18.10.20    Avyakt Bapdada     Tamil Lanka Murli    07.04.86     Om Shanti     Madhuban


தபஸ்யா ரூபமாகவும் துறவறத்தின் ரூபமாகவும் பாக்கியத்தை அருள்பவராகவும் இருக்கும் ஒருவரால் மட்டுமே உலக இராச்சியத்தின் உரிமையைப் பெற முடியும்.


இன்று, ஆன்மீகத் தீச்சுடர் தனது ஆன்மீக விட்டில் பூச்சிகளைப் பார்க்கிறார். ஆன்மீக விட்டில் பூச்சிகள் அனைவரும் ஆன்மீகத் தீச்சுடருடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதற்காக எங்கும் இருந்து இங்கே வந்துள்ளார்கள். அன்பானது குழந்தைகளின் இதயத்தைக் கவர்ந்து, அவர்கள் அனைவரையும் இந்த அலௌகீக ஒன்றுகூடலுக்கு (மேளா) அழைத்து வந்திருப்பதை பாப்தாதா அறிவார். அலௌகீகக் குழந்தைகளும் தந்தையும் மட்டுமே இந்த அலௌகீக ஒன்றுகூடலை அறிவார்கள். இந்த ஒன்றுகூடலைப் பற்றி உலகிற்குத் தெரியாது. நீங்கள் ஓர் ஆன்மீக ஒன்றுகூடலுக்குச் செல்வதாக யாரிடமாவது சொன்னால், அவர் என்ன புரிந்து கொள்வார்? இந்த ஒன்றுகூடல் உங்களை எல்லா வேளைக்கும் செழிப்பானவர்கள் ஆக்குகிறது. இந்த இறை ஒன்றுகூடலே உங்களைச் சகல பேறுகளின் சொரூபம் ஆக்குகிறது. குழந்தைகள் அனைவரினதும் இதயங்களில் உள்ள ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பாப்தாதா பார்க்கிறார். ஒவ்வொருவரின் மனதிலும் அன்புக்கடலின் அலைகள் உள்ளன. பாப்தாதா இதைப் பார்க்கிறார். உங்களின் அன்பே உங்களைத் தடைகளை அழிப்பவர்களாகவும் மதுவனவாசிகளாகவும் ஆக்கியுள்ளது என்பதையும் அவர் அறிவார். அனைவரின் சகல சூழ்நிலைகளும் இந்த அன்பில் அமிழ்ந்துவிட்டன. என்றும் தயாராக இருக்கும் ஓர் ஒத்திகையை நீங்கள் செய்தீர்கள். நீங்கள் என்றும் தயார் ஆகிவிட்டீர்கள், இல்லையா? இனிமையான நாடகத்தின் இனிமையான பாகத்தைப் பார்க்கும்போது, பாப்தாதாவும் பிராமணக் குழந்தைகளும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அன்பினால், அனைத்தும் இலகுவாக உள்ளது. அத்துடன் அழகாகவும் உள்ளது. எத்தகைய நாடகம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அது ஓர் அற்புதமான நாடகமே. நீங்கள் எத்தனை தடவைகள் இங்கே ஓடோடி வந்திருக்கிறீர்கள்? நீங்கள் புகைவண்டிகளில் வந்தீர்களா அல்லது உங்களின் இறக்கைகளால் பறந்து வந்தீர்களா? எங்கு இதயம் இருக்கிறதோ, அங்கு அசாத்தியமானதும் சாத்தியம் ஆகும் என்றே இது அறியப்படுகிறது. நீங்கள் அன்பின் ரூபத்தைக் காட்டியுள்ளீர்கள். இப்போது, எதிர்காலத்தில் நீங்கள் மேலும் எதைச் செய்ய வேண்டும்? இதுவரை நிகழ்ந்தவை எவையும் மேன்மையானதே. தொடர்ந்தும் அது மேன்மையானதாகவே இருக்கும்.

இப்போது, நாடகத்திற்கேற்ப, சம்பூரணமான அன்பான, அதிமேன்மையான குழந்தைகளான உங்களிடமிருந்து பாப்தாதா குறிப்பாக எதை எதிர்பார்க்கிறார்? உண்மையில், பருவகாலம் முழுவதிலும் அவ்வப்போது பாபா இந்த சமிக்ஞையை வழங்கினார். அந்த சமிக்கைகளை நடைமுறை வடிவில் காண்பதற்கான நேரம் இப்போது வருகிறது. நீங்கள் அன்பான ஆத்மாக்கள். நீங்கள் ஒத்துழைக்கும் ஆத்மாக்கள். நீங்கள் சேவையாளர் ஆத்மாக்கள். இப்போது, மகா தபஸ்வி ஆத்மாக்கள் ஆகுங்கள். ஒன்றுதிரட்டிய முறையில் தபஸ்யா என்ற ஆன்மீகத் தீயினால் ஆத்மாக்கள் அனைவரையும் துன்பத்தில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுவிக்கும் மகத்தான பணியைச் செய்வதற்கான நேரம் இதுவே ஆகும். ஒருபுறம், காரணமில்லாமல் இரத்தம் சிந்தும் அலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மறுபுறம், ஆத்மாக்கள் அனைவரும் தங்களுக்கு ஆதாரம் இல்லாமல் இருப்பதை அனுபவம் செய்கிறார்கள். இத்தகைய வேளையில், மகாதபஸ்வி ஆத்மாக்களான நீங்கள்தான் அவர்களுக்கு முழுமையான ஆதாரத்தின் அனுபவத்தைக் கொடுப்பதற்குக் கருவிகள் ஆகுவீர்கள். இந்தத் தபஸ்வி ரூபத்தினால், நீங்கள் எங்கும் உள்ள ஆத்மாக்களை ஆன்மீக சௌகரியத்தை அனுபவம் அடையச் செய்ய வேண்டும். உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரும் இயற்கையால், சூழலால், மனித ஆத்மாக்களால், தமது சொந்த மனங்களினதும் சரீரங்களினதும் பலவீனங்களால் மனச்சஞ்சலத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். நீங்கள் இத்தகைய ஆத்மாக்களை ஒரு விநாடிக்கேனும் சந்தோஷம் மற்றும் சௌகரியத்தின் ஸ்திதியை அனுபவம் பெறச்செய்தால், அவர்கள் தமது இதயபூர்வமாக மீண்டும் மீண்டும், நன்றி எனக் கூறுவார்கள். தற்சமயம், ஒன்றுதிரட்டிய முறையில் தீவிர எரிமலை ரூபத்திற்கான (ஜ்வாலா) தேவை உள்ளது. பாக்கியத்தை அருள்பவரின் குழந்தைகளான நீங்கள், இப்போது பாக்கியத்தை அருள்பவர்களின் ரூபத்தில் ஸ்திரமாகி, தொடர்ந்து ஒவ்வொரு கணமும் கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு உணவூட்டும் எல்லையற்ற வரிசையை ஆரம்பியுங்கள். ஏனென்றால், பல இராஜரீகமான பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் என்பவர்கள் பணத்தை மட்டும் இரப்பவர்கள் இல்லை. ஏதாவதொரு முறையில் தமது மனதால் இரப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எந்தவிதப் பேறுகளும் இல்லாமல் உள்ள ஆத்மாக்கள் ஒரு துளிப் பேற்றுக்காக மிகுந்த தாகத்துடன் இருக்கிறார்கள். எனவே, இப்போது, ஒன்றுகூடலில் ஒன்றுதிரட்டிய முறையில் பாக்கியத்தை அருள்பவர்களாக இருக்கும் அலையைப் பரப்புங்கள். மாஸ்ரர் பாக்கியத்தை அருள்பவர்களான நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்து நீங்கள் சேமித்த பொக்கிஷங்களைக் கொடுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அவை தொடர்ந்து அதிகரிக்கும். நீங்கள் அதிகளவில் செவிமடுத்துவிட்டீர்கள். இப்போது இது அதைச் செய்வதற்கான நேரம் ஆகும். தபஸ்யா ரூபம் என்றால், தபஸ்யாவினூடாக, அமைதி சக்தியின் கதிர்கள் எங்கும் பரவுவதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். தனக்குள் நினைவு சொரூபமாக இருந்து, அந்த சக்தியைப் பெறுதல் அல்லது ஒரு சந்திப்பைக் கொண்டாடுதல் வேறு விடயம். எவ்வாறாயினும், தபஸ்யா ரூபம் என்பது மற்றவர்களுக்குக் கொடுக்கும் ரூபம் ஆகும். உதாரணமாக, சூரியன் ஒளியின் அனுபவத்தை உலகிற்கே கொடுக்கிறது. அத்துடன் எண்ணற்ற, அழியாத பேறுகளையும் கொடுக்கிறது. அதேபோல், உங்களின் மகத்தான தபஸ்யா ரூபத்தால், பேறுகளின் கதிர்களின் அனுபவத்தைக் கொடுங்கள். இதைச் செய்வதற்கு, நீங்கள் முதலில் உங்களின் சேமிப்புக் கணக்கை அதிகரிக்க வேண்டும். நினைவினாலும் ஞானத்தைக் கடைவதாலும் நீங்கள் உங்களை மேன்மையானவர்களாகவும் மாயையை வென்றவர்களாகவும் ஆக்கியுள்ளீர்கள் என நினைக்காதீர்கள். அதனால் மட்டும் சந்தோஷப்படாதீர்கள். நாள் முழுவதிலும், எத்தனை ஆத்மாக்களுக்கு நீங்கள் சகல பொக்கிஷங்களின் பாக்கியத்தை அருள்பவராக இருந்தீர்கள்? நீங்கள் சகல பொக்கிஷங்களையும் ஒவ்வொரு நாளும் ஒரு பணிக்காகப் பயன்படுத்துகிறீர்களா? அல்லது, நீங்கள் எதைச் சேமித்துள்ளீர்களோ, அதைப் பார்ப்பதால் மட்டும் சந்தோஷப்படுகிறீர்களா? இப்போது, நீங்கள் சந்தோஷம், அமைதி, சக்திகள், ஞானம், நற்குணங்கள், ஒத்துழைப்பு என்ற பொக்கிஷங்களில் எத்தனை பொக்கிஷங்களைப் பகிர்ந்தளித்துள்ளீர்கள் என்றும், அதனால் எவற்றை அதிகரித்தீர்கள் என்றும் பார்ப்பதற்கு ஒரு அட்டவணை வைத்திருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் வைத்திருக்கும் பொதுவான அட்டவணை இயல்பாகவே மேன்மையானதாகும். மற்றவர்களை ஈடேற்றுவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே உங்களை ஈடேற்றிக் கொள்வீர்கள். புரிகிறதா? இப்போது நீங்கள் என்ன அட்டவணை வைத்திருக்க வேண்டும்? தபஸ்யா ரூபம் ஆகும் இந்த அட்டவணை, உலக உபகாரி ஆகுவதற்கே ஆகும். எனவே, எத்தனை பேருக்கு நீங்கள் நன்மை செய்தீர்கள்? அல்லது, உங்களின் நேரம் உங்களுக்கு நன்மை செய்வதிலேயே கழிகிறதா? உங்களுக்கு நன்மை செய்வதில் அதிகளவு நேரம் கழிந்துவிட்;டது. பாக்கியத்தை அருள்பவர்கள் ஆகுவதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. இதனாலேயே, பாப்தாதா மீண்டும் ஒருமுறை உங்களுக்கு காலத்தின் சமிக்ஞையைக் கொடுக்கிறார். இப்போதும், நீங்கள் பாக்கியத்தை அருள்பவராக இருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்யாவிட்டால், உங்களால் உலக இராச்சிய அதிகாரிகள் ஆகும் பாக்கியத்தை அடைய முடியாது. இப்போது பாக்கியத்தை அருள்பவராக இருக்கும் சம்ஸ்காரம், பல பிறவிகளுக்கு நீங்கள் பேறுகளை அடைய வழிவகுக்கும். ஏனென்றால், உலகை ஆள்பவர்கள் உலகிற்கே பெற்றோர் போன்றவர்கள். அதாவது, அவர்கள் பாக்கியத்தை அருள்பவர்கள். இப்போதும், ஏதாவதொரு முறையில் எடுத்துக் கொள்ளும் சம்ஸ்காரம் உங்களிடம் இருந்தால், ஏதாவது பெயர் அல்லது கௌரவத்தைப் பெறும் சம்ஸ்காரம் இருந்தால், அது உங்களை ஒரு பாக்கியத்தை அருள்பவராக ஆக அனுமதிக்காது.

தபஸ்யா ரூபம் என்றால் எந்த வழியிலும் எடுத்துக் கொள்வதைத் துறக்கும் ரூபம் ஆகுதல் என்று அர்த்தம். எல்லைக்குட்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுதல், உங்களைத் துறவறத்தின் ரூபமாகவோ அல்லது தபஸ்யாவின் ரூபமாகவோ ஆகுவதற்கு அனுமதிக்காது. இதனாலேயே, தபஸ்யா ரூபம் என்றால், ஆசைகளின் அறிவே இல்லாதவர் என்று அர்த்தம். எடுத்துக்கொள்ள நினைப்பவர்கள், எல்லைக்குட்பட்ட காலப்பகுதிக்கு எதையாவது பெறுவார்கள். ஆனால், எல்லா வேளைக்கும் இழந்துவிடுவார்கள். இதனாலேயே, பாப்தாதா மீண்டும் மீண்டும் உங்களுக்கு இதைப் பற்றிய சமிக்ஞையைக் கொடுக்கிறார். தற்காலிகமான காலத்திற்கான இந்த ஆசைகளே நீங்கள் தபஸ்யா ரூபம் ஆகுவதற்குத் தடை ஆகுகிறது. இதனாலேயே, நீங்கள் குறிப்பாகத் தபஸ்யாவைப் பயிற்சி செய்ய வேண்டும். சமமானவர் ஆகும் இந்த அத்தாட்சியை நீங்கள் வழங்க வேண்டும். நீங்கள் அன்பின் அத்தாட்சியை வழங்கியிருப்பது சந்தோஷமான விடயம் ஆகும். இப்போது, தபஸ்யா ரூபம் ஆகும் அத்தாட்சியை வழங்குங்கள். உங்களுக்குப் புரிகிறதா? உங்களிடம் பல்வகையான சம்ஸ்காரங்கள் இருந்தாலும், பாக்கியத்தை அருள்பவரின் சம்ஸ்காரம் ஏனைய சகல சம்ஸ்காரங்களையும் அடக்கிவிடும். ஆகவே, இப்போது இந்த சம்ஸ்காரம் வெளிப்பட வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் மதுவனத்திற்கு ஓடோடி வந்திருப்பதைப் போல், தபஸ்வி ஸ்திதி என்ற இலக்கை நோக்கி ஓடுங்கள். அச்சா. நல்வரவுகள்! இப்போது விநாசம் இடம்பெறப் போவதைப் போல் அனைவரும் இங்கே ஓடி வந்துள்ளீர்கள். நீங்கள் எதைச் செய்துள்ளீர்களோ, என்ன நிகழ்ந்ததோ, பாப்தாதா அதை விரும்புகிறார். ஏனென்றால், அவர் குழந்தைகளான உங்களை நேசிக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் இங்கே இப்போது வரப்போகிறீர்கள் என நினைத்தீர்கள். ஆனால், மற்றவர்களும் வரப்போகிறார்கள் என நீங்கள் நினைக்கவில்லை. எனவே, உண்மையான கும்பமேளா (ஒன்றுகூடல்) இங்கு இடம்பெறுகிறது. நீங்கள் அனைவரும் இறுதிச் சந்திப்பைக் கொண்டாடுவதற்காக, இறுதியாக மூழ்கியெழுவதற்காக வந்துள்ளீர்கள். (பருவகாலத்தின் இறுதி முறை) பலர் இங்கே வரவிருப்பதால், சந்திப்பு என்ன ரூபத்தில் நிகழும் என நீங்கள் நினைத்தீர்களா? நீங்கள் முற்றிலும் அந்த விழிப்புணர்விற்கு அப்பாலேயே இருந்தீர்கள். நீங்கள் இடத்தைப் பற்றியும் நினைக்கவில்லை. முன்பதிவு செய்வதையும் கருத்தில் கொள்ளவில்லை. இனி உங்களுக்கு முன்பதிவு கிடைக்கவில்லை என ஒருபோதும் உங்களால் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. இதுவும் நாடகத்தில் ஒரு ஒத்திகையே. சங்கமயுகத்தில் இது உங்களின் இராச்சியம் இல்லை. உங்களிடம் சுய இராச்சியம் உள்ளது. ஆனால் இந்தப் பூமி உங்களின் இராச்சியம் இல்லை. பாப்தாதாவிற்கும் தனக்கென்று ஓர் இரதம் கிடையாது. இது அன்னிய இராச்சியம். இது அன்னிய சரீரம். ஆகவே, இது காலத்திற்கேற்ப, ஒரு புது வழிமுறையை ஆரம்பிப்பதற்கான பருவகாலம் ஆகியுள்ளது. இங்கு, நீங்கள் நீரைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் அங்கே, நீங்கள் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பீர்கள். யார் வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும், உங்களின் அன்பிற்குப் பிரதிபலனாக அன்புடன் பாப்தாதா உங்களை வரவேற்கிறார்.

உங்களுக்கு இப்போது குறிப்பாக, இறுதிப் பரீட்சைகளுக்கான முதலாவது ஆயத்தத்தைச் செய்வதற்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் பரீட்சைக்கு முன்னர் உங்களுக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடசாலையில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும். எனவே, பாப்தாதாவும் இந்த விசேடமான நேரத்தை வழங்குகிறார். இது பல விடயங்களின் முக்கியத்துவம் நிறைந்தது. சில விடயங்களின் முக்கியத்துவம் மறைமுகமானது. ஆனால் ஏனைய விடயங்களின் முக்கியத்துவம் புலப்படும். எவ்வாறாயினும், நீங்கள் ஒவ்வொருவரும் சதா முற்றுப்புள்ளி இடுவதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அதாவது, கடந்ததைக் கடந்ததாக விட்டுவிட வேண்டும். புள்ளியெனும் ஸ்திதியில் ஸ்திரமாகுவதுடன், சுய அதிபதியாகி உங்களின் பணியைச் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு கடலாகி, சகலருக்கும் பாக்கியத்தை அருள்பவராகி, அனைவரையும் நிரம்பச் செய்ய வேண்டும். ஆகவே, குறிப்பாக இந்த இரண்டு விடயங்களை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள்: கடல் (சிந்து) ஆகுதல், ஒரு புள்ளி (பிந்து) ஆகுதல். மேன்மையான சான்றிதழைப் பெறுதல். எப்போதும் மேன்மையான எண்ணங்களின் வெற்றியுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். எனவே, குழந்தைகள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை அருள்பவரின் ஆசீர்வாதமானது, சதா ஒரு புள்ளியாகவும் கடலாகவும் ஆகுங்கள் என்பதே ஆகும். நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கே இங்கு ஓடோடி வந்தீர்கள், இல்லையா? எப்போதும் ஆசீர்வாதங்களை அருள்பவரின் இந்த ஆசீர்வாதத்தை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள். அச்சா.

எங்கும் உள்ள அன்பான குழந்தைகள் அனைவருக்கும், ஒத்துழைக்கும் குழந்தைகளுக்கும், தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் கீழ்ப்படிவான குழந்தைகளுக்கும், பெருந்தன்மையான இதயத்துடன் பெரிய இதயங்களைக் கொண்டிருந்து, சகல பொக்கிஷங்களையும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பவர்களுக்கும், மகத்தான புண்ணியாத்மாக்களுக்கும், சதா தந்தையைப் போல் ஆகும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் பறக்கும் ஸ்திதியில் சதா பறந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், பாக்கியத்தை அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவரும் சகல பொக்கிஷங்களின் கடலுமான பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்.

1. நீங்கள் எப்போதும் உங்களைப் பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகளாகக் கருதுகிறீர்களா? அருள்பவரான தந்தை அதிகளவில் வழங்குகிறார். அதனால் நீங்கள் ஒரு பிறவிக்கு மட்டும் பாக்கியசாலி ஆகுவதில்லை. ஆனால், இந்த அழியாத பாக்கியம் பல பிறவிகளுக்குத் தொடரும். உங்களின் கனவுகளிலேனும் நீங்கள் இத்தகைய அழியாத பாக்கியத்தைப் பற்றி நினைத்தீர்களா? அது அசாத்தியம் என்றே நீங்கள் நினைத்தீர்கள், இல்லையா? எவ்வாறாயினும், இன்று, இது சாத்தியம் ஆகியுள்ளது. எனவே, நீங்கள் இத்தகைய மேன்மையான ஆத்மாக்கள் என்ற சந்தோஷம் உங்களுக்கிருக்கிறதா? குறிப்பிட்ட சூழ்நிலைகளால் சிலவேளைகளில் உங்களின் சந்தோஷம் மறைந்துவிடுவதில்லை, அல்லவா? நீங்கள் ஒவ்வொரு நாளும் தந்தையிடமிருந்து சந்தோஷப் பொக்கிஷத்தைப் பெறுகிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் எதைப் பெறுகிறீர்களோ, அது அதிகரிக்கிறதல்லவா? உங்களின் சந்தோஷம் ஒருபோதும் குறைய முடியாது. ஏனென்றால், நீங்கள் தொடர்ந்து சந்தோஷக் கடலிடமிருந்தே பெறுகிறீர்கள். இது என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் ஒருபோதும் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எனது சொத்துக்கு என்ன நிகழும்? எனது குடும்பத்திற்கு என்ன நிகழும்? உங்களுக்கு இந்தக் கவலைகூட இல்லை. நீங்கள் கவலையற்றவர்கள்! பழைய உலகிற்கு என்ன நிகழும்? ஆமாம், மாற்றம் ஏற்படும். பழைய உலகில் நீங்கள் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும், அனைத்தும் பழையதே. எனவே நீங்கள் கவலையற்றவர்கள் ஆகவேண்டும். இன்று, நான் இங்கே இருக்கிறேன். ஆனால் நாளை நான் இங்கே இருப்பேனா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்கு இந்தக் கவலைகூட இல்லை. என்ன நிகழ்ந்தாலும், அது நல்லதாகவே இருக்கும். பிராமணர்களுக்கு, அனைத்தும் நல்லதே. எதுவும் தீங்கானது இல்லை. நீங்கள் முன்னர் சக்கரவர்த்திகளாக இருந்தீர்கள். இப்போது சக்கரவர்;த்திகளாக இருக்கிறீர்கள். எதிர்காலத்திலும் சக்கரவர்த்திகளாக இருப்பீர்கள். நீங்கள் எல்லா வேளைக்கும் சக்கரவர்த்திகளாக இருப்பதனால், கவலையற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். எவரும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாதவாறு நீங்கள் இராச்சிய அதிகாரிகள் ஆகியுள்ளீர்கள். உங்களின் இராச்சியத்தை எவராலும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிட முடியாது. எல்லா வேளைக்கும் இந்த சந்தோஷத்துடன் இருங்கள். தொடர்ந்து மற்றவர்களுக்கும் இதைக் கொடுங்கள். மற்றவர்களையும் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆக்குங்கள். அச்சா.

2. நீங்கள் எப்போதும் தந்தையின் நினைவெனும் பாதுகாப்புக் கவசத்தின் கீழ் இருக்கும் மேன்மையான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? இந்த நினைவெனும் பாதுகாப்புக் குடை உங்களைச் சகல தடைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. எந்த வகையான தடையும் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்களிடம் வரமுடியாது. பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்களுக்கு வெற்றிக்கான உத்தரவாதம் உள்ளது. எனவே, நீங்கள் அவ்வாறானவர் ஆகிவிட்டீர்களா? உங்களின் மனமெனும் பாதங்களையேனும் நீங்கள் பாதுகாப்புக் குடையின் கீழிருந்து அகற்றிவிட்டால், மாயை உங்களைத் தாக்கிவிடுவாள். என்ன வகையான சூழ்நிலை வந்தாலும், பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பவர்களுக்கு சகல மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளும் இலகுவாகிவிடும். மலையைப் போன்ற பெரியதொன்றும் பஞ்சு போல் அனுபவம் செய்யப்படும். இதுவே பாதுகாப்புக் குடையின் அற்புதம் ஆகும். இத்தகைய பாதுகாப்புக் குடையைப் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏதாவதொன்றில் தற்காலிகமாகக் கவர்ச்சி ஏற்பட்டாலும், நீங்கள் பாதுகாப்புக் குடையின் கீழிருந்து வெளியே வந்தால், அனைத்தையும் இழந்துவிடுவீர்கள். ஆகவே, இப்போது நீங்கள் தற்காலிகக் கவர்ச்சிகளைப் பற்றி அறிந்திருப்பதனால், எப்போதும் அந்தக் கவர்ச்சிகளில் இருந்து தொலைவிலேயே இருங்கள்;. எல்லைக்குட்பட்ட பேறுகள் இந்த ஒரு பிறவியில் முடிந்துவிடும். ஆனால் எல்லையற்ற பேறுகள் சதா உங்களுடன் இருக்கும். எனவே, எல்லையற்ற பேறுகளைக் கொண்டிருப்பவர்கள் ஆகுவதென்றால் பாதுகாப்புக் குடையின் கீழிருக்கும் விசேடமான ஆத்மாக்கள் என்று அர்த்தம். சாதாரணமானவர்கள் அல்ல. இந்த விழிப்புணர்வானது உங்களை எல்லா வேளைக்கும் சக்திசாலிகள் ஆக்கும்.

நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்ட, விசேடமான அன்பிற்குரியவர்கள் பாதுகாப்புக் குடையின் கீழ் எப்போதும் இருப்பார்கள். நினைவு என்பது பாதுகாப்புக் குடை ஆகும். உங்களின் மனமெனும் பாதங்களையேனும் இந்தப் பாதுகாப்புக் குடைக்கு வெளியே வைத்தால், மாயை வந்துவிடுவாள். இந்தப் பாதுகாப்புக் குடை உங்களுக்கு முன்னால் மாயை வருவதற்கு அனுமதிக்காது. பாதுகாப்புக் குடையின் கீழே வருவதற்கு மாயைக்கு சக்தி இருக்காது. இத்தகைய ஆத்மாக்கள் சதா மாயையை வென்றவர்களாக இருப்பார்கள். ஒரு குழந்தையாக இருத்தல் என்றால் பாதுகாப்புக் குடையின் கீழ் இருத்தல் என்று அர்த்தம். தந்தையின் அன்பே சதா குழந்தைகளான உங்களைப் பாதுகாப்புக் குடையின் கீழ் வைத்திருக்கும். எனவே, இந்த விசேடமான ஆசீர்வாதத்தை நினைவு செய்யுங்கள்: நீங்கள் விசேடமான அன்பிற்குரியவர்கள் ஆகியுள்ளீர்கள். ஏனென்றால், நீங்கள் பாதுகாப்புக் குடையைப் பெற்றுள்ளீர்கள். இந்த ஆசீர்வாதம் உங்களைச் சதா முன்னேறச் செய்யும்.

விடைபெறும் வேளையில்:

நீங்கள் அனைவரும் ஜாக்ரன் செய்தீர்கள் (விரதத்தில் ஒரு விடயம், இரவு முழுவதும் விழித்திருத்தல்)! உங்களின் பக்தர்கள் ஜாக்ரன் செய்கிறார்கள். எனவே, அவர்களின் இஷ்ட தெய்வங்களான நீங்களே அவர்களுக்குக் கற்பிப்பவர்கள். இங்கே இஷ்ட தெய்வங்கள் ஜாக்ரன் செய்வதாலேயே, அதைப் பக்தர்கள் பிரதி செய்கிறார்கள். எனவே, நீங்கள் அனைவரும் ஜாக்ரன் செய்தீர்கள். அதாவது, நீங்கள் உங்களின் சேமிப்புக் கணக்கில் சேமித்தீர்கள். எனவே, இன்றிரவு சம்பாதிப்பதற்கான பருவகாலத்திற்கான இரவு ஆகும். சம்பாதிப்பதற்கான பருவகாலம் வரும்போது, நீங்கள் அந்தப் பருவகாலத்தில் விழித்திருப்பீர்கள். எனவே, இதுவே சம்பாதிப்பதற்கான பருவகாலம் ஆகும். எனவே, விழித்திருத்தல் என்றால் சம்பாதித்தல் என்று அர்த்தம். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் கொள்ளளவிற்கேற்ப சேமித்துள்ளீர்கள். நீங்கள் எவற்றைச் சேமித்துள்ளீர்களோ, அவற்றின் மூலம் மகாதானியாகித் தொடர்ந்து மற்றவர்களுக்கும் தானம் செய்யுங்கள். அதன்பின்னர், நீங்களும் தொடர்ந்து அதிலிருந்து பல பிறவிகளுக்கு உண்பீர்கள். இப்போது, இறை மேளாவில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் பொன்னான காலைவணக்கம் என பாபா கூறுகிறார். உண்மையில், பொன்னான காலைப்பொழுதில் இருந்து இது வைரமான காலைப்பொழுது ஆகியுள்ளது. நீங்களும் வைரங்களே. காலையும் வைரமாக உள்ளது. நீங்கள் வைரங்களைச் சேமிக்கிறீர்கள். எனவே, அனைத்தும் வைரங்கள், வைரங்களே. இதனாலேயே பாபா வைரமான காலைவணக்கம் எனக் கூறுகிறார். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மேன்மையான சேவையாளராகி, உங்களின் எண்ணங்களையும் சோதிப்பதன் மூலம் எந்தவொரு வீணானவற்றின் கணக்கையும் முடிப்பீர்களாக.

மேன்மையான சேவையாளர் என்பவரின் ஒவ்வோர் எண்ணமும் சக்திவாய்ந்தது. ஓர் எண்ணமேனும் வீணானதாக இருக்கக்கூடாது. ஏனென்றால் ஒரு சேவையாளர் என்றால் உலக மேடையில் நடிப்பவர் என்று அர்த்தம். இந்த முழு உலகமே உங்களைப் பிரதி செய்கிறது. நீங்கள் ஓர் எண்ணத்தையேனும் வீணாக்கினால், நீங்கள் அதை உங்களுக்காக மட்டும் வீணாக்கவில்லை. ஆனால் நீங்கள் ஏனைய பலருக்காகவும் கருவிகள் ஆகுகிறீர்கள். ஆகவே, இப்போது வீணானவற்றின் கணக்கை முடித்து, ஒரு மேன்மையான சேவையாளர் ஆகுங்கள்.

சுலோகம்:
சேவைக்கான சூழலுடன் கூடவே, எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவத்தின் சூழலையும் உருவாக்குங்கள்.


அறிவித்தல்: இன்று, இது மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை ஆகும். சகல இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை விசேடமான யோகம் செய்யுங்கள். உங்களை மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற சக்திநிறைந்த ரூபத்தில் ஸ்திரமாக்கி, ஆத்மாக்கள் அனைவருக்கும் சடப்பொருளுக்கும் தூய்மைக்கதிர்களை வழங்குங்கள். அனைவரையும், அனைத்தையும் சதோபிரதான் ஆக்கும் சேவையைச் செய்யுங்கள்.