10.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்கிக் கொள்வதற்கு, ஆன்மீக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருங்கள். இந்த ஞான செல்வத்தைத் தொடர்ந்தும் தானம் செய்து கொண்டிருங்கள்.
கேள்வி:
எந்தவொரு மனிதனாலும் கொடுக்கப்படாத எந்த ஸ்ரீமத் இப்பொழுது ஆன்மீகத் தந்தையால் கொடுக்கப்படுகின்றது?பதில்:
ஓ ஆன்மீக குழந்தைகளே, ததிச்சி ரிஷி செய்தது போன்று, உங்கள் எலும்புகளை, ஆன்மீக சேவைக்கு கொடுங்கள். தந்தையிடம் இருந்து நீங்கள் பெற்ற அழியாத இந்த ஞானச் செல்வத்தை தானம் செய்யுங்கள். இதுவே உண்மையான சேவையாகும். இத்தகைய சேவையை செய்வதற்கான வழிமுறையை எந்த ஒரு மனிதராலும் கொடுக்க முடியாது. ஆன்மீக சேவை செய்வோர், சதா சந்தோஷ நடனம் ஆடுவதுடன், அவர்களுடைய பாக்கியமும் தொடர்ந்தும் மேன்மை அடையும்.பாடல்:
இந்த உலகம் மாறினாலும், நாங்கள் என்றுமே ஓடிவிட மாட்டோம்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் பாடலின் இருவரிகளை கேட்டீர்கள். அம்மக்களே பாடலை இயற்றினார்கள். ஒரு தம்பதியினர் திருமணம் செய்த பின்னர், அக் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பிரிய முடியாது என்பது உறுதியாகுகின்றது. ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க முடியாது பிரிகின்ற தம்பதியினர் அரிதாகவே உள்ளனர். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் யாருக்குச் சத்தியம் செய்கிறீர்கள்? மணவாட்டிகளான குழந்தைகளாகிய நீங்கள், உங்களுக்கு நிச்சயம் செய்துள்ள கடவுளுக்கே சத்தியம் செய்கின்றீர்கள். எனினும், உங்களை உலக அதிபதி ஆக்குபவரையே உங்களில் சிலர் கைவிடுகிறீர்கள்! நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் போது, குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற பாப்தாதா சற்று நேரத்தில் வரவுள்ளார் என்பது தெரியும். வெளியே உங்கள் சொந்த நிலையங்களுக்கு நீங்கள் செல்லும் போது, இங்கிருக்கும் இதே ஸ்திதி தொடர்ந்தும் உங்களுக்கு இருக்க முடியாது. இங்கு, பாப்தாதா இப்பொழுது வரவுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். வெளியில், உங்களது நிலையங்களில், பாபா பேசிய முரளி வரவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கிருப்பதற்கும் அங்கிருப்பதற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளது. ஏனெனில், இங்கு நீங்கள், எல்லையற்ற பாப்தாதாவின் நேர் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். அங்கு குழந்தைகளாகிய நீங்கள் நேர் முன்னிலையில் இருப்பதில்லை. நேர்முன்னிலையில் வந்து, நேரடியாக முரளியைச் செவிமடுக்க நீங்கள் விரும்புகின்றீர்கள். இன்ன இன்ன சுவாமிஜி வருவார் என ஏனைய ஆன்மீக ஒன்றுகூடலில் அவரின் வரவிற்காக அவர்கள் காத்திருப்பதைப் போன்று, இங்கு, பாபா வரவுள்ளார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்திகளில் உள்ளது. இருப்பினும் அனைவரும் ஒரே எண்ணத்தைக் கொண்டிருப்பதில்லை, சிலர் தங்கள் உறவினரை நினைவு செய்வதுண்டு. அவர்களின் குருவின் நினைவில் அவர்களது புத்திகள் நிலைத்து இருப்பதில்லை. அரிதாகச் சிலரே தமது சுவாமியின் நினைவில் நிலைத்து இருக்கின்றார்கள். இங்கும் அதுவே இடம்பெறுகிறது. அனைவருமே சிவபாபாவின் நினைவில் உள்ளார்கள் என்றில்லை. அவர்களது புத்திகள் தொடர்ந்தும் அலைந்து திரிகின்றன. அவர்கள் தமது நண்பர்களையும் உறவினர்களையும் நினைவு செய்கின்றார்கள். எந்நேரமும் உங்களால் சிவபாபாவின் நேர் முன்னிலையில் இருக்க முடியுமாயின் அது மகா பாக்கியமாகும். அரிதாகச் சிலரே அத்தகைய நிரந்தரமான நினைவில் நிலைத்து இருக்கின்றார்கள். இங்கு சிவபாபாவின் நேர் முன்னிலையில் இருப்பதையிட்டு அதிகளவு சந்தோஷம் இருத்தல் வேண்டும். கோபியரினதும் கோபிகைகளினதும் தந்தையான கோபிவாலாவிற்கு உரியவர்களான கோபியரிடமும் கோபிகைகளிடமும் அதீந்திரிய சுகத்தைப் பற்றி கேளுங்கள். இந்த நேரத்தையிட்டே அவ்வாறு நினைவு கூரப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளாகிய நீங்கள் பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது கடவுளுக்கு உரியவர்கள் என்பதும், பின்னர் தேவர்களின் மடிக்குச் செல்வீர்கள் என்பதுவும் உங்களுக்குத் தெரியும். இதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றோ அல்லது, குறிப்பிட்ட படத்தில் ஏதாவது எழுத வேண்டும் என்றோ சேவைக்கான எண்ணங்களைச் சிலர் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல குழந்தைகள் இந்தநேரத்தில் வேறு எந்த எண்ணங்களுக்கும் இடங்கொடுக்காது, தந்தை கூறுவதை மாத்திரமே தாம் செவிமடுக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளார்கள். தந்தை, இந்த ஞான இரத்தினங்களால் உங்கள் புத்தியை நிரப்ப வந்துள்ளதால் உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் மாத்திரமே நீங்கள் கொண்டிருக்க வேண்டும். கிரகிப்பவர்கள் வரிசைக்கிரமமமாகவே உள்ளார்கள். சிலர் நன்றாகக் கிரகிக்கின்றார்கள், சிலரோ குறைவாகவே கிரகிக்கிறார்கள். உங்களின் புத்தியின் யோகம் ஏனைய திசைகளில் அலைபாயும் என்றால், உங்களால் கிரகிக்க முடியாததால் நீங்கள் பலவீனமாகி விடுவீர்கள். நீங்கள் முரளியை ஒருமுறையோ இருமுறையோ செவிமடுத்தும் கிரகிக்க முடியாமல் இருந்தால், அப் பழக்கம் நிலைத்துவிடும். பின்னர் நீங்கள் எவ்வளவுதான் செவிமடுத்தாலும் உங்களால் கிரகிக்க முடியாது. உங்களால், இந்த ஞானத்தை எவருக்கும் கூறவும் முடியாமல் போய்விடும். கிரகிப்பவர்கள் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பதோடு, பல இடங்களுக்கும் சென்று இந்த ஞானச் செல்வத்தைத் தானம் செய்வதிலும் மிகுந்த உற்சாகம் கொண்டிருப்பார்கள், ஏனெனில் தந்தையைத் தவிர வேறு எவரிடமும் இந்தச் செல்வம் இல்லை. அனைவராலும் கிரகிக்க முடியாது என்பதைத் தந்தையும் அறிவார். அனைவராலும் ஒரேயளவாக உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. இதனாலேயே, அவர்களது புத்தி தொடர்ந்தும் பல திசைகளில் அலைபாய்கிறது. ஆகையாலேயே உங்கள் எதிர்கால பாக்கியம் அந்தளவு மேன்மையாக முடியாது. சிலர் பௌதீகச் சேவைக்காக தங்கள் எலும்பைக் கொடுத்து, அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறார்கள். உதாரணமாக, உணவு சமைத்துப் பரிமாறுவதும் ஒரு பாடமேயாகும். சேவை செய்வதில் ஆர்வம் உள்ளோரால் ஏதேனும் கூறாமலிருக்க முடியாது. இருப்பினும், நீங்கள் சரீர உணர்வு உடையவரா எனவும், மூத்தோருக்கு நீங்கள் மரியாதை கொடுக்கிறீர்களா என்பதையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார். மூத்த மகாராத்திகளுக்கு, மரியாதை கொடுத்தல் வேண்டும். ஆம், இளையவர் ஒருவர் திறமைசாலியாக முடியும். மூத்தவர் அவ் இளையவருக்கு மரியாதை கொடுத்தல் வேண்டும். ஏனெனில், அவரது புத்தி வேகமாக முன்னேறுகின்றது. ஒருவர் சேவை செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும் தந்தை பூரிப்படைகிறார். அவர் மிகவும் நன்றாகச் சேவை செய்வார் என்பதையும் அறிவார். கண்காட்சிகளில் விளங்கப்படுத்துவதற்கு நாள்முழுவதும் பயிற்சி செய்ய வேண்டும். பல பிரஜைகள் உருவாக்கப்பட உள்ளார்கள். நூறாயிரமளவில் பிரஜைகள் இருத்தல் வேண்டும். வேறு வழி ஏதும் இல்லை. சூரிய, சந்திர வம்ச அரசர்கள், அரசிகள், பிரஜைகள் அனைவரும் இங்கேயே உருவாக்கப்படல் வேண்டும். அதிகளவு சேவை செய்யப்பட வேண்டும். இப்போது நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் உள்ளது. உங்கள் குடும்பத்தாருடன் வீட்டில் வசித்த போதிலும் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களுக்கென்ற தனிப்பட்ட சொந்த ஸ்திதியைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் துறக்க வேண்டியதில்லை. பாபா கூறுகின்றார்: நீங்கள் வீட்டில் வாழலாம், ஆனால் பழைய உலகம் ஏற்கனவே அழிந்து விட்டது என்ற நம்பிக்கை உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். எங்கள் தொடர்பு தந்தையுடன் ஆகும். முன்னைய கல்பத்தில் இந்த ஞானத்தைப் பெற்றவர்களே இதனை மீண்டும் பெறுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அனைத்தும் விநாடிக்கு விநாடி முன்னர் நடந்தது போலவே இடம்பெறும். ஆத்மாவிலேயே இந்த ஞானம் உள்ளது. தந்தையிடம் இந்த ஞானம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகி, கருத்துக்களைக் கிரகிக்க வேண்டும். சகல கருத்துக்களும் ஒரே நேரத்தில் விளங்கப்படுத்தப்படும் என்றல்ல. உறுதியானதொரு இலக்கு இருக்க வேண்டும். விநாசம் உங்கள் சற்று முன்னிலையிலேயே உள்ளது. இதுவும் அதே விநாசமேயாகும். சத்தியயுகத்திலும், திரேதாயுகத்திலும் யுத்தம் போன்ற எதுவும் இருக்க மாட்டாது. பின்னர் பல சமயங்களும், பெரிய இராணுவமும் உருவாகும் போதே யுத்தம் இடம்பெறுகின்றது. ஆத்மாக்கள் முதலில் சதோபிரதான் ஸ்திதியில் வருகின்றார்கள். அதன் பின்னர் சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடக்கின்றார்கள். இவை அனைத்தும் உங்கள் புத்திகளில் நிலைத்திருக்க வேண்டும். இங்கு அமர்ந்திருக்கும் போதும், இராச்சியம் எவ்வாறு ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதே உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். சிவபாபா வந்து எங்களுக்குப் பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார். அவை புத்தியால் கிரகிக்கப்பட வேண்டும். நல்ல குழந்தைகள் கருத்துக்களைக் குறித்துக் கொள்கின்றார்கள், கருத்துக்களைக் குறித்துக் கொள்ளுதல் நல்லதாகும். அப்பொழுது உங்கள் புத்திகளுக்குத் தலைப்புகள் எட்டும். ‘இன்று நான் இந்தத் தலைப்பில் விளங்கப்படுத்துவேன்’. தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குப் பல பொக்கிஷங்களை வழங்கினேன்! சத்தியயுகத்திலும், திரேதா யுகத்திலும் உங்களிடம் அதிகளவு செல்வம் இருந்தது. ஆனால் நீங்கள் பாவப்பாதையில் சென்ற போது அது படிப்படியாகக் குறைவடைந்தது. உங்கள் சந்தோஷமும் குறைவடைந்தது. நீங்கள் பாவச் செயல்களைச் செய்ய ஆரம்பித்தீர்கள். நீங்கள் கீழே இறங்க ஆரம்பித்ததும், உங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன. சதோபிரதான், சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகள் உள்ளன. சதோ ஸ்திதியில் இருந்து உடனடியாக ரஜோ ஸ்திதியை அடைவீர்கள் என்றல்ல. தமோபிரதான் ஸ்திதியிலும் நீங்கள் படிப்படையாகவே குறைவடைகின்றீர்கள். அதிலும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகள் உள்ளன. நீங்கள் சடுதியாகத் தமோபிரதான் ஆகுவீர்கள் என்றல்ல. நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் இறங்கும் பொழுது நாளடைவில் உங்கள் கலைகள் குறைவடைகின்றன. நீங்கள் இப்பொழுது பாய்ந்து செல்ல வேண்டும். நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக வேண்டும். அதற்கு இன்னமும் மிகவும் குறுகிய காலமே உள்ளது. அத்துடன் நினைவுகூரப்பட்டுள்ளது: ஏறுகின்றவர்கள் சுவர்க்கத்தின் அமிர்தத்தைச் சுவைப்பார்கள். நீங்கள் காமத்தினால் அறையப்படும் போது, நீங்கள் முற்றிலும் நொருங்கி, உங்கள் எலும்புகள் உடைகின்றன. அது நீங்கள் தற்கொலை செய்து கொண்டதைப் போன்றதாகும். ‘ஆத்மாவின் தற்கொலை’ என்று கூறப்படவில்லை. ஆனால் ‘சரீரத்தின் தற்கொலை’ என்றே கூறப்படுகின்றது. அவ்வாறே, ஆத்மாவின் தற்கொலையும் உள்ளது. அதன் பின்னர் நீங்கள் சேமித்தவை அனைத்தும் முடிவடைகின்றன. இங்கே, நீங்கள் தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து இராச்சியத்தைப் பெறுவதால் தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களிடமே கேளுங்கள்: தந்தையை நினைவு செய்ததன் மூலம் நான் எதிர்காலத்திற்காக எவ்வளவு சேமித்துள்ளேன்? எத்தனை குருடர்களுக்கு நான் ஊன்றுகொலாகி உள்ளேன்? இந்தப்பழைய உலகம் இப்பொழுது மாறவுள்ளது என்ற செய்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுங்கள். புதிய உலகிற்காகத் தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இதனைப் (உலகை) புதியதாக ஆக்குவதற்கு முயற்சி தேவை என்று ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. எவருமே புரிந்து கொள்வதற்கேற்ப எவ்வாறு இதனை இலகுவாக்கலாம் என்பதைப் பற்றி நீங்கள் நாள்முழுவதும் சிந்திக்கின்றீர்கள். முழு உலகமும் இங்கே வரமாட்டாது. இங்கே தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே வருவார்கள். உங்கள் சேவை நீண்டகாலத்திற்கு தொடரும். உங்கள் வகுப்பு எவ்வளவு காலத்திற்கு இன்னமும் தொடரும் என்பதும் உங்களுக்குத் தெரியும். சக்கரத்தின் எல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகள் என்று அவர்கள் நம்புவதால் அவர்கள் சமயநூல்கள் போன்றவற்றைத் தொடர்ந்தும் உரைக்கின்றார்கள். இறுதியில் அனைவருக்கும் சற்கதி அளிப்பவர் வருவார் என்றும், அதன் பின்னர் சிஷ்யர்கள் சற்கதி அடைந்து, அவர்கள் சென்று ஒளியுடன் கலப்பார்கள் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள். எவ்வாறாயினும் அது அவ்வாறில்லை. நீங்கள் இப்பொழுது அமரத்துவமான தந்தையிடம் இருந்து அமரத்துவத்தைப் பற்றிய உண்மைக்கதையைச் செவிமடுக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால் அமரத்துவ பாபா உங்களுக்குக் கூறுவதை நீங்கள் செவிமடுக்க வேண்டும். அவர் உங்களுக்குக் கூறுகின்றார்: என்னை நினைவு செய்து தூய்மை ஆகுங்கள்! அல்லாவிடின், அதிகளவு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். அத்துடன் நீங்கள் குறைவான அந்தஸ்தையும் பெறுவீர்கள். எலும்புகளைக் கொடுத்தும் சேவை செய்வதற்கு உதாரணமாகக் காட்டப்பட்ட தத்திசி ரிஷியை போன்று சேவைக்கான முயற்சி இருக்க வேண்டும். உங்கள் சரீரத்தையும் பொருட்படுத்தாது நீங்கள் சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதுவே எலும்புகளினால் சேவை செய்தல் என்பதாகும். மற்றையது ஆன்மீகமாக உங்கள் எலும்புகளினால் சேவை செய்தலாகும். தமது எலும்புகளினால் ஆன்மீக சேவை செய்பவர்கள்; இந்த ஆன்மீக ஞானத்தை மாத்திரமே தொடர்ந்தும் கூறுவார்கள். இந்த ஞானச் செல்வத்தைத் தானம் செய்யும் அதேவேளையில் அவர்கள் தொடர்ந்தும் சந்தோஷ நடனம் ஆடுவார்கள். உலக மக்கள் செய்யும் சேவைகள் பௌதீகமானவை. அவர்கள் அமர்ந்திருந்து சமயநூல்களை உரைக்கின்றார்கள். ஆனால் அது ஆன்மீக சேவை அல்ல. ஒரேயொரு தந்தை மாத்திரமே எவ்வாறு ஆன்மீக சேவை செய்தல் என்று கற்பிக்கின்றார். ஆன்மீகத் தந்தை மாத்திரமே வந்து ஆத்மாக்களான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் இப்பொழுது புதிய உலகான சத்திய உலகிற்குச் செல்வதற்கு ஆயத்தம் செய்கின்றீர்கள். அங்கே, நீங்கள் பாவச் செயல்களில் ஈடுபட மாட்டீர்கள். அது இராம இராச்சியம். அங்கே, வெகுசில மனிதர்களே இருக்கின்றார்கள். அந்த வெகு சிலரே இங்கே வந்து கற்பார்கள். இப்பொழுது, இராவண இராச்சியத்தில் அனைவரும் சந்தோஷம் இழந்திருக்கின்றார்கள். இந்த ஞானம் முழுவதும் உங்கள் புத்தியில் உங்கள் முயற்சிக்கு ஏற்ப வரிசைக்கிரமமாக உள்ளது. ஏணிப்படத்தில் இந்த ஞானம் முழுவதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இப்படங்களை உருவாக்குவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் ஒவ்வொரு நாளும் பல பத்திரிகைகளை அச்சடிக்கின்றது. அதனால் அதிகளவு வியாபாரமும் உள்ளது! இங்கே, அனைத்தும் கைகளினால் தயாரிக்கப்படுகின்றன! தந்தை கூறுகின்றார்: இந்த இறுதிப் பிறவியில் நீங்கள் தூய்மையாகினால் நீங்கள் தூய உலகிற்கு அதிபதிகள் ஆவீர்கள். இந்த ஞானம் எவரிடமும் இல்லை. ‘ஏணிப்படத்தில் ஏனைய சமயங்களைப் பற்றிய எந்த விவரமும் இல்லை’ எனச் சிலர் கூறுகின்றார்கள். உலக சக்கரப்படத்தில் அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்படுகின்றன. அவர்கள் புதிய உலகிற்குச் செல்வதில்லை. அவர்கள் அமைதியைப் பெறுகின்றார்கள். பாரத மக்கள் மாத்திரமே சுவர்க்கத்திற்குச் செல்கின்றார்கள். உங்களுக்கு இராஜயோகம் கற்பிப்பதற்காக தந்தை பாரதத்திற்கு மாத்திரமே வருகின்றார். ஆகையாலேயே அனைவரும் பாரதத்தின் புராதன இராஜயோகத்தை விரும்புகின்றார்கள். இந்தப் படத்தின் ஊடாக அவர்களாகவே புதிய உலகில் பாரதம் மாத்திரமே உள்ளது என்பதை புரிந்து கொள்வார்கள். தமது சொந்த சமயத்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும். கிறிஸ்துவும் ஒரு சமயத்தை ஸ்தாபிக்கவே வருகின்றார். இந்த நேரத்தில் அவரும் பிச்சைக்காரர் உருவத்திலேயே இருப்பார். அனைவரும் தமோபிரதான் ஆவார்கள். படைப்பவரதும் படைப்பினதும் இந்த ஞானம் மிகவும் பரந்தது. எவரது பணமும் எங்களுக்குத் தேவையில்லை என்று நீங்கள் கூறலாம். பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்களிடம் கூறுங்கள் : இவ்விடயங்களைச் செவிமடுப்பதுடன், பிறருக்கு அச்சடித்தும் கொடுங்கள். இந்தப் படங்களினால் பயன்பெறுங்கள். இந்த ஞானத்தைக் கற்பிப்பதற்கு ஒரு மண்டபத்தை ஒழுங்கு செய்யுங்கள். உங்கள் பணத்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது? உங்கள் வீடே பயன்பெறும். நீங்கள் அதற்கான ஒழுங்குகளைச் செய்தால் பலரும் வந்து செவிமடுப்பார்கள். படைப்பவரதும் படைப்பினதும் ஞானம் மிகவும் சிறந்ததாகும். மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த ஞானத்தை மிகவும் சந்தோஷத்துடன் செவிமடுப்பார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். தாமும் தந்தையுடன் யோகம் செய்தால், தமது பாவங்கள் அழியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தையான கடவுளைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். குதாவே (கடவுள்) பாகிஸ்தைப் (சுவர்க்கத்தைப்) படைத்தார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் அவர் எவ்வாறு வருகின்றார் என்பது அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் அவர்களுக்குக் கூறுவதைச் செவிமடுக்கும் போது அவர்கள் அதிகளவு சந்தோஷம் அடைவார்கள். அதன் பின்னர் யோகம் கற்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள். அவர்கள் தமோபிரதானில் இரூந்து சதோபிரதான் ஆகுவதற்கும் முயற்சி செய்வார்கள். சேவைக்கான பல வழிகள் உங்களிடம் இருக்க வேண்டும். பாரதத்தில் உங்கள் திறமைகளை நீங்கள் காட்டினாலேயே உங்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும். உலகைப் புதிப்பிப்பதற்கு நீண்ட காலம் தேவையில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள். எங்கேனும் பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், இரண்டு, மூன்று, நான்கு வருடங்களில் அவ்விடத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதிகளவு தொழிலாளிகள் இருக்கும் அளவிற்கு ஏற்ப விரைவில் கட்டடம் கட்டப்படும். ஒரு கட்டடத்தை ஒரு மாதத்திலும் கட்டி முடிக்கலாம். தொழிலாளிகளும் பொருட்களும் தயாராக இரூந்தால், அதனைக் கட்டி முடிப்பதற்கு அதிகக் காலம் எடுக்க மாட்டாது. ‘ஒரு விநாடியில் ஒரு மோட்டார்’ என்ற ரீதியில் வெளிநாடுகளில் கட்டடங்களைக் கட்டுகின்றார்கள். ஆகையால் சுவர்க்கத்திலும் அவர்கள் மிகவும் விரைவாக அவற்றைக் கட்டி முடிப்பார்கள். நீங்கள் அதிகளவு தங்கத்தையும், வெள்ளியையும் பெறுவீர்கள். அவர்கள் சுரங்கம் போன்றவற்றில் இருந்து தங்கம், வெள்ளி, வைரங்களையும் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் இப்பொழுது அந்தத் திறமைகளைக் கற்கின்றார்கள். விஞ்ஞானத்தின் அகங்காரமும் அதிகளவு உள்ளது. இதே விஞ்ஞானம் அங்கும் பயனளிக்கும். இங்குள்ள விடயங்களைக் கற்பவர்கள் அங்கு மறுபிறவி எடுத்துத் தமது முன்னைய பிறவியில் தாம் கற்ற விடயங்கள் அனைத்தையும் பயன்படுத்துவார்கள். அந்த நேரத்தில் முழு உலகமும் புதியதாகுவதுடன் இராவண இராச்சியமும் அழிவடைந்திருக்கும். பஞ்ச தத்துவங்களும் மிகவும் ஒழுக்கத்துடன் சேவையில் ஈடுபட்டிக்கும். அது சுவர்க்கமாக மாறும். அங்கே அனர்த்தங்கள் நிகழ மாட்டாது. அங்கே அனைவரூம் சதோபிரதானாக இரூப்பதால் இராவண இராச்சியம் அங்கிருப்பதில்லை. தந்தையின் மீது உங்களுக்கு அதிகளவு அன்பிருக்க வேண்டியதே சிறப்பான விடயம். தந்தை தானம் செய்வதற்கு கொண்டிருக்கும் அக்கறையைப் போன்று நீங்களும் பிறருக்குத் தானம் செய்ய வேண்டும். நீங்கள் அதிகளவு தானம் செய்யும் அளவிற்கு நீங்கள் அதிகளவு சேமிப்பீர்கள். நீங்கள் சேவை செய்யாத போது, உங்களால் எவ்வாறு கிரகிக்க முடியும்? உங்கள் புத்தி சேவைக்காகச் செயற்பட வேண்டும். இன்னமும் அதிகளவு சேவை செய்ய முடியும். தொடர்ந்தும் எவரேனும் சேவை செய்து கொண்டிருக்க வேண்டும். நாளுக்கு நாள் அதில் முன்னேற்றம் தெரிய வேண்டும். நீங்களும் முன்னேற வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொண்டிருங்கள். சேவை செய்வதற்கு அதிகளவு ஆர்வம் கொண்டிருங்கள். இந்த ஞான இரத்தினங்களால் உங்கள் புத்திகளை நிரப்புங்கள். அதன் பின்னர் அவற்றைத் தானம் செய்யுங்கள்.2. ஒரேயொரு தந்தை கூறுவதை மாத்திரமே செவிமடுங்கள். ஏனைய எண்ணங்களில் உங்கள் புத்தியை அலைந்து திரிய அனுமதிக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் நினைப்பதற்கும் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு எதையும் முடிப்பதன் மூலம் நீங்கள் சுயத்தை மாற்றுபவராகவும் உலகை மாற்றுபவராகவும் ஆகுவீர்களாக.மிகச்சரியாக அல்லாத எந்தவொரு சம்ஸ்காரம், சுபாவம், வார்த்தை அல்லது தொடர்பும் வீணானவையே: அந்த வீணானவற்றை மாற்றுவதற்கான உங்களின் பொறிமுறையை வேகமாக்குங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள்: அப்போது மட்டுமே உலக மாற்றத்திற்கான உங்களின் பொறிமுறை வேகம் அடையும். தற்சமயம், ஸ்தாபனைக்குக் கருவிகளாக இருக்கும் ஆத்மாக்களான நீங்கள் சிந்திப்பதற்கும் செய்வதற்கும் இடையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. அதனால் அந்த வேறுபாட்டை முடியுங்கள். அப்போது மட்டுமே சுயத்தை மாற்றக்கூடிய உங்களால் உலகை மாற்றுபவர்கள் ஆகமுடியும்.
சுலோகம்:
அனைவரிலும் அதி அதிர்ஷ்டசாலிகள், தமது வாழ்க்கைகளில் அனுபவம் என்ற பரிசைப் பெற்றவர்கள் ஆவார்கள்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
சங்கமயுகத்தின் முழுமையான ஸ்திதியின் படம், தேவதையினுடையதே ஆகும். ஓர் தேவதை சம்பூரணமாக இலேசாக இருப்பவர். இலேசாக இருப்பவர்களால் தமது ஸ்திதியை சகல சூழ்நிலைகளிலும் மேன்மையாக ஆக்க முடியும். தேவதைகள் தமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகளில் இலேசாக இருப்பவர்கள். இவ்வாறு இலேசாக இருப்பவர்களால் எந்தவோர் ஆத்மாவின் சம்ஸ்காரங்களையும் ஒரு விநாடியில் வேறுபிரித்தறிய முடியும். அந்த நற்குணங்கள் அனைத்தும் உங்களின் ஒவ்வொரு செயலிலும் தென்பட்டால், நீங்கள் உங்களின் முழுமை ஸ்திதிக்கு நெருக்கமாக வந்துவீட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.