09.04.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மேலும் விளங்கப்படுத்துவதற்கு முன்னர், ஒவ்வொருவரின் நாடியையும் சோதித்து அவர்களை அல்ஃபாவில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள். அவர்கள் அல்ஃபாவில் நம்பிக்கை கொள்ளும் வரை, அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பது, உங்;கள் நேரத்தை வீணாக்குவதாகும்.

கேள்வி:
எந்தப் பிரதான முயற்சி உங்களை ஒரு புலமைப்பரிசிலைப் பெறச் செய்கின்றது?

பதில்:
அகநோக்கில் இருக்கும் முயற்சியாகும். நீங்கள் மிகவும் அகநோக்காக இருக்க வேண்டும். தந்தையே நன்மையளிப்பவர், அவர் உங்களின் சொந்த நன்மைக்காகவே உங்களுக்கு அறிவுரை வழங்குகிறார். அகநோக்காக இருக்கின்ற யோகிக் குழந்தைகள் ஒருபோதும் சரீர உணர்வுடையவர் ஆகுவதோ, அல்லது ஒருவருடன் ஒருவர் முகங்கோணுவதோ அல்லது சண்டையிடவோ மாட்டார்கள். அவர்களுடைய நடத்தை மிகவும் இராஜரீகமாகவும், கௌரவமாகவும் இருக்கும். அவர்கள் மிகவும் குறைவாகப் பேசுவதுடன், யக்கியத்திற்குச் சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் அதிகளவு ஞானத்தைப் பேசாவிட்டாலும், யோகத்தில் நிலைத்திருந்தவாறே சேவை செய்கின்றார்கள்.

ஓம் சாந்தி.
பொதுவாகவும், குறிப்பாகக் கண்காட்சிச் சேவைச் செய்திகள் வரும்பொழுதும் காணப்படுகின்ற விடயம் என்னவென்றால், தந்தையை மக்கள் இனங்கண்டு கொள்ளுதல் என்ற பிரதான விடயத்தில் அவர்களுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படும்வரை, நீங்கள் விளங்கப்படுத்தும் வேறு எதையும் புரிந்துகொள்வது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும் என்பதே ஆகும். இது மிக நல்லது என அவர்கள் தொடர்ந்தும் கூறுகின்ற போதிலும், அவர்கள் தந்தையை இனங்கண்டு கொள்வதில்லை. முதலில் தந்தை இனங்கண்டு கொள்ளப்பட வேண்டும். தந்தையின் மேன்மையான வாசகங்களாவன: என்னை நினைவு செய்யுங்கள்! நான் மாத்திரமே தூய்மையாக்குபவர். என்னை நினைவு செய்வதனால், நீங்கள் தூய்மை அற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். இதுவே பிரதான விடயம். ஒரேயொரு கடவுளே உள்ளார், அவரே தூய்மையாக்குபவரும், ஞானக்கடலும், சந்தோஷக்கடலும், அதிமேன்மையானவரும் ஆவார். இந்த நம்பிக்கை அவர்களுக்குள் பதியும்போது, பக்தி மார்க்கத்தின் வேதங்கள், பகவத்கீதை, சமயநூல்கள் அனைத்தும் பொய்யானவை என அவர்கள் புரிந்து கொள்வார்கள். கடவுளே கூறுகின்றார்: நான் ஒருபோதும் அந்தச் சமயநூல்களைப் பேசியதில்லை. நான் கொடுக்கின்ற இந்த ஞானம் சமயநூல்களில் இல்லை. அது பக்திமார்க்கத்துக்கான ஞானம். நான் வந்து உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுத்து, சற்கதியை அளித்து, பின்னர் வீட்டிற்குத் திரும்புகின்றேன். இந்த ஞானம் பின்னர் மறைந்து விடுகின்றது. இந்த ஞானத்தின் மூலமான உங்களுடைய வெகுமதி முடிவடைகின்ற போது, பக்தி மார்க்கம் ஆரம்பம் ஆகுகின்றது. அவர்கள் தந்தை மீது நம்பிக்கை வைக்கும் போது மாத்திரமே, கடவுளின் வாசகங்களையும், அச் சமயநூல்கள் அனைத்தும் பக்திமார்க்கத்திற்கு உரியவை என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இந்த ஞானமும், அந்த பக்தியும் ஒவ்வொன்றும் அரைக் கல்பத்திற்கு நீடிக்கின்றன. கடவுள் வருகின்ற பொழுது, அவருடைய சொந்த அறிமுகத்தை அவரே கொடுக்கின்றார். ஒவ்வொரு கல்பத்தின் ஆயுட்காலமும் 5000 வருடங்கள் என நான் உங்களுக்குக் கூறுகின்றேன். நான் பிரம்மாவின் வாய் மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். ஆகையினால் கடவுள் யார் என அவர்களின் புத்தியில் பதியச் செய்வதே, முதலாவதும், பிரதானமானதுமான விடயம் ஆகும். இவ் விடயம் அவர்கள் புத்தியில் பதியும் வரை, நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தும் மற்றைய விடயங்களால் எந்தத் தாக்கமும் இருக்காது. முயற்சிகள் எல்லாம் இதில் மாத்திரமே தங்கியுள்ளது. தந்தை உங்களை இடுகாட்டிலிருந்து விழித்தெழச் செய்வதற்கு வருகின்றார். சமயநூல்களைப் படிப்பதனால் நீங்கள் விழித்தெழ மாட்டீர்கள். பரமாத்மா ஒளிரூபமானவர். ஆகையினால் அவரது குழந்தைகளும் ஒளிரூபமானவர்களே. எவ்வாறாயினும் குழந்தைகளான ஆத்மாக்களான நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இதன் காரணமாகவே உங்கள் வெளிச்சம் மங்கி விட்டது. நீங்கள் தமோபிரதான் ஆகியுள்ளீர்கள். நீங்கள் எல்லாவற்றுக்கும் முதல், தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்காது விட்டால், நீங்கள் செய்யும் சகல முயற்சிகளிலோ, நீங்கள் மக்களிடம் அவர்களின் அபிப்பிராயங்களை எழுதுங்கள் எனக் கேட்பதிலோ எந்தவிதப் பலனும் இல்லை. இதனாலேயே சேவை இடம்பெறுவதில்லை. அவர்கள் நம்பிக்கை வைத்தால், இந்த ஞானம் உண்மையில் பிரம்மாவின் மூலம் கொடுக்கப்படுகின்றது எனப் புரிந்து கொண்டிருப்பார்கள். மக்கள் தந்தையை இனங்கண்டு கொள்ளாததால் அவர்கள் பிரம்மாவைக் காணும் போது மிகுந்த குழப்பம் அடைகின்றார்கள். இப்பொழுது பக்தி மார்க்கம் கடந்துவிட்டது என உங்கள் அனைவருக்கும் தெரியும். கலியுகத்தில் இருப்பது பக்தி மார்க்கம். சங்கமயுகத்தில் இருப்பது இந்த ஞான மார்க்கம். நாங்கள் அனைவரும் சங்கமயுகத்துக்கு உரியவர்கள், நாங்கள் இராஜயோகம் கற்கின்றோம். நாங்கள் புதிய உலகிற்காகத் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கின்றோம். சங்கமயுகத்தில் இல்லாதவர்கள் நாளுக்கு நாள், மேலும் மேலும் தமோபிரதான் ஆகுகின்றார்கள். அந்தப்பக்கத்தில், அவர்களுடைய தமோபிரதான் ஸ்திதி அதிகரிக்கின்றது. இந்தப்பக்கத்தில் உங்கள் சங்கமயுகம் முடிவிற்கு வருகின்றது. இவை புரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள். இவ்விடயங்களை விளங்கப்படுத்துபவர்களும், அவர்கள் எப்படி விளங்கப்படுத்துகின்றார்கள் என்பதில் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். பாபா தினமும் உங்களை முயற்சி செய்யத் தூண்டுகின்றார். புத்தியில் நம்பிக்கை உடையவர்களே, வெற்றி அடைகிறார்கள். சில குழந்தைகளுக்கு தங்களின் சொந்த விடயங்களைப் பேசுகின்ற பழக்கம் மிகவும் வலிமையாக உள்ளது. அவர்கள் தந்தையை நினைவு செய்வதில்லை. அவர்களுக்கு பாபாவை நினைவு செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. அவர்கள் தந்தையை நினைவு செய்வதை நிறுத்திவிட்டு, தொடர்ந்தும் தங்கள் சொந்த விடயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்களில் தந்தை மீதான நம்பிக்கையைப் பதியச்செய்யும் வரை, நீங்கள் வேறு எந்தப் படங்களையும் விளங்கப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால், அவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அல்ஃபாவில் நம்பிக்கை இல்லாவிட்டால், பீற்றா போன்றவற்றுக்குச் செல்வது நேரத்தை வீணாக்குவதாகும். நீங்கள் எவரது நாடியையும் பிடித்துப் பார்ப்பதில்லை. அனைத்துக்கும் முதலில், திறப்புவிழாவை நடாத்துவதற்கு வருபவர்களுக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்: இவரே ஞானக்கடலான, அதிமேலான தந்தை ஆவார். இந்த நேரத்தில் மாத்திரமே, தந்தை உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். சத்தியயுகத்தில், இந்த ஞானத்திற்கான தேவை இல்லை. பின்னர் பக்தி ஆரம்பம் ஆகுகின்றது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னை அவதூறு செய்யும் நேரம் முடிவடையும் போதே நான் வருகிறேன். அரைக்கல்பமாக நீங்கள் என்னை அவதூறு செய்ய நேரிடுகிறது. நீங்கள் வழிபட்ட எவருடைய தொழிலையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுடன் அமர்ந்திருந்து, அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், நீங்களே தந்தையுடன் யோகம் செய்யாது விட்டால், நீங்கள் மற்றவர்களுக்கு எதை விளங்கப்படுத்துவீர்கள்? நீங்கள் “சிவபாபா” என்று கூறிய போதிலும், நீங்கள் யோகம் எதையும் செய்யா விட்டால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதில்லை. உங்களால் எதையுமே கிரகிக்கவும் முடியாமல் இருக்கும். ஒரேயொரு தந்தையை நினைவு செய்வதே பிரதான விடயமாகும். குழந்தைகளாகிய நீங்கள் ஞானம் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் யோகி ஆகாதுவிட்டால், சரீர உணர்வின் சுவடு நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும். யோகத்தில் இருக்காமல், மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதில் எந்த விதப் பயனும் இல்லை. பின்னர் நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகியதால், நீங்கள் எவருக்காவது துன்பத்தைக் கொடுக்கிறீர்கள். சில குழந்தைகள் நல்ல சொற்பொழிவுகளை ஆற்றுவதனால் தாங்கள் மிகவும் ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் என அவர்கள் நம்புகின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அவர்கள் மிகவும் ஞானம் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் யோகத்தில் பின்தங்கியுள்ளார்கள். அவர்கள் யோகத்தில் இருப்பதற்கு மிகச் சிறிதளவு முயற்சியே செய்கின்றார்கள். தந்தை உங்களின் அட்டவணையை வைத்திருக்குமாறு அதிகளவு கூறுகின்றார். பிரதான விடயம் யோகமாகும். சில குழந்தைகள் இந்த ஞானத்தை விளங்கப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார்கள், ஆனால் அவர்களிடம் யோகம் இல்லை. அவர்கள் யோகம் செய்யாததால், அவர்களின் பாவங்களும் அழிவதில்லை. பின்னர் அவர்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள்? பல குழந்தைகள் யோகம் என்ற பாடத்தில் தோல்வி அடைகிறார்கள். தாங்கள் நூறு சதவீதம் யோகத்தைக் கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கின்றார்கள், ஆனால் பாபா கூறுகின்றார்: அவர்கள் இரண்டு சதவீதம் மாத்திரமே யோகம் செய்கின்றார்கள். பாபாவே கூறுகின்றார்: நான் உணவருந்த ஆரம்பிக்கும் போது நினைவில் இருக்கின்றேன், ஆனால் பின்னர் மறந்து விடுகின்றேன். நான் குளிக்கும்போதும் பாபாவை நினைவு செய்கின்றேன். நான் அவரின் குழந்தையாக இருந்த போதிலும், அவரை நினைவுசெய்ய மறந்து விடுகின்றேன். இவர் முதல் இலக்கத்தை கோர இருக்கின்றார் என்றும், அதனால், அவர் இந்த ஞானத்திலும் யோகத்திலும் நிச்சயமாக மிகச்சரியாக இருக்கவேண்டும் என்றும் நீங்கள் நினைக்கின்றீர்கள். இருப்பினும், பாபா கூறுகின்றார்: யோகம் செய்வதற்கு மிகப்பெருமளவு முயற்சி தேவை. அதை முயற்சி செய்து பாருங்கள். பின்னர் உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள். உதாரணமாக, நீங்கள் ஆடைகளைத் தைக்கின்ற தையல்காரராக இருந்தால், நீங்கள் பாபாவின் நினைவில் இருக்கின்றீர்களா என உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்கவேண்டும். பாபா எங்களுடைய மிக இனிமையான அன்பிற்கினியவர். நாங்கள் எந்தளவிற்கு அவரை நினைவு செய்கின்றோமோ, அதற்கேற்ப எங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, நாங்கள் சதோபிரதான் ஆகுவோம். எவ்வளவு நேரம் நீங்கள் நினைவில் நிலைத்திருந்தீர்கள் என சோதித்துப் பாருங்கள். பெறுபேறுகளை பாபாவுக்குக் காட்டுங்கள். நினைவில் நிலைத்திருப்பதனால் மாத்திரமே நன்மை இருக்கும். எவ்வாறாயினும், நீங்கள் ஒரேநேரத்தில் அதிகளவை விளங்கப்படுத்தினால், அதில் எந்தவித நன்மையும் ஏற்படாது. அவர்கள் எதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் அல்ஃபாவைப் புரிந்து கொள்ளும் வரை எப்படி ஏதாவது நிகழ முடியும்? அவர்களுக்கு அல்ஃபாவான ஒரேயொருவரை கூடத்தெரியாது. அனைத்துப் பூச்சியங்களும் அவர்களுக்குப் பூச்சியங்களாகவே இருக்கும். அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. அல்பாவுடன் பூச்சியங்களைச் சேர்ப்பதால், நன்மை ஏற்படுகின்றது. யோகம் இல்லையானால், நாள் முழுவதும் நேரம் வீணாக்கப்படுகின்றது. தந்தை கருணை கொண்டு, அவர்கள் என்ன அந்தஸ்தைக் கோருவார்கள் என ஆச்சரியம் அடைகின்றார். இது ஒருவரது பாக்கியத்தில் இல்லையெனில் தந்தையால் என்ன செய்யமுடியும்? தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். தந்தையின் நினைவில் இருங்கள். நினைவே அதி முக்கியமானது. நினைவைக் கொண்டிருப்பதனால், நீங்கள் அன்பை வளர்த்துக் கொள்வீர்கள், அப்பொழுது மாத்திரமே உங்களால் ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியும். பல பிரஜைகளும் உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கே இலக்ஷ்மி அல்லது நாராயணன் ஆகுவதற்கே வந்துள்ளீர்கள். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்கின்ற போதிலும் உங்களில் சிலர் தண்டனையை அனுபவம் செய்து இறுதியில் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். குழந்தைகளாகிய உங்கள் அனைவரையும் பாபாவுக்குத் தெரியும். யோகத்தில் பலவீனமாக இருக்கின்ற குழந்தைகள் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் முகம்கோணித் தொடர்ந்தும் சண்டை இடுகின்றார்கள். உறுதியான யோகிகளின் செயல்களும் நடத்தையும் மிகவும் இராஜரீகமாகவும், நன்றாகவும் இருக்கின்றன. அவர்கள் மிகக்குறைவாகவே பேசுகின்றார்கள். அவர்கள் யக்ஞத்திற்குச் சேவை செய்வதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றார்கள். சிலர் தங்களுடைய எலும்புகளைக் கூட யக்யத்தின் சேவைக்கு அர்ப்பணிப்பதற்குத் தயங்காதவர்களாக இருக்கின்றார்கள். எவ்வாறாயினும் பாபா கூறுகின்றார்: நீண்டநேரம் நினைவிலே நிலைத்திருங்கள். இதன்மூலம் நீங்கள் தந்தையின் மீது அன்பை வளர்த்துக் கொள்வதுடன், சந்தோஷத்தையும் அனுபவம் செய்வீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் பாரத தேசத்தில் வருகின்றேன். நான் பாரத மக்களை ஈடேற்றுவதற்கு வருகிறேன். சத்தியயுகத்தில் நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் சத்கதி நிலையில் இருந்தீர்கள். பின்னர் யார் உங்களைச் சீரழிவுக்கு இட்டுச் சென்றார்கள்? இராவணன். எப்போது அது ஆரம்பமாகியது? (துவாபரயுகத்தில்) நீங்கள் ஒரு விநாடியில் அரைக்கல்பத்திற்கான சத்கதியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உங்கள் ஆஸ்தியை 21 பிறவிகளுக்குக் கோருகின்றீர்கள். ஆகையினால் ஒரு நல்லவர் எப்பொழுது வந்தாலும், முதலில் அவருக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இந்த ஞானத்தைக் கற்பதால் மாத்திரமே சத்கதியைப் பெறமுடியும். நாடகம் விநாடிக்கு விநாடி நடிக்கப்படுகின்றது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதை நீங்கள் புத்தியில் வைத்திருந்தாலே, உங்களால் மிகவும் ஸ்திரமானவர்களாக இருக்க முடியும். இங்கே அமர்ந்திருக்கும் போது, எவ்வாறு உலகச் சக்கரம் ஒரு பேனைப் நகர்ந்து செல்கின்றது என்றும் அது எவ்வாறு தொடர்ந்தும் விநாடிக்கு விநாடி நகர்ந்து செல்கின்றது என்றும் உங்கள் புத்தி புரிந்துகொள்ள வேண்டும். நாடகத்திற்கு ஏற்பவே முழுப்பாகமும் நடிக்கப்படுகின்றது. ஒரு விநாடி கடந்து செல்லும் பொழுது, அது முடிவடைகின்றது. படச்சுருள் தொடர்ந்தும் சுற்றுகின்றது, அது மிக மெதுவாக சுற்றுகின்றது. இது ஓர் எல்லையற்ற நாடகம். முதியவர்களால் இந்த விடயங்களை அவர்களது புத்தியில் வைத்திருக்க முடியாது. அவர்களின் புத்தியில் இந்த ஞானம் இருக்க மாட்டாது. அவர்கள் யோகத்தையும் கொண்டிருப்பதில்லை. இருப்பினும், அவர்கள் இன்னமும் பாபாவின் குழந்தைகளே. ஆம், சேவை செய்பவர்கள், ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். ஏனைய அனைவரும் குறைந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். இந்த எல்லையற்ற நாடகமும், சக்கரமும் எவ்வாறு தொடர்ந்தும் சுழல்கின்றன என்பதை உங்கள் விழிப்புணர்வில் உறுதியாக வைத்திருங்கள். இசைத்தட்டு தொடர்ந்தும் எவ்வாறு சுழல்கின்றதோ, அவ்வாறே, ஆத்மாக்களாகிய நாங்களும் ஒரு பதிவுநாடா போன்று பதிவுசெய்யப்பட்டுளோம். இவ்வளவு சின்னஞ்சிறிய ஆத்மா அத்தகைய பெரிய பாகத்தைக் கொண்டுள்ளார். இதுவே ஓர் அற்புதம் என அழைக்கப்படுகின்றது. எதுவுமே புலப்பட மாட்டாது. இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மேலோட்டமான புத்தியைக் கொண்டவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. நேரம் கடந்து செல்கின்ற பொழுது நாங்கள் கூறுபவை அனைத்தும் 5000 வருடங்களின் பின்னர் மீண்டும் இடம்பெறும். வேறு எவருக்கும் இந்தப் புரிந்துணர்வு இல்லை. மகாராத்திகளாகிய நீங்கள் இவ் விடயங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து, அவற்றை மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். இதனாலேயே பாபா கூறுகின்றார்: முதலில் தந்தையை நினைவு செய்வதற்கு ஒரு முடிச்சை இடுங்கள். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்பவேண்டும். உங்கள் சரீர உறவுமுறைகள் அனைத்தையும் துறந்து விடுங்கள். எந்தளவு சாத்தியமோ, அந்தளவிற்குத் தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். இந்த முயற்சி மறைமுகமானது. பாபா அறிவுரை கூறுகின்றார்: அவர்களுக்குத் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். நீங்கள் பாபாவை மிகச்சிறிதளவே நினைவு செய்கின்றபோது, உங்களால் பாபாவின் அறிமுகத்தையும் மிகக் குறைவாகவே கொடுக்கமுடியும். முதலில் அவர்களின் புத்தியில் தந்தையின் அறிமுகம் பதியுமாறு செய்யுங்கள். இப்பொழுது அவர் உண்மையிலேயே எங்களது தந்தை என எழுதுமாறு அவர்களிடம் கூறுங்கள். சரீரம் உட்பட, ஏனைய அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாக முடியும். முக்தி தாமத்திலும், ஜீவன்முக்தி தாமத்திலும் எந்த விதமான வலியோ அல்லது துன்பமோ இருக்கமாட்டாது. நாளுக்கு நாள், உங்களுக்கு மிக நல்ல விடயங்கள் விளங்கப்படுத்தப்படுகின்றன. இவ்விடயங்களை மாத்திரமே நீங்கள் உங்கள் மத்தியில் பேசவேண்டும். நீங்கள் தகுதியானவராகவும் ஆகவேண்டும். பிராமணர்களாகிய பின்னர் நீங்கள் தந்தையின் ஆன்மீகச் சேவையைச் செய்யாதுவிட்டால் உங்களால் என்ன பயன்? நீங்கள் இந்தக் கல்வியை மிக நன்றாகக் கிரகிக்கவேண்டும். உங்களில் பலர் ஒரு வார்த்தையைக் கூட கிரகிப்பதில்லை என பாபாவுக்குத் தெரியும். அவர்கள் தந்தையை மிகச்சரியாக நினைவு செய்வதில்லை. ஓர் அரசர் அல்லது அரசியின் அந்தஸ்தைப் பெறுவதற்கு முயற்சி தேவை. முயற்சி செய்பவர்கள், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள். நீங்கள் முயற்சி செய்யும் பொழுது மாத்திரமே உங்களால் அரச குடும்பத்திற்குள் பிரவேசிக்க முடியும். முதல் இலக்கத்தவர்கள் மாத்திரமே புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொள்வார்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் புலமைப்பரிசிலைப் பெற்றார்கள். பின்னர் அது வரிசைக்கிரமமானது. இது மிக முக்கியமான பரீட்சை. ஒரு புலமைப்பரிசிலைப் பெற்றவர்களாலேயே மாலை உருவாக்கப்பட்டுள்ளது. எட்டு இரத்தினங்கள் இருக்கின்றன. எட்டு மணிகளும், பின்னர் நூறு மணிகளும், அதன்பின்னர் பதினாறாயிரம் மணிகளும் இருக்கின்றன. ஆகையால் மணிமாலையில் கோர்க்கப்படுவதற்கு நீங்கள் அதிகளவு முயற்சியைச் செய்யவேண்டும். அகநோக்கில் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் புலமைப்பரிசிற்கான உரிமையை வெற்றி கொள்வீர்கள். நீங்கள் மிகவும் அகநோக்காக இருக்கவேண்டும். தந்தையே நன்மை செய்பவர். அவர் உங்களுடைய சொந்த நன்மைக்காகவே அறிவுரை வழங்குகின்றார். முழு உலகிலும் உள்ள அனைவருக்குமே நன்மை ஏற்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும், அது வரிசைக்கிரமமானது. நீங்கள் தந்தையிடம் கற்பதற்காக வந்துள்ளீர்கள். உங்கள் மத்தியிலும் கல்வியிலே கவனம் செலுத்துபவர்களே நல்ல மாணவர்கள். சிலர் முற்றிலும் கவனம் செலுத்துவதில்லை. பலர் தங்கள் பாக்கியத்தில் என்ன உள்ளதோ, அதைப் பெறுவோம் என எண்ணுகின்றார்கள். அவர்களுக்குக் கல்வியில் எந்த இலக்கும் இல்லை. ஆகையால் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் நினைவு அட்டவணையை வைத்திருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் இந்த ஞானத்தை இங்கே விட்டுச் செல்வீர்கள். இந்த ஞானத்தின் பாகம் முடிவடைய உள்ளது. ஆத்மா மிகவும் சின்னஞ்சிறியவர். இருந்தும் அவருக்கு நடிப்பதற்கு மிகப்பெரிய பாகம் உள்ளது. இது ஓர் அற்புதமே. இந்த நாடகம் அநாதியானது. அகநோக்கு உடையவராகி, இவ்வாறாகத் தொடர்ந்தும் உங்களுடன் பேசுங்கள். பின்னர் தந்தை வந்து, ஆத்மா ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை போன்ற விடயங்களை எவ்வாறு உங்களுக்குக் கூறுகின்றார் என நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். நாடகத்தில் ஒவ்வொரு மனிதருக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பாகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது முடிவற்றது என அழைக்கப்படுவதில்லை. அது முடிவை அடைகின்றது, ஆனால் அது அநாதியானது. பல்வேறு விடயங்கள் இருக்கின்றன. இது ஓர் அற்புதம் என அழைக்கப்படுகின்றது. இதனைக் கடவுளின் அற்புதம் என அழைக்க முடியாது. அவர் கூறுகின்றார்: நானும் இதில் என்னுடைய பாகத்தை நடிக்க வேண்டியுள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. யோகம் செய்வதற்குப் பெருமளவு முயற்சி தேவை. செயல்களைச் செய்கின்ற போதும் எவ்வளவு நேரம் தந்தையின் நினைவில் நீங்கள் நிலைத்திருக்கின்றீர்கள் என முயற்சி செய்து பாருங்கள். அவருடைய நினைவில் நிலைத்திருப்பதனால் மாத்திரமே, நன்மை இருக்க முடியும். இனிய, அன்பிற்கினியவரைப் பெருமளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். உங்கள் நினைவு அட்டவணையை வைத்திருங்கள்.

2. இந்த நாடகத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்வதற்கு, உங்களுக்கு ஒரு துல்லியமான புத்தி தேவை. இந்த நாடகம் மிகவும் நன்மையளிப்பது. இப்பொழுது நாம் பேசுவது அல்லது செய்வது அனைத்தையும் 5000 வருடங்களுக்குப் பின்னரும் மீண்டும் நாங்கள் செய்வோம். இதை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு சந்தோஷமாக இருங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மாயையால் தாக்கப்படாதவராகி, உங்களின் மேன்மையான வாழ்க்கையில் இறை ஞானத்தின் நடைமுறை அத்தாட்சியைக் காட்டுவீர்களாக.

உங்களை நடைமுறை உதாரணமாகவும் இறை ஞானத்தின் அத்தாட்சியாகவும் கருதுவதன் மூலம், நீங்கள் மாயையால் தாக்கப்படாதவர் ஆகுவீர்கள். உங்களின் மேன்மையான, தூய வாழ்க்கையிலேயே நடைமுறை அத்தாட்சி உள்ளது. இல்லறத்தில் வாழும்போதும் அப்பாற்பட்ட மனப்பாங்கைக் கொண்டிருப்பதும் பௌதீக உலகின் சரீரங்களினதும் உறவுகளினதும் விழிப்புணர்விற்கு அப்பாற்பட்டு இருப்பதும் அசாத்தியமானதைச் சாத்தியம் ஆக்கும் மிகப்பெரிய விடயமாகும். உங்களின் பழைய உடலில் உள்ள கண்கள், பழைய உலகின் விடயங்களைப் பார்த்தும் பார்க்காமல் இருந்தால், நீங்கள் முழுமையான தூய்மை வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இதுவே இறைவனை வெளிப்படுத்தி, மாயையால் தாக்கப்படாதவராக இருப்பதற்கான இலகுவான வழிமுறை ஆகும்.

சுலோகம்:
உங்களின் எச்சரிக்கையான காவலர்கள் நன்றாக வேலை செய்யும்போது, உங்களால் உங்களின் அதீந்திரிய பொக்கிஷத்தை இழக்க முடியாது.

அவ்யக்த சமிக்கை: ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வுடன் சதா வெற்றி பெறுபவர் ஆகுங்கள்.

நீங்கள் தந்தையை உங்களின் சகபாடி ஆக்கியுள்ளீர்கள். எனவே, இப்போது அவரை ஒன்றிணைந்த ரூபத்தில் அனுபவம் செய்யுங்கள். இந்த அனுபவத்தை உங்களின் விழிப்புணர்வில் மீண்டும் மீண்டும் கொண்டு வரும் வேளையில், நினைவின் சொரூபம் ஆகுங்கள். நீங்கள் ஒன்றிணைந்திருப்பதையும் அப்பால் விலகவில்லையே என்பதையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பாருங்கள். உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தின் அனுபவத்தை எந்தளவிற்கு நீங்கள் அதிகரிக்கிறீர்களோ, அந்தளவிற்கு பிராமண வாழ்க்கை மிகவும் அழகாகவும் சுவாரசியமாகவும் இருப்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள்.