15.06.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அமரத்துவமான பாபா உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஞானத்தின் மூன்றாவது கண்ணைக் கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். இப்பொழுது நீங்கள் முக்காலங்களையும், மூவுலகங்களையும் அறிவீர்கள்.
கேள்வி:
எதன் அடிப்படையில் ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஓர் ஆஸ்தியை வழங்குகின்றார்?பதில்:
உங்கள் கல்வியின் அடிப்படையில் ஆகும். நன்றாகக் கற்று, சரீர உணர்வைத் துறந்து, ஆத்ம உணர்வில் இருக்க முயற்சி செய்கின்ற குழந்தைகளே, தந்தையின் ஆஸ்தியைப் பெறுகின்றனர். ஒரு லௌகீகத் தந்தை தனது புத்திரர்களுக்கே ஆஸ்தியை வழங்குகின்றார். ஆனால், இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட தந்தையோ ஆத்மாக்களுடனேயே ஓர் உறவுமுறையைக் கொண்டிருக்கின்றார், எனவே அவர் ஆத்மாக்களுக்கே ஆஸ்தியை வழங்குகின்றார்.பாடல்:
கள்ளங்கபடமற்ற பிரபுவைப் போன்று தனித்துவமானவர் எவருமில்லை…ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகளான நீங்கள், இந்த மரண பூமியிலிருந்து அமரத்துவ பூமிக்குச் செல்வதற்காக அமரத்துவக் கதையைச் செவிமடுக்கின்றீர்கள். நிர்வாண தாமத்தை அமரத்துவ தாமம் என அழைக்க முடியாது. அந்த அமரத்துவ பூமியில் நீங்கள் அகால மரணத்தை அனுபவம் செய்யமாட்டீர்கள். இதனாலேயே அது அமரத்துவ தாமம் என்று அழைக்கப்படுகின்றது. அமர்நாத் என்று அழைக்கப்படுகின்ற ஆன்மீகத் தந்தை உங்களை அமரத்துவ தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, இந்த மரண பூமியிலே நிச்சயமாக உங்களுக்கு அமரத்துவக் கதையைக் கூறுகின்றார். பாரதத்தில் மூன்று கதைகள் மிகவும் பிரபல்யமானவை: அமரத்துவக் கதை, சத்திய நாராயணனின் கதை, மூன்றாவது கண்ணின் கதை. மூன்றாவது கண்ணின் கதையின் அர்த்தத்தை பக்தி மார்க்கத்தில் எவருமே புரிந்து கொள்வதில்லை. ஞானக்கடலான அமரத்துவ பாபாவைத் தவிர வேறு எவராலுமே உங்களுக்கு இந்த மூன்றாவது ஞானக் கண்ணை வழங்க முடியாது. அவர்கள் பொய்யான கதைகளையே கூறுகின்றனர். நீங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது மூன்றாவது ஞானக்கண்ணைப் பெற்று, அதன் மூலம் முக்காலங்களையும், மூவுலகங்களையும் அறிந்து கொள்கின்றீர்கள் என்பதை இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அத்துடன், அசரீரி உலகம், சூட்சுமலோகம், பௌதீக உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி ஆகியவற்றையும் நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே குழந்தைகளாகிய நீங்கள், உங்களை முக்காலங்களையும் அறிந்தவர்கள் எனப் புரிந்து கொள்கின்றீர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களைத் தவிர, உலகிலுள்ள வேறெவருமே முக்காலங்களையும் அறியவில்லை. வேறு எவருமே முக்காலங்களையும், அதாவது, இந்த உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிய மாட்டார்கள். அசரீரி உலகம், சூட்சுமலோகம், பௌதீக உலகம் போன்றவற்றைப் பலர் அறிவார்கள். எனினும் உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அதாவது முக்காலங்கள் பற்றி எவருமே அறியமாட்டார்கள். இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஆன்மீகத் தந்தை கூறுவதைச் செவிமடுக்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது அவரின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் ஒரு தடவை மாத்திரமே ஆன்மீகத் தந்தையைச் சந்திக்கின்றீர்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். சரீர உணர்வில் இருப்பதாலேயே ஏனைய அனைவரும் கூறுகின்றனர்: நான் இதைக் கற்கின்றேன், நான் இதைச் செய்கின்றேன். அவர்கள் சரீர உணர்வு உடையவர்கள் ஆகுகின்றனர். இப்பொழுது, சங்கம யுகத்தில், ஆன்மீகத் தந்தை வந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களை மிக நன்றாகக் கற்குமாறு கூறுகின்றார். அனைவரும் ஆன்மீகக் குழந்தைகள் என்பதால், ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தையிடம் இருந்து தனது ஆஸ்தியைக் கோர உரிமையுண்டு. லௌகீக உறவுமுறைகளில், புத்திரர்களுக்கு மாத்திரமே ஆஸ்திக்கான உரிமை உள்ளது. இவ்வுலகிற்கு அப்பாற்பட்டவருடனான உறவுமுறையைப் பொறுத்தவரை, அனைத்துக் குழந்தைகளும், அதாவது அனைத்து ஆத்மாக்களும் ஆஸ்தியைப் பெறுகின்றனர். அவர் அமரத்துவப் பிரபுவின் கதையையும் உங்களுக்குக் கூறுகின்றார். அவர் மலைக் குகைகளில் பார்வதிக்குக் கதை கூறியதாகக் கூறப்படுகின்றது. அது தவறானது. எது உண்மை, எது பொய் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். உண்மையான பாபா மாத்திரமே எது உண்மையென உங்களுக்குக் கூறுகின்றார். தந்தை ஒரு தடவையே வந்து உங்களுக்கு உண்மையைக் கூறி, உங்களைச் சத்திய பூமிக்கு அதிபதிகள் ஆக்குகின்றார். இந்தப் பொய்யான உலகம் தீக்கிரையாக வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் பார்க்கின்ற எதுவுமே எஞ்சியிராது. மிகச் சொற்பகாலமே எஞ்சியுள்ளது. ஒரு லௌகீகத் தந்தை யாகம் செய்வது போன்றே இதுவும் சிவபாபாவின் ஞான யாகமாகும். சிலர் உருத்திர யாகம் செய்கின்றனர், சிலர் கீதை யாகம் செய்கின்றனர். சிலர் இராமாயண யாகம் செய்கின்றனர். இது சிவபாபா அல்லது உருத்திரனின் ஞான யாகம் ஆகும். இதுவே இறுதி யாகம் ஆகும். நீங்கள் இப்பொழுது அமரத்துவ தாமத்திற்குச் செல்கின்றீர்கள் என்பதை அறிவீர்கள். இப்பொழுது எஞ்சியிருப்பது இன்னமும் ஒருசில நிமிடங்களே ஆகும். எந்தவொரு மனிதருமே இதை அறிய மாட்டார்கள். இந்த மரண பூமியிலிருந்து அந்த அமரத்துவ பூமிக்குச் செல்வதற்கு இன்னமும் 40,000 வருடங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சத்திய யுகம் அமரத்துவ பூமி எனப்படுகின்றது. தந்தை இப்பொழுது உங்கள் முன்னிலையில் இருந்து, அமரத்துவக் கதையையும், மூன்றாவது கண்ணின் கதையையும், சத்திய நாராயணனின் கதையையும் கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் நிகழ்கின்ற அனைத்தையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். பக்தி மார்க்கத்தில் அதிக விரிவாக்கம் உள்ளது. ஒரு மரம் அதிகளவில் விரிவடைந்துள்ளது போன்றே, பக்தி மார்க்கத்திலும் சம்பிரதாயங்களின் விரிவாக்கத்தின் பெரிய விருட்சம் உள்ளது. யாகங்கள், விரதங்கள், கோட்பாடுகள், தபஸ்யா, மந்திரங்களை உச்சரித்தல் என அவர்கள் எவ்வளவோ செய்கின்றனர்! இப்பிறவியிலே பக்தர்கள் ஆகியுள்ள பலர் உள்ளனர். மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் வளர்கின்றது. நீங்கள் பக்தி மார்க்கத்திற்குச் சென்ற காலத்தில் இருந்தே ஏனைய சமயங்கள் தோன்றின. ஒவ்வொருவரும் தனது சொந்தச் சமயத்துடன் ஒரு தொடர்பைக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொருவரினதும் சம்பிரதாயங்கள் வேறுபட்டவை. பாரதம் அமரத்துவ பூமியாக இருந்தது. இப்பொழுது பாரதம் மரணபூமி ஆகிவிட்டது. நீங்கள் ஆதிசனாதன தேவி தேவதா தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டதால், உங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதையே மறந்து விட்டீர்கள். கிறிஸ்து தனது சமயத்தை நடைமுறையில் ஸ்தாபித்தார் என்றும் கிறிஸ்தவர்கள் அதைப் பின்பற்றினார்கள் என்றும் அவர்கள் கூறுவார்கள். அவர்கள் ஐரோப்பிய சமயத்தவர்கள் என்றில்லை. அவ்வாறே, ஹிந்துஸ்தானிலோ, அல்லது பாரதத்திலோ வாழும் நீங்கள் தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள். எவ்வாறாயினும், உங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. நீங்கள் சீரழிந்த பாவிகளும், ஏழைகளும், விகாரமானவர்களும் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். பக்திமார்க்கத்தில் மக்கள் துன்பத்தை அனுபவிக்கும்போது, தந்தையை அழைக்கிறார்கள். நீங்கள் அழைத்த தந்தையே இப்போது உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காக அமரத்துவக் கதையை உங்களுக்குக் கூறுகிறார் என்பதை பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். நாங்கள் அமரத்துவ பூமியின் அதிபதிகள் ஆகப்போகின்றோம். அமரத்துவ பூமி சுவர்க்கம் எனப்படுகிறது. நீங்கள் சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கு முயற்சி செய்வதாகக் கூறுகிறீர்கள். கலியுகத்தில் ஒருவர் மரணம் அடைந்தால், அவர் சுவர்க்கவாசி ஆகிவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர் சுவர்க்கத்திற்குச் செல்ல எந்த முயற்சியுமே செய்யவில்லை, அவர் செய்தாரா? நீங்கள் அமரத்துவ பூமியான வைகுந்தத்திற்குச் செல்ல முயற்சி செய்கிறீர்கள். உங்களை முயற்சி செய்யத் தூண்டுபவர் யார்? அமர்நாத் என அழைக்கப்படுகின்ற அமரத்துவமான பாபா. இந்த யாகம்(யக்ஞம்) ஒரு கல்வி கற்குமிடம் (பாடசாலை) எனவும் அழைக்கப்படுகிறது. கல்வி கற்கின்ற வேறெந்த இடமும் யக்ஞம் என்று அழைக்கப்பட முடியாது. பிராமணக் குருமார் அமர்ந்திருந்து மந்திரங்களை உச்சரிக்கின்ற வெவ்வேறு யாகங்களும் உருவாக்கப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: உங்களுடைய கல்லூரி, யக்ஞம் இரண்டும் இங்கு ஒன்றாகவே இருக்கின்றன. இந்த ஞான யாகத்தில் இருந்து விநாசத்திற்கான தீச்சுவாலை எழும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த முழு உலகும் அதில் அர்ப்பணமாகப் போகின்றது. அதன் பின்னர் புதிய உலகம் உருவாக்கப்படும். அதுவே மகாபாரத யுத்தம் எனப்படுகின்றது. அதைப் போன்ற யுத்தம் வேறெதுவுமே இல்லை. அவர்கள் ஏவுகணைகளால் சண்டை இட்டதாகக் கூறப்படுகிறது. யுத்தம் உங்களுடன் அல்ல. அது ஏன் மகாபாரத யுத்தம் என்று அழைக்கப்படுகின்றது? பாரதத்தில் ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது. மரணம் வெளியே இடம்பெறுகிறது. இங்கே யுத்தத்தைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: உங்களுக்கு ஒரு புதிய உலகம் தேவை. எனவே, உங்களுக்காக இந்த எண்ணற்ற சமயங்கள் அனைத்தும் அழிக்கப்படப் போகின்றன. பல்ரூப வடிவம் பற்றிய ஞானம் முழுவதும் குழந்தைகளாகிய உங்களுடைய புத்திகளில் உள்ளது. முன்னைய கல்பத்தில் தேவர்கள் ஆகுவதற்காக இங்கு வந்தவர்களே மீண்டும் வருவார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இது புத்திக்கான விடயமாகும். இப்போது பிராமணர்கள் ஆகியுள்ள நாங்கள் அனைவரும் பின்னர் தேவர்கள் ஆகுவோம். பிரஜாபிதா பிரம்மாவும் நினைவுகூரப்படுகிறார். பரமதந்தை, பரமாத்மா மனித உலகை பிரம்மா மூலம் உருவாக்குகிறார். இதனாலேயே பிரம்மா, மனித குலத்தின் தந்தை எனப்படுகின்றார். எவ்வாறாயினும், அவர் எவ்வாறு அல்லது எப்பொழுது அதை உருவாக்குகிறார் என்பது எவருக்குமே தெரியாது. அவர் மனிதர்களை (புதிதாக) உருவாக்க நேரிடுமளவிற்கு ஆரம்பத்தில் மனிதர்கள் எவருமே இருக்க மாட்டார்களா? மக்கள் அழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! மக்கள் தூய்மையற்றவர்கள் ஆகும்போதே, தந்தை வருகிறார். இந்த உலகம் மாற வேண்டும். தந்தை உங்களைப் புதிய உலகிற்குத் தகுதி வாய்ந்தவர்கள் ஆக்குகிறார். நீங்கள் அனைவரும் தமோபிரதானான பழைய உலகில் இருக்கிறீர்கள், நீங்கள் இப்போது சதோபிரதான் ஆகவேண்டும். ஒவ்வொரு மனிதனும், மற்றும் ஏனைய ஒவ்வொன்றும் சதோ, ரஜோ, தமோ நிலைகளினூடாச் செல்லவேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்தி உள்ளார். உலகம் நிச்சயமாகப் பழையதில் இருந்து புதியதாகின்றது. நீங்கள் அங்கே புதிய ஆடைகளை அணிகிறீர்கள், பின்னர் அவையும் பழையவை ஆகின்றன. நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது சத்திய நாராயணனின் கதையைச் செவிமடுக்கிறீர்கள். கீதையே அனைத்துச் சமய நூல்களினதும் இரத்தினமாகத் திகழ்கின்றது. மற்றவை அனைத்தும் அதன் குழந்தைகளே. பிரம்மாவிற்குக் குழந்தைகள் இருப்பது போன்றே கீதையும் பிரதானமானது ஆகும். அதிமேன்மையானவர்கள் தாயும் தந்தையுமே அதிமேலானவர்கள், ஏனையோர் குழந்தைகள் ஆவார்கள். உங்களால் இப்பொழுது தாய், தந்தையிடம் இருந்து ஆஸ்தியைப் பெற முடியும். மற்றவர்கள் எத்தனை சமய நூல்களைக் கற்றாலும், எதைச் செய்தாலும் அவர்களால் இந்த ஆஸ்தியைப் பெறமுடியாது. சமய நூல்களை வாசிப்பவர்கள் அதிக வருமானம் சம்பாதிக்கிறார்கள். அவையனைத்தும் குறுகிய காலத்திற்கே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் இங்கேயே இதைச் செவிமடுக்கிறீர்கள். எனவே நீங்கள் 21 பிறவிகளுக்கு எவ்வளவு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள் எனச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! அதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! அங்கு, ஒருவர் எதையாவது கூற, ஏனையோர் அவருக்கு பணத்தைக் கொடுக்கிறார்கள். இங்கோ, தந்தை குழந்தைகளாகிய உங்களுடன் பேசுகிறார், நீங்கள் 21 பிறவிகளுக்கு அதிசெல்வந்தர்கள் ஆகுகிறீர்கள்! அங்கு, உபதேசிப்பவரின் சட்டைப்பையே நிரம்புகின்றது. பக்தி செய்தல் போன்றவை இல்லறப் பாதையில் உள்ளவர்களுடைய வேலையாகும். நீங்கள் இல்லறப் பாதையைச் சேர்ந்தவர்கள். சுவர்க்க பூமியிலே நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். வேறு எவ்வாறு 84 பிறவிகளின் கணக்கு இருக்கமுடியும்? இது ஞானக்கடலான, பரமாத்மாவிடம் இருந்து மாத்திரமே பெறப்படக்கூடிய ஆன்மீக ஞானமாகும். தூய்மையாக்குபவரான தந்தையே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவர் குழந்தைகளாகிய எங்கள் அனைவருக்கும் அமரத்துவக் கதையைக் கூறுகிறார். நீங்கள் பிறவி,பிறவியாக பொய்யான கதைகளையே கேட்டு வந்தீர்கள். இப்பொழுது நீங்கள் இந்த உண்மையான கதையைச் செவிமடுப்பதன் மூலம் பதினாறு கலைகளும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். சந்திரன் பதினாறு கலைகள் நிறைந்தது எனக் கூறப்படுகிறது. சூரியனுக்கு அவ்வாறு கூறப்படுவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் எதிர்காலத்தில் அனைத்து தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்களாகவும், பதினாறு கலைகள் நிறைந்தவர்களாகவும் ஆகுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். அரைக் கல்பத்திற்குப் பின்னர் உங்களில் கலப்படம் கலக்கின்றது. நீங்கள் மீண்டும் ஒருமுறை அனைத்து தெய்வீகக் குணங்களும், பதினாறு கலைகளும் நிறைந்த தேவர்கள் ஆகுகிறீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் முதலில் வீட்டிற்குச் சென்று, பின்னர் கீழிறங்கி, சரீரங்களை எடுத்து, தேவர்களாகி அதன் பின்னர் சந்திர வம்சத்தினுள் செல்வோம். 84 பிறவிகளின் கணக்கு இருக்க வேண்டும். 84 பிறவிகளின் உண்மையான கதையையும், ஒவ்வொரு யுகத்திலும் நீங்கள் எத்தனை பிறவிகளை எடுக்கிறீர்கள் என்பதையும் அவர் இப்பொழுது உங்களுக்குக் கூறியுள்ளார். பாரத மக்களாகிய நீங்கள் 84 பிறவிகளை எடுக்கிறீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. முதலாவதாக, நீங்கள் மம்மாவையும் பாபாவையும் பற்றிப் பேசுவதால், நீங்கள் பிராமணர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பிரம்மபாபா மூலம் சிவபாபாவிடம் இருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். பிரம்மாவும் அவருக்குச் சொந்தமானவரே. பிரம்மாவிடம் இருந்து இந்த ஆஸ்தி பெறப்பட முடியாது. அவர் உங்களுடைய சகோதரன், அவர் ஒரு சரீரதாரி. குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் அவரிடம் இருந்தே உங்கள் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். இவரிடமிருந்து(பிரம்மா) அல்ல. யாரிடமிருந்து நீங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ, அவரை நீங்கள் நினைவு செய்யக்கூடாது. சிவபாபாவை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அவருக்கே நீங்கள் கூறுகிறீர்கள்: நீங்களே தாயும், தந்தையும், நாங்கள் உங்களுடைய குழந்தைகள். அவரிடம் நீங்கள் இங்கே வரும்போது, நீங்கள் சிவபாபாவிடம் செல்கிறீர்கள் என்பது உங்களுடைய புத்திகளில் இருக்கிறது. சிவபாபாவையே நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். ஆத்மா ஒரு புள்ளி, 84 பிறவிகளின் பாகம் ஆத்மாவிலேயே பதிந்துள்ளது. ஒவ்வோர் ஆத்மாவும் நெற்றியின் மத்தியிலே வசிக்கிறார். அவர் ஒரு விநாடியில் பறந்து செல்கிறார். ஆத்மாவாகிய நான் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கிறேன். நான் சென்று நெற்றியின் மத்தியில் அமர்கிறேன். ஆத்மாவாகிய நீங்கள் எவ்வாறானவர் என்பதை உங்களுடைய புத்திகள் புரிந்து கொள்கின்றன. சத்திய யுகத்தில் அவ்வாறான எதையும் பார்ப்பதற்கான ஆசை இருக்காது. தெய்வீகக் காட்சியினாலேயே ஓர் ஆத்மாவைக் காணமுடியும். அது கண்ணால் காணக்கூடிய ஒரு பொருளல்ல. பக்தி மார்க்கத்திலேயே அவர்கள் காட்சிகளைக் காண்கிறார்கள். இராமகிருஷ்ணரின் சீடரான விவேகானந்தர், தான் இராம கிருஷ்ணருக்கு முன்னால் அமர்ந்திருந்தபோது எவ்வாறு அவருடைய ஆத்மா அச்சரீரத்தை விட்டுப் பிரிந்து தன்னுள் வந்தார் எனக்கூறிய உதாரணம் உள்ளது. அவ்வாறு எதுவுமே இடம்பெறுவதில்லை. எவ்வாறு ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுக்கிறார் என்பவை அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது அமரத்துவ பூமிக்குச் செல்ல முயற்சி செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்த அமரத்துவ பூமியில் பிறப்பெடுப்போம். அங்கு நாம் கர்ப்ப மாளிகையில் இருப்போம். இங்கே நீங்கள் கர்ப்பச்சிறையில் அதிகளவு விரக்திக்கூக்குரல் இடுகின்றீர்கள். இப்பொழுது பாபா உங்களை அரைக் கல்பத்திற்கு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுவிக்கின்றார். எனவே, அத்தகைய தந்தை பெருமளவு அன்புடன் நினைவு செய்யப்பட வேண்டும்! அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள், ஆன்மீகத் தந்தையிடம் கற்று உங்களின் முழு ஆஸ்தியையும் கோரிக் கொள்ளுங்கள். சத்திய பூமிக்கு அதிபதி ஆகுவதற்கு, உண்மையான கதையைக் கேட்டு, மற்றவர்களுக்கும் கூறுங்கள்.2. நீங்கள் சரீரதாரிகள் எவரையுமன்றி, உங்களின் எல்லையற்ற ஆஸ்தியை நீங்கள் யாரிடம் இருந்து பெறுகின்றீர்களோ, அந்தத் தந்தை ஒருவரை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இப்பழைய உலகம் தீக்கிரையாக வேண்டும். எனவே, அதைப் பார்த்தும் பார்க்காதிருங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் மௌன சக்தியால் உங்களின் பதிவேட்டைச் சுத்தமாக வைத்திருந்து, இறைவனாலும் தெய்வீகக் குடும்பத்தாலும் நேசிக்கப்படுபவர் ஆகுவீர்களாக.அதில் ஏதாவது எழுதப்பட்டதா எனக்கூட சொல்ல முடியாத அளவிற்கு நீங்கள் எழுதியவற்றை அழிக்கக் கூடிய முறையில், விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மௌன சக்தியால் உங்களின் பதிவேட்டை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். அப்போது நீங்கள் இறைவனாலும் தெய்வீகக் குடும்பத்தினராலும் நேசிக்கப்படுவீர்கள். அனைவரும் நேர்மையையும் சுத்தத்தையும் விரும்புகிறார்கள். இதனாலேயே, நீங்கள் வீணான எண்ணங்கள் அல்லது வீணான செயல்கள் எவற்றையும் ஒரு நாளில் இருந்து மற்றைய நாளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்காதீர்கள். கடந்தது கடந்ததாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இடுங்கள். அப்போது உங்களின் பதிவேடு சுத்தமாக இருக்கும். அத்துடன் பிரபுவும் உங்களை இட்டு மகிழ்ச்சி அடைவார்.
சுலோகம்:
வீணான எண்ணங்களைக் கொண்டிருப்பதோ அல்லது வீணான எண்ணங்களை மற்றவர்களில் உருவாக்குவதற்குக் கருவிகள் ஆகுவதும் தூய்மை இன்மையே ஆகும்.அவ்யக்த சமிக்கை: சதா முகமலர்ச்சியுடன் இருப்பதற்கு, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் சகித்துக் கொள்பவராகவும் ஆகுங்கள்.
உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களில் இலேசானதன்மை, எளிமை, சகிப்புத்தன்மையைக் கொண்டிருத்தல் அவசியமாகும். இலேசானதன்மையும் எளிமையும் இருந்தும் சகிப்புத்தன்மை இல்லாவிட்டால், உங்களை மேன்மையானவர் என்று சொல்ல முடியாது. இலேசானதன்மையுடனும் எளிமையுடனும் சேர்த்து சகிப்புத்தன்மையும் இருந்தால், உங்களை சக்தி சொரூபம் என்று சொல்ல முடியும். அவர்கள் சக்திகளை இலேசானதன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற தெய்வீகக் குணங்களுடன் காட்டி உள்ளார்கள். தற்போதுள்ள பெறுபேற்றில், சிலவற்றில் அதிகளவு சகிப்புத்தன்மை காணப்படுகிறது. ஏனையவற்றில் அதிகளவு இலேசான தன்மை காணப்படுகிறது. இப்போது, அவை இரண்டையும் சமமானவை ஆக்குங்கள்.