமாக இருக்காது. ஊனமுற்றவர்களும் முடமானவர்களும் ஊர்வலத்தில் ஓர் அங்கமாகவே இருப்பார்கள். அவர்களால் சகபாடிகள் ஆகமுடியாது. இதனாலேயே, சிவனின் ஊர்வலம் எப்போதும் ஊனமுற்றவர்களையும் முடமானவர்களையும் கொண்டதாகவே காட்டப்படுகிறது. ஏனென்றால், சில பலவீனமான ஆத்மாக்கள் தர்மராஜ்புரியினூடாகக் கடந்து சென்ற பின்னர் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுவார்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஏற்றுக் கொள்ளும் சக்தியால் மாஸ்ரர் கடலாகி, சேவை மேடையில் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் சேவை மேடையில் வரும்போது, உங்களின் முன்னால் பல வகையான சூழ்நிலைகள் வரும். ஆகவே, அந்தச் சூழ்நிலைகளை உங்களுக்குள் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். ஏற்றுக் கொள்ளுதல் என்றால், புறநிலையிலுள்ள எதனுடைய சிறிதளவு சுவடேனும் எண்ணத்தின் அல்லது உணர்வின் ரூபத்தில் உங்களுக்குள் அமிழ்ந்திருக்கக்கூடாது. நன்மை தராத வார்த்தைகள் ஒருபோதும் பேசப்படவில்லை என்பதைப் போல், நன்மையை ஏற்படுத்தாத வார்த்தைகளை நன்மை செய்யும் உணர்வுகளாக மாற்றுங்கள். குறைபாடுகளை நற்குணங்களாக மாற்றுங்கள். இகழ்ச்சியைப் புகழ்ச்சியாக மாற்றுங்கள். அப்போது நீங்கள் மாஸ்ரர் கடல் என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:
விரிவாக்கத்தைப் பாராமல், சாரத்தைப் பார்த்து, சுயத்தில் அதை அமிழ்த்திக் கொள்பவரே ஒரு தீவிர முயற்சியாளர் ஆவார்.