02.05.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்நாடகத்தில் நிச்சயமாக விநாசம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாசம் நடைபெறும் முன்னர் நீங்கள் கர்மாதீதம் ஆகவேண்டும்.
கேள்வி:
நீங்கள் தந்தைக்கு முன்னர் நேரடியாக அமர்ந்திருக்கும் பொழுது, தந்தையால் பேசப்படும் எவ்வார்த்தைகள் உங்களைப் பெருமளவுக்குக் கவர்கின்றன?பதில்:
நீங்கள் தந்தைக்கு முன்னர் நேரடியாக அமர்ந்திருக்கும் பொழுது, 'நீங்கள் என்னுடைய குழந்தைகள்" என அவர் அவர் கூறுகின்ற வார்த்தைகள் உங்களைப் பெருமளவுக்குக் கவர்கின்றன. நீங்கள் இதனை நேரடியாகக் கேட்கும்பொழுது, அதிகளவு களிப்படைகிறீர்கள். மதுவனம் குழந்தைகள் அனைவரையும் கவர்கிறது, ஏனெனில் இங்கு இது இறை குடும்பமாகும். இதுவே பிராமணர்களின் ஒன்றுகூடல் ஆகும். பிராமணர்கள் தங்கள் மத்தியில் இந்த ஞானத்தை மாத்திரமே பரிமாறிக் கொள்கிறார்கள்.பாடல்:
எங்கள் யாத்திரை தனித்துவமானது.ஓம் சாந்தி.
நீங்கள் ஓர் அழிவற்ற, ஆன்மீக யாத்திரையில் செல்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இந்த யாத்திரையில் இருந்து மரண பூமிக்குத் திரும்பிச் செல்ல மாட்டீர்கள். நாங்கள் இங்கு திரும்பி வராத, அத்தகையதொரு யாத்திரை இருக்க முடியும் என்பதை மக்கள் அறிய மாட்டார்கள். அதிர்ஷ்ட நட்சத்திரங்களாகிய நீங்கள் இப்பொழுது இதனை அறிவீர்கள். இதனை மிகவும் உறுதியாக நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் எங்கள் பாகங்களை நடிக்கிறோம். ஏனைய நாடகங்களில் நீங்கள் கூற மாட்டீர்கள்: ஆத்மாவாகிய நான், இந்த ஆடையை அணிந்து, இப்பாகத்தை நடித்து, இப்பொழுது வீடு திரும்புகிறேன். அவர்கள் தங்களைச் சரீரதாரிகளாகக் கருதுகிறார்கள். நீங்கள் ஆத்மாக்கள், நீங்கள் உங்கள் சரீரங்களாகிய ஆடைகளை நீக்கி விட்டு, வேறொன்றை எடுப்பீர்கள் என்ற ஞானம் இங்கு, குழந்தைகளான உங்களுக்கு உள்ளது. இந்த ஆடைகள் 84 பிறவிகளின் வயதைக் கொண்டவை. நீங்கள் அவற்றை நீக்கி விட்டு, புதிய உலகில் புதிய ஆடைகளைப் பெறுவீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் புதிய ஆடைகளை அணிகிறார்கள். அவர்கள் உங்கள் இராச்சியத்துக்கு உரியவர்கள். நீங்கள் சென்று, அத்தகைய புதிய, தெய்வீக ஆடைகளையும் அணிகிறீர்கள். இங்கு, நீங்கள் கூறுகிறீர்கள்: நான் தெய்வீகக் குணங்கள் அற்றவன், என்னிடம் தெய்வீகக் குணங்கள் இல்லை. தந்தை மாத்திரமே உங்களைத் தெய்வீகக் குணங்கள் உடையவர்கள் ஆக்குகிறார். அவர் கூறுகிறார்: உங்களை விகாரமற்றவர்கள் ஆக்குவதற்காக வருகின்ற பாகம் எனக்கும் உள்ளது. இந்தப் பூமி இராவண இராச்சியமான, பந்தன வாழ்க்கைப் பூமியாகும். நீங்கள் எவ்வாறு தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆகுகிறீர்கள் என்பதும், பின்னர் தூய்மையானவர்களிலிருந்து தூய்மை அற்றவர்கள் ஆகுகிறீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளன. கலியுகமே இருள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது இப்பொழுது இராவண இராச்சியத்தின் இறுதியாகும், இராம இராச்சியம் ஆரம்பமாக உள்ளது; இப்பொழுது இது சங்கமயுகம். தந்தை சக்கரத்தின் சங்கமயுகத்தில் வரவேண்டும். இப்பொழுது விநாச வேளை என்பதையும், ஸ்தாபனையின் பொருட்டு, கடவுள் எங்காவது ஒரு மறைமுகமான ரூபத்தில் இருக்கிறார் என்பதையும் உலக மக்களும் புரிந்து கொள்கிறார்கள். ஆத்மாக்களாகிய நீங்களும் ஒரு மறைமுகமான ரூபத்தில் இருக்கிறீர்கள். ஆத்மா தனது சரீரத்தில் இருந்து வேறுபட்டவர். அம் மனித ஆடை உங்கள் மறைமுகமான ஆடையாகும். தந்தையும் இந்தச் சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். நீங்கள் உங்கள் சரீரங்களுக்குப் பெயரிட்டுள்ளீர்கள், ஆனால் அவருக்கென ஒரு சரீரமேனும் இல்லை. நீங்கள் ஆத்மாக்கள், அவரும் ஓர் ஆத்மாவே ஆவார். ஆத்மா இப்பொழுது ஆத்மாக்களுடன் பற்றைக் கொண்டிருக்கிறார். நினைவு கூரப்பட்டுள்ளது: நான் ஏனைய அனைவரிடம் இருந்தும் என்னைத் துண்டித்து, உங்களுடன் மாத்திரம் என்னைத் தொடர்புபடுத்துவேன். நீங்கள் பற்றை வென்றவராக இருப்பதைப் போன்றே, நாங்களும் அவ்வாறு ஆகுவோம். பாபா முழுமையாகவே பற்றை வென்றவர். காமச் சிதையில் அமர்ந்ததனால் எரிந்து போயுள்ள பல்வேறு குழந்தைகள் இருக்கிறார்கள். பரமாத்மாவாகிய பரமதந்தை பழைய உலகை அழிப்பதற்கு மாத்திரமே வருகிறார். ஆகவே, எவ்வாறு அவருக்குப் பற்று இருக்க முடியும்? தூய்மை அற்றவர்கள் அழிக்கப்படும் பொழுது மாத்திரமே, அமைதி இராச்சியம் இருக்க முடியும். இவ்வேளையில் எவரிடமும் சந்தோஷம் இல்லை. அனைவரும் தமோபிரதானாக உள்ளதுடன், துன்பத்தையும் அனுபவம் செய்கிறார்கள். இதுவே தூய்மையற்ற உலகமாகும். சிவபாபா வந்து, சிவாலயம் என்று அழைக்கப்படுகின்ற, சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். சிவபாபா தேவர்களின் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார், அதுவே உயிருள்ள சிவாலயம் ஆகும். சிவனின் விக்கிரகம் உள்ள சிவாலயம் உயிரற்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் உண்மையிலேயே சுவர்க்க அதிபதிகளாக இருந்தார்கள் என்பதையும், அவர்கள் வழிபடத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதையும், இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகிறார்கள் என்பதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். உங்களிடம் இப்பொழுது இந்த ஞானம் உள்ளதால், நீங்கள் இலக்ஷ்மி நாராயணனை வணங்குவதற்காக அவர்களின் ஆலயத்துக்குச் செல்வதில்லை. நீங்கள் உயிருள்ள ரூபத்தில் அவர்களின் இராச்சியத்துக்குச் செல்வீர்கள். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது நீங்கள் அவ்வாறில்லை என்பதையும் அறிவீர்கள். கடந்த காலத்தில் இருந்தவர்களின் விக்கிரகங்களே உருவாக்கப்பட்டுள்ளன. இலக்ஷ்மி நாராயணனுக்கு பிர்லா அதிகளவு ஆலயங்களைக் கட்டி உள்ளார். ஆகவே, நீங்கள் அவருக்கான சேவையையும் செய்ய வேண்டும். அவருக்குக் கூறுங்கள்: நீங்கள் இந்த ஆலயங்களை யாருக்குக் கட்டி உள்ளீர்களோ, அந்த இலக்ஷ்மி நாராயணனின் 84 பிறவிகளின் கதையை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். இந்தப் பரிசை அவருக்குச் சாதுரியமாகக் கொடுங்கள். பாபா உங்களுக்குச் சேவை செய்வதற்கான வழிகளைக் காண்பிக்கிறார். தாய்மார்கள் சென்று அவர்களுக்குக் கூற வேண்டும்: நீங்கள் அவர்களுக்கு ஆலயங்களைக் கட்டுகிறீர்கள், ஆனால் நீங்கள் அவர்களின் வாழ்க்கைச் சரிதையை அறியாதுள்ளீர்கள். நாங்கள் இதை அறிவோம், எங்களால் உங்களுக்கு அதனை விளங்கப்படுத்த முடியும். விளங்கப்படுத்துபவர்கள் அதனை மிகவும் சுவாரஸ்யமான முறையில் செய்ய வேண்டும். தந்தையும் இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாபா கூறுகிறார்: உங்களுக்கு வர அனுமதி இல்லாவிட்டால், வீட்டில் அமர்ந்திருந்து என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதை அறிவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் முரளிகளைப் பெறுகிறீர்கள். நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நினைவு யாத்திரை நன்றாக இருக்கும் என்றும், நீங்கள் வீட்டில் இருக்கும் பொழுது, உங்கள் நினைவு யாத்திரை குறைவாக இருக்கிறது என்பதும் இல்லை. புத்துணர்ச்சி ஊட்டப்படுவதற்கே முகில்கள் வருகின்றன. நீங்களும் இங்கு புத்துணர்ச்சி ஊட்டப்படுவதற்கே வருகிறீர்கள். நீங்கள் பாபாவிடம் நேரடியாக வருவதற்கே விரும்புகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஞானத்தை நேரடியாகச் செவிமடுக்கும் பொழுது, களிப்படைகிறீர்கள். ஆனால் அது அதேவிடயமே. எவ்வாறு சிவபாபா இங்கே அமர்ந்திருந்து உங்களுக்குக் கூறுகிறார் என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் காண முடியும்: குழந்தைகளே, நீங்கள் எனக்கு உரியவர்கள். நீங்கள் உங்களுடைய 84 பிறவிகளின் பாகங்களை நடித்து விட்டீர்கள். நீங்கள் பிறப்பு இறப்புச் சக்கரத்தினுள் வருகிறீர்கள், ஆனால் நான் வருவதில்லை. நான் மறுபிறவி எடுப்பதில்லை. நான் பிறப்புக்கு அப்பாற்பட்டவர் என்பதுமல்ல. நான் வருகிறேன், ஆனாலும் நான் ஒரு பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன். ஆத்மாக்களான நீங்கள் (கருப்பையில் உள்ள) குழந்தைகளின் சரீரங்களில் பிரவேசிக்கிறீர்கள். நான் எனது பாகத்தை நடிப்பதற்குப் பரந்தாமத்தில் இருந்து கீழே வருகிறேன். நான் ஒரு விகாரமுடைய நபரின் கருப்பையினுள் பிரவேசிப்பதில்லை. நீங்கள் என்னை அழைக்கிறீர்கள்: நீங்களே தாயும், நீங்களே தந்தையும். எவரும் என்னுடைய தாயாகவோ அல்லது தந்தையாகவோ முடியாது. நான் என்னுடைய பாகத்தை நடிப்பதற்காக, ஒரு சரீரத்தின் ஆதாரத்தைப் பெறுகிறேன். உங்கள் துன்பத்தை அகற்றி, உங்களுக்குச் சந்தோஷத்தை அருளும்படி நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். நான் இப்பொழுது உங்கள் முன்னிலையில் நேரடியாகவே வந்துள்ளேன். நான் ஆத்மாக்களாகிய உங்களுடன் பேசுகிறேன். இங்கு, நீங்கள் அனைவரும் பிராமணர்கள். நீங்கள் வெளியே செல்லும் பொழுது, அன்னங்களும் நாரைகளும் ஆகுகிறீர்கள். இங்கு (மதுவனத்தில்) உங்களுக்குப் பிராமணர்களின் சகவாசம் மாத்திரமே உள்ளது. நீங்கள் உங்கள் மத்தியில் இந்த ஞானத்தைப் பற்றி மாத்திரம் சம்பாஷிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். பாபா வந்து, தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்கின்ற முறையை ஒருவருக்கொருவர் கூறுவதற்கு உங்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார். உணவை உண்ணும் வேளையிலும் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் தந்தையை நினைவு செய்யுமாறு சமிக்ஞை கொடுங்கள். இது மிகப் பெரியதொரு ஒன்றுகூடல். அங்கு உங்களுடன் விகாரம் உடையவர்களே வசிக்கிறார்கள். ஆகவே, அங்கு அந்த ஈர்ப்பு இருக்கிறது. இங்கு எவருடைய ஈர்ப்பும் இருக்காது. சத்திரியர்கள் சத்திரியர்களுடனேயே வசிக்கிறார்கள். இது உங்கள் குடும்பம். நீங்கள் சந்திக்கின்ற எவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதை மாத்திரமே உங்கள் புத்தி அறிந்துள்ளது: தொடர்ந்தும் கடவுளை நினைவு செய்யுங்கள். இரு தந்தையர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு ஒரு லௌகீகத் தந்தை இருந்தாலும், அவர்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். அவர்கள் லௌகீகத் தந்தையர்கள்; அவர்கள் தந்தையாகிய கடவுள் என அழைக்கப்பட மாட்டார்கள். இந்த ஒரேயொருவர் இவ்வுலகத்துக்கு அப்பாற்பட்ட தந்தை. நீங்கள் நிச்சயமாகத் தந்தையாகிய கடவுளிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெற வேண்டும். தொடர்ந்தும் இவ்வழியில் இந்த ஞானத்தை ரீங்காரமிடுங்கள். நீங்கள் பிராமணர்கள். சந்நியாசிகளும் இவ்வுலகச் சந்தோஷம் ஒரு காக்கை எச்சத்தைப் போன்றது என்ற ஞானத்தை ரீங்காரம் இடுகிறார்கள். அதிகளவு துன்பம் உள்ளது! அவர்கள் துறவறப் பாதைக்குரிய ஹத்தயோகிகள். அவர்களுடைய தர்மம் வேறுபட்டது. நாங்கள் சத்தியயுகத்தில் மிகவும் சந்தோஷமாகவும், தூய்மையாகவும் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது தேவர்களின் இராச்சியமாக இருந்த பொழுது, பாரதத்தில் தூய இல்லறப் பாதை இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். தூய்மையாக இருந்தவர்கள் தூய்மை அற்றவர்களாகி விட்டார்கள். மக்கள் தொடர்ந்தும் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! எவ்வாறாயினும், கடவுள் சர்வவியாபி எனவும், தாங்கள் சென்று ஒளியுடன் இரண்டறக் கலப்பார்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மறுபிறவியைக் கூட நம்புவதில்லை. பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. நாளுக்கு நாள், சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கிறது. எவ்வாறு சந்நியாசிகளின் எண்ணிக்கையும் வளர்ச்சி அடைகிறது என்பதையும் நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். ஆடையின்றி இருக்கின்ற சந்நியாசிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அவர்கள் தங்களுக்குரிய சமயத்தில் நிலைத்து இருப்பதனால், அவர்களின் இறுதி எண்ணங்கள் அவர்களை அவர்களுடைய இலக்கிற்கு இட்டுச் செல்கின்றன. உதாரணமாக, சமயநூல்களைக் கற்பவர்களின் இறுதி எண்ணம் அவர்களை அவர்களுடைய இலக்குக்கு இட்டுச் செல்கின்றது. பின்னர் அவர்களால் தங்களுடைய மறுபிறவியில், குழந்தைப் பருவத்தில் இருந்தே, இதயபூர்வமாகச் சமயநூல்களைக் கற்க இயலும். தந்தை இப்பொழுது கூறுகிறார்: நான் இன்னார் அல்லது இதுவாக அல்லது அதுவாக இருக்கிறேன் என்னும் சரீர உணர்வுக்குரிய விடயங்கள் அனைத்தையும் துறந்து விடுங்கள். உங்களைச் சரீரமற்ற ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இச்சரீரத்தைப் பார்க்கும் பொழுதும், அதைப் பார்க்காதீர்கள்! உங்கள் சொந்தச் சரீரம் உட்பட, சரீர உறவினர்கள் அனைவரையும் துறவுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்னும் நம்பிக்கையைக் கொண்டிருந்து, கடவுளை நினைவு செய்யுங்கள். இதற்குப் பெருமளவு காலம் எடுக்கிறது. நீங்கள் நினைவில் நிலைத்திருப்பதை மாயை அனுமதிப்பதில்லை. இல்லாவிட்டால், ஓய்வுபெறும் ஸ்திதியில் இருப்பவர்களுக்கு அது மிகவும் இலகுவாக இருக்க வேண்டும். தந்தையே கூறுகிறார்: நீங்கள் இளைஞர்களாக அல்லது முதியவர்களாக இருந்தாலென்ன, இது இப்பொழுது உங்கள் அனைவரினதும் ஓய்வுபெறும் ஸ்திதியாகும். ஒருபுறம், விநாசம் தொடர்ந்தும் நடைபெறும். மறுபுறம், சிலர் தொடர்ந்தும் பிறவி எடுப்பார்கள். மறுபிறவி எடுக்க வேண்டியவர்கள், தொடர்ந்தும் வருவார்கள். குழந்தைகள் பிறப்பார்கள் எனவும், விநாசமும் நடைபெறும் எனவும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சிலர் கருப்பையில் இருப்பார்கள், ஏனையோர் வேறு எங்காவது இருப்பார்கள், ஆனால் அனைவரும் அழிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் கணக்குகளைத் தீர்த்து வீடு திரும்புவார்கள். ஏதேனும் கர்மக்கணக்குகள் எஞ்சியிருப்பின், மிகக் கடுமையான தண்டனை இருக்கும். பின்னர் அது இலேசாக்கப்படும். நீங்கள் யோகத்தில் நிலைத்திருக்கிறீர்கள், அத்துடன் தொடர்ந்தும் பாவம் செய்கிறீர்கள் என்பதாக இருக்கக்கூடாது. சில குழந்தைகள் தொடர்ந்தும் தங்கள் அட்டவணைகளை எழுதுவதுடன், மாயை தங்கள் முகத்தை அழுக்காக்கி விட்டாள் எனவும் கூறுகிறார்கள். மாயை அவர்களைத் தோற்கடித்தால், அவர்கள் பலவீனமானவர்கள் என அழைக்கப்படுவார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் இங்கு மேலும் சொற்ப நாட்களுக்கு மாத்திரமே இருக்கிறீர்கள் என்பதையும், பின்னர் நீங்கள் வீடு திரும்புவீர்கள் என்பதையும் பற்றிச் சிந்தியுங்கள். அனைத்தும் அழிக்கப்பட உள்ளன. தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தொடர்ந்தும் உங்கள் அட்டவணையைப் பரிசோதியுங்கள்: நான் எத்தனை பேருக்குப் பாதையைக் காட்டுகின்றேன்? நான் எத்தனை பேரை முயற்சி செய்யத் தூண்டுகின்றேன்? ஆன்மீகச் சேவையில் உங்கள் சரீரம், மனம், செல்வத்தின் மூலம் ஓர் உதவியாளர் ஆகுங்கள். சிலர் தங்களால் தங்கள் மனதைக் கட்டுப்படுத்த இயலாமல் உள்ளது எனக் கூறுகிறார்கள். ஆத்மா அமைதி நிறைந்தவர். ஆத்மாவாகிய நான், சென்று, என்னுடைய பரந்தாமத்தில் அமர்வேன். அங்கு இவ்வுலகத்தைப் பற்றிய எண்ணங்கள் எதுவும் இருக்க மாட்டாது. நீங்கள் உங்கள் கண்களை மூடி, உணர்வற்றவர்கள் ஆகவேண்டும் என்பதல்ல. பலர் அத்தகைய விடயங்களைக் கற்கிறார்கள். அவர்கள் 10 முதல்; 15 நாட்களுக்கு உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இதைப் பயிற்சி செய்து, பல நாட்களுக்குப் பின்னர் விழித்தெழுகிறார்கள். அது அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குண்டை வைத்திருப்பதைப் போன்றுள்ளது: பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் வெடிப்பதற்காக முற்கூட்டியே நேரத்தைத் திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ள குண்டாகும். நீங்கள் யோகம் செய்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களின் தமோபிரதான் குப்பை அகற்றப்பட்டு, நீங்கள் சதோபிரதான் ஆகும்பொழுது, உங்கள் சரீரங்களை விட்டு நீங்குவீர்கள். நாங்கள் இப்பொழுது யோக யாத்திரையில் உள்ளோம். நாங்கள் இந்தளவு நேரத்தைப் பெற்றுள்ளோம். பின்னர் நாங்கள் எங்கள் சரீரங்களை விட்டு நீங்குவதுடன், அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். அனைவரும் தங்கள் சரீரங்களை விட்டு நீங்கி, நுளம்புக் கூட்டத்தைப் போன்று, வீடு திரும்புகின்ற, இறுதி நேரம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விநாசம் நடைபெறும். நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள், அத்துடன் விநாசம் ஆரம்பிக்கும். விநாசத்தின் காட்சிகள் மிகவும் பயங்கரமானவை. இது நிச்சயமாக நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்திதி நிலையானதாகவும், ஸ்திரமாகவும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் சதா முகமலர்ச்சியுடனும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இவ்வுலகம் அழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கல்பமும் சங்கமயுகத்தில் விநாசம் நடைபெறுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். குண்டுகளின் மூலம் மாத்திரம் அன்றி, இயற்கை அனர்த்தங்களும் பெருமளவுக்கு உதவுகின்றன. ஆகவே, நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பது குழந்தைகளான உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோருவீர்கள். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பிக்கிறது! நீங்கள் இதைச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு குமாரி தன்னுடைய பிறந்த வீட்டையும், புகுந்த வீட்டையும் ஈடேற்றுபவர். இது “புண்ணியம் வீட்டில் ஆரம்பிக்கிறது" என்பதன் அர்த்தம் ஆகும். சேவையில் ஈடுபட்டிருந்து, அவர்களுக்குக் கூறுங்கள்: சிவபாபா கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள். இது ஒரு நேரடியான விடயம். அல்பாவான, என்னை நினைவு செய்யுங்கள், சுவர்க்க ஆஸ்தி உங்களுடையதே. நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். ஆகவே, நீங்கள் உங்களுடைய ஆஸ்தியைப் பெற விரும்பினால், என்னை நினைவு செய்யுங்கள். இச்செய்தியைக் கொடுப்பதே, குழந்தைகளாகிய உங்களின் கடமை. நீங்கள் அதை முன்னரும் கொடுத்தீர்கள். விநாசம் முன்னால் உள்ளது என்பதை நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். கலியுகத்தின் பின்னர், சத்தியயுகம் வரும். தந்தை மாத்திரமே வந்து, உங்களுக்கு உங்களுடைய ஆஸ்தியைக் கொடுக்கிறார். இராவணன் உங்களை நரகவாசிகள் ஆக்குகிறான், ஆனால் தந்தையோ வந்து உங்களைச் சுவர்க்கவாசிகள் ஆக்குகிறார். இந்தக் கதை, பாரதத்தைப் பற்றியதாகும். பாரத மக்கள் விழத்தெழச் செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில், சென்று தந்தையே உலகைப் புதிதாக ஆக்குகின்றார் என்பதைச் சிவாலயங்களில் விளங்கப்படுத்துங்கள். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அந்த அசரீரியான பாபா வந்து, பிரம்மாவின் மூலம் சுவர்க்க ஸ்தாபனையை மேற்கொள்கிறார். இப்பொழுது தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் 84 பிறவிகளைப் பூர்த்திசெய்து விட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு இதைக் கூறுகிறோம், ஆனால் இப்பொழுது அதை நம்புவதோ, இல்லையோ, அது உங்களைப் பொறுத்தது. நீங்கள் கூறுகின்ற இவ்விடயங்கள் மிகவும் சிறந்தவை. தந்தை மாத்திரமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். அவர்களுக்குச் சிறிதளவை விளங்கப்படுத்திப் பின்னர் அங்கிருந்து அப்பால் செல்லுங்கள். இது உங்கள் வியாபாரம். இதில் முயற்சி இல்லை. நீங்கள் கூற வேண்டும்: ‘தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்’. சிவனை வழிபடுபவர்களிடமும், பின்னர் இலக்ஷ்மி நாராயணனை வழிபடுபவர்களிடமும் செல்லுங்கள். சென்று அவர்களுக்கு இலக்ஷ்மி நாராயணனின் வாழ்க்கைச் சரிதையைக் கூறுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் மனம், சரீரம், செல்வத்தின் மூலம் ஆன்மீகச் சேவையில் ஓர் உதவியாளர் ஆகுங்கள். அனைவருக்கும் அல்பாவின் அறிமுகத்தைக் கொடுத்து, அவர்களைத் தங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கான ஓர் உரிமையைப் பெறுமாறு செய்யுங்கள். விநாசம் நடைபெறுவதற்கு முன்னர் கர்மாதீதம் ஆகுவதற்கு, தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.2. தந்தையைப் போல், பற்றை வென்றவர் ஆகுங்கள். ஆத்மா ஏனைய ஆத்மாக்களிடம் கொண்டிருக்கும் பற்று எதனையும் அகற்றி, ஒரேயொரு தந்தையிடம் அன்பு கொண்டிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் இறைவன் மீது அன்புடையவராகி, சர்வசக்திவானின் சகவாசத்தை உணர்ந்தவராக இருப்பதன் மூலம் சகல பிரச்சனைகளையும் அப்பால் விரட்டுவீர்களாக.இறைவனின் மீது அன்பு கொண்ட குழந்தைகள், சதா தாம் நேசிக்கும் ஒரேயொருவரைத் தம்முடன் வைத்திருப்பார்கள். இதனாலேயே, எந்தவொரு பிரச்சனையும் அவர்களின் முன்னால் வர முடியாது. சர்வசக்திவான் தந்தையைத் தம்முடன் வைத்திருப்பவர்களின் முன்னால் பிரச்சனைகளால் இருக்கவே முடியாது. பிரச்சனைகள் எழும்போது, அங்கேயே அவற்றை முடித்து விடுங்கள். பின்னர் அவை அதிகரிக்க மாட்டாது. இப்போது, பிரச்சனைகளின் மீது குடும்பக் கட்டுப்பாட்டைப் பேணுங்கள். நிறைவை நெருக்கமாகக் கொண்டு வரவேண்டும் என்பதை சதா நினைவில் வைத்திருந்து, பிரச்சனைகளைத் தொலைவில் இருந்தே விரட்டி விடுங்கள்.
சுலோகம்:
அன்பாக இருப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள், ஆனால் பற்றற்றவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் இயல்பாகவே நேசிக்கப்படுவீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: சதா ஆட்ட, அசைக்க முடியாத மற்றும் நிலையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
அவ்வப்போது, பல வகையான தடைகள் வரும். உதாரணமாக, ஒரு நல்ல, விசேடமான மாணவர் மாயையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, எதிர்ப்பவராகி, சேவையில் குழப்பத்தை உருவாக்குவார். இத்தகைய வேளைகளில், நீங்கள் பயப்படுவதில்லை, அல்லவா? உபகார உணர்வுகளுடன் அவர்களின் மீது கருணை காட்டுவது ஒரு விடயம், ஆனால் அதனால் தளம்பல் அடைவது அல்லது வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பது என்றால் ஆட்டங் காணுதல் எனப்படும். பற்றற்ற பார்வையாளர் என்ற ஸ்திதியுடன் ஒவ்வோர் ஆத்மாவின் பாகத்தையும் அவதானிப்பவரால் ஆட்ட, அசைக்க முடியாதவராகவும் நிலையானவராகவும் இருக்க முடியும்.