21.02.21    Avyakt Bapdada     Tamil Lanka Murli    06.11.87     Om Shanti     Madhuban


நான்கு வகையான சேவைகளைச் செய்வதே சதா சேவையாளர் ஆகுவதற்கான வழிமுறை.


இன்று, உலக உபகாரியான, உலகச் சேவையாளரான தந்தை, தனது ஒத்துழைக்கும் உலகச் சேவையாளர்களான குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். ஒவ்வொரு குழந்தையும் சதா, இலகு யோகியாக இருப்பதுடன் ஒரு சதா சேவையாளராகவும் எந்தளவிற்கு இருக்கிறார்? உங்களின் பிராமண வாழ்க்கையில், நினைவினதும் சேவையினதும் சமநிலை, உங்களை சதா பாப்தாதாவிடமிருந்தும் மேன்மையான பிராமண ஆத்மாக்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகிறது. இந்த சங்கமயுகத்திலும் இந்த பிராமண வாழ்க்கையிலும் மட்டுமே, உங்களால் கடவுளிடமிருந்தும் பிராமணக் குடும்பத்திடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற முடியும். இதனாலேயே, இந்தக் குறுகிய வாழ்க்கையில், நீங்கள் இலகுவாக எல்லா வேளைக்குமான சகல பேறுகளையும் பெறுகிறீர்கள். இந்த சங்கமயுகத்தை ஆசீர்வாதங்களுக்கான விசேடமான யுகம் என்று அழைக்க முடியும். இதனாலேயே, இந்த யுகம் மகத்தான யுகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மேன்மையான செயலினதும் ஒவ்வொரு மேன்மையான எண்ணத்தினதும் அடிப்படையில், தந்தையே சதா தனது இதயபூர்வமான ஆசீர்வாதங்களை ஒவ்வொரு பிராமணக் குழந்தைக்கும் வழங்குகிறார். இந்த பிராமண வாழ்க்கை என்பது நீங்கள் கடவுளிடமிருந்து பெறும் ஆசீர்வாதங்களின் பராமரிப்பில் வளரும் வாழ்க்கை ஆகும். திறந்த இதயத்துடன், கள்ளங்கபடமற்ற பிரபுவான தந்தை, குழந்தைகளான உங்களின் மடிகளை சகல ஆசீர்வாதங்களாலும் நிரப்புகிறார். எவ்வாறாயினும், இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெறுவதன் அடிப்படை, நினைவினதும் சேவையினதும் சமநிலையே ஆகும். நீங்கள் ஒரு சதா யோகியாக இருந்தால், நீங்கள் சதா சேவையாளராகவும் இருப்பீர்கள். சேவையின் முக்கியத்துவம் உங்களின் புத்தியில் எப்போதும் உள்ளதா?

சில குழந்தைகள் தமக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு, வழிமுறை அல்லது நேரம் கிடைக்கும்போது, தாம் சேவை செய்வோம் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், பாப்தாதா உங்களை எப்போதும் இலகுவாகவும் நினைவை அனுபவம் அடையச் செய்வதைப் போல், சேவையையும் எப்போதும் அதேவேளை இலகுவாகவும் செய்ய முடியும். எனவே, இன்று, பாப்தாதா சேவையாளர் குழந்தைகளின் சேவையின் அட்டவணையைப் பார்த்தார். நீங்கள் ஒரு சதா சேவையாளராக ஆகும்வரை, உங்களால் எல்லா வேளையும் ஆசீர்வாதங்களைப் பெறுவதை அனுபவம் செய்ய முடியாது. உதாரணமாக, நீங்கள் காலத்திற்கேற்ப, வாய்ப்பிற்கேற்ப அல்லது நிகழ்ச்சிக்கேற்ப சேவை செய்தால், அந்த சேவையின் பலனாக, நீங்கள் வெற்றியையும், தந்தையிடமிருந்தும் குடும்பத்திடமிருந்தும் ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள். ஆனால், அது எல்லா வேளையும் இருக்காது. ஆகவே, அந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதனால், நீங்கள் சிலவேளைகளில் உங்களிலும் சேவையிலும் இலகுவான முன்னேற்றத்தை அனுபவம் செய்வீர்கள். எவ்வாறாயினும், ஏனைய வேளைகளில், சதா நினைவினதும் சேவையினதும் சமநிலை இல்லாததால், நீங்கள் அதற்காகச் சிரமப்பட்ட பின்னரே வெற்றி பெறுவீர்கள். இன்று, எவ்வாறு உங்களால் சதா சேவையாளர் ஆகமுடியும் என்றும் அந்தச் சேவையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் பாபா உங்களுக்குக் கூறுகிறார்.

நாள் முழுவதும், உங்களால் பல வகையான சேவைகளைச் செய்ய முடியும். அதில், முதலாவது சேவை, தனக்குரியது. அதாவது, எப்போதும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவதில் உங்களில் கவனம் செலுத்துங்கள். இந்தக் கல்வியின் பிரதானமான பாடங்களில் நீங்கள் திறமைச் சித்தி எய்த முடியும். நீங்கள் ஞான சொரூபமாகவும் நினைவு சொரூபமாகவும் தாரணையின் சொரூபமாகவும் ஆகவேண்டும். நீங்கள் அனைத்திலும் உங்களைச் சம்பூரணமானவர்கள் ஆக்க வேண்டும். சுயத்தின் இந்தச் சேவை எப்போதும் உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். சுயத்தின் இந்தச் சேவையானது இயல்பாகவே உங்களின் முழுமையான ரூபத்தினூடாக சேவை செய்ய வைக்கும். எவ்வாறாயினும், அதற்கான வழிமுறையானது, கவனம் செலுத்துவதும் சோதிப்பதும் ஆகும். நீங்கள் மற்றவர்களை அன்றி, உங்களையே சோதிக்க வேண்டும். இரண்டாவது, உலகச் சேவை. நீங்கள் இதைப் பல்விதமாக, பல்வேறு வழிமுறைகளுடன் செய்கிறீர்கள். வார்த்தைகளின் மூலம், உறவுமுறைகளின் மூலம், தொடர்புகளின் மூலம் செய்கிறீர்கள். நீங்கள் இவை அனைத்தையும் மிக நன்றாக அறிவீர்கள். மூன்றாவது, யக்யத்தின் சேவை. நீங்கள் இதை உங்களின் சரீரத்தாலும் பணத்தாலும் செய்கிறீர்கள்.

நான்காவது சேவை, உங்களின் மனத்தினால் செய்யும் சேவையாகும். நீங்கள் எங்கே வசித்தாலும், உங்களின் தூய உணர்வுகளாலும் மேன்மையான ஆசிகளாலும் மேன்மையான மனோபாவத்தாலும் மேன்மையான அதிர்வலைகளாலும் உங்களால் ஆத்மாக்கள் பலருக்குச் சேவை செய்ய முடியும். இவ்வாறு செய்வதற்கான வழிமுறை, வெளிச்சவீடாகவும் சக்திவீடாகவும் ஆகுவதேயாகும். ஓரிடத்தில் இருந்து ஒரு வெளிச்சவீடு வெகு தொலைவிற்கும் சேவை செய்யும். அதேபோல், ஓரிடத்தில் இருந்து, உங்களால் பலருக்குச் சேவை செய்வதற்குக் கருவிகள் ஆகமுடியும். நீங்கள் சக்திகளின் பல பொக்கிஷங்களைச் சேமித்திருந்தால், உங்களால் இதை இலகுவாகச் செய்ய முடியும். இதற்காக பௌதீக வசதிகளையோ, வாய்ப்பையோ அல்லது நேரத்தையோ பெற வேண்டும் என்ற பிரச்சனையே கிடையாது. நீங்கள் ஒளியாலும் சக்தியாலும் நிறைந்திருக்க வேண்டும், அவ்வளவே. மனமும் புத்தியும் எப்போதும் வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அவை இலகுவாக மன்மனாபவ என்ற மந்திரத்தின் சொரூபங்களாக இருக்க வேண்டும். இந்த நான்கு வகையான சேவைகளாலும் உங்களை ஒரு சதா சேவையாளர் ஆக்க முடியாதா? நான்கு வகையான சேவைகளும் இருப்பதனால், உங்களால் தொடர்ந்து ஒவ்வொரு கணமும் எந்த வகையான சேவையையும் செய்ய முடியும். அத்துடன் நீங்கள் இலகுவாக சதா சேவையாளராகவும் ஆகுவீர்கள். சதா சேவையில் ஈடுபட்டிருப்பதனால், சதா மும்முரமாக இருப்பதனால், நீங்கள் இலகுவாக மாயையை வென்றவர்கள் ஆகுவீர்கள். நான்கு வகையான சேவைகளிலும், உங்களுக்கு இயலுமான சேவையை, இயலுமான நேரத்தில் செய்யுங்கள். ஆனால் ஒரு விநாடியேனும் சேவை செய்யாமல் இருக்காதீர்கள். நீங்கள் 24 மணிநேரமும் சேவையாளராக இருக்க வேண்டும். நீங்கள் 8 மணிநேரத்திற்கான ஒரு யோகியோ அல்லது ஒரு சேவையாளரோ கிடையாது. ஆனால் ஒரு சதா சேவையாளர் ஆகுவீர்கள். இது இலகுவானதல்லவா? வேறு எதுவும் இல்லாவிட்டாலும், சுய சேவை நல்லது. உங்களுக்கு என்ன வாய்ப்புக் கிடைத்தாலும், உங்களால் எந்த நேரமும் அந்தச் சேவையைச் செய்ய முடியும்.

தமது சரீரங்களின் காரணத்தினால் அல்லது தமக்கு நேரம் இல்லாததால், தம்மால் சேவை செய்ய முடியாமல் உள்ளது எனச் சில குழந்தைகள் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், நான்கு வகையான சேவைகளில், பொருத்தமான எந்தவொரு வகையான சேவையில் மும்முரமாக இருந்தாலும், நீங்கள் சேவை என்ற பாடத்தில் மதிப்பெண்களைச் சேமிப்பீர்கள். இந்த மதிப்பெண்கள் உங்களின் இறுதிப் பெறுபேற்றில் சேர்த்துக் கொள்ளப்படும். வார்த்தைகளால் சேவை செய்பவர்களுக்கு மதிப்பெண்கள் சேமிக்கப்படுவதைப் போல், யக்யத்தின் சேவை, சுயசேவை, மனச் சேவை அனைத்திற்கும் அதேயளவு முக்கியத்துவம் உள்ளது. இவை எவற்றில் இருந்தும் நீங்கள் அதேயளவைச் சேமிப்பீர்கள். ஒவ்வொரு வகையான சேவைக்கும் அதேயளவு மதிப்பெண்களே கொடுக்கப்படும். எவ்வாறாயினும், நான்கு வகையான சேவைகளையும் செய்பவர்கள், அந்தளவு மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்வார்கள். ஒன்று அல்லது இரண்டு வகையான சேவைகளை மட்டும் செய்பவர்கள், அதற்கேற்பவே மதிப்பெண்களைப் பெறுவார்கள். உங்களால் நான்கு வகையான சேவைகளையும் செய்ய முடியாவிட்டால், ஆனால், இரண்டு வகையான சேவைகளை மட்டுமே செய்ய முடிந்தால், அப்போதும் உங்களால் சதா சேவையாளர் ஆகமுடியும். ஏனென்றால், நிலையாக இருப்பதால், உங்களின் மதிப்பெண்கள் அதிகரிக்கும். இதனாலேயே, பிராமண வாழ்க்கை என்றால், சதா சேவையாளராகவும் இலகு யோகியாகவும் இருத்தல் என்று அர்த்தம்.

சதா நினைவைக் கொண்டிருப்பதிலும், நினைவின் தொடர்பு சதா இணைந்திருப்பதை உறுதிப்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்துவதைப் போல், சேவையின் தொடர்பும் சதா இணைந்திருக்க வேண்டும். நினைவில் நீங்கள் பல்வேறு நிலைகளை அனுபவம் செய்கிறீர்கள்: சிலவேளைகளில் விதை ஸ்திதி, சிலவேளைகளில் தேவதை ரூபம், சிலவேளைகளில் கடைதல், சிலவேளைகளில் இதயபூர்வமான சம்பாஷணை. பல்வேறு ஸ்திதிகள் இருந்தாலும், நீங்கள் அதை நினைவெனும் பாடத்தில் சதா நினைவாகவே கருதுகிறீர்கள். அதேபோல், இவ்வாறான வெவ்வேறு வகையான சேவைகள் உள்ளன. ஏனென்றால், சேவை செய்யாமல் இருக்கும் ஒரு வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை. ஒவ்வொரு மூச்சிலும் நினைவு இருக்க வேண்டும். ஒவ்வொரு மூச்சிலும் சேவை இருக்க வேண்டும். இதுவே சமநிலை எனப்படுகிறது. அப்போது மட்டுமே நீங்கள் சதா ஒவ்வொரு கணத்திலும் ஆசீர்வாதங்களைப் பெறுவதை அனுபவம் செய்வீர்கள். உங்களின் இதயத்தில் இயல்பாகவும் எப்போதும், நீங்கள் அந்த ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படுகிறீர்கள் என்ற ஒலி வெளிப்படும். நீங்கள் ஆசீர்வாதங்களுடன், பறக்கும் ஸ்திதியின் அனுபவத்துடன் பறக்கிறீர்கள். நீங்கள் சிரமப்படுவதில் இருந்தும் போராடுவதில் இருந்தும் விடுபடுவீர்கள். நீங்கள் என்ன? ஏன்? எவ்வாறு? என்ற கேள்விகளில் இருந்து எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் சதா உங்களின் பிறப்புரிமையின் வெற்றியை அனுபவம் செய்வீர்கள். என்ன நிகழும் என்று எனக்குத் தெரியாது. வெற்றி ஏற்படுமோ இல்லையோ என எனக்குத் தெரியாது. என்னால் எதிர்காலத்தில் தொடர முடியுமோ இல்லையோ என எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாது..... என்ற இந்த எண்ணங்கள் மாறினால் மட்டுமே நீங்கள் மாஸ்ரர் திரிகாலதரிசி என்ற ஸ்திதியை அனுபவம் செய்வீர்கள். வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது என்ற இந்த நம்பிக்கையையும் போதையையும் நீங்கள் சதா கொண்டிருப்பீர்கள். இவையே ஆசீர்வாதங்களின் அடையாளங்கள் ஆகும். உங்களுக்குப் புரிகிறதா?

பிராமண வாழ்க்கையில், இந்த மகத்தான யுகத்தில், நீங்கள் பாப்தாதாவிற்கான உரிமையைப் பெற்ற பின்னர், நீங்கள் சதா உங்களின் வாழ்க்கையைப் போராடும் நிலையில் கழித்தால்..... பாப்தாதாவால் குழந்தைகளான நீங்கள் சிரமப்படும் வாழ்க்கை வாழ்வதைப் பார்க்க சகித்துக் கொள்ள முடிவதில்லை. இதனாலேயே, நீங்கள் சதா யோகிகளாகவும் சதா சேவையாளர்களாகவும் ஆகவேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

பழைய குழந்தைகளின் நம்பிக்கைகள் நிறைவேறிவிட்டன, இல்லையா? நீரை வழங்கும் சேவையைச் செய்து, பல குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் இரவு பகலாக தமது ஒத்துழைப்பை வழங்கிய சேவையாளர் குழந்தைகளுப் பாராட்டுக்கள். நீங்கள் நித்திரையை வென்றவர்களாகவும் சடப்பொருளை வென்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். எனவே, திட்டங்களைச் செய்தவர்களுக்கும், நீரைக் கொண்டு வந்தவர்களுக்கும், மற்றவர்களை சௌகரியமாக வரவேற்றவர்களுக்கும், சௌகரியமான தங்குமிட வசதிகளை அளித்தவர்களுக்கும், வெவ்வேறு வகையான சேவைக்குக் கருவிகளாக இருந்த அனைவருக்கும் நேரத்திற்கு உணவு தயாரித்து அளித்தவர்களுக்கும் என மதுவனத்தின் சேவையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைக் கூறுங்கள். பாப்தாதா எவ்வாறாயினும் நன்றிகளைத் தெரிவிக்கிறார். இந்த உலகமே நீருக்காக அழுகிறது. தந்தையின் குழந்தைகள் தமது பணிகளை மிக இலகுவாகச் செய்கிறார்கள். பாப்தாதா தொடர்ந்து சேவையாளர் குழந்தைகள் அனைவரினதும் சேவையைப் பார்க்கிறார். மதுவனவாசிகள் கருவிகளாகி, நீங்கள் மிகவும் சௌகரியமாக ஒரு வாய்ப்பைப் பெறச் செய்கிறார்கள். நீங்களும் ஒத்துழைப்பவர்கள் ஆகியுள்ளீர்கள், இல்லையா? அந்த மக்கள் எவ்வாறு ஒத்துழைப்பவர்கள் ஆகியிருக்கிறார்களோ, நீங்கள் அதன் பலனைப் பெறுகிறீர்களோ, அதேபோல், நீங்கள் அனைவரும் ஒவ்வொரு பணியிலும் காலத்திற்கேற்ப அதேபோல் தொடர்ந்து செயல்பட்டால், ஏனைய பல பிராமணர்களும் தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பின் பலனைப் பெறுவார்கள்.

பாப்தாதா புன்னகை செய்தார்: சத்தியயுகத்தில் பாலாறுகள் ஓடும். ஆனால், குறைந்தபட்சம் சங்கமயுகத்தில் நீரும் நெய்போல் (அதன் பெறுமதி) ஆகிவிட்டது. நெய்யாறுகள் குழாய்களினூடாகப் பாய்கின்றன. தண்ணீர் நெய்போல ஆகிவிட்டது. எனவே, அது விலைமதிப்பற்றதாகிவிட்டது, இல்லையா? இந்த முறையில் பலருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். எவ்வாறாயினும், உலகிற்கும் பிராமணர்களான உங்களுக்கும் இடையே இத்தகைய பெரியதொரு வேறுபாடு உள்ளது. ஏனைய பல இடங்களில் இருப்பவர்களைவிட நீங்கள் அதிகளவில் சௌகரியமாக இருக்கிறீர்கள். நீங்கள் இந்தப் பயிற்சியைப் பெறுகிறீர்கள். ஆகவே, தொடர்ந்து சகல இரகசியங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் பயிற்சியை அதிகரிப்பதுடன், ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருங்கள். அச்சா.

சதா யோகிகளாகவும், சதா சேவையாளர்களாகவும் இருக்கும் சகல மேன்மையான ஆத்மாக்களுக்கும், எப்போதும் திரிகாலதரிசியாக இருந்து வெற்றிக்கான உரிமையை அனுபவம் செய்பவர்களுக்கும், மேன்மையான, சதா சந்தோஷமான, திருப்தியான ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு விநாடியும் ஆசீர்வாதங்களை அனுபவம் செய்யும் குழந்தைகளுக்கும், பாக்கியத்தை அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவருமான பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

தாதிஜிக்கு: உங்களுக்கு அந்த எண்ணம் ஏற்பட்டது. அனைவரும் அந்த எண்ணத்தின் பலனைப் பெற்றார்கள். நீங்கள் ஆசீர்வாதங்களின் மாலைகள் பலவற்றைப் பெறுகிறீர்கள். தந்தையின் புகழுடன்கூடவே, மனிதர்களும் கருவிகள் ஆகியிருப்பதன் புகழையும் பாடுகிறார்கள். இதனாலேயே, குழந்தைகளும் தந்தையுடன்கூடவே வழிபடப்படுகிறார்கள். தந்தை மட்டும் தனித்து வழிபடப்படுவதில்லை. அனைவரும் அதிகளவு சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். இந்த ஆசீர்வாதங்களின் மாலைகள், உங்களுக்குப் பக்தி மார்க்கத்தில் மாலைகளைப் பெறுவதற்கான உரிமையைக் கொடுக்கும்.

அவ்யக்த பாப்தாதா குழுக்களைச் சந்திக்கிறார்:

1) நீங்கள் அனைவரும் அனைவரின் தாகத்தையும் தீர்க்கும் மேன்மையான ஆத்மாக்கள், இல்லையா? அது பௌதீகமான தண்ணீர். ஆனால் உங்களிடம் ஞான அமிர்தம் உள்ளது. தண்ணீர் உங்களின் தாகத்தைத் தற்காலிகமாகத் தீர்க்கும். அது உங்களை மனநிறைவுள்ள ஆத்மா ஆக்கும். எனவே, நீங்கள் சகல ஆத்மாக்களையும் அமிர்தத்தால் மனநிறைவிற்கு உள்ளாக்குவதற்கான கருவிகள் ஆகியுள்ளீர்கள், இல்லையா? உங்களுக்கு எப்போதும் இந்த உற்சாகம் உள்ளதா? ஏனென்றால், ஒருவரின் தாகத்தைத் தீர்ப்பது மகத்தான புண்ணியமாகும். தாகமுள்ள ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்ப்பவர்கள் புண்ணியாத்மாக்கள் எனப்படுகிறார்கள். நீங்களும் மகா புண்ணியாத்மாக்களாகி, அனைவரின் தாகத்தைத் தீர்ப்பவர்கள். மனிதர்கள் தாகம் ஏற்பட்டதும் பரிதவிப்பார்கள். அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், அவர்கள் மிகவும் பரிதவிப்பார்கள், இல்லையா? அதேபோல், ஞான அமிர்தத்தைப் பெறாததால், ஆத்மாக்கள் துன்பத்தாலும் அமைதியின்மையாலும் அழுகிறார்கள். எனவே, நீங்களே அவர்களுக்கு ஞான அமிர்தத்தைக் கொடுத்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் புண்ணியாத்மாக்கள் ஆவீர்கள். ஆகவே, நீங்கள் பல பிறவிகளுக்கான உங்களின் புண்ணியக் கணக்கில் சேமிக்கிறீர்கள், இல்லையா? ஒரு பிறவியில், நீங்கள் பல பிறவிகளுக்கான உங்களின் கணக்கில் சேமிக்கிறீர்கள், இல்லையா? ஒரு பிறவியில், உங்களின் பல பிறவிக்கான கணக்கில் சேமிக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் இந்தளவைச் சேமித்துள்ளீர்கள், இல்லையா? நீங்கள் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கக்கூடிய அளவிற்கு சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியுள்ளீர்கள். நீங்கள் உங்களுக்காகவும் சேமித்து, மற்றவர்களுக்கு அருள்பவர்களாகவும் ஆகியுள்ளீர்கள். எனவே, எப்போதும் சோதித்துப் பாருங்கள்: நான் நாள் முழுவதும் புண்ணியாத்மாவாக இருந்து, புண்ணியச் செயல்களைச் செய்தேனா? அல்லது, நான் உண்டு, குடித்து, மகிழ்ந்திருந்தேனா? சேமிப்பவர்கள் விவேகிகள் எனப்படுகிறார்கள். ஆனால், சம்பாதித்துப் பின்னர் அதைச் செலவழிப்பவர்களை விவேகிகள் எனக்கூற முடியாது. உங்களின் உணவைச் சாப்பிடுவதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குகிறீர்கள். ஏனென்றால், அது அத்தியாவசியம் என நீங்கள் அறிவீர்கள். அதேபோல், இந்தப் புண்ணியச் செயலைச் செய்வதும் அத்தியாவசியமே ஆகும். எனவே, நீங்கள் எப்போதும் புண்ணியாத்மா ஆவீர்கள். சிலவேளைகளில் மட்டுமல்ல. உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் மட்டும் நீங்கள் இதைச் செய்வீர்கள் என்பதல்ல. நீங்கள் இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு நேரம் இல்லை என்பதல்ல. ஆனால், நீங்கள் நேரத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் சேமிக்க முடியும். இந்த வேளையில், நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களின் பாக்கிய ரேகையை உங்களால் வரைய முடியும். ஏனென்றால், தந்தையே பாக்கியத்தை அருள்பவரும் ஆசீர்வாதங்களை அருள்பவரும் ஆவார். தந்தை தனது குழந்தைகளுக்கு மேன்மையான ஞானம் என்ற பேனாவைக் கொடுத்துள்ளார். இந்தப் பேனாவால், நீங்கள் விரும்பிய அளவிற்கு உங்களால் உங்களின் ரேகையை வரைய முடியும். அச்சா.

2) நீங்கள் அனைவரும் இராஜரிஷிகள், இல்லையா? இராஜா என்றால் உரிமையுள்ளவர். ரிஷி என்றால் தபஸ்வி என்று அர்த்தம். தபஸ்யா சக்தி என்பது உங்களால் இலகுவாக மாறக்கூடிய வழிமுறையாகும். கடவுளின் அன்பால், உங்களால் உங்களையும் உலகையும் எல்லா வேளைக்கும் தடைகளில் இருந்து விடுவிக்க முடியும். தடைகளில் இருந்து விடுபட்டிருப்பதும், மற்றவர்களைத் தடைகளில் இருந்து விடுவிப்பதும் என்ற இந்தச் சேவையை நீங்கள் செய்கிறீர்கள், இல்லையா? நீங்கள் ஆத்மாக்கள் அனைவரையும் சகல வகையான தடைகளில் இருந்தும் விடுவிப்பவர்கள். நீங்களே தந்தையிடமிருந்து ஜீவன்முக்திக்கான ஆசீர்வாதத்தைப் பெறுவதுடன் மற்றவர்களுக்கும் கொடுப்பவர்கள், இல்லையா? தடைகளில் இருந்து விடுபட்டிருத்தல் என்றால் ஜீவன்முக்தி என்று அர்த்தம்.

3) ஒரு குழந்தையிடம் தைரியம் இருந்தால், தந்தை உதவி செய்வார். குழந்தைகளான உங்களிடம் தைரியம் இருக்கும்போது, நீங்கள் எப்போதும் தந்தையிடமிருந்து பலமில்லியன் மடங்கு உதவியைப் பெறுவீர்கள். அந்தச் சுமை தந்தையின் மீதுள்ளது. ஆனால் நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராகி, சதா தந்தையின் நினைவுடன் தொடர்ந்து முன்னேறுங்கள். தந்தையின் நினைவே பாதுகாப்புக் குடையாகும். கடந்தகாலக் கணக்குகள் ஒரு சிலுவை போன்றவை. ஆனால், தந்தையின் உதவியால், அவை ஒரு முள்ளைப் போல் ஆகிவிடும். இக்கட்டான சூழ்நிலைகள் நிச்சயமாக வரும். ஏனென்றால், அனைத்தையும் இங்கேதான் தீர்க்க வேண்டும். எவ்வாறாயினும், தந்தையின் உதவியானது, அனைத்தையும் ஒரு முள்ளைப் போல் ஆக்கிவிடுகிறது. அது பெரிய விடயங்களைச் சிறியதாக்குகிறது. ஏனென்றால், பெரிய தந்தை உங்களுடன் இருக்கிறார். சதா நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். ஒவ்வோர் அடியிலும் நம்பிக்கைப் பொறுப்பாளராக இருங்கள். ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் என்றால் அனைத்தும் உங்களுடையது. எனது என்ற சகல உணர்வுகளும் முடிந்துவிடும். ஓர் இல்லறத்தவர் என்றால் எனது என்று அர்த்தம். உங்களுடையது என நீங்கள் கூறும்போது, பெரியதொரு சூழ்நிலையும் சிறியதாகிவிடும். ஆனால், எனது என்றிருக்கும்போது, சிறியதொரு விடயமும் பெரியதாகிவிடும். உங்களுடையது என்ற உணர்வானது உங்களை இலேசாக்குகிறது. எனது என்ற உணர்வு உங்களைப் பாராமாக்குகிறது. எனவே, எப்பொழுதெல்லாம் உங்களுக்குள் பாரமாக உணர்கிறீர்களோ, அப்போது எனது என்ற எந்தவொரு உணர்வும் இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பாருங்கள். எனது என்பதை உங்களுடையது என மாற்றுங்கள். அந்தக் கணமே நீங்கள் இலேசாகுவதுடன், உங்களின் சுமைகள் அனைத்தும் ஒரு விநாடியில் மறைந்துவிடும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் திருப்தி என்ற சிறப்பியல்பாலும் உங்களின் மகத்துவத்தாலும் குறிப்பாக அனைவராலும் நேசிக்கப்படும் ஆசீர்வாதங்களை அருளும் மூர்த்தி ஆகுவீர்களாக.

எப்போதும் தங்களுடனும் மற்றவர்களுடனும் திருப்தியாக இருப்பவர்கள் மட்டுமே, விசேடமாக நேசிக்கப்படும் இஷ்ட தெய்வங்களாகவும் விசேடமான எட்டு தேவியரில் ஒருவராகவும் ஆகுவார்கள். அதை அனைத்திலும் மிகப்பெரிய நற்குணம், ஒரு தானம், ஒரு சிறப்பியல்பு அல்லது மகத்துவம் என்று எவ்வாறு அழைத்தாலும், அது திருப்தியே ஆகும். திருப்தியான ஆத்மாக்கள் மட்டுமே கடவுளால் நேசிக்கப்படுவார்கள். மனிதர்களால் நேசிக்கப்படுவார்கள். தங்களாலும் நேசிக்கப்படுவார்கள். இத்தகைய திருப்தியான ஆத்மாக்கள் ஆசீர்வாதங்களை அருளும் ஆத்மாக்கள் எனப் பிரபல்யமானவர்கள். இப்போது, இந்த இறுதிக்கணங்களில், ஒரு மகாதானியின் ரூபத்தை விட, ஆசீர்வாதங்களை அருளும் ரூபத்தினூடாகவே அதிகமான சேவை இடம்பெறும்.

சுலோகம்:
ஒரு வெற்றி இரத்தினம் என்றால் அவரின் நெற்றியில் சதா ஒரு வெற்றித் திலகம் ஜொலிக்கும்.