11.11.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
இனிய குழந்தைகளே, உலகிலுள்ள எவரையிட்டும் நீங்கள் அச்சம் அடையாதிருக்கலாம், ஆனால் நீங்கள் நிச்சயமாக இந்தத் தந்தையையிட்டு அச்சமடைய வேண்டும். அவரையிட்டு அச்சம் அடைவது என்றால், பாவச் செயல்களைப் புரிவதிலிருந்து பாதுகாக்கப்படுதல் என்று அர்த்தம்.
கேள்வி:
பாபா ஏன் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் உங்களின் அட்டவணையைச் சோதிக்குமாறு ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார்?பதில்:
ஏனெனில் கடவுளின் சட்டங்கள் மிகவும் கடுமையானவை. ஒரு பிராமணராகிய பின்னர், நீங்கள் தொடர்ந்தும் சிறிய தவறுகளைச் செய்தால், தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்கும். ஆகவே, பாபா கூறுகிறார்: உங்களைச் சோதியுங்கள். ஏதாவது பழைய கர்மக்கணக்குகள் எஞ்சியிருப்பின், நீங்கள் ஒரு சிறிய சப்பாத்தியையே (வெகுமதி) செருப்புடன் (தண்டனை) பெறுவீர்கள். இப்பொழுது கணக்கைத் தீர்க்கும் காலம் மிகவும் நெருங்கி விட்டது. ஆகவே, யோக சக்தியின் மூலம் உங்கள் கர்மக் கணக்குகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளுங்கள்.ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் நீங்களாகவே தந்தையின் நினைவில் நிலைத்திருக்கிறீர்கள். இதனைச் செய்யுமாறு உங்களுக்கு மீண்டும் மீண்டும் கூற வேண்டிய தேவையில்லை. தந்தையின் வழிகாட்டல்: நடந்தும், அமர்ந்தும், உலாவியும் திரியும்பொழுதும், தந்தையை நினைவு செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் உங்களைத் தூய்மை அற்றவர்களாக்கிய இராவணனை வெல்வீர்கள். உங்களுக்கு ஆயுதங்கள் போன்ற எவையும் கொடுக்கப்படவில்லை. நீங்கள் யோகசக்தியின் மூலமே இராவணனை வெல்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாக வெற்றியடைய வேண்டும், இராவண இராச்சியம் முடிவடைந்து, இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்படும் வேளையில், சங்கமயுகத்தில் பெற்ற வெற்றியை அடைய வேண்டும். தந்தையால் ஒருபொழுதும் உங்களுக்கு வன்முறையைக் கற்பிக்க முடியாது. அகிம்சையே தேவர்களின் பரமதர்மம் ஆகும். அங்கு காமவாள் என்னும் வன்முறை இருப்பதில்லை என்பதை உலகம் அறியாதுள்ளது. முன்னைய கல்பத்தில் விகாரம் அற்றவர்கள் ஆகியவர்களே, நீங்கள் கூறுபவற்றை ஏற்றுக் கொள்வார்கள். இப்பொழுது நீங்கள் ஒரு யுத்த களத்தில் உள்ளீர்கள். சிவசக்தி சேனை நினைவு கூரப்படுகிறது. நீங்கள் மறைமுகமான போர்வீர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவே அனைத்தையும் செய்கிறீர்கள். மாயையை வென்றவர்களாகவும், உலகை வென்றவர்களாகவும் ஆகுங்கள்! நீங்கள் அனைத்தையும் உங்களுக்காகவே செய்கிறீர்கள், உங்கள் பாரத தேசத்திற்காகவே அதனைச் செய்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தம். இதில் மிகச்சிறந்த முயற்சியைச் செய்பவர்கள் ஏதோவொன்றைப் பெறுவார்கள். ஐந்து விகாரங்களை வெற்றி கொண்டவர்கள் உலகை வென்றவர்கள் ஆகுவார்கள். நீங்கள் வேறு எதனையும் வெற்றிகொள்ளத் தேவையில்லை. நீங்கள் இராவண இராச்சியத்தை வெற்றிகொள்ள வேண்டும், அதாவது, நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கும் வரையில், உங்களால் சத்திய யுகத்துக்குச் செல்ல முடியாது. ஆகவே, நீங்கள் எந்தளவுக்குத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துள்ளீர்கள் என உங்களையே வினவுங்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பது என்றால், இராவணனை வெல்வதாகும். இராம இராச்சியம் இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது, ஆனால் அங்கு இராச்சியத்தை ஆட்சிசெய்த ஓர் இராமர் மாத்திரம் இருந்திருக்க முடியாது. அங்கு பிரஜைகளும் இருந்திருக்க வேண்டும். இங்கு, அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் இராவணனை வெல்கிறார்கள். அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கிறார்கள். உங்களுக்குத் தெய்வீகக் குணங்கள் இருக்கும்பொழுது, உங்கள் உணவு, பானம், நீங்கள் பேசும் முறை போன்ற அனைத்தும் தூய்மையாக இருக்கின்றன. அனைத்து விடயங்களைப் பற்றியும் உண்மையைப் பேசுங்கள். தந்தையே சத்தியமானவர். ஆகவே நீங்கள் அத்தகையதொரு தந்தையிடம் மிகவும் நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்க வேண்டும். நீங்கள் உண்மையானவராக இல்லாதுவிட்டால், உங்கள் நிலை மிகவும் தீயதாகுகிறது. நீங்கள் ஒரு மேன்மையான நிலையை அடைய வேண்டும். ஒரு சாதாரண ஆணிலிருந்து நீங்கள் நாராயணனாகவும், ஒரு சாதாரணப் பெண்ணிலிருந்து இலக்ஷ்மியாகவும் ஆக வேண்டும். “உங்கள் வழிமுறைகளை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள்” எனக் கூறப்பட்டுள்ளது. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்கள் அத்தகையதோர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறீர்கள். அதிமேலான தந்தை உங்களை அதியுயர்ந்த நிலையைக் கோருமாறு செய்கிறார். ஆகவே, இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். யோகசக்தியின்றி, பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்பட முடியாது. இதற்கு, மிகச்சிறந்த நினைவு யாத்திரை தேவைப்படுகிறது. உங்களால் அமிர்தவேளையில் மிகச்சிறந்த நினைவைக் கொண்டிருக்க முடியும். அந்நேரத்தில் சூழல் மிகவும் சிறந்ததாக உள்ளது. நீங்கள் நாள் முழுவதும் எவ்வளவுதான் அமர்ந்திருந்தாலும், அமிர்த வேளையைப் போன்று வேறெந்த நேரமும் கிடையாது. எங்களுடைய அனைத்தும் மறைமுகமானது. ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ளது: நாங்கள் யுத்தத்தில் இருக்கிறோம்! எங்களுடைய யுத்தம் இராவணனுடன் ஆகும். அவனே முதல் இலக்க எதிரியாவான். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், இராம சமுதாயம் இராவண சமுதாயத்தை வெற்றி கொண்டது. தந்தையே சர்வசக்திவான் ஆவார். இந்நேரத்தில் அப்பாவி உலகம் முழுமையான இருளில் உள்ளது. தாங்கள் தோற்கடிக்கப்படுகிறோம் என்பதையே அவர்கள் அறியாதுள்ளார்கள். அவர்கள் மாயையினால் தோற்கடிக்கப்படுகிறார்கள். மாயை என்றால் என்ன என்பதுகூட எவருக்கும் தெரியாது. இலங்கை முழுவதும் இராவண இராச்சியமே இருந்தது. பக்தி மார்க்கத்துச் சமயநூல்களில், அவர்கள் பல்வேறு கட்டுக்கதைகளை எழுதியுள்ளார்கள். நீங்கள் அவற்றைப் பிறவிபிறவியாக வாசித்து வருகிறீர்கள். இப்பொழுதும் கூட நீங்கள் சமயநூல்களை வாசிக்க வேண்டும் எனவும், அவற்றைக் கற்காதவர்கள் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: சமயநூல்களைக் கற்பதனால், நீங்கள் அனைவரும் நாஸ்திகர்களாகி விட்டீர்கள். குழந்தைகளான நீங்கள் இவ்விடயங்களை மிகவும் நன்றாக விளங்கப்படுத்த வேண்டும். பாரதம் சதோபிரதானாக இருந்தபொழுது, அது சுவர்க்கம் என்று அழைக்கப்பட்டது. அதே பாரத மக்களே, 84 பிறவிகளை எடுக்கும்பொழுது, தூய்மை அற்றவர்களாகவும், தமோபிரதானாகவும் ஆகிவிட்டதனால், இப்பொழுது அவர்கள் எவ்வாறு தூய்மையானவர்களாக முடியும்? தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்வதனால், நீங்கள் சதோபிரதானாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகுவீர்கள். சரீரதாரிகள் எவரையும் நினைவு செய்யாதீர்கள். எவரையும் உங்கள் குருவாக ஆக்காதீர்கள். கூறப்பட்டுள்ளது: ஒரு குரு இல்லாவிட்டால், காரிருளே நிலவும். பல்வேறு குருமார்கள் உள்ளார்கள்! எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும் உங்களை இருளுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். தந்தை கூறுகிறார்: ஞான சூரியன் உதிக்கும் பொழுது, காரிருள் அகற்றப்படுகிறது. சந்நியாசிகள் தூய்மை ஆகினாலும், அவர்கள் இன்னமும் விகாரத்தினூடாகவே பிறப்பெடுக்கிறார்கள். தேவர்கள் விகாரத்தினூடாகப் பிறப்பதில்லை. இங்கு, அனைவருடைய சரீரங்களும் தூய்மையற்ற, அழுக்கான ஆடைகள் போன்றுள்ளன. தந்தை அத்தகைய அழுக்கான, தூய்மையற்ற ஆடைகளைக் கழுவுகிறார். நீங்கள் ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மை ஆக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும், அதனால் நீங்களும் தூய சரீரங்களைப் பெறுகிறீர்கள். நீங்கள் எந்தத்தீய செயல்களையும் செய்யவில்லை எனப் பார்ப்பதற்கு உங்களைச் சோதியுங்கள். கடவுளின் சட்டங்கள் மிகவும் கண்டிப்பானவை. ஒருவர் தீமையான ஒன்றைச் செய்யும்பொழுது, அதற்கான தண்டனை மிகவும் கடுமையாக உள்ளது. இதுவே கணக்குகளைத் தீர்க்கும் காலம். கர்மக் கணக்குகள் அனைத்தும் யோக சக்தியின் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் அவற்றைத் தீர்த்துக் கொள்ளாது விட்டால், தண்டனையை அனுபவம் செய்ய வேண்டும். அப்பொழுது கூறப்படுகிறது: ஒரு சிறிய வெகுமதியுடன் தண்டனையும் பெறப்படுகிறது. அனைவரும் ஒரு சிறிய வெகுமதியையே பெறப் போகிறார்கள். அனைவருக்கும் முக்தியும், ஜீவன்முக்தியும் என்னும் வெகுமதி கொடுக்கப்படும். சிலர் திறமைச்சித்தி அடைகிறார்கள், சிலர் தண்டனையை அனுபவம் செய்து, பின்னர் கௌரவம் இல்லாத, சிறிய வெகுமதியைப் பெறுவார்கள்; அவர்களால் சிம்மாசனத்தில் அமர முடியாது. நீங்கள் தீய செயல்களைச் செய்தால், உங்களுக்கு அகௌரவம் ஏற்படும், அதுவும் தந்தையின் முன்னிலையில் அந்த அகௌரவம் ஏற்படும்! சிவபாபா இங்கே அமர்ந்திருக்கிறார். உங்களுக்குக் காட்சிகள் கொடுக்கப்படும்: நான் இவரில் அமர்ந்திருந்து, உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தினேன். நான் இப்பொழுது சம்பூரணமான பிரம்மாவில் இருக்கிறேன். குழந்தைகளாகிய நீங்கள் சம்பூரணமான பாபாவிடம் செல்ல வேண்டும். சிவபாபா உங்களுக்கு இவரினூடாக வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். எவ்வாறு அவர் இவரில் அமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பித்து, உங்களைத் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துச் சேவை செய்யுமாறு கூறினார் எனும் காட்சிகளை பாபா உங்களுக்குக் கொடுப்பார். எவரையும் அவதூறு செய்ய வேண்டாம். இருப்பினும், நீங்கள் அதனைச் செய்வதனால், இதுவே அதற்கான தண்டனையாகும். நீங்கள் செய்துள்ள பாவங்களுக்கெல்லாம் தண்டனை இருக்கும். சிலர் பெருமளவு தண்டனையையும், சிலர் குறைந்தளவு தண்டனையையும் அனுபவம் செய்கிறார்கள். அதுவும் வரிசைக்கிரமமானதே. இயன்றளவு, யோக சக்தியின் மூலம், தொடர்ந்தும் உங்கள் பாவங்களை அழித்துக் கொள்ளுங்கள். எவ்வாறு முழுமையான நிஜத் தங்கம் ஆகுவது என்பதே, குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டிய மகத்தான அக்கறை ஆகும். நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும், நீங்கள் எந்தளவுக்கு நினைவில் நிலைத்து இருக்கிறீர்கள் என்பதற்கேற்பவே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் மாயையின் புயல்களைப் பற்றி அக்கறைப்படக் கூடாது. உங்களுக்கு நேரம் இருக்கும்பொழுது எல்லாம், தந்தையை நினைவு செய்யுங்கள். நான் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகவேண்டும். நீங்கள் தந்தையை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் பாவம் எதனையும் செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அவை நூறு மடங்கு சேமிக்கப்படும். நீங்கள் மன்னிப்பு கோராது விட்டால், அவை அதிகரித்து, இறுதியில் அனைத்தும் அழிக்கப்படும். மாயை உங்களைப் பாவத்துக்கு மேல் பாவம் செய்ய வைப்பாள். பின்னர் எல்லையற்ற தந்தைக்கு அவமரியாதையே ஏற்படும். பலர் இதனை அறியாதுள்ளார்கள். பாபா எப்பொழுதும் விளங்கப்படுத்துகிறார்: எப்பொழுதும் சிவபாபாவே முரளியைக் கூறுவதாகவும், சிவபாபாவே வழிகாட்டல்களைக் கொடுப்பதாகவும் கருதுவதனால், நீங்கள் அவரை நினைவு செய்வதுடன், அவரையிட்டு அச்சமும் அடைவீர்கள். பலர் தொடர்ந்தும் பாவம் செய்கிறார்கள். நீங்கள் பாபாவிடம் தெளிவாகக் கூற வேண்டும்: பாபா, நான் இந்தத் தவறைச் செய்தேன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்கள் தலைமீது பெரும் பாவச்சுமை உள்ளது. நீங்கள் செய்துள்ள அனைத்தையும் பற்றி பாபாவுக்குக் கூறுங்கள். பாபாவுக்கு உண்மையைக் கூறுவதால், அரைவாசி மன்னிக்கப்படும். முதல் இலக்கப் புண்ணியாத்மாவாக ஆகுபவரே, பின்னர் முதல் இலக்கப் பாவாத்மா ஆகுகிறார் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். பாபாவே கூறுகிறார்: இதுவே உங்களுடைய பல பிறவிகளின் இறுதிப்பிறவி. நீங்கள் புண்ணியாத்மாக்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது பாவாத்மாக்கள் ஆகிவிட்டீர்கள், நீங்கள் மீண்டும் ஒருமுறை புண்ணியாத்மாக்களாக வேண்டும். நீங்கள் உங்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இங்கு நீங்கள் விழுந்து வணங்கத் தேவையில்லை. தந்தையை நினைவு செய்யுங்கள். இவர் முதியவராக இருப்பினும், “நமஸ்தே” எனக் கூறுகிறார். வீட்டில் இருக்கும் பொழுது, குழந்தைகள் மீண்டும் மீண்டும் “நமஸ்தே” கூறுவதில்லை. ஒரு நபர் “நமஸ்தே” எனக் கூறும்பொழுது, மற்றவரும் ஒருமுறை “நமஸ்தே” கூறுவார். பாபா கூறுகிறார்: நீங்கள் என்னை மூத்தவராகக் கருதி, எனக்கு “நமஸ்தே” கூறுகிறீர்கள், நான் உங்களை உலக அதிபதிகளாகக் கருதி, உங்களுக்கு “நமஸ்தே” கூறுகிறேன். இது அர்த்தம் நிறைந்தது. மக்கள் “இராமா! இராமா!” எனக் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. உண்மையில், இராமர் என்றால் சிவபாபாவே ஆவார். இராமர் அதியுயர்ந்த ரகு குலத்திலிருந்து வந்தவர் அல்ல, ஆனால் அசரீரியான இராமர் ஆவார், அவர் பெயர் சிவபாபா ஆகும். எவரும் சிவபாபாவின் முன்னிலையில் தான் இராமரைப் பூஜிப்பதாகக் கூற மாட்டார். தந்தை இப்பொழுது கூறுகிறார்: சென்று ஆலயங்களில் விளங்கப்படுத்துங்கள்: அவரும் (திரேதா யுக இராமர்) ஒரு மனிதராகவே இருந்தார். நீங்கள் சென்று அவர்களின் முன்னிலையில் புகழ் பாடுகிறீர்கள்: நீங்கள் விகாரம் அற்றவர்களும், தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களும் ஆவீர்கள், ஆனால் நானோ ஒரு சீரழிந்த பாவி. இவை மனித சரீரங்கள் (இப்பொழுது), அவையும் (தேவர்கள்) மனித சரீரங்களே, ஆனால் அந்தச் சரீரங்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருப்பதால், அவர்கள் தேவர்களாக உள்ளார்கள். நீங்கள் அசுர குணங்கள் உடையவர்கள் ஆதலால், குரங்குகளைப் போன்றவர்கள் என நீங்களே கூறுகிறீர்கள். இருசாராரின் முகச்சாயல்கள் ஒத்திருப்பினும், குணாதிசயங்கள் வேறுபட்டவை. பாரத மக்கள் கிரீடம் அணிவிக்கப்பட்டார்கள். இப்பொழுது அவர்களிடம் கிரீடங்கள் இல்லை; இப்பொழுது பாரத மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். தந்தையும் பாரதத்திலேயே வருகிறார். சுவர்க்கம் உருவாக்கப்படவுள்ள இடத்திலேயே தந்தை வருகிறார். கூறப்பட்டுள்ளது: “கலங்கி-அவதாரம்”, அதாவது, அதிகளவு அவதூறு செய்யப்பட்ட அவதாரம். ஏனைய சமயத்தவர்கள் எதனையாவது கூறும்பொழுது, அவர்கள் பாரத மக்களை மட்டுமே பின்பற்றுகிறார்கள். அவர்கள் கற்புத்தி உடையவர்கள் என்பதனால், அவர் கற்களிலும், கூழாங்கற்களிலும் இருக்கிறார் என அவர்களும் கூறுகிறார்கள். அவர்கள் முற்றாகவே தந்தையை அறியார்கள், அவர் இவரில் பிரவேசித்துப் பாரதத்துக்குக் கிரீடம் அணிவிக்கிறார் (அதியுயர்வானது ஆக்குகின்றார்) என்பதை அவர்கள் அறியார்கள். அவர் பாரதத்துக்கு அதிகளவு சேவை செய்கிறார்! தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை அவதூறு செய்கிறீர்கள், நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறேன். நீங்கள் என்னை அதிகளவுக்கு அவதூறு செய்கிறீர்கள். இராவணன் உங்கள் பகுத்தறிவை முழுமையாகவே அழித்து விட்டான். நீங்கள் மிகவும் கீழானதொரு நிலையை அடைந்து விட்டதாலேயே, தூய்மையாக்குபவரை அழைக்கிறீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் மிகவும் இலகுவானது. இருப்பினும், குழந்தைகளாகிய உங்களிற் பலர் இதனை மறந்து விடுகிறீர்கள். நீங்கள் யோகம் செய்யாது விட்டால், உங்களால் இதனைக் கிரகிக்க இயலாது. இதனாலேயே பாபா கூறுகிறார்: பந்தனத்தில் உள்ளவர்களே தந்தையை அதிகளவு நினைவு செய்கிறார்கள். சிவபாபாவின் நினைவில் அவர்கள் பெருமளவு சகித்தும் கொள்கிறார்கள். தேவர்களாகவுள்ள பாரத மக்கள் மாத்திரமே இங்கு வருவார்கள். ஆரிய சமாஜிகள் முற்றாகவே தேவர்களின் சிலைகளில் நம்பிக்கை வைப்பதில்லை. விருட்சத்தின் உச்சியில், அரிதாக இரண்டு அல்லது மூன்று பிறவிகளை எடுப்பவர்களின் கிளைகளும், சிறு கிளைகளும் உள்ளன. விகாரமின்றி, எவ்வாறு உலகம் தொடரும் என மக்கள் அதிசயிக்கிறார்கள். ஓ! ஆனால் தேவர்கள் முழுமையாகவே விகாரம் அற்றவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். அங்கு விகாரம் இருப்பதில்லை என எவரும் புரிந்து கொள்வதில்லை. முன்னைய கல்பத்தைச் சேர்ந்தவர்களே, இதனை மிகவும் விரைவாகப் புரிந்து கொள்வார்கள். கடவுள் கூறுகிறார் என்பது நினைவுகூரப்படுகிறது: காமமே கொடிய எதிரி. ஆனால் கடவுள் எப்பொழுது இதனைக் கூறினார் என்பதை எவரும் அறியார். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகிறீர்கள், ஆனால் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு முயற்சி செய்யப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: வீட்டில் வாழும்பொழுது, உங்கள் புத்தியின் யோகத்தை என்னுடன் இணையுங்கள். இப்பொழுது நீங்கள் தந்தைக்கு உரியவர்கள் ஆதலால், உங்களிடம் தந்தைக்கான அன்பு இருக்க வேண்டும். பெயரளவிலேயே ஏனையோருக்காக அன்பு கொண்டிருங்கள். எவ்வாறு ஏழைகளைச் சுவர்க்கவாசிகள் ஆக்குவது, எவ்வாறு அவர்களுக்கு உண்மையான யாத்திரையில் செல்வதற்கான பாதையைக் காட்டுவது என்னும் அக்கறையே உங்கள் புத்திகளில் இருக்க வேண்டும். அவை நீங்கள் பிறவிபிறவியாகச் செல்கின்ற, பௌதீகமான யாத்திரைகள் ஆகும். இது மாத்திரமே நினைவு யாத்திரை ஆகும். எங்களுடைய 84 பிறவிகள் இப்பொழுது முடிவுக்கு வருகின்றன, சத்திய யுகத்தின் வரலாறு மீண்டும் மீண்டும் இடம்பெற வேண்டும். தூய்மை அற்றவர்களால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. உங்களைத் தூய்மை ஆக்குவதற்குத் தூய்மையாக்குபவராகிய தந்தையே தேவைப்படுகிறார். சந்நியாசிகள் தூய்மையாகினாலும், அவர்களால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. தந்தை மாத்திரமே அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். தந்தை வந்து, உங்கள் அனைவரையும் இராவணனிடம் இருந்து விடுவித்து, உங்களைச் சுதந்திரமானவர்கள் ஆக்குகிறார். சத்திய யுகத்தில் துன்பத்தை விளைவிக்கின்ற எதுவும் இருப்பதில்லை. அதன்பெயரே சந்தோஷ தாமம் ஆகும். இதுவே துன்ப தாமம் ஆகும். அது பாற்கடலும், இது நச்சுக்கடலும் ஆகும். எவ்வாறு அவர்கள் சுவர்க்கத்தில் அதிகளவு சந்தோஷத்துடனும், சௌகரியத்துடனும் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். எவ்வாறு நீங்கள் பாற்கடலிலிருந்து வெளியேறி, நச்சுக்கடலுக்குள் செல்கின்றீர்கள் என்பதை எவரும் அறியார். தந்தை உங்களை ஸ்ரீமத்தைப் பின்பற்றுமாறும், அதன்பின்னர் தானே அதற்குப் பொறுப்பு என்றும் கூறுகின்றார். ஸ்ரீமத் கூறுகிறது: நீங்கள் சென்று, உங்கள் குழந்தைகளைப் பராமரிக்கலாம். தொடர்ந்தும் அவர்களுக்கு இந்த ஞானத்தை ரீங்காரமிடுவதனால், அவர்களால் சிறிதளவு நன்மையைப் பெற்று, சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும். தந்தை வந்து, உங்களை நரகவாசிகளில் இருந்து 21 பிறவிகளுக்குச் சுவர்க்கவாசிகளாக மாற்றுகிறார். இது உங்கள் புத்திகளில் மாத்திரமே உள்ளது. மக்கள் எதனையும் அறியார்கள். இவரும் முன்னர் எதனையும் அறிந்திருக்கவில்லை. இவருடைய 84 பிறவிகளின் கதையே உள்ளதால், இது உங்களுக்கும் பொருந்துகிறது. இவரும் இராஜயோகத்தைக் கற்கிறார். நீங்கள் இராஜரிஷிகளும், அம்மக்கள் ஹத்தயோக ரிஷிகளும் ஆவார்கள். நீங்கள் வீட்டில் வாழும்பொழுதே, ஓர் இராச்சியத்தை அடைகிறீர்கள். இங்கே புகலிடம் கோருவதற்கே நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள். தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக அம்மக்கள் எண்ணுகிறார்கள். உலகில் மாயையின் பகட்டு உள்ளது. நரகம் அழிக்கப்படும்வரை, எவ்வாறு சுவர்க்கம் இருக்க முடியும்? இதனைச் சுவர்க்கம் எனக் கருதி, மக்கள் மாயையினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறார்கள். புதிய உலகை ஸ்தாபிப்பதற்கு பாபா அதிகளவு முயற்சியைச் செய்ய வேண்டும். அனைவரும் முழுமையான நரகவாசிகள். அவர்கள் முற்றாகவே சுவர்க்கவாசிகள் ஆகுவதில்லை! தந்தை உங்களுக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகிறார். அச்சா.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் இராவணனை வெல்வதனால், உலகை வென்றவர்கள் ஆகுவீர்கள். அதற்கு முழு முயற்சி செய்யப்பட வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களுக்கு அகௌரவத்தை ஏற்படுத்தி, உங்களுக்குத் தண்டனையைக் கொண்டு வருகின்ற செயல்கள் எதனையும் செய்யாதீர்கள். மாயையின் புயல்களைப் பற்றி அக்கறைப்படாதீர்கள், ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தையை நினைவு செய்யுங்கள். ஒரேயொரு தந்தையின் மீது உண்மையான அன்பைக் கொண்டிருங்கள்.2. ஒரு மேன்மையான நிலையை அடைவதற்கு, உண்மையான தந்தையிடம் நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருங்கள். எதனையும் மறைக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் சகல பொறுப்புக்களின் சுமையைத் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு, சதா ஓர் இலகு யோகியாக முன்னேறுவீர்களாக.தந்தையின் பணியை நிறைவேற்றும் எண்ணம் கொண்ட குழந்தைகள், தந்தையின் ஒத்துழைப்பை அந்தளவிற்குப் பெறுகிறார்கள். வீணானவை அனைத்தின் சுமையையும் தந்தையிடம் ஒப்படையுங்கள். தந்தைக்குச் சொந்தமானவராகி, பொறுப்பின் சுமையைத் தந்தையிடம் விட்டு விடுவதன் மூலம் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவதுடன் இலகுவாக முன்னேறுவீர்கள். ‘ஏன்? என்ன?’ என்ற கேள்விகளில் இருந்து விடுபட்டிருங்கள். குறிப்பாக முற்றுப்புள்ளி என்ற ஸ்திதியைக் கொண்டிருங்கள். அப்போது நீங்கள் இலகுயோகி ஆகுவதுடன் தொடர்ந்து அதீந்திரிய சுகத்தையும் அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
உங்களின் இதயத்திலும் தலையிலும் நேர்மை இருக்குமாயின், தந்தையாலும் குடும்பத்தாலும் நம்பத் தகுதி வாய்ந்தவர் ஆகுவீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: தந்தை பிரம்மாவைப் போல், சம்பூரணமான, முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.
உங்களின் முழுமை ஸ்திதிக்கு நீங்கள் நெருக்கமாக வரும் அளவிற்கு, மற்றவர்களின் எண்ணங்களை உங்களால் வாசித்தறியக் கூடியதாக இருக்கும். இதற்கு, உங்களின் சொந்த எண்ணங்களுக்கு நீங்கள் ஒரு முழுமையான தடையைப் பிரயோகிக்க வேண்டும். தமது சொந்த எண்ணங்களை ஒன்றுதிரட்டக் கூடியவர்களால் மற்றவர்களின் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடியும். எனவே, உங்களின் சொந்த எண்ணங்கள் என்ற பயணப்பொதியைத் தொடர்ந்து கட்டுங்கள்.