19.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் ஆன்மீக வியாபாரம் செய்ய வேண்டும். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதியவாறு ஒவ்வொரு செயலையும் செய்யும்பொழுது, ஆத்மாக்களான நீங்கள் தொடர்ந்தும் விகாரமற்றவர் ஆகுகின்றீர்கள்.
கேள்வி:
நீங்கள் சுவர்க்க ஆஸ்தியைக் கோருவதற்கான அடிப்படை என்ன? சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கான அடிப்படை என்ன?பதில்:
நீங்கள் பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் ஆகும்பொழுது, சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எந்தளவிற்குக் கற்கின்றீர்கள் என்பதே உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கான அடிப்படை ஆகும். தந்தைக்கு உரியவராகிய பின்னர் நீங்கள் தொடர்ந்தும் நன்றாகக் கற்று, முழுமையாகத் தூய்மை ஆகினால், ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறுவீர்கள். முழுமையாகக் கற்காதவர்களும் அல்லது சில கர்ம பந்தனங்கள் உள்ளவர்களும், முழுமையாகத் தூய்மையாகாத நிலையிலேயே தங்கள் சரீரங்களை நீக்குகின்றார்கள். அவர்கள் பிரஜைகளின் மத்தியில் ஒரு சாதாரண அந்தஸ்தைப் பெறுவார்கள்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இங்கே நீங்கள் ஆன்மீக வியாபாரம் செய்கின்றீர்கள், ஆனால் உலகில் வேறு எங்கும் அவர்கள் பௌதீகமான வியாபாரத்தையே செய்கின்றனர். உண்மையில், வியாபாரம் ஆத்மாக்களினுடையதாகும். ஆத்மாக்களே கற்கின்றனர், நடமாடுகின்றனர், தங்கள் சரீரங்களினூடாகப் பாவம் செய்கின்றனர். இதனாலேயே ‘தூய்மையற்ற ஆத்மா’ அல்லது ‘பாவாத்மா’ என்று கூறப்படுகின்றது. ஆத்மாக்களே அனைத்தையும் செய்கின்றார்கள். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரும் சரீர உணர்வு உடையவர்களாக உள்ளனர். தங்களை ஆத்மாக்கள் என்று கருதுவதற்குப் பதிலாக, அவர்கள் நினைக்கின்றனர்: நான் இன்னார், நான் இன்ன தொழில் செய்கின்றேன், இன்னார் கோபக்காரர், காமம் நிறைந்தவர். அவர்கள் சரீரங்களிற்கு வழங்கப்பட்டிருக்கும் பெயர்களையே குறிப்பிடுகின்றனர். இது வீழ்ச்சி நிலையில் இருக்கும் உலகான, சரீர உணர்வுடைய உலகம் எனப்படுகின்றது. சத்திய யுகத்தில் இவ்வாறு இருக்க மாட்டாது. அங்கே, அவர்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆக்கப்படுகின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள்: நான் ஓர் ஆத்மா, இந்தச் சரீரம் என்ற ஆடையை ஏற்று, ஒரு பாகத்தை நடிக்கின்றேன். அந்த நடிகர்களும் வெவ்வேறு ஆடைகளை மாற்றி, தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் முதலில் அமைதி தாமத்தில் இருந்தீர்கள். அமைதி தாமமே உங்களின் வீடு ஆகும். அவை எல்லைக்கு உட்பட்ட நாடகங்களாக இருப்பதைப் போன்றே, இது ஓர் எல்லையற்ற நாடகமாக உள்ளது. சகல ஆத்மாக்களும் பரந்தாமத்தில் இருந்து இங்கு வருகின்றனர்; அவர்கள் சரீரங்களை ஏற்று, தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். பரந்தாமமே ஆத்மாக்களின் ஆதி வீடாகும். அந்த நடிகர்களின் வீடு இங்கேயே இருக்கின்றது. அவர்கள் தங்கள் ஆடைகளை மாற்றி, தங்கள் பாகங்களை நடிக்கின்றனர். தந்தை இங்கே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் ஆத்மாக்கள். தந்தை, “குழந்தைகளே, குழந்தைகளே!” எனக் கூறுகின்றார், ஆனால் சந்நியாசிகள் இவ்வாறு கூறுவதில்லை. தந்தை கூறுகிறார்: தூய்மையாக்குபவரான நானே, ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தை, அத்துடன் தந்தையாகிய கடவுள் என உங்களால் அழைக்கப்படுபவர். தந்தையாகிய கடவுள் அசரீரியானவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கூட தந்தையாகிய கடவுள் என்று அழைக்க முடியாது. அவர்களுக்குள்ளும் ஆத்மாக்கள் உள்ளனர். ஆனால் பிரம்ம தேவருக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள் என்றே கூறப்படுகின்றது. தேவர்கள் என்ன செய்கின்றனர்? எவருக்குமே இது தெரியாது. நீங்கள் எவ்வாறு நாடகத் திட்டத்திற்கேற்ப உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள் எனத் தந்தை மாத்திரமே வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஓர் உலகமே உள்ளது. கீழே நரகமும், மேலே வேறோர் உலகமும் உள்ளது என்றில்லை. உலகம் ஒன்று மாத்திரமே உள்ளது, அதுவே தொடர்ந்தும் சக்கரத்தில் சுழல்கின்றது. சந்திரனில் நிலத் துண்டொன்றை வாங்கப் போவதாக மக்கள் கூறுகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் பெரும் கடனாளிகள் ஆகிவிட்டீர்கள்! பாரத மக்களைப் பற்றிக் கூறப்படுகின்றது: நீங்கள் பெரும் செல்வந்தர்களாகவும், விவேகிகளாகவும் இருந்தீர்கள்! இலக்ஷ்மியும், நாராயணனும் முழு உலகையும் ஆட்சிசெய்தார்கள். எவரும் அதைக் கொள்ளை இடவில்லை. அங்கு பிரிவினைகள் எதுவும் இருக்கவில்லை. இங்கு, பல பிரிவினைகள் உள்ளன! அவர்கள் அனைத்தையும் துண்டுகளாகப் பிரித்து, அவற்றிற்காகச் சண்டை இடுகின்றனர். நீங்கள் முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தீர்கள்; பூமி, ஆகாயம், கடல் அனைத்தும் உங்களுக்கே சொந்தமாக இருந்தன. நீங்களே அதற்கு அதிபதிகளாக இருந்தீர்கள். அது இப்பொழுது துண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டு விட்டது. பாரதமே உலக அதிபதியாக இருந்தது என்பது எவருக்கும் தெரியாது. தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒவ்வோர் ஆத்மாவும் பெறுகின்ற பாகம் ஒருபொழுதுமே அழிந்து போவதில்லை; அது சதா காலத்திற்கும் தொடர்கிறது. நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள். பின்னர் நீங்கள் 84 பிறவிகளை எடுப்பீர்கள். உங்கள் பாகங்கள் சதாகாலமும் தொடர்கின்றன் அவை ஒருபொழுதும் முடிவடைவதில்லை. எவருமே அநாதியான முக்தி போன்றவற்றை அடைவதில்லை. எந்தளவிற்கு அதிகமாகக் குருமார்களும், சமயநூல்களும் உள்ளனவோ, அந்தளவிற்கு அதிகமாக அபிப்பிராயங்களும், கட்டளைகளும் இருக்கின்றன. மனிதர்கள் மத்தியில் அதிகளவு அமைதியின்மை உள்ளது! நீங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் கேட்கின்றார்கள்: நாங்கள் எவ்வாறு மன அமைதியைப் பெறுவது? இதனை அவர்கள் சரீர உணர்வினால் கூறுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: மனமும், புத்தியும் ஆத்மாவின் அங்கங்கள் ஆகும். இவை யாவும் சரீரத்தின் பௌதீக அங்கங்கள். ஆத்மா கூறுகிறார்: எனது மனம் எவ்வாறு அமைதியடைய முடியும்? உண்மையில், இவ்வாறு கூறுவது தவறாகும். நீங்கள் ஓர் ஆத்மா, உங்களின் ஆதிதர்மம் அமைதி. நீங்கள் கூறவேண்டும்: எவ்வாறு இந்த ஆத்மாவான நான், அமைதியை அனுபவம் செய்வது? நீங்கள் நிச்சயமாகச் செயல்களைச் செய்ய வேண்டும். தந்தை மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்துகிறார். உலகிலுள்ள எவரிடமும் இந்த ஞானம் இல்லை. அது பக்தி மார்க்கம் ஆகும். அவர்களுக்கு இந்த ஞானத்தைப் பற்றித் தெரியாது. ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். தந்தையே கூறுகிறார்: ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கமயுகத்திலேயே நான் வருகிறேன். கலியுகத்தின் இறுதியில் அனைவரும் தூய்மை அற்றவர்களாக உள்ளனர். இது இராவண இராச்சியம். பாரத மக்களே, இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். தூய்மையாக்குபவரான, தந்தையின் பிறப்பும் இங்கேயே இடம்பெறுகிறது, இராவணனின் பிறப்பும் இங்கேயே இடம்பெறுகிறது. இராவணன் அனைவரையும் தூய்மை அற்றவர்கள் ஆக்குவதாலேயே, அவர்கள் அவனது கொடும்பாவியை எரிக்கிறார்கள். இவ்விடயங்கள் எவரது புத்தியிலும் இருப்பதில்லை. பாரதத்திலேயே மக்கள் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றனர்; அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீகச் செயற்பாடுகளையும் காட்டுகின்றார்கள்; அவர்கள் பக்திப் பாடல்களையும் பாடுகின்றார்கள். தந்தை கூறுகிறார்: உண்மையில் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீகச் செயற்பாடுகள் எதுவுமே இல்லை. ஸ்ரீகிருஷ்ணர் என்ன செய்தார்? அவர் கம்சனின் பூமியில் பிறந்தார் என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் கம்சன் ஓர் அசுரன். சத்தியயுகத்தில் எவ்வாறு அசுரர்கள் இருக்க முடியும்? ஸ்ரீகிருஷ்ணரின் ஆத்மா சத்தியயுகத்தில் இருந்தார் என்றும், அவர் 84 பிறவிகளை எடுத்தார் என்றும் உங்களுக்குத் தெரியும். இந்நேரத்தில் அவர் தூய்மையற்று இருக்கின்றார், அவர் தூய்மையாகி, மீண்டும் ஒரு தடவை தனது அந்தஸ்தைக் கோருகின்றார். அதேபோன்று, நீங்களும் கிருஷ்ணரின் பூமியிலேயே வசித்தீர்கள். நீங்கள் 84 பிறவிகளை எடுத்து, மீண்டும் ஒரு தடவை உங்கள் அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். உண்மையில், சிவபாபாவின் பிறந்ததினமே கொண்டாடப்பட வேண்டும். அனைவரையும் நரகத்தில் இருந்து சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சிவபாபாவின் தெய்வீகச் செயல்கள் (லீலைகள்) எதுவும் இல்லை. அவர்கள் கூறுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, பாபா, வாருங்கள்! வந்து எங்களை நரகத்தில் இருந்து சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! நீங்கள் எங்களது தந்தை என்பதால், நாங்கள் சுவர்க்கத்தில் இருக்க வேண்டும். நாங்கள் ஏன் விகாரங்கள் நிறைந்த உலகில் இருக்கின்றோம்? இதனாலேயே அவர்கள் அழைக்கிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே, எங்களை இத்துன்ப உலகில் இருந்து விடுவியுங்கள்! இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: இந்நாடகத்தைப் பற்றி எவருக்குமே தெரியாது. சமயநூல்களில், நாடகத்தின் கால எல்லை மிகவும் நீண்டது என அவர்கள் எழுதியிருக்கிறார்கள். புதிய உலகம் பழையதாகி, சதோ, இரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்ல வேண்டும். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். நீங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு தடவை உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். புதிய உலகில் இருந்த பாரத மக்களாகிய நீங்களே 84 பிறவிகளின் பாகங்களை நடிப்பீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள், ஆனால் ஏனைய மனிதர்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள். இதனாலேயே அவர்கள் தூய்மையாக இருந்தவர்களின் விக்கிரகங்களின் முன்னிலையில் சென்று, தலை வணங்குகிறார்கள். தூய்மையாக உள்ளவர்கள் ஏன் தூய்மையானவர்களின் முன்னிலையில் சென்று, தலை வணங்கப் போகிறார்கள்? சந்நியாசிகள் தூய்மையானவர்கள், இதனாலேயே தூய்மையற்ற மனிதர்கள் அவர்கள் முன்னிலையில் தலை வணங்குகிறார்கள். குமாரிகள் தூய்மையானவர்கள், எனவே அனைவரும் அவர்களுக்குத் தலை வணங்;குகிறார்கள். அதே குமாரிகள் திருமணம் செய்து, தங்கள் புகுந்த வீடு செல்லும்பொழுது, அவர்கள் மற்றவர்களுக்குத் தலைவணங்க வேண்டும். அனைவரையும் தூய்மை ஆக்குவதற்கு, எல்லையற்ற தந்தை இப்பொழுது வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் கலியுகத்திலேயே இருக்கிறார்கள். நீங்களோ சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையற்ற உலகிற்குச் செல்ல மாட்டீர்கள். இது நன்மை அளிக்கும் யுகமாகும். தந்தை வந்து, அனைவருக்கும் நன்மை அளிக்கின்றார். நீங்கள் இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகிறீர்கள்; இல்லாவிடில், நீங்கள் நாஸ்திகர்கள் என்றே மக்கள் நினைப்பார்கள். உண்மையில் தங்கள் தந்தையை அறியாதவர்கள் அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறியாதவர்களே நாஸ்திகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்நேரத்தில் அனைவருமே அநாதைகள் ஆகிவிட்டனர். சகல வீடுகளிலும் சச்சரவுகள் இடம்பெறுகின்றன. ஒருவரையொருவர் அடிப்பதற்கும் அவர்கள் தயங்குவதில்லை. இதனாலேயே இது தந்தையை அறியாத, நாஸ்திகர்களின் உலகம் என்றும் அழைக்கப்படுகிறது. நீங்களே அவரை அறிந்து கொண்டவர்கள். நீங்கள் கல்லுப்புத்தியைக் கொண்டிருந்தீர்கள் என்றும், தந்தை இப்பொழுது உங்கள் புத்தியைத் தெய்வீகமாக ஆக்குகின்றார் என்றும் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அதை விடவும் சிரமமானது வேறெதுவும் இல்லை. தந்தை கூறுகிறார்: ஒரு மணித்தியாலம் கற்றிடுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையான, என்னை நினைவு செய்யுங்கள். நீங்கள் சரீரத்தை நினைவு செய்தால், உங்கள் லௌகீக உறவினர்களையே நினைவு செய்வீர்கள். நீங்கள் ஆத்ம உணர்வில் இருந்தால், உங்கள் தந்தையான, என்னை நினைவு செய்வீர்கள். இது விகார உலகமாகும். அனைவரும் இந்த நச்சுக் கடலில் மூச்சுத் திணறுகின்றார்கள். விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொள்வதாகக் காட்டப்படுகிறது. அங்கே நெய்யாறுகள் ஓடும் என்று அவர்கள் கூறுகின்றனர். இங்கே, உங்களால் மெழுகைக் (பரபிஃன்) கூட வாங்க முடியாது. அதிகளவு வேறுபாடு உள்ளது! குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை படகோட்டி என்றும் அழைக்கப்படுகிறார். அவர்கள் பாடுகிறார்கள்: எனது படகை அக்கரைக்குக் கொண்டு செல்லுங்கள். இவை யாவும் படகுகளும், தந்தை மாத்திரமே படகோட்டியும் ஆவார். ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் சரீரங்களை இங்கே நீக்குவீர்கள், பின்னர் ஆத்மாக்கள் அக்கரைக்கு அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் நீங்கள் அங்கிருந்து, சந்தோஷ தாமத்திற்கு அனுப்பப்படுவீர்கள். பரமாத்மாவான பரமதந்தை படகோட்டி என்றும் அழைக்கப்படுகிறார். தந்தையின் புகழைப் பலவிதமாக மக்கள் பாடுகிறார்கள். நீங்கள் இப்பொழுது தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஸ்ரீ ஸ்ரீ சிவபாபா உங்களை மேன்மையானவர்கள் ஆக்குவதற்கு வந்திருக்கிறார். கடவுளே கூறுகிறார்: இது சீரழிந்த உலகம். நீங்கள் இப்பொழுது பரமாத்மா பரமதந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதுடன், அதிமேன்மையானவர்களும் ஆகுகிறீர்கள். இவை குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே புரிந்து கொள்ளப்படுகின்ற, மிகவும் மறைமுகமான, களிப்பூட்டுகின்ற விடயங்கள் ஆகும். மற்றவர்களால் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாது. தேவ தர்மத்தின் மரக்கன்று இப்பொழுது நாட்டப்படுவதை நீங்கள் அறிவீர்கள். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து, பின்னர் வேறு சமயங்களுக்கு மாறியவர்கள் வந்து, பிராமணர்கள் ஆகுவார்கள். பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் ஆகாமல், உங்களால் தந்தையிடம் இருந்து சுவர்க்க ஆஸ்தியைப் பெற முடியாது. பிரம்மாகுமாரர்கள், குமாரிகளான நீங்கள் இப்பொழுது சுவர்க்க ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக முயற்சி செய்து, எந்தளவிற்கு அதிகமாக ஏனையோரையும் தூண்டுகிறீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். அனைவராலும் அதனைச் செய்ய முடியாது. நீங்கள் முழுமையாகக் கற்காது விட்டால், ஏற்படும் விளைவு என்ன? நீங்கள் இப்பொழுது சரீரத்தை நீக்கினால், சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள், ஆனால் பிரஜைகளுக்குள் மிகவும் சாதாரணமானதோர் அந்தஸ்தையே பெறுவீர்கள். நீங்கள் தந்தைக்கு உரியவராகி, நன்றாகக் கற்றால், உங்களால் ஓர் இராஜ அந்தஸ்தைப் பெறமுடியும். நீங்கள் கற்காவிட்டால் அது உங்கள் பாக்கியத்தில் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. நீங்கள் தூய்மையாக இருந்து, கற்றால், உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்கள் ஆகும்பொழுது, உங்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாதிருக்கும். இவ்வாறு பலர் இருக்கிறார்கள். நீங்கள் கர்ம பந்தனத்தில் இருந்து எப்பொழுது விடுபடுவீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. காரின் இரு சில்லுகளும் தூய்மையாக இருந்தால், அது நன்றாகச் செல்லும். இருவருமே தூய்மையாக இருந்தால், அவர்களால் இந்த ஞானச் சிதையில் அமர முடியும். இல்லாவிடின், தொடர்ந்தும் முரண்பாடுகள் இருந்து கொண்டேயிருக்கும். சில குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, சத்தியயுக முதல் இளவரசர் ஸ்ரீ கிருஷ்ணரே என்பது எங்களுக்குத் தெரியும், எனவே நாங்கள் ஏன் கொண்டாடக் கூடாது? அச்சா, என்னால் கிருஷ்ணரின் ஆத்மாவை அழைக்க முடியும், அந்த ஆத்மாவால் விளையாடவும், நடனமாடவும் தான் முடியும். வேறு எதைத் தான் அவர் செய்வார்? கோப, கோபியர் இங்கேயே இருக்கிறார்கள். அங்கே இளவரசர்களும், இளவரசிகளும் சந்தித்து, ஒருவரோடொருவர் நடனம் ஆடுவார்கள். அவர்கள் தங்கத்தாலான புல்லாங்குழல்களை இசைப்பார்கள். இவ் வேடிக்கைகளையும், விளையாட்டுகளையும் நீங்கள் இறுதியில் பார்ப்பீர்கள்; இந்தப் பாகம் முழுவதும் தொடரும். இவை உங்களுக்கு ஆரம்பத்தில் காட்டப்பட்ட பின்னரே, நீங்கள் முயற்சி செய்ய ஆரம்பித்தீர்கள். இப்பொழுது, இறுதியில், ஒவ்வொருவரும் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள் என்பது பற்றிய காட்சிகளை நீங்கள் மீண்டும் காண ஆரம்பிப்பீர்கள். நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். தந்தை இங்கிருந்து இந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். மக்கள் உங்களிடம் கேட்கின்றார்கள்: உங்களுக்கு வேதங்கள், சமயநூல்களில் நம்பிக்கை இருக்கின்றதா? அவர்களிடம் கூறுங்கள்: ஆம், நாங்கள் ஏன் அவற்றில் நம்பிக்கை வைக்கக்கூடாது? அவையனைத்தும் பக்தி மார்க்கத்துச் சம்பிரதாயங்களாகும். அவற்றில் இந்த ஞானம் எதுவும் கிடையாது. ஒரேயொருவர் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் இந்த ஞானத்தைப் பெற்றதும், பக்தி இயல்பாகவே நிறுத்தப்படுகின்றது. நீங்கள் ஓர் ஆலயத்திற்குச் செல்லும்பொழுது, இலக்ஷ்மியும் நாராயணனும் இப்பொழுது மீண்டும் ஒருமுறை புதிய உலகில் ஆட்சி செய்யப் போகின்றார்கள் என்பது உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் இரு பக்கப் பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும் எனத் தந்தை, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் வீட்டில் வசிக்கும்பொழுதே, தூய்மையாக வேண்டும். ஸ்ரீமத் கூறுகிறது: முழுமையாகத் தூய்மை ஆகுங்கள். முழுமையான வைஷ்ணவராகி, விஷ்ணு தாமத்தின் இராச்சியத்தைக் கோருங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கர்மக் கணக்கின் பந்தனத்தை யோகத்தினால் தீர்த்து, தூய்மை ஆகுங்கள். ஞானச் சிதையில் அமருங்கள். ஒரு முழுமையான வைஷ்ணவர் ஆகுங்கள், அதாவது, முழுமையாகத் தூய்மை ஆகுங்கள்.2. உங்களின் ஆதி தர்மமான அமைதியில் ஸ்திரமாக இருங்கள். அனைவருக்கும் அமைதி தாமத்தை நினைவு படுத்துங்கள். ஒருபொழுதுமே அமைதியற்றவர்கள் ஆகாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்ரர் விதையாகி, உங்களின் சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து, சகல நற்குணங்களையும் அனுபவம் செய்வீர்களாக.எப்படி ஒரு முழு மரமும் அதன் விதைக்குள் அடங்கி உள்ளதோ, அதேபோல், சங்கமயுகத்தின் விசேடமான நற்குணங்கள் அனைத்தும் உங்களின் சத்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியிலேயே அனுபவம் செய்யப்படும். ஒரு மாஸ்ரர் விதை என்றால் வெறுமனே அமைதி நிறைந்தவராக இருப்பது மட்டுமன்றி, அமைதியுடன் கூடவே, இந்த ஞானத்தையும் கொண்டிருந்து, சகல பிரதானமான நற்குணங்களையும் - அதீந்திரிய சுகம், அன்பு, ஆனந்தம், சக்தி போன்றவை – அனுபவம் செய்தல் என்று அர்த்தம். நீங்கள் மட்டும் இவற்றை அனுபவம் செய்வீர்கள் என்பதல்ல, ஆனால் ஏனைய ஆத்மாக்கள் அனைவரும்கூட உங்களின் முகத்தில் இருந்து சகல நற்குணங்களையும் அனுபவம் செய்வார்கள். இந்த ஒரு நற்குணத்திற்குள் சகல நற்குணங்களும் அடங்கிவிடும்.
சுலோகம்:
நல்ல தன்மையைக் கிரகியுங்கள். ஆனால் நல்ல தன்மையின் ஈர்ப்பிற்கு உள்ளாகாதீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
பிராமண ஆத்மாக்களான உங்களின் ஆதியான, அநாதியான சம்ஸ்காரம் தூய்மை ஆகும். நீங்கள் இந்த இயல்பான சம்ஸ்காரத்தைப் பயன்படுத்தினால், தூய்மை இன்மை உங்களின் கனவுகள் அல்லது எண்ணங்களிலேனும் தோன்றாது. இப்போது இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கு அப்பால் செல்லுங்கள். அத்துடன் தூய்மையை உங்களின் இயல்பான சம்ஸ்காரம் ஆக்குவதன் மூலம் அவற்றை வெற்றி கொள்ளுங்கள். அதன்பின்னர் இந்தப் பாடத்தில் முயற்சி செய்ய வேண்டிய தேவை இல்லை.