02.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, நீங்கள் 21 பிறவிகளுக்கு இராச்சியம் என்ற ஆஸ்தியைப் பெறுவதற்கும், அசைக்க முடியாததும், பிரிவினை அற்றதுமான இராச்சியத்தின் அதிபதிகள் ஆகுவதற்குமான அத்தகைய மேன்மையான செயல்கள் செய்வதைக் கற்பிப்பதற்குத் தந்தை வந்துள்ளார்.
கேள்வி:
இல்லறத்தினரின் எந்த நம்பிக்கை, சந்நியாசிகளின் நம்பிக்கையில் இருந்து மிகவும் வேறுபட்டுள்ளது?பதில்:
கடவுள் நிச்சயமாக ஏதோவொரு வடிவத்தில் வருவார் என்று இல்லறத்தவர்கள் நம்புகின்றார்கள், ஆனால் சந்நியாசிகள் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்வதனால், தாம் அதனுடன் இரண்டறக் கலப்பார்கள் என்று நம்புகின்றார்கள். எவருமே பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பதில்லை என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் அமரத்துவமானவர்கள், எனவே அவர்களால் எவ்வாறு எதனுடனாவது இரண்டறக் கலக்க முடியும்? கடவுள் வரும்பொழுது, அவர் நிச்சயமாக உங்களுக்கு ஓர் ஆசிரியராகவே கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். அவர் உங்களுக்குத் தூண்டுதல்கள் மூலம் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது.பாடல்:
உங்களைக் கண்டு கொண்டதனால், நாங்கள் முழு உலகையும் கண்டு விட்டோம். பூமி, வானம் அனைத்தும் எங்களுக்கே உரியதாகும்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் பாடலைச் செவிமடுத்தீர்கள். ஆன்மீகக் குழந்தைகள் மாத்திரமே ‘பாபா!’ என்று கூறுகின்றார்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார், அவரே ஆத்மாக்கள் அனைவருக்கும் தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களான, எல்லையற்ற குழந்தைகள் அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் ஏதோவொரு வகையில் அவரை நினைவு செய்கின்றார்கள், ஆனால், பரமாத்மாவான பரமதந்தையிடம் இருந்து தாங்கள் இராச்சியத்தைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் அறியார்கள். தந்தையிடம் இருந்து நீங்கள் பெறுகின்ற உலகின் சத்தியயுக இராச்சியமானது அசைக்க முடியாததும், பிரிவினையற்றதும், ஆட்ட முடியாததும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இராச்சியம் 21 பிறவிகளுக்கு நிரந்தரமாக எங்களுடன் நிலைத்திருக்கின்றது. எங்கள் இராச்சியம் முழு உலகிலும் இருக்கின்றது, அதனை எங்களிடம் இருந்து எவராலும் அபகரிக்க முடியாது; அதனை எவராலும் கொள்ளை அடிக்கவும் முடியாது. அங்கே ஒரேயொரு தர்மமே இருப்பதால், எங்கள் இராச்சியம் அசைக்க முடியாததாகும்; அங்கே பிரிவினைகள் இருக்க மாட்டாது. அந்த இராச்சியம் பிரிவினை அற்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலைச் செவிமடுக்கும் பொழுது, உங்கள் இராச்சியத்தின் போதை உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். உங்களால் விரைவாகத் தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யக்கூடிய வகையில், அத்தகைய பாடல்களை வீடுகளில் நீங்கள் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் நினைவின் போதையைத் தரக்கூடிய பாடல்களைச் செவிமடுக்க வேண்டும். உங்களுடைய அனைத்தும் மறைமுகமானது. முக்கிய பிரமுகர்கள் பெருமளவு பகட்டுடன் இருக்கின்றார்கள்; உங்களுக்கு எந்தப் பகட்டும் இல்லை. பாபா எவரில் பிரவேசித்தாரோ, அவர் தன்னைப் பற்றிய எந்தப் பகட்டும் இல்லாதிருப்பதை நீங்கள் பார்க்க முடியும்; அவர் முன்னர் அணிந்த ஆடைகள் போன்றவற்றையே தொடர்ந்தும் அணிகின்றார். எங்களுக்கு எங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுப்பதற்கே பாபா இவருக்குள் பிரவேசித்துள்ளார் என்பதை உங்கள் புத்தியால் புரிந்துகொள்ள முடியும். இவ்வுலகம் முழுவதிலும் உள்ள மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வினால் அதர்மமான செயல்களைப் புரிவதையும் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். இதனாhலேயே அவர்கள் விவேகம் அற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். அனைவரது புத்தியும் பூட்டப்பட்டுள்ளது. நீங்கள் உலக அதிபதிகளான, மிகுந்த விவேகிகளாக இருந்தீர்கள். மாயை இப்பொழுது உங்களை முற்றிலும் விவேகம் அற்றவர்களாகவும், முற்றிலும் பயனற்றவர்களாகவும் ஆக்கியுள்ளாள். தந்தையிடம் செல்வதற்காக மக்கள் பல யாகங்களை வளர்ப்பதுடன், தபஸ்யா போன்றவற்றையும் செய்கின்றார்கள், ஆனால் அவர்கள் எதனையும் பெறுவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் தடுமாறித் திரிகின்றார்கள். எவருக்கும் கடவுளைத் தெரியாது. அவர்கள் வெறுமனே அவர் சர்வவியாபி என்று கூறுகின்றார்கள். அது முற்றிலும் பிழையாகும். ‘தந்தை’ என்ற வார்த்தை அவர்களின் புத்திகளில் பிரவேசிப்பதில்லை. சிலர் ‘தந்தை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும், அது கூறவேண்டும் என்பதற்காகவே கூறப்பட்டுள்ளது. அவர் பரமாத்மாவான பரமதந்தை என்பதை அவர்கள் உண்மையிலேயே புரிந்து கொண்டிருந்தால், அவர்களின் புத்திகள் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும். தந்தையே சுவர்க்கம் என்ற உங்கள் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரே தந்தையான சுவர்க்கக் கடவுள். எனவே நாங்கள் ஏன் கலியுக நரகத்தில் இருக்கின்றோம்? இப்பொழுது தங்களால் எவ்வாறு முக்தியையும், ஜீவன்முக்தியையும் பெற முடியும் என்பது எவரது புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. இப்பொழுது நீங்கள் புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். அது புதிய உலகமாகவும், புதிய பாரதமாகவும் இருந்த பொழுது, அது எங்கள் இராச்சியமாக இருந்தது என்பதை பாபா எங்களுக்கு ஞாபகப்படுத்தி உள்ளார். ஒரு வழிகாட்டலும், ஒரு மொழியும் இருந்ததுடன், ஒரு சக்கரவர்த்தியும் சக்கரவர்த்தினியும் மாத்திரமே இருந்தார்கள். சத்திய யுகத்தில் சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியும் இருக்கின்றார்கள், திரேதா யுகத்தில் அரசர்கள், அரசிகள் இருக்கின்றார்கள். பின்னர், துவாபர யுகத்தில் பாவப்பாதை ஆரம்பிக்கும் பொழுது, அனைத்தும் அவரவரின் கர்மக்கணக்கில் தங்கியுள்ளது. ஒவ்வோர் ஆத்மாவும் தனது கர்மாவிற்கு ஏற்பவே தனது சரீரத்தை நீக்கி, இன்னொன்றை எடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் தொடர்ச்சியாக 21 பிறவிகளுக்கு இராச்சியத்தைப் பெறத்தக்க செயல்களைச் செய்வதற்கே நான் இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றேன். அங்கும் உங்களுக்கு எல்லைக்கு உட்பட்ட தந்தையர் இருந்த பொழுதிலும், உங்கள் இராச்சியத்திற்கான ஆஸ்தியை நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து பெற்றுள்ளீர்கள் என்ற ஞானம் உங்களுக்கு இருப்பதில்லை. துவாபர யுகத்தில் இராவண இராச்சியம் ஆரம்பமாகும் பொழுது, விகாரங்களின் அடிப்படையிலேயே உறவுமுறைகள் உள்ளன, அப்பொழுது நீங்கள் செய்த செயல்களுக்கேற்ப, பலனைப் பெறுகின்றீர்கள். தேவர்கள் பாவப் பாதையில் செல்ல ஆரம்பிக்கின்றனர், அப்பொழுது சத்தியயுகத்தின் அனைத்தும் முடிவுக்கு வருகின்றது. அதன்பின்னர் உங்கள் கர்மத்திற்கு ஏற்ப நீங்கள் இன்னொரு பிறவியை எடுக்கின்றீர்கள். பாரதத்தில், பூஜிக்கத் தகுதியான அரசர்களும், பூஜிக்கின்ற அரசர்களும் இருந்தார்கள். சத்தியயுகத்தில், அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் பூஜிக்கத் தகுதியானவர்கள். பின்னர், துவாபர யுகத்தில் பக்தி ஆரம்பிக்கும் பொழுது, அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். மகத்துவமான சூரிய வம்ச அரசர்கள் பூஜிப்பவர்களாகி, பின்னர் வைசிய வம்சத்தினர் ஆகுகின்றார்கள். நீங்கள் இப்பொழுது விகாரம் அற்றவர்கள் ஆகுகின்றீர்கள். அதற்கான வெகுமதி 21 பிறவிகளுக்குத் தொடர்கின்றது, அதன்பின்னர் பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகுகின்றது. பூஜிக்கத்தகுதியான தேவர்களாக இருந்த அனைவருக்கும் அவர்கள் ஆலயங்களைக் கட்டி, அவர்களை வழிபடுகின்றார்கள். இது பாரதத்தில் மாத்திரமே இடம்பெறுகின்றது. தந்தை கூறுகின்ற, இந்த 84 பிறவிகளுக்குமான கதை பாரத மக்களுக்கே பொருந்துகின்றது. ஏனைய சமயத்தினர் பின்னரே வருகின்றார்கள். அதன்பின்னர், அவற்றின் விரிவாக்கம் இடம்பெறும் பொழுது, அவர்களில் பலர் உள்ளனர். தேவர்கள் பலவகையான வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களைக் கொண்டிருந்தார்கள். பாரதத்தைச் சேர்ந்த குருமார்கள் கொண்டிருந்த சம்பிரதாயங்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை. அரைக்கல்பத்தின் பின்னர், இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுது, வழக்கங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தும் மாற்றம் அடைந்து, பூஜிக்கத் தகுதியானவர்கள் பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். முதலில், அவர்கள் கலப்படமற்ற சிவனின் வழிபாட்டை மாத்திரம் செய்தார்கள். முதலில் அவருக்கும், பின்னர் இலக்ஷ்மி நாராயணனுக்கும் அவர்கள் ஆலயங்களைக் கட்டினார்கள். ஒருவர் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஆலயம் ஒன்றைக் கட்டியவுடன், அதைப் போன்று இன்னொருவரும் கட்டுகின்றார். பின்னர் இராமருக்கும், சீதைக்கும் ஆலயங்களைக் கட்டுகின்றார்கள், அதன்பின்னர் கலியுகத்தில் கணேசர், அனுமன், சண்டிகா தேவி போன்ற வெவ்வேறு தேவர்கள் அனைவரினதும் விக்கிரங்களைத் தொடர்ந்தும் உருவாக்கினார்கள். அந்தச் சம்பிரதாயங்கள் பக்தி மார்க்கத்திற்குத் தேவைப்படுகின்றன. ஒரு விதை சின்னஞ்சிறியதாக இருந்தாலும், அதிலிருந்து வளர்கின்ற மரம் மிகவும் பெரிதாக உள்ளது. அதைப் போன்றே, பக்தியின் விரிவாக்கம் அதிகளவுக்கு இருக்கின்றது. அவர்கள் பல சமயநூல்களை உருவாக்கி உள்ளார்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களிடம் கூறுகின்றார்: பக்தி மார்க்கத்திற்கான அந்தச் சம்பிரதாயங்கள் அனைத்தும் இப்பொழுது முடிவடைய வேண்டும். இப்பொழுது உங்கள் தந்தையான, என்னை நினைவு செய்யுங்கள்! பக்தியின் செல்வாக்கு பெருமளவு உள்ளது. அது மிகவும் அழகானது. அவர்கள் நடனங்கள், நாடகங்கள், பக்திப் பாடல்கள் பாடுதல் போன்றவற்றிற்காக அதிகளவு செலவழிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது உங்கள் தந்தையான என்னையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்! உங்கள் ஆதிசனாதன தர்மத்தை நினைவு செய்யுங்கள்! நீங்கள் பிறவிபிறவியாகப் பல வகையான பக்தியில் ஈடுபட்டிருந்தீர்கள். இல்லற தர்மத்தைச் சேர்ந்தவர்களே பக்தி செய்ய ஆரம்பித்தார்கள். சந்நியாசிகள் பக்தி செய்வதில்லை. யாகம் வளர்த்தல், தபஸ்யா செய்தல், தான தர்மம் செய்தல், யாத்திரை செய்தல் போன்ற அனைத்தும் இல்லறத்தினரின் செயற்பாடுகளே அன்றி, சந்நியாசிகளது அல்ல் அவர்கள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள். தமது வீடுகளையும், குடும்பங்களையும் விட்டுச் சென்று காடுகளில் வாழ்ந்து, பிரம்ம தத்துவத்தை நினைவு செய்வதே அவர்களது வழக்கமாகும். அவர்களிடம் தத்துவங்களினதும், பிரம்ம தத்துவத்தினதும் ஞானம் உள்ளது. அவர்கள் அந்த ஒளித் தத்துவத்தைக் (பிரம்ம தத்துவத்தை) கடவுள் என்று குறிப்பிடுகின்றார்கள். பாரத மக்கள் ஆதியில், ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தையே சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் இந்துஸ்தானில் வாழ்வதால், தம்மை இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதுகின்றார்கள். அவ்வாறே, சந்நியாசிகள் தத்துவத்தை, அதாவது, ஆத்மாக்களின் வசிப்பிடத்தைக் கடவுள் எனக் கருதுகின்றார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கின்றார்கள். உண்மையில், சந்நியாசிகள் சதோபிரதானாக இருக்கும்பொழுது, அவர்கள் காடுகள் போன்றவற்றிற்குச் சென்று அமைதியாக வாழ்கின்றார்கள். அவர்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்கப் போகின்றார்கள் என்றில்லை. தந்தை கூறுகின்றார்: அது அவர்களின் பொய்யான ஞானம். அந்தத் தத்துவத்துடன் எவராலும் இரண்டறக் கலக்க முடியாது. ஆத்மாக்கள் அழியாதவர்கள், எனவே அவர்களால் எதனுடனும் எவ்வாறு இரண்டறக் கலக்க முடியும்? பக்தி மார்க்கத்தில் அவர்கள் தொடர்ந்தும் அதிகளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். அதன்பின்னர் கடவுள் தங்களைச் சந்திப்பதற்காக நிச்சயமாக ஏதோவொரு வடிவில் வருவார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இப்பொழுது, யார் கூறுவது சரி? பிரம்ம தத்துவத்துடன் தாங்கள் யோகம் செய்து, அதனுடன் இரண்டறக் கலப்பார்கள்; என்று அவர்கள் கூறுகின்றார்கள். கடவுள் ஏதோவொரு வடிவத்தில் வந்து, தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவார் என்று இல்லறத்தவர்கள் கூறுகின்றார்கள். அவர் மேலிருந்து தூண்டுதல்களின் மூலம் கற்பிப்பார் என்றில்லை. ஓர் ஆசிரியர் வீட்டிலிருந்து தூண்டுதல்கள் கொடுப்பாரா? தூண்டுதல் போன்ற எதுவும் இல்லை. தூண்டுதல் மூலமாக எதுவும் நடைபெறுவதில்லை. சங்கரரின் தூண்டுதல்களின் மூலம் விநாசம் இடம்பெறுவதாகக் கூறப்பட்டாலும், அதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏவுகணைகள்; போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும், அது தூண்டுதல் பற்றிய கேள்வியே இல்லை. கடவுளின் தூண்டுதல்களுக்கு ஏற்பவே அனைத்தும் நடக்கின்றது என்று மக்கள் கூறுகின்றார்கள் அல்லது சங்கரர் தனது கண்ணைத் திறந்தபொழுது, பிரளயம் ஏற்பட்டது என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவை அனைத்தும் கதைகளே; அவற்றின் அர்;த்தத்தை அவர்கள் முற்றிலும் அறியாதிருக்கின்றார்கள். நீங்கள் ஒருவரின் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது, அவர்கள் கேசவன், இராமர், நாராயணன் போன்ற பல்வேறு பெயர்கள் மூலம் கடவுளைப் புகழைப் பாடல்களில் பாடுகின்றார்கள், ஆனால் தாங்;கள் பாடுவதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தமது மூத்தோரின் புகழை அவர்கள் அறியாதுள்ளார்கள். அவர்கள் தங்கள் சமய ஸ்தாபகரைத் தங்கள் குருவென்று அழைக்கின்றார்கள். உண்மையில், அவரைக் குருவென்று அழைப்பது தவறாகும். கிறிஸ்து ஒரு குருவல்ல் அவர் ஒரு சமயத்தை ஸ்தாபித்தார். சற்கதியை கொடுப்பவரே ஒரு குரு ஆவார். அம்மக்கள் தமது சமயங்களை ஸ்தாபிக்க வருகின்றார்கள். அவர்களின் வம்சத்தவர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து இங்கு வருகின்றார்கள். அவர்கள் எவருக்கும் சற்கதி அருள்வதில்லை, ஆகையால் அவர்களை ஏன் குருமார்கள் என்று அழைக்க வேண்டும்? ஒரேயொரு குருவே உள்ளார், அவரே அனைவருக்கும் சற்கதி அருள்பவர் என்று அழைக்கப்படுகின்றார். தந்தையான கடவுள் மாத்திரமே வந்து, அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். அவர் அவர்களுக்கு முக்தியை அல்லது ஜீவன்முக்தியை அருள்கின்றார். அவரை நினைவு செய்வதை எவராலும் நிறுத்த முடியாது. மக்கள் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்து, கூறுகின்றார்கள்: ஓ கடவுளே! ஓ ஈஸ்வரே! ஏனெனில் அவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அவர்கள் அனைவரும் படைப்புக்கள். நான் மாத்திரமே படைப்பவரான, தந்தை ஆவேன். ஒரேயொரு தந்தையே அனைவருக்கும் சந்தோஷத்தையும், ஆஸ்தியையும் கொடுக்கிறார். ஒரு சகோதரரால் இன்னொரு சகோதரருக்கு ஆஸ்தியைக் கொடுக்க முடியாது. ஒரு தந்தையிடம் இருந்தே எப்பொழுதும் ஓர் ஆஸ்தி பெறப்படுகிறது. நான் எல்லையற்ற குழந்தைகள் அனைவருக்கும் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறேன், இதனாலேயே அனைவரும் என்னை நினைவு செய்கின்றனர்: ஓ கடவுளே, என்னை மன்னித்து விடுங்கள்! அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: அவர்கள் அழைத்தார்கள் என்பதால் நான் வருவதில்லை; அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நான் வருகின்ற எனது பாகமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற சகல சமயங்களும் அழிக்கப்பட்டு, ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். கலியுகம் அழிக்கப்பட வேண்டும், சத்தியயுகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நான் எனக்குரிய நேரத்தில் நானாகவே வருகின்றேன். பக்தி மார்க்கத்தின் இந்தப் பாகமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பக்தி மார்க்கத்தின் பாகம் முடிவுக்கு வருவதால், நான் வந்துள்ளேன். பாபா, நீங்கள் முன்னைய கல்பத்திலும் பிரம்மாவின் சரீரத்திற்குள் பிரவேசித்தீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். அதனை நீங்கள் மீண்டும் பெற மாட்டீர்கள். இது ஞானமும், அது பக்தியும் ஆகும். ஏறும் ஸ்திதியே இந்த ஞானத்தின் வெகுமதியாகும். ஒரு விநாடியில் ஜீவன்முக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள் என்று கூறப்படுகின்றது. ஜனக மன்னன் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெற்றார், இல்லையா? ஒரேயொரு ஜனகன் மாத்திரமா ஜீவன்முக்தியைப் பெற்றார்? அனைவருமே ஜீவன்முக்தி பெறுகின்றனர். முழு உலகமும் அதனைப் பெறுகின்றது. ‘சற்கதி’, ‘ஜீவன்முக்தி’ எனும் பதங்கள் ஒன்றே. ‘ஜீவன்முக்தி’ என்றால் நீங்கள் இந்த இராவண இராச்சிய வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைதலாகும். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு சீரழிந்துள்ளீர்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். நீங்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது சற்கதி பெற இருக்கின்றீர்கள். நீங்கள் முதலில் முக்தியையும், பின்னர் ஜீவன்முக்தியையும் பெறுவீர்கள். நீங்கள் அமைதி தாமத்திற்கும், பின்னர் சந்தோஷ தாமத்திற்கும் செல்கின்றீர்கள். தந்தை இச்சக்கரத்தின் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். தந்தை கூறுகின்றார்: இந்நேரத்தில் உலக விருட்சம் முழுமையாக உக்கியும், தமோபிரதானாகியும் விட்டது, இதனாலேயே எவரும் தங்களை ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்கு உரியவர்கள் என்று கருதுதில்லை. தேவர்கள் தூய்மையானவர்களாக இருந்தார்கள் என்பதால், நீங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். தூய்மை அற்றவர்களால் எவ்வாறு தங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியும்? இதனாலேயே ‘இவ்விகாரங்களைத் தொடர்ந்தும் துறந்து விடுங்கள்’ என்று கூறப்படுகின்றது. அரைக்கல்பமாக இவ்விகாரங்கள் உள்ளன. அவற்றை இப்பொழுது ஒரு பிறவிக்குத் துறந்து விடுங்கள். எவ்வாறாயினும் இதற்கு முயற்சி தேவை. முயற்சி செய்யாமல் உங்களால் உலக அதிபதிகள் ஆக முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையை நினைவு செய்தால் மாத்திரமே உங்களால் இராச்சியத் திலகத்தை உங்களுக்கு இட்டுக் கொள்ள முடியும். அப்பொழுது மாத்திரமே உங்களால் இராச்சியத்திற்கான உரிமையையும் கோர முடியும். நீங்கள் தந்தையை நன்றாக நினைவுசெய்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றும் அளவிற்கேற்ப, அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவீர்கள். ஆசிரியரே உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளார். இதுவே மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவதற்கான பாடசாலை ஆகும். சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக மாறுகின்ற கதையை அவர் உங்களுக்குக் கூறுகின்றார். இந்தக்கதை மிகவும் பிரபல்யமானது. இதுவே அமரத்துவ கதையென்றும், சத்திய நாராயணனின் கதை என்றும், மூன்றாவது கண்ணின் கதை என்றும் கூறப்படுகின்றது. இப்பாடல் எவ்வளவு அழகானது என்று பாருங்கள். பாபா எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார், அந்த ஆற்றலை எவராலும் எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது. அங்கு பூமியதிர்ச்சி போன்ற எதுவும் இருக்க மாட்டாது. அங்கே தடைகள் என்ற கேள்விக்கும் இடமில்லை. முன்னைய கல்பத்தில் கிடைத்ததைப் போன்று அசைக்க முடியாத, பிரிவினையற்ற, தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் நிறைந்த இராச்சியத்தை நீங்கள் பெற இருக்கின்றீர்கள். 5000 வருடங்களுக்கொரு முறை பாரதம் சுவர்க்கம் ஆகுகின்றது. நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், 84 பிறவிகளை எடுத்த பின்னர், என்னவாக ஆகினீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆகவுள்ளீர்கள். இதுவே சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவராக இருத்தல் எனப்படுகிறது. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. ஓர் இராச்சிய திலகத்தை உங்களுக்கு இட்டுக் கொள்வதற்கு, நினைவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். விகாரங்கள் அனைத்தையும் துறந்திடுங்கள்.2. தந்தை பிரம்மாவைப் போன்று சாதாரணமாகவும், மறைமுகமாகவும் இருங்கள். எந்த வெளிப்பகட்டையும் கொண்டிருக்காதீர்கள். உங்கள் எதிர்கால இராச்சியத்தின் போதையைப் பேணுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மேன்மையான, பொறுப்பு வாய்ந்த ஆத்மா ஆகுவதன் மூலம், உங்களின் விஷமத்தனமான மனோபாவத்தை மாற்றி, சூழலை சதோபிரதான் ஆக்குவீர்களாக.தமது விஷமத்தனமான மனோபாவங்களை மாற்றக்கூடிய குழந்தைகளால் சூழலை சதோபிரதான் ஆக்க முடியும். ஏனென்றால், உங்களின் மனோபாவத்தாலேயே சூழல் உருவாக்கப்படுகிறது. இத்தகைய பெரியதொரு பணியைப் பற்றி நீங்கள் உணராமல் இருக்கும்போதே, உங்களின் மனோபாவம் விஷமத்தனம் ஆகுகிறது. மிகவும் விஷமத்தனம் செய்யும் ஒரு சிறுவன் விஷமத்தனம் செய்வதை நிறுத்தாதபோது, அவன் மிகவும் மும்முரமாக இருந்தாலும் அவன் கட்டி வைக்கப்படுவான். அதேபோல், உங்களின் மனோபாவம் விஷமத்தனம் செய்யும்போது, நீங்கள் இந்த ஞானம் மற்றும் யோகத்தில் மும்முரமாக இருந்தாலும் ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருக்கும் பந்தனத்தால் உங்களின் மனோபாவத்தைக் கட்டி விடுங்கள். அப்போது, விஷமத்தனம் எதுவும் இலகுவாக முடிந்துவிடும்.
சுலோகம்:
கவனக்குறைவின் அலையை முடிப்பதற்கான வழிமுறை, எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவத்தைக் கொண்டிருப்பதே ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
அருள்கின்ற சம்ஸ்காரங்களை வெளிப்படுத்தி, உங்களின் மனதால் சேவை செய்வதன் மூலம் உங்களின் புண்ணியக் கணக்கில் சேமியுங்கள். பலவீனமான ஆத்மாக்களை உங்களின் வார்த்தைகளால் சந்தோஷப்படுத்துங்கள், மனவேதனையில் உள்ள ஆத்மாக்களுக்கு அவர்களின் மரியாதையை உணரச் செய்யுங்கள். மனச் சோர்வில் உள்ள ஆத்மாக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குங்கள். உங்களின் உறவுமுறைகளையும் தொடர்புகளையும் பயன்படுத்தி, ஆத்மாக்கள் உங்களின் மேன்மையான சகவாசத்தின் நிறத்தை அனுபவம் பெறச் செய்யுங்கள். அப்போது உங்களின் புண்ணியக் கணக்கு தொடர்ந்து சேமிக்கப்படும்.