17.05.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    13.01.86     Om Shanti     Madhuban


பிராமண வாழ்க்கை என்பது நிலையான, எல்லையற்ற சந்தோஷமான வாழ்க்கை ஆகும்.


இன்று, பாப்தாதா தனது புனிதமான, சந்தோஷமான அன்னங்களின் ஒன்றுகூடலைப் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் எப்போதும் சந்தோஷமாகவும் புனிதமானவர்களாகவும் இருக்கிறீர்களா? ஹோலி என்றால் தூய்மையின் புலப்படும் ரூபம் என்று அர்த்தம். அது சதா சந்தோஷத்தின் வடிவில் வெளிப்படுத்தப்படுகிறது. சந்தோஷம் இல்லாவிட்டால், நிச்சயமாக ஏதாவது தூய்மையின்மை உள்ளது. அதாவது, ஏதோ எண்ணங்கள் அல்லது செயல்கள் சரியானதாக இல்லை. இதனாலேயே சந்தோஷமும் இல்லை. தூய்மையின்மை என்பது ஐந்து விகாரங்கள் மட்டுமே என்று அர்த்தம் இல்லை. முழுமையான ஆத்மாக்களுக்கு, தேவாத்மக்கள் ஆகப் போகின்றவர்களுக்கு, சரியற்ற, வீணான, அல்லது சாதாரணமான எண்ணங்களையும் வார்த்தைகளையும் செயல்களையும் கொண்டிருப்பதும் சம்பூரணமான தூய்மை இல்லை. நீங்கள் உங்களின் முழுமையான ஸ்திதிக்கு நெருக்கமாக வருகிறீர்கள். ஆகவே, தற்போதைய நேரத்திற்கேற்ப, வீணான அல்லது சாதாரணமான செயல்கள் எவையும் இருக்கக்கூடாது. இதிலும் சோதிப்பதும் பின்னர் மாறுவதும் இருக்க வேண்டும். உங்களின் எண்ணங்களும் வார்த்தைகளும் செயல்களும் எந்தளவிற்கு அதிகமாக சக்திவாய்ந்தவையாகவும் மேன்மையானதாகவும் உள்ளனவோ, அந்தளவிற்கு பாக்கியசாலியாக இருப்பதன் சந்தோஷத்தினதும் போதையினதும் பிரகாசத்தை அனுபவம் செய்வீர்கள். அத்துடன் அந்த அனுபவத்தை மற்றவர்களுக்கும் கொடுப்பீர்கள். பாப்தாதா இந்த இரண்டு விடயங்களையும் குழந்தைகள் அனைவரிடமும் சோதித்துப் பார்க்கிறார்: எந்தளவிற்கு நீங்கள் தூய்மையைக் கிரகித்திருக்கிறீர்கள்? எந்தளவிற்கு வீணானவை அல்லது சாதாரணமானவை இன்னமும் எஞ்சியுள்ளன? அத்துடன் எந்தளவிற்கு உங்களுக்குள் ஆன்மீக சந்தோஷம், அழியாத சந்தோஷம், அக சந்தோஷம் உள்ளன? இந்த பிராமண வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ள பிராமணக் குழந்தைகள் அனைவருக்குமான இலக்கு, சதா சந்தோஷமாக இருப்பதே ஆகும். சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதற்கே நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு முயற்சி செய்வதற்கோ அல்லது எப்போதும் ஏதாவதொரு வடிவில் குழப்பத்தை அனுபவம் செய்வதற்கோ பிராமணர்கள் ஆகவில்லை.

எஞ்சிய கல்பம் முழுவதிலும் உங்களால் பெற முடியாத ஆன்மீக, அக சந்தோஷத்தையும் அதீந்திரிய சுகத்தையும் அடைவதற்காகவே நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். எவ்வாறாயினும், உங்களின் சந்தோஷம், எந்தவிதமான வசதிகளிலோ, எல்லைக்குட்பட்ட பேறுகளிலோ, தற்காலிகமான வெற்றியிலோ, மரியாதையிலோ அல்லது பெருமையிலோ, நீங்கள் பெற்றுள்ள மனதின் எல்லைக்குட்பட்ட ஆசைகளிலோ அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரை, இடத்தை அல்லது உடமைகளை விரும்புவதிலோ தங்கியுள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். உங்களின் சந்தோஷம், உங்களின் தனிப்பட்ட விருப்பங்களில் தங்கியுள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். அந்த விடயங்களில் தங்கியிருக்கும் சந்தோஷம் உண்மையான சந்தோஷம் இல்லை. அது அழியாத சந்தோஷம் இல்லை. ஆதாரம் அசைந்தால், உங்களின் சந்தோஷமும் அசையும். அந்த வகையான சந்தோஷத்தை அடைவதற்காக நீங்கள் பிராமணர்கள் ஆகவில்லை. உலகிலுள்ள மக்களும் தற்காலிகமான பேறுகளின் அடிப்படையிலேயே சந்தோஷம் அடைகிறார்கள். உண்டு, குடித்து, மகிழ்ந்திருங்கள்! என்பதே அவர்களின் சுலோகம் ஆகும். எவ்வாறாயினும், அந்தத் தற்காலிகமான ஆதாரம் முடிந்ததும், அவர்களின் சந்தோஷமும் முடிந்துவிடுகிறது. பிராமண வாழ்க்கையிலும், அந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீங்கள் சந்தோஷத்தை அனுபவித்தால், என்ன வேறுபாடு இருக்க முடியும்? நீங்கள் சந்தோஷக் கடலின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். அதனால் நீங்கள் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வொரு விநாடியும் சந்தோஷ அலைகளில் மிதப்பவர்கள். நீங்கள் சதா சந்தோஷப் பொக்கிஷங்கள். இதுவே புனிதமான, சந்தோஷமான அன்னமாக இருத்தல் எனப்படுகிறது. எந்தவிதமான எல்லைக்குட்பட்ட ஆதாரமும் இல்லாமல் சதா அக சந்தோஷத்தைக் கொண்டிருத்தலே உங்களின் இலக்கு என்பதை பாப்தாதா பார்த்தார். எவ்வாறாயினும், சில குழந்தைகள் தமது இலக்கில் இருந்து அப்பால் சென்று, அதற்குப் பதிலாக, எல்லைக்குட்பட்ட பேறுகள் என்ற சிறிய பக்க வீதிகளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். இந்த முறையில், அவர்கள் தமது இலக்கில் இருந்து அதாவது, தாம் அடைய வேண்டிய இலக்கில் இருந்து அப்பால் செல்கிறார்கள். அவர்கள் அதிவேகப் பாதையில் இருந்து விலகி, பக்க வீதிகளில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் என்ற தமது இலக்கைக் கைவிட்டு, எல்லைக்குட்பட்ட பேறுகளின் பின்னால் துரத்திச் செல்கிறார்கள். இன்று, தமது பெயர் போற்றப்பட்டால் அல்லது தமது பணி நிறைவேறினால், தமது ஆசைகள் நிறைவேறினால், அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். தாம் விரும்பிய எதையாவது அடைந்தால், அல்லது தமது எண்ணங்கள் நிறைவேறினால், அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைகிறார்கள். சிறிதளவேனும் ஏதாவது குறைந்து விட்டால், அவர்கள் அகப்பட்டு விடுகிறார்கள். அதனால் அவர்களின் இலக்கு ஒரு புறம் போய்விடுகிறது. அவர்களின் இலக்கு எல்லைக்குட்பட்டது ஆகுகிறது. அதனால் அவர்கள் எல்லையற்ற, அழியாத சந்தோஷத்தில் இருந்து அப்பால் செல்கிறார்கள். எனவே, பாப்தாதா வினவினார்: இதற்காகவா நீங்கள் பிராமணர்கள் ஆகினீர்கள்? இதற்காகவா நீங்கள் இந்த ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொண்டீர்கள்? அது ஒரு சாதாரணமான வாழ்க்கை! அதை மேன்மையான வாழ்க்கை என்று அழைக்க முடியாது.

நீங்கள் என்ன பணியைச் செய்தாலும், நீங்கள் எத்தனை பெரிய சேவையைச் செய்தாலும், அக சந்தோஷத்தையும் ஆன்மீக குதூகலத்தையும் எல்லையற்ற சந்தோஷத்தையும் அடைவதில் இருந்து உங்களைக் கீழே அழைத்து வருகின்ற எதுவும், உங்களை எல்லைக்குட்பட்டதற்குள் கொண்டுவருகின்ற எதுவும், இன்று குதூகலமும் நாளை குழப்பமும் இருக்குமாயின், இன்று சந்தோஷமும் நாளை நீங்கள் குழப்பத்திற்குள்ளும் இருந்தால், அது உங்களின் சந்தோஷத்தை இல்லாமல் செய்துவிடுமாயின், அந்தச் சேவையை அப்பால் போடுங்கள். ஆனால் உங்களின் சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள். உண்மையான சேவை, எப்போதும் உங்களுக்கு எல்லையற்ற ஸ்திதியையும் எல்லையற்ற சந்தோஷத்தையும் கொடுக்கும். இந்த அனுபவம் இல்லாவிட்டால், அந்தச் சேவை கலப்படமானது. அது உண்மையான சேவை இல்லை. எப்போதும் சேவை செய்வதன் மூலம் சுய முன்னேற்றத்தையும், சுயத்திற்கான பேறுகளையும், திருப்தியையும் மகத்துவத்தையும் அனுபவம் செய்யும் இலக்கைக் கொண்டிருங்கள். எங்கு திருப்தியின் மகத்துவம் உள்ளதோ, அங்கு அழியாத பேறுகளின் அனுபவமும் இருக்கும். சேவை என்றால் பூந்தோட்டத்தை மலரச் செய்வதாகும். சேவை என்றால், பூந்தோட்டத்தை அனுபவம் செய்வதாகும். முட்காட்டில் அகப்பட்டுக் கொள்வதல்ல. சிலருக்குப் பேறுகள் இல்லாதிருக்கலாம். குதூகலம் இல்லாதிருக்கலாம். அல்லது மனதில் குழப்பம் ஏற்படலாம். ஒரு கணம் களிப்பையும் மறுகணம் குழப்பத்தையும் அனுபவம் செய்வதென்றால் இவையே முட்கள் ஆகும். இந்த முட்களில் இருந்து அப்பால் செல்வதென்றால், எல்லையற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்தல் என்று அர்த்தம். என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் எல்லைக்குட்பட்ட பேறுகளைத் துறக்க வேண்டியிருந்தாலும், பல விடயங்களை நீங்கள் துறக்க வேண்டியிருந்தாலும், அவற்கைக் கைவிடுங்கள். ஆனால், உங்களின் சந்தோஷத்தைக் கைவிடாதீர்கள். நீங்கள் இங்கு வந்ததன் இலக்கில் இருந்து அப்பால் செல்லாதீர்கள். இந்த சூட்சுமமான சோதனையைச் செய்யுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். ஆனால், தற்காலிகமான பேறுகளின் அடிப்படையில் ஏற்படும் சந்தோஷத்தை உங்களின் சந்தோஷமாகக் கருதாதீர்கள். எந்தவொரு பக்கக் காட்சிகளையும் உங்களின் இலக்காகக் கருதுகிறீர்களா என்பதைச் சோதித்துப் பாருங்கள். ஏனெனில், பக்கக் காட்சிகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. எவ்வாறாயினும், உங்களின் இலக்கைச் சென்று சேருவதென்றால், எல்லையற்ற இராச்சியத்திற்கான உரிமையைக் கோருதல் என்று அர்த்தம். தமது இலக்கில் இருந்து அப்பால் செல்பவர்களால் உலக இராச்சியத்திற்கான உரிமையைக் கோர முடியாது. அவர்களால் அரச குடும்பத்திலும் ஒருவர் ஆகமுடியாது. ஆகவே, எப்போதும் உங்களின் குறிக்கோளையும் சென்று சேர வேண்டிய இடத்தையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். உங்களையே கேட்டுப் பாருங்கள்: தொடர்ந்து முன்னேறும்போது, நான் ஏதாவது எல்லைக்குட்பட்ட பாதைகளில் செல்கிறேனா? தற்காலிக பேறுகளின் சந்தோஷம், உங்களை அநாதியான சந்தோஷ பாக்கியத்தில் இருந்து அப்பால் நகர்த்தவில்லை, அல்லவா? நீங்கள் சிறிதளவுடன் சந்தோஷம் அடைபவர்கள் இல்லையல்லவா? நான் எங்கிருந்தாலும், நான் எவ்வாறிருந்தாலும், நான் நன்றாக இருக்கிறேன், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என நினைத்து நீங்கள் உங்களையே திருப்திப்படுத்துகிறீர்களா? அழியாத சந்தோஷத்தின் அடையாளம், நீங்கள் நிச்சயமாக சதா மற்றவர்களிடமிருந்து சந்தோஷமான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். பாப்தாதாவிடமிருந்தும் மூத்தவர்களிடமிருந்தும் வருகின்ற அன்பு ஆசீர்வாதங்கள், அகத்தே அலௌகீகமான, ஆன்மீக சந்தோஷக் கடலில் முன்னேறுகின்ற அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். கவனக்குறைவால், நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் மற்றவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது என நினைக்காதீர்கள். சூரிய ஒளியை மறைத்து வைக்க முடியுமா? சத்தியத்தின் நறுமணம் ஒருபோதும் முடிவடையாது. அதை மறைத்து வைக்கவும் முடியாது. ஆகவே, உங்களை ஒருபோதும் ஏமாற்றப்பட அனுமதிக்காதீர்கள். இந்தப் பாடத்தை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். முதலில், உங்களின் எல்லையற்ற, அழியாத சந்தோஷம். அதன்பின்னரே ஏனைய அனைத்தும். எல்லையற்ற சந்தோஷம் இயல்பாகவே நீங்கள் சேவையின் மேன்மையான பாக்கியத்தையும் அனைவரின் அன்பையும் அனைவரிடமிருந்தும் அழியாத மதிப்பையும் பெறுகின்ற பாக்கியத்தையும் அனுபவம் செய்ய வைக்கும். சதா சந்தோஷமாக இருப்பவர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் முயற்சி எதுவும் செய்யாமல், எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல், எதையும் சொல்லாமல் சகல பேறுகளையும் இலகுவாகப் பெறுவார்கள். இந்தப் பாடத்தை நீங்கள் உறுதியானது ஆக்கிவிட்டீர்களா?

நீங்கள் ஏன் வந்துள்ளீர்கள், நீங்கள் எங்கே செல்ல வேண்டும், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் எல்லைக்குட்பட்டதைத் துறந்துவிட்டு, மீண்டும் எல்லைக்குட்பட்டதற்குள் சென்றால், எப்போது நீங்கள் எல்லையற்றதை அனுபவம் செய்யப் போகிறீர்கள்? பாப்தாதா குழந்தைகளான உங்களில் அன்பு வைத்திருக்கிறார். நீங்கள் அதைக் கருணை என்று அழைக்க மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. நீங்கள் அருள்பவரினதும் பாக்கியத்தை அருள்பவரினதும் குழந்தைகள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா? இந்த வருடம், பாப்தாதா மீண்டும் மீண்டும் உங்களின் கவனத்தைப் பல்வகையான விடயங்களில் ஈர்க்கிறார். இந்த வருடம் குறிப்பாக சுயத்தில் கவனம் செலுத்துவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள மக்கள், உண்டு, குடித்து, மகிழ்ந்திருங்கள்! எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா கூறுகிறார்: உண்டு, மற்றவர்களுக்குச் சேவை செய்யுங்கள். களிப்புடன் இருந்து, மற்றவர்களையும் களிப்படையச் செய்யுங்கள். அச்சா.

சதா அழியாத, எல்லையற்ற சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கும், ஒவ்வொரு செயலிலும் சந்தோஷப் பாக்கியத்தை அனுபவம் செய்பவர்களுக்கும், எங்கும் சந்தோஷப் பொக்கிஷத்தைப் பகிர்ந்தளிப்பவர்களுக்கும், எப்போதும் சந்தோஷ நறுமணத்தைப் பரவச் செய்பவர்களுக்கும், எப்போதும் சந்தோஷத்தின் ஊக்கம், உற்சாகம் என்ற அலைகளில் அசைபவர்களுக்கும், சதா தமது பிரகாசத்தையும் போதையையும் பேணுபவர்களுக்கும், மேன்மையான இலக்கை அடையும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், உங்களை சதா புனிதமாகவும் சந்தோஷமாகவும் வைத்திருப்பதற்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1)உங்களின் குடும்பங்களுடன் வாழும்போதே, நீங்கள் எப்போதும் பற்றற்றவர்களாகவும் தந்தையிடம் அன்புடையவர்களாகவும் இருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் ஒருபோதும் உங்களின் குடும்பங்களில் பற்று வைத்திருக்கவில்லை, அல்லவா? எவரிடமாவது பற்று இருந்தால், அது உங்களின் வாழ்க்கையில் எல்லா வேளைக்கும் ஒரு தடை ஆகிவிடும். ஆகவே, சதா தடைகளில் இருந்து விடுபட்டு, தொடர்ந்து முன்னேறுங்கள். சென்ற கல்பத்தின் அங்கதன் ஆகி, ஆட்ட, அசைக்க முடியாதவர் ஆகுங்கள். அங்கதனிடம் காட்டப்படுகின்ற சிறப்பியல்பு என்ன? அவரின் புத்தியில் அவரிடமிருந்த நம்பிக்கையால் எவராலும் அவரின் பாதங்களை அசைக்க முடியவில்லை. மாயை பல வகையான வழிகளில் வருவாள். உங்களின் பாதம் போன்ற நம்பிக்கையை அசைப்பதற்கு முயற்சி செய்வாள். எவ்வாறாயினும், மாயை அசையலாம். ஆனால் உங்களின் புத்தியெனும் பாதங்கள் அசையக் கூடாது. மாயை தானாக உங்களிடம் சரணடைய வேண்டும். நீங்கள் அவளிடம் சரணடைய மாட்டீர்கள், அல்லவா? உங்களைத் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். மாயையிடம் அல்ல. இத்தகைய நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் கவலையற்றவர்களாக இருப்பார்கள். சிறிதளவேனும் கவலை இருக்குமாயின், நம்பிக்கை குறைவாக உள்ளது. சிலவேளைகளில் எதையேனும் பற்றிய சிறிதளவு கவலை இருக்குமாயின், அதற்கான காரணம், நிச்சயமாக ஏதாவதொன்றில் நம்பிக்கை குறைவாக இருப்பதே ஆகும். அது நாடகத்தில் உள்ள நம்பிக்கைக் குறைவோ, சுயத்தில் உள்ள நம்பிக்கைக் குறைவோ அல்லது தந்தையிடம் உள்ள நம்பிக்கைக் குறைவாகவோ இருக்கக்கூடும். இந்த மூன்று வகையான நம்பிக்கைகளில் ஏதாவது ஒன்றில் சிறிதளவேனும் நம்பிக்கை குறைவாக இருந்தால், உங்களால் கவலையற்றவராக இருக்க முடியாது. கவலையே மிகப்பெரிய சுகயீனம் ஆகும். கவலை என்ற நோய்க்கு மருத்துவர்களிடம் கூட எந்தவித மருந்தும் கிடையாது. உங்களைத் தற்காலிகமாக தூங்கச் செய்வதற்காக அவர்கள் நித்திரைக் குளிசைகளைக் கொடுக்கக்கூடும். ஆனால் அவர்களால் எல்லா வேளைக்கும் உங்களின் நோயைக் குணப்படுத்த முடியாது. கவலை உடையவர்கள் எந்தளவிற்கு அதிகமாக ஏதாவது பேறுகளின் பின்னால் ஓடுகிறார்களோ, அந்தளவிற்கு அந்தப் பேறுகள் அவர்களிடமிருந்து ஓடும். ஆகவே, எப்போதும் உங்களின் நம்பிக்கை என்ற பாதங்கள் அசையாமல் இருக்க வேண்டும். பாதங்கள் என்றால் எப்போதும் ஒரு வலிமையையும் ஒரு ஆதாரத்தையும் கொண்டிருப்பதாகும். நீங்கள் அதைப் பலம் அல்லது நம்பிக்கை என்று அழைத்தாலென்ன, அது ஒரே விடயமே. இத்தகைய நம்பிக்கையுள்ள புத்தியைக் கொண்டிருக்கும் குழந்தைகளின் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது.

2)நீங்கள் எப்போதும் உங்களைத் தந்தையிடம் அர்ப்பணிக்கிறீர்களா? நீங்கள் பக்தி மார்க்கத்தில் செய்த சத்தியத்தை நிறைவேற்றுபவர்கள், நீங்கள் அல்லவா? நீங்கள் என்ன சத்தியம் செய்தீர்கள்? அதாவது, நீங்கள் எப்போதும் அவரிடம் உங்களை அர்ப்பணிப்பீர்கள். அர்ப்பணித்தல் என்றால் சதா அர்ப்பணித்தவராகவும் சக்திசாலியாகவும் இருத்தல் ஆகும். எனவே, நீங்கள் உங்களை அர்ப்பணித்துள்ளீர்களா? அல்லது அர்ப்பணிக்கப் போகிறீர்களா? அர்ப்பணித்தல் என்றால் எதுவும் என்னுடையதல்ல என்று அர்த்தம். எனது என்ற உணர்வு முடிந்துவிடும். இந்த உடலும் என்னுடையதல்ல. எனவே, நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுவீர்களா? எனது என்ற உணர்வு ஏற்படும்போதே, சரீர உணர்வும் ஏற்படுகிறது. இந்த உணர்விற்கும் அப்பால் செல்லுதல் என்றால் அர்ப்பணித்தல் என்று அர்த்தம். ஆகவே, தொடர்ந்து எல்லா வேளைக்கும் எனது என்ற உணர்வை முடித்துவிடுங்கள். தொடர்ந்து அனைத்தையும் உங்களுடையது என அனுபவம் செய்யுங்கள். எந்தளவிற்கு அதிகமாக நீங்கள் அனுபவசாலி ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் அதிகார சொரூபம் ஆகுவீர்கள். இத்தகையவர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. அவர்களால் துன்ப அலைகளை அனுபவம் செய்ய முடியாது. எனவே, எப்போதும் உங்களின் அனுபவக் கதைகளை அனைவருக்கும் கூறுங்கள். ஓர் அனுபவசாலி ஆத்மா குறுகிய காலத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவார். அச்சா.

பிரியாவிடை பெறும் வேளையில், ஜனவரி 14 ஆம் திகதி (மகர சங்கிராந்தி) பட்டம் பறக்க விடும் பண்டிகைக்காக அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். மக்கள் இந்தத் தினத்தின் அர்த்தத்தை எப்போதும் உணவை உண்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாகவே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் எதையாவது உண்பார்கள். அத்துடன் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். அவர்கள் எள்ளைத் தானம் செய்வார்கள் அல்லது அதை உண்பார்கள். எள் மிகவும் சின்னஞ்சிறிய புள்ளிகள். ஏதாவது நிகழும்போது, அது மிகச் சிறியதாக இருந்தால், அது எள்ளைப் போன்றது என அவர்கள் குறிப்பிடுவார்கள். அது பெரியதாக இருந்தால், அது மலையைப் போன்றது என்கிறார்கள். ஆகவே, ஒரு மலைக்கும் எள்ளிற்கும் இடையில் பெரிய வேறுபாடு உள்ளது. முக்கியத்துவம் எள்ளுக்கே கொடுக்கப்படுகிறது. ஏனெனில் நீங்கள் மிகச்சிறிய சூட்சுமமான புள்ளிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் புள்ளி ரூபங்கள் ஆகும்போதே, பறக்கும் ஸ்திதியிலுள்ள பட்டங்களாக ஆகுகிறீர்கள். எனவே, எள்ளுக்கும் அர்த்தம் உள்ளது. இனிப்பான எதனுடனும் எப்போதும் எள் கலக்கப்படுகிறது. எள்ளைத் தனியாக உண்ண மாட்டார்கள். அவற்றை அன்புடன் ஒன்றுசேர்ப்பதன் அடையாளம் இனிமையே ஆகும். விதைகளுடன் ஏதாவது இனிப்பைக் கலந்தால் நீங்கள் அதை இரசிப்பீர்கள். எள்ளைத் தனியே உண்டால், அது கசப்பாக இருக்கும். ஆனால் இனிப்பான எதையும் அதனுடன் கலந்தால், அவை மிகவும் நன்றாக இருக்கும். எனவே, ஆத்மாக்களான நீங்களும் இனிமையுடன் ஓர் உறவுமுறைக்குள் வந்தால், உங்களுக்குள் அந்த அன்பு இருக்கும்போது, நீங்கள் மேன்மையானவர்கள் ஆகுகிறீர்கள். எனவே, இது ஒன்றுதிரட்டிய இனிமையின் ஞாபகார்த்தம் ஆகும். அதற்கு ஓர் அடையாளமும் உள்ளது. எனவே, எப்போதும் ஒன்றுகூடலின் சக்தியை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இனிமையின் அடிப்படையில், ஒரு புள்ளி ரூபமாகி, ஒரு பட்டமாகிப் பறக்கும் ஸ்திதியில் பறந்திடுங்கள். அதுதான் இந்த நாளின் அர்த்தம் ஆகும். எனவே, கொண்டாடுதல் என்றால் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் அவ்வாறு ஆகுகிறீர்கள். ஆனால் அவர்களோ வெறுமனே குறுகிய நேரத்திற்கு அதைக் கொண்டாடுகிறார்கள். இங்கு தானம் செய்தல் என்றால் உங்களிடம் என்ன பலவீனங்கள் இருக்கிறதோ அவற்றைத் தானம் செய்வதாகும். அதைச் சிறியதாகக் கருதித் தானம் செய்யுங்கள். அதை எள்ளைப் போல் கருதிக் கொடுத்துவிடுங்கள். அதைப் பெரியது எனக் கருதி, நான் அதைத் துறக்க வேண்டியுள்ளது, நான் அதைக் கொடுக்க வேண்டியுள்ளது என நினைக்காதீர்கள். இல்லை. அதை எள்ளைப் போல் சிறியதாகக் கருதித் தானம் செய்யுங்கள். அதை மிகச்சிறியதாகக் கருதி, சந்தோஷமாக அதைக் கொடுத்துவிடுங்கள். இதுவே தானம் செய்வதன் அர்த்தம் ஆகும். உங்களுக்குப் புரிகிறதா?

எப்போதும் அன்பாகவும், எப்போதும் ஒன்றுகூடலில் ஒருவராகவும் இருங்கள். அத்துடன் எப்போதும் பெரியதையும் சிறியதாகக் கருதி அதை ஒரு நெருப்பில் எரிப்பதன் மூலம் முடித்துவிடுங்கள். அதுவே அதன் அர்த்தம் ஆகும். எனவே, நீங்கள் கொண்டாடினீர்கள், இல்லையா? திடசங்கற்பமான எண்ணம் என்ற நெருப்பை எரித்தீர்கள். மக்கள் குறிப்பாக இந்தத் தினத்தில் நெருப்பை எரிப்பார்கள். எனவே, இதுவே சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கான தினம் ஆகும். அவர்கள் அதை சங்கிராந்தி என்று அழைக்கிறார்கள். நீங்கள் அதை சம்ஸ்காரங்களை மாற்றுவதற்கான தினம் என்று அழைக்கிறீர்கள். அச்சா. சதா அன்பினாலும் ஒன்றுகூடலின் சக்தியாலும் வெற்றிநிறைந்தவர்களாக இருக்கும் அனைவருக்கும் அன்பும் நினைவும் காலை வணக்கங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எப்போதும் கடவுளினதும் உங்களின் பாக்கியத்தினதும் விழிப்புணர்வுடன் இருந்து, அதிமேன்மையான, பாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், இறைவன் தனது குழந்தைகளுக்கு உயிருள்ள வடிவில் சேவை செய்கிறார். பக்தி மார்க்கத்தில், அனைவரும் கடவுளுக்குச் சேவகம் செய்கிறார்கள். ஆனால் இங்கோ, கடவுளே உயிர்வாழும் விக்கிரகங்களான உங்களுக்குச் சேவை செய்கிறார். அவர் உங்களை அமிர்த வேளையில் எழுப்பி விடுகிறார். உங்களுக்கு போக் படைக்கிறார். உங்களைத் தூங்கவும் செய்விக்கிறார். பாடலுடன் தூங்கச் செல்பவர்களும் (இரவில் பாடப்படும் பாடல்) காலையில் பாடலுடன் விழிப்பவர்களும் (அமிர்தவேளைப் பாடல்) - பிராமணர்களான நாங்கள் விசேடமாக நேசிக்கப்படுபவர்கள், அதிமேன்மையான பாக்கியசாலி ஆத்மாக்கள் - சதா இந்தப் பாக்கியத்தின் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுகிறார்கள். குறிப்பாகத் தந்தையால் நேசிக்கப்படுபவர்கள் ஆகுங்கள். மாயையால் அல்ல. மாயையால் நேசிக்கப்படுபவர்கள் அதிகளவு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள்.

சுலோகம்:
உங்களின் மலர்ச்சியான முகத்துடன் சகல பேறுகளின் அனுபவத்தைக் கொடுப்பதே உண்மையான சேவை ஆகும்.


அறிவித்தல்:
இன்று சர்வதேச யோகா தினம், மாதத்தின் மூன்றாம் ஞாயிறு. மாலை 6.30 7.30 வரை சகல சகோதரர்களும் சகோதரிகளும் இறையன்பில் திளைத்திருக்கும் அனுபவத்தைப் பெறுங்கள். எப்போதும் இந்த விழிப்புணர்வுடன் இருங்கள்: ஆத்மாவான நான், சகல பேறுகளாலும் நிறைந்துள்ளேன். நான் அதிபாக்கியசாலி ஆத்மா. அன்புக்கடலிடமிருந்து அன்புக் கதிர்கள் வெளிப்பட்டு ஆத்மாவான எனக்குள் கலக்கின்றன. அந்த அன்பு அதிர்வலைகள் சூழலில் எங்கும் பரவுகின்றன.