07.09.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்று இளவரசர்கள் ஆகுவதற்கான இக்கல்வியையே இங்கு கற்கிறீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார்.
கேள்வி:
“கடவுள் பேசுகிறார்” என பாபா கூறும்பொழுது, ஏன் சில குழந்தைகள் குழப்பம் அடைகிறார்கள்?பதில்:
கடவுள் மறைமுகமானவர் என்பதால், ஒருவேளை இந்த தாதாவே கடவுள் பேசுகின்றார் என்று கூறுகின்றாரோ என்று அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், அசரீரியான கடவுளுக்குப் பேசுவதற்கு நிச்சயமாக ஒரு வாய் தேவையாகும். பாபா கூறுகிறார்: நான் எவ்வாறு இவருக்குள் பிரவேசித்து உங்களுக்குக் கற்பிக்கிறேன் என்ற இந்த அற்புதமான விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார். கடவுள் என்ன கூறுகிறார்? “கடவுள் பேசுகிறார்” எனக் கூறியது யார்? கண்ணில் எவரும் தென்படவில்லை. மனிதர்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது. இங்கு பேசிக் கொண்டிருப்பவரே, “கடவுள் பேசுகிறார்” எனக் கூறுவதாகச் சிலர் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், அசரீரியான கடவுள் பேசுகிறார் என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இங்கு அமர்ந்திருப்பவர் யார்? கடவுள் எங்கிருக்கின்றார்? இது ஒரு புதிய விடயம் என்பதாலேயே மக்கள் குழப்பம் அடைகிறார்கள். எவ்வாறாயினும், கடவுள் நிச்சயமாகப் பேசுகின்றார். அவர் கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். உங்களை ஒரு சாதாரண ஆணிலிருந்து நாராயணனாக அல்லது கிருஷ்ணராகவும், ஒரு சாதாரண பெண்ணில் இருந்து இலக்ஷ்மியாக அல்லது இராதையாகவும் மாற்றுவதற்கு, நான் உங்களுக்கு இந்த ஞானத்தையும் யோகத்தையும் கற்பிக்கிறேன். இதை விட வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? நான் உங்களை இளவரசருக்கு எல்லாம் இளவரசராக, அரசருக்கு எல்லாம் அரசராக ஆக்குகிறேன். இளவரசர்களும் இளவரசிகளும் ஆலயங்களுக்குச் செல்கிறார்கள். விகாரமுடைய இளவரசர்கள் விகாரமற்ற இளவரசரான ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குகிறார்கள், ஆகவே நான் உங்களை இளவரசருக்கு எல்லாம் இளவரசர்கள் ஆக்குகிறேன். ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்று ஒரு சுவர்க்க இளவரசர் ஆகுங்கள். இந்த ஞானத்தைக் கற்பதால் மாத்திரமே உங்களால் அவ்வாறு ஆக முடியும். வைத்தியர்களும் சட்டநிபுணர்களும், தமது மாணவர்களிடம், உங்களை வைத்தியர்களாகவும், சட்டநிபுணர்களாகவும் நாங்கள் ஆக்குகின்றோம் என்று கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் கற்றால் மாத்திரமே, அவ்வாறு ஆக முடியும். பாபா கூறுகிறார்: உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பவர் ஒரேயொரு கடவுளே அன்றி ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல என்பதை குழந்தைகளாகிய நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இராதை, கிருஷ்ணர் ஆகிய இருவரும் வெவ்வேறு இராச்சியங்களை சேர்ந்த குழந்தைகள் ஆவார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நிச்சயம் செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய திருமணத்தின் பின்னர் அவர்களுடைய பெயர்கள் மாற்றம் அடைகின்றன. இதனாலேயே, இலக்ஷ்மி நாராயணனின் படத்தில், இலக்ஷ்மி நாராயணனுக்குக் கீழ், இராதையும் கிருஷ்ணரும் காட்டப்படுகின்றார்கள். இந்த பிரம்மாவும் முதல் இலக்க பக்தனாக இருந்தார் என்பதையும் இறுதியில் அவர் நாராயணனை வழிபட்டார் என்பதையும் தந்தை இப்பொழுது உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். அவர் கிருஷ்ணரை வழிபட்டிருந்தாலும் அல்லது நாராயணனை வழிபட்டிருந்தாலும், எல்லாம் ஒன்றுதான். கிருஷ்ணர் வளர்ந்து நாராயணன் ஆகுகிறார். உங்களை ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்கு தந்தை இப்பொழுது உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார். உங்களுடைய 84 பிறவிகளும் இப்பொழுது நிறைவடைகின்றன. இப்பொழுது இந்த ஆத்மாவும் கற்கிறார், அவர் எதிர்காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகுவார். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் ஞானச்சிதையில் அமர்ந்ததால் அழகானவர்கள் ஆகினீர்கள். பின்னர் நீங்கள் காமச்சிதையில் அமர்ந்ததால், அவலட்சணம் ஆகினீர்கள். இது அசுரனான கம்சனின் உலகம் ஆகும். நான் உங்களை கிருஷ்ணரின் உலகிற்கு அழைத்துச் செல்வதற்கு வந்திருக்கின்றேன். ஸ்ரீ கிருஷ்ணர் தெய்வீகக்குணங்கள் அனைத்தும் நிறைந்தவரும், 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவரும் ஆவார். இங்கு எவரும் தெய்வீகக்குணங்கள் அனைத்தையும் கொண்டிருப்பதில்லை. நான் குழந்தைகளாகிய உங்களை முழுமையாக விகாரம் அற்றவர்கள் ஆக்குவதற்கு வந்துள்ளேன். யோகசக்தியின் மூலம் நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். வன்முறையுடன் யுத்தம் புரிந்து பௌதீக சக்தி பெறப்பட்டது. முதலில் அவர்கள் அம்பு, வில் போன்றவற்றை பயன்படுத்தி அந்த யுத்தங்களில் ஈடுபட்டனர், அதன் பின்னர் துவக்கு, வாள் போன்றவற்றினால் யுத்தம் செய்தனர். இப்பொழுது குண்டுகளைப் பயன்படுத்தி யுத்தம் புரிகின்றனர். தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுதே, அனைத்தையும் அழித்து விடக்கூடிய குண்டுகளை தாம் உருவாக்குவதாக அவர்களே கூறுகிறார்கள். அப்பொழுது இராணுவம் என்ன செய்யும்? தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இது ஒரு கல்விக்கூடம் ஆகும். நான் உங்களை ஸ்ரீ கிருஷ்ணரைப் போன்று இளவரசர்கள் ஆக்குகிறேன். சத்தியயுகத்தின் முதல் இளவரசராக இருந்தவரே, 84 பிறவிகளை எடுத்துள்ளார், அவர் இப்பொழுது கலியுகத்தில் ஒரு யாசிப்பவராக ஆகியுள்ளார். அவருடைய இராச்சியம் பாரதத்தில் இருந்தது. பின்னர் அவர் மறுபிறவிகள் எடுக்கின்றார். கிருஷ்ணரே கடவுள் என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் கடவுள் எவ்வாறு மறுபிறவி எடுக்க முடியும்? கடவுள் அசரீரியானவர் ஆவார். அவர் ஒருவரே படைப்பவர் ஆவார், ஏனைய அனைவரும் படைப்புக்கள் ஆவார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் சகோதரர்கள் என அவர்கள் கூறுகிறார்கள். பிரம்மாகுமார்களும் குமாரிகளுமாகிய நீங்கள் சகோதர, சகோதரிகள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவ்வாறாயின், எவ்வாறு குற்றவியல் தாக்குதல்கள் இருக்க முடியும்? எதிர்காலத்துக்காக, நீங்கள் ஒரேயொரு தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். நீங்கள் தூய்மையாக இல்லாதிருந்தால், எவ்வாறு உங்களால் அமைதி தாமத்துக்கும், சந்தோஷ தாமத்துக்கும் செல்ல முடியும்? மக்கள் அழைக்கிறார்கள்: நாங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டோம், ஆகவே, எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள்! தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! இது உங்களுடைய இறுதிப்பிறவி ஆகும். ஆத்மாக்களாகிய உங்கள் அனைவராலும் இப்பொழுது திரும்பவும் ஓய்வுக்குள் செல்ல இயலும், இதனாலேயே நீங்கள் ஓய்வு ஸ்திதியில் இருக்கிறீர்கள். எந்த குருமார்களினாலும் உங்களுக்கு இப்பாதையைக் காட்ட முடியாது. ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே இந்த ஞானம் உள்ளது. அவரே அசரீரியான தூய்மையாக்குபவர். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள். நான் இந்தச் சரீரத்தை ஒரு குறுகிய காலத்திற்கு கடனாகப் பெற்றுள்ளேன். சரீரம் இல்லாமல், ஓர் ஆத்மாவினால் எவ்வாறு பேச முடியும்? கடவுள் பேசுகிறார்: நான் ஒரு சாதாரண பழைய சரீரத்தில் பிரவேசித்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். நான் ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பதில்லை. ஒரு கருப்பையினுள் பிரவேசிப்பவர்கள் மறுபிறவி எடுக்க வேண்டும். நான் ஒருமுறை மாத்திரமே வருகிறேன். எனக்கு நிச்சயமாகச் சடப்பொருளின் ஆதாரம் தேவை. நான் இவருக்குள் அமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கிறேன். முன்னர், இவர் தனது நகை வியாபாரத்தைச் செய்து கொண்டிருந்தார். அவருக்குக் கற்பித்தவர் ஒரு குருவல்ல. தந்தையே அவருக்குள் திடீரெனப் பிரவேசித்தார். அவர் கரன்கரவன்ஹார் என்பதால் தொடர்ந்தும் தந்தை இவரைச் செய்ய வைத்தார். இவரும் தொடர்ந்தும் அனைத்தையும் கற்றுக் கொண்டார். நீங்களும் அவருடன் சேர்ந்து அனைத்தையும் கற்கின்றீர்கள். அவர் குழந்தைகளாகிய உங்களுடனேயே பேசுகின்றார், ஆனால் நானே, அவர் கூறுவதை முதலில் செவிமடுக்கின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிப்பதற்கே வருகின்றேன். ஆனால் இந்த ஆத்மாவும் (பிரம்மா) தொடர்ந்தும் கற்கின்றார். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வருகின்றேன். இவ்வாறாக வேறு எவரும் கற்பிப்பதில்லை. இது தூய்மை ஆகுவதற்கான ஒரு விடயமாகும். இச்சங்கமயுகமே அதிமேன்மையானவர்கள் ஆகுவதற்கான யுகமாகும். ஸ்ரீ கிருஷ்ணரே அதிமேன்மையானவர் ஆவார். அவருடைய திருமணத்தின் பின்னர், அவருடைய கலைகள் சிறிதளவு குறைவடைகின்றன. இதனாலேயே ஸ்ரீ கிருஷ்ணருக்கு அதிகளவு புகழ் உள்ளது. அதன் பெயரே ஸ்ரீ கிருஷ்ணரின் உலகம் என்பதாகும். இது அசுரனான கம்சர்களின் உலகமாகும். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரையும், கம்சனையும் பற்றிய கதைகளை உருவாக்கி உள்ளார்கள். உங்கள் ஸ்திதி முதிர்ச்சி அடையும் பொழுது, நீங்கள் இயல்பாகவே பக்தி செய்வதை நிறுத்துவீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பக்தி செய்ய வேண்டாம் என நீங்கள் ஒருவரிடமும் எப்பொழுதுமே கூறக்கூடாது. நீங்கள் அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்க வேண்டும். உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, உங்களைச் சுவர்க்க இளவரசர்கள் ஆக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்கத்தின் அதிபதியாக இருந்தார், ஆனால் அவர் இப்பொழுது அவ்வாறில்லை. அவர் மீண்டும் ஒருமுறை இராஜயோகத்தைக் கற்பதனால் அவ்வாறு ஆகுகிறார். நீங்களும் முயற்சி செய்து, தந்தையை நினைவு செய்ய வேண்டும். சுவர்க்கக் கடவுளாகிய தந்தையே, சுவர்க்கத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கிறார். அவர் வந்து புதிய உலகத்தை உருவாக்குகிறார். கலியுகம் முடிவுக்கு வரும்பொழுது, அவர் அதனைச் செய்கிறார். அவர் சத்தியயுகத்திலோ அல்லது திரேதாயுகத்திலோ வருவதில்லை. அவர் கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கமயுகத்தில் வருகிறேன். அவர்கள் “சக்கரம்” என்னும் வார்த்தையை அகற்றி விட்டு, அவர் ஒவ்வொரு யுகத்திலும் வருகிறார் எனக் கூறினார்கள். எவ்வாறாயினும், நான்கு யுகங்கள் உள்ளன. ஐந்தாவது இந்தச் சங்கமயுகம் ஆகும். நல்லது, அவ்வாறாயின், அவர் ஐந்து அவதாரங்களை எடுப்பதாக நீங்கள் கருத வேண்டும். எவ்வாறாயினும், மீன், முதலை, பரசுராம் (கோடரியுடன் உள்ள இராமர்) போன்ற அவதாரங்கள் இருக்க முடியுமா? அவ்விடயங்கள் அனைத்தும் சமயநூல்களுக்கு உரியவையாகும். அவர்கள் முழுமையாகவே தர்மத்தின் பெயரையும், பாரதத்தின் பெயரையும் மாற்றியுள்ளார்கள். அவர்கள் அதை இந்து சமயம் என்றும், இந்துஸ்தான் என்றும் மாற்றியுள்ளார்கள். பாரதம் என்ற பெயர் ஏன் மாற்றப்பட வேண்டும்? “பாரதத்தில் அதர்மம் தலைத்தூக்கும் போது....” இதிலும் பாரதம் என்னும் வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஒரு பிறவிக்காகப் பக்தி செய்யவில்லை. நீங்கள் அதனைத் துவாபரயுகத்தில் இருந்தே செய்து வருகிறீர்கள். பக்தி முதலில் கலப்படம் அற்றதாக இருந்தது. அவர்கள் பாரதத்தை சுவர்க்கமாக ஆக்கிய சிவபாபாவான சிவனை மட்டுமே வழிபட்டனர், இப்பொழுது அவர் உங்களை மீண்டும் ஒருமுறை சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆக்குவதற்கு வந்துள்ளார். ஆகவே, அவர் ஒரு தூய்மையற்ற சரீரத்தில் அமர்ந்திருந்து உங்களுக்குக் கூறுகிறார்: தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கு, நான் தூய்மையற்ற உலகில், ஒரு தூய்மையற்ற சரீரத்தில் வருகிறேன். பக்தி மார்க்கத்தில், அவர்கள் எனக்குப் பெரியதோர் ஆலயத்தைக் கட்டுகிறார்கள். இது மிகவும் தெளிவானது. பாபா பிரவேசித்த பொழுது, இவர் கீதை போன்றவற்றை படிப்பதை நிறுத்தி விட்டார். அவர் பக்தி செய்வதை நிறுத்தினார், உடனடியாகவே அதனை அவர் கைவிட்டார். உங்கள் எவரிடமுமே பக்தி செய்ய வேண்டாம் எனக் கூறப்படவில்லை. பாபா, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களை மீண்டும் ஒருமுறை கிருஷ்ணரின் உலகிற்கு அதிபதிகள் ஆக்குகிறேன். ஸ்ரீகிருஷ்ணரின் வம்சத்தில் எட்டுப் பேர் உள்ளார்கள். எல்லாவற்றுக்கும் முதலில், அவர் சத்தியயுகத்தின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார், பின்னர் அவர் சத்தியயுகத்தின் அரசர் ஆகுகிறார். எட்டுத் தலைமுறைகள் உள்ளன. அந்நேரத்தில், வேறெந்த இராச்சியங்களும் இருக்கவில்லை. பாபா கூறுகிறார்: இப்பொழுது குழந்தைகளாகிய நீங்களும் சத்தியயுகத்தின் இளவரசர்கள் ஆகவேண்டும். பக்தியில் சந்தோஷம் இல்லை. இந்த ஞானத்தினூடாக நீங்கள் சுவர்க்க அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஒருவரின் தந்தை மரணிக்கும் போது, அவரிடம் “உங்களுடைய தந்தை எங்கு சென்றார்?” என்று வினவப்படும் பொழுது, அவர் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்று அவர் பதில் அளிப்பார். ஆத்மா, சரீரம் இரண்டும் சென்றதாக அவர்கள் நினைக்கின்றார்கள். எவ்வாறாயினும், சரீரத்தை இங்கேயே விட்டுவிட்டு ஆத்மாவே செல்கின்றார். அந்நபர் முதலில் நரகத்தில் இருந்தார் என்பதும், சரீரத்தை நீக்கி, அவர் சுவர்க்கத்துக்குச் சென்றுள்ளார் என்பதுமே அதன் அர்த்தமாகின்றது. அவ்வாறாயின், அதற்காக அழ வேண்டிய அவசியம் என்ன? சுவர்க்கம் இங்கே இருக்கிறதா? எவ்வாறாயினும், அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவை எல்லாம் கடவுளின் செயல் என்றும், கடவுளே சந்தோஷம், துன்பம் இரண்டையும் கொடுக்கிறார் என்றும் அனைத்தும் கடவுளின் வடிவமே என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: எவ்வாறு என்னால் குழந்தைகளுக்குத் துன்பத்தைக் கொடுக்க முடியும்? குழந்தைகள் தந்தையிடம் எப்பொழுதாவது துன்பத்தை வேண்டினார்களா? தந்தை, குழந்தைகளாகிய உங்களைத் தகுதி வாய்ந்தவர்களாக ஆக்கி, உங்களுக்குத் தனது சொத்தைக் கொடுக்கின்றார். ஆனால் உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த செயல்களுக்கு ஏற்பவே துன்பத்தைப் பெறுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பொழுது குழந்தைகள் போன்றவற்றிற்காக வேண்ட வேண்டாம். இந்தச் சொத்து போன்ற அனைத்தும் இப்பொழுது அழியவுள்ளது, ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் எதனைப் பெறுவீர்கள்? இப்பொழுது உங்களின் குழந்தைகளுக்கு உங்கள் சொத்துக்களுக்கு அதிபதிகள் ஆகுவதற்கு அதிக காலம் கிடையாது. அவர்கள் வளர்ந்த பின்னரே, குழந்தைகளால் அதிபதிகள் ஆக முடியும். எவ்வாறாயினும், அந்தளவு காலம் இல்லை. விநாசம் நேர்முன்னிலையில் உள்ளது. கலியுகத்தில் இன்னமும் 40,000 வருடங்கள் எஞ்சியிருப்பதாக மனிதர்கள் கூறுகிறார்கள். பிரம்மாகுமார்களும் குமாரிகளுமாகிய நாங்கள் சதா விநாசத்தைப் பற்றிப் பேசுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ‘ஓநாய் ஓநாய்’ எனப் பொய்யாக ஒரு சிறுவன் கத்தியதாகவும் இறுதியில் உண்மையில் ஓநாய் வந்து ஆடுகளை உண்ட கதை உள்ளது. வெகு சிலருக்கே மரணம் வரும் என அனைவரும் நினைக்கின்றார்கள். இவ்வாறாகத் தொடர்ந்தும் எப்பொழுதும் நடக்கின்றது. மகாமரணம் வந்துவிட்டது என நீங்கள் கூறுகிறீர்கள். மகாகாலனாகிய, சிவபாபா, வந்துள்ளார். அவர் ஆத்மாக்கள் அனைவரையும் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வார். ஆகவே, நீங்கள் நிச்சயமாக உங்கள் சரீரங்களை விட்டு நீங்க வேண்டும். இதனாலேயே பாபா கூறுகிறார்: யோகத்தினூடாகத் தூய்மை ஆகுங்கள். நான், ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்கி, மீண்டும் உங்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வேன். நீங்கள் தூய்மை ஆகாது விட்டால், இறுதியில் அதிகளவு தண்டனை கிடைப்பதுடன், உங்களால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரவும் இயலாதிருக்கும். ஸ்ரீகிருஷ்ணர் முதல் இலக்கமாக, திறமைச்சித்தி அடைந்தார். அவர் ஒரு புலமைப்பரிசிலைப் பெற்றார். அவர் 21 பிறவிகளுக்கான இராச்சியத்தைப் பெறுகிறார். அவர் உங்களுக்கு மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகிறார். இது உங்கள் புத்தியில் உள்ளது, பின்னர் அது மறைந்து விடுகிறது. எவரும் பக்தி செய்வதை நீங்கள் நிறுத்தக்கூடாது. பக்தர்களாகிய உங்களுக்கு உங்கள் பக்தியின் பலனைக் கொடுப்பதற்கே தந்தை வந்துள்ளார். அவர் கூறுகிறார்: நான் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, மிகச்சரியாக, அதே சாதாரண சரீரத்தில் வந்துள்ளேன். நான் வந்து உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் கற்பிக்கிறேன். இதுவே அதிமேலான கல்வியாகும். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதையும், நீங்கள் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர் பாரதம் சதோபிரதான் ஆகும். ஏனைய சமயத்தவர்கள் அதிகளவு சந்தோஷத்தையும் அனுபவம் செய்வதில்லை, அதிகளவு துன்பத்தையும் அனுபவம் செய்வதில்லை. வெளிநாட்டு மக்களிடம் அதிகளவு பணம் உள்ளதால், அவர்கள் அதனை ஏழை நாடுகளுக்குக் கடனாகக் கொடுக்கிறார்கள். அவர்கள் திரும்பவும் கொடுக்கின்றார்கள் என்பதை அந்த ஏழைகளான அப்பாவி மக்கள் உணர்வதில்லை. அவர்கள் ஆழ்ந்த அறியாமை எனும் கும்பகர்ண உறக்கத்தில் உறங்குகிறார்கள். இறுதியில், அவர்கள் அவலக்குரல் எழுப்புவார்கள். அப்போது யுத்தம் ஆரம்பமாகி இருக்கும் என்பதால், காலம் தாழ்ந்து விட்டது என்று நீங்கள் கூறுவீர்கள். அப்பொழுது அவர்கள் என்ன செய்வார்கள்? வைக்கோற் போர் தீ மூட்டப்பட வேண்டும் என்பதால், அப்பொழுது காலம் தாழ்ந்திருக்கும். இதனாலேயே தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது தொடர்ந்தும் விரைவாக முயற்சியைச் செய்யுங்கள். பாபா உங்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுப்பதில்லை. நீங்கள் வந்து பாபாவிடம் கூறுகிறீர்கள்: பாபா, நாங்கள் பக்தி செய்யாமல் இருந்தால், நாங்கள் நாஸ்திகர்கள் ஆகிவிட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு பற்றற்ற பார்வையாளராக, பாபாவின் நினைவில் நிலைத்து இருக்குமாறு பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார். நீங்கள் வெளிப்படையாக வழிபடுவதைப் போலக் காட்டிக் கொள்ளலாம். இதயபூர்வமாக ஒன்றைச் செய்வது ஒன்று, பிறரை திருப்திப்படுத்துவதற்காக ஒன்றைச் செய்வது வேறொன்று. உங்களுக்குள் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். உங்களை எவரும் தொந்தரவு செய்தால், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் வழிபாடு செய்வதைப் போல காட்டிக் கொள்ளுங்கள். அது பாவச்செயல் அல்ல. நீங்கள் திருமணங்கள் போன்றவற்றுக்குச் செல்லலாம் என பாபா உங்களிற் பலருக்குக் கூறுகிறார். நீங்கள் இருபுறமும் உங்கள் பொறுப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் அங்கே இந்த ஞானத்தைக் கூறும் பொழுது, அந்த அம்பு யாராவதொருவரைச் சென்றடையும். நீங்கள் சாதுரியமாகத் தொடர்பு கொள்ள வேண்டும். தந்தையின் கட்டளை யாதெனில், இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகாதீர்கள். தூய்மை ஆகுவதனால் மாத்திரமே நீங்கள் கிருஷ்ணரின் உலகிற்கு அதிபதிகள் ஆக முடியும். சிவபாபாவை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள். குழந்தைகளே, இவ்விதமாக சாதுரியத்துடன் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். அது ஒரு பௌதீக யாத்திரை ஆகும், இதுவோ ஆன்மீக யாத்திரை ஆகும். தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஆன்மீக யாத்திரையைக் கற்பிக்கிறார். அவர் கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதுடன், உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்பட்டு விடும். சுவர்க்க இராச்சியத்தைக் கோருகின்ற இந்த வியாபாரத்தை அரிதாக சில வியாபாரிகளே செய்கின்றார்கள். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அநாவசியமாக உங்கள் பணம் வீணாக்கப்படுவதாகவும், நீங்கள் எந்தப் பலனையும் அடையாதிருப்பதாகவும் இருக்கக் கூடாது. உங்கள் இல்லறம் போன்றவற்றில் நீங்கள் கவனம் செலுத்துவதுடன், உங்கள் குழந்தைகளைப் பராமரிக்கவும் வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். பாபாவிடம் ஆலோசனை கேளுங்கள்: பாபா, நான் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது? பாபா, எனது மகள் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறுகிறாள். பாபா கூறுவார்: நீங்கள் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். அவளுக்கு அவளுடைய பங்கைக் கொடுங்கள். தந்தை எவ்வாறாயினும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இருப்பினும் நீங்கள் வினவ வேண்டுமானால், வினவுங்கள், பின்னர் அவ்வாறே செய்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்! குழந்தைகளான நீங்கள் தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். அதில் மாத்திரமே நன்மை உள்ளது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரு பற்றற்ற பார்வையாளராக சிவபாபாவின் நினைவில் ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். உங்கள் லௌகீக உறவினர் மற்றும் ஆன்மீக உறவினர் இருசாராருக்குமான உங்கள் பொறுப்பைப் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் லௌகீக உறவினர்களுடன் சாதுரியமாகப் பழகுங்கள்.2. இந்நேரத்தில், உங்கள் இறுதிப் பிறவியில், நீங்கள் உங்களுடைய ஓய்வு ஸ்திதியில் இருக்கிறீர்கள். நீங்கள் வீடு திரும்ப வேண்டும், ஆகவே நீங்கள் நிச்சயமாகத் தூய்மை ஆகவேண்டும், எந்தப் புதிய பந்தனங்களையும் உருவாக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சகல கட்டளைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் சகல ஆசைகளையும் முடித்து மாயை உட்புகாதவர் ஆகுவீர்களாக.அமிர்தவேளை முதல் இரவு வரையில், நாள் முழுவதற்குமாக நீங்கள் பெற்றிருக்கின்ற சகல கட்டளைகளைக்கு ஏற்ப உங்கள் மனோபாவம், பார்வை, எண்ணங்கள், விழிப்புணர்வு, சேவை மற்றும் உறவுமுறைகள் உள்ளனவா எனச் சோதியுங்கள். தமது ஒவ்வோர் எண்ணங்களினாலும் ஒவ்வோர் அடியிலும் கட்டளைகளைப் பின்பற்றுபவர்களுக்கு, சகல ஆசைகளும் முடிவடைகின்றன. உங்களுக்குள் உங்கள் முயற்சிக்காக அல்லது உங்கள் வெற்றிக்காக நீங்கள் எந்தவொரு ஆசையையும் கொண்டிருந்தால், நீங்கள் நிச்சயமாக ஏதோவொரு இடத்தில் கட்டளைகளைப் பின்பற்றாதிருக்கிறீர்கள். எனவே, எப்பொழுதெல்லாம் ஒரு பிரச்சினை எழுகின்றதோ, உங்கள் கட்டளைகளை நீங்கள் நாலாபுறத்திலும் சோதித்தால், நீங்கள் இயல்பாகவே மாயை உட்புகாதவர் ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்கள் சூட்சும பலவீனங்களை பற்றிச் சிந்தித்து, அவற்றை முடிப்பதே நீங்கள் சுயத்தின் (சுவசிந்தன்) சிந்தனையில் இருப்பதாகும்.அவ்யக்த சமிக்ஞை: இப்போது உங்களின் அருள்கின்ற ரூபத்தை வெளிப்படுத்துங்கள்.
சகலதுறை சேவையாளர் ஓர் இடைவெளி ஏற்படும்போது, சரியான நேரத்தில் அந்த இடைவெளியை நிரப்புகிறார். அவ்வாறாகவே, யாராயினும் ஒருவரில் குறிப்பிட்ட சக்தி குறைவாக உள்ளது என்று நீங்கள் உணர்ந்தால், அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அவருக்கு உதவி செய்யுங்கள். அப்போது அவரில் எந்த ஒரு குறைபாட்டையும் பிறர் அனுபவம் செய்ய மாட்டார்கள். இதுவே நேரத்திற்கு ஏற்ப அருள்பவரின் குழந்தை ஆகுவதென்றும் அந்த ஆத்மாவிற்கு ஒத்துழைப்பு என்ற பரிசை வழங்குவது என்றும் அழைக்கப்படுகின்றது.