10.07.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் மாத்திரம் இறை சமுதாயத்தினர் என அழைக்கப்படுகின்றார்கள்.
கேள்வி:
எவ்வாறு குழந்தைகளாகிய உங்களின் ஆன்மீக ஒன்றுகூடல், ஏனைய அனைத்து ஆன்மீக ஒன்றுகூடல்களிலும் இருந்தும் வேறுபட்டது?பதில்:
இது மாத்திரமே நீங்கள் ஆத்மாவையும், பரமாத்மாவையும் பற்றிய ஞானத்தைச் செவிமடுக்கின்ற, ஆன்மீக ஒன்றுகூடல் ஆகும். உங்களின் முன்னால் இருக்கும் இலக்கையும், குறிக்கோளையும் அடைவதற்கு நீங்கள் இங்கே கற்கின்றீர்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் அவர்கள் கற்பதுமில்லை, எந்த இலக்கையோ அல்லது இலட்சியத்தையோ கொண்டிருப்பதுமில்லை.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் அவர் கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள். தந்தை முதலில் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இங்கே அமரும் பொழுதெல்லாம், உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு அமருங்கள். உங்களைச் சரீரங்களாகக் கருதாதீர்கள். சரீர உணர்வு உடையவர்கள் அசுர சமுதாயத்திற்கு உரியவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் இறை சமுதாயத்திற்கு உரியவர்கள் எனக் கூறப்படுகின்றார்கள். கடவுளுக்கெனச் சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. அவர் எப்பொழுதும் ஆத்ம உணர்வுடையவர். அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையான, பரமாத்மா ஆவார். “பரமாத்மா” என்றால் அதிமேலானவர். மக்கள் அதிமேலான கடவுளைப் பற்றிப் பேசும்பொழுது, அவருடைய அசரீரியான நீள்கோள ரூபமே அவர்களின் புத்தியில் தோன்றுகிறது. அசரீரியான நீள்கோள ரூபமும் பூஜிக்கப்படுகின்றது. அவரே பரமாத்மா, அவர் ஆத்மாக்கள் அனைவரிலும் அதியுயர்வானவர். அவரும் ஓர் ஆத்மா. ஆனால், அவர் அனைவரிலும் அதியுயர்வான ஆத்மா ஆவார். அவர் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் வருவதில்லை. ஏனைய அனைவரும் மறுபிறப்பு எடுக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் படைப்புக்கள் ஆவர். ஒரேயொரு தந்தை மாத்திரமே படைப்பவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரும் படைப்புக்கள் ஆவர். முழு மனித உலகும் படைப்பாகும். படைப்பவரே தந்தை என்று அழைக்கப்படுகின்றார். ஓர் ஆணும் படைப்பவர் என அழைக்கப்படுகின்றார். அவர் ஒரு மனைவியை ஏற்றுக் கொண்டு, அவருடன் படைப்பை உருவாக்குகின்றார். பின்னர் அவர் தங்கள் படைப்பைப் பராமரிக்கின்றார். ஆனால் அவர் அதை அழிப்பதில்லை. அனைத்து சமய ஸ்தாபகர்களும் சமயத்தைப் படைத்து, பின்னர் அதைப் பராமரிக்கின்றனர். அவர்களில் எவருமே அதை அழிப்பதில்லை. எல்லையற்ற தந்தையே பரமாத்மா என அழைக்கப்படுகின்றார். எவ்வாறு ஆத்மாக்களின் ரூபம் ஒரு புள்ளி வடிவமோ, அவ்வாறே பரமாத்மாவாகிய பரமதந்தையும் புள்ளி வடிவமானவர். எவ்வாறாயினும், பக்தி மார்க்கத்தில் அவர்கள் உருவாக்கிய பெரிய நீள்கோள ரூபம், அவரைப் பூஜிப்பதற்கே ஆகும். இல்லையெனில் எவ்வாறு ஒரு புள்ளியைப் பூஜிக்க முடியும்? பாரதத்தில் அவர்கள் ஓர் உருத்திர யாகத்தை உருவாக்கும் பொழுது, சிவலிங்கத்தையும் சாலிகிராம்களையும் களிமண்ணால் உருவாக்கி, பின்னர் அவற்றைப் பூஜிக்கின்றார்கள். அது உருத்திர யாகம் என அழைக்கப்படுகின்றது. உண்மையில் அதன் உண்மையான பெயர் இராஜஸ்வ அஸ்வமேத அவிநாசி உருத்திர கீதா கியான் யக்யா (சுயஆட்சியை அடைவதற்காக, குதிரை அர்ப்பணிக்கப்படுகின்ற உருத்திரரின் அழிவற்ற கீதா ஞான யாகம்). இதுவும் சமயநூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில், எவருக்குமே ஆத்மாவையோ அல்லது பரமாத்மாவையோ பற்றிய ஞானம் இல்லை. எவராலும் அதைக் கொடுக்கவும் முடியாது. அங்கே எந்த ஓர் இலக்கோ அல்லது குறிக்கோளோ இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது, இக்கல்வியைக் கற்கின்றீர்கள். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்கள் அழிவற்றவர்கள், ஆனால் சரீரங்கள் அழியக்கூடியவை. ஓர் ஆத்மா அவருடைய பாகத்தை அவரது சரீரத்தின் மூலம் நடிக்கின்றார். ஆத்மாக்கள் சரீரமற்றவர்கள். “நீங்கள் சரீரமற்றே வந்தீர்கள், நீங்கள் சரீரமற்றே திரும்ப வேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சரீரத்தை எடுத்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் திரும்பும் முன்னர், சரீரமற்றவராக வேண்டும். தந்தை இங்கே அமர்ந்திருந்து இதைக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் விளங்கப்படுத்துகின்றார். பாரதத்தில் சத்தியயுகம் இருந்த பொழுது அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அங்கே ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது. பாரத மக்கள் இந்தளவையேனும் அறியார்கள். தந்தையை அறிந்து கொள்ளாதவர்கள் எதையுமே அறியார்கள். தாங்கள் படைப்பவரையோ, அல்லது படைப்பையோ, அறியார்கள் எனப் புராதன ரிஷிகளும், முனிவர்களும் கூறுவதுண்டு. எல்லையற்ற தந்தையே படைப்பவர். அவர் மாத்திரமே படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிவார். ஆரம்ப காலமே தொடக்கம் என்றும், மத்திய காலப்பகுதி இடைப்பட்ட காலம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் பகல் என அழைக்கப்படுகின்ற, சத்தியயுகம் இருக்கின்றது. பின்னர் மத்திய பகுதியிலிருந்து இறுதிவரை இரவு நீடிக்கிறது. சத்திய, திரேதா யுகங்களில் பகல் நிலவுகின்றது. சுவர்க்கமே உலகின் அற்புதமாக இருந்தது. இலக்ஷ்மி நாராயணன் ஆட்சிசெய்த சுவர்க்கமாக பாரதமே இருந்தது. பாரதமக்கள் இதை அறியார்கள். தந்தை இப்பொழுது சுவர்க்கத்தைப் ஸ்தாபிக்கிறார். தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். நான் முதற்தரமான ஆத்மா. இந்த நேரத்தில், ஆத்மாக்கள் அனைவரும் சரீர உணர்வு உள்ளவர்கள். தந்தை உங்களை ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்குகின்றார். ஆத்மா என்றால் என்ன என்றும் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். மனிதர்கள் முற்றிலும் எதையுமே அறியார்கள். ஓர் அற்புதமான நட்சத்திரம் நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கின்றது என அவர்கள் கூறியபொழுதிலும், அது என்ன என்றோ அல்லது எவ்வாறு அதில் ஒரு பாகம் பதியப்பட்டுள்ளது என்றோ அவர்கள் அறியார்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு இதை விளங்கப்படுத்துகின்றார். பாரத மக்களாகிய நீங்கள் 84 பிறவிகளுக்கான பாகங்களை நடிக்க வேண்டும். பாரதமே மேன்மையான தேசமாகும். அதுவே மனிதர்;கள் அனைவரதும் யாத்திரை ஸ்தலமாகும். தந்தை அனைவருக்கும் சற்கதி அருள்வதற்கு இங்கே வருகின்றார். அவர் எங்களை இராவண இராச்சியத்தில் இருந்து விடுவிக்கின்றார். அவர் எங்களது வழிகாட்டியாகி எங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார். மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அதைக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் பாரதத்தில் தேவர்கள் இருந்தார்கள். பின்னர் அவர்கள் மறுபிறவி எடுக்க வேண்டியிருந்தது. பாரதமக்களே, தேவர்களாகவும், சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகுகின்றார்கள். அவர்கள் மறுபிறவி எடுக்கின்றார்கள். இந்த ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு 7 நாட்கள் எடுக்கின்றன. உங்கள் தூய்மையற்ற புத்தி தூய்மையாக்கப்பட வேண்டும். இலக்ஷ்மி, நாராயணன் தூய உலகில் ஆட்சி செய்தார்கள். பாரதத்தில் அவர்களது இராச்சியம் இருந்த பொழுது அங்கே வேறு எந்தச் சமயங்களும் இருக்கவில்லை. அங்கே ஓர் இராச்சியம் மாத்திரமே இருந்தது. பாரதம் மிகுந்த வளமுடையதாக இருந்தது. அவர்களுடைய மாளிகைகள் வைரங்களாலும், இரத்தினங்களாலும் பதிக்கப்பட்டிருந்தன. பின்னர், இராவண இராச்சியம் ஆரம்பித்த பொழுது, அவர்கள் பூஜிப்பவர்கள் ஆகினார்கள். அவர்கள் பக்தி மார்க்கத்திற்குச் சென்று ஆலயங்கள் போன்றவற்றைக் கட்டினார்கள். அவர்கள் சோமநாதருக்கும் ஆலயத்தைக் கட்டினார்கள். அங்கே ஓர் ஆலயம் மாத்திரம் இருக்கவில்லை. இங்கும் சிவனின் ஆலயத்தில் அதிகளவு வைரங்களும், இரத்தினங்களும் இருந்தன. அவை முகமது கஸ்னவியினால் கொள்ளை அடிக்கப்பட்டன. அவன் ஒட்டகங்களிலே அவற்றை எடுத்துச் சென்றான். நூறாயிரக்கணக்கான ஒட்டகங்களால் சுமந்து செல்லக் கூடியளவு செல்வம் அங்கே இருந்தது. சத்தியயுகத்தில் வைரங்களாலும், இரத்தினங்களாலும் பதிக்கப்பட்ட பல தங்க மாளிகைகள் இருந்தன. முகமது கஸ்னவி சமீபகாலத்திலேயே வந்தார். துவாபர யுகத்திலும் பல மாளிகைகள் இருந்தன. அவை அனைத்தும் பூமியதிர்ச்சியினால் புதையுண்டன. இராவணனின் தங்கத்தீவு இருக்கவில்லை. இராவண இராச்சியத்தில் பாரதத்தின் நிலைமை என்னவாக ஆகுகின்றது என்பதையே அது குறிக்கின்றது. அது 100 வீதம் அதர்மமாகவும், அநீதியாகவும், வளமற்றதாகவும், தூய்மை அற்றதாகவும், விகாரம் உள்ளதாகவும் ஆகியுள்ளது. புதிய உலகம் விகாரமற்றது எனக் கூறப்படுகின்றது. பாரதம் சிவாலயமாக இருந்தது. அது உலகின் அற்புதம் எனவும் அழைக்கப்பட்டது. அங்கு வெகுசில மனிதர்களே இருந்தார்கள். இப்பொழுது பில்லியன்கணக்கான மனிதர்கள் இருக்கின்றார்கள். இதைப் பற்றிச் சிந்தியுங்கள்! இது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு அதிமங்களகரமான சங்கம யுகமாகும். இப்பொழுது தந்தை உங்களுக்குத் தெய்வீகப் புத்தியைக் கொடுத்து, உங்களை அதிமேன்மையான மனிதர்கள் ஆக்குகின்றார். உங்களைச் சாதாரண மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்குத் தந்தை உங்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். தந்தையின் வழிகாட்டல்களையிட்டு மாத்திரமே, “உங்களுடைய வழிகளும் முறைகளும் தனித்துவமானவை” எனக் கூறப்படுகின்றது. எவருமே அதன் அர்த்தத்தை அறிய மாட்டார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் தேவர்கள் ஆகும்வகையில் மேன்மையான வழிகாட்டல்களை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். கலியுகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. பழைய உலகின் விநாசம் உங்களின் முன்னால் உள்ளது. மனிதர்கள் காரிருளில், கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இன்னமும் 40,000 வருடங்கள் கடந்து செல்ல இருப்பதால், கலியுகம் இன்னமும் அதன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றது எனச் சமயநூல்களில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் 8.4 மில்லியன் உயிரினங்களில் நம்பிக்கை வைத்திருப்பதால், சக்கரத்தின் கால எல்லையை நீடித்துள்ளார்கள். உண்மையில் அது 5000 வருடங்கள் மாத்திரமே ஆகும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் 8.4 மில்லியன்கள் பிறவிகள் அல்லாது, 84 பிறவிகளே எடுக்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை அந்தச் சமயநூல்கள் அனைத்தையும் அறிவார். இதனாலேயே அவை அனைத்தும் அரைக்கல்பத்திற்கு நீடிக்கின்ற, பக்திமார்க்கத்துக்கு உரியவை எனவும், அதன்மூலம் எவருமே அவரைச் சந்திக்க முடியாது எனவும் அவர் கூறுகின்றார், ஒவ்வொரு சக்கரத்தின் கால எல்லையும் நூறாயிரக்கணக்கான வருடங்களாக இருப்பின், சனத்கொகை மிகப்பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள். ஏனென்றால், கிறிஸ்தவர்களின் சனத்தொகை, 2000 வருடங்களில் மாத்திரமே மிகப்பெரியதாகி உள்ளது. தேவ தர்மமே பாரதத்தின் ஆதியான தர்மம் ஆகும். அது தொடர வேண்டும், ஆனால், அவர்கள் தங்களது ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை மறந்ததால், தங்கள் சமயம் இந்துசமயம் என்று கூறுகிறார்கள். இந்துசமயம் என்று ஒரு சமயம் இல்லை. பாரதம் மிகவும் மேன்மையானதாக இருந்தது. ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்த பொழுது, அது விஷ்ணு தாமமாக இருந்தது. இப்பொழுது இது இராவணனின் தேசமாகும். 84 பிறவிகள் எடுத்த பின்னர் இப்பொழுது அந்தத் தேவர்கள் என்னவாகி உள்ளார்கள் எனப் பாருங்கள். பாரதமக்கள் தேவர்களை விகாரம் அற்றவர்களாகவும், தங்களை விகாரம் உள்ளவர்களாகவும் கருதுகின்றார்கள். ஆகையால் அவர்கள் தேவர்களைப் பூஜிக்கிறார்கள். சத்தியயுகத்தில் பாரதம் விகாரமற்றதாக இருந்தது. அது புதிய உலகமாக இருந்தது, அது புதிய பாரதம் என அழைக்கப்பட்டது. இது பழைய பாரதம் ஆகும். புதிய பாரதம் எவ்வாறு இருந்தது, பழைய பாரதம் எவ்வாறு இருக்கின்றது? அந்தப் புதிய உலகில், பாரதம் புதியதாக இருந்தது, இப்பொழுது, இந்தப் பழைய உலகில், பாரதம் பழையதாக உள்ளது. அதன் நிலை என்னவாகி உள்ளது? பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது நரகமாகி உள்ளது. பாரதம் மிகவும் செழிப்பாக இருந்தது. பாரதம் இப்பொழுது பெருங் கடனாளி ஆகியுள்ளது. அது அனைவரிடமும் கடன் கேட்கின்றது. தனது சொந்த மக்களிடமுமே கடன் கேட்கின்றது. இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இன்றைய சரீர உணர்வுள்ள மனிதர்கள் சிறிதளவு பணத்தை வைத்திருக்கும் பொழுது, தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக நினைக்கின்றார்கள். அவர்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருப்பதால், சந்தோஷ தாமமாகிய, சுவர்க்கம் பற்றி எதையும் அறிய மாட்டார்கள். அவர்கள் இப்பொழுது தூய்மை அற்றிருப்பதால், அவர்களது புத்தியைத் தெய்வீகம் ஆக்குவதற்கு, அவர்களை 7 நாட்களுக்குப் பத்தியில் அமர வைக்க வேண்டும். தூய்மை அற்றவர்கள் இங்கே அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள். தூய்மையானவர்கள் மாத்திரமே இங்கே தங்க முடியும். தூய்மை அற்றவர்கள் இங்கே வருவதற்கு அனுமதிக்க முடியாது. நீங்கள் இப்பொழுது அதிமங்களகரமான சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். பாபா உங்களை அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது சத்திய நாராயணனின் கதையாகும். உண்மையான தந்தை உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து, சத்திய நாராயணன் ஆக்குவதற்காக உங்களுக்கு இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றார். ஒரேயொரு தந்தையிடம் மாத்திரமே இந்த ஞானம் இருக்கின்றது, அவர் ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். “அமைதிக்கடல், தூய்மைக்கடல்” போன்ற புகழ்ச்சி அவருக்கே உரியது. அது வேறு எவருடைய புகழ்ச்சியாகவும் இருக்க முடியாது. தேவர்களின் புகழ்ச்சி, பரமாத்மாவான பரமதந்தை சிவனின் புகழ்ச்சியில் இருந்து வேறுபட்டது. அவர் தந்தையாவார். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு தேவர் ஆவார். சூரிய வம்சத்தவர்கள் பின்னர் சந்திர வம்சத்தினராகவும், அதன்பின்னர் வைசிய வம்சத்தினராகவும் ஆகுகின்றார்கள். மனிதர்கள் “ஹம்சோ” என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் “ஆத்மாவாகிய நானே, பரமாத்மா” என்று கூறுகின்றார்கள். அவர்கள் எவ்வளவு பிழையானவர்களாக உள்ளார்கள். எவ்வாறு பாரதத்தின் ஸ்திதி மேலேறிக் கீழிறங்குகின்றது என நீங்கள் இப்பொழுது அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இதுவோ ஞானம், அவை அனைத்தும் பக்தியாகும். சத்தியயுகத்தில் அனைவருமே தூய்மையானவர்களாக இருந்தார்கள். அது அரசர், அரசியின் இராச்சியமாக இருந்தது. அங்கே எந்த ஆலோசகர்களும் இருக்கவில்லை. ஏனெனில் அரசரும், அரசியும் அதிபதிகளாக இருந்தார்கள். அவர்கள் தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைத் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு விவேகம் இருந்தது. இலக்ஷ்மியும், நாராயணனும் எவரிடமிருந்தும் ஆலோசனை பெற வேண்டிய தேவை இருக்கவில்லை. அங்கே எந்த ஆலோசகர்களும் இல்லை. பாரதம் போன்று வேறு எந்தத் தேசமும் எப்பொழுதும் தூய்மையாக இருக்கவில்லை. அது அத்தகைய, தூய தேசமாக இருந்தது. அதன் மிகச்சரியான பெயர் சுவர்க்கமாகும், ஆனால் இப்பொழுது அது நரகமாக உள்ளது! தந்தையால் மாத்திரமே இந்த நரகத்தைச் சுவர்க்கமாக மாற்ற முடியும். அச்சா.இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத்தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒரேயொரு தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றி, சாதாரண மனிதர்களில் இருந்து, தேவர்கள் ஆகுங்கள். இந்த அழகான, மங்களகரமான சங்கமயுகத்தில் உங்கள் புத்தியைத் தெய்வீகமானதாக்கி, அதி மேன்மையானவர்கள் ஆகுங்கள்.2. ஏழு நாட்களுக்கு ஒரு பத்தியில் அமர்ந்திருந்து, உங்கள் தூய்மையற்ற புத்தியைத் தூய்மை ஆக்குங்கள். உண்மையான தந்தையிடம் இருந்து, சத்திய நாராயணனின் உண்மையான கதையைச் செவிமடுத்து மனிதரிலிருந்து நாராயணன் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் நேர்மையாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்து, எந்தவொரு பணிக்காகவும் ஒவ்வொரு பொக்கிஷத்தையும் தந்தையின் வழிகாட்டல்களுக்கு ஏற்பப் பயன்படுத்துவீர்களாக.ஒரு நேர்மையான, நம்பிக்கைக்குப் பாத்திரமான நபர், தந்தையிடம் இருந்து தான் பெற்ற பொக்கிஷங்களை எந்தவொரு பணிக்காகவும் அவரின் வழிகாட்டல் இன்றிப் பயன்படுத்த மாட்டார். நீங்கள் உங்களின் நேரம், வார்த்தைகள், செயல்கள், மூச்சு அல்லது எண்ணங்களை மற்றவர்களின் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு அல்லது தவறான சகவாசத்தின் ஆதிக்கத்தின் கீழ் வீணாக்கினால், உங்களைப் பற்றி நினைப்பதற்குப் பதிலாக நீங்கள் மற்றவர்களைப் பற்றி நினைத்தால், சுயமரியாதையைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக எதையிட்டும் அகங்காரம் அடைந்தால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக உங்களின் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றினால், உங்களை நேர்மையானவர் எனச் சொல்ல முடியாது. நீங்கள் இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தையும் உலகத்திற்கு நன்மை செய்வதற்காகவே பெற்றுள்ளீர்கள். அதனால் அந்தப் பணிக்காக அவற்றைப் பயன்படுத்துவதே நேர்மையாக இருப்பதாகும்.
சுலோகம்:
எதிர்ப்பு என்பது மாயைக்கு எதிராகவே இருக்க வேண்டும், தெய்வீகக் குடும்பத்திற்கு எதிராக அல்ல.அவ்யக்த சமிக்கை: எண்ணங்களின் சக்தியைச் சேமித்து மேன்மையான சேவைக்கு கருவியாகுங்கள்.
ஆத்மாக்கள் எல்லோரும் ஒரேயொரு எல்லையற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் எமது குடும்பத்தில் உள்ள எந்தவோர் ஆத்மாவும் ஆசீர்வாதங்கள் இல்லாமல் இருக்கக்கூடாது. எப்போதும் உங்களின் இதயங்களில் இத்தகைய ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த மேன்மையான எண்ணங்களைக் கொண்டிருங்கள். உங்களின் சொந்த இல்லறத்தில் மும்முரம் அடையாதீர்கள். எல்லையற்ற ஸ்திதியில் ஸ்திரமாகி, எல்லையற்ற ஆத்மாக்களுக்குச் சேவை செய்யும் மேன்மையான எண்ணத்தைக் கொண்டிருங்கள். இதுவே வெற்றி பெறுவதற்கான இலகுவான வழிமுறை ஆகும்.