05.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தையோடு ஒத்துழைப்பதற்கு மன்மனாபவ என்ற பாடத்தை அனைவரிடத்திலும் உறுதியாக்குங்கள். சதா ஒரேயொரு தந்தையை பின்பற்றுங்கள்.
கேள்வி:
அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்குத் தேவைப்படுகின்ற, இலகுவானதும் மேன்மையானதுமான முயற்சி என்ன?பதில்:
ஓ அதி மேன்மையானவர்கள் ஆகப்போகின்ற குழந்தைகளே, தொடர்ந்தும் சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். தந்தையொருவரை நினைவு செய்யுங்கள், எதிலும் தலையிடாதீர்கள். உண்ணுங்கள், பருகுங்கள், அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்யும் போது, நீங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகுவீர்கள். தங்கள் மீது குரு திசையைக் கொண்டவர்களால் மாத்திரமே அதி மேன்மையானவர்கள் ஆகமுடியும். அவர்கள் ஒருபோதும் ஸ்ரீமத்திற்குக் கீழ்ப்படியாதிருக்கவோ அல்லது தவறான செயல்களைச் செய்யவோ மாட்டார்கள்.பாடல்:
ஓம் நமசிவாய.ஓம் சாந்தி.
இது யாருடைய புகழ்? இது ஒரேயொரு பரமதந்தை, பரமாத்மாவின் புகழாகும். நற்பணி செய்பவர்கள் நிச்சயமாகப் புகழப்படுகின்ற அதேவேளை தீயதைச் செய்பவர்கள் இகழப்படுகின்றனர். உதாரணமாக, அக்பர் புகழப்பட்டார், அவுரங்சீப் இகழப்பட்டார். இராமர் புகழப்படுகின்றார். இராவணன் இகழப்படுகின்றான். இராம இராச்சியமும், இராவண இராச்சியமும் பாரதத்தில் பிரபல்யமானவை. இராம இராச்சியம் அதி மேன்மையான இராச்சியம் எனவும், இராவண இராச்சியம் அசுர இராச்சியம் எனவும் அழைக்கப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது சங்கமயுகத்தைப் பற்றி அறிவீர்கள். இதுவே அதி மங்களகரமான சங்கமயுகம் ஆகும். நீங்கள் நிச்சயமாக பாரதத்தை அனைத்திலும் அதி மேன்மையானதாக ஆக்குவீர்கள். வாழ்பவர்களும் அதிமேன்மையானவர்கள் ஆக்கப்பட வேண்டும், அத்துடன் அவர்களது வாழ்விடமும் அதி மேன்மையானதாக்கப்பட வேண்டும். பாரதம் சுவர்க்கம் எனப்படுகின்றது. அங்கு வாழ்பவர்கள் சுவர்க்க வாசிகளான தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே இரண்டும் மேன்மை அடைகின்றன. புதிய உலகம் மேன்மையானது என்பதையும், பழைய உலகம் சீரழிந்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள். உலகம் எவ்வாறோ அதில் வாழ்பவர்களும் அவ்வாறே இருப்பார்கள். பாரதம் புதியதாக இருந்தது எனவும், அதே பாரதமே பழையதாகிவிட்டது எனவும் நினைவு கூரப்படுகிறது. வேறு எந்தத் தேசத்தையும் புதியது என்று அழைக்க முடியாது. புதிய உலகில், புதிய அமெரிக்கா அல்லது புதிய சீனா இருக்கும் என்றில்லை. இல்லை, புதிய உலகமே, புது உலகம் என நினைவு கூரப்படுகின்றது. இதனாலேயே அது புதிய இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது அதனை அவர்கள் புதிய பாரதம் என்று அழைக்கின்றனர். ஆயினும் அது அர்த்தமற்றது. இவ்வேளையில் எவ்வாறு புதிய இந்தியா இருக்க முடியும்? புதிய இந்தியாவில், டெல்கியே தேவதைகளின் உலகமான பரிஸ்தான் ஆகும். அது இப்பொழுது தேவதைகளின் உலகமாக இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகுவதற்காகவே இங்கு வருகின்றீர்கள். குருதிசையே அதிமேலானதாகும். நீங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகும்போது, குருதிசை உங்கள் மீது நிலவுகிறது. நீங்கள் புதிய உலகை ஸ்தாபிக்கின்ற எல்லையற்ற தந்தையிடம் இருந்து எல்லையற்ற சந்தோஷத்தைக் கோருவதற்கு முயற்சி செய்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். சத்தியயுகத்தில் அதி மேன்மையானவர்கள் உள்ளனர். பின்னர் நீங்கள் கீழிறங்கி வரும்போது இடைத்தரமானவர்களும், அதன் பின்னர் சீரழிந்தவர்களும் உள்ளனர். தந்தை குழந்தைகளாகிய உங்களை அதி மேன்மையான, சத்திய யுகத்து சதோபிரதான் சுவர்க்கவாசிகள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது மிக மிக இலகுவானது. இதற்கு நீங்கள் மருந்தெடுக்கவோ அல்லது எதையாவது செய்யவோ வேண்டியதில்லை. நினைவில் நிலைத்திருங்கள். இதனாலேயே இது இலகுவான நினைவு எனப்படுகின்றது. நினைவின் மூலமே நீங்கள் பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்கள் ஆகவேண்டும். அனைவரும் முக்தி அடைவார்கள் என்பது நிச்சயம். தந்தை கூறுகின்றார்: நானே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். எனவே, மனிதர்களின் சரீரங்கள் நிச்சயமாக அழிக்கப்படும். நான் ஆத்மாக்களைத் தூய்மையாக்கி, அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன். வீடு திரும்புவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும். தந்தை உங்களை ஆயத்தங்களை மேற்கொள்வதற்குத் தூண்டுகிறார். ஏனெனில் ஆத்மாக்களின் இறக்கைகள் ஒடிந்துவிட்டன. அதாவது ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகியுள்ளனர், நீங்கள் யோக சக்தியால் தூய்மை ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். இதைச் செய்யாதவர்கள் தங்களின் முழுக் கணக்கையும் கொடுக்க நேரிடும். இதில் சிந்திப்பதற்கு எதுவுமேயில்லை. தந்தைக்கு உதவியாளர்கள் ஆகி, அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தந்தையிடம் இருந்து முழு ஆஸ்தியையும் கோரிக் கொள்ள வேண்டியதே குழந்தைகளின் கடமையாகும். தந்தையின் உதவியும், அத்துடன் குழந்தைகளின் உதவியும் தேவைப்படுகின்றன. எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்பதில் தந்தையைப் பார்த்து, அவரையே பின்பற்றுங்கள். அதி மேன்மையானவர்கள் ஆகுவதற்கு எனது மந்திரத்தைத் தொடர்ந்தும் அனைவருக்கும் கொடுங்கள். தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் வந்து கூறுகின்றார்: என்னை நினைவு செய்யாமல் நீங்கள் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகமுடியாது. நான் உங்களை கங்கையில் நீராட வைக்கின்றேனா? மன்மனாபவ எனும் மகா மந்திரத்தை நினைவு செய்யுங்கள், அவ்வளவுதான். இதன் அர்த்தம்: என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மையாகி, அதி மேன்மையான சுவர்க்க அதிபதிகள் ஆகுவீர்கள். கணவன் மனைவி இருவரும் தூய இல்லறத்தின் அதிபதிகள் ஆகுவார்கள். தந்தை இவை அனைத்தையும் விபரமாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் நடைமுறையில் இவ்வாறு ஆகுகின்றீர்கள். கடவுள் வந்து, குழந்தைகளாகிய உங்களை மேன்மையானவர்கள் ஆக்கினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே நீங்கள் அழைக்கின்றீர்கள்: ஓ! தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மை ஆக்குங்கள்! மக்கள் புண்ணியத்திற்கான லீப் மாதத்தை அதிகளவில் புகழ்கிறார்கள். அதேபோன்று, அதி மங்களகரமான சங்கம யுகத்திற்கும் பெரும் புகழ் உள்ளது. கலியுகத்து இரவின் பின்னர் பகல் நிச்சயமாக வந்தாக வேண்டும். துன்பத்தின் பின் சந்தோஷம் வருகின்றது. அந்த வார்த்தைகளும் மிகத் தெளிவாக உள்ளன. கணவன் மனைவி இருவரும் அதி மேன்மையானவர்களாக, அனைவரிலும் அதியுயர்ந்தவர்களாக ஆகுகின்றனர். ஏனெனில் இது இல்லறப் பாதையாகும். சத்திய யுகம் மிகவும் பிரபல்யமானது. அது சந்தோஷ தாமம் என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்னர் துவாபரயுகம் வரும் போது, மக்கள் துறவறத்தை ஏற்று அதியுயர்ந்தவர்கள் ஆகுகின்றனர். இதனாலேயே தூய்மையற்ற மனிதர்கள் அவர்களை தலை வணங்குகின்றார்கள். தூய்மை அற்றவர்கள் தூய்மையானவர்களின் முன்னால் சென்று வணங்குகிறார்கள். அது பொதுவான ஒன்றாகும். தூய்மையாக்குபவரான தந்தையை அறியாததால், அவர்கள் கங்கையைத் தூய்மையாக்குவதாகக் கருதி, அதனை வணங்குகின்றனர். கங்கைகளினதும், கடலினதும் சந்திப்பு இடம்பெறுகின்றது. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். இருப்பினும், அவர் கூறுகின்றார்: பல்கோடியினரில் ஒரு கைப்பிடியளவினரே, அதிலும் வெகுசிலரே புரிந்து கொள்கின்றனர். அதிலும்கூட, இந்த ஞானத்தைக் கேட்டு வியப்படைந்து, இந்த ஞானத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து, பின்னர் தந்தையை விவாகரத்துச் செய்துவிட்டு ஓடிவிட்டவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அவச்சேவை செய்தவர்கள் ஆகிவிட்டனர். சேவையும், அவச்சேவையும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. தந்தையை இனங்கண்டு கொள்ளாமல் ஓடுகின்ற பலரும் உள்ளனர். நீங்கள் பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் சில குழந்தைகள் தடைகளை உருவாக்குகின்றார்கள். அவர்கள் அவச்சேவை செய்கின்றார்கள். எனவே அது மகா பாவமாகும். இராவணன் அனைவரையும் மகாபாவிகள் ஆக்குகின்றான். எவ்வாறாயினும் பாபாவின் குழந்தைகளாகிப் பின்னர் அவச்சேவை செய்பவர்களுக்கு நீதிமன்றம் கூட்டப்படும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் அத்தகைய கடுந்தண்டனையைப் பெறுவதில்லை. எவ்வாறாயினும் தந்தைக்குச் சொந்தமாகிப் பின்னர் அவச்சேவை செய்பவர்களுக்குத் தந்தையின் வலது கரமாக தர்மராஜ் இருக்கிறார். இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, சேவையில் எனது உதவியாளர்கள் ஆகிய பின்னர் தவறான செயல்களைச் செய்யாதீர்கள். நீங்கள் அவச்சேவை செய்யும்போது அப்பாவிகள் தடைகளை எதிர்நோக்குகிறார்கள். பாபா தாய்மார்கள் மீது கருணை கொண்டிருக்கின்றார். கடவுள் திரௌபதியின் பாதங்களைக்கூட பிடித்துவிட்டார். அவர்கள் என்னைத் துகில் உரிகின்றார்கள் எனத் திரௌபதி கதறி அழைத்தாள். பாபா கலசத்தைத் தாய்மார்களின் தலையில் வைக்கின்றார். முதலில் தாய்மார்கள், பின்பே ஆண்கள். எவ்வாறாயினும் தற்காலத்தில் ஆண்கள் தாங்களே மனைவியின் குருவும் அவளது கடவுளும் என்றும், அதனால் அவனது மனைவி அவனுக்கு வேலைக்காரி என்றும் பெருமளவு அகங்காரத்தைக் கொண்டிருக்கின்றனர். இங்கு, தந்தை அகங்காரம் அற்றவராகி தாய்மார்களின் பாதங்களையும் பிடித்து விடுகின்றார். நீங்கள் களைப்படைந்து விட்டீர்கள். எனவே உங்கள் களைப்பைப் போக்குவதற்காக நான் வந்திருக்கின்றேன். தாய்மார்களாகிய உங்களை அனைவரும் ஒதுக்கி உள்ளார்கள். சந்நியாசிகள் தங்கள் மனைவிமாரைத் துறந்து, அவர்களை விட்டுச்செல்கின்றார்கள். தங்களுடைய 5 முதல் 7 குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ள இயலாதவர்கள் விரக்தி அடைந்து ஓடிவிடுகின்றார்கள். அவர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்கிய பின்னர் அந்தக் குழந்தைகளை அநாதரவாக அலைந்து திரியவிட்டுச் சென்று விடுகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் எவரையும் அநாதரவாக அலைந்து திரியச் செய்வதில்லை. நான் அனைவரினதும் துன்பத்தை நீக்கி அவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன். மாயை வந்து உங்களைச் சந்தோஷம் அற்றவர்கள் ஆக்குகின்றாள். இதுவும் ஒரு நாடகமே ஆகும். அறியாமைப் பாதையில், கடவுளே சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொடுப்பதாக மக்கள் நினைக்கின்றனர். எவ்வாறாயினும் தந்தையாகிய கடவுள் அத்தொழிலைச் செய்வதில்லை. இந்நாடகம் கர்மத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் செய்யும் செயல்களுக்கேற்ப, பலனைப் பெறுகிறார்கள். இது மேன்மையான செயல்களைச் செய்வதற்கான நேரமாகும். இப்போது உங்கள் செயல்களையிட்டு வருந்துவது என்ற கேள்விக்கு இடமே இல்லை. யாராவதொருவர் சுகவீனம் அடைந்தால் அல்லது கடனாளி ஆகினால் தனது செயல்களுக்காக வருந்துவார். குழந்தைகளாகிய நீங்கள் மகா பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். ஏனெனில் உங்கள் செயல்களிற்காக நீங்கள் 21 பிறவிகளுக்கு வருந்தத் தேவையில்லை. இது அத்தகைய பெரும் பலனாகும். எனவே நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். தந்தை வேறு எதிலும் தலையிடுவதில்லை: உண்ணுங்கள், பருகுங்கள், நீங்கள் செய்ய வேண்டியதை எல்லாம் செய்யுங்கள். ஆனால் உங்கள் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் தூய்மை அற்றவர்கள் எனக் கூறுகின்றீர்கள். எனவே, தூய்மை ஆகுவதற்குத் தந்தை உங்களுக்குக் காட்டுகின்ற வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும். நினைவு செய்வதற்கு மாத்திரமே முயற்சி தேவை. மாயையின் புயல்களையிட்டுப் பயப்படாதீர்கள். இதற்கு மறைமுகமான முயற்சி தேவை. இந்த ஞானமும் மறைமுகமானது. முரளியை நடாத்துவது கண்ணுக்குப் புலப்படும் விடயமாகும். ஆனால் அதைச் செய்வதன் மூலம் நீங்கள் தூய்மை ஆகமாட்டீர்கள். நினைவின் மூலமே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். எனவே எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதுடன், அவரின் உதவியாளராகவும் ஆகுங்கள். அத்துடன் ஓர் ஆன்மீக வைத்தியசாலையையும், பல்கலைக்கழகத்தையும் திறப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நல்ல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றுங்கள். உங்கள் கரங்களில் நீங்கள் புத்தகங்களை வைத்திருக்க வேண்டியதில்லை. உங்களிடம் இந்த முழு ஞானமும் உள்ளது. எவ்வாறாயினும், அனைவருக்கும் விளங்கப்படுத்துவதற்கு, நீங்கள் விருட்சத்தினதும் திரிமூர்த்தியினதும் உலகச் சக்கரத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்த வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் பிரம்மா மூலம் பிராமணர்களை உருவாக்குகின்றேன். பிராமணர்களின் இலக்கும், குறிக்கோளுமான விஷ்ணு அங்கே நிற்கின்றார். உங்களை அவ்வாறு ஆக்குபவர் அசரீரியான அதே ஆசிரியரே ஆவார். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனையும் விஷ்ணுவின் மூலம் பராமரிப்பும் நிகழ்வதாக நினைவு கூரப்படுகின்றது. சென்ற கல்பத்திலும் அதே படங்கள் உருவாக்கப்பட்டன. விஞ்ஞானம் போன்றவற்றின் மூலம் அவர்கள் எத்தனை ஏவுகணைகளை உருவாக்குகின்றார்கள் எனப் பாருங்கள். பல பிறவிகளின் சுமை உங்கள் தலைமேல் இருப்பதனால் அதி மேன்மையானவர்கள் ஆகுவதற்கு முயற்சி அவசியம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் கண்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு விநாடியில் நிச்சயதார்த்தம் செய்யப்படுகின்றீர்கள். ஆயினும் அதன்பின் ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்குத் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தந்தை கூறுகின்றார்: மன்மனாபவ! நீங்கள் கர்ம யோகிகள். நீங்கள் நினைவு அட்டவணை ஒன்றை வைத்திருக்க வேண்டும். உங்கள் யுத்தம் மாயையுடன் ஆகும். இது மிகவும் சக்திவாய்ந்த யுத்தமாகும். நீங்கள் நினைவில் இருப்பதற்கு முயற்சிக்கின்றீர்கள். ஆனால் மாயை உங்களை அப்பால் ஊதிவிடுகின்றாள். இந்த ஞானத்தில் எவ்விதத் தடையுமில்லை. ஆத்மாக்களில் 84 பிறவிகளின் சம்ஸ்காரங்கள் பதிவாகியுள்ளன. இந்நாடகம் அநாதியாக நிச்சயிக்கப்பட்டதாகும். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. அது ஒருபோதும் நிற்பதில்லை. உலகம் ஏன் உருவாக்கப்பட்டது என்ற கேள்விக்கே இடமில்லை. ஆத்மாக்களின் எண்ணிக்கை எவ்வாறு மாற முடியும்? எங்கிருந்தோ புதிய ஆத்மாக்கள் வருகின்றார்கள் என்றில்லை. இருந்த ஆத்மாக்களே இருப்பார்கள். அதைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க முடியாது. குறித்த அதேயளவு எண்ணிக்கையான நடிகர்களே உள்ளனர். நீங்கள் எல்லையற்ற நடிகர்கள். நீங்கள் எதனை பார்க்கிறீர்களோ, அதே அளவு நடிகர்களே உள்ளனர். அந்தளவு நடிகர்களே நாடகத்தில் இருப்பார்கள். எவரும் அநாதியான முக்தியை அடைய முடியாது. மனிதர்கள் வருவதும் போவதுமான சக்கரத்தில் இருந்து விடுபட விரும்புகின்றார்கள். ஆனால் அவர்களால் அவ்வாறு செய்ய முடியாது. தங்கள் பாகத்தை நடிக்க வருபவர்கள் மீண்டும் வந்தாக வேண்டும். தந்தை கூறுகின்றார்: நானும்கூட வந்து இந்தத் தூய்மையற்ற உலகில் இருந்து திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றேன். நானே வரவேண்டி இருக்கும்போது, குழந்தைகளாகிய நீங்கள் திரும்பி வருவதிலிருந்து நிறுத்தப்படுவது எவ்வாறு சாத்தியமாகும்? நீங்கள் ஒவ்வொருவரும் 84 தடவைகள் சரீரத்திற்குள் வருகின்றீர்கள். ஆனால் நானோ ஒரேயொரு தடவையே வருகின்றேன். நான் வருவதும் போவதும் மிகவும் அற்புதமானது! இதனாலேயே பாடப்படுகின்றது: “உங்கள் வழிமுறைகளை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். சற்கதிக்காக நீங்கள் எங்களுக்கு வழங்கும் வழிகாட்டல்களை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். வேறு எவருமே அவற்றை அறிய மாட்டார்கள்.” அம்மக்கள் இதனை நினைத்துப் பார்க்கின்றார்கள். ஆனால் நீங்களோ இதை நடைமுறையில் பெறுகின்றீர்கள். நினைவே பிரதான விடயம் ஆகும். அத்துடன் நீங்கள் குருடர்களுக்கு ஊன்றுகோலாகவும் இருக்க வேண்டும். இது அதி மங்களகரமான சங்கமயுகம் ஆகும். இந்த யுகம் ஒவ்வொரு 5000 வருடங்களுக்கும் ஒருமுறை வருகிறது. புண்ணிய மாதமான லீப் மாதம் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் பின்னர் வருகிறது. அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். அவர்கள் பல தோத்திரப் புத்தகங்களை வைத்திருக்கின்றார்கள். இங்கு அவ்வாறில்லை. வழிபடாதவர்கள் அதர்மமானவர்கள் எனப்படுகின்றனர். எனவே நீங்கள் பெயரளவில் அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிய குழந்தைகளே, ஒருபொழுதும் அவச்சேவை செய்ய முயற்சிக்காதீர்கள். சிலர் துரோகிகள் ஆகுகின்றனர். எனவே அவர்கள் அஜாமில் என்று அழைக்கப்படுகின்றனர். அஜாமில், சூர்தாஸ் போன்றவர்களின் ஆன்மீகக் கதைகள் பல உள்ளன. அவை அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இங்கு வந்து எனக்குச் சொந்தமாகிய பின் என்னை விவாகரத்துச் செய்யும் ஆத்மாக்கள் அவர்களை விடவும் கூடிய பாவிகள் ஆவார்கள். அவர்கள் என்னை இகழ்கிறார்கள். அவர்களுக்காகவே நீதிமன்றம் கூடுகின்றது. அவர்கள் ஒரு சத்தியத்தைச் செய்துவிட்டு, ஏதாவது அவச்சேவை செய்வார்களாயின், கடுந்தண்டனை கிடைக்கும். ஒருபுறம் அந்தஸ்து மிகவும் உயர்வாக இருக்கும், எனினும் அதேசமயம் ஒரு தவறுக்கு மிகவும் கடுமையான தண்டனை கிடைக்கும். எனவே ஒருபோதும் எவ்வகையிலும் கீழ்ப்படிவு அற்றவர்களாக இருக்காதீர்கள். நினைவு கூரப்படுகின்றது: சற்குருவை இகழ்பவர்களால் தங்கள் இலக்கை அடைய முடியாது. அதாவது, அவர்களால் சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்ற அவர்களது இலக்கையும் குறிக்கோளையும் அடைய முடியாது. குருமாரிடம் கேளுங்கள்: குருவை இகழ்பவர்களால் தங்கள் இலக்கை அடைய முடியாது என்று நீங்கள் மக்களுக்குக் கூறுகின்றீர்கள். அது எந்த இலக்கு? அவர்களால் உங்களுக்கு இலக்கைக் காட்ட முடியாது. அவர்கள் தந்தையின் பட்டத்தைத் தாங்களே எடுத்துக் கொள்கின்றார்கள். ஆசிரியர் கூறுகின்றார்: நீங்கள் முழுமையாகக் கற்காது விட்டால் உயர்ந்ததோர் அந்தஸ்தை அடைய மாட்டீர்கள். நீங்கள் தூய்மையாகி தேவர்கள் ஆகவேண்டும். இங்குள்ள ஒருவரேனும் தூய்மையாக இல்லை. இப்பொழுது அனைவரும் தூய்மையாக வேண்டும். நீங்கள் 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தைப் பெறுகின்றீர்கள். இந்த இறுதிப் பிறவியில் நீங்கள் தூய்மையாக வேண்டும். பேறு மிகவும் பெரியது. பேறில்லாவிட்டால் நீங்கள் ஏன் முயற்சி செய்கின்றீர்கள்? எவ்வாறாயினும் மாயை உங்களின் மேன்மையான பேறுகளுக்குத் தடைகளை உருவாக்கி, உங்களை விழச் செய்கின்றாள். ஓ மாயை! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. அவச்சேவையை ஏற்படுத்தும் எந்தவொரு பணியையும் செய்யாதீர்கள். தந்தையை அவமதிக்கும் எந்தப் பாவச் செயலையும் செய்யாதீர்கள். கீழ்ப்படிவற்றவராக இருப்பதில் இருந்து உங்களைப் பாதுகாத்து, அனைவரிலும் அதி மேன்மையானவர்கள் ஆகுங்கள்.2. மாயையின் புயல்களையிட்டுப் பயப்படாதீர்கள். தூய்மை ஆகுவதற்கு, நினைவில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
களைப்படைந்த, விரக்தியான ஆத்மாக்களை வெற்றியீட்டச் செய்கின்ற கடவுளின் உதவியாளர்கள் ஆகுவீர்களாக.ஆத்மாக்கள் நீண்டகாலமாக நிர்வாணா அல்லது முக்திதாமத்திற்குச் செல்கின்ற ஆசை அல்லது எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார்கள். இதற்காகவே அவர்கள் பல வகையான ஆன்மீக முயற்சிகளை பல பிறவிகளாகச் செய்து களைப்படைந்து உள்ளார்கள். அனைவருக்கும் இப்பொழுது எந்தவொரு ஆன்மீக முயற்சியும் செய்யாமல், வெற்றியே தேவையாக உள்ளது. வெற்றி என்றால் சற்கதி அடைவதாகும். எனவே தாகத்துடன், களைப்படைந்து, விரக்தி அடைந்துள்ள ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு, மேன்மையான ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் மௌனசக்தியாலும் உங்களிடம் உள்ள சகல சக்திகளாலும் ஒரு விநாடியில் அவர்கள் வெற்றியீட்ட அவர்களுக்கு உதவ வேண்டும். அப்பொழுதே நீங்கள் கடவுளின் உதவியாளர்கள் என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
பலவீனமான சம்ஸ்காரங்களே திருடனான மாயை உட்பிரவேசிப்பதற்கான வாசலாகும். எனவே இப்பொழுது இந்த வாசலை மூடுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
நீங்கள் பாக்கிய ரேகைகளை வரைகின்ற பிரம்மாவின் குழந்தைகளான பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் ஆவீர்கள். ஆகையால், உங்கள் பொக்கிஷக் களஞ்சியம் நிறைந்து வழியட்டும்;. எவரும் வெறுங்கையுடன் திரும்பிச் செல்ல அனுமதிக்காதீர்கள். அருள்பவரின் குழந்தைகளாக இருந்து சதா தொடர்ந்தும் கொடுத்துக் கொண்டிருப்பதுடன், தொடர்ந்தும் அவர்கள் அனைவரினதும் உணர்வுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுங்கள். மகாதானிகளாகவும், ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகுங்கள். இதுவே உங்கள் வடிவம் ஆகும்.