05.11.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் மௌனமாக இருந்து, ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இதனைச் செய்வதற்கு, மணிகள் போன்றவற்றை அடிக்க வேண்டிய அவசியமில்லை.

கேள்வி:
உங்களுடைய பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு, நீங்கள் எவ்விடயத்தில் தந்தைக்குச் சமமானவராக வேண்டும்?

பதில்:
தந்தை எவ்வாறு அன்புக்கடலாக இருக்கின்றாரோ, அதேபோன்று, நீங்களும் மிக, மிக அன்பானவர்கள் ஆகவேண்டும். கோபப்படும் பொழுது, உங்கள் பணி பாழாகுகின்றது; அது பூர்த்தி ஆகுவதில்லை. எனவே கடுமையான பார்வை பார்ப்பதோ, சத்தமாகப் பேசுவதோ அல்லது சூடாகுவதோ அவசியமற்றவை. அமைதியாக இருப்பதே மிகவும் நல்லது. அன்பினால் பெருமளவு பணி நிறைவேற்றப்பட முடியும்.

பாடல்:
நீங்களே தாயும், தந்தையும்.

ஓம் சாந்தி.
இந்தப் புகழ் ஒரேயொருவருடையது. எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்திலே, ஒரேயொருவரின் புகழைப் பாடுவதனால் மாத்திரம், பக்தியின் பகட்டு இருப்பதில்லை. எனவே, பக்திமார்க்கத்தில் அவர்கள் பலரின் புகழைப் பாடுகின்றனர். அங்கே பெருமளவு சத்தம் இருக்கின்றது. பக்தி மார்க்கத்தில் மணிகள், இசை, பாடல்கள், பக்திப் பாடல்கள், அழுது புலம்புதல் போன்றன இடம்பெறுகின்றன. அவர்கள் பல்வேறு ஓசைகள், ஓதுதல், மந்திர வித்தை, புகழ்தல் போன்றனவற்றைக் கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த ஞான மார்க்கத்தில் மௌனமே உள்ளது. உங்களுக்கு ஒரு சமிக்ஞை கொடுக்கப்பட்டதும், அமைதி நிலவுகின்றது. பக்தி மார்க்கத்தில் அதிகளவு ஆடம்பரம் உள்ளது. சிவனின் ஆலயத்திலேயே அதிகளவு மணிகள் அடிக்கப்படுகின்றன. நீங்கள் எங்கே பார்த்தாலும், பெரிய மணிகள் மாத்திரமே இருக்கின்றன. மணிகள் ஒருவரை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்காக அடிக்கப்படுவதில்லை. சிவபாபா மனிதர்களை அறியாமை எனும் கும்பகர்ண உறக்கத்தில் இருந்து விழித்தெழச் செய்ய வந்துள்ளார். எவ்வாறாயினும், அவர் மணிகளை அடிப்பதில்லை. அவர் மிக அமைதியாக இரு வார்த்தைகளில் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். புத்திசாலிகளால் சில வார்த்தைகளிலேயே புரிந்துகொள்ள முடியும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! நீங்கள் என்னை அழைத்தீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நான் இப்பொழுது வந்து, உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றேன். நீங்கள் இன்னமும் தூய்மை அற்றவர்களாக இவ்வுலகில் இருக்க விரும்புகின்றீர்களா? நீங்கள் தூய உலகில் இருக்க விரும்புகின்றீர்கள், இல்லையா? சுவர்க்கமே புதிய உலகம் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் “ஓ தூய்மையாக்குபவரே!” என்று கூறுகின்றார்கள், எனவே தூய்மையாக்குபவர் வந்து என்ன செய்வார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் நிச்சயமாக உங்களை நரகத்திலிருந்து சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார். மக்கள் தொடர்ந்தும் அவரை அழைத்து, எதையும் புரிந்து கொள்ளாமல் கைதட்டுகின்றார்கள். எவ்வாறாயினும், தந்தை வருகின்றபொழுது, அவர் என்ன செய்வார் என்பதை அவர்கள் அறியாதுள்ளனர். உண்மையில், இது மனிதர்களிலிருந்து, தேவர்களாக மாறுவதற்கான பல்கலைக்கழகமாகும். இதனாலேயே, பாடப்பட்டுள்ளது: மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் எடுப்பதில்லை. இங்கே, நீங்கள் எந்தச் சமயநூல்கள் போன்றவற்றையும் கற்க வேண்டிய அவசியம் இல்லை. பக்தி மார்க்கத்தில் அவர்கள் பல சமயநூல்களைக் கற்று, பல சொற்பொழிவுகளை ஆற்றுகின்றார்கள். ஒவ்வொரு மாதமும் அவர்கள் பெரிய கூடாரங்களை அமைத்து, அமர்ந்திருந்து அதிகளவு சத்தம் செய்கின்றார்கள். இங்கே, தந்தை அமர்ந்திருந்து, அமைதியாக உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பாருங்கள், பாபா வந்து, உங்களைத் தூய்மையாக்கி, உங்களைத் தூய உலகின் அதிபதிகள் ஆக்குகின்றார். உங்களுடைய கல்வியும் மிகவும் இலகுவானது! முதலில் சத்தியயுகத்தில் நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எடுக்கையில், கலியுகத்தில் தமோபிரதான் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகவேண்டும். எனவே என்னை நினைவு செய்யுங்கள்! அதிலும், எவ்விதச் சத்தமும் செய்யாதீர்கள். ஒரு குமாரி திருமணம் செய்யும்பொழுது, அவள் சதா யாரை நினைவு செய்கின்றாள்? அவள் அவனையே (அவளது கணவர்) நினைவு செய்கின்றாள். நீங்கள் அனைவரும் மனைவிகள், சிவபாபாவே கணவர்களுக்கு எல்லாம் கணவர் ஆவார். நீங்கள் கடவுளுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள். ஒருமுறை நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவுடன், அந்த நினைவு உங்கள் புத்தியில் உறுதியாகுகின்றது. நீங்கள் இப்பொழுது நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்ற உத்தரவாதம் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் நினைவு செய்கின்றீர்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: ஒரேயொரு தந்தையின் குழந்தைகளான, நீங்கள் சகோதரர்கள் என்ற நம்பிக்கை உங்கள் புத்தியில் உள்ளது. சகோதரர்கள் அனைவரும் ஒரேயொரு தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெறுகின்றார்கள், இதனாலேயே அவர்கள் தந்தையை அழைக்கின்றனர். அவர்கள் மனித சரீரங்களினுள் பிரவேசிக்கின்ற பொழுது, சகோதர, சகோதரிகளாக ஆகினாலும், ஆத்மாக்களே அழைக்கின்றார்கள். சகோதரர்கள் அனைவரும் அழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குகின்ற பாபாவே, வாருங்கள்! பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். தூய்மையானவர்கள், சதோபிரதானானவர்கள் என்றும், தூய்மையற்றவர்கள் தமோபிரதானானவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். சங்கமயுகத்தில் மாத்திரமே, பாபா இவ்விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். இது கீதையைக் கற்பதற்கான இடம். இந்தக் கற்கும் இடத்திற்கு தந்தை வந்து, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அவர் உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து நாராயணனாக மாற்றுகின்றார். அங்கே உங்கள் முன்னால் ஓர் ஆசிரியர் காணக்கூடியதாக அமர்ந்திருந்து கற்பிக்கின்றார். இங்கே இவர் மறைமுகமானவர். நீங்கள் இந்த ஆசிரியரை, உங்கள் புத்தியின் யோகசக்தியால் புரிந்துகொள்ள வேண்டும். அசரீரியான ஒருவரே, தூய்மையாக்குகின்ற தந்தையாவார். அவர் உங்களுக்கு ஞாபகம் ஊட்டுகின்றார்: நான் முன்னைய கல்பத்திலும் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்தேன். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: மன்மனாபவ! தூய்மை ஆகுங்கள், நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் போல் ஆகுவீர்கள். இதற்கு, பெரிய மணிகளை அடிக்க வேண்டிய தேவையில்லை. தந்தையே வந்து, உங்களை விழித்தெழச் செய்கின்றார். “மன்மனாபவ” என்பதன் அர்த்தம் மௌனம். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மாவே என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள், அவ்வளவுதான்! நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அனைவரும் தங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, விடுதலை ஆக்குமாறு தந்தையைக் கேட்கின்றார்கள். சந்நியாசிகள் இயல்பாகவே பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கின்றார்கள். பிரம்ம தத்துவமே வீடாகும். அவர்கள் வீட்டை நினைவு செய்கின்றார்கள், ஆனால் இங்கே நீங்கள் தந்தையை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் வீட்டை நினைவு செய்தீர்களானால், அது சந்நியாசியைப் போல் இருப்பதாகும். பிரம்ம தத்துவம் கடவுள் அல்ல. தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் என்னை நினைவு செய்தால், நிர்வாணா தாமத்திற்குச் செல்வீர்கள். பின்னர் அங்கிருந்து நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் இங்கிருந்து என்னுடன் அழைத்துச் செல்கின்றேன். வெட்டுக்கிளிகளின் கூட்டம் மிகப்பெரியது என்பதை நீங்கள் அறிவீர்கள். அவற்றிடம் அதிகளவு ஒற்றுமை உள்ளது; முன்னால் சென்ற வெட்டுக்கிளி அமரும் பொழுது, அவை அனைத்தும் அமர்கின்றன. தேனீக்களும் அதைப் போன்றவையே. இராணித் தேனீ தேன்கூட்டை விட்டு வெளியேறும்பொழுது, ஏனைய அனைத்துத் தேனீக்களும் அவளைப் பின்தொடர்கின்றன. அவள் அவற்றினது மணவாளன் போன்றவள். அங்கே, மணவாட்டியே அனைவரையும் ஆட்சி செய்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் நுளம்புக்கூட்டம் போன்று பறந்து செல்வார்கள் எனச் சமயநூல்களிலும் எழுதப்பட்டுள்ளது. எண்ணற்ற ஆத்மாக்கள் உள்ளனர். அந்தத் தேனீக்கள் ஒவ்வொரு பருவ காலத்திலும் அவற்றின் இராணித் தேனீயின் பின்னால் ஓடுகின்றன. நீங்கள் ஒருமுறையே ஓட வேண்டும். இப்பொழுது, ஆத்மாக்கள் அனைவரும் அசரீரி உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் எந்த ஒலியும் எழுப்புவதில்லை. இதனாலேயே பாபா நீங்கள் கடுகு விதை போன்று நசுக்கப்பட்டுள்ளீர்கள் என்ற உதாரணத்தைக் கொடுக்கின்றார். பாபாவும் கடுகு விதை போன்று புள்ளி வடிவானவர். பொப்பி விதையும் மிகவும் சிறியது. கடவுள் ஒரு புள்ளியாவார், அவரைத் தெய்வீகப் பார்வை இல்லாமல் பார்க்க முடியாது, அவர் சின்னஞ்சிறிய நட்சத்திரம் போல் சிறியவர். அர்ச்சுனன் அநாதியான ஒளியின் காட்சிகளைக் கண்டதாகக் கீதையிலே கூறப்பட்டுள்ளது. எனவே இங்கேயும், மக்கள் அநாதியான ஒளியின் காட்சிகளைக் காண்கின்ற பொழுது மாத்திரமே, தாங்கள் காட்சிகளைக் கண்டிருப்பதைப் புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் புள்ளி வடிவின் காட்சிகளைக் கண்டிருந்தால், அது கடவுளல்ல என்று நினைத்திருப்பார்கள். அர்ச்சுனன் மிகப் பிரகாசமான ஒளியின் காட்சியைக் கண்டதாகக் கீதையிலே எழுதப்பட்டுள்ளது. அவர்களின் புத்திகளில் பக்தி மார்க்கத்து விடயங்களே பதிந்துள்ளன. பக்தி மார்க்கத்து விடயங்களுக்கும், இந்த ஞான மார்க்கத்து விடயங்களுக்கும் இடையில் இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு உள்ளது. நீங்கள் 63 பிறவிகளாக, உங்கள் சரீரத்தின் மூலமே அதிகளவு நடனமாடினீர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் 63 பிறவிகளாக, பக்தி மார்க்கத்தில் குழப்பங்களைப் பார்த்து வருகின்றீர்கள். இருந்த பொழுதிலும், அது சதோபிரதான் பக்தியாக இருந்தபொழுது, நீங்கள் சிவபாபாவை மாத்;திரமே பூஜித்தீர்கள். கங்கையில் நீராடுவது போன்றன பின்னரே ஆரம்பமாகியது. முதலில் பக்தி கலப்படமற்று உள்ளது, பின்னர் அது விரிவடைகின்றது. இங்கே, முற்றிலும் மௌனமே உள்ளது. நீங்கள் சிப்பியளவும் செலவு செய்யாமல், உலகின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். மம்மா சிப்பியளவும் இல்லாமல் இங்கே வந்து, உலகின் சக்கரவர்த்தினி ஆகினார். இவரும் சாதாரணமானவராக இருந்தார். சிலர் மிகவும் வறிய குடும்பங்களில் இருந்து வந்தபொழுதிலும், சிப்பியளவேனும் செலவு செய்யாது, என்னவாக ஆகுகின்றார்கள் எனப் பாருங்கள்! மம்மா பெருமளவு சேவை செய்தார். அவர் சென்று, ஏனையோருக்கு விளங்கப்படுத்துவார்: பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். இங்கே செலவு என்ற கேள்வியில்லை. சிலர் சிறிதளவு செலவு செய்தாலும், அதைத் தமக்காகவே செய்கிறார்கள். இது நீங்கள் வயலில் இரு கைப்பிடி தானியங்களை விதைத்து, அதிலிருந்து அதிகளவு தானியங்களைப் பெற்று, உங்கள் விளைச்சல் அதிகமாகுவதைப் போன்றது. இங்கேயும், நீங்கள் 21 பிறவிகளுக்கான அதிகளவு வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். மனிதர்களில் இருந்து, தேவர்களாக மாறுவது மிகவும் இலகுவானது; இது ஒரு விநாடிக்கான விடயம். எவ்வாறு நீங்கள் இங்கே சாதாரணமான முறையில் அமர்ந்திருக்கின்றீர்கள் எனப் பாருங்கள்! ஒருவரால் அமர்ந்திருக்க முடியாதுவிடின், அவரைச் சென்று படுத்திருந்து முரளியைக் கேட்குமாறு பாபா கூறுவார். இது கிரகிப்பதற்கான விடயம். உள்ளாரத் தொடர்ந்தும் பாபாவையும், சக்கரத்தையும் நினைவு செய்யுங்கள். அந்தச் சரீரங்களை நீங்கள் நினைவில் இருந்தவாறே, நீக்க வேண்டும். ஆனால், உங்கள் வாயினுள் கங்கை நீரை ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. குருமார், சாதுக்கள் போன்றவர்கள், நீங்கள் பக்தி செய்யாதுவிடின் அல்லது கோட்பாடுகளைப் பின்பற்றாது விடின், இன்ன இன்ன நடக்கும் என்று கூறுவதன் மூலம் மக்களில் பெருமளவு பயத்தை உருவாக்குகின்றார்கள். உதாரணமாக ஒருவர் காலை உடைத்துக் கொண்டாலோ அல்லது இழப்பை அனுபவம் செய்தாலோ, பக்தி செய்யாததன் பலனே இது என்று அவர்கள் அவருக்குக் கூறுவதனால், அவரும் பயம் அடைகின்றார். இங்கே, நீங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை. அனைவருக்கும் பாபாவை நினைவுபடுத்தி, சக்கரத்தின் இரகசியங்களையும் விளங்கப்படுத்துங்கள். கலியுகத்தின் பின்னர் இப்பொழுது சத்தியயுகம் வரவேண்டும், விநாசமும் நிச்சயமாக இடம்பெற வேண்டும், இதனாலேயே மகாபாரத யுத்தம் உள்ளது. கடவுள் வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுகின்றார். இது இராஜயோகம், பிரஜைகள் ஆகுவதற்கான யோகமல்ல. உங்களுடைய வார்த்தைகள் எப்பொழுதும் நன்மை செய்பவையாக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்களாக வேண்டும். பாபா இனிமையானவர், இல்லையா? உங்களுடைய கோபம் எனும் தானத்தை அவர் ஏற்றுக் கொள்கின்றார். தந்தை கூறுகின்றார்: நானே அன்புக்கடல், நீங்களும் அவ்வாறு ஆகுகின்றீர்கள். அவர் பேரன்புடன் விளங்கப்படுத்துகின்றார். இல்லையெனில், மாயை சில குழந்தைகளின் புத்தியைச் சீரழித்துள்ளதால், அவர்கள் அதிகளவு குழப்பத்தை ஏற்படுத்துகின்றார்கள். இதனாலேயே பாபாவும் எவருக்கும் எதையும் கூறாமல், அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். கடுமையான பார்வை பார்ப்பதோ, சத்தமாகப் பேசுவதோ அல்லது சூடாக வேண்டிய தேவையோ இல்லை. அவற்றைச் செய்வதினால் அனைத்துமே பாழாகுகின்றது. அமைதியாக இருப்பதே மிகச்சிறந்தது. நீங்கள் கொடுத்து விட்ட விகாரங்கள் எனும் தானத்தைத் திரும்பவும் எடுத்தீர்களே என்றால், உங்கள் அந்தஸ்தை இழப்பீர்கள். பாபாவுக்குச் சொந்தமாகுவது என்றால், நீங்கள் ஐந்து விகாரங்களையும் தானம் செய்து விட்டீர்கள் என அர்த்தம். கூறப்பட்டுள்ளது: தானம் செய்யுங்கள், கிரகணத்தின் சகுனங்கள் அகற்றப்படும். தந்தையே வழிகாட்டி ஆவார். பொதுவாக, பிராமணர்களே வழிகாட்டிகள். சிவபாபா ஆன்மீக வழிகாட்டி ஆவார், நீங்களும் வழிகாட்டிகளே. பாபா, பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிப்பதால், இவரும் ஒரு பிராமணர் ஆவார். பாபா இவரினுள் அமர்ந்திருக்கின்றார், நீங்களே தாயும், தந்தையும் என அவரது புகழ் பாடப்பட்டுள்ளது. இந்தப் புகழ் வேறு எவருக்கும் சொந்தமானதல்ல. அவரது கடமைகளும் அவ்வாறானவை. இது ஒரு பாடசாலை, தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இதை நினைவு செய்ய வேண்டும். உலக இராச்சியத்தைக் கோருவதே உங்களின் இலக்கும், குறிக்கோளும் ஆகும். உங்களுக்குக் கற்பிப்பவரை, நீங்கள் மிக நன்றாக நினைவுசெய்ய வேண்டும். ஒரு பாடசாலையிலுள்ள மாணவர்கள் சிறந்த புள்ளிகளுடன் சித்தி அடையும் பொழுது, ஒவ்வொரு வருடமும் அவர்களுடைய ஆசிரியருக்கு ஒரு பரிசை அனுப்புகின்றார்கள். அந்தப் பண்டிகைகள் அனைத்தும் இந்நேரத்தையே குறிக்கின்றன. ஆனால், அவற்றின் முக்கியத்துவம் எவருக்குமே தெரியாது. பாபா ஞானம் நிறைந்தவர். அவர் உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கு வருகின்றார். எவ்வாறு அவர் கற்களிலும், கூழாங்கற்களிலும் வரமுடியும்? அனைத்திலும் ஓர் ஆத்மா உள்ளார் என நிரூபிப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட வைத்தியர் முயற்சி செய்தார். அனைத்திலும் பரமாத்மா உள்ளார் என அவர் கூறவில்லை. அவர் (கடவுள்) சர்வவியாபி என்று பின்னர் அம்மக்கள் கூறுகின்றனர். ஒவ்வொருவரிலும் ஓர் ஆத்மா உள்ளார் என்று அம்மக்கள் கூறினார்கள். எனவே, பரமாத்மா அனைவரிலும் உள்ளார் என்று சந்நியாசிகள் கூறினார்கள். இதில் பகலுக்கும், இரவுக்குமான வித்தியாசம் உள்ளது! அவரே எல்லையற்ற தந்தையாவார். அவர் உங்களின் புத்தியின் யோகத்தை ஏனைய அனைவரிலும் இருந்து துண்டித்து, அதனைத் தன்னுடன் இணைக்கின்றார். ஒவ்வோர் ஆத்மாவும் கடலிலிருந்து வெளிவந்த குமிழ் போன்றது என்றும், அது கடலுடன் கலந்து விடும் எனவும் அம்மக்கள் கூறுகின்றனர். பிரம்ம தத்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள் சிறிய ஒளி, பேரொளியுடன் கலக்கும் எனவும், பின்னர் புதிய படைப்பு இடம்பெறும் எனவும் நம்புகின்றனர். பக்தியும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என பாபா விளங்கப்படுத்துகின்றார். நாடகத்தில் என்ன நிச்சயிக்கப்பட்டுள்ளதோ, அதற்கேற்பவே நானும் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் சுற்றி வருகின்ற, 84 பிறவிகளின் சக்கரமும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நடைபெறுபவை அனைத்தும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சிலர் உங்களின் புகழ் பாடுகின்றனர், சிலர் தடைகளை உருவாக்குகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள், சிவபாபாவிடம் இருந்து, உங்களின் ஆஸ்தியைக் கோர வேண்டும். அவர் ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு மாத்திரமே வருகின்றார். அவர் சரீரங்களின் பெயர்களைக் கூட குறிப்பிடவில்லை. நான் உங்கள் அனைவரையும் உங்கள் சரீரங்களுடன் அழைத்துச் செல்ல இங்கே வரவில்லை. நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்: ஓ விடுதலையளிப்பவரே, வாருங்கள்! எங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, நாங்கள் ஓய்வு, சௌகரியம், அமைதி, சந்தோஷத்தைப் பெறக்கூடிய இடத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். எனவே நான் அவர்கள் அனைவரையும் அவர்களது சரீரங்களை இங்கே நீக்கும்படி செய்து, ஆத்மாக்களைத் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். எனவே நானே மகா காலன் ஆவேன். நான் அனைவரையும் ஒன்றாகத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். தந்தை இங்கிருந்து, அத்தகைய அற்புதமான விடயங்களை விளங்கப்படுத்துகின்றார்! மக்கள் எதையாவது புரிந்து கொள்ளாது விட்டால், அவர்களிடம் கூறுங்கள், பாபா இன்னமும் அவ்விடயங்களை எங்களுக்கு விளங்கப்படுத்தவில்லை. ஆனால் அவர் அதனை எங்களுக்கு விளங்கப்படுத்தும் பொழுது, நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். இவ்விதமாக உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ள வேண்டும். பாபாவே ஞானக்கடல் என்பதைக் குழந்தைகளான நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அவர் தொடர்ந்தும் உங்களுக்குப் புதிய விடயங்களைக் கூறுகின்றார். படைப்பவராகிய தந்தையே, உங்களுக்கு உலகின் வரலாற்றையும், புவியியலையும் கூறுகின்றார். அவர் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தை உங்களுக்குக் கூறுகின்றார். நீங்கள் கலங்கரை விளக்கங்களும், சுயதரிசனச் சக்கரதாரிகளும் ஆவீர்கள். எவ்வாறாயினும் மாயை உங்களை மறக்கச் செய்வதால், நீங்கள் மூச்சுத் திணறுகின்றீர்கள். ஏதோவொரு விடயத்தில் சில விதமான தாக்கம் இருக்கின்றது. கர்மக் கணக்குகளும் இருக்கின்றன. நீங்கள் கர்மாதீதம் அடையும்வரை, ஏதோவொன்று தொடர்ந்தும் நடைபெறும். உங்கள் கர்மக் கணக்குகள் தீர்க்கப்பட்டவுடன், நீங்கள் உங்களுடைய சரீரங்களை நீக்குவீர்கள், யுத்தமும் ஆரம்பமாகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. விகாரங்களைத் தானம் செய்த பின்னர், அவற்றைத் திரும்பவும் பெறாதீர்கள். உங்கள் வார்த்தைகள் எப்பொழுதும் நன்மை செய்வதாக இருப்பதுடன், நீங்கள் மிக இனிமையானவர்களாகவும் ஆகவேண்டும். தந்தைக்குச் சமமான, அன்புக்கடல்கள் ஆகுங்கள்.

2. மௌனமாக இருந்து, சிப்பியளவேனும் செலவு செய்யாது, உலக இராச்சியத்தைக் கோருங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, சிறிதளவை மட்டுமே செலவு செய்து, 21 பிறவிகளுக்கான வருமானத்தைச் சம்பாதியுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் திரிகாலதரிசி ஸ்திதியால் அதீந்திரிய சுகத்திற்கான உரிமையையும் மாயையின் எந்தவொரு தாக்குதலில் இருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான உரிமையையும் கொண்டிருப்பீர்களாக.

சங்கமயுகத்தின் விசேடமான ஆசீர்வாதமும் பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பும் அதீந்திரிய சுகமே ஆகும். இதை வேறெந்த யுகத்திலும் அனுபவம் செய்ய முடியாது. எவ்வாறாயினும், இந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு, நீங்கள் உங்களின் திரிகாலதரிசி ஸ்திதியால் மாயையின் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் மீண்டும் மாயையால் தாக்கப்பட்டால், நீங்கள் விரும்பினாலும் உங்களால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியாமல் இருக்கும். அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்பவர்களால் புலன்களின் எந்தவொரு களிப்பினாலும் கவரப்பட முடியாது. ஞானம் நிறைந்தவர்களாக இருப்பதனால் அது முற்றிலும் ருசியற்றது என்றே அவர்கள் உணர்வார்கள்.

சுலோகம்:
உங்களின் கர்மத்தின் மூலம் செய்யும் சேவைக்கும் மனதின் மூலம் செய்யும் சேவைக்கும் இடையில் ஒரு சமநிலை காணப்படும்போது, உங்களால் சூழலைச் சக்திவாய்ந்தது ஆக்க முடியும்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் எத்தகைய சூழ்நிலைகளில் இருந்தாலும் அந்தச் சூழ்நிலைகளிலும் அந்தச் சரீரத்திலும் இருந்தவண்ணம் நீங்கள் சம்பூரணம் ஆகவேண்டும். இந்த இலட்சியத்தை வைத்திருங்கள். உங்களின் முழுமையான சங்கமயுக ரூபங்கள், சக்திகள் மற்றும் பாண்டவர்கள் என்று நினைவு செய்யப்படுகின்றன. நீங்கள் அந்த ரூபங்களில் உங்களை ஸ்திரமாக்கும்போது, உங்களின் பக்தர்கள் யார், உங்களின் பிரஜைகள் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களின் பிரஜைகள் ஆகப் போகின்றவர்கள் உங்களுக்கு நெருக்கமாக வருவார்கள். உங்களின் பக்தர்கள் ஆகப் போகின்றவர்கள், உங்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்குவார்கள்.