08.11.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.10.2071     Om Shanti     Madhuban


(தீபாவளி பண்டிகைக்காக அவ்யக்த பாப்தாதாவின் விசேடமான இனிய மேன்மையான வாசகங்கள்)
தீபமாலை என்பது உயிர்வாழும் தீபங்களின் மாலையின் ஞாபகார்த்தம்.


இன்று பாப்தாதா எதைப் பார்க்கிறார்? அவர் தீபங்களான உங்களின் மாலையைப் பார்க்க வந்துள்ளார். தீபமாலை தினத்தின் ஞாபகார்த்தத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், பாப்தாதா உயிர்வாழும் தீபங்களான உங்களின் மாலையைப் பார்க்கிறார். தீபாவளி தினத்தில் ஏற்றப்பட்டுள்ள தீபங்களை நீங்கள் அனைவரும் பார்க்கும்போது, உங்களின் ஞாபகார்த்தம் கொண்டாடப்படுகிறது என்ற சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறதா? ஏற்றப்பட்ட தீபம் மிகவும் விரும்பப்படுவதைப் போல், உங்களின் ஞாபகார்த்தம் கொண்டாடப்படுவதை நீங்கள் பார்க்கும்போது, நீங்கள் உலகத் தந்தையாலும் உலகிலுள்ள ஆத்மாக்களாலும் நேசிக்கப்படுகிறீர்கள் என்ற விழிப்புணர்வு உங்களிடம் உள்ளது. எனவே இன்று, நீங்கள் உயிர்வாழும் ரூபத்தில் ஞாபகார்த்தத்தைப் பார்ப்பதற்கு வந்துள்ளீர்கள். மாலையில் ஒரு மணி மட்டும் இல்லை. மாலை பல மணிகளாலேயே உருவாக்கப்படுகிறது. ஓரிடத்தில் ஒரு தீபம் ஏற்றப்பட்டிருந்தால் அதை தீபங்களின் மாலை என்று அழைக்க முடியாது. அதேபோல், பல ஏற்றப்பட்ட தீபங்கள் மாலையின் வடிவில் தென்படுகின்றன. எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை தீபங்களின் மாலையில் கோர்க்கப்பட்டுள்ள ஓர் ஏற்றப்பட்ட தீபமாகக் கருதுகிறீர்களா? ஏற்றப்பட்ட தீபங்கள் பலவற்றைக் கொண்ட மாலையைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? இன்று, தீபமாலை (தீபாவளி) தினத்தில் நீங்கள் அனைவரும் தீபாவளியைக் கொண்டாடினீர்களா? தீபாவளியை நீங்கள் விசேடமான முறையில் கொண்டாடினீர்களா? உண்மையில், நீங்கள் சதா ஏற்றிய தீபங்கள் ஆவீர்கள். ஆனால் விசேடமான ஞாபகார்த்தமான தினத்தில் விசேட ஆத்மாக்களான நீங்கள் என்ன செய்ய வேண்டும்? விசேடமான முறையில் கருவிகள் ஆகியுள்ள விசேட ஆத்மாக்களான நீங்கள் என்ன சேவை செய்ய வேண்டும்? விசேடமான ஆத்மாக்கள் மற்றவர்கள் செய்வதைப் போலன்றி, விசேடமான பணியைச் செய்ய வேண்டும். விசேடமான ஆத்மாக்கள், ஏனைய ஆத்மாக்கள் செய்வதைப் போல் செய்தால், செய்து கொண்டிருந்தால், விசேடமான ஆத்மாக்களில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? விசேடமான ஆத்மாக்கள், விசேடமான பணியைச் செய்ய வேண்டும். விசேடமான தினங்களில், பாப்தாதா குழந்தைகளுக்கும் பக்தர்களுக்கும் மூன்று வழிமுறைகளில் சேவை செய்கிறார். தமது ஞாபகார்த்த நாளில், விசேடமான ஆத்மாக்கள் குறிப்பாக காட்சிகளை அருளும் ரூபங்கள் ஆகவேண்டும். ஆத்மாக்களுக்கான தமது நன்மை செய்யும் உணர்வுகளால் பாப்தாதா செய்வதைப் போல் தமது ஆன்மீக அன்பு ரூபம் மற்றும் சூட்சுமமான சக்திகளால் ஆத்மாக்களை நடைமுறைரீதியில் சக்தியால் நிரப்ப வேண்டும். பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளுக்கும் அவ்யக்த ரூபத்தில் சேவை செய்கிறார். பாப்தாதா தங்களைச் சந்திப்பதாகவும் தமது நினைவிற்குப் பதில் அளிப்பதாகவும் அவர்கள் உணர்கிறார்கள். அல்லது தமது நினைவிற்கான நடைமுறைப் பலனைத் தாம் அனுபவம் செய்ததாக உணர்கிறார்கள். பக்தர்களும் தமது அன்பு மற்றும் நம்பிக்கை உணர்வுகளை இறைவன் பூர்த்திசெய்வதாக உணர்கிறார்கள். அவர்கள் அதைத் தொடர்ந்து நடைமுறைரீதியாக அனுபவம் செய்கிறார்கள்.

அதேபோல், விசேடமான ஆத்மாக்களான நீங்கள், உங்களின் அவ்யக்த ஸ்திதியாலும் உங்களின் ஆன்மீக ஒளி மற்றும் சக்தி ஸ்திதியாலும் வெளிச்சவீடுகளாகவும் சக்தி வீடுகளாகவும் ஆகவேண்டும். பின்னர் ஓரிடத்தில் இருந்தவண்ணம், அலௌகீக, ஆன்மீக சேவை செய்யும் மனோபாவத்துடனும் உணர்வுகளுடனும் எங்கும் சேவை செய்யுங்கள். இதுவே எல்லையற்ற சேவை எனப்படுகிறது. உங்களின் பிரஜைகளும் உங்களின் பக்தர்களும் குறிப்பாக இந்த ஞாபகார்த்த தினத்தில் உங்களை நினைவு செய்கிறார்கள் என்பதை உணர்ந்து அனுபவம் செய்யுங்கள். தற்காலிகமான மாயாஜால சக்திகளைக் கொண்டிருப்பவர்கள், ஓரிடத்தில் இருந்தவண்ணம் தமது ரூபத்தை தமது பக்தர்களுக்குக் காட்சியாகக் காட்டுகிறார்கள். எனவே, விசேடமான ஆத்மாக்களான உங்களால் உங்களின் பிரஜைகளுக்கும் பக்தர்களுக்கும் உங்களின் ஒளி மற்றும் சக்தியால் செய்யும் சேவையின் அனுபவத்தைக் கொடுக்க முடியாதா? எனவே, இத்தகைய விசேட ஞாபகார்த்த நாட்கள் வரும்போது, விசேடமான ஆத்மாக்கள் தமது விசேடமான சேவையை அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் இத்தகைய சேவை செய்கிறீர்களா? அச்சா, அது சேவையைப் பொறுத்த விடயம். தீபாவளி தினத்தில், நீங்கள் உங்களில் விசேடமான கவனம் செலுத்தினீர்களா? இன்று, ஆத்மாவான உங்களின் சம்ஸ்காரங்களை எல்லா வேளைக்குமாக மாற்றுவதில் விசேட கவனம் செலுத்தினீர்களா? இதன் ஞாபகார்த்தம் பழைய கணக்குகளை முடிப்பதாக இருப்பதனால், ஆத்மாக்களான நீங்கள் நிச்சயமாக அதை நடைமுறை வடிவில் செய்துள்ளீர்கள். அதனாலேயே இந்த ஞாபகார்த்தம் தொடர்கிறது. எனவே இந்த நாளில், இன்னமும் எஞ்சியுள்ள கடந்த காலத்தின் சிறிதளவு சம்ஸ்காரங்களின் கணக்கையும் முடித்தீர்களா? கணக்குகளை முடிப்பதற்கு முன்னர், நீங்கள் அவற்றைச் சோதித்து, பெறுபேற்றைப் பார்க்க வேண்டும். இந்த முறையில் நீங்கள் அனைவரும் உங்களின் பதிவேட்டைச் சோதித்துப் பார்த்தீர்களா? நீங்கள் எதைச் சோதிக்க வேண்டும்? இதுவரை நீங்கள் என்ன முயற்சி செய்திருந்தாலும், அதில் எத்தனை சதவீதம், மற்றும் எந்த விடயங்களில் நீங்கள் வெற்றி சொரூபம் ஆகினீர்கள்? அனைத்திற்கும் முதலில், உங்களின் மனதின் எண்ணங்களையும் உங்களின் பதிவேட்டையும் சோதித்துப் பாருங்கள்: முற்றிலும் மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருக்கும் எனது முயற்சியில் நான் எந்தளவிற்கு வெற்றி அடைந்துள்ளேன்? எனது வார்த்தைகளால் எந்த அளவிற்கு நான் தந்தையின் அறிமுகத்தை ஆத்மாக்களுக்கு வழங்கியுள்ளேன்? எத்தனை ஆத்மாக்களை என்னால் அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆக்க முடிந்தது? எனது வார்த்தைகளில் எந்தளவிற்கு ஆன்மீகம், தனித்தன்மை மற்றும் கவர்ச்சி இருந்தது? எனது செயல்களில், எந்தளவிற்கு என்னால் சதா அன்பாகவும் பற்றற்றவராகவும் அலௌகீகமாகவும் அசாதாரணமாகவும் இருக்க முடிந்தது? எனது செயல்களில், எந்தளவிற்கு நான் கர்மயோகியாக, யோகியுக்த், யுக்தியுக்த், சிநேகயுக்த் (அன்பினால் நிறைந்திருத்தல்) ஆக இருந்தேன்? எனது சம்ஸ்காரங்களிலும் எனது ரூபத்திலும், அதாவது எனது முகத்தில் எந்தளவிற்கு நான் தந்தையைப் போல் கவர்ச்சியாக, அன்பாக, ஒத்துழைப்பவராக இருந்தேன்? உங்களின் பதிவேட்டை இந்த முறையில் சோதிப்பதன் மூலம், உங்களால் இன்னமும் எஞ்சியுள்ள குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் எவற்றையும் முடித்து, புதிய கணக்கை ஆரம்பிக்க முடியும். இந்த முறையில் உங்களின் பதிவேட்டைச் சோதித்துப் பாருங்கள்.

இதுவே தீபாவளியைக் கொண்டாடுதல் எனப்படுகிறது. அதாவது, அதைக் கொண்டாடுதல் என்றால் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவதற்கான திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். எனவே, இந்த முறையில் நீங்கள் தீபாவளியைக் கொண்டாடினீர்களா அல்லது ஒரு சந்திப்பை மட்டும் கொண்டாடினீர்களா? ஒரு சந்திப்பைக் கொண்டாடுவதன் ஞாபகார்த்தம், ஒரு மாலையின் வடிவில் உள்ளது. ஆனால் திடசங்கற்பமான எண்ணத்தின் ஞாபகார்த்தம், ஏற்றிய தீபத்தின் வடிவில் உள்ளது. எனவே, இரண்டு வழிமுறைகளிலும் நீங்கள் கொண்டாடினீர்களா? நீங்கள் புதிய ஆடைகளை அணிந்து கொண்டீர்களா? எதன் அடிப்படையில் ஆத்மா புதிய ஆடையைப் பெறுகிறார்? ஒவ்வோர் ஆத்மாவும் தனது சம்ஸ்காரங்களின் அடிப்படையிலேயே அதைப் பெறுகிறார். ஒவ்வோர் ஆத்மாவின் ஆடையும் அவரின் சம்ஸ்காரங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் எந்தப் புதிய ஆடையை அணிந்து கொள்வீர்கள்? புதிய யுகத்தின் சம்ஸ்காரங்களைக் கிரகித்தல் அல்லது புதிய யுகத்தை ஸ்தாபனை செய்யும் தந்தையை ஒத்த சம்ஸ்காரங்களைக் கிரகித்தல் என்பதே புதியதோர் ஆடையை அணிந்து கொள்வதாகும். பௌதீகமாக நீங்கள் எத்தனை புதிய ஆடைகளை அணிந்தாலும் இந்தப் பழைய உலகின் புதிய விடயங்களும் புதிய உலகின் விடயங்களுடன் ஒப்பிடும்போது பழையவையே. ஏனென்றால், அவை அனைத்தும் முற்றிலும் சீரழிந்த நிலையை அடைந்து விட்டன. இதனாலேயே, நீங்கள் புதிய ஆடைகளை அணிந்தாலும் அதை உங்களால் புதியவை என்று அழைக்க முடியாது. சதோபிரதான் உலகில் மட்டுமே அனைத்தும் புதியவை. தமோபிரதான் உலகில் அனைத்தும் பழையவை. அவை உருசி அற்றவை. எனவே, நீங்கள் அவற்றைப் புதியவை என்று அழைப்பீர்களா? அதனால் புதிய ஆடைகள் என்றால், ஆத்மாவான உங்களுக்குள் புதிய சம்ஸ்காரங்களையும் மேன்மையான சம்ஸ்காரங்களையும் கிரகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வேறு எதனைச் செய்வீர்கள்? நீங்கள் புதிய சம்ஸ்காரங்களைக் கிரகித்திருக்கும்போது, உங்களின் பதிவேட்டை வைத்திருப்பதன் மூலம் அது மீண்டும் நிறம் ஊட்டப்படும். எனவே, உங்களின் பதிவேட்டைப் பேணுதல் என்றால் மீள வர்ணம் தீட்டுதல், அதாவது, சுத்தத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். நீங்கள் அனைத்திற்கும் மீண்டும் வர்ணத்தைத் தீட்டும்போது, இயல்பாகவே அழுக்கு, கிருமிகள் அனைத்தும் மறைந்துவிடும். எனவே, இந்த முறையில் நீங்கள் உங்களின் பதிவேட்டைச் சோதிக்கும்போது, உங்களின் பலவீனங்கள் அனைத்தும் இயல்பாகவே முடிவடைந்துவிடும். ஒருவரோடு ஒருவர் நீங்கள் என்ன இனிமையான வார்த்தைகளைப் பரிமாறுவீர்கள்? தீபாவளியின் போது, நீங்கள் ஒருவரோடு ஒருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வீர்கள். ஒருவரோடு ஒருவர் நீங்கள் என்ன விசேடமான பரிசைப் பகிர்ந்து கொள்வீர்கள்? ஒருவருக்கு ஒருவர் உங்களால் கொடுக்கக்கூடிய பரிசு என்ன? (அன்புப் பரிசு) நீங்கள் எப்போதும் ஒருவரோடு ஒருவர் அன்பாகவே இருக்கிறீர்கள். அல்லது இந்தத் தினத்தில் நீங்கள் விசேடமான அன்பைக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் அன்பானவர்கள். இந்த அன்பின் இன்னோர் அடையாளம், இந்த நெருக்கத்தின் இன்னோர் அடையாளம், தீபமாலை (தீபங்களின் மாலை) எனப்படுகிறது. விசேடமான தினங்களில் நீங்கள் என்ன விசேடமான பரிசை வழங்க வேண்டும்? இதுவரை உங்களின் முயற்சிகளினூடாக நீங்கள் பெற்றுள்ள இலகுவான வெற்றியை அல்லது இந்த ஞானத்தில் நீங்கள் அனுபவித்த இரத்தினங்களை குறிப்பாக ஒருவர் மற்றவருக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இலகுவாக அனுபவசாலி ஆகுவதுடன் மற்றவர்களையும் அனுபவசாலிகள் ஆக்க முடியும். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் தந்தையிடம் இருந்து பெற்ற இந்த ஞான இரத்தினங்களின் பொக்கிஷங்களை ஒருவர் மற்றவருக்கு வழங்க வேண்டும். உங்களின் சொந்த அனுபவத்தினூடாக அவற்றை நீங்கள் உங்களுக்குச் சொந்தமாக ஆக்கியிருப்பதுடன் ஆத்மாக்களையும் குறிப்பாக அதன் மூலம் அனுபவசாலி ஆக்குவீர்கள். இதுவே விசேடமான பரிசு. நீங்கள் ஒருவர் மற்றவருக்கு எல்லா வேளையும் ஞாபகார்த்தம் ஆகும்வகையில் ஒரு பரிசை வழங்க வேண்டும். நீங்கள் இத்தகைய இரத்தினங்களை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, அந்த ஆத்மாக்கள் நிச்சயமாக எப்போதும் நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த இரத்தினங்களையும் தந்தையையும் நினைவு செய்வார்கள். எனவே, நீங்கள் மற்றவர்களை எல்லா வேளையும் நிரம்பியவர்கள் ஆக்கும்வகையில் பரிசை வழங்க வேண்டும். இந்த முறையில் தீபாவளியைக் கொண்டாடுங்கள். ஆத்மாக்களுக்கு மேன்மையான சேவை செய்கின்ற மேன்மையான ஆத்மா ஆகுங்கள்.

இன்று, ஆத்மாக்கள் அனைவரும் செல்வத்திற்கான தாகத்தைக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய தாகமுள்ள ஆத்மாக்களுக்கு ஆன்மீகச் செல்வத்தைக் கொடுங்கள். அதன் மூலம் அவர்கள் ஒருபோதும் செல்வத்தைக் கேட்கக் கூடாது. யார் செல்வத்தை வேண்டுபவர்கள்? பிச்சைக்காரர்கள். இன்று, ஆத்மாக்கள் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களை இராஜரீகமான பிச்சைக்காரர்கள் என்று அழைக்க முடியும். ஓர் ஆத்மா எத்தனை கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்களே. இத்தகைய பிச்சைக்கார ஆத்மாக்களை பிச்சை எடுப்பதில் இருந்து விடுவியுங்கள். இது எல்லையற்ற சேவை. நீங்கள் அருள்பவரின் குழந்தைகள், அல்லவா? எனவே, அருள்பவரின் குழந்தைகள், ஆசீர்வாதங்களை அருள்பவரின் குழந்தைகளே, பிச்சைக்கார ஆத்மாக்களை உங்களின் ஆசீர்வாதங்களின் சக்தியாலும் இந்த ஞானத் தானத்தின் சக்தியாலும் செழிப்பானவர்கள் ஆக்குங்கள். இந்தத் தினத்தில், பாக்கியத்தை அருள்பவர், ஆசீர்வாதங்களை அருள்பவரின் குழந்தைகள், பிச்சைக்கார ஆத்மாக்களின் மீது கருணை கொள்ள வேண்டும். மற்றவர்களின் மீது கருணை கொண்டுள்ள இத்தகைய ஆத்மாக்களுக்கு மாயையும் உலகமும் தலைவணங்கும். இதனாலேயே இன்றும் அவர்கள் தீபங்களை ஏற்றி வைக்கிறார்கள். அவர்கள் ஒரு தீபத்தை ஏற்றி வைக்கும்போது, நிச்சயமாகத் தலைவணங்குவார்கள். எனவே இப்போதும், ஏற்றப்பட்ட தீபங்களாக இருக்கும் ஆத்மாக்களின் இந்த ஞாபகார்த்தம் அநாதியானது. அணைந்துவிட்ட தீபங்களை மக்கள் வணங்குவதில்லை. எனவே, எப்போதும் ஏற்றிய தீபமாக இருங்கள். பாப்தாதாவும் இத்தகைய ஆத்மாக்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். அச்சா.

மகாராஷ்டிரா பிராந்தியத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கான அவ்யக்த பாப்தாதாவின் மேன்மையான வாசகங்கள் - 20/03/2012 வழங்கப்பட்டது

இந்தப் பிராந்தியத்தின் எண்ணிக்கையும் பெரியதாக உள்ளது. பெயரே மகாராஷ்டிரா, எனவே அதுவும் மகத்துவமானது. அதன் பெயரைப் போல், எண்ணிக்கையும் பெரியதே. பம்பாயும் டெல்லியும் ஒரு விடயத்தில் ஊக்கமும் உற்சாகமும் கொண்டிருப்பதை பாப்தாதா பார்த்தார். நீங்கள் சேவை செய்கிறீர்கள். இதைப் பற்றி எதுவும் கூற வேண்டியதில்லை. நீங்கள் அதை நன்றாகச் செய்கிறீர்கள், தொடர்ந்தும் அதைச் செய்வீர்கள். எவ்வாறாயினும், டெல்லியும் பம்பாயும் உங்களுடன் தொடர்பிலும் உறவுமுறையிலும் உள்ள, மைக்குகள் ஆகக்கூடிய, பின்னர் வாரிசுகளாகவும் ஆகக்கூடிய, விசேடமான ஆத்மாக்களின் குழுவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று பாப்தாதா விரும்புகிறார். இத்தகைய குழுவைக் கண்டுபிடியுங்கள். ஏனென்றால், பல்வேறு துறைகளில் பெரும்பாலானோர் பாப்தாதாவிற்கு ஒரு பட்டியலை அனுப்பி உள்ளார்கள், பாபா அந்தப் பட்டியலைப் பார்த்துள்ளார். அந்தப் பட்டியலில், பாபாவின் பெயரைப் பெருமைப்படுத்தக் கூடிய நல்ல பெயர்கள் உள்ளன. இப்போது அவர்களை வெளிப்படுத்துங்கள். உங்களுக்குப் பதிலாக அவர்கள் சொற்பொழிவுகள் ஆற்றட்டும். உங்களின் ஞானம் என்னவென்று அவர்கள் தமது அனுபவத்தைப் பகிரட்டும். தமது வாழ்க்கைகளில் அது என்ன வேறுபாட்டை ஏற்படுத்தியது என்பதைப் பற்றி அவர்கள் பேச வேண்டும். நீங்கள் ஏதாவது விழா நடத்தும்போது, சிலர் மிக நல்ல அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அது விழாக்களில் அவர்கள் பகிர்ந்து கொள்வதே. எவ்வாறாயினும், அவர்கள் இதை எப்போதும் தமது வாழ்க்கைகளில் அனுபவம் செய்ய வேண்டும். நீங்கள் இதில் கவனம் செலுத்தினால், அவர்கள் வெளிப்படுவார்கள். ஏனென்றால், பாப்தாதா பார்த்த பட்டியலில் இத்தகைய தகுதிவாய்ந்த ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏதாவது முயற்சி செய்து, அவர்களை முன்னேற்ற வேண்டும். உண்மையில், ஒவ்வொரு பிரிவும் இந்தப் பட்டியலில் உள்ள மக்களைக் குடும்பத்திற்கும் தந்தைக்குக்கும் முன்னால் கொண்டு வரவேண்டும். பிரிவுகள் (விங்ஸ்) இந்தப் பணியைச் செய்துள்ளன. நீங்கள் இந்தப் பணியைச் செய்திருப்பதை பாப்தாதா பார்த்தார். எனினும் நீங்கள் இதை நீண்ட காலமாகச் செய்கிறீர்கள். எனவே இப்போது ஏதாவது புதுமையைக் கொண்டு வாருங்கள். நீங்கள் வாரிசுகளை உருவாக்குவதே அந்தப் புதுமையாகும். குறைந்தபட்சம், உங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், உங்களுடன் உறவுமுறையில் வரவேண்டும். உறவுமுறையைக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் சேவை செய்வதில் ஈடுபட வேண்டும். வருவதும் போவதும் என்ற உறவுமுறை அல்ல. ஆனால் அவர்கள் தந்தை மற்றும் குடும்பத்தின் சகபாடிகள் ஆக வேண்டும். இதுவும் நடக்க வேண்டும். பிராமணர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் எண்ணத்தைக் கொண்டிருக்கும் போது அது ஏற்கனவே நிறைவேறி விடுகிறது என்பதை பாப்தாதா பார்த்துள்ளார். எவ்வாறாயினும், அனைவரும் ஒரே எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், சூழல் இப்போது மாறிவிட்டது. இத்தகைய மைக் தரமுள்ள குழந்தைகளின் ஒன்றுகூடல் இருக்க வேண்டும் என்றே பாப்தாதா விரும்புகிறார். அவர்கள் மதுவனத்திற்கு பாபாவைச் சந்திக்க வரும்போது, அது வேறுவிடயம். ஆனால் இப்போது அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ஆகவேண்டும். ஏனென்றால், சேவையில் ஏதாவது புதுமை தேவைப்படுகிறது. அச்சா.

இன்னமும் பூர்த்தியாக வேண்டிய இன்னுமொர் ஆசை பாப்தாதாவிற்கு உள்ளது. இது பிராந்தியங்களுக்கானது. அது என்ன? ஒவ்வொரு நிலையமும் தமது நிலையம் தடைகளில் இருந்து விடுபட்டுள்ளது, அதாவது, அது ஒத்திசைவாக உள்ளது என்ற நல்ல செய்தியைக் கொடுக்க வேண்டும். பாபாவின் குழந்தைகள் அனைவரும் மிகச்சரியாக இருக்கிறார்கள், சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள், தடைகளில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்ற செய்திகள் இன்னமும் எந்தவொரு பிராந்தியத்தில் இருந்தும் வரவில்லை. எனவே, மகாராஷ்டிரா மகத்தான பணியைச் செய்யும், அல்லவா? இன்னமும் எந்தவொரு பிராந்தியமும் இந்த நல்ல செய்திகளை அனுப்பவில்லை. நீங்கள் அவ்வாறு ஆகவேண்டும். நீங்கள் அப்படி ஆகவேண்டும், உங்களைத் தவிர வேறு யார் அப்படி ஆகப் போகிறார்கள்? உங்களின் தபஸ்யா எதிலும் குறைந்ததல்ல. ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ, உலகிலுள்ள மக்களைப் பொறுத்தவரை, நீங்கள் ஒவ்வொருவரும் மகாத்மாவே. இப்போது பாருங்கள்: தடைகளில் இருந்து சிறிது விடுபடுங்கள். அனைவரும் உங்களை உங்களின் உயிரற்ற விக்கிரகங்களைப் பார்ப்பதைப் போல் - தூய உணர்வுகளுடனும் உயிர்வாழும் தேவியர்கள், தேவர்களின் ரூபத்தில் பார்ப்பார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மிக நல்ல சேவை செய்துள்ளீர்கள். அதற்காக பாப்தாதா உங்களைப் பாராட்டுகிறார்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தெய்வீகக் குணங்களை வெளிப்படச் செய்து, பலவீனங்கள் அனைத்தையும் முடித்து, அதன் மூலம் தெய்வீகக் குணங்கள் உடையவர் ஆகுவீர்களாக.

எவ்வாறு தீபாவளி தினத்தில் ஸ்ரீலக்ஷ்மி அழைக்கப்படுகிறாரோ, அவ்வாறே, குழந்தைகளான நீங்கள் உங்களுக்குள் தெய்வீகக் குணங்களை வரவழைத்து, பலவீனங்களை முடிக்க வேண்டும். அப்போது நீங்கள் புதிய சம்ஸ்காரங்களின் வடிவில் புதிய ஆடைகளை அணிவீர்கள். பழைய ஆடைகளின் மீது சிறிதளவு விருப்பமும் இனிமேலும் இருக்கக் கூடாது. எஞ்சியிருக்கும் பலவீனங்கள், குறைபாடுகள், சக்திக் குறைவு அல்லது பலமற்ற சுபாவம் எதுவாயினும் இன்று அந்தப் பழைய கணக்குகளை எல்லா நேரத்திற்குமாக முடித்து, தெய்வீகக் குணங்கள் கொண்டவர் ஆகுங்கள். அப்போது எதிர்காலத்தில் முடிசூட்டு விழா இடம்பெறும். அதன் ஞாபகார்த்தமே தீபாவளி.

சுலோகம்:
சுய இராச்சிய அதிகாரி ஆகுவதற்கு, உங்களின் ஆலோசகரான மனதை உங்களுடன் ஒத்துழைக்கச் செய்யுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

நீங்கள் பிந்து (புள்ளி) மற்றும் சிந்து (கடல்) என்ற இரண்டு வார்த்தைகளை நினைப்பீர்களாயின், உங்களால் இலகுவாக முழுமை அடைய முடியும். ஒரு புள்ளியானவரை நினைத்து, நிலையான ஸ்திதியைக் கொண்டிருங்கள். ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, ஒரேயொருவரின் பணியில் உதவியாளர் ஆகுங்கள். புள்ளியானவரும் ஒரேயொருவரும் என்பது மட்டுமே இருக்க வேண்டும். அதன்பின்னர் எந்தவித விரிவாக்கத்திற்குள்ளும் செல்ல வேண்டியதில்லை. நீங்கள் விரிவாக்கத்திற்குள் செல்ல விரும்பினால், அது சேவைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் உங்களின் புத்தியைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.