01.08.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை குழந்தைகளாகிய உங்களை மாத்திரமே நேசிக்கின்றார். குழந்தைகளாகிய உங்களைச் சீர்திருத்துவதற்காக உங்களுக்கு மாத்திரமே தந்தை ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். சதா இறை கட்டளைகளைப் பின்பற்றி உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

கேள்வி:
எப்பொழுது, எவ்வழிமுறைகளால் உலகில் அமைதி நிலைநாட்டப்படும்?

பதில்:
மகாபாரத யுத்தத்தின் பின்னரே உலகில் அமைதி நிலவும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அதற்கு முன்பாகவே உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் ஸ்திதியைக் கர்மாதீதம் ஆக்குவதற்கு முயற்சி செய்யுங்கள். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கடைந்து, தந்தையின் நினைவால் முற்றிலும் தூய்மை ஆகுங்கள். அப்பொழுதே இவ்வுலகம் மாற்றப்படும்.

பாடல்:
இன்றைய மனிதர்கள் இருளில் உள்ளனர்.

ஓம் சாந்தி.
இப்பாடல் பக்தி மார்க்கத்தில் பாடப்படுகின்றது. தாங்கள் இருளில் இருப்பதாகவும், ஞானம் என்ற மூன்றாவது கண்ணைத் தங்களுக்குக் கொடுக்குமாறும் வேண்டி அவர்கள் பாடுகின்றனர். அவர்கள் ஞானக் கடலிடம் இருந்து ஞானத்தை வேண்டுகின்றார்கள். இல்லாவிடில், அறியாமையே அங்கு இருக்கும். கூறப்பட்டுள்ளது: கலியுகத்தில் ஒவ்வொருவரும் அறியாமை எனும் உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனே. தந்தை கூறுகின்றார்: இந்த ஞானம் மிக எளிமையானது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் வேதங்கள், சமய நூல்கள் போன்ற பலவற்றையும் கற்கின்றனர். அவர்கள் ஹத்தயோகம் செய்வதுடன் குருமாரையும் ஏற்றுக் கொள்கின்றனர். அந்த குருமார்கள் அனைவரும் இப்பொழுது துறக்கப்பட வேண்டும். ஏனெனில், அவர்களால் ஒருபோதும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. தந்தை மாத்திரமே உங்களுக்கு அந்த இராச்சியத்தைக் கொடுக்கின்றார். மனிதர்களால் மனிதர்களுக்கு அதைக் கொடுக்க முடியாது. எவ்வாறாயினும், சந்தோஷமானது காக்கையின் எச்சத்தைப் போன்றது என இதைப்பற்றியே சந்நியாசிகள் கூறுகின்றனர். அதனாலேயே அவர்கள் தங்களது வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு ஓடிச் செல்கின்றனர். எவராலுமன்றி, ஞானக்கடலான தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். கடவுளால் மாத்திரமே இந்த இராஜ யோகத்தைக் கற்பிக்க முடியும். மனிதர்களால் மனிதர்களைத் தூய்மையாக்க முடியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். மனிதர்கள் பக்தி மார்க்கத்திற்குள் மிகவும் சிக்கி விட்டார்கள். அவர்கள் பிறவி பிறவியாக பக்தி செய்து வருகின்றனர். அவர்கள் நீராடுவதற்காக பல்வேறு நீர்நிலைகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் நீராடுவதற்காக கங்கைகளுக்கு மாத்திரமே செல்கின்றனர் என்றில்லை. அவர்கள் எங்கே ஓர் ஏரியைக் கண்டாலும் அதைத் தூய்மை ஆக்கும் ஒன்றாகவே கருதுகின்றனர். இங்கேயும் ஒரு கௌமுக் உள்ளது. நீரூற்றிலிருந்தே அதற்கு நீர் வருகின்றது. கிணற்றிலும் நீர் உள்ளது. எனினும், அதை தூய்மை ஆக்கும் கங்கை என அழைக்க முடியாது. அதுவும் ஒரு யாத்திரை ஸ்தலம் என்றே மனிதர்கள் நினைக்கின்றனர். அதிகளவு நம்பிக்கையுடன் பலர் அங்கு நீராடச் செல்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் அவர்களிடம் அதைக் கூறினாலும், அவர்கள் உங்களை நம்பமாட்டார்கள். அவர்களிடம் சரீர அகங்காரம் அதிகளவில் உள்ளதால், கூறுகின்றனர்: நாங்கள் சமய நூல்கள் பலவற்றைக் கற்றுள்ளோம்! தந்தை கூறுகின்றார்: நீங்கள் கற்றுள்ள அனைத்தையும் மறந்துவிடுங்கள்! எவ்வாறு மனிதர்கள் இவ்விடயங்கள் எதனையும் பற்றி அறிந்திருக்க முடியும்? இதனாலேயே பாபா கூறுகின்றார்: அத்தகைய கருத்துக்களைத் துண்டுப் பிரசுரங்களில் எழுதி, அவற்றை ஆகாய விமானங்களில் இருந்து கீழே போடுங்கள். தற்காலத்தில் அவர்கள் அனைவரும் கேட்கின்றனர்: உலகில் எவ்வாறு அமைதி நிலவமுடியும்? ஒருவர் இதற்கான ஆலோசனை வழங்கும்போது, அவர் ஒரு பரிசைப் பெறுகின்றார். ஆனால் அவரால் அமைதியை ஸ்தாபிக்க முடியாது. அமைதி எங்கே உள்ளது? அவர்கள் தொடர்ந்தும் போலியாக பரிசில்களை வழங்குகின்றனர். யுத்தத்தின் பின்னர் உலகில் அமைதி நிலவும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். இந்த யுத்தம் எந்நேரத்திலும் இடம்பெறலாம். ஏனெனில், அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. குழந்தைகளாகிய நீங்கள் உங்களது கர்மாதீத நிலையை அடையும் வரைக்குமே அது தாமதித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கே முயற்சி தேவைப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும் போதும் ஒரு தாமரை போன்று தூய்மையாக இருப்பதுடன், உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானத்தைக் கடையுங்கள். நாடகத் திட்டத்தின்படி, முன்னைய கல்பத்தைப் போன்று, உலகில் அமைதி நிலைநாட்டப்படும் என்றும் நீங்கள் எழுதலாம். சத்திய யுகத்தில் மாத்திரமே உலகில் அமைதி நிலவ முடியும் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். இங்கு, நிச்சயமாக அமைதியின்மையே உள்ளது. எவ்வாறாயினும், நீங்கள் கூறுவதை நம்பாத சிலரும் இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் சுவர்க்கத்திற்குச் செல்லப் போவதில்லை. அவர்கள் ஸ்ரீமத்தையேனும் பின்பற்றுவதில்லை. ஸ்ரீமத்திற்கேற்ப தூய்மையாக இருக்க முடியாத பலர் இங்கு உள்ளனர். நீங்கள் அதிமேலான கடவுளிடம் இருந்து வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். ஒருவரது நடத்தை சரியாக இல்லாவிட்டால், மற்றவர்கள் அவருக்குக் கூறுவார்கள்: கடவுள் உங்களுக்கு நல்ல விவேகத்தைக் கொடுப்பாராக! நீங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் 63 பிறவிகளாக நச்சுக்கடலில் தடுமாறி அலைந்தீர்கள். தந்தை குழந்தைகளுடன் மாத்திரமே பேசுகின்றார். தந்தை தனது சொந்தக் குழந்தைகளை மாத்திரமே சீர்திருத்துகின்றார். எவ்வாறு அவரால் முழு உலகையும் சீர்திருத்த முடியும்? வெளியிலுள்ள மக்களுக்கு அவர் கூறுகின்றார்: எனது குழந்தைகளிடம் இருந்து அனைத்தையும் கற்றுக் கொள்ளுங்கள். தந்தையால் வெளியிலுள்ள மக்களுடன் பேசமுடியாது. தந்தை தனது சொந்தக் குழந்தைகள்மீது பேரன்பு வைத்துள்ளார். அவர் மாற்றாந்தாய்க் குழந்தைகளில் அந்தளவு அன்பு வைத்திருக்கவில்லை. ஒரு லௌகீகத் தந்தை தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கே செல்வத்தைக் கொடுப்பார். அவரது குழந்தைகள் அனைவருமே ஒரேமாதிரி இருப்பார்கள் என்றில்லை. தந்தையும் கூறுகின்றார்: எனக்குச் சொந்தமானவர்களுக்கே நான் இந்த ஆஸ்தியைக் கொடுக்கின்றேன். எனக்குச் சொந்தமாக இல்லாதவர்களால் அதை ஜீரணிக்க முடியாது. அவர்களால் ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாது. அவர்கள் பக்தர்கள். அத்தகைய பலரை பாபா பார்த்திருக்கின்றார். பிரபல்யமான சந்நியாசிகள் வரும்போது, அவர்கள் பல சீடர்களையும் அழைத்து வருகின்றனர். அவர்கள் நிதி சேகரிக்கின்றனர். ஒவ்வொருவரும் தத்தமது கொள்ளளவிற்கேற்ப நிதி வழங்குகின்றனர். இங்கு, தந்தை நிதி சேர்க்குமாறு உங்களிடம் கூறுவதில்லை. இல்லை, இங்கு, நீங்கள் என்ன விதையை விதைக்கின்றீர்களோ, அதற்கான பலனை 21 பிறவிகளுக்குப் பெறுவீர்கள். மக்கள் தானம் செய்யும்போது, தாங்கள் கடவுளின் பெயரால் அதைச் செய்வதாக நம்புகின்றனர். அவர்கள் அதைக் கடவுளுக்கு அல்லது ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் ஏன் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிடுகின்றனர்? ஏனெனில், அவர்கள் அவரையே கீதையின் கடவுளாகக் கருதுகின்றனர். தாங்கள் அனைத்தையும் ஸ்ரீராதையிடம் அர்ப்பணிப்பதாக அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. தாங்கள் கடவுளிடம் அல்லது ஸ்ரீகிருஷ்ணரிடம் அர்ப்பணிப்பதாகவே அவர்கள் கூறுகின்றனர். கடவுளே அதற்கான பலனைக் கொடுப்பார் என்பதை அவர்கள் அறிவார்கள். ஒரு குழந்தை செல்வந்தக் குடும்பத்தில் பிறக்கும்போது, அக்குழந்தை தனது முன்னைய பிறவியில் பெருமளவு தானங்கள் செய்திருக்க வேண்டும் என்றும், அதனாலேயே அவர் அங்கு பிறப்பு எடுத்திருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. அவரால் ஓர் அரசனாகவும் ஆகமுடியும். எவ்வாறாயினும், அந்தச் சந்தோஷம் காக்கையின் எச்சத்தைப் போன்று தற்காலிகமானதாகும். சந்நியாசிகள் ‘பெண்கள் பாம்பைப் போன்றவர்கள்’ எனக் கூறி, அரசர்களைத் துறவறத்திற்குத் தூண்டுகின்றனர். எவ்வாறாயினும், திரௌபதி துச்சாதனனிடமிருந்து தன்னைப் பாதுகாக்குமாறு கூவியழைத்தாள். இப்பொழுதும்கூட, அப்பாவித் தாய்மார் தங்களது மரியாதையைக் காப்பாற்றுமாறு அழைக்கின்றனர். “பாபா, அவர் என்னை அதிகளவில் அடிக்கின்றார்!” அவர்கள் நஞ்சிற்காகக் கொலை செய்யக்கூட ஆயத்தமாக இருக்கின்றார்கள். “பாபா, இந்த பந்தனத்திலிருந்து என்னை விடுவியுங்கள்!” தந்தை கூறுகின்றார்: பந்தனம் முடிவுக்கு வரவுள்ளது. அதன்பின்னர் எவரும் 21 பிறவிகளுக்குத் துகிலுரியப்பட மாட்டார்கள். அங்கு விகாரம் கிடையாது. இதுவே மரண பூமியில் இறுதிப் பிறவியாகும். இது விகார உலகம். தந்தை விளங்கப்படுத்துகின்ற இரண்டாவது விடயம்: இந்நேரத்தில் மனிதர்கள் மிகவும் விவேகமற்றவர்கள் ஆகிவிட்டனர். ஒருவர் மரணிக்கும்போது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், சுவர்க்கம் எங்கே உள்ளது? இது நரகமாகும். அவர் சுவாக்கவாசி ஆகிவிட்டார் என்றால், அவர் நிச்சயமாக முன்னர் நரகவாசியாகவே இருந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், ஒருவரை நரகவாசி என நீங்கள் நேரடியாகக் கூறினால், அவர் கோபப்படுவதுடன், குழப்பம் அடைவார். அத்தகைய மக்களுக்கு எழுதுங்கள்: இன்ன இன்னார் சுவர்க்கவாசி ஆகிவிட்டார். அதன் அர்த்தம் நீங்கள் ஒரு நரகவாசி என்பதேயாகும். நீங்கள் உண்மையிலேயே சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான வழிமுறையை இப்பொழுது எங்களால் உங்களுக்குக் காண்பிக்க முடியும். இப்பழைய உலகம் இப்பொழுது அழிக்கப்பட உள்ளது. மிகச்சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததைப் போன்று, யுத்தத்தின் பின்னர் உலகில் அமைதி நிலவும் என்பதைப் பத்திரிகைகளில் அச்சிடுங்கள். அங்கு ஒரேயொரு ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மாத்திரமே இருந்தது. கம்சன், ஜரசந்தன் போன்ற அசுரர்களும் அங்கு இருந்ததாகவும், இராவணன் திரேதாயுகத்தில் இருந்ததாகவும் அம்மக்கள் கூறுகின்றனர். அம்மக்களுடன் யார் தங்களது தலைகளை மோதிக் கொள்வார்கள்? இந்த ஞானத்திற்கும், பக்திக்கும் இடையில் பகலுக்கும், இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. இது அத்தகையதோர் எளிமையான விடயமாகும். இருந்தும், அது எவரது புத்தியிலும் அரிதாகவே பதிகின்றது! எனவே, அத்தகைய சுலோகங்களை உருவாக்குங்கள். நாடகத்தின்படி, இந்த யுத்தத்தின் பின்னர் உலகில் அமைதி நிலவும். ஒவ்வொரு கல்பத்திலும், உலகில் அமைதி ஏற்படுகின்றது. பின்னர், கலியுக இறுதியில் அமைதியின்மை நிலவுகின்றது. சத்திய யுகத்தில் மாத்திரமே அமைதி இருக்கும். கீதையில் ஏற்பட்ட தவறு காரணமாகவே பாரதம் இப்பொழுது இந்த நிலையை அடைந்துள்ளது என்பதையும்கூட நீங்கள் எழுதலாம். முழுமையாக 84 பிறவிகளை எடுக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரை அவர்கள் புகுத்தியதே அந்தத் தவறு ஆகும். அவர்கள் ஸ்ரீ நாராயணனின் பெயரைப் புகுத்தவில்லை. அவர் முழுமையான 84 பிறவிகளை விடவும் சில நாட்கள் குறைவாகவே கொண்டுள்ளார். ஸ்ரீகிருஷ்ணர் முழுமையாக 84 பிறவிகளை எடுக்கின்றார். சிவபாபா குழந்தைகளை வைரங்கள் போன்று ஆக்குவதற்காக வருகின்றார். எனவே, தந்தை வருவதற்கு, ஒரு பொற்பாத்திரம் இருக்க வேண்டும். எவ்வாறு இவரால் பொன்னாக முடியும்? இதனாலேயே பாபா அவருக்கு உடனடியாகவே காட்சிகளைக் கொடுத்தார். அவர் கூறினார்: நீங்கள் ஓர் உலக அதிபதி ஆகவேண்டும். இப்பொழுது சதா என்னை மாத்திரம் நினைவு செய்து, தூய்மை ஆகுங்கள். எனவே, அவர் உடனடியாகவே தூய்மையாக ஆரம்பித்தார். ஒருவர் தூய்மை ஆகாவிட்டால், அவரால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியாது. பெண்சிங்கத்தின் பாலை வைத்திருப்பதற்கு, ஒரு தங்கப் பாத்திரம் தேவைப்படுகின்றது. இது பரமபிதா, பரமாத்மாவின் ஞானமாகும். இந்த ஞானத்தைக் கிரகிப்பதற்கு ஒருவருக்குத் தங்கப் பாத்திரம் தேவையாகும். நீங்கள் தூய்மை ஆகினால் மாத்திரமே தாரணை இடம்பெற முடியும். ஒருவர் தூய்மையைக் கடைப்பிடிப்பதற்குச் சத்தியம் செய்த பின்னர் வீழ்ந்துவிட்டால், யோக யாத்திரை முடிவடைந்து விடுகின்றது. இந்த ஞானம்கூட முடிவடைந்து விடுகின்றது. பின்னர், காமமே மாபெரும் எதிரி எனக் கடவுள் கூறுவதாக அவரால் வேறு எவருக்கும் கூறமுடியாது. அவர் விடுகின்ற அம்பு இலக்கைத் தாக்காது. அத்தகையவர்கள் சேவல்களைப் போன்று ஆகுகின்றார்கள். அவர்களால் இந்த ஞானத்தை வெறுமனே கூவ மாத்திரமே முடியும். (அவர்கள் தாங்கள் போதிப்பதைப் பயிற்சி செய்வதில்லை.) எந்த விகாரமும் எஞ்சியிருக்கக் கூடாது. உங்களது நாளாந்த அட்டவணையை வைத்திருங்கள்! தந்தை சர்வசக்திவானாக இருப்பதைப் போன்றே மாயையும் சர்வசக்திவான் ஆவாள். இராவண இராச்சியம் அரைக் கல்பத்திற்குத் தொடர்கின்றது. எவராலுமன்றி, தந்தையால் மாத்திரமே உங்களை இராவணனை வெற்றி கொள்ளுமாறு செய்யமுடியும். நாடகத்தின்படி, இராவண இராச்சியம் இருந்தாக வேண்டும். இந்நாடகம் பாரதத்தின் வெற்றி தோல்வியை அடிப்படையாகக் கொண்டது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே இதனை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் தூய்மையாக வேண்டும் என்பதே பிரதான விடயமாகும். தந்தை கூறுகின்றார்: நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்க வருகின்றேன். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் யுத்தம் இடம்பெறுவதையும், அவர்கள் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதையும் சித்தரித்துள்ளனர். எவ்வாறு அத்தகைய விடயங்கள் அங்கு இடம்பெற முடியும்? அது இராஜ யோகக் கல்வியாக இருக்க முடியுமா? ஒரு யுத்த களத்தில் கீதை பாடசாலை இருக்க முடியுமா? ஒரு புறத்தில் பிறப்பு, இறப்புகளுக்கு அப்பாற்பட்ட சிவபாபா உள்ளார். மறு புறத்தில் முழுமையாக 84 பிறவிகளை எடுக்கின்ற ஸ்ரீகிருஷ்ணர் உள்ளார். தந்தை வந்து, அவரது இறுதிப் பிறவியில் அவரினுள் பிரவேசிக்கின்றார். இது மிகத் தெளிவானது! வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்போது, நீங்கள் தூய்மையாக வேண்டும். ஒன்றாக வாழ்கின்ற தம்பதியினர் தூய்மையாக இருக்க முடியாது எனச் சந்நியாசிகள் கூறுகின்றனர். அவர்கள் எவ்வித பேறுகளையும் பெறாமல் இருப்பதனாலேயே அவர்களால் ஒன்றாக இருக்க முடியாதுள்ளது எனச் சந்நியாசிகளிடம் கூறுங்கள். எவ்வாறாயினும், இங்கு, நாங்கள் உலக இராச்சியத்தைப் பெறுகின்றோம். எனக்காக, குலத்தின் கௌரவத்தைப் பேணுங்கள்! எனத் தந்தை கூறுகிறார். சிவபாபா கூறுகின்றார்: இவரது தாடியின் கௌரவத்தைப் பேணுங்கள். இந்த இறுதிப் பிறவியில் தூய்மையாக இருங்கள், நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காக முயற்சி செய்யவேண்டும். வேறு எவராலும் சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது. உங்களது இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அங்கு எல்லா வகையான மக்களும் இருக்கவேண்டும். எவ்வாறாயினும், அங்கு ஆலோசகர்கள் இருப்பதில்லை. அங்குள்ள அரசர்களுக்கு ஆலோசனைகள் தேவையில்லை. தூய்மையற்ற அரசர்கள் ஓர் ஆலோசகரைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. இங்கு, பல அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் தங்கள் மத்தியில் சண்டை போடுகின்றனர். தந்தை அச்சிக்கல்கள் அனைத்திலிருந்தும் உங்களை விடுவிக்கின்றார். பின்னர், 3000 வருடங்களுக்கு யுத்தம் எதுவும் கிடையாது. சிறைச்சாலைகள் எதுவும் இருக்க மாட்டாது. நீதிமன்றங்கள் போன்ற எதுவும் இருக்க மாட்டாது. அங்கு சந்தோஷம், சந்தோஷம் மாத்திரமே உள்ளது. நீங்கள் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். மரணம் உங்களுக்குச் சற்று முன்னாலேயே உள்ளது. நினைவு யாத்திரை மூலம் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுங்கள். நீங்கள் ‘மன்மனாபவ’ என்ற தந்தையின் செய்தியை அனைவருக்கும் கொடுக்கவேண்டிய தூதுவர்கள் ஆவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த ஞானத்தைக் கிரகிப்பதற்கு, தூய்மையாகி, உங்கள் புத்தி என்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்துங்கள். இந்த ஞானத்தை வெறுமனே கூவுகின்ற ஞான சேவல் ஆகாதீர்கள். (தான் போதிப்பதைப் பயிற்சி செய்யாதவர்).

2. உங்களிடமுள்ள அனைத்தையும் நேரடியாகத் தந்தையிடம் அர்ப்பணித்து விடுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றி, 21 பிறவிகளுக்கு இராஜ அந்தஸ்தைக் கோரிக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்தி அவற்றை அதிகரிப்பதன் மூலம் அதிகபட்ச செல்வந்தராகவும் விவேகியாகவும் ஆகுவீர்களாக.

விவேகமான குழந்தைகள் ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்துவதற்கான வழிமுறையை அறிந்திருப்பார்கள். எந்தளவிற்கு நீங்கள் சக்திகளைப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அந்த சக்திகள் அதிகரிக்கும். எனவே, ஒவ்வோர் ஆத்மாவும் ஏதாவது ஒன்றை உங்களிடம் இருந்து பெற்று, உங்களின் புகழைப் பாடும் வகையில் ஆன்மீக வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குங்கள். நீங்கள் அவர்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒன்றை, அது முக்தியோ அல்லது ஜீவன்முக்தியோ அதை வழங்க வேண்டும். ஆன்மீக வரவுசெலவுத் திட்டத்தைச் செய்யுங்கள். ஆன்மீக சக்திகள் எல்லாவற்றையும் சேமித்து, அந்தச் சக்திகளைப் பயன்படுத்துங்கள். பிச்சைக்காரர்களாக இருப்பதில் இருந்தும் துன்பம் மற்றும் அமைதி இன்மையில் இருந்தும் ஆத்மாக்கள் எல்லோரையும் விடுவியுங்கள்.

சுலோகம்:
தூய எண்ணங்களை உங்களின் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் ஆக்குங்கள். நீங்கள் சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்கள் ஆகுவீர்கள்.

அவ்யக்த சமிக்கை: ஒரு இலகு யோகியாக இருப்பதற்கு, இறை அன்பை அனுபவிப்பவராக இருங்கள்.

இறையன்பில் அனுபவம் வாய்ந்தவர் ஆகுங்கள். இந்த அனுபவம் உங்களை இலகு யோகி ஆக்கித் தொடர்ந்து பறக்கச் செய்யும். இறையன்பே பறப்பதற்கான வழிமுறை ஆகும். பறப்பவர்களால் பூமியால் ஈர்க்கப்பட முடியாது. மாயையின் ரூபம் எத்தனை கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்களை அந்தக் கவர்ச்சி சென்று அடைய முடியாது.

மாதேஸ்வரியின் பெறுமதிமிக்க வாசகங்கள்

இப்பொழுது பாவ காரியங்கள் செய்வதில் போட்டி போடாதீர்கள்.

முதன் முதலில், எவ்வாறாயினும், நீங்கள் நிச்சயமாக உங்கள் விகாரங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்பொழுதே, உங்களால் இறை சந்தோஷத்திலும் அமைதியிலும் நிலைத்திருக்க முடியும். எங்கள் பிரதான முயற்சியானது, நாங்களும் அமைதி நிறைந்தவர்கள் ஆகி, பிறரையும் அமைதி நிறைந்தவர்கள் ஆக்குவதாகும். இதற்கு எமக்கு நிச்சயமாக சகிப்புத் தன்மை அவசியமாகும். அனைத்தும் எங்களிலேயே தங்கியுள்ளது. யாராவது ஏதாவது கூறியவுடன் அமைதியை இழப்பவர்களாக நாம் இருக்கக் கூடாது. இல்லை. இந்த ஞானத்தில், முதலாவதாக, நாம் கிரகிக்க வேண்டிய நற்குணம், சகிப்புத் தன்மையாகும். பாருங்கள், அறியாமைப் பாதையில், கூறப்பட்டுள்ளது: ஒருவர் எவ்வளவு உங்களை இகழ்ந்தாலும், ‘அதனால் நான் பாதிக்கப்படவில்லை’ என்றே நீங்கள் நினைக்க வேண்டும். உங்களை இகழ்ந்த நபரே அமைதி இழந்தார். ஆனால் அவரின் கர்ம கணக்கு அவருக்கானதாகும். ஆனால், நானும் அமைதி இழந்து ஏதேனும் கூறினால், அது எனது பாவக் கணக்கு ஆகின்றது. ஆகையால், நான் எப்பாவமும் செய்வதில் போட்டியிடக் கூடாது. எங்கள் பாவங்களை எரிக்க வேண்டுமே அன்றி, மென் மேலும் அதனை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. நாங்கள் அத்தகைய பாவங்களை பிறவி பிறவியாக செய்து துன்பத்தை எடுத்திருக்கின்றோம். இந்த விகாரங்களை வெற்றி கொள்வதற்கான இந்த ஞானத்தை நாம் பெற்றிருக்கின்றோம். விகாரங்கள் பெரியளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது. அவை மிகவும் சூட்சுமமாகவே வருகின்றன. சிலவேளைகளில் பொறாமை ஏற்படுவதால், நீங்கள் நினைக்கிறீர்கள்: இவர் இதைச் செய்யும் போது நானும் ஏன் அதைச் செய்யக் கூடாது? இது பெருந்தவறாகும். நீங்கள் தவறுகள் செய்வதில் இருந்து விடுபட வேண்டும். ஒருவர் ஏதேனும் ஒன்றைக் கூறினால், அதனை உங்களுக்கான பரீட்சை என எடுத்துக் கொள்ளுங்கள். எந்தளவிற்கு உங்களுக்கு சகிப்புத் தன்மையுள்ளது எனப் பாருங்கள். “நான் அதிகளவு சகித்திருக்கிறேன்” என நீங்கள் கூறினாலும், ஆனால் ஒரு முறையேனும் முரண்பட்டிருந்தால், நீங்கள் இறுதியில் தோல்வி அடைந்து விடுகிறீர்கள். யாரேனும் தனது கணக்கு இதனால் பாழாகுகிறது எனக் கூறினாலும், நானே எனது கணக்கை உருவாக்க வேண்டும், பாழாக்கக் கூடாது, எனவே நான் நல்ல முயற்சியை செய்து, பிறவி பிறவிக்காக எனக்கான நல்ல வெகுமதியை நானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். விகாரங்களின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள், தமக்குள் அசுர ஆவிகளைக் கொண்டிருப்பதாலேயே அத்தகைய அசுர ஆவிகளிடம் இருந்து அத்தகைய மொழி வெளிப்படுகின்றது. எவ்வாறாயினும், தெய்வீக ஆத்மாக்களிடம் இருந்து தெய்வீகமான மொழியே வெளிப்படும். எனவே, நான் என்னை அசுரத்தனமாக அல்லாது தெய்வீகமாகவே ஆக்க வேண்டும். அச்சா.