05.04.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    15.11.2009     Om Shanti     Madhuban


உங்கள் சுயராச்சியப் பெறுபேற்றைச் சோதித்து, உங்களை மாற்றி, நிலையானதும்,
பிரிவினை அற்றதுமான (அகண்ட்) இராச்சியத்திற்கான ஓர் உரிமையைக் கோருங்கள்


இன்று, இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரான தந்தை, தனது ராஜ்-துலாரே (மிக அன்பான, இராஜரீகமான) குழந்தைகளைச் சந்திப்பதற்காக வந்துள்ளார். நீங்கள் ஏன் நேசிக்கப்படுபவர்களாக உள்ளீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் மூன்று சிம்மாசனங்களுக்கு அதிபதிகள் என்பதை அறிவீர்களா? ஒன்று சுயராச்சிய சிம்மாசனம், இரண்டாவது பாப்தாதாவின் இதய சிம்மாசனம், மூன்றாவது எதிர்கால சிம்மாசனம் ஆகும். நீங்கள் மூன்று சிம்மாசனங்களுக்குமான ஓர் உரிமையைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உங்களது எதிர்கால சிம்மாசனத்திற்கும் இங்கேயே பயிற்சி செய்கின்றீர்கள். நீங்கள் எதிர்காலத்திற்கான ஆயத்தங்களையும், முயற்சியையும் இப்பொழுதே செய்கின்றீர்கள். தற்போது நீங்கள் எடுக்கும் முயற்சி, உங்களின் பல பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தைக் கோரிக்கொள்வதற்கு உதவி புரியும். இந்நேரத்தில் நீங்கள் உங்களது இராச்சிய பாக்கியத்திற்கான சம்ஸ்காரங்களைக் கிரகிக்கின்றீர்கள். ஏனெனில் தற்போது நீங்கள் செய்யும் முயற்சியே, எதிர்கால இராச்சியத்திற்கான ஓர் உரிமையைக் கோருவதற்கு உங்களுக்கு உதவுகின்றது. எனவே, உங்களது தற்போதைய முயற்சி மிகச் சரியானதா எனச் சோதித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் ஒரேயொரு இராச்சியமே இருக்கும். எனவே, உங்கள் மனதில் அந்த ஓர் இராச்சியம் இருக்கின்றதா என இப்பொழுது சோதித்துப் பாருங்கள். உங்கள் முயற்சியில் ஓர் இராச்சியத்தைக் கொண்டிருக்கின்றீர்களா? அல்லது, இராச்சியத்திற்கு மாயை தடைகளை உருவாக்குகின்றாளா? ஓர் இராச்சியத்தைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, மாயையின் ஆதிக்கம் இல்லையல்லவா? இரு இராச்சியங்கள் கிடையாது, அப்படித்தானே? ஒரேயொரு இராச்சியம் இருப்பதே எதிர்காலத்தின் சிறப்பியல்பாகும். எனவே, தற்போதைய பயிற்சி எதிர்காலத்திற்கும் தொடர்கின்றது. எனவே, தற்போது நீங்கள் சுயராச்சியத்தைக் கொண்டிருக்கின்றீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். மாயை உங்கள் சுயராச்சியத்தில் தலையிட மாட்டாள், அப்படித்தானே? இரண்டு இராச்சியங்கள் கிடையாது, அப்படித்தானே? இரண்டு இராச்சியங்கள் இருக்குமாயின், ஓர் இராச்சியத்திற்கான சம்ஸ்காரங்களால் எப்போது உங்களை நிரப்பிக் கொள்ளப் போகின்றீர்கள்? ஓர் இராச்சியமும், ஒரு தர்மமுமே எதிர்காலத்தின் சிறப்பியல்பாகும். அது என்ன தர்மம்? உங்களது விசேட தாரணை என்ன? முழுமையான தூய்மை. எனவே, ஒரேயொரு தர்மம் உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள். தூய்மையின்மை என்ற மற்றைய சமயம் இடையில் தலையிடுவதில்லை, அப்படித்தானே? அத்துடன், சட்டதிட்டங்கள் ஒன்றிற்கானதா என்பதையும் சோதித்துப் பாருங்கள். அல்லது, மாயை இடையில் தலையிடுகின்றாளா? ஓர் இராச்சியம் எவ்வித தடைகளும் இன்றித் தொடர்கின்றதா? அந்த இராச்சியத்தில், சந்தோஷமும், அமைதியும் உங்களிடம் நிலையாகவும், இயல்பாகவும் இருப்பது இன்னுமொரு விடயமாகும். எனவே, உங்கள் இராச்சியத்தில் நிலையான சந்தோஷத்தையும், அமைதியையும் நீங்கள் கொண்டிருக்கின்றீர்களா எனச் சோதித்துப் பாருங்கள். அங்கு எவ்வித தலையீடுகளும் இல்லை, அப்படித்தானே? மாயை உங்கள் சுயராச்சியத்தில் தலையிட்டு, அமைதியின்மையைப் பரப்புவதில்லை, அப்படித்தானே? மாயை உங்களின் சுய இராச்சியத்திற்கு எதிராக, எந்தவொரு சற்கதியிலோ அல்லது புகழிலோ எவ்வித ஆதிக்கமும் செலுத்துவதில்லை, அல்லவா? நீங்கள் சதா சந்தோஷத்தையும், அமைதியையும், பேரானந்தத்தையும், அன்பையும், அதீந்திரிய சுகத்தையும் கொண்டிருக்கின்றீர்களா? உங்கள் எதிர்கால இராச்சியத்தில் சகல பேறுகளையும், சம்பூரணத்தையும் கொண்டிருக்கின்றீர்கள் என்பதையும், இதனால் அங்கு திருப்தி இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே, இப்பொழுதும்கூட, நீங்கள் சுயராச்சியத்தில் முழுமையாக இருக்கின்றீர்களா, அல்லது ஏதாவது குறைகள் இருக்கின்றதா? தற்போது செய்யப்படும் முயற்சியில் ஏதாவது குறை இருக்குமாயின், எவ்வாறு நீங்கள் நிலையானதும், பிரிவினை அற்றதுமான எதிர்கால இராச்சியத்திற்கான ஓர் உரிமையைக் கோருவீர்கள்? அனைத்தும் தற்போதைய முயற்சியிலேயே தங்கியுள்ளது. இந்நேரத்தில் ஏதாவது குறை இருக்குமாயின், உங்களால் எதிர்கால சம்பூரண இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டவர் ஆகமுடியாது. சுயராச்சியத்திற்கான நீண்டகாலப் பயிற்சி, உங்களை எதிர்கால இராச்சியத்திற்கான ஓர் உரிமையைக் கோரவைக்கும். எனவே, இப் பரிசோதனை சதா இடம்பெறட்டும். எனவே, இப்பொழுது நீங்கள் நீண்ட காலத்திற்கு முயற்சி செய்யாவிட்டால், மிகச் சிறிய வெகுமதியையே பெறுவீர்கள். இதனாலேயே, இப்பொழுதில் இருந்தே உங்களை முழுமையாகவும், சம்பூரணமாகவும் ஆக்குவதற்காக அவ்வப்போது பாப்தாதா உங்கள் கவனத்தை ஈர்க்கின்றார். உங்கள் முயற்சி தொடர்வதாக அவ்வப்போது நீங்கள் கூறிக் கொண்டிருந்தாலும், உங்கள் முயற்சிகளுக்கு இடையே, ‘ரோ’ (எப்படி ஆயினும்) என்ற வார்த்தையைத் தொடர்ந்தும் பயன்படுத்துகிறீர்கள். எப்படி ஆயினும், இது நடக்கும். எப்படி ஆயினும், நான் அதைச் செய்வேன். இந்த சம்ஸ்காரம், 21 பிறவிகளுக்கு உங்களை நிலையானதும், பிரிவினை அற்றதுமான இராச்சியத்திற்கான உரிமையைக் கோர விடாது.

பாப்தாதா எல்லா வேளைக்குமாக உங்களின் கவனத்தை ஈர்க்கின்றார். ஏதாவது தடைகள், புயல்கள் வருமாயின், அந்தப்புயல் (ரூஃபான்) ஒரு பரிசாக (ரோஃபா) ஆகிவிடும். புயல் ஒரு புயலாகவே இருந்து விடாமல், ஒரு பரிசாக ஆகிவிட வேண்டும். மாயை யுத்தம் புரியும்போது, அவள் உங்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்கின்றாள். எனவே, அந்த அனுபவத்தை உங்களை முன்னேறிச் செல்ல உதவும் ஓர் அனுபவ ஏணியாகப் பாருங்கள். இதற்கு, பாப்தாதா கூறுகின்றார்: சதா உங்கள் சொந்த அட்டவணையைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எந்தளவிற்கு உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பார்க்கின்றீர்களோ, அதற்கேற்ப, சோதித்த பின்னர் நீங்களே உங்களை மாற்றிக் கொள்வீர்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பார்க்கின்றீர்களா? சோதித்துப் பார்க்கின்றீர்களா? தினமும் உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பார்ப்பவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! சிலவேளைகளில் மாத்திரமன்றி, தினமும் சோதித்துப் பார்ப்பவர்கள்? தினமும் உங்கள் அட்டவணையைச் சோதித்துப் பார்த்து, அதனை மாற்றுங்கள். ஏனெனில், நீண்ட காலமாக பாப்தாதா காலத்தைப் பற்றி உங்களுக்கு சமிக்ஞை கொடுத்து வருகின்றார். காலத்தைப் பாருங்கள் - மக்களின் மனங்களில் கவலைகள் (சிந்தா) அதிகரித்து வருகின்றன, ஆனால் உங்கள் மனங்களிலோ எவ்விதக் கவலைகளும் இல்லை, அதற்குப் பதிலாக இறை சிந்தனைகளே (பிரபு சிந்தன்) உள்ளன. உங்கள் மனங்களில் இறை சிந்தனைகளைக் கொண்டிருப்பதால், நீங்கள் கருவிகள் என்பதையும், பணிவானவர்கள் என்பதையும் அறிவீர்கள். ஏனெனில், தந்தையே கரவன்ஹார் (உங்களைச் செய்யத் தூண்டுபவர்) ஆவார். இதனாலேயே உங்கள் மனங்களில் எவ்விதக் கவலைகளும் இருப்பதில்லை. கரவன்ஹாரே உங்களைச் செய்ய வைக்கின்றார் - இவ்விழிப்புணர்வு சதா உங்களை முன்னேறச் செய்கின்றது.

இப்பொழுது, விசேடமாக சங்கமயுகத்தின் ஒவ்வொரு விநாடியும், கணமும், எண்ணமும் தூய்மையானதாகவும், மங்களகரமானதாகவும் (சுபம்) உள்ளதா என நீங்கள் ஒவ்வொருவரும் சோதித்துப் பார்க்க வேண்டும். இந்நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்: ஒரு விநாடி என்பது வெறும் ஒரு விநாடியல்ல, ஒரு விநாடி அதிக பெறுமதியையும், முக்கியத்துவத்தையும் கொண்டது. சிலவேளைகளில், குழந்தைகள் தாங்கள் ஓர் எண்ணத்தைக் கொண்டிருந்ததாகவும், ஆனால் உண்மையில் அதற்கு இரண்டு முதல் நான்கு வரையான விநாடிகளே எடுத்ததாகவும் கூறுகின்றனர். எவ்வாறாயினும், சங்கமயுக காலம் மகத்தான பெறுமதியைக் கொண்டது. தற்போதைய ஒரு விநாடி ஒரு மணித்தியாலத்திற்குச் சமனானது. தற்போதைய நேரம் மிகவும் பெறுமதி வாய்ந்தது. ஏனெனில், உங்கள் இறுதிப் பரீட்சைத்தாள் எக்கணத்திலும் சடுதியாக நிகழலாம் என பாப்தாதா கூறியுள்ளார். பாப்தாதா உங்களுக்கு அதைக் கூறமாட்டார். இதனாலேயே நீங்கள் நிகழ்காலத்தின் மீது முழுமையான, பூரணமான கவனம் செலுத்த வேண்டும். பாப்தாதா உங்களுக்கு சகல பொக்கிஷங்களையும் கொடுத்துள்ளார். அப்பொக்கிஷங்கள் ஒவ்வொன்றும் உரிய நேரத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். நீங்களே அப்பொக்கிஷங்களின் அதிபதிகள் ஆவீர்கள். ஒரு குறித்த நேரத்தில் எப்பொக்கிஷம் தேவைப்படுகின்றதோ, அப்பொக்கிஷம் அந்நேரத்தில் பயன்படுத்தப்படுவதே ஓர் அதிபதியின் சிறப்பியல்பாகும். நீங்கள் ஏற்றுக்கொள்ளும் சக்திக்குக் கட்டளையிடும்போது, அந்நேரத்தில் இந்த ஏற்றுக்கொள்ளும் சக்தியா பயன்படுத்தப்படுகின்றது? ஏனெனில், ஓர் அதிபதியால் தனது பொக்கிஷங்களைச் சரியான நேரத்தில் பயன்படுத்த முடியும். எனவே, இப்பொழுது, நீங்கள் அனைவரும் உங்கள்மீது பெருமளவு கவனம் செலுத்த வேண்டும்! ஒவ்வொருவரது முகத்திலும், செயற்பாடுகளிலும் சந்தோஷப் பொக்கிஷம் எப்பொழுதும் தென்பட வேண்டும். சந்தோஷமே அநாதியான தந்தையிடம் இருந்து பெறும் பரிசாகும். எனவே, அநாதியான தந்தையிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பரிசை நிலையாக உங்களுடன் வைத்திருங்கள். சந்தோஷத்தைப் போன்ற போஷாக்கு எதுவுமில்லை, அதாவது சந்தோஷத்தைப் போன்று வேறு எந்தவொரு பொக்கிஷமும் இல்லை என சந்தோஷத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சதா சந்தோஷம் உடையவர்களின் கண்களிலும், முகத்திலும், செயற்பாடுகளிலும் இயல்பாகவே சந்தோஷம் தென்படுகின்றது. சதா சந்தோஷமாக இருந்து, சதா சந்தோஷத்தைப் பகிர்ந்தளியுங்கள் என்பதே பாப்தாதாவின் ஆசீர்வாதமாகும். ஏனெனில், நீங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்தளிக்கும்போது, அது அதிகரிக்கின்றது. வேறு எந்தவொரு பொக்கிஷத்தையேனும் நீங்கள் பகிர்ந்து அளிக்கும்போது, அது குறைவடையவே செய்யும். ஆனால், சந்தோஷப் பொக்கிஷத்தை நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகப் பகிர்ந்து அளிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு அது அதிகரிக்கும். எனவே. நீங்கள் சந்தோஷப் பொக்கிஷத்தைச் சதா கொண்டிருக்கின்றீர்களா எனச் சோதித்துப் பாருங்கள்.

இப்பொழுது, இந்நாட்டைச் சேர்ந்த குழந்தைகளாயினும், வெளிநாடுகளைச் சேர்ந்த குழந்தைகளாயினும் பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் ஒரு விடயத்திற்காக விசேட பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார். அது என்ன? இந்நாட்டிலாயினும், வெளிநாடுகளாயினும் நீங்கள் அனைவரும் தந்தையின் செய்திகளை ஆத்மாக்களுக்கு ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கொடுத்திருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த நிகழ்ச்சிகளைச் சந்தோஷமாகச் செய்திருந்தாலும் - நீங்கள் ஒரு நிகழ்ச்சியை நடாத்தி இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒரு நிகழ்ச்சியை நடாத்தியிருந்தாலும் - நீங்கள் அதற்கான ஆயிரம் மடங்கு பலாபலன்களைப் பெற்றிருக்கின்றீர்கள். தற்காலத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகள் மேலும் பாரதூரமாகப் போகின்றது. இதனாலேயே கிராமங்களில் ஆயினும், எந்தவொரு மூலை முடுக்காயினும் ‘எங்கள் தந்தை வந்தார், ஆனால் நீங்கள் எங்களுக்கு அச்செய்தியைக் கொடுக்கவில்லை’ போன்ற முறைப்பாடுகள் எங்கிருந்தேனும் வரக்கூடாது என்ற எண்ணத்தை பாப்தாதா கொண்டுள்ளார். இதனாலேயே பாப்தாதா ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் நீங்கள் செய்து முடித்த பணியையிட்டு மகிழ்ச்சி அடைகின்றார். தொடர்ந்தும் ஒன்றுகூடி, இத்தகைய நிகழ்ச்சிகளை உங்கள் மத்தியில் செய்யுங்கள். நீங்கள் அனைவரும் உங்களின் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் தைரியத்தையும் உங்களுக்கே உரித்தான முறையில் பயன்படுத்தி, நீங்கள் அனைவரும் இப்பொழுது மிகவும் சிறப்பாகச் செய்துள்ளதையும் பாப்தாதா பார்த்தார். எதிர்காலத்திலும்கூட, காலத்திற்கேற்ப, எந்தவொரு மூலைமுடுக்கேனும் செய்தி கிடைக்கப் பெறாமல் தவறவிடப்படக் கூடாது என்ற இலக்கைக் கொண்டிருங்கள். இதனைச் செய்வதால், நீங்கள் உங்களுக்கும், ஏனைய ஆத்மாக்களுக்கும் நன்மை பயக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிகளை விரும்பினீர்கள், இல்லையா? நீங்கள் அவற்றை விரும்பினீர்களா? எனவே, பாப்தாதா குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: ஆத்மாக்களில் கருணை காட்டுங்கள். இந்நாட்களில் துன்பத்தாலும், அமைதியின்மையாலும் அவர்கள் அனைவரும் கருணை காட்டுங்கள், பரிவு காட்டுங்கள் என இதயபூர்வமாகக் கூறுகின்றனர். எனவே, குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் சகபாடிகள். எனவே, குழந்தைகளாகிய உங்கள் மூலமாகத் தந்தை ஒவ்வொரு குழந்தையும் கருணை வாய்ந்தவராக இருக்கும் பாகத்தைப் பார்க்க விரும்புகின்றார். நீங்கள் துன்ப உலகம் மாறவேண்டும், அதனால் சந்தோஷ உலகம் நிச்சயமாக வரவேண்டும் என்ற உற்சாகத்தைக் கொண்டுள்ளீர்கள். எனவே, சந்தோஷ உலகம் வருவதற்கும், துன்பமும் அமைதியின்மையும் அழிக்கப்படுவதற்கும் ஏதுவாக நிலைமைகள் மாற்றம் அடைகின்றன. எனவே, தந்தையின் இன்றைய செய்தியை ஞாபகம் வைத்திருங்கள்: இப்பொழுது உங்களுடைய மனம், உங்களுடைய வார்த்தைகள், உங்களுடைய முகம் மற்றும் செயற்பாடுகள் மூலமாகச் சேவை செய்யும் வேகத்தைத் தொடர்ந்தும் அதிகரியுங்கள். தொடர்ந்தும் உங்கள் இராச்சியத்தை அருகில் கொண்டுவாருங்கள். அச்சா.

பாப்தாதாவைச் சந்திப்பதற்கு முதற்தடவையாக வந்திருப்பவர்கள், கையை உயர்த்துங்கள்! ஏராளமானோர் வந்துள்ளனர். நீங்கள் எழுந்து நிற்கலாம். பாராட்டுக்கள். நீங்கள் குறைந்தபட்சம் முடிவிற்கு முன்னரே வந்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு புதிய பிறவி எடுத்துள்ளீர்கள். எல்லாத் திசைகளிலும் இருந்து வந்துள்ள குழந்தைகள் அனைவருக்கும் பாப்தாதாவிடம் இருந்தும், எல்லா இடங்களிலுமுள்ள குழந்தைகளிடம் இருந்தும் பாராட்டுக்கள்! பாராட்டுக்கள்! நீங்கள் பிராமணக் குடும்பத்தைப் பார்ப்பதில் சந்தோஷம் அடைகின்றீர்கள், அல்லவா? இப்பொழுது வந்திருப்பவர்களுக்கு பாப்தாதா கூறுகின்றார்: அதிக காலம் கடந்து விட்டது. மிகவும் சொற்ப காலமே எஞ்சியுள்ளதால் நீங்கள் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். தீவிர முயற்சியாளர்களாக இருப்பவர்கள் முன்னேறிச் செல்வார்கள். நீங்கள் இப்பொழுது நடக்கக்கூடாது. நீங்கள் பறக்க வேண்டும். நீங்கள் பறக்கும் ஸ்திதிக்கு முயற்சி செய்வீர்களாயின், நீங்கள் தாமதமாக வந்திருந்தாலும்கூட உங்களால் தந்தையின் ஆஸ்திக்கான முழு உரிமையையும் பெற முடியும். ஒவ்வொரு விநாடியும் சந்தோஷமாக இருந்து, இச்செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். அச்சா.

இன்று பாப்தாதா, நீங்கள் சுய இராச்சியத்திற்கான உரிமையைக் கொண்டிருப்பதுடன், சுயத்தின் அதிபதிகளாகவும் இருக்க வேண்டும் என்றும், உங்கள் சுய இராச்சியத்தின் பெறுபேறுகளைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் உங்களுக்குக் கூறியிருக்கிறார். அதனைச் சோதித்துப் பார்த்து, பின்னர், நீண்டகாலமாக ஏதாவது பலவீனங்கள் இருந்தால், அவற்றை மாற்றுங்கள். ஏனெனில் உங்கள் இராச்சியம் பிரிவினையற்று, நிலையாகச் தொடர்வதற்கான தேவை உள்ளது. நீண்டகாலமாக முயற்சி செய்பவர்கள் நீண்டகால வெகுமதிக்கான உரிமையை இயல்பாகவே பெறுவார்கள். ஆகவே நீண்டகால முயற்சி என்பதைக் கீழ்க் கோடிடுங்கள். பரிசோதிப்பது உள்ளது. ஆனால், மாற்றமும் உள்ளதா?

பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து இடங்களிலுமுள்ள குழந்தைகளுக்கு, பாபா ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையின் போது, அனைத்து குழந்தைகளுக்கும் விசேடமாக சக்தியைப் பகிர்ந்தளிக்கிறார். அமிர்தவேளையின்போது பாபா சக்தி என்ற ஆசீர்வாதத்தை விசேடமாகப் பகிர்ந்தளிக்கிறார். அமிர்த வேளையின்போது இந்தச் சக்தியை ஆசீர்வாதங்களாக எடுத்துக் கொள்பவர்கள், விசேடமான தீவிர முயற்சியாளர்கள் ஆகுகிறார்கள். அமிர்தவேளைக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்றால், சதா பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருத்தல் என்று அர்த்தம். சில குழந்தைகள் இதில் கவனம் செலுத்துகிறார்கள். பாப்தாதா அந்தக் குழந்தைகளுக்கு விசேடமாக ஒரு சான்றிதழை தினமும் வழங்குகின்றார்: ஆஹா குழந்தாய்! ஆஹா!

அனைத்து இடங்களிலும் உள்ள தீவிர முயற்சி செய்யும் குழந்தைகள் அனைவருக்கும், ஒவ்வொரு கணத்திலும் பாப்தாதாவைத் தங்கள் சகபாடிகள் ஆக்குவதுடன், இணைந்த நிலையிலிருக்கும் பயிற்சியைக் கொண்டிருப்பவர்களுக்கும் பாப்தாதா ஒரு விசேடமான ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் சதா தொடர்ந்து பறப்பதுடன், மற்றவர்கள் பறப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கி, அவர்களும் பறக்கச் செய்வீர்களாக! நீங்;கள் அனைவரும் வெற்றியாளர்கள். உங்களின் வெற்றியின் பலனாக, நீங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொடர்ந்து பாப்தாதாவின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். ஆகவே அமரத்துவமானவர்களாகி, தொடர்ந்து அனைவருக்கும் அமிர்தத்தைப் பருகக் கொடுங்கள். அனைத்து இடங்களிலுமுள்ள குழந்தைளான நீங்கள், பாப்தாதாவின் முன்னால் இருக்கிறீர்கள். பாப்தாதாவின் இதயத்தில் ஒவ்வொரு குழந்தையின் மீதும் அன்பு உள்ளது. ஏனெனில், ஒவ்வொரு குழந்தையிலும் ஏதாவதொரு சிறப்பியல்பு உள்ளது. இப்பொழுது உங்களை அனைத்து சிறப்பியல்புகளும் உள்ள விசேட ஆத்மாவாக ஆக்குவதுடன், தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். ஒவ்வொரு குழந்தையும் பாப்தாதாவின் பல்கோடி மடங்கு தனிப்பட்ட அன்பையும், நினைவுகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்! அச்சா. இப்பொழுது நாங்கள் தொடர்ந்து சந்திப்போம். நமஸ்தே.

தாதிமாருடன்: நீங்கள் அனைவரும் அதிகளவு சுற்றுப்பயணம் செய்திருக்கிறீர்கள். இந்நாட்களில், அமைதியின்மை அதிகரிக்கிறது. அதனால் அவர்கள் நாள் முழுவதும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷம் அடைவதற்கு, அமைதி அதிர்வலைகளால், அவர்களுக்கு அமைதியைக் கொடுங்கள். உதாரணமாக, களைப்பு அடைந்திருக்கும் ஒருவருக்கு அரை மணிநேரம் ஓய்வு கிடைத்தாலே அவர் சந்தோஷம் அடைவார். நீங்கள் நன்றாகச் செய்தீர்கள். நீங்கள் இளைஞர்களோ அல்லது முதியவர்களோ, எல்லோரும் அனைத்து இடங்களிலும் மிகவும் நன்றாகச் செய்தீர்கள். எங்கு உற்சாகம் உள்ளதோ, செலவு ஒரு பெரிய விடயமல்ல. பல ஆத்மாக்கள் குறைந்தபட்சம் செய்தியையாவது பெற்றுக் கொண்டார்கள்! உங்களுக்கு எதிரான (இனிமையான) முறைப்பாடு முடிந்துவிட்டது(நீங்கள் தங்களுக்கு செய்தியைக் கொடுக்கவில்லை என்பது). அது நல்லது. அவ்வப்போது அத்தகைய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். ஒவ்வொரு நகரமும் எந்தளவுக்கு செய்ய முடியுமோ, அவர்களின் ஆற்றலுக்கேற்ப செய்வதே சிறந்ததாகும்.

வெளிநாட்டிலிருந்து வந்த மூத்த சகோதரிகளுடன்: நீங்கள் மக்களைக் குழுக்களாகக் கூட்டிவந்து, அவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்போது பாப்தாதா விரும்புகிறார். ஏனெனில் அங்கே, அவர்கள் வெகு தொலைவில் இருக்கிறார்கள். அவர்கள் நெருக்கமாக வரும்போது, ஒவ்வொருவருடைய நற்குணங்களையும் அவர்களால் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஒருவரோடு ஒருவர் தூரத்தே இருக்கும்போது, அவர்களுக்கு இதனைப் பற்றித் தெரியாது. ஆகவே ஒருவரையொருவர் பார்க்கும்போது, அவர்களுக்குள் உற்சாகம் ஏற்படும். ஆகவே அபுவில் இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது சிறந்ததாகும். அத்துடன் நீங்களும் ஒருவருக்கொருவர் உற்சாகத்தை அளித்து, ஒன்றுகூடலைப் பலப்படுத்துவதும் சிறந்ததாகும். அனைத்தும் நன்றாக உள்ளதா? அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றதா? ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள். நீங்கள் உங்கள் நேரத்தைச் செலவிடுகிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த சேவைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, இதயபூர்வமாக நேரத்தைச் செலவிடுகிறீர்கள். இப்பொழுது நீங்கள் உங்கள் பணியை முடித்து, வெற்றி அடைந்துள்ளீர்கள். இப்போது நீங்கள் செல்லலாம். அனைவரும் உங்களுக்கு மிக நன்றாக உதவி செய்தார்;கள். நீங்கள் வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் நிகழ்ச்சிகளைச் செய்தீர்கள்.

இத்தடவை உத்தரப் பிரதேசம், பெனாரஸ், மேற்கு நேபாளம் ஆகியவற்றின் சேவை செய்யும் முறையாகும்: தற்போது பாப்தாதா எல்லாப் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கூறுகின்றார்: இப்பொழுது சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள சகல அணிகளையும் சார்ந்த அங்கத்தவர்களைக் கொண்டு ஒரு குழுவைத் தயார் செய்யுங்கள். ஒவ்வொரு பிராந்தியமும் உங்கள் சொந்தப் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு அணியையும் சார்ந்தவர்களுக்குச் சேவை செய்கின்றீர்கள். தொடர்ந்தும் அவ்வாறு செய்வீர்கள். எவ்வாறாயினும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஒவ்வொரு அணியினதும் ஒரு அங்கத்தவரைக் கொண்ட அத்தகைய சேவைக் குழு இருக்க வேண்டும். நீங்கள் நிகழ்ச்சிகளைச் செய்யும் இடங்களில் எல்லாம் இக்குழுவினர் தங்கள் அணியைச் சார்ந்தவர்களுக்கு விசேட அழைப்பிதழ்களை அனுப்ப வேண்டும். எந்தவொரு அணியேனும், தங்களுக்குச் செய்தி கிடைக்கவில்லை என முறைப்பாடு செய்யக்கூடாது. பல தரப்பட்டவர்களைக் கொண்ட இக்குழுவைச் சார்ந்த ஒவ்வொருவரும் தங்களுடைய அணியினது சேவையை அதிகரிப்பதுடன், ஒவ்வொருவரும் தமது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்: இந்த ஞானத்தின் மூலம் என்ன பெற்றுக் கொண்டேன், இப்பொழுது நான் எதை அனுபவம் செய்கின்றேன்? எனவே, அத்தகைய ஒரு சேவைக்குழுவை ஒவ்வொரு பிராந்தியத்திலும் உருவாக்குங்கள். சொற்பொழிவுகளை ஆற்றுவதற்கான நேரம் கிடைக்காது போனாலும்கூட, வைபவங்களின் முடிவில் அவர்களை ஒரு வரிசையில் அமர்த்தி, மேடைக் காரியதரிசி அவர்களுடைய அறிமுகத்தைக் கொடுக்குமாறு செய்யுங்கள். ஓரிருவர் தங்களுடைய அனுபவங்களைப் பகிரலாம். நேரம் இருந்தால், தாங்கள் தங்களுடைய குடும்பத்துடன் வாழ்ந்து, தொழிலையும் மேற்கொள்கின்ற அதேவேளை எவ்வாறு தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டார்கள் என்பது பற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை எடுத்துக் கொள்ளலாம். குழுக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்கின்ற விசேட ஒலிவாங்கிகள் இருக்க வேண்டும் என பாப்தாதா முன்னரும் கூறியுள்ளார்.

தந்தை பிரம்மாவிடம் இருந்து விசேட பராமரிப்பைப் பெறுகின்ற உரிமையை உத்தரப் பிரதேசம் பெற்றிருந்தமை மிக நல்லது. உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாவின் பெயரில் ஒரு ஞாபகார்த்தமும் உள்ளது. ஜகதாம்பாவிடம் இருந்தும், பிரம்மா பாபாவிடம் இருந்தும் பராமரிப்பைப் பெற்றமை உத்தர பிரதேசத்தின் பாக்கியமாகும். எனவே, இது பராமரிக்கப்பட்ட ஒரு பூமியாகும். பாக்கிய நட்சத்திரமாக விளங்குகின்ற ஆசீர்வாதத்தை தந்தை பிரம்மாவும், ஜகதாம்பாவும் உத்தரப் பிரதேசத்திற்கு வழங்கி உள்ளனர். நாளுக்கு நாள், அதுவும் குறிப்பாக முன்பிருந்ததை விடவும் இப்பொழுது அதிகளவில் சேவை ஸ்தலங்கள், உப நிலையங்கள், கீதை பாடசாலைகளில் நல்ல விரிவாக்கம் ஏற்பட்டுள்ளதைத் தந்தை பார்த்துள்ளார். இதனாலேயே பாப்தாதா விசேட வாழ்த்துக்களைக் கொடுக்கின்றார்: தொடர்ந்தும் முன்னேறி, எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், செய்தியைக் கொடுப்பதிலும் முதல் இலக்கத்தவர் ஆகுங்கள். அது நல்லது. பாப்தாதா களிப்படைகின்றார். இவ்வாறே தொடர்ந்தும் முன்னேறுங்கள். ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்கள்! நீங்கள் முன்னேறுகின்றீர்கள். எனவே, உங்களால் இயன்றவரை தொடர்ந்தும் முன்னேறுங்கள். நல்லது.

ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவருக்கும் ஒரு நலம்விரும்பியாகி, ஒன்றுகூடலில் ஒத்துழைக்கும் சக்தியால் வெற்றியாளர் ஆகுவீர்களாக.

ஒன்றுகூடலில் அனைவரும் ஒருவர் மற்றவரின் உதவியாளராகவும் நலம் விரும்பியாகவும் இருந்தால், ஒன்றுகூடலில் நீங்கள் ஒத்துழைக்கும் சக்தியால் சூழப்பட்டிருக்கும் போது, அற்புதங்களைச் செய்ய முடியும். ஒருவருக்கொருவர் நலம்விரும்பிகளாக இருங்கள். ஒருவரோடு ஒருவர் ஒத்துழையுங்கள். அப்போது இந்த வட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கான துணிச்சல் மாயைக்கு வராது. எவ்வாறாயினும், நீங்கள் எத்தனை விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வந்தாலும், நிச்சயமாக நீங்கள் அவற்றுக்கு முகங்கொடுப்பீர்கள் என்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருந்து, வெற்றியாளர் ஆகுவதன் மூலம் அதை அனைவருக்கும் செய்து காட்டினால் மட்டுமே, ஒன்றுகூடலில் ஒத்துழைக்கும் சக்தி இருக்கும்.

சுலோகம்:
எந்தவொரு ஆசையும் (இச்சா) உங்களை நல்லவர் (அச்சா) ஆகுவதற்கு அனுமதிக்காது. ஆகவே, ஆசைகளின் அறிவே அற்றவர் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்கை: மகத்துவமானவர் ஆகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள்.

இனிப்பான பொருட்களை உண்பதன் மூலமும் மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலமும் உங்களின் வாய் ஒருசில கணங்களுக்கு இனிமையாக இருக்கும். நீங்களும் சந்தோஷமாக இருப்பீர்கள். அதேபோல், நீங்களே இனிமையானவர் ஆகும்போது, இனிய வார்த்தைகள் சதா உங்களின் வாயில் இருந்து வெளிப்படும். இத்தகைய இனிமையான வார்த்தைகள், உங்களைச் சந்தோஷமாக ஆக்குவதுடன், மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும். இந்த முறையில் சதா அனைவரின் வாய்களையும் இனிப்பாக்குங்கள். அத்துடன் சதா இனிய திருஷ்டி, இனிய வார்த்தைகள், இனிய செயல்களைக் கொண்டிருங்கள்.