06.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இந்த இலக்கு மிகவும் உயர்வானது. எனவே, உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். ஆனால், சதோபிரதான் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
கேள்வி:
சில குழந்தைகள் ஏறுகின்ற ஸ்திதியில் இல்லாமைக்கான பிரதான காரணம் என்ன?பதில்:
முன்னேறிக் கொண்டு செல்கையில், சிறிதளவு ஆணவம் ஏற்பட்டால் அல்லது உங்களை நீங்கள் மிக திறமைசாலியாகக் கருதினால் அல்லது முரளியைத் தவறவிட்டால் அல்லது தந்தை பிரம்மாவுக்கு கீழ்ப்படியாது இருந்தால் ஏறுகின்ற ஸ்திதியில் இருக்க முடியாது. சரீரதாரியின் இதயத்தில் இருந்து நீங்கள் கீழிறங்கும் பொழுது அசரீரியானவரின் இதயத்தில் இருந்தும் கீழே இறங்குகின்றீர்கள் என்பதே அதன் அர்த்தம்.பாடல்:
இந்த உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் இதயத்தில் பூட்டுக்களைப் போட்டுக் கொள்கிறார்கள்………ஓம் சாந்தி.
குழந்தைகளான நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். உங்கள் புத்தியை சந்தேகம் நிறைந்ததாக ஆக்குவதற்காக, யார் எதைச் செய்தாலும், நீங்கள் என்றுமே சந்தேகப்பட மாட்டீர்கள், எவ்வளவு பிழையான விடயங்களை மக்கள் உங்களிடம் கூறினாலும் உங்கள் புத்தியில் நீங்கள் சந்தேகம் கொண்டிருக்காது தொடர்ந்து ஸ்ரீமத்தைப் பின்பற்றுவீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். தந்தை தினமும் உங்களுக்கு வித்தியாசமான கருத்துக்களை விளங்கப்படுத்துகின்றார். சத்தியயுகத்தில் 900,000 மனிதர்களே இருப்பதுடன் ஏனைய அனைவரும் நிச்சயமாக அழிக்கப்பட்டிருப்பார்கள். எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் உண்மையாகவே அழிக்கப்பட்டு இந்த யுத்தத்தின் மூலமாக ஒரே ஒரு தேவதர்மம் ஸ்தாபிக்கப்பட இருப்பதை விவேகமானவர்கள் சமிக்ஞைகளின் மூலம் புரிந்து கொள்வார்கள். தகுதியானவர்கள் ஆகுபவர்கள் மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுவார்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் ஒருவரை மனிதனிலிருந்து தேவனாக்க முடியாது. எனவே குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதை நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும் மாயை மீண்டும் மீண்டும் உங்களை மறக்கச் செய்கின்றாள். மிகுந்த அன்புடன் பாபாவை நினைவு செய்து இங்கேயே சதோபிரதான் ஆகுங்கள். யுத்தம் எந்த நேரத்திலும் ஏற்பட முடியும், அதற்கு எந்த விதிகளும் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள்: அநேகமாக முடிவில்லாத மிகப்பெரிய யுத்தம் ஆரம்பிக்கலாம். அனைவரும் ஒருவருடன் ஒருவர் சண்டையிட ஆரம்பிப்பார்கள், ஆகவே ஏன் விநாசத்திற்கு முன்னால் நினைவில் நிலைத்திருந்து தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவதற்கு நாங்கள் முயற்சி செய்யக் கூடாது? மாயை நினைவு யாத்திரையில் மாத்திரமே தடைகளை உருவாக்குகின்றாள். இதனால் தான் ஒவ்வொரு நாளும் உங்களின் அட்டவணையை எழுதுமாறு பாபா உங்களுக்குக் கூறுகின்றார். இரண்டு அல்லது நான்கு பேரே எழுதுகின்றார்கள். ஏனைய அனைவரும் நாள் முழுவதும் தமது சொந்த வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் பலவிதமான தடைகளுக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். நிச்சயமாக சதோபிரதானாக வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் எங்கிருந்தாலும் முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் மக்கள் 100வீதம் தமோபிரதானாக இருப்பதால் அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்காக படங்கள் போன்றவையும் உருவாக்கப்படுகின்றன. முதலில் அவர்கள் முக்தி தாமத்தில் இருந்து வருகின்ற பொழுது சதோபிரதானாக இருக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து இப்பொழுது அனைவரும் தமோபிரதானாகி விட்டார்கள். பாபாவின் செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். விநாசம் உங்கள் முன்னிலையில் இருக்கின்றது. சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே இருப்பதுடன் ஏனைய அனைவரும் நிர்வாண தாமத்தில் இருப்பார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் படங்களில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய படங்களில் இருந்து புரிந்து கொள்வது இலகுவாக இருக்கும். அனைவருக்கும் பாபாவின் செய்தியைக் கொடுங்கள். ‘மன்மனாபவ’ என்ற வார்த்தை பிரதானமானது. அதாவது அல்பா, பீற்றாவை மாத்திரம் விளங்கப்படுத்துவதற்கே நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துபவர்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளார்கள். எல்லையற்ற தந்தைமீது உங்களுக்கு அன்பிருக்க வேண்டும். நீங்கள் பாபாவின் சேவையைச் செய்கின்றீர்கள் என்பது உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். கடவுளின் உதவியாளர்கள் ஆகுங்கள். மக்கள் இந்த வார்த்தைகளைக் கூறிய போதிலும் அவர்கள் அதன் அர்த்தத்தை அறிய மாட்டார்கள். பாபா இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கின்றார். அவர் உங்களை அத்தகைய அதி மேன்மையான தேவர்கள் ஆக்குகின்றார். இன்று நாங்கள் மிகவும் ஏழ்மையில் இருக்கின்றோம். சத்திய யுகத்தில் நாங்கள் அனைத்து தெய்வீகக் குணங்களாலும் நிறைந்திருக்கின்றோம். ஆனால் இங்கோ அவர்கள் தொடர்ந்தும் தங்களுக்குள் சண்டை போடுகின்றார்கள். விநாசம் இடம்பெற உள்ளது என்பது எவருக்கும் தெரியாது. அவர்கள் அமைதி ஏற்படும் என்று நம்புகிறார்கள், ஆனால் அவர்கள் முழுமையான காரிருளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு விளங்கப்படுத்தவதற்கு ஒருவர் இருக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் இந்த ஞானம் வழங்கப்பட முடியும். ஒன்றுகூடல் ஒன்றில் அமர்ந்து ஒரு விடயத்தை மட்டும் விளங்கப்படுத்துங்கள்: மகாபாரத யுத்தம் மிகவும் பிரபல்யமானது. அதன்மூலம் இந்தப் பழைய உலகம் அழிக்கப்பட உள்ளது. கடவுளாகிய தந்தையும் இப்பொழுது இங்கே இருக்கின்றார். அவர் நிச்சயமாக பிரம்மாவின் மூலமாக சுவர்க்கத்தின் ஸ்தாபணையை மேற்கொள்கின்றார். இப்பொழுது இது சங்கமயுகம் என்பதால் கலியுகம் சங்கரரின் மூலமாக அழிக்கப்பட உள்ளது. இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். மூன்றாம் உலக மகாயுத்தமே இறுதி யுத்தமாக இருக்குமென அவர்கள் கூறுகிறார்கள். இறுதி விநாசம் நிச்சயமாக இடம்பெறும். எல்லையற்ற தந்தையை நினைவு செய்யும்படியும் அதனால் அவர்களால் முக்தி தாமத்திற்கு செல்ல முடியும் என்றும் நீங்கள் இப்போது அனைவருக்கும் கூற வேண்டும். அவர்கள் தங்களுடைய சமயத்தில் இருந்தவாறே பாபாவை நினைவு செய்தாலும்கூட அவர்களால் தங்களுடைய சொந்த சமயத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியும். எல்லையற்ற தந்தை பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தின் மூலமாக இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பின்னர் நீங்கள் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பமாகின்றது. அனைவருக்கும் இந்த செய்தியைக் கொடுங்கள். பாபாவின் அறிமுகத்தை மற்ற சமயத்தவர்களுக்கும் கொடுங்கள். வெளியில் உள்ள மக்கள் அனைவருக்கும் அரசர்கள் போன்றோருக்கும் இந்த ஞானத்தைக் கொடுங்கள். அதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள். பாபா கூறுகின்றார்: திரிமூர்த்தி, சக்கரம், விருட்சம் ஆகிய பிரதான படங்களை நீங்கள் துணியில் அச்சிட்டு வைத்திருந்தால் எங்காவது செல்லும் பொழுது அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும். உங்களால் பெரிய அளவில் அச்சிட முடியாவிட்டால். இரண்டு துணிகளை ஒன்றிணைத்து அச்சிடுங்கள். இந்த ஞானம் அனைத்தும் திரிமூர்த்தி, விருட்சம், சக்கரம் ஆகிய படங்களில் உள்ளது. ஏணிப்படத்தின் ஞானமும் சக்கரத்தில் அடங்கியுள்ளது. ஏணிப்படம், எவ்வாறு நீங்கள் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதை விவரிக்கும் படமாகும். அனைத்து சமயங்களும் சக்கரப் படத்தில் அடங்கியுள்ளன. ஏணிப்படத்தில் எவ்வாறு நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், எவ்வாறு கீழிறங்கி வருகையில் சதோ. ராஜோ, தமோ நிலைகளுக்கூடாக செல்கிறீர்கள் என்பது காட்டப்பட்டுள்ளது. பாபா கூறுகின்றார்: இப்பொழுது சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். பாபா இந்த விடயங்களைப் பற்றி நாள் முழுவதும் சிந்திப்பார். உங்களில் யாராவது புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டும்பொழுது சுவர்களை உயரமாக கட்டுங்கள், உங்களால் அதில் 6x9 அடி அளவிளான படங்களை தொங்கவிட முடியும். இதற்கு சுவர் ஆகக் குறைந்தது 12அடி உயரத்திலாவது இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அதிகளவு மொழிகளும் உள்ளன. இவ் விடயங்கள் அனைத்தும் சகல சமயத்தவர்களுக்கும் விளங்கப்படுத்தப்பட வேண்டும். ஆகையால், பல மொழிகளிலும் படங்கள் செய்யப்பட வேண்டும். அத்தகைய பரந்த புத்தியுடன் வழிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருங்கள். அதற்கு சற்று செலவிட நேரிட்டாலும், எவரிடமும் யாசிக்காதீர்கள். பொக்கிஷக் களஞ்சியம் தானாகவே நிரம்பும், அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களில் குழந்தைகளாகிய உங்களின் புத்திகள் ஈடுபட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், சில குழந்தைகள் சிறிதளவைச் செய்ததும், தாம் மிகவும் திறமைசாலிகள் என்றெண்ணி போதை அடைகின்றார்கள். பாபா கூறுகின்றார்: 4 அணா (25 சதம்) பெறுமதிக்கேனும் அவர்கள் எதனையும் கற்கவில்லை! சிலர் எதனையாவது இரண்டு அணா பெறுமதிக்கும், சிலர் ஓர் அணாப் பெறுமதிக்கும், சிலர் ஒரு சதப் பெறுமதிக்குமே கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. முரளியைக் கற்கின்ற ஆர்வம் கூட அவர்களிடம் கிடையாது. செல்வந்தப் பிரஜைகளும், ஏழைப்பிரஜைகளும் இங்கேயே உருவாக்கப்பட வேண்டும். சிலர் தந்தைக்கு சத்தியம் ஒன்றைச் செய்துவிட்டு பின்னர் தமது முகத்தை அழுக்காக்கிக் கொள்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: பாபா, நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். தந்தை கூறுகின்றார்: நீங்கள் காலாற்படையை விடத் தாழ்ந்தவராக, ஒரு சதப் பெறுமதியேனும் அற்றவராக இருக்கிறீர்கள். அத்தகைய குழந்தைகளால் என்ன அந்தஸ்தைக் கோர முடியும்? சூரிய வம்ச இராச்சியமானது இப்பொழுதே ஸ்தாபிக்கப்படுகின்றது. பாபாவை நினைவு செய்பவர்கள் சதா சந்தோஷமாக இருப்பார்கள். நீங்கள் தந்தையிடம் இருந்து என்ன ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதை மாத்திரம் நினைவு செய்தால் கூட அதிகளவு நன்மையிருக்கும். இந்த ஞானத்தைக் கிரகித்த பின்னர் ஏனையவர்களையும் உங்களுக்கு சமனானவர்கள் ஆக்குங்கள். குழந்தைகளால் அந்தளவுக்கு சேவை செய்ய முடிவதில்லை. அவர்கள் சிறிதளவை செய்ததுமே சித்தி அடைந்து விட்டதாக உணர்கிறார்கள். அவர்கள் சரீர உணர்வு உடையவராகி விழுந்து விடுகிறார்கள். நீங்கள் பிரம்மாபாபாவுக்கு மதிப்பளிக்கா விட்டால் சிவபாபா கூறுவார்: நீங்கள் என்னையும் மதிக்கவில்லை. பாப்பும் தாதாவும் ஒன்றாக இருக்கிறார்கள். உங்களுடைய தொடர்பு சிவபாபாவுடன் என்று எண்ணாதீர்கள், நீங்கள் இவரினூடாகவே ஆஸ்தியைப் பெற வேண்டும். இவரிடத்தில் உங்கள் இதயத்தை திறந்து அறிவுரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். சிவபாபா கூறுகிறார்: நான் சரீரதாரியின் மூலமாக உங்களுக்கு அறிவுரை வழங்குகின்றேன். பிரம்மா இல்லாது எவ்வாறு உங்களால் சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தியைப் பெற முடியும்? இந்தத் தந்தை இல்லாது எதனையுமே செய்ய முடியாது. இதனால் தான் குழந்தைகளாகிய நீங்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலர் எக்காரணமும் இன்றி அகங்காரம் அடைந்து தம்மையே அழித்துக் கொள்கிறார்கள். நீங்கள் சரீரதாரியின் இதயத்தில் இருந்து கீழிறங்கும்போது அசரீரியானவரின் இதயத்தில் இருந்தும் கீழிறங்குகிறீர்கள். முரளியைக்கூட செவிமடுக்காத அல்லது தந்தைக்கு கடிதமேனும் எழுதாத பலர் இருக்கின்றார்கள். எனவே தந்தை என்ன நினைப்பார்? இலக்கு மிக உயர்வானது. குழந்தைகளான நீங்கள் உங்களின் நேரத்தை வீணாக்கக் கூடாது. தம்மை மகாராத்தியாகக் கருதுபவர்கள் மகத்தான பணிகளுக்கு உதவி செய்ய வேண்டும். பின்னர் தந்தை களிப்படைந்து பல நன்றிகளை வழங்கி இவரின் மூலமாக பலரும் நன்மை அடைந்துள்ளார்கள் எனக் கூறுவார். பல மக்களும் கண்காட்சிகளுக்கு வருவார்கள், பிரஜைகளும் உருவாக்கப்படுவார்கள். பாபா தனது பார்வையை சேவாதாரிக் குழந்தைகள் மீது வைத்துள்ளார். சூரியவம்ச அரசர், அரசிகளாகப் போகின்றவர்கள் இந்த இந்திர சபைக்கு வர வேண்டும். சேவை செய்யாதவர்கள் தகுதியற்றவர்கள். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் போது யார் என்னவாகுவார்கள் என்பது பற்றிய அனைத்தையும் அறிந்து கொள்வீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் நாளை சுவர்க்கத்தில் இளவரசர்களாகப் போகின்றீர்கள் என்ற அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். இங்கு நீங்கள் இராஜயோகம் கற்பதற்காக வந்திருக்கின்றீர்கள். நீங்கள் நன்றாகக் கற்கவில்லை என்றால் குறைவான அந்தஸ்தையே பெறுவீர்கள். பாபா, இன்று நான் இந்த சேவையைச் செய்தேன் போன்ற சேவைச் செய்திகளை பாபா பெற வேண்டும். நீங்கள் பாபாவுக்கு ஒரு கடிதத்தையேனும் எழுதவில்லை என்றால் பாபா எதனைப் புரிந்து கொள்வார்? நீங்கள் மரணித்து விட்டீர்கள் என்பதையே. சேவையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளையும், தொடர்ந்தும் தந்தையின் அறிமுகத்தை வழங்குகின்ற குழந்தைகளையும் பாபா நினைவு செய்வார். சிவபாபா, பிரம்மா குமார், பிரம்மா குமாரிகளான உங்களுக்கு பிரம்மாவின் மூலமாக ஆஸ்தியை வழங்குகின்றார். சிவபாபா பிராமணர்களை பிரம்மாவின் மூலமாக உருவாக்குகின்றார். இப்பொழுது ஏனைய அனைத்து சமயங்களும் உள்ளன, ஆனால் அத்திவாரமான ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மறைந்து விட்டது. இந்த முழு நாடகமும் நிச்சயிக்கப்பட்டது. ஏணிப்படத்தில் சகல சமயங்களும் காண்பிக்கப்படவில்லை. இதனால்தான் நீங்கள் சக்கரத்தின் படத்தை விளங்கப்படுத்த வேண்டும், அதில் அனைத்தும் தெளிவாக உள்ளது. சத்தியயுகத்தில் இரட்டைக் கிரீடமுடைய தேவர்கள் இருந்தார்கள் என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் எவரிடமும் தூய்மைக்கான கிரீடம் கிடையாது. ஒளிக்கிரீடம் வழங்கப்படக் கூடிய ஒருவர் கூட இந்நேரத்தில் இல்லை. நீங்களே அதை உங்களுக்குக் கொடுக்கவும் முடியாது. நாங்கள் அந்த ஒளிக்காக முயற்சி செய்கிறோம். இங்குள்ள சரீரங்கள் தூய்மை அற்றவை. ஆத்மாக்கள் இறுதியில் முற்றிலும் தூய்மை ஆகும்வரை யோக சக்தியின் மூலமாக படிப்படியாக தூய்மை ஆகுவார்கள். சத்திய யுகத்தில் நீங்கள் கிரீடத்தைப் பெறுவீர்கள். சத்தியயுகத்தில் அவர்கள் இரட்டைக் கிரீடத்தைக் கொண்டிருப்பார்கள், பக்தி மார்க்கத்தில் அவர்கள் ஒற்றைக் கிரீடத்தைக் கொண்டிருப்பார்கள். இங்கு எந்தக் கிரீடமும் கிடையாது. எவ்வாறு உங்களை தூய்மைக் கிரீடத்துடன் காட்ட முடியும்? எவ்விடத்தில் ஒளியைக் காண்பிக்க முடியும்? நீங்கள் ஞானிகள் ஆகியிருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் முற்றாகத் தூய்மையாகும் பொழுதே ஒளி ஏற்படும். ஆகவே சூட்சும உலகத்தில் ஒளி காட்டப்பட முடியுமா? உதாரணமாக மம்மா சூட்சும உலகத்தில் தூய தேவதையாகக் காட்டப்படுகின்றார். அங்கு ஒரு கிரீடம் இருக்கும். எவ்வாறாயினும், இந்த நேரத்தில் எவ்வாறு ஒளிக்கிரீடம் காட்டப்பட முடியும்? நீங்கள் இறுதியில் தூய்மை ஆகுவீர்கள். நீங்கள் யோகத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒளி காட்டப்பட வேண்டுமா? இன்று நீங்கள் யாரையாவது ஒளியுடன் காட்டலாம். ஆனால் நாளை அவர் தூய்மை அற்றவராகி விடும்போது, அந்த ஒளி மறைந்துவிடும். இதனால் தான் நீங்கள் இறுதியில் கர்மாதீத நிலையை அடையும் பொழுது மட்டுமே ஒளியைக் காட்ட முடியும். எவ்வாறாயினும் நீங்கள் முழுமை அடைந்ததும் சூட்சும உலகிற்கு சென்றுவிடுவீர்கள். முதன் முதலாக சமயமொன்றை ஸ்தாபிக்க வருகின்ற தூய ஆத்மாவை, புத்தர், கிறிஸ்து போன்றவர்களில் காட்டியிருப்பதைப் போன்று, ஒளியுடன் காட்ட முடியும். ஆனால் கிரீடத்துடன் காட்ட முடியாது. நீங்களும் பாபாவை நினைவு செய்வதால் தூய்மை ஆகுவீர்கள். சுயதரிசன சக்கரத்தை சுழற்றுவதால் நீங்கள் இராஜ அந்தஸ்தைப் பெறுவீர்கள். அங்கு ஆலோசகர்கள் இருக்க மாட்டார்கள். இங்கு பலரிடமிருந்து ஆலோசனை பெற வேண்டியுள்ளது. அனைவருமே அங்கு சதோபிரதானாக இருப்பார்கள். இவை அனைத்தும் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பாப்தாதாவிடம் இருந்து நன்றியைப் பெறுவதற்கு, அனைத்துப் பணிகளிலும் அவருடைய உதவியாளர்கள் ஆகுங்கள். நீங்கள் செய்கின்ற சேவை பற்றிய செய்திகளை பாபாவுக்குக் கொடுங்கள்.2. சரீர உணர்வுடையவர் ஆகுவதன் மூலம் எவ்விதமான மரியாதை இன்மையையும் காட்டாதீர்கள். எந்தப் பிழையான போதையையும் கொண்டிருக்காதீர்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். சேவையாளராகி சேவை செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் உலகை மாற்றுபவராகி, உங்களின் கருணை மற்றும் நன்மை செய்யும் பார்வையால் உலகிற்கே சதா சேவை செய்வீர்களாக.உலகை மாற்றுகின்ற ஆத்மாக்களினதும் உலக சேவையாளர்களினதும் பிரதானமான தகைமை, அவர்களின் பார்வை கருணையும் நன்மை செய்வதாகவும் இருப்பதே. அதன் மூலம் அவர்கள் உலகை முழுமையாகவும் சந்தோஷமாகவும் ஆக்குகிறார்கள். ஆத்மாக்கள் இன்னமும் எதை அடையவில்லையோ - ஆன்மீக சந்தோஷத்தின் செல்வம், அமைதி, இந்த ஞானம் மற்றும் சகல சக்திகள் - அவர்கள் இந்தப் பேறுகளை அவர்களுக்குக் கொடுத்து, பிச்சைக்காரர்களை சகல உரிமைகளும் கொண்டவர்கள் ஆக்குவார்கள். இத்தகைய சேவையாளர்கள் தமது ஒவ்வொரு விநாடி, வார்த்தை, செயல், உறவுமுறை மற்றும் தொடர்புகளை சேவை செய்வதற்குப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பார்க்கின்ற, நடக்கின்ற, பழகுகின்ற, உண்ணுகின்ற விதத்தில் சேவை கலந்திருக்கும்.
சுலோகம்:
மரியாதை மற்றும் கௌரவத்தைத் துறந்து, உங்களின் நேரத்தை எல்லையற்ற சேவை செய்வதில் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துவது என்றால் மற்றவர்களை ஈடேற்றுபவர் ஆகுவதாகும்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
இறுதி முழுமை ஸ்திதியை அடைவதற்கு, உங்களை ஒரு விருந்தாளி எனக் கருதிய வண்ணம் தொடர்ந்து செயல்படுங்கள். தங்களை விருந்தாளிகளாகக் கருதுபவர்கள், பௌதீக ரூபத்தில் இருந்தாலும் தமது அவ்யக்த ஸ்திதியில் இருப்பார்கள். அத்துடன் அவர்களுக்கு எவரிடமும் பற்று கிடையாது. நாங்கள் இந்தப் பழைய சரீரங்களுக்கும் பழைய உலகிற்கும் விருந்தாளிகள். நாங்கள் இந்தச் சரீரங்களை இன்னும் சிறிது காலத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.