04.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுங்கள், அப்பொழுது, நீங்கள் செல்வந்தர்கள் ஆகுவீர்கள். உலக மாதாவாகிய ஜெகதாம்பாளே ஞானதேவியாகி, பின்னர் ஓர் இளவரசி ஆகுகின்றார்.

கேள்வி:
தந்தை குழந்தைகளான உங்கள் மீது கருணை கொண்டிருப்பதால், உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்குவதற்கு வழங்குகின்ற ஸ்ரீமத் என்ன?

பதில்:
இனிய குழந்தைகளே, மரணம் வருவதற்கு முன்னரே நினைவு யாத்திரை மூலம் உங்கள் தலை மீதுள்ள பாவச்சுமையை அகற்றுங்கள். பாவச்செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். மரண அரக்கர்களின் தூக்குமேடையில் இருந்து உங்களை விடுவிப்பதற்கே தந்தை வந்திருக்கின்றார். எனவே, இப்பொழுது அத்தகைய செயல்கள் எதனையும் செய்யாதீர்கள்.

பாடல்:
ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்! உமது விடியலுக்கான இலக்கு வெகு தொலைவில் இல்லை.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என நீங்கள் தந்தையை அழைத்ததால், பக்தி என்ற இரவை அழித்து, பகலை ஸ்தாபிப்பதற்குத் தந்தை வந்திருக்கின்றார். நீங்கள் ஒரு காலத்தில் தூய்மையானவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது தூய்மை அற்றவர்களாகி விட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். முன்னர் நீங்கள் கொண்டிருந்த, இப்பொழுது இல்லாத ஒன்றையே நீங்கள் வேண்டுகின்றீர்கள். தூய தேவர்களின் இராச்சியம் இருந்ததைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஞான தேவர்களாகவும், ஞான தேவியர்களாகவும் ஆகி, பின்னர் இளவரசர்களாகவும், இளவரசிகளாகவும் ஆகுவீர்கள். ஜெகதாம்பாள் இலக்ஷ்மியில் இருந்து வேறுபட்டவர்; இலக்ஷ்மியை ஜெகதாம்பாள் (உலகத் தாய்) என்றழைக்க முடியாது. இலக்ஷ்மியின் இரு குழந்தைகள் மாத்திரமே அவரை “மாதேஸ்வரி” (தாய்) என அழைப்பார்கள். இங்கே, சமயப் பற்றுடைய பாரத மக்கள் அனைவரும் ஜெகதாம்பாளை “அம்மா” (தாய்) என அழைக்கின்றனர். அவர்கள் தேவர்களின் ஆலயங்களுக்குச் சென்று, அவர்களை வழிபடுகின்றனர். நீங்கள் பெருமளவில் பக்தி செய்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். வேறு எவருமே நீங்கள் செய்த அளவிற்குத் தான, தர்மங்கள் செய்திருக்க மாட்டார்கள். நீங்களே அதிகபட்ச பக்தி செய்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது உயிர்வாழும் பொழுதே, உங்கள் ஞாபகார்த்தங்களைப் பார்த்துள்ளீரகள். ஆதிதேவரும், ஜெகதாம்பாள் என அழைக்கப்படுகின்ற, ஆதிதேவியும் உள்ளனர். ஜெகதாம்பாள் செல்வந்தர் ஆகுகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் அவருடைய குழந்தைகள், இப்பொழுது நீங்கள் கற்கின்றீர்கள். அவரே ஞானதேவி ஆவார். வேறு (லௌகீக) அறிவின் மூலம் எவருமே அரசராகவோ, அரசியாகவோ ஆகுவதில்லை. நீங்கள் சிவபாபாவின் குழந்தைகள் என்பதையும், இவர் பிரஜாபிதா பிரம்மா என்பதையும் ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். சிவபாபா இவரின் மூலமாகவே புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். பிரம்மா மூலம் ஸ்தாபனை இடம்பெறுவதாக நினைவு கூரப்படுகின்றது. இதனை மிக நன்றாகப் புரிந்து கொண்டு, கிரகியுங்கள். பெண்சிங்கத்தின் பாலை வைத்திருப்பதற்குத் தங்கப் பாத்திரம் தேவைப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது. இந்த ஞானம் சர்வசக்திவானான, பரமாத்மா பரமதந்தையினுடையது. இதற்கும் உங்களுக்குத் தங்கப்பாத்திரம் போன்ற புத்தி தேவை. புதிய உலகில், ஆத்மா, சரீரம் இரண்டுமே தங்கம் போன்றவை. ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது கல்லுப் பாத்திரங்களாக உள்ளீர்கள், எனவே உங்களின் சரீரங்களும் அவ்வாறே உள்ளன. அழகானவரும் அவலட்சணமானவருமான, சியாம்சுந்தரை, அதாவது, தூய்மையானவரும் தூய்மை அற்றவரும் என பாரதத்திலேயே அவர்கள் நினைவு செய்கின்றனர். ‘வந்து எங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மை ஆக்குங்கள்’ என்று வேறெந்தத் தேசத்திலும் கூறமாட்டார்கள். எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, அமைதிக்கு அழைத்துச் செல்லுங்கள் என நாங்கள் கூறுகின்றோம். பாரத மக்களாகிய நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள் எனவும், முன்னர் இது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது எனவும் உங்களின் மனச்சாட்சி கூறுகின்றது. ஒருவர் எவ்வளவு மகானாக இருந்தாலும், அவரும் தனது குருவின் பாதங்களில் விழவே செய்கின்றார். ஏனெனில் அந்தக் குரு துறவறத்தை ஏற்றுள்ளார். அவர் ஐந்து விகாரங்களையும் துறந்துள்ளார், எனவே, விகாரம் அற்றவர்களுக்கு விகாரமானவர்கள் மதிப்பளிக்கின்றனர். தூய்மையின் புகழ் உள்ளது. அரசர்களினதும், அரசிகளினதும் ஆலோசகர்கள் துவாபர யுகத்திலேயே வருகின்றனர். சத்திய யுகத்திலுள்ள அரசர்களுக்கும், அரசிகளுக்கும் ஆலோசகர்கள் இல்லை. அரசர்களும், அரசிகளும் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுதே அவர்களுக்கு ஓர் ஆலோசகர் இருக்கின்றார். ஆனால் இப்பொழுது அவர்கள் மேலும் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டதால், அவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசகர்கள் உள்ளனர். இது நாடகத்தின் நியதியாகும். எவ்வாறு நாடகத்தின் நியதி உருவாக்கப்பட்டுள்ளது என பாபா உங்களுக்குக் கூறுகின்றார். எனவே, முதலில், நிச்சயமாக பாரதம் மாத்திரமே இருந்தது, ஏனைய சமயங்கள் பின்னரே வந்தன. இந்நேரத்தில் நீங்கள் ஞான தேவர்களும், ஞான தேவிகளும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். ஞானதேவியான, ஜெகதாம்பா பிரம்மாவின் புதல்வி ஆவார். ஜெகதாம்பாள் ஞானம் நிறைந்தவர் என்பதால், அவரது அடுத்த பிறவியில் அவர் செல்வத்திற்குரிய தேவி ஆகுகின்றார். தந்தை இப்பொழுது உங்களுக்கு இந்த ஞானத்தைக் கற்பிக்கின்றார். நீங்கள் அங்கு செல்வந்தர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு செல்வந்தர்கள் ஆகினார்கள் என்பதை உலகிலுள்ள எவரும் அறிய மாட்டார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் சரஸ்வதியாகவும், பிரம்மாவாகவும் இருந்தனர். பிரம்மாவே உலகத் தந்தையான, ஜெகத்பிதா என்பதால், நிச்சயமாகப் பல பிராமணர்கள் இருக்க வேண்டும். பிராமணர்களான உங்களிற் பலர் இருக்கின்றீர்கள். இந்த ஞானத்தின் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் செல்வந்தர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் செல்வத்திற்குரிய தேவியர் ஆகுவீர்கள்; அந்நேரத்தில், உங்களிடம் இருந்ததை விடவும் அதிகமான செல்வத்தை வேறு எவரும் கொண்டிருந்திருக்க முடியாது. இதனாலேயே ஞானமே வருமானத்திற்கான மூலாதாரம் எனப்படுகின்றது. நீதிபதிகளும், சட்டத்தரணிகளும் அந்த அறிவைக் கற்பதினூடாக அவ்வாறு ஆகுகின்றனர். எனவே, அது ஒரு வருமானம். சில மருத்துவர்கள் ஒவ்வொரு சிகிச்சைக்கும் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைப் பெறுகின்றனர். ஓர் அரசர், அரசி அல்லது இளவரசர் நோய்வாய்ப்பட்டு, மருத்துவர் அவரைக் குணப்படுத்தும் பொழுது, அவர்கள் சந்தோஷம் அடைந்து, பெரிய கட்டடங்களைக் கட்டுவதற்கான பணத்தை அந்த மருத்துவருக்கு வழங்குகின்றனர். இது அத்தகைய பெரும் வருமானம் ஆகும். எனவே, கற்பதால், ஓர் அந்தஸ்து பெறப்படுகின்றது. இது உங்களின் கல்வியும், அத்துடன் உங்களின் வியாபாரமும் ஆகும். இனிய குழந்தைகளான நீங்கள் இப்பொழுது ஒரு பேரம் செய்வதற்காகவே இங்கே வந்திருக்கின்றீர்கள். நீங்கள் உங்களிடமுள்ள வைக்கோற் பெறுமதியான அனைத்தையும் கொடுத்து விட்டு, அதற்குப் பதிலாக நூறாயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றீர்கள். தந்தையே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர், அவர் உங்களை என்றும் ஆரோக்கியமானவர்கள் ஆக்குவதற்காக, உங்களுக்கு யோகம் கற்பிக்கின்றார். பாபா கூறுகின்றார்: நீங்கள் 21 பிறவிகளுக்கு என்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுவீர்கள் என நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன். எனவே, அத்தகைய சத்திரசிகிச்சை நிபுணரிடமிருந்து நீங்கள் ஏன் மருந்தைப் பெறக்கூடாது? அதாவது, நீங்கள் ஏன் அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றக்கூடாது? தந்தையின் வழிகாட்டல்களுக்குக் கீழ்ப்படியுங்கள்! என்னை நினைவு செய்யுங்கள்! “தொடர்ந்தும் கடவுளை நினைவு செய்து, சந்தோஷத்தைப் பெறுங்கள், உங்கள் சரீரத்தின் வலிகள், வேதனைகள் யாவும் நீங்கும்” எனக் கூறப்படுகின்றது. பக்தி மார்க்கத்தில், எவரதும் வலியோ அல்லது வேதனையோ அகற்றப்படுவதில்லை. சில சந்நியாசிகள் நோய்வாய்ப்படும் பொழுது, பாரிசவாதம் வந்ததைப் போன்று படுத்திருக்கின்றனர், அது அவர்களுக்குப் பித்துப் பிடித்ததைப் போல் உள்ளது. குழந்தைகளான நீங்கள் தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றினால், என்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கு, அனைவரதும் சராசரி ஆயுட்காலம் 125 முதல் 150 வருடங்களாக உள்ளது. துவாபர யுகத்திலிருந்து ஆயுட்காலம் சடுதியாக 35 வருடங்கள் ஆகுகின்றது என்றில்லை; இல்லை. முதலில் ஆயுட்காலம் 100 முதல் 125 வருடங்கள் வரையானதாக இருந்து, பின்னர் 70 முதல் 80 வருடங்கள் வரையானதாக ஆகுகின்றது. இப்பொழுது சராசரி ஆயுட்காலம் 35 முதல் 40 வருடங்கள் என்ற நிலையை அடைந்து விட்டது. சிலர் இந்திரிய சுகத்தை அனுபவிப்பதால் (போகிகள்), இளமையிலேயே மரணிக்கின்றனர். நீங்கள் இப்பொழுது போகிகளில் இருந்து யோகிகளாக மாறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். அங்கே ஒருபொழுதும் அகால மரணம் சம்பவிக்காத வகையில், உங்களின் ஆயுட்காலம் மிக நீண்டதாக இருக்கும். நீங்கள் எத்தகைய இராச்சிய பாக்கியத்தைக் கொண்டிருந்தீர்கள் எனத் தந்தை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார். இராவணன் இப்பொழுது உங்களைக் கொள்ளையடித்து விட்டான். அங்கே, ஆலயங்கள் போன்ற எதுவும் இருக்க மாட்டாது. உங்களுடைய சுலோகம்: ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்திற்கு வெற்றி, ஏனைய சமயங்கள் அனைத்திற்கும் தோல்வி. அதாவது, எண்ணற்ற சமயங்கள் யாவும் இப்பொழுது அழிக்கப்பட வேண்டும். அங்கு, ஒரு பாரத தேசம் மாத்திரமே இருந்தது. அந்த ஒரு தேசத்தில் நிச்சயமாக வெகு சிலரே இருப்பார்கள். நீங்கள் எழுதலாம்: இன்னும் சொற்ப காலத்தில் பாரதத்தின் சனத்தொகை 900,000 ஆக இருக்கும். ஏனைய அனைவரும் அழிக்கப்படுவார்கள். ஒரேயொரு தர்மம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்றது. புதிய தேவ இராச்சியத்தில் ஒரு மொழியும், ஒரு சம்பிரதாயமுமே இருக்கும். இங்கே, ஒவ்வொருவரின் சம்பிரதாயமும் அவரவருக்கே உரியது. அங்கே, ஓர் இராச்சியமும், ஒரு சமுதாயமுமே இருந்தன. நீங்கள் இத்தகைய சுலோகங்களைப் பத்திரிகைகளில் எழுதலாம். சிலர் பாபாவிடம் ஆலோசனை கேட்கின்றனர்: பத்திரிகைகளில் எதையாவது அச்சிடுவதற்கு நாங்கள் பணம் செலவழிக்கலாமா? பாபா பதில் அளிக்கின்றார்: நீங்கள் அவ்வாறு செய்தால், என்ன நிகழ்கின்றது என மக்கள் அறிந்து கொள்வார்கள். கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் சுவர்க்கம் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அங்கு சூரிய வம்ச தேவர்களின் ஒரு தர்மமும், ஒரு சமுதாயமுமே இருந்தன. மகாபாரத யுத்தத்தின் பின்னரே சுவர்க்க வாயில்கள் திறந்து கொண்டன. பிரம்மாகுமாரிகளின் பெயருடன், இவ்விடயங்களைப் பத்திரிகைகளில் அச்சிடுங்கள். எவ்வாறாயினும், நீங்கள் தூய்மையாக இருந்தால் மாத்திரமே, உங்களைப் பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் என்று அழைக்க முடியும். இதற்காகவே நீங்கள் தந்தையை அழைத்தீர்கள். இப்பொழுது அவர் வந்துவிட்டதால் இந்தச் சத்தியத்தை அவருக்குச் செய்யுங்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் அதிகளவில் தடுமாறித் திரிந்தீர்கள். அத்துடன், யாகங்கள் வளர்த்தீர்கள், தவம் செய்தீர்கள், தான தர்மங்கள் செய்தீர்கள். முதலில், நீங்கள் ஒரேயொரு சிவனை மாத்திரமே வழிபட்டீர்கள். பின்னர் நீங்கள் தேவர்களை வழிபட்டீர்கள், இப்பொழுது கலப்படமானவர்கள் ஆகிவிட்டீர்கள். தந்தை இப்பொழுது உங்களை அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுவிக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, மனிதர்களில் இருந்து மிக மேன்மையான தேவர்கள் ஆக்குகின்றார். சத்திய யுகத்தில் உங்களிடமுள்ள அனைத்தும் தங்கத்தாலானவையாக இருக்கும். தந்தை உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுத்து, உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றார். எனவே, நீங்கள் ஏன் ஸ்ரீமத்தைப் பின்பற்றக்கூடாது? தந்தை உங்களை மரண அரக்கர்களின் தூக்குமேடையில் இருந்தும், கருப்பைச் சிறையின் தண்டனையில் இருந்தும் விடுவிக்கின்றார். சுவர்க்கத்தில் நீங்கள் கருப்பை எனும் மாளிகையில் வசிக்கின்றீர்கள். இங்கே, அது சிறையாக உள்ளது. ஏனெனில், மக்கள் பல்வேறு பாவச் செயல்களைச் செய்கின்றனர். அங்கே, ஐந்து விகாரங்கள் இல்லாத பொழுதிலும், அரசர், அரசியினதும், பிரஜைகளினதும் அந்தஸ்துகளுக்கு இடையில் வேறுபாடு இருக்கவே செய்யும். மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக அதிகளவு முயற்சி செய்கின்றனர். அங்கே, நீங்கள் இந்நேரத்திற்குரிய வெகுமதியைப் பெறுவதால், ஆலோசகர்கள் எவரும் அவசியமில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்குக் கூறுகின்றார்: குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! நான் தொலைதூர தேசத்திலிருந்து தூய்மையற்ற இந்த இராச்சியத்திற்குள், தூய்மையற்ற ஒரு சரீரத்தினுள் வந்திருக்கின்றேன். இது இராவண தேசம். நான் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களின் ஆஸ்தியை வழங்குகின்றேன். இத்தகைய தந்தையின் வழிகாட்டல்களுக்கு அடிபணியாமல் இருப்பது எனில், கீழ்ப்படிவு அற்றிருத்தல் என்பதாகும். நீங்கள் விகாரத்தைத் துரத்திச் செல்வதனால், உங்களை அதிகளவு விரக்தியடைச் செய்யக்கூடாது. பாபா கூறுகின்றார்: இவ்விகாரங்கள் துன்பத்தையே விளைவிக்கின்றன. தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவது எனது கடமை. அவர் அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார்: உண்ணுங்கள், பருகுங்கள், சந்தோஷமாக இருங்கள், ஆனால் நீங்கள் சிவபாபாவிடம் வந்திருக்கின்றீர்கள் என்பதையும், அவராலேயே பராமரிக்கப்படுகின்றீர்கள் என்பதையும் நினைவில் வைத்திருங்கள். நீங்கள் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களால் கொடுக்கப்பட்டவற்றை அணிந்தால், அவர்களையே நினைவுசெய்வதுடன், உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்படும். நீங்கள் சிவபாபாவின் பண்டாராவினால், அதாவது, தூய்மையாக்குபவரான தந்தையின் யாகத்தில் இருந்தே பராமரிக்கப்பட வேண்டுமே அன்றி, தூய்மை அற்றவர்களால் அல்ல. வேறு எவராவது உங்களுக்குக் கொடுத்த ஒன்றை நீங்கள் வைத்திருப்பீர்களாயின், அவர்களையே நினைவுசெய்வீர்கள். “உங்களின் இறுதிக் கணங்களில் எதை நினைவு செய்கின்றீர்களோ…” என்பது இதற்காகவே நினைவு கூரப்படுகின்றது. உங்களின் ஸ்திதி மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுது, அனைவரும் அழிக்கப்படவுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, உங்கள் புத்தியைப் பயன்படுத்துங்கள். “என்னுடையவர் ஒரேயொரு சிவபாபா மாத்திரமே.” நீங்கள் எப்பொழுதாவது உங்களின் (லௌகீகத்) தந்தையின் மாலையின் மணிகளை உருட்டுவீர்களா? நீங்கள் பெருமளவு சக்தியைப் பெற்று, உங்கள் பாவங்களும் அழிக்கப்பட்டு, நீங்கள் சக்திநிறைந்தவர்கள் ஆகும்வகையில், என்னை நினைவு செய்யுமாறு நான் குழந்தைகளான உங்களுக்கு ஞாபகம் ஊட்டுகின்றேன். இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் சக்திவாய்ந்தவர்கள். இராச்சியத்தைச் சக்திவாய்ந்தவர்களே பெறுகின்றனர். பாபா தனது சொந்த உதாரணத்தைக் கூறுகின்றார். நான் 12 குருமாரை ஏற்றேன், அவர்களுள் ஒரு குரு கூறினார்: அதிகாலையில் விழித்தெழுந்து, 1000 தடவைகள் மாலையின் மணிகளை உருட்டுங்கள். நான் அவரிடம் கூறினேன்: “இதைச் செய்வதற்கு வேறொரு நேரம் கொடுங்கள். பகல் முழுவதும் வியாபாரம் செய்வதால், நான் களைப்படைந்து விடுவேன்.” அதேபோல், நீங்களும் அதிகாலையில் விழித்தெழ முடியாதென பாபாவிடம் கூறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களால் தூய்மையாக இருக்க முடியவில்லை என்றோ அல்லது நினைவில் நிலைத்திருக்க முடியவில்லை என்றோ கூறாதீர்கள். நீங்கள் நினைவில் இருக்காது விட்டால், எவ்வாறு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்? நீங்கள் நிச்சயமாகத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். இதுவே இறுதிப் பிறவி, எனவே, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? அரைக் கல்பமாக நீங்கள் என்னை அழைத்து வருகின்றீர்கள். இப்பொழுது தூய்மையாகுமாறும், என்னை நினைவு செய்யுமாறும் நான் உங்களுக்குக் கூறுகின்றேன். தொடர்ந்தும் ஏனையோருக்குப் பாதையைக் காட்டுவதுடன், அவர்களுக்குச் செய்தியையும் கொடுங்கள். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! மரணம் உங்களுக்கு முன்னாலேயே உள்ளது. நீங்கள் மாத்திரமே தூதுவர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். பிராமணர்களாகிய உங்களைத் தவிர, வேறு எவராலும் தூதுவர்களாக முடியாது. தூய்மையாக்குபவரான சிவபாபா வந்து விட்டார். அவர் யாரில் பிரவேசிக்கின்றார் என்பதும் எழுதப்பட்டுள்ளது. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுவதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. பிரஜாபிதா பிரம்மா சூட்சும லோகத்தில் இருப்பாரா? இங்கேயே அவர் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மையானவராக மாறுகின்றார். மௌனசக்தி மூலம் ஸ்தாபனை மேற்கொள்ளப்படுகின்றது, ஆனால் விநாசமோ விஞ்ஞானத்தின் சக்தியால் இடம்பெறுகின்றது. எவ்வாறு அமைதி நிலவ முடியும் என அனைவரும் கேட்கின்றனர். ஆத்மாக்கள் அமைதி சொரூபங்கள். அவர்கள் தங்களின் பாகங்களை நடிப்பதற்காக இங்கே வருவதால், அவர்கள் எவ்வாறு இங்கே அமைதியாக இருக்க முடியும்? அமைதி தாமத்திலேயே அந்த அமைதி அனுபவம் செய்யப்பட முடியும். இங்கே, நீங்கள் துன்பத்தை மட்டுமே பெறுகின்றீர்கள். சத்திய யுகத்தில் அமைதி, சந்தோஷம் இரண்டும் இருக்கின்றன. குழந்தைகளான நீங்கள் இப்பொழுது பாபா கூறுவதை நேரடியே செவிமடுக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: தூய்மை அற்றவர்களால் ஒருபொழுதும் என்னைச் சந்திக்க முடியாது. இல்லாவிடில், அத்தகையவர்களை இங்கே அழைத்து வருகின்ற பிராமண ஆசிரியருக்கே பாவம் சேரும். (இந்திர சபையில் உள்ள ஒரு தேவதையின் உதாரணம் உள்ளது.) உண்மையில், இதுவே இந்திர சபையாகும். நீங்கள் அனைவரும் இந்த ஞானத்தின் தங்க தேவதைகளான, வெவ்வேறான ஞான தேவதைகள், இல்லாவிடில், விளைவு மோசமாக இருக்கும். நீங்கள் தூய்மை அற்றவர்களை இங்கே அழைத்து வருவதற்கு, பாபா கடுமையான தடை விதிக்கின்றார். முன்னர், இங்கே வந்தவர்களிடம் அவர்கள் தூய்மைக்கான சத்தியம் செய்துள்ளனரா என பாபா எப்பொழுதும் கேட்பார். அவர்கள் பதில் அளிப்பார்கள்: நாங்கள் இன்னமும் முயற்சி செய்கின்றோம். நீங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தாலே, உங்களால் பாபாவைச் சந்திக்க முடியும். நீங்கள் பாபாவைச் சந்தித்த பின்னர், விகாரத்தில் ஈடுபட்டால், நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். ஒருவேளை அது உங்கள் பாக்கியத்தில் இல்லாதிருக்கலாம் எனத் தந்தை புரிந்து கொள்வார். உங்களின் பாக்கியத்தை உருவாக்குவதற்கு நீங்கள் எவ்வாறு முயற்சி செய்யலாம் எனத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். எனவே, அத்தகைய தந்தை கூறுவதை நீங்கள் செவிமடுக்காதிருந்தால், உங்கள் நிலைமை என்னவாகும்? தந்தை கருணை கொண்டிருப்பதால், கூறுகின்றார்: தொடர்ந்தும் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது மரணித்து விடுவதாக இருக்கக்கூடாது. தந்தையை நினைவு செய்வதிலும், பாவச் சுமையை அகற்றுவதிலும் அக்கறை இருக்க வேண்டும். அச்சா. சிவபாபா மாத்திரமே அனைவருக்கும் சற்கதி அருள்கின்றார். உங்களால் அவரைப் புகைப்படம் பிடிக்க முடியாது. தெய்வீகக் காட்சியால் மாத்திரமே அவரைப் பார்க்க முடியும். எவ்வாறாயினும் அவரை அறிந்துகொள்ள முடியும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இறுதியில், நீங்கள் வேறெவரையும் அன்றி, ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்யக்கூடிய, அத்தகையதொரு ஸ்திதியை உருவாக்குங்கள். இவை அனைத்தும் அழிக்கப்பட உள்ளது என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்.

2. உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். இந்த இறுதிப் பிறவியில் நிச்சயமாகத் தூய்மை ஆகுங்கள். நீங்கள் மேலும் எந்தப் பாவமும் செய்யாதிருப்பதில் அக்கறை கொண்டிருக்க வேண்டும்.

ஆசீர்வாதம்:
நாடகம் என்ற கேடயத்தை உங்களின் முன்னால் வைத்திருப்பதன் மூலமும் சந்தோஷ போஷாக்கை உண்பதன் மூலமும் சதா சக்திசாலி ஆகுவீர்களாக.

சந்தோஷ உணவு ஆத்மாக்களை சக்திசாலி ஆக்குகிறது. சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கு, நாடகம் என்ற கேடயத்தை மிக நன்றாகப் பயன்படுத்துங்கள். நீங்கள் சதா நாடகத்தைப் பற்றி உணர்ந்தவராக இருந்தால், உங்களால் ஒருபோதும் வாட முடியாது. உங்களின் சந்தோஷமும் ஒருபோதும் மறைய முடியாது. ஏனென்றால், இந்த நாடகம் நன்மை செய்யக்கூடியது. ஆகவே, தீமையாகத் தோன்றும் எந்தவொரு காட்சியிலும்கூட நன்மை அடங்கியுள்ளது. இதைப் புரிந்து கொள்வதன் மூலம், நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.

சுலோகம்:
மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் (பரசிந்தன்), மற்றவர்களைப் பார்க்கும் (பரதர்ஷன்) என்ற தூசியில் இருந்து விலகி இருப்பவர்களே உண்மையான, விலைமதிப்பற்ற வைரங்கள் ஆவார்கள்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

சம்பூரணம் மற்றும் முழுமை அடைவதற்கு, நீங்கள் உங்களின் சரீர அகங்காரத்தை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். உங்களின் சரீர அகங்காரம் முழுமையாக உடையும்போது, நீங்கள் சம்பூரணமான அர்ப்பணித்த வாழ்க்கை வாழுகிறீர்கள் எனக் கூறப்படும். இத்தகைய முழுமையான துறவறம் மற்றும் சம்பூரணமான அர்ப்பணிப்பு வாழ்க்கை வாழ்பவர்களின் முழுமையான ஸ்திதி நினைவு செய்யப்படுகிறது. நீங்கள் சம்பூரணம் ஆகியவுடன், பாப்தாதாவுடன் ஒன்றாக வீடு திரும்பிச் செல்வீர்கள்.