19.05.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, ஸ்ரீமத் மாத்திரமே உங்களை மேன்மையானவர் ஆக்கமுடியும். எனவே, ஸ்ரீமத்தை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்கள் சொந்த மனதின் கட்டளைகளைத் துறந்து, ஒரேயொரு தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்.

கேள்வி:
ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கான வழிமுறை என்ன?

பதில்:
ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கு ஒரேயொரு தந்தையை அன்புடனும் நேர்மையான இதயத்துடனும் நினைவுசெய்யுங்கள். உங்கள் புலனங்கங்கள் மூலம் எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள். அனைவருக்கும் பாதையைக் காட்டுங்கள். உங்கள் இதயத்தைக் கேளுங்கள்: நான் எவ்வளவு புண்ணியம் செய்கிறேன்? 100 மடங்கு தண்டனையை அனுபவம் செய்யக்கூடிய செயல்கள் எதையும் நீங்கள் செய்யாதிருப்பதைச் சோதித்துப் பாருங்கள். இவ்வாறு உங்களைச் சோதிப்பதன் மூலம் உங்களால் புண்ணியாத்மா ஆக முடியும்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது சிவபாபாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரது வழிகாட்டல்களே அனைத்திலும் அதிமேன்மையானவை. எவ்வாறு அனைத்திலும் அதிமேலான சிவபாபா தனது குழந்தைகளுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுத்து, அவர்களை மேன்மையானவர் ஆக்குகின்றார் என்பதை உலக மக்கள் அறிய மாட்டார்கள். இந்த இராவண இராச்சியத்தில் எந்த ஒரு மனிதராலும் மனிதர்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்க முடியாது. நீங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுபவர்கள் ஆகியுள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவரில் இருந்து தூய்மை ஆகுவதற்காகக் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகின்றீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். அதிபதியாக இருந்த இந்த பிரம்மாவும் இதை அறிந்திருக்கவில்லை. உலக அதிபதியாக இருந்தவர், பின்னர் முற்றிலும் தூய்மை அற்றவர் ஆகிவிட்டார். இந்த நாடகத்தை மிக நன்றாகப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். எது சரி, எது பிழை என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதில் புத்தி போராடுகின்றது. முழு உலகமுமே பிழையானது. ஒரேயொரு தந்தை மாத்திரமே சரியானவர். அவர் மாத்திரமே உண்மையைப் பேசுகின்றார். அவர் உங்களைச் சத்திய உலகிற்கு அதிபதிகள் ஆக்குகின்றார், எனவே நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பெறவேண்டும். உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். எவ்வாறாயினும் அவர் மறைமுகமானவர். அந்த ஒரேயொருவர் அசரீரியானவர். இந்த வழிகாட்டல்கள் தாதாவிடம் இருந்து வருவதாகப் பல குழந்தைகள் தவறாக நினைக்கின்றார்கள். மேன்மையான வழிகாட்டல்களை ஏற்றுக் கொள்வதற்கு மாயை அவர்களை அனுமதிப்பதில்லை. நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். பாபா, நீங்கள் எங்களுக்குக் கூறுகின்ற எதுவாயினும் நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வாறாயினும், உங்களிற் சிலர் அதை ஏற்றுக் கொள்வதில்லை. நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றீர்கள். ஏனையோர் அவர்களுடைய சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுகின்றார்கள். உங்களுக்கு மேன்மையான வழிகாட்டல்களைக் கொடுக்கவே பாபா இங்கே வந்துள்ளார். அத்தகைய தந்தையை நீங்கள் மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். அவரது வழிகாட்டல்களைப் பெறுவதற்கு மாயை உங்களை அனுமதிப்பதில்லை. ஸ்ரீமத் மிக இலகுவானது. உலகிலுள்ள எவருமே தாங்கள் தமோபிரதான் ஆகியுள்ளோம் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. ஸ்ரீமத் பகவத்கீதை என்ற எனது வழிகாட்டல்கள் மிகவும் பிரபல்யமானவை. கடவுள் இப்பொழுது கூறுகின்றார்: நான் 5000 வருடங்களின் பின்னர் வந்துள்ளேன். நான் வந்து பாரதத்திற்கு ஸ்ரீமத்தைக் கொடுத்து அதை அனைத்திலும் அதிமேன்மையான தேசமாக ஆக்குகின்றேன். தந்தை உங்களை எச்சரிக்கின்றார், ஆனால் சில குழந்தைகள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. தந்தை ஒவ்வொரு நாளும் கூறுகின்றார்: குழந்தைகளே, ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதை மறந்து விடாதீர்கள். இது இந்த பிரம்மாவைப் பற்றிய கேள்வி இல்லை. அந்த ஒரேயொருவர் உங்களுக்கு என்ன கூறுகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அந்த ஒரேயொருவர் இவர் மூலம் வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அவரே விளங்கப்படுத்துகின்றார். அவர் உண்பதோ, பருகுவதோ இல்லை. அவர் கூறுகின்றார்: நான் இந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றேன். அவர் கொடுக்கும் முதன்மையான ஸ்ரீமத்: என்னை நினைவு செய்யுங்கள்! பாவச்செயல்கள் எதையும் செய்யாதீர்கள்! எவ்வளவு பாவங்கள் நான் செய்துள்ளேன் என உங்கள் இதயத்தை வினவுங்கள். அனைவர் மீதும் உள்ள பாவக்கலசம் இப்பொழுது நிறைந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்பொழுது, அனைவரும் தவறான பாதையிலே உள்ளார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையின் மூலம் சரியான பாதையைக் கண்டு கொண்டீர்கள். இப்பொழுது முழு ஞானமும் உங்கள் புத்தியில் இருக்கின்றது. கீதையில் இருக்க வேண்டிய இந்த ஞானம் அந்த கீதையில் இல்லை. அந்தக் கீதை தந்தையினால் உருவாக்கப்படவில்லை. அதுவும் பக்தி மார்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள் வந்து உங்கள் பக்தியின் பலனைக் கொடுப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. ஞானத்தின் மூலம் நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் சற்கதியைப் பெறுகின்றார்கள், பின்னர் அனைவரும் சீரழிந்தவர் ஆகுகின்றார்கள். இந்த உலகம் தமோபிரதானானது. சதோபிரதான் ஆனவர்கள் எவருமே இல்லை. மறுபிறவி எடுத்ததன் மூலம், நீங்கள் இப்பொழுது முடிவை அடைந்து விட்டீர்கள். மரணம் இப்பொழுது அனைவரின் தலை மீதும் உள்ளது. இது பாரதத்திற்கு மாத்திரமே பொருந்தும். கீதை தேவ தர்மத்தின் சமயநூலாகும். எனவே, நீங்கள் மற்றைய மதங்களுக்குச் செல்வதன் மூலம் என்ன நன்மையைப் பெறுவீர்கள்? மற்றைய மதத்தவர்கள் தங்களுடைய சொந்த குரானையோ அல்லது பைபிள் போன்றவற்றையோ படிக்கின்றார்கள். அவர்களுடைய சொந்த மதம் பற்றி அவர்கள் அறிவார்கள். பாரதமக்களே மற்றைய மதங்களுக்குச் சென்றுள்ளார்கள். ஏனைய அனைவரும் தங்களுடைய சொந்த மதத்தில் உறுதியாக உள்ளார்கள். வெவ்வேறு மதங்களில் உள்ளவர்களின் முகச்சாயல்களும் வேறுபட்டவை. நீங்கள் உங்கள் தேவ தர்மத்தை மறந்து விட்டீர்கள் எனத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு ஞாபகம் ஊட்டுகின்றார். நீங்கள் சுவர்க்கத்தில் தேவர்களாக இருந்தீர்கள். தந்தை பாரத மக்களாகிய உங்களுக்கு “ஹம்ஸோ” வின் அர்த்தத்தைக் கூறுகின்றார். ஆத்மாக்கள், பரமாத்மா என்பதல்ல. பக்திமார்க்கத்தின் குருமார்களே, அந்தக் கதைகளை உருவாக்கினார்கள். மில்லியன் கணக்கான குருமார்கள் இருக்கின்றார்கள். ஒரு பெண்ணுக்கு அவருடைய கணவனே குருவும் கடவுளும் எனக் கூறப்படுகின்றது. அவளுடைய கணவனே கடவுளாக இருந்தால், அவள் ஏன் ‘ஓ கடவுளே! ஓ இராமா!’ என அழைக்கின்றாள்? மக்களுடைய புத்தி முற்றிலும் கல்லாக மாறிவிட்டது. இவர் கூறுகின்றார்: நானும் அவ்வாறே இருந்தேன். வைகுந்தத்தின் அதிபதியான ஸ்ரீகிருஷ்ணருக்கும் கிராமத்துச் சிறுவன் என அழைக்கப்படுகின்றவருக்கும் இடையில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. அவர்கள் சியாம்சுந்தர் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால், அதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. முதலாம் இலக்க சதோபிரதானாக இருந்த சுந்தர் (அழகானவர்) பின்னர் கடைசி நிலையான தமோபிரதான் சியாம் (அவலட்சணமானவர்) ஆகுகின்றார் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் அழகானவர்களாக இருந்தீர்கள், இப்பொழுது அவலட்சணமாக ஆகிவிட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள். உங்களை அவலட்சணத்தில் இருந்து, அழகானவர்கள் ஆக்குவதற்காகத் தந்தை இப்பொழுது ஒரு மருந்தைக் கொடுக்கின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மை ஆகுவீர்கள். உங்கள் பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படும். இராவணன் வந்தபின் நீங்கள் பாவாத்மாக்கள் ஆகியதால், தொடர்ந்தும் கீழே விழுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது பாவாத்மாக்களின் உலகம். எந்த ஒரு நபருமே அழகானவர் இல்லை. வேறு எவருமின்றித் தந்தை ஒருவரால் மாத்திரமே உங்களை அழகானவர்கள் ஆக்கமுடியும். நீங்கள் இங்கே அழகான சுவர்க்கவாசிகள் ஆகுவதற்கே வந்திருக்கின்றீர்கள். தற்பொழுது நீங்கள் அவலட்சணமான நரகவாசிகள். காமம் எனும் சிதையில் அமர்ந்ததால் நீங்கள் அவலட்சணமானவர் ஆகினீர்கள். தந்தை கூறுகின்றார்: காமமே உங்கள் கொடிய எதிரி. காமத்தை வென்றவர்கள் உலகை வென்றவர்கள் ஆவார்கள். முதல் இலக்க விகாரம் காமமாகும். அவ்வாறான ஆத்மாக்களே தூய்மை அற்றவர்கள் எனப்படுகின்றார்கள். நீங்கள் கோபம் உள்ளவர்களைத் தூய்மை அற்றவர்கள் என அழைக்க மாட்டீர்கள். தூய்மையற்ற எங்களை வந்து தூய்மை ஆக்குங்கள் எனத் தந்தையை நீங்கள் அழைத்தீர்கள். ஆகவே தந்தை இப்பொழுது வந்து கூறுகின்றார்: இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகுங்கள். எவ்வாறு இரவுக்குப் பின்னர் பகலும் பகலுக்குப் பின்னர் இரவும் வருகின்றதோ, அவ்வாறே சங்கமயுகத்தின் பின்னர் சத்தியயுகம் வரவேண்டும், சக்கரம் சுழல வேண்டும். எவ்வாறாயினும் வேறு உலகம் ஆகாயத்திலோ, அல்லது பூமியின் கீழோ இல்லை. இந்த ஓர் உலகம் மாத்திரமே இருக்கின்றது. சத்திய, திரேதா, துவாபர, கலியுகங்கள் இங்கேயே இருக்கின்றன. ஒரேயொரு விருட்சம் மாத்திரமே இருக்கின்றது. வேறு எதுவுமே இல்லை. பல உலகங்கள் இருக்கின்றன என மக்கள் கூறுவது பொய்யாகும். தந்தை கூறுகின்றார்: அந்தக் கதைகள் எல்லாம் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. தந்தை இப்பொழுது உங்களுக்கு உண்மையைக் கூறுகின்றார். உங்களை நீங்களே உள்ளார்த்தமாகப் பார்த்துக் கேளுங்கள்: சதோபிரதான் ஆகுவதற்கு, அதாவது ஒரு புண்ணியாத்மா ஆகுவதற்கு, நான் எந்தளவுக்கு ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றேன்? ஒரு சதோபிரதான் ஆத்மா புண்ணியாத்மா என்றும் ஒரு தமோபிரதான் ஆத்மா பாவாத்மா என்றும் அழைக்கப்படுகிறார். விகாரத்தில் ஈடுபடுவது பாவமாகும். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது தூய்மை ஆகுங்கள்! இப்பொழுது நீங்கள் எனக்குச் சொந்தம் ஆகியதால், எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள்! மேலும் பாவம் செய்யாதிருப்பதே பிரதான விடயமாகும். விகாரத்தில் ஈடுபடுவதே முதற்தரமான பாவம். பின்னர் வேறு பல பாவங்களும் செய்யப்படுகின்றன. பெருமளவில் திருடுதல், ஏமாற்றுதல் போன்றவையும் இருக்கின்றன. அவர்களில் பலரை அரசாங்கம் பிடித்துள்ளது. தந்தை குழந்தைகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் கூறுகின்றார்: உங்கள் இதயத்திற்குள் பார்த்துக் கேளுங்கள்: நான் பாவம் செய்கின்றேனா? பாபா ஜனிஜனன்காராக (ஒவ்வொருவரது இதயத்தில் இருக்கும் இரகசியங்களை அறிந்தவர்) இருப்பதால், பாபாவிற்கு எல்லாம் தெரியும்தானே, அதாவது, நீங்கள் திருடுவதையும் இலஞ்சம் வாங்குவதையும் பாபா அறிவார் என நினைக்காதீர்கள். இல்லை. ஜனிஜனன்கார் என்பதன் அர்த்தம் இதுவல்ல. ஓகே, நீங்கள் திருடுகின்றபோது தந்தை அது பற்றித் தெரிந்து கொண்டால்தான் என்ன? திருடுபவர்கள் நிச்சயமாக 100 மடங்கு தண்டனையை அனுபவம் செய்வார்கள். பெருமளவு தண்டனையை அனுபவம் செய்வதுடன் அவர்களுடைய அந்தஸ்தும் அழிக்கப்படும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அவ்வாறான செயல்கள் செய்தால் அதற்காக வருந்த வேண்டியிருக்கும். கடவுளின் குழந்தையாக ஆகியபின்னர், நீங்கள் பெரிய ஆஸ்தியைப் பெறுகின்ற சிவபாபாவிற்கு உரிய பண்டாராவில் (சமையலறை) இருந்து உங்களில் ஒருவர் திருடினால், அது பெரிய பாவம் ஆகும். திருடுகின்ற பழக்கம் உடையவர்கள் சிறைப் பறவைகள் என அழைக்கப்படுகின்றனர். இது கடவுளின் வீடு. இங்குள்ள அனைத்தும் கடவுளுக்கே சொந்தம். தந்தையிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறவே நீங்கள் கடவுளின் வீட்டிற்கு வந்துள்ளீர்கள். உங்களில் சிலர் அந்தப் பழக்கத்தை வளர்த்துக் கொள்கின்றீர்கள். எனவே நீங்கள் 100 மடங்கு தண்டனையையும் சேர்த்துக் கொள்கின்றீர்கள். அதிகளவு தண்டனை அனுபவம் செய்யப்படும். பின்னர் பிறவிபிறவியாகப் பல பிறவிகளுக்கு நீங்கள் அழுக்கான குடும்பங்களில் பிறப்பீர்கள். ஆகவே நீங்களே உங்களுக்கு அந்த இழப்பை ஏற்படுத்துகின்றீர்கள். அவ்வாறான பலர் நினைவில் நிலைத்திருக்காமலும் எதையும் செவிமடுக்காமலும் இருக்கின்றார்கள். அவர்களுடைய புத்தியில் திருடுகின்ற எண்ணத்தையே அவர்கள் கொண்டிருப்பார்கள். அவ்வாறான பல மக்கள் சமய ஒன்றுகூடல்களுக்குச் (சத்சங்கம்) சென்று காலணிகளைத் திருடுகின்றார்கள். அது அவர்களின் வியாபாரம். எங்கெல்லாம் சற்சங்கங்கள் இருக்கின்றதோ, அங்கே சென்று காலணிகளைத் திருடுவார்கள். இந்த உலகம் மிகவும் அழுக்கானது. இது கடவுளின் வீடு. திருடுகின்ற பழக்கம் மிகவும் தீங்கானது. கூறப்பட்டுள்ளது: ஒரு வைக்கோலைத் திருடுபவர் நூறாயிரங்களையும் திருட முடியும். உங்களை நீங்களே வினவுங்கள்: நான் எந்தளவிற்குப் புண்ணியாத்மாவாக ஆகியுள்ளேன்? நான் எந்தளவிற்குத் தந்தையை நினைவுசெய்கின்றேன்? நான் எந்தளவிற்குச் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுகின்றேன்? நான் கடவுளின் சேவைக்கு எவ்வளவு நேரம் செலவு செய்கின்றேன்? எனது எத்தனை பாவங்கள் அழிக்கப்பட்டுள்ளன? ஒவ்வொருவரும் உங்கள் அட்டவணையைப் பார்த்து உங்களையே கேளுங்கள்: நான் எவ்வளவு புண்ணியம் செய்துள்ளேன்? நான் எவ்வளவு நேரம் யோகத்தில் இருந்தேன்? எத்தனை பேருக்கு நான் பாதையைக் காட்டினேன்? நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். நீங்கள் கர்மயோகிகள் என்பதால் நீங்கள் செயல்களைச் செய்யவேண்டும். பாபா இந்த பட்ஜ்களைச் செய்திருக்கிறார். இவற்றை முக்கிய பிரமுகர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இந்த மகாபாரத யுத்தத்தின் மூலம் சுவர்க்க வாயில் திறக்கப்படும். ஸ்ரீகிருஷ்ணரின் படத்தின் கீழ் முதல்தரமான விளக்கங்கள் உள்ளன. எவ்வாறாயினும் குழந்தைகள் இன்னமும் அவ்வாறான எல்லையற்ற, பரந்த புத்தியை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் சிறிதளவு பணம் கிடைத்தவுடன் நடனமாடத் தொடங்குகின்றார்கள். ஒருவரிடம் அதிக பணம் இருக்கும்போது தன்னை விடப் பணக்காரர் யாரும் இல்லை என அவர் நம்புகின்றார். குழந்தைகள் தந்தையைப் பொருட்படுத்தாத பொழுது, அவர் கொடுக்கின்ற அழியாத ஞான இரத்தினங்களிலும் அவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கின்றார்கள். பாபா அவர்களை ஒன்றைச் செய்யுமாறு கூறுவார், அவர்கள் வேறொன்றைச் செய்வார்கள். அவர்களுக்கு அந்த அக்கறை இல்லாததால், அதிகளவு பாவத்தைச் செய்கின்றார்கள். அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில்லை. பின்னர் வீழ்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: இதுவும் நாடகமே. அது அவர்களின் பாக்கியத்தில் இல்லை. பாபா அனைத்தையும் அறிவார். பலர் பாவம் செய்கின்றார்கள். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றபோது பெருமளவு சந்தோஷம் இருக்கும். எதிர்காலப் புதிய உலகில் நீங்கள் இளவரசர்களும் இளவரசிகளும் ஆவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே மட்டற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். எவ்வாறாயினும், சில குழந்தைகள் தொடர்ந்தும் வாடுகின்றார்கள். அவர்களுடைய ஸ்திதி நிலையானதாக இருப்பதில்லை. விநாசத்திற்கான ஒத்திகைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். இயற்கை அனர்த்தங்களும் இடம்பெறும். இவை அனைத்தும் பாரதத்தை பலவீனமடையச் செய்யும். தந்தை கூறுகின்றார்: அவை அனைத்தும் இடம்பெற வேண்டும். இல்லாவிட்டால் எவ்வாறு விநாசம் இடம்பெறும்? பனி பொழியும். அப்பொழுது பண்ணைகள், வயல்கள் போன்றவற்றிற்கு என்ன நிகழும்? நூறாயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். ஆனால், அது தெரிய வராது. ஆகவே நீங்களே உங்களை உள்ளார்த்தமாகச் சோதித்துப் பார்க்க வேண்டிய பிரதான விடயம் எனத் தந்தை கூறுவது: எந்தளவிற்கு நான் தந்தையை நினைவு செய்கின்றேன்? பாபா, நீங்கள் மிக இனிமையானவர்! இது உங்கள் அற்புதமே! இவை உங்கள் கட்டளைகள்: என்னை நினைவுசெய்யுங்கள், நீங்கள் 21 பிறவிகளுக்கு நோய்வாய்ப்பட மாட்டீர்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்யுங்கள், நான் உங்களுக்கு அந்த உத்தரவாதத்தைக் கொடுக்கின்றேன். தந்தை தனிப்பட்ட முறையில் உங்களுக்குக் கூறுகின்றார், நீங்கள் பின்னர் அதை ஏனையோருக்குக் கூறுகிறீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் தந்தையாகிய என்னை நினைவுசெய்து, என் மீது பெருமளவு அன்பு கொண்டிருங்கள். நான் உங்களுக்குத் தூய்மை அற்றவரில் இருந்து தூய்மை ஆகுகின்ற இலகுவான பாதையைக் காட்டுகின்றேன். சிலர் கூறுகின்றனர்: நான் பாவமிக்க ஆத்மா. ஓகே, அப்படியாயின் அவ்வாறான பாவத்தைச் செய்யாதீர்கள். தொடர்ந்தும் என்னை நினைவு செய்யுங்கள். பிறவிபிறவியாக உங்கள் பாவங்கள் இந்த நினைவின் மூலம் அழிக்கப்படும். நினைவு செய்வதே பிரதான விடயம். இது இலகுவான நினைவு என அழைக்கப்படுகின்றது. “யோகம்” என்ற சொல்லை அகற்றுங்கள். சந்நியாசிகள் பல வேறுபட்ட ஹத்தயோகத்தைச் செய்கிறார்கள். அவர்கள் பல வகையான யோகத்தைக் கற்பிக்கின்றார்கள். இந்த பாபா பல குருமார்களை வைத்திருந்தார். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: இப்பொழுது அவை அனைத்தையும் துறந்திடுங்கள். நான் அவர்கள் அனைவரையும் ஈடேற்ற வேண்டும். வேறு எவருக்கும் இதைக் கூறுவதற்கான சக்தி கிடையாது. தந்தை கூறியுள்ளார்: நான் இந்த சாது, சந்நியாசிகளையும் ஈடேற்றுகின்றேன். எனவே அவர்கள் எப்படி குருமார்களாக இருக்க முடியும்? தந்தை உங்களுக்கு ஒரு பிரதான விடயத்தைக் கூறுகின்றார்: உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் ஏதாவது பாவம் செய்கின்றேனா? நான் எவருக்காவது துன்பம் கொடுக்கின்றேனா? இதில் எந்தவிதக் கஷ்டமும் இல்லை. உங்களை உள்ளார்த்தமாகச் சோதியுங்கள்: நாள் முழுவதும் நான் எவ்வளவு பாவம் செய்தேன்? நினைவுசெய்வதில் எவ்வளவு நேரம் நிலைத்திருந்தேன்? நினைவின் மூலம் மாத்திரமே பாவங்களை அழிக்க முடியும். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இது மிகக் கடினமான வேலை. ஒரேயொரு தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். தந்தை மாத்திரமே முக்திக்கும், ஜீவன்முக்திக்குமான பாதையைக் காட்டுகின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற அழியாத ஞான இரத்தினப் பொக்கிஷங்களைப் போற்றுங்கள். கவனயீனமாகிப் பாவச்செயல்கள் எதையும் செய்யாதீர்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற நம்பிக்கை இருந்தால், நீங்கள் எல்லையற்ற சந்தோஷத்தில் நிலைத்திருப்பீர்கள்.

2. கடவுளின் வீட்டிலிருந்து எதையாவது திருடவேண்டும் என ஒருபோதும் எண்ணாதீர்கள். அந்தப் பழக்கம் மிகவும் தீங்கானது. கூறப்பட்டுள்ளது: ஒரு வைக்கோலைத் திருடியவர் நூறாயிரத்தையும் திருட முடியும். உங்களையே கேளுங்கள்: நான் எந்தளவிற்குப் புண்ணியாத்மாவாக ஆகியுள்ளேன்?

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆன்மீகமாக கருணைநிறைந்தவராகி, பலவீனமாகவும் மனச்சோர்வுடனும் சக்தியற்றும் உள்ள ஆத்மாக்களுக்கு மேலதிக சக்திகளை வழங்குவீர்களாக.

ஆன்மீகமாகக் கருணை நிறைந்தவர்கள் ஆகும் குழந்தைகள், மகாதானிகள் ஆகி, சம்பூரணமாக நம்பிக்கை இழந்திருப்பவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். அவர்கள் பலவீனமானவர்களை சக்திவாய்ந்தவர்கள் ஆக்குவார்கள். எந்தவித ஆதாரமும் இல்லாத ஏழைகளுக்கே எப்போதும் தானங்கள் செய்யப்படுகின்றன. மகாதானிகள் ஆகி, பலவீனமாகவும் மனச்சோர்வாகவும் சக்தியற்றும் உள்ள பிரஜை தரமுள்ள ஆத்மாக்களுக்கு ஆன்மீகமாகக் கருணை நிறைந்தவர்கள் ஆகுங்கள். ஒருவருக்கு ஒருவர் மகாதானிகள் ஆகாதீர்கள். உங்களுக்கு இடையே, நீங்கள் ஒத்துழைக்கும் சகபாடிகள். நீங்கள் சகோதரர்கள், அத்துடன் சமமான முயற்சியாளர்கள். எனவே, ஒத்துழைப்பைக் கொடுங்கள், தானங்களை அல்ல.

சுலோகம்:
ஒரேயொரு தந்தையின் மேன்மையான சகவாசத்தில் சதா இருங்கள். வேறு எந்த சகவாசத்தின் நிறமும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.

அவ்யக்த சமிக்கை: ஆன்மீக இராஜரீகம் மற்றும் தூய்மையின் ஆளுமையைக் கடைப்பிடியுங்கள்.

தூய்மையைக் கிரகிப்பதுடன் கூடவே, உங்களின் முகத்திலும் நடத்தையிலும் ஆன்மீகத்தின் ஆளுமையைக் கிரகியுங்கள். அத்துடன் இந்த மகத்தான ஆளுமையின் ஆன்மீகப் போதையையும் பேணுங்கள். உங்களின் ஆன்மீக ஆளுமையை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, சதா சந்தோஷமாக இருங்கள். அப்போது சகல கேள்விகளும் முடிவடைந்துவிடும். அமைதியற்றுத் துயரத்துடன் இருக்கும் ஆத்மாக்கள் உங்களின் சந்தோஷமான ஒரு கணப் பார்வையால் சந்தோஷம் அடைவார்கள்.