19.02.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது இந்த இடுகாட்டைத் தேவதைகளின் பூமியாக மாற்றுகிறீர்கள். ஆதலால் நீங்கள் இடுகாடாக உள்ள இப்பழைய உலகின் மீது முழுமையான விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும்.

கேள்வி:
எவ்வாறு எல்லையற்ற தந்தை அவரது ஆன்மீகக் குழந்தைகளின் அற்புதமான சேவகராக இருக்கிறார்?

பதில்:
பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நான் உங்கள் சலவைத் தொழிலாளி. நான் குழந்தைகளாகிய உங்களது சகல அழுக்கான ஆடைகளை மட்டுமன்றி முழு உலகத்தினரதும் அழுக்கான ஆடைகளையும் ஒரு விநாடியில் சலவை செய்கிறேன். ஆத்மாக்களின் ஆடைகள் சுத்தமானவை ஆகும் பொழுது, நீங்கள் ஒரு தூய சரீரத்தைப் பெறுகிறீர்கள். மன்மனாபவ என்னும் மகிமை வாய்ந்த மந்திரத்தினால் அவர் ஒரு விநாடியிலேயே ஒவ்வொருவரையும் தூய்மையாக்குகின்ற ஓர் அற்புதமான சேவையாளராவார்.

ஓம் சாந்தி.
ஓம் சாந்தி என்பதன் அர்த்தத்தைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். அமைதியே ஆத்மாவாகிய எனது ஆதி தர்மம். சாந்தி தாமத்திற்குச் செல்வதற்கு நீங்கள் முயற்சி செய்யத் தேவையில்லை. ஆத்மா தானே அமைதி சொரூபமாக, சாந்திதாம வாசியாக இருக்கிறார். ஆம், ஆத்மாவினால் குறிப்பிட்ட நேரத்திற்கு அமைதியாக இருக்க முடியும். ஆத்மா கூறுகிறார்: பௌதீகப் புலன்களின் சுமையினால் நான் களைப்படைந்து விட்டேன். நான் இப்பொழுது என்னை எனது ஆதி தர்மத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறேன் நான் எனது சரீரத்தில் இருந்து பற்றற்றவன் ஆகுகின்றேன். எப்படியாயினும் செயல்களைச் செய்யவே வேண்டும். எவ்வளவு நேரத்திற்கு உங்களால் அமைதியுடன் அமர்ந்திருக்க முடியும்? ஆத்மா கூறுகிறார்: நான் சாந்திதாம வாசி ஆவேன். இங்கே இச்சரீரத்தினுள் வந்ததால், நான் 'பேசுபவன்" ஆகிவிட்டேன். ஆத்மாவாகிய நான் அழிவற்றவன். எனது சரீரம் அழியக்கூடியது. ஆத்மாக்களே தூய்மையானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகுகின்றனர். சத்தியயுகத்தில் பஞ்ச தத்துவங்களும் கூட சதோபிரதானாகவே இருக்கின்றன. இங்கோ பஞ்ச தத்துவங்கள் தமோபிரதானாக இருக்கின்றன. தங்கம் கலப்படம் செய்யப்படும் பொழுது, அத் தங்கம் தூய்மையற்றதாகுகிறது. பின்னர் அது தூய்மையாக்கப்படுவதற்காக நெருப்பில் இடப்படுகிறது. இதுவே யோக அக்கினி என அழைக்கப்படுகிறது. வெளி உலகில் மக்கள் பலவிதமான ஹத்த யோகத்தைக் கற்பிக்கிறார்கள். அவற்றை யோக அக்கினி என அழைக்க முடியாது. இதுவே யோக அக்கினி. இதன் மூலமே பாவங்கள் எரிக்கப்படுகின்றன. பரமாத்மாவே ஆத்மாக்களைத் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகிறார். மக்கள் கூவி அழைக்கிறார்கள்: ஓ! தூய்மையாக்குபவரே வாருங்கள்! நாடகத்திட்டப்படி ஒவ்வொருவரும் தூய்மையற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆகவே வேண்டும். இது விருட்சம். இதனது விதை மேலே உள்ளது. எவராவது தந்தையைக் கூவி அழைக்கும் போது, அவரது புத்தி மேல் நோக்கிச் செல்கிறது. அவரிடமிருந்தே நீங்கள் உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அவர் இப்பொழுது இங்கே இறங்கி வந்துள்ளார். அவர் கூறுகிறார்: நான் இங்கே வரவேவேண்டும். பல்வேறு சமயங்களின் மனித விருட்சம் இப்பொழுது தூய்மையற்றதாகவும், தமோபிரதானாகவும் உள்ளது. அது முற்றிலும் உருக்குலைந்த நிலையை அடைந்து விட்டது. தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். சத்திய யுகத்தில் தேவர்களும், கலியுகத்தில் அசுரர்களும் இருக்கிறார்கள். ஆதலால் ஒருபொழுதும் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே யுத்தம் இடம்பெறவில்லை. நீங்கள் இ;ப்பொழுது யோக சக்தியினால் ஐந்து அசுர விகாரங்களையும் வெற்றி கொள்கிறீர்கள். வன்முறை நிறைந்த யுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை. நீங்கள் எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. நீங்கள் ஒருபோதுமே எவரையும் பௌதீகமாக அடிப்பதில்லை. நீங்கள் இரட்டை அகிம்சாவாதிகள். காம வாளைப் பயன்படுத்துவதே மிகக் கொடிய பாவமாகும். தந்தை கூறுகிறார்: காம வாளே ஆரம்பம் முதல், மத்தியினூடாக இறுதி வரை துன்பத்தைக் கொடுக்கிறது. எவருமே விகாரத்தில் ஈடுபடக் கூடாது. 'நீங்கள் சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்....." என மக்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் நின்று புகழ் பாடுகிறார்கள். 'நான் தூய்மையற்றவன் ஆகிவிட்டேன்" என ஆத்மாக்கள் கூறுகிறார்கள். இதனாலேயே அவர்கள் 'ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!" என அவர்கள் கூவி அழைக்கிறார்கள்! ஆத்மாக்கள் தூய்மையாக இருக்கும் பொழுது அவர்கள் எவரையும் கூவி அழைப்பதில்லை. அது சுவர்க்கமென அழைக்கப்படுகிறது. இங்கே சாதுக்களும், புனிதர்களும் 'ஓ சீதைக்கு உரியவரான, தூய்மையாக்குபவராகிய இராமரே!" எனக் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: இந்த நேரத்தில் முழு உலகமுமே தூய்மையற்று உள்ளது. இதற்காக எவரையும் குற்றம் சுமத்த முடியாது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நான் வரும்வரை, ஒவ்வொருவரும் அவரவருக்குரிய பாகத்தை நடிக்கவே வேண்டும். ஞானம், பக்தி, பின்னர் விருப்பமின்மை; பழைய உலகிலும் விருப்பமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆர்வமின்மை எல்லையற்றது. அவர்களுடைய ஆர்வமின்மையோ எல்லைக்குட்பட்டது. இப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். புதிய வீடு ஒன்று கட்டப்படும் பொழுது, பழைய வீட்டில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குக் கொடுப்பதற்காகச் சுவர்க்கம் எனும் வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது இது நரகமாகும். சுவர்க்கமே புதிய உலகமாகும். நரகம் பழைய உலகமாகும். நாங்கள் இப்பொழுது இப்பழைய உலகில் இருக்கும் பொழுதே புதிய உலகை உருவாக்குகிறோம். நாங்கள் இப்பழைய இடுகாட்டில், தேவதைகளின் பூமியை உருவாக்குவோம். அங்கேயும் இதே யமுனை நதிக்கரையில் மாளிகைகள் கட்டப்படும். அங்கே இதே டெல்கியும், யமுனை நதியும் இருக்கும். எவ்வாறாயினும், பாண்டவர்களின் பாதுகாப்புக் கோட்டை இருந்தது என மக்கள் கூறுவது வெறும் கட்டுக் கதையாகும். நாடகத்திட்டப்படி நிச்சயமாகவே இவை மீண்டும் கட்டப்படும். நீங்கள் செய்து வந்த தபஸ்யா, யாகங்களை வளர்த்தல், தானம் கொடுத்தல் போன்றவற்றையும் நீங்கள் அதேபோல் மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும். நீங்கள் முதலில் சிவனை வழிபடுகிறீர்கள். அவருக்கு நீங்கள் முதல் தரமான ஆலயங்களைக் கட்டினீர்கள். அது கலப்படமற்ற வழிபாடு எனப்பட்டது. நீங்கள் இப்பொழுது ஞானப்பாதையில் உள்ளீர்கள். இது கலப்படமற்ற ஞானம். முதலில் வழிபாடு செய்யப்பட்ட சிவபாபாவிடமிருந்தே நீங்கள் இப்பொழுது இதனைச் செவிமடுக்கிறீர்கள். அந்த நேரத்தில் (சத்தியயுகத்தில்) வேறு சமயங்கள் இருக்கவில்லை. நீங்கள் மட்டுமே அப்பொழுது இருந்தீர்கள். நீங்கள் பெரும் சந்தோஷத்தோடு இருந்தீர்கள். தேவ தர்மமே பெரும் சந்தோஷத்தைத் தருகின்ற தர்மமாகும். அப்பெயரைக் கேட்டதுமே உங்கள் வாய்கள் இனிக்கின்றன. தந்தை ஒருவரிடமிருந்தே நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: வேறு எவரையும் செவிமடுக்க வேண்டாம். இதுவே உங்களது கலப்படமற்ற ஞானமாகும். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்கு உரியவர். நீங்கள் செய்யும் முயற்சிக்கு ஏற்ப உங்கள் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து வரிசைக்கிரமமாகப் பெறுவீர்கள். ஒரு குறுகிய காலத்திற்குத் தந்தை இப்பௌதீக உலகிற்கு வந்துள்ளார். அவர் கூறுகிறார்: நான் மாத்திரமே இந்த ஞானத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தர வேண்டும். எனக்கென நிரந்தரமாக ஒரு சரீரம் இல்லை. நான் இவரது சரீரத்தினுள் பிரவேசிக்கின்றேன். சிவஜெயந்தியைத் தொடர்ந்து உடனடியாகவே கீதை ஜெயந்தி தொடர்கின்றது. ஞானம் பின்னர் அதிலிருந்து ஆரம்பமாகுகிறது. பரமாத்மா இந்த ஆன்மிக ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். இதில் தண்ணீரைப் பற்றிய பேச்சிற்கே இடமில்லை. தண்ணீரை ஞானம் என அழைக்க முடியாது. நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாக, நீரினால் அன்றி, ஞானத்தினாலேயே ஆகுகின்றீர்கள். உலகம் முழுவதும் நதிகள் உள்ளன. ஞானக்கடலான தந்தை இங்கே இவரில் வந்து ஞானத்தை உபதேசிக்கிறார். ஒருவர் இறக்கும் பொழுது கங்கை நீரை அவரது வாயினுள் இடுகின்றனர். அத்தண்ணீர் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றது எனவும், அவர் அதனால் சுவர்க்கம் செல்வார் எனவும் அவர்கள் நம்புகிறார்கள். இங்கும் மக்கள் 'கௌமுக்"கை (பசுவின் வாய்) நாடிச் செல்கிறார்கள். உண்மையில் நீங்களே உயிருள்ள 'கௌமுக்". ஞான அமிர்தம் உங்கள் வாயிலிருந்து வெளிவருகிறது. பசுவிடமிருந்து பாலே பெறப்படுகிறது. எனவே நீPர் போன்றவற்றின் பேச்சிற்கே இடமில்லை. நீங்கள் இதனை இந்நேரத்தில் புரிந்து கொள்கிறீர்கள். நாடகத்தில் ஏதேனும் ஒருமுறை நடந்துவிட்டால், அது அவ்வாறே ஐயாயிரம் வருடங்களிற்குப் பின்னர் மீண்டும் நடைபெறும் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்பவரான தந்தை இங்கு அமர்ந்திருந்து உங்களுக்கு இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது அனைவருமே சீரழிந்த நிலையில் உள்ளனர். மக்கள் ஏன் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள் என்பதை முன்னர் நீங்கள் விளங்கி இருக்கவில்லை. இப்பொழுது எல்லையற்ற 'தசேரா" வரப்போகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இராவண இராச்சியம் முழு உலகிலும் உள்ளது. முழு உலகமுமே இலங்கையாகும். இராவணன் ஓர் எல்லைக்குட்பட்ட இடத்தில் மட்டும் வசிப்பதில்லை. இராவண இராச்சியம் முழு உலகிலுமே இருக்கிறது. பக்தி அரைக்கல்பத்திற்கு நீடிக்கிறது. முதலில் கலப்படமற்ற பக்தி உள்ளது. பின்னர் கலப்படமான பக்தி ஆரம்பிக்கிறது. தசேரா, ரக்ஷபந்தன் முதலிய பண்டிகைகள் இக்காலத்தையே குறிக்கின்றன. சிவஜயந்தியைத் தொடர்ந்து கிருஷ்ண ஜயந்தி வருகிறது. கிருஷ்ணனின் பூமி இப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இன்று நீங்கள் கம்ச பூமியில் இருக்கிறீர்கள். நாளைய தினம் நீங்கள் கிருஷ்ண பூமியில் இருப்பீர்கள். இப்பொழுது (இந்த நேரத்;தில்) கிருஷ்ணர் இங்கு இருக்க முடியாது. கிருஷ்ணர் சத்திய யுகத்திலேயே பிறப்பெடுக்கிறார். அவரே முதலாவது இளவரசர். அவர் பாடசாலை சென்று கற்கிறார். பின்னர் அவர் பெரியவர் ஆகும் பொழுது இராச்சியத்தின் வாரிசு ஆகுகிறார். கோபி, கோபிகைகளுடனான நடனமும் தங்களிடையே அவர்கள் சந்தோஷத்தைக் கொண்டாடுவதையே குறிக்கிறது. கிருஷ்ணர் எவருக்கேனும் ஞானத்தை உபதேசிப்பது என்பது எவ்வாறு சாத்தியப்படும்? அப்புகழ் அனைத்தும் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்ற சிவபாபாவிற்கே உரியன. இதை நீங்கள் சிரேஷ்ட உத்தியோகர்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது அவர்கள் நீங்கள் கூறுவது சரியே எனக் கூறுகிறார்கள். எவ்வாறாயினும் அவர்களால் இந்த ஞானத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது. எவருமே அவர்களைச் செவிமடுக்க மாட்டார்கள். அவர் மீது மந்திர சக்தி பிரயோகிக்கப்பட்டதால் அவர் ஒரு பிரம்ம குமார் ஆகிவிட்டார் என்றே அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பிரம்ம குமாரிகளின் பெயரைக் கேள்விப்படுகிறார்கள். அவ்வளவு தான்! நீங்கள் மந்திர சக்தியைப் பயன்படுத்துகிறீர்கள் என அவர்கள் நம்புகிறார்கள். நீங்கள் எவருக்கேனும் சிறிதளவு ஞானத்தைக் கூறும் பொழுது பிரம்ம குமாரிகளான நீங்கள் மந்திர சக்தியைப் பயன்படுத்துகிறீர்கள் என அவர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் நீங்கள் (பிரம்ம குமாரிகள்) தாதாவைத் தவிர வேறு எவரையும் செவிமடுப்பதில்லை, நீங்கள் பக்தி முதலிய எதனையும் செய்வதில்லை. பக்தி செய்பவர்களைத் தடுக்கக் கூடாது என பாபா உங்களுக்குக் கூறுகிறார். அவர்கள் பக்தி செய்வதைத் தாமாகவே நிறுத்துவார்கள். நீங்கள் பக்தி செய்வதை நிறுத்தி, விகாரங்களைத் துறக்கும் பொழுதே குழப்பம் விளைவிக்கப்படுகிறது. தானே உருத்திர ஞான யாகத்தை வளர்ப்பதாகவும், இதற்கே அசுர சமுதாயம் தடைகளை ஏற்படுத்துகிறது எனவும் பாபா கூறுகிறார். இதுவே மனிதர்கள் தேவர்களாக மாறும் சிவபாபாவின் எல்லையற்ற யாகம். ஞான யாகத்தில் இருந்து விநாசத் தீப்பிளம்புகள் எழுந்தன என நினைவு கூரப்படுகிறது. பழைய உலகம் அழிக்கப்படும் பொழுது மட்டுமே, நீங்கள் புதிய உலகை ஆட்சி செய்வீர்கள். 'நாங்களோ அமைதியை வேண்டி நிற்கிறோம். இந்த பிரம்ம குமாரிகளோ விநாசத்தை வேண்டி நிற்கிறார்கள்!" என மக்கள் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பழைய உலகம் முழுவதுமே ஞான யாகத்தில் அர்ப்பணிக்கப்பட உள்ளது. இப்பழைய உலகம் எரிக்கப்பட உள்ளது. இயற்கை அனர்த்தங்களும் ஏற்படும். விநாசம் நிகழவே வேண்டும். மனிதர்கள் அனைவரும் கடுகு விதைகளைப் போல நொருக்கப்பட்டு, அழிக்கப்படுவார்கள். ஆத்மாக்களே எஞ்சியிருப்பார்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள் என்பதை எவருமே புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது எல்லையற்ற 'ஹோலிகா" (பெரும் நெருப்பு) எழ உள்ளது. அதில் சரீரங்கள் அனைத்தும் அழிக்கப்பட, ஆத்மாக்கள் தூய்மையாகி வீடு திரும்புவார்கள். நெருப்பில் இடப்படும் எதுவுமே தூய்மையாகுகின்றது. மக்கள் தூய்மை ஆகுவதற்காக, யாகங்களை நடாத்துகிறார்கள். அவை யாவும் பௌதீக விடயங்கள். இப்பொழுது முழு உலகமும் அர்ப்பணிக்கப்பட உள்ளது. விநாசம் நிகழ முன்னரே ஸ்தாபனை நிச்சயமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நீங்கள் ஒருவருக்கு விளங்கப்படுத்தும் போதெல்லாம் முதலில், ஸ்தாபனையைப் பற்றியும், பின்னர் விநாசத்தைப் பற்றியும் விளங்கப்படுத்துங்கள். ஸ்தாபனை பிரம்மாவின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பிரஜாபிதா பிரம்மா எனும் பெயர் மிகவும் பிரபல்யமானது. ஆதி தேவனும், ஆதி தேவியும் இருக்கிறார்கள். ஜெகதாம்பாளுக்கு நூற்றாயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. ஜெகதாம்பாளிற்காக அவர்கள் பல விழாக்களை நடத்துகிறார்கள். நீங்களே ஜெகதாம்பாளின் குழந்தைகள் நீங்கள் இப்பொழுது ஞானம் உடையவர்களாகி விட்டீர்கள். பின்னர் நீங்கள் இளவரசர்களும், இளவரசிகளும் ஆகுவீர்கள். நீங்கள் மிகுந்த செல்வந்தர்கள் ஆகுகிறீர்கள். பக்தி மார்க்கத்தில் தீபாவளி அன்று இலக்ஷ்மியிடம் அழியக்;கூடிய செல்வத்தை வேண்டுகிறீர்கள். நீங்கள் இங்கு அனைத்தையும் பெறுகிறீர்கள். நீடூழி வாழ்வீர்களாக! பல குழந்தைகள் உடையவர் ஆகுவீராக! உங்கள் ஆயுட் காலம் 150 வருடங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் எவ்வளவிற்கு யோகம் செய்கிறீர்களோ, அவ்வளவிற்கு உங்கள் ஆயுட் காலம் அதிகரிக்கும். நீங்கள் ஈஸ்வரருடன் (கடவுள்) யோகம் செய்கிறீர்கள். நீங்கள் ஈஸ்வரருடன் யோகம் செய்து யோகேஸ்வரர் (கடவுளுடன் யோகம் செய்பவர்கள்) ஆகின்றீர்கள். மனிதர்கள் போகேஸ்வரர்கள் (விகாரத்தில் ஈடுபடுபவர்கள்). விகாரம் நிறைந்த தூய்மையற்றவர்களின் ஆடைகளைக் கடவுள் சலவை செய்கிறார் எனக் கூறப்படுகிறது. தந்தை கூறுகிறார்: நான் சலவைத் தொழிலாளி எனவும் அழைக்கப்படுகிறேன். நான் வந்து, ஆத்மாக்கள் அனைவரையும் சுத்தமாக்குகிறேன். பின்னர் அவர்கள் தூய புதிய சரீரத்தைப் பெறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் முழு உலகத்தவரினதும் சகல ஆடைகளையும் ஒரு விநாடியில் சலவை செய்கிறேன். 'மன்மனாபவ" ஆக இருப்பதன் மூலம் ஆத்மா, சரீரம் இரண்டுமே தூய்மை ஆகுகின்றன. இது ஒரு மந்திர வித்தையே! ஒரு விநாடியில் ஜீவன்முக்தி! இது அத்தனை இலகுவான ஒரு வழிமுறை. தந்தையை நினைவு செய்வதால் நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். நடக்கும் பொழுதும், நடமாடித் திரியும் போதும் தந்தையை நினைவு செய்யுங்கள். அவ்வளவு தான்! நான் உங்களுக்கு வேறு எந்தச் சிரமமும் தருவதேயில்லை. நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். இப்பொழுது ஒவ்வொரு விநாடியும் உங்களது ஏறும் ஸ்திதியாகும். தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்கள் சேவகனாகவே வந்துள்ளேன். 'ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்!" என நீங்கள் கூவி அழைத்தீர்கள். சரி குழந்தைகளே, நான் வந்துவிட்டேன். ஆதலால் நான் உங்கள் சேவகன் இல்லையா? நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகும் போதே, விரக்திக் கூக்குரல் இடுகிறீர்கள். நான் இப்பொழுது வந்துவிட்டேன். நான் ஒவ்வொரு கல்பமும் வந்து இந்த மந்திரத்தைக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தருகிறேன்: என்னை நினைவு செய்தால், நீங்கள் தூய்மையாகுவீர்கள். இதுவும் மன்மனாபவ என்பதன் அர்த்தமாகும். மன்மனாபவ, மதியாஜிபவ என்பவற்றின் அர்த்தம் தந்தையை நினைவு செய்யும் போது, நீங்கள் விஷ்ணு பூமிக்கு அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதே ஆகும். நீங்கள் விஷ்ணு பூமியின் இராச்சியத்தைப் பெறுவதற்காகவே வந்துள்ளீர்கள். இராவண பூமியைத் தொடர்ந்து விஷ்ணு பூமி வருகிறது, கம்ச பூமியைத் தொடர்ந்து கிருஷ்ண பூமி ஏற்படுகிறது. இது உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்தப்படுகிறது. தந்தை கூறுகிறார்: இப்பழைய உலகத்தின் மீதுள்ள பற்று எல்லாவற்றையும் முடியுங்கள். நாங்கள் இப்பொழுது 84 பிறப்புகளைப் பூர்த்தி செய்துள்ளோம். நாங்கள் இப்பழைய ஆடையைத் துறந்து புதிய உலகத்திற்குச் செல்வோம். நினைவின் மூலமாக மாத்திரமே எங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இந்தளவு தைரியத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து பிரம்ம தத்துவத்தையே நினைக்கிறார்கள். தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பார்கள் என நம்புகிறார்கள். எவ்வாறாயினும், பிரம்ம தத்துவம் ஒரு வசிப்பிடமாகும். அவர்கள் பிரம்ம தத்துவத்துடன் கலப்பார்கள் என அவர்கள் தபஸ்யாவில் இருந்தபடி நம்புகிறார்கள். எவ்வாறாயினும், எவருமே வீடு திரும்ப முடியாது. பிரம்ம தத்துவத்துடன் யோகம் செய்வதால் அவர்கள் தூய்மையாக மாட்டார்கள். எவராலும் வீடு திரும்ப முடியாது. நீங்கள் மறு பிறப்பு எடுக்க வேண்டும். தந்தை வந்து உங்களுக்கு உண்மையைக் கூறுகிறார். உண்மையான பாபா உண்மையான பூமியை ஸ்தாபிக்கிறார். இராவணன் வந்து அதனைப் பொய்ம்மையின் பூமியாக ஆக்குகிறான். இது இப்பொழுது நீங்கள் அதி மேன்மையானவர் ஆகுகின்ற சங்கமயுகம். இதனாலேயே இது அதி மேன்மையான யுகம் எனப்படுகிறது. நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்களாக மாறுகின்றீர்கள். இது ஓர் எல்லையற்ற விடயம். தேவர்களே அதி மேலானவர்கள். நீங்கள் இப்பொழுது அதி மேலான சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். அதிமேலான தந்தையே உங்களை அதிமேன்மையானவர்கள் ஆக்குகிறார்! அவர் உங்களுக்கு அதிமேன்மையான ஆஸ்தியைத் தருகிறார். எனவே நீங்கள் ஏன் இதை மறக்கிறீர்கள்? தந்தை கூறுகிறார்: என்னை நினையுங்கள்! குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா நாங்கள் உங்களை மறவாது இருப்பதற்குக் கருணை செய்யுங்கள்! இது எவ்வாறு சாத்தியமாகும்? நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் தந்தையினது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினையுங்கள். நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். அவரது புத்திமதியைப் பின்பற்றுங்கள்! என்னால் உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைத் தரமுடியும்? நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையின் ஒவ்வொரு வழிகாட்டலையும் பின்பற்றி, உங்களைச் சிப்பியிலிருந்து ஒரு வைரம் ஆக்குங்கள். ஒரே தந்தையின் நினைவில் இருந்து உங்கள் ஆடையைச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.

2. நீங்கள் இப்பொழுது உங்கள் புதிய வீட்டிற்குச் செல்ல வேண்டும் ஆதலால் இப்பழைய வீட்டில் எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருங்கள். நாங்கள் இப்பழைய இடுகாட்டில் தேவதைகளின் பூமியை உருவாக்குவோம் என்ற குதூகலத்தைக் கொண்டிருங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் முன்னிலையில் சங்கமயுகத்தின் மேன்மையான வடிவத்தை வைத்திருப்பதன் மூலம் திரிகால தரிசிகளாகி, எதிர்கால காட்சியை காண்பீர்களாக.

எதிர்காலத்தில் சகல பேறுகளையும் அனுபவம் செய்வதற்கு முன், சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் அவற்றை இப்பொழுது அனுபவம் செய்கிறீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் இரட்டை கிரீடத்தை, ஒரு சிம்மாசனத்தை, ஒரு திலகத்தைப் பெற்று சகல உரிமைகளும் உடைய சொரூபம் ஆகுகிறீர்கள். எதிர்காலத்தில், நீங்கள் தங்கக் கரண்டியை கொண்டிருப்பீர்கள், ஆனால் இந்த நேரத்தில், நீங்கள் வைரம் போன்றவர் ஆகுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை வைரம் போன்றதாகுகின்றது. அங்கே, தங்க, வைர ஊஞ்சல்களில் ஆடுவீர்கள். ஆனால் இங்கே, பாப்தாதாவின் மடியில் அதீந்திரிய சுகம் என்ற ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். எனவே, நிகழ்காலத்தினதும், எதிர்காலத்தினதும் மேன்மையான படத்தை பார்ப்பதனால், திரிகால தரிசிகள் ஆகி, சகல பேறுகளையும் அனுபவம் செய்யுங்கள்.

சுலோகம்:
கர்மத்தினதும், யோகத்தினதும் சமநிலையானது கடவுளி;ன் ஆசீர்வாங்களுக்கான உரிமையை நீங்கள் கோருவதற்கு உதவுகின்றது.