10-07-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! தேக அபிமானத்தை விடுத்து (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆகுங்கள். ஆத்ம அபிமானியாக இருப்பவர்களுக்குத் தான் ஈசுவரிய சம்பிரதாயம் (வழியினர்) என்று கூறப்படுகிறது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது செய்யும் சத்சங்கங்கள் மற்ற சத்சங்கங்களை விட தனிப்பட்டது, எப்படி?

பதில்:
இந்த ஒரு சத்சங்கத்தில் மட்டும் தான் நீங்கள் ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ஞானத்தைக் கேட்கிறீர்கள். இங்கு படிப்பு நடக்கிறது. இலட்சியம், நோக்கம் கூட முன்னால் உள்ளது. மற்ற சத்சங்கங்களில் கல்வியும் இருப்பதில்லை. (ஏம் ஆப்ஜெக்ட்) இலட்சியம், நோக்கமும் கிடையாது.

ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளுக்காக ஆன்மீகத் தந்தை புரிய வைத்து கொண்டிருக்கிறார். ஆன்மீகக் குழந்தைகள் கேட்டு கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது அமர்ந்தாலும் தன்னை ஆத்மா என்று உணர்ந்து அமருங்கள் என்று முதன் முதலில் தந்தை புரிய வைக்கிறார். தேகம் என்று நினைக்காதீர்கள். (தேக அபிமானி) தேக உணர்வுடையவர்களுக்கு அசுர சம்பிரதாயம் என்று கூறப் படுகிறது. (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வு டையவர்களுக்கு ஈசுவரிய சம்பிரதாயம் என்று கூறப்படுகிறது. ஈசுவரனுக்கு தேகம் இல்லை. அவர் என்றைக்குமே (ஆத்ம அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக இருக்கிறார். அவர் (சுப்ரீம்) உயர்ந்த ஆத்மா அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். பரம ஆத்மா என்றால், உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். மனிதர்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் என்று கூறும் பொழுது புத்தியில் அவர் நிராகார லிங்க ரூபம் ஆவார் என்பது புத்தியில் வருகிறது. நிராகார லிங்கத்தின் பூஜையும் ஆகிறது. அவர் பரமாத்மா ஆவார், அதாவது அனைத்து ஆத்மாக்களை விடவும் உயர்ந்தவர். அவரும் ஆத்மாவாக உள்ளார். ஆனால் உயர்ந்த ஆத்மா. அவர் பிறப்பு! இறப்பில் வருவதில்லை. மற்ற அனைவரும் மறு பிறவி எடுக்கிறார்கள். மேலும் அனைவரும் படைப்பு ஆவார்கள். படைப்பவரோ ஒரே ஒரு தந்தை ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரன் கூட படைக்கப்பட்டவர்களே! முழு மனித சிருஷ்டியே படைப்பு ஆகும். படைப்பு கர்த்தா என்று தந்தைக்கு கூறப்படுகிறது. கணவனுக்கு கூட படைப்பவர் என்று கூறப் படுகிறது. மனைவியை சுவீகாரம் செய்கிறார், பின் அவர் மூலமாக (கிரியேட்) படைக்கிறார், பாலனை செய்கிறார் அவ்வளவே. விநாசம் செய்வதில்லை. மேலும் தர்ம ஸ்தாபகர்கள் கூட படைக்கிறார்கள். பிறகு அவற்றை பாலனை (வளர்த்தல்) செய்கிறார்கள். விநாசம் யாருமே செய்வ தில்லை. எல்லையில்லாத தந்தைக்கு பரம ஆத்மா என்று கூறப்படுகிறது. எப்படி ஆத்மாவின் ரூபம் புள்ளியோ அதே போல பரமபிதா பரமாத்மாவின் ரூபம் கூட புள்ளி ஆகும். மற்றபடி இவ்வளவு பெரிய லிங்கம் அமைப்பது எல்லாமே பக்தி மார்க்கத்தில் பூஜையின் காரணமாக. பிந்துவிற்கு எப்படி பூஜை முடியும். பாரதத்தில் ருத்ர யக்ஞம் இயற்றும் பொழுது மண்ணினால் சிவலிங்கம் மற்றும் சாலிகிராமங்கள் அமைத்து பிறகு அவற்றிற்கு பூஜை செய்கிறார்கள். அதற்கு ருத்ர யக்ஞம் என்று கூறப்படுகிறது. உண்மையில் ராஜஸ்வ அஷ்வமேத அவினாஷி ருத்ர கீதா ஞான யக்ஞம் என்பதே உண்மையான பெயர் ஆகும். இது சாஸ்திரங்களில் கூட எழுதப் பட்டுள்ளது. இப்பொழுது தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார். வேறு சத்சங்கங்கள் எவற்றிலுமே ஆத்மா அல்லது பரமாத்மா பற்றிய ஞானம் யாரிடமுமே இல்லை, கொடுக்கவும் முடியாது. அங்கோ எந்த ஒரு (ஏம் ஆப்ஜெக்ட்) இலட்சியம் நோக்கம் கிடையாது. குழந்தைகளாகிய நீங்களோ இப்பொழுது படிப்பை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா சரீரத்தில் பிரவேசம் செய்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆத்மா அழியாதது. சரீரம் அழியக் கூடியது ஆகும். சரீரத்தின் மூலமாக பாகத்தை ஏற்று நடிக்கிறது. ஆத்மாவோ அசரீரி (சரீரத்திலிருந்து தனிப்பட்டது) ஆகும் அல்லவா?தனியாக வந்தோம் தனியாகச் செல்ல வேண்டும் என்று கூறவும் செய்கிறார்கள். சரீரம் தாரணை செய்தார் கள். பின்னர் சரீரத்தை விட்டு விட்டு தனியாக செல்ல வேண்டி உள்ளது. இதை தந்தை குழந்தை களாகிய உங்களுக்குத் தான் வந்து புரிய வைக்கிறார். பாரதத்தில் சத்யுகம் இருக்கும் பொழுது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஒரே ஒரு தர்மம் இருந்தது என்பதையும் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். இதைக் கூட பாரதவாசிகள் அறியாமல் உள்ளார்கள். தந்தையை யார் அறியவில்லையோ, அவர் எதுவும் அறிய வில்லை என்று பொருள். பழைய ரிஷி முனிவர்கள் கூட நாங்கள் படைப்பவர் மற்றும் படைப்பை அறியாமல் உள்ளோம் என்றே கூறினார்கள். படைப்பு கர்த்தா எல்லையில்லாத தந்தை ஆவார். அவரே படைப்பின் ஆதி மத்திய அந்தத்தை அறிந்துள்ளார். ஆதி என்பது ஆரம்பத்திற்கு கூறப்படுகிறது. மத்தியம் என்பது இடைப்பட்டது. ஆதி என்பது சத்யுகம் அதற்குப் பகல் என்று கூறப்படுகிறது. பிறகு மத்தியத்திலிருந்து அந்திமம் வரை இரவு ஆகும். பகல் என்பது சத்யுகம் திரேதா. சொர்க்கம் வண்டர் ஆஃப் வர்ல்டு - உலகத்தின் அதிசயம் ஆகும். பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. அங்கு லட்சுமி நாராயணர் ஆட்சி புரிந்து கொண்டு இருந்தார்கள். இதை பாரதவாசிகள் அறியாமல் உள்ளார்கள். தந்தை இப்பொழுது சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார்.

நீங்கள் உங்களை ஆத்மா என்று உணருங்கள். நாம் (ஃபர்ஸ்ட் கிளஸ்) முதல் தரமான ஆத்மா ஆவோம். இச்சமயம் மனிதர்கள் அனைவருமே தேக அபிமானி ஆவார்கள். தந்தை ஆத்மா அபிமானியாக ஆக்குகிறார். ஆத்மா என்றால் என்ன பொருள் என்பதைக் கூட தந்தை கூறுகிறார். மனிதர்கள் எதுவும் அறியாமல் உள்ளார் கள். புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அது என்ன? எப்படி? அதில் பார்ட் நிரம்பி உள்ளது என்பது எதுவும் தெரியாது. இப்பொழுது உங்களுக்கு தந்தை புரிய வைத்துள்ளார். பாரதவாசி களாகிய நீங்கள் 84 பிறவிகளின் பாகம் நடிக்க வேண்டி உள்ளது. பாரதம் தான் உயர்ந்த கண்டம் ஆகும். மனிதர்கள் அனைவருக்குமே இது தீர்த்தம் ஆகும். அனைவருக்கும் சத்கதி அளிக்க தந்தை இங்கு வருகிறார். இராவண இராஜ்யத்திலிருந்து (லிபரேட்) விடுவித்து (கைடு) வழிகாட்டியாக ஆகி அழைத்துச் செல்கிறார். மனிதர்களோ இப்படியே கூறி விடுகிறார்கள். பொருள் எதுவும் அறியாமல் உள்ளார்கள். பாரதத்தில் முதலில் தேவி தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தான் பின்னர் புனர்ஜென்மம் எடுக்க வேண்டி வருகிறது. பாரதவாசிகளே தேவதைகள் பின்னர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிறார்கள். புனர்ஜென்மம் எடுக்கிறார்கள் அல்லவா? இந்த ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதில் 7 நாட்கள் பிடிக்கிறது. பதீதமான (தூய்மை யில்லாத) புத்தியை பாவனமாக (தூய்மை) ஆக்க வேண்டும். இந்த லட்சுமி நாராயணர் பாவன உலகத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள் அல்லவா? அவர்களுடைய இராஜ்யம் பாரதத்தில் இருக்கும் பொழுது வேறு எந்த தர்மம் கூட இருக்கவில்லை. ஒரே ஒரு ராஜ்யம் இருந்தது. பாரதம் எவ்வளவு செழிப்புடன் இருந்தது. வைரம் வைடூரியங்களின் அரண்மனை இருந்தது. பின்னர் இராவண இராஜ்யத்தில் பூசாரி ஆகி உள்ளார்கள். பிறகு பக்தி மார்க்கத்தில் இந்த கோவில்கள் ஆகியவை கட்டினார்கள். சோமநாதரின் கோவில் இருந்தது அல்லவா? ஒரே ஒரு கோவில் மட்டும் இருக்காது. இங்கு கூட சிவன் கோவிலில் எவ்வளவு வைரங்கள் வைடூரியங்கள் இருந்தது அவற்றை முகம்மது கஜினி ஒட்டகங்களில் நிரப்பி கொண்டு எடுத்து சென்றார். எவ்வளவு செல்வம் இருந்தது. ஒரு ஒட்டகம் மட்டுமா என்ன? ஒருவர் லட்சம் ஒட்டகங்கள் எடுத்து வந்தாலும் கூட முழுவதையும் நிரப்பி விட முடியாது. சத்யுகத்தில் தங்கம், வைரம், வைடூரியங் களின் அநேக மாளிகைகள் இருந்தன. முகம்மது கஜினியோ இப்பொழுது வந்துள்ளார். துவாபரத் தில் கூட எவ்வளவு அரண்மனைகள் ஆகியவை இருக்கும். அவை பின்னர் பூகம்பத்தில் உள்ளே சென்று விடுகின்றன. இராவணனினுடையது ஒன்றும் தங்க இலங்கை இருப்பதில்லை. இராவண இராஜ்யத்திலோ பாரதத்திற்கு இந்த நிலைமை ஆகி விடுகிறது. 100 சதவிகிதம் (இரிலிஜியஸ், அன்ரைடியஸ், இன்சால்வென்ட், பதித விஷியஸ்) அதர்மம், அசத்தியம், திவால் மற்றும் விகாரி. புது உலகத்திற்கு (வைஸ்லெஸ்) நிர்விகாரி என்று கூறப்படுகிறது. பாரதம் சிவாலயமாக இருந்தது. அதற்கு (வண்டர் ஆஃப் வர்ல்டு) உலக அதிசயம் என்று கூறப்படுகிறது. மிகவும் குறைவான மனிதர்கள் இருந்தார்கள். இப்பொழுதோ கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ளார்கள். சிந்தனை செய்ய வேண்டும் அல்லவா? இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்காக இந்த புருஷோத்தம சங்கமயுகம் உள்ளது. இப்பொழுது தந்தை உங்களை புருஷோத்தமராக தங்க புத்தியுள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். தந்தை மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான நல்ல வழியை உங்களுக்குத் தருகிறார். உன்னுடைய கதியும் வழியும் தனிப்பட்டது என்று தந்தையின் வழிக்காகத் தான் பாடப்படுகிறது. இதனுடைய பொருள் கூட யாருக்குமே தெரியாது. நான் எப்பேர்ப்பட்ட சிறந்த வழி அளிக்கிறேன் என்றால், நீங்கள் தேவதை ஆகி விடுகிறீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது கலியுகம் முடிவடைகிறது. பழைய உலகத்தின் விநாசம் முன்னால் நின்றுள்ளது. மனிதர்கள் முற்றிலுமே கோரமான இருளில் கும்பகர்ணனின் உறக்கத்தில் உறங்கி உள்ளார்கள். ஏனெனில் கலியுகமோ இப்பொழுது குழந்தை ஆகும். 40 ஆயிரம் வருடங்கள் உள்ளன என்று சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். 84 லட்ச ஜீவராசிகள் என்று நினைத்திருக்கும் காரணத்தால் கல்பத்தின் ஆயுள் கூட நீட்டி முழக்கி விட்டுள்ளார்கள். உண்மையில் இருப்பது 5 ஆயிரம் வருடங்கள். நீங்கள் 84 பிறவிகள் எடுக்கிறீர்கள், 84 லட்சங்கள் அல்ல என்பதை தந்தை புரிய வைக்கிறார். எல்லையில்லாத தந்தையோ இந்த எல்லா சாஸ்திரங்கள் ஆகியவற்றை அறிந்துள்ளார். அதனால் தான் இவை எல்லாமே பக்தி மார்க்கத் தினுடையவை என்று கூறுகிறார். இது அரைக்கல்பம் நடக்கிறது. இதன் மூலம் யாரும் என்னை சந்திப்பதில்லை. இது கூட சிந்தனை செய்ய வேண்டிய விஷயம் ஆகும் - ஒரு வேளை கல்பத்தின் ஆயுள் லட்சக்கணக்கானதாக இருந்திருந்தால் பிறகோ ஜனத் தொகை மிகவுமே அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கிறித்துவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரம் வருடங்களுக் குள்ளேயே இவ்வளவு ஆகி உள்ளது. பாரதத்தினுடைய உண்மையான தர்மம் தேவி தேவதா தர்மம் ஆகும். அது வழி வழியாக வந்திருக்க வேண்டும். ஆனால் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை மறந்து விட்டிருக்கும் காரணத்தால் நம்முடையது இந்து தர்மம் என்று கூறி விடுகிறார்கள். இந்து தர்மமோ இருப்பதே இல்லை. பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை மறந்து விட்டிருக்கும் காரணத்தால் நம்முடையது இந்து தர்மம் என்று கூறி விடுகிறார்கள். இந்து தர்மமோ கிடையாது. பாரதம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருக்கும் பொழுது விஷ்ணுபுரியாக இருந்தது. இப்பொழுது இருப்பது இராவணபுரி அதே தேவி தேவதைகள் 84 பிறவிகளுக்குப் பிறகு என்ன ஆகி விட்டுள்ளார்கள். தேவதைகளை (வைஸ்லெஸ்) நிர்விகாரி என்றும் தங்களை (விஷியஸ்) விகாரி என்றும் கருதி அவர்களுக்குப் பூஜை செய்கிறார்கள். சத்யுகத்தில் பாரதம் (வைஸ்லெஸ்) நிர்விகாரி யாக இருந்தது. புது உலகமாக இருந்தது. அதற்கு புதிய பாரதம் என்று கூறுகிறார்கள். இது இருப்பது பழைய பாரதமாக. புதிய பாரதம் என்னவாக இருந்தது. பழைய பாரதம் என்பது என்ன. புதிய உலகத்தில் பாரதமே புதியதாக இருந்தது. இப்பொழுது பழைய உலகத்தில் பாரதம் கூட பழையது ஆகும். என்ன கதி ஆகி விட்டுள்ளது. பாரதம் தான் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது நரகம் ஆகும். பாரதம் (மோஸ்ட் சால்வென்ட்) மிகவுமே செழிப்புடையதாக இருந்தது. பாரதமே (மோஸ்ட் இன்ஸால் வென்ட்) மிகவும் திவால் ஆக ஆகி உள்ளது. எல்லோரிடமும் யாசகம் கேட்டு கொண்டிருக்கிறது. பிரஜைகளிடம் கூட யாசிக்கின்றார்கள். இதுவோ புரிந்து கொள்ளும் விஷயம் ஆகும் அல்லவா? இன்றைய தேக அபிமானி மனிதர்களுக்கு கொஞ்சம் பைசா கிடைத்த உடனேயே நாங்களோ சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைக் கிறார்கள். சுகதாமத்தை (சொர்க்கம்) முற்றிலுமே அறியாமல் உள்ளார்கள். ஏனெனில் கல்புத்தியாக உள்ளார்கள். இப்பொழுது அவர்களை தங்க புத்தியாக ஆக்குவதற்கு 7 நாள் பட்டியில் அமர்த்தி விடுங்கள். ஏனெனில் பதீதமாக (தூய்மையற்றவராக) உள்ளார்கள் அல்லவா? தூய்மை இல்லாதவர்களை (பதீதமானவர் களை) இங்கோ அமர்த்த முடியாது. இங்கு பாவனமானவர்கள் (தூய்மையானவர்கள்) தான் இருக்க முடியும். பதீதமானவர் களை அனுமதிப்பதில்லை.

நீங்கள் இப்பொழுது புருஷோத்தம சங்கமயுகத்தில் அமர்ந்துள்ளீர்கள். பாபா நம்மை இது போல புருஷோத் தமராக ஆக்குகிறார் என்பதை அறிந்துள்ளீர்கள். இது உண்மையான சத்திய நாராயணரின் கதை ஆகும். சத்திய மான தந்தை உங்களை நரனிலிருந்து நாராயணராக ஆவதற் கான இராஜயோகத்தை கற்பித்துக் கொண்டிருக்கிறார். ஞானம் ஒரு தந்தையிடம் மட்டுமே உள்ளது. அவருக்கு ஞானக் கடல் என்று கூறப்படுகிறது. சாந்தியின் கடல், தூய்மையின் கடல் இது அந்த ஒருவரின் மகிமை மட்டுமே ஆகும். வேறு யாருக்கும் இந்த மகிமை இருக்க முடியாது. தேவதைகளின் மகிமை தனியானது ஆகும். பரமபிதா பரமாத்மா சிவனின் மகிமை தனியானது ஆகும். அவர் தந்தை ஆவார். கிருஷ்ணரை தந்தை என்று கூற மாட்டார்கள். இப்பொழுது பகவான் என்பவர் யார்? இப்பொழுது கூட பாரதவாசி மனிதர்களுக்குத் தெரியாது. கிருஷ்ண பகவானுவாச என்று கூறி விடுகிறார்கள். அவரோ முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறார். சூரிய வம்சத்தினரே சந்திர வம்சத்தினர் பின் அவர்களே வைசிய வம்சத்தினர்.. மனிதர்கள் (ஹம் சோ) நாமே அதுவாக (தேவதை) இருந்தோம் என்பதன் பொருள் கூட புரியாமல் உள்ளார்கள். நாமாகிய ஆத்மாவே பரமாத்மா என்று கூறி விடுகிறார்கள். எவ்வளவு தவறு ஆகும். பாரதத்தின் ஏறும் கலை மற்றும் இறங்கும் கலை எவ்வாறு ஆகிறது என்பதை இப்பொழுது நீங்கள் புரிய வைக்கிறீர்கள். இது ஞானம் ஆகும். அவை எல்லாமே பக்தி ஆகும். சத்யுகத்தில் எல்லோரும் பாவனமாக இருந்தார் கள். ராஜா ராணியின் ராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. அங்கு மந்திரி கூட இருப்பதில்லை. ஏனெனில் சுயம் ராஜா ராணியே அதிபதியாக இருப்பார்கள். தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறப்பட்டு இருப்பார்கள். அவர்களிடம் அறிவு இருக்கும். லட்சுமி நாராயணருக்கு யாரிடமிருந்தும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இருக்காது. அங்கு மந்திரி இருப்பதில்லை. பாரதம் போன்ற (பவித்திரமான) தூய்மையான தேசம் எதுவுமே இருந்ததில்லை. மகான் பவித்திர தேசமாக இருந்தது. பெயரே சொர்க்கம் என்பதாக இருந்தது. இப்பொழுது இருப்பது நரகம். நரகத்தை பிறகு சொர்க்கமாக தந்தை தான் ஆக்குவார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒரு தந்தையின் நல் வழிப்படி நடந்து மனிதனிலிருந்து தேவதை ஆக வேண்டும். இந்த இனிமையான சங்கமயுகத்தில் சுயம் தங்களை புருஷோத்தமராக தங்க புத்தியினராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

2. 7 நாள் பட்டியில் அமர்ந்து பதீதமான (தூய்மையற்ற) புத்தியை பாவன புத்தியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சத்தியமான தந்தையிடம் சத்திய நாராயணரின் உண்மையான கதையைக் கேட்டு நரனிலிருந்து நாராயணர் ஆக வேண்டும்.

வரதானம்:
ஒவ்வொரு பொக்கிஷத்தையும் தந்தையின் வழிகாட்டுதலின் படி காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய நேர்மையானவராக (ஹானஸ்ட்-ஆக) ஆகுக.

யாரொருவர் தந்தையால் கிடைக்கப்பெற்ற பொக்கிஷங்களை, தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுத்த மாட்டார்களோ அவர்களே நேர்மையானவர்கள் என்று சொல்லப்படுவார்கள். ஒருவேளை (தன்னுடைய) நேரம், சொல், செயல், சுவாசம் மற்றும் எண்ணம் ஆகியவற்றை பரமத் (பிறர் வழிப்படி) அல்லது சங்க தோஷத்தின் (கூடாத நட்பு) படி வீணாக இழக்கின்றார்களோ, சுய சிந்தனைக்கு பதிலாக பர சிந்தனை செய்கின்றார்களோ, சுய மரியாதையில் இருப்பதற்கு பதிலாக ஏதேனும் அபிமானத்தில் (அகங்காரத்தில்) வருகின்றார் களோ, ஸ்ரீமத்திற்கு பதிலாக மன்மத்தின் ஆதாரத்தில் (மனதின் வழிப்படி) நடக்கின்றார் களோ - அவர்களை நேர்மையானவர்கள் என்று சொல்லப்பட மாட்டாது. இந்த அனைத்து பொக்கிஷங் களும் உலக நன்மைக்கான (விஷ்வ கல்யாண்) காரியத்திற்காக கிடைக்கப்பெற்றுள்ளது எனவே அந்த காரியத்தில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் - அதுவே நேர்மையானவர் ஆகுவதாகும்.

சுலோகன்:
எதிர்ப்பு என்பதை மாயாவுடன் செய்யுங்கள், தெய்வீக பரிவாரத்துடன் அல்ல.

அவ்யக்த சமிக்ஞை: எண்ணங்களின் சக்தியை சேமிப்பு செய்து சிறந்த சேவைக்கு கருவி ஆகுங்கள்.

அனைத்து ஆத்மாக்களும் ஒரே ஓர் எல்லையற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள், தன்னுடைய குடும்பத்தில் எந்தவொரு ஆத்மாவும் வரதானத்தை பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்பட்டு இருந்து விடக் கூடாது - அப்படிப்பட்ட ஊக்கம், உற்சாகத்துடன் கூடிய உயர்ந்த எண்ணம் சதா (தங்கள்) உள்ளத்தில் இருக்கட்டும். தன்னுடைய குடும்பத்திற்காக மட்டும் பிஸியாக இருந்துவிடாதீர்கள், எல்லையற்ற மேடையில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள், எல்லையற்ற ஆத்மாக்களுக்காக - சேவைக்கான எண்ணங்களை வையுங்கள், இதுவே வெற்றிக்கான எளிமையான வழியாகும்.