20.08.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, தந்தை உங்களை இந்தப் பாவ உலகிலிருந்து விடுவித்து, ஓய்வும் சௌகரியமும் நிறைந்த ஓர் உலகிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றார். நீங்கள் தந்தையிடம் இருந்து சந்தோஷமும், அமைதியும் என்னும் இரு பரிசுகளைப் பெறுகின்றீர்கள்.
கேள்வி:
முழு உலகிலும் நீங்களே உண்மையான கன்னியாஸ்திரிகள். உண்மையான கன்னியாஸ்திரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?பதில்:
தங்கள் புத்தியில் ஒரேயொருவரின் நினைவைக் கொண்டிருப்பவர்களே உண்மையான கன்னியாஸ்திரிகள், அதாவது, அவர்கள் வேறெவரையும் அன்றி, ஒரேயொருவரை மாத்திரமே நினைவு செய்கின்றார்கள். கன்னியாஸ்திரிகள் என ஏனைய கன்னியாஸ்திரிகள் அழைக்கப்பட்டாலும், அவர்களின் புத்தியில் கிறிஸ்து மட்டும் இருப்பதில்லை. கிறிஸ்துவும் கடவுளின் மகன்; என்றே கூறப்படுவதால், அவர்களின் புத்தியில் இருவர் உள்ளனர். ஆனால், உங்களின் புத்தியிலோ ஒரேயொரு தந்தை மாத்திரமே உள்ளார். இதனாலேயே நீங்களே உண்மையான கன்னியாஸ்திரிகள். நீங்கள் தூய்மையாக இருப்பதற்கான தந்தையின் கட்டளையைப் பெற்றுள்ளீர்கள்.பாடல்:
எங்களை இப்பாவ உலகிலிருந்து அப்பால் ஓய்வும், சௌகரியமும் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். அதைக் கேட்டவர்கள் யார்? ஆத்மாக்கள் ஆவர். ஆத்மாக்களைப் பரமாத்மா என்று அழைக்க முடியாது. மனிதர்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது. அச்சா. நீங்கள் இப்பொழுது பிராமணர்கள். உங்களை இந்நேரத்தில் தேவர்கள் என்று அழைக்க முடியாது. பிரம்மாவைக் கூட தேவர் என்று அழைக்க முடியாது. “பிரம்ம தேவருக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள்” என்று அவர்கள் கூறினாலும், பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளது. விஷ்ணுவை ஒரு தேவர் என்று அழைக்க முடியும், ஆனால் பிரம்மாவை ஒரு தேவர் என்று அழைக்க முடியாது, ஏனெனில், அவர் பிராமணர்களின் தந்தை ஆவார். பிராமணர்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. இவ்விடயங்களை மனிதர்களால் மனிதர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. கடவுளால் மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியும். மனிதர்கள் குருட்டு நம்பிக்கையுடன் தங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுகின்றனர். உங்களை ஆத்மாக்களாகக் கருதுமாறு ஆன்மீகத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். ஆத்மாவாகிய நான், இச்சரீரத்தை ஏற்கின்றேன். ஆத்மாவாகிய நான், 84 பிறவிகளை எடுத்துள்ளேன். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கு ஏற்பவே ஒரு சரீரத்தைப் பெறுகின்றீர்கள். ஆத்மா சரீரத்தை விட்டு நீங்கும்பொழுது, சரீரத்திற்கான அன்பு இருப்பதில்லை. ஆத்மாவிற்கான அன்பு அனுபவம் செய்யப்படுகின்றது. ஆத்மாக்கள் சரீரங்களில் உள்ளபொழுதே, அவர்களுக்கான அன்பு அனுபவம் செய்யப்படுகின்றது. மக்கள் பிரிந்து சென்ற ஆத்மாக்களை வரவழைக்கின்றார்கள். சரீரங்கள் எரிக்கப்பட்டு விட்டன, இருந்தும் அவர்கள் ஆத்மாவை நினைவு செய்கின்றார்கள், இதனாலேயே அவர்கள் அவ்வாத்மாவை ஒரு பிராமணப் புரோகிதரின் சரீரத்தினுள் பிரவேசிக்குமாறு அழைக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றனர்: ‘இன்னாருடைய ஆத்மாவே, வாருங்கள்! வந்து, இந்த உணவை உண்ணுங்கள்!’ அவ்வாத்மா மீது பற்று உள்ளது என்பதே இதன் அர்த்தம் ஆகும். முன்னர் சரீரத்தின் மீது பற்று இருந்ததால், சரீரம் நினைவு செய்யப்பட்டது. தாங்கள் ஆத்மாவையே அழைக்கின்றோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். ஒவ்வோர் ஆத்மாவிலும் நல்ல, தீய சம்ஸ்காரங்கள் உள்ளன. முதலில் சரீர உணர்வு உள்ளது, அதன்பின்னர் ஏனைய விகாரங்கள் வருகின்றன. அனைத்து விகாரங்களும் இருக்கும் பொழுது, ஒருவர் விகாரம் உடையவர் என்று அழைக்கப்படுகின்றார். இவ்விகாரங்கள் எதுவுமற்றவர் விகாரமற்றவர் என்று அழைக்கப்படுகின்றார். பாரதத்தில் தேவர்கள் இருந்தபொழுது, அவர்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் தேவ தர்மத்திற்கு உரியவர்களாக இருந்தனர். கிறிஸ்தவ சமயத்தில் ஆண்களும், பெண்களும் இருப்பதைப் போன்றே, தேவர்களும் தேவி எனவும், தேவன் எனவும் குறிப்பிடப்படுகின்றனர். அரசர், அரசி, பிரஜைகள் அனைவரும் தேவ தர்மத்திற்கு உரியவர்கள். இந்தத் தர்மம் மிகவும் மேன்மையானதும், சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய ஒன்றும் ஆகும். குழந்தைகளான நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். பாபா, ஓய்வையும் சௌகரியத்தையும் அமைதியையும் அனுபவிக்கக்கூடிய ஓர் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என ஆத்மாவே கூறினார். அது சந்தோஷ தாமமும், அமைதி தாமமும் ஆகும். இங்கு மக்கள் ஓய்வற்றும், குழப்பம் அடைந்தும் உள்ளனர். சத்தியயுகத்தில் ஓய்வு இல்லாமை இருக்க மாட்டாது. வேறு எவராலுமன்றி, பாபாவால் மாத்திரமே ஓய்வும், சௌகரியமும் நிறைந்த உலகிற்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும், முக்தியும், ஜீவன்முக்தியும் என்ற இரு பரிசுகளை உங்களுக்காகக் கொண்டு வருகின்றேன். எவ்வாறாயினும், நீங்கள் இதை மறந்து விடுகின்றீர்கள்; நீங்கள் மறப்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மறந்திருக்கும் பொழுதே என்னால் வரமுடியும். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள், நீங்கள் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள் என்ற நம்பிக்கை உங்களிடம் உள்ளது. இந்த ஞானத்தை முழுமையாகப் பெறாதவர்களால் புதிய உலகிற்கு முதலாவதாகச் செல்ல முடியாது; அவர்கள் திரேதா யுகத்திற்கு அல்லது திரேதா யுகத்தின் இறுதிக்கே செல்கிறார்கள். உங்கள் முயற்சிகளிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்த பொழுது, சந்தோஷம் இருந்தது. அச்சா, அவர்கள் தங்களது முன்னைய பிறவியில் யாராக இருந்தார்கள்? எவருமே இதை அறிய மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய முன்னைய பிறவியில் பிராமணர்களாக இருந்தனர். அதற்கு முன்னர் அவர்கள் சூத்திரர்களாக இருந்தனர். வேறுபட்ட குலங்களைப் பற்றி நீங்கள் மிகவும் நன்றாக விளங்கப்படுத்தலாம். நீங்கள் 21 பிறவிகளுக்கு ஓய்வையும், சௌகரியத்தையும் பெறுவீர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பாபா எங்களுக்குப் பாதையைக் காண்பிக்கின்றார். நாங்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்கள், இதனாலேயே நாங்கள் சந்தோஷமற்றும், ஓய்வற்றும் இருக்கின்றோம். ஓய்வும், சௌகரியமும் உள்ள இடமானது அமைதியும், சந்தோஷமும் நிறைந்த இடம் என்றும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகளான உங்களின் புத்தியில் இப்பொழுது ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இந்த ஞானம் உள்ளது. சத்திய யுகத்தில் பாரதம் எவ்வாறு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். அங்கு துன்பம் அல்லது ஓய்வின்மை என்ற குறிப்பே இருக்கவில்லை. நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்குச் செல்ல முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இறை சமுதாயத்தினர் ஆகியுள்ளீர்கள், ஆனால் அம்மக்களோ அசுர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பாவாத்மா என்பது குறிப்பிடப்படுகின்றது. ஆத்மாக்கள் பலர் உள்ளனர், பரமாத்மா ஒருவரே. அனைவரும் சகோதரர்கள். அனைவரும் பரமாத்மாவாக இருக்க முடியாது. இந்த அற்ப விடயம் கூட மனிதர்களின் புத்திகளில் பதிவதில்லை. இந்த முழு உலகமும் எல்லையற்ற தீவு என பாபா விளங்கப்படுத்தி உள்ளார். ஏனைய தீவுகள் சிறியவை. இந்த எல்லையற்ற தீவு முழுவதும் இராவண இராச்சியம் உள்ளது. மனிதர்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் கதைகளைக் கூறுகின்றனர். கதைகளை ஞானம் என்று அழைக்க முடியாது. மனிதர்களுக்கு அவை மூலம் சற்கதியருள முடியாது. இந்த ஞானத்தின் மூலமே சற்கதி பெறப்படுகின்றது. வேறெவருமன்றி, ஒரேயொரு தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். கடவுள் மாத்திரமே வந்து, பக்தர்களைப் பாதுகாக்கின்றார். மனிதர்களால் மனிதர்களைப் பாதுகாக்க முடியாது. சிவபாபா குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் ஆஸ்தியை வழங்குகின்றார். அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவர் உங்களை மரண அரக்கர்களின் தண்டனையில் இருந்து விடுவிப்பதால், அவர் சட்டத்தரணியாக அல்லது வழக்கறிஞராக இருக்கின்றார். சத்திய யுகத்தில் எவருமே சிறைச்சாலைக்குச் செல்வதில்லை. தந்தை அனைவரையும் சிறையிலிருந்து விடுவிக்கின்றார். குழந்தைகளான உங்களின் அதிமேன்மையான ஆசைகள் அனைத்தும் இப்பொழுது பூர்த்தி செய்யப்படுகின்றன. தூய்மையற்ற ஆசைகள் அனைத்தும் இராவணனால் பூர்த்தி செய்யப்படுகின்றன, தூய ஆசைகள் அனைத்தும் தந்தையால் பூர்த்தி செய்யப்படுகின்றன. உங்கள் தூய ஆசைகள் நிறைவேற்றப்படும் பொழுது, நீங்கள் சதாகாலமும் சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். ஒரு தூய்மையற்ற ஆசை தூய்மை அற்றவராகவும், விகாரமுடையவராகவும் ஆகுவதற்கே வருகின்றது. தூய்மையாக இருப்பவர்கள் பிரம்மச்சாரிகள் எனப்படுகின்றனர். நீங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகுங்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களைத் தூய்மை அற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆக்குகின்றார். சாதுக்களும், புனிதர்களும் விகாரத்தின் மூலமே பிறக்கின்றனர். நீங்கள் தேவர்களை அவ்வாறு கூறமாட்டீர்கள். அங்கு விகாரங்கள் கிடையாது; அது தூய உலகாகும். இலக்ஷ்மியும், நாராயணனும் முற்றிலும் விகாரம் அற்றவர்களாக இருந்தனர். பாரதமும் தூய்மையாக இருந்தது. சத்திய யுகத்தில் தூய்மை இருந்தபொழுது, அமைதியும் செழிப்பும் இருந்தன என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். அது இராவண இராச்சியமாக ஆகியதில் இருந்து மக்கள் கீழிறங்கி வருகின்றனர்; அவர்களால் இப்பொழுது பயனில்லை. அவர்கள் முற்றிலும் சிப்பிகளைப் போலாகி விட்டார்கள். நீங்கள் இப்பொழுது தந்தை மூலம் ஒரு வைரத்தைப் போன்று ஆகுகின்றீர்கள். பாரதம் சத்திய யுகமாக இருந்த பொழுது, வைரத்தைப் போல் இருந்தது. இப்பொழுது அதற்கு ஒரு சிப்பியளவு பெறுமதியேனும் இல்லை. அவர்களில் எவரும் தங்களது சொந்தத் தர்மத்தையேனும் அறிந்திருப்பதில்லை; அவர்கள் தொடர்ந்தும் பாவம் செய்கின்றனர். அங்கு, பாவம் என்ற குறிப்பே இல்லை. தேவ தர்மத்தைச் சார்ந்த நீங்கள் மிகவும் பிரபல்யமானவர்கள். தேவர்களின் உருவங்கள் பல உள்ளன. ஏனைய சமயங்களில் அவர்கள் ஓர் உருவத்தை மாத்திரமே கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் ஓர் உருவத்தை மாத்திரமே கொண்டுள்ளனர். பௌத்தர்கள் புத்தரின் உருவத்தை மாத்திரமே கொண்டுள்ளனர். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை மாத்திரமே நினைவு செய்கின்றனர். அவர்கள் கன்னியாஸ்திரிகள் எனப்படுகின்றனர். ‘கன்னியாஸ்திரிகள்’ என்றால் வேறெவரையும் அன்றி, கிறிஸ்துவை மாத்திரம் நினைவு செய்பவர்கள் என்று அர்த்தம். இதனாலேயே கூறப்படுகின்றது: அவர்கள் வேறெவரையும் அன்றி, கிறிஸ்துவை மாத்திரமே நினைவு செய்கின்றனர். அவர்கள் பிரம்மச்சாரினிகளாக உள்ளனர். நீங்களும் கன்னியாஸ்திரிகளே. நீங்கள் இல்லறப் பாதைக்கு உரியவர்களாகி, கன்னியாஸ்திரிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையை மாத்திரமே நினைவு செய்கின்றீர்கள்; வேறெவருமன்றி, ஒருவரை மாத்திரமே நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் வேறு எவருக்கும் அன்றி, சிவபாபாவிற்கே உரியவர்கள். அந்தக் கன்னியாஸ்திரிகளின் புத்தியில் இருவர் உள்ளனர். கிறிஸ்து கடவுளின் மைந்தனாக இருந்தார் என்று அவர்கள் நம்புகின்றனர், ஆனால் கடவுளைப் பற்றிய இந்த ஞானம் அவர்களிடம் இல்லை. குழந்தைகளாகிய உங்களிடம் இந்த ஞானம் உள்ளது. முழு உலகிலுமுள்ள எவரிடமும் கடவுளைப் (பரமாத்மா) பற்றிய இந்த ஞானம் இல்லை. கடவுள் எங்கே வசிக்கின்றார், எப்பொழுது அவர் வருகின்றார் அல்லது அவரது பாகம் என்ன என்பதை எவரும் அறிய மாட்டார்கள். கடவுள் (பகவான்) அனைத்தையும் அறிந்தவர் (ஜனிஜனன்ஹார்) என்றும் அழைக்கப்படுகின்றார். இந்தப் பட்டத்தின் மூலம், அவர் அனைவரதும் இதயத்தில் உள்ளவற்றை அறிவார் என்று மக்கள் நினைக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் இதை அறிவதில்லை. அமர்ந்திருந்து ஒவ்வொருவரதும் இதயத்தில் உள்ளதை அறிந்து கொள்வதற்கான அவசியம் எனக்கு என்ன இருக்கிறது? நான் தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு மாத்திரமே வந்திருக்கின்றேன். ஒருவர் தூய்மையாக இல்லாமல், பொய் பேசுவாராயின், அவர் தனக்குத் தானே ஓர் இழப்பை ஏற்படுத்திக் கொள்கின்றார். அசுரர்கள் வந்து தேவர்களின் ஒன்றுகூடலில் அமர்ந்திருந்ததாக நினைவு கூரப்படுகின்றது. அங்கு அமிர்தம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. விகாரத்தில் ஈடுபடுகின்ற ஒருவர் இரகசியமாக வந்து, இந்த ஒன்றுகூடலில் அமர்ந்திருப்பாராயின், அவர் அசுரனாகவே இருப்பார். அவர் தனது சொந்த அந்தஸ்தையே அழித்துக் கொள்வார். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த முயற்சிகளைச் செய்ய வேண்டும். இல்லாவிடில், நீங்களே உங்களை முழுமையாக அழித்துக் கொள்கின்றீர்கள். பலர் இரகசியமாக வந்து இந்த ஒன்றுகூடலில் அமர்ந்திருந்தனர். தாங்கள் விகாரத்தில் ஈடுபடவில்லை என்று அவர்கள் கூறினாலும், அவர்கள் அதைச் செய்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர்; அவர்கள் தங்களது சொந்த உண்மையை அழிப்பதன் மூலம், தங்களையே முற்றுமுழுதாக அழித்து விடுகின்றார்கள். தர்மராஜை வலது கரமாகக் கொண்ட பரமாத்மா பரமதந்தையின் முன்பாக அவர்கள் பொய் பேசும்பொழுது, தாங்களே தங்களுக்கான சொந்தத் தண்டனையை வரவழைத்துக் கொள்கின்றனர். பல நிலையங்களில் அவ்வாறான பலர் உள்ளனர். பாபா முதற் தடவை டெல்கி சென்றிருந்த பொழுது, ஒருவர் விகாரத்தில் ஈடுபடுவதுடன், நிலையத்திற்குத் தினமும் வந்து கொண்டிருந்தார். தூய்மையாக இருக்காத அவர் இன்னமும் ஏன் நிலையத்திற்கு வருகின்றார் என அவரிடம் வினவப்பட்ட பொழுது, அவர் பதில் அளித்தார்: “இங்கு வராது விட்டால், எவ்வாறு நான் விகாரம் அற்றவன் ஆகுவேன்? நான் தூய்மையை விரும்புகின்றேன், ஆனால் என்னால் தூய்மையாக இருக்க முடியாதுள்ளது. இறுதியில் நான் சீர்திருத்தப்படுவேன். நான் வராவிட்டால், எனது படகு முற்றாக மூழ்கிவிடும். வேறு வழி இல்லாததாலேயே நான் இங்கு வரவேண்டி உள்ளது.” தந்தை விளங்கப்படுத்தினார்: நீங்கள் சூழலைப் பாழாக்குகின்றீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவ்விதமாகத் தொடரப் போகின்றீர்கள்? தூய்மை ஆகுபவர்கள் தூய்மை அற்றிருப்பவர்களை விரும்ப மாட்டார்கள். “பாபா, இவரால் தயாரிக்கப்பட்ட உணவை நான் உண்ண விரும்பவில்லை” என்று அவர்கள் கூறுகின்றனர். தந்தை இதற்கான ஒரு வழிமுறையையும் உங்களுக்குக் காட்டினார்: உங்களுக்கு உணவு பற்றிப் பிரச்சனை இருக்கும் பொழுது, நீங்கள் உங்கள் தொழில் போன்றவற்றைக் கைவிட வேண்டும் என்றில்லை. நீங்கள் ஏதாவது உபாயத்தைக் கண்டறிய வேண்டும். நீங்கள் எவருக்காவது விளங்கப்படுத்தும் பொழுது, அவர் குழப்பம் அடைகின்றார்: “நான் எவ்வாறு தூய்மையாக இருக்க முடியும்? நான் முன்னர் ஒருபொழுதும் இவ்வாறு கேள்விப்பட்டதில்லை. சந்நியாசிகளால் கூட வீட்டில் தூய்மையாக இருக்க முடியாது. அவர்கள் தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் விட்டு விலகும் பொழுது மாத்திரமே அவர்களால் தூய்மையாக இருக்க முடியும்.” எவ்வாறாயினும், தூய்மையாக்குபவரான பரமாத்மா பரமதந்தையே, இங்கு உங்களுக்குக் கற்பிப்பதை எவரும் அறியமாட்டார்கள். அவர்கள் இதை நம்பாததால், எதிர்க்கின்றனர். “சிவபாபா பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசிக்கின்றார் எனக் கூறுகின்ற சமயநூல் எதையாவது எங்களுக்குக் காட்டுங்கள்!” என்று அவர்கள் கூறுகின்றனர். கீதையில் எழுதப்பட்டுள்ளது: நான் ஒரு சாதாரண, வயோதிப சரீரத்தில் பிரவேசிக்கின்றேன். இவருக்குத் தனது சொந்தப் பிறவிகளைப் பற்றித் தெரியாது. இவ்வாறு கீதையில் எழுதப்பட்டுள்ளது, எனவே கடவுள் எவ்வாறு ஒரு மனித சரீரத்தில் பிரவேசிக்கின்றார் என நீங்கள் எப்படி வினவ முடியும்? உங்களுக்குப் பாதையைக் காண்பிப்பதற்காக அவர் ஒரு தூய்மையற்ற சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். அவர் உங்களுக்குப் பாதையைக் காண்பிப்பதற்காக முன்னரும் வந்து கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! அவர் பரந்தாமத்தில் இருந்தவாறு கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! இவ்வாறு ‘சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்’ எனக் கூறுவதற்கு, ஸ்ரீகிருஷ்ணரின் சரீரம் அசரீரி உலகில் இருப்பதில்லை. பரமாத்மா பரமதந்தை மாத்திரமே ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசித்து, குழந்தைகளான உங்களுக்குக் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், இந்த யோகாக்கினியில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதனாலேயே நான் தூய்மையாக்குபவர் என்று அழைக்கப்படுகின்றேன். அவரே நிச்சயமாக ஆத்மாக்களைத் தூய்மையாக்குபவர். ஆத்மாக்களே தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றனர். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக இருந்தபொழுது, 16 சுவர்க்கக் கலைகளும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது எந்தக் கலைகளுமே இல்லை; நீங்கள் முற்றிலும் தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் காமச் சிதையில் அமர்வதால், அவலட்சணமானவர்கள் ஆகுகின்றீர்கள். எனவே, நான் வந்து, உங்களை இந்த ஞானச் சிதையில் அமரச் செய்து, உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். பாரதத்திலேயே தூய, இல்லறப் பாதை இருந்தது, ஆனால் அது இப்பொழுது தூய்மையற்ற இல்லறப் பாதை ஆகிவிட்டது. எவருமே ஓய்வையோ, சௌகரியத்தையோ கொண்டிருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, இருவரும் இந்த ஞானச் சிதையில் அமர வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்பவே சரீரங்களைப் பெறுகின்றோம். தங்கள் அடுத்த பிறவியிலும் அதே கணவன், மனைவியாக அவர்கள் இருப்பார்கள் என்றில்லை. இல்லை; அத்தகைய ஓட்டப் பந்தயம் இருக்க முடியாது. இது கற்பதற்கான விடயமாகும். அவர்கள் ஒருவர் மீதொருவர் அதிக அன்பு கொண்டிருக்கின்ற, அறியாமைப் பாதையில் அவர்களின் விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படலாம் என்பதால் அவ்வாறு நிகழலாம். அது தூய்மையற்ற விகாரம் நிறைந்த பாதை ஆகும். விதவையும் தனது கணவனுடன் உடன்கட்டை (மரணச் சிதையில்) ஏறுகின்றாள். பின்னர் அவள் அவனது அடுத்த பிறவியில் அவனைச் சந்திக்கின்றாள். எவ்வாறாயினும், தங்களின் அடுத்த பிறவியில் அவர்கள் இதை அறிந்திருக்க மாட்டார்கள். நீங்கள் பாபாவுடன் ஞானச் சிதையில் அமர்கின்றீர்கள். நீங்கள் உங்களின் அழுக்கான சரீரங்களைத் துறந்து, வீடு திரும்புவீர்கள். இந்நேரத்தில் நீங்கள் இதை அறிகின்றீர்கள், ஆனால் அவர்களோ தங்கள் முன்னைய பிறவிகளில் தாங்கள் சகபாடிகளாக இருந்ததை அறிய மாட்டார்கள். உங்களுக்கும் கூட இவ்விடயங்கள் பின்னர் ஞாபகத்தில் இருக்காது. இப்பொழுது உங்கள் புத்தியில் இலக்கும், குறிக்கோளும் உள்ளன. மம்மாவும், பாபாவும் இலக்ஷ்மியும், நாராயணனும் ஆகுவார்கள். விஷ்ணு ஒரு தேவர் ஆவார். பிரஜாபிதா பிரம்மாவை ஒரு தேவர் என்று அழைக்க முடியாது. பிரம்மா ஒரு தேவர் ஆகுகின்றார். எவ்வாறு பிரம்மா விஷ்ணு ஆகுகின்றார், விஷ்ணு பிரம்மா ஆகுகின்றார் என நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். சுவர்க்கத்தில் மாத்திரமே ஓய்வும், சௌகரியமும் இருக்க முடியும் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். ஒருவர் மரணிக்கும் பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டதாக, அதாவது, ஓய்வும், சௌகரியமும் நிறைந்த இடத்திற்குச் சென்று விட்டதாக மக்கள் கூறுகின்றனர். தூய்மை அற்றவர்களே ஓய்வற்றவர்கள் ஆகுகின்றனர். தந்தை கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். ஏனையவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய, விபரமான விடயங்கள் ஆகும். தந்தை ஞானம் நிறைந்தவர், ஆகையால் அவர் ஆத்மாக்களாகிய உங்களைத் தனக்குச் சமனாக, ஞானம் நிறைந்தவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் தந்தையின் நினைவின் மூலம் சதோபிரதான் ஆகுகிறீர்கள். இது ஆத்மாக்களின் ஓட்டப் பந்தயம் ஆகும். அதிகளவில் அவரை நினைவு செய்பவர்கள் மிக விரைவாகவே இவ்வாறு ஆகுவார்கள். இது யோகத்தினதும், கல்வியினதும் ஓட்டப் பந்தயம் ஆகும். பாடசாலைகளிலும் ஓட்டப் பந்தயங்கள் இடம்பெறுகின்றன. பல மாணவர்கள் பங்குபற்றுகின்றனர். முதலாம் இலக்கத்தைக் கோருபவர்கள் ஒரு புலமைப் பரிசிலைப் பெறுகின்றனர். ஒரு படிப்பிற்கு நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவாகுகின்றன, எனவே அத்தனை பாடசாலைகளும் இருக்கும். நீங்கள் இப்பொழுது இந்தக் கல்வியைக் கற்க வேண்டும். அனைவருக்கும் இந்தப் பாதையைக் காட்டுங்கள். குருடருக்குக் கைத்தடிகளாகி, இந்தச் செய்தி ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதற்கு உதவுங்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது தூய்மையற்ற ஆசைகளைத் துறந்து, தூய ஆசைகளைக் கொண்டிருங்கள். தூய்மையாகி, தூய உலகின் அதிபதி ஆகுவதே அனைத்திலும் அதி தூய்மையான ஆசையாகும். தவறுகள் எதனையும் மறைத்து, உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் தர்மராஜான, தந்தையுடன் நேர்மையாக இருங்கள்.2. இந்த ஞானச்சிதையில் அமர்ந்து, இக்கல்வி என்ற ஓட்டப்பந்தயத்தில் ஓடி, எதிர்கால, புதிய உலகில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருங்கள். யோகாக்கினியில் பாவக் கணக்கை எரியுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களின் புத்தியின் அன்பை அதியன்பிற்கு உரியவருடன் இணைப்பதன் மூலம் அவருக்கு முன்னால் சதா தனிப்பட்ட முறையில் இருப்பதை அனுபவம் செய்யும் வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.அன்பான புத்தி என்றால், புத்தியின் அன்பானது ஒரேயொரு அதியன்பிற்கு உரியவருடன் தொடர்புபட்டு இருப்பதாகும். ஒரேயொருவரின் மீது அன்பு வைத்திருப்பவர்களால் தமது அன்பை வேறொரு நபருடன் அல்லது உடமைகளுடன் இணைக்க முடியாது. அவர்கள் சதா பாப்தாதாவைத் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு முன்னால் இருப்பதை அனுபவம் செய்வார்கள். ஸ்ரீமத்திற்கு எதிராக அவர்களால் வீணான அல்லது பாவகரமான எண்ணங்களைத் தமது மனங்களில் கொண்டிருக்க முடியாது. ‘நான் உங்களுடன் உண்கிறேன், நான் உங்களுடனேயே இருக்கிறேன், நான் உங்களுடனேயே சகல உறவுமுறைகளையும் நிறைவேற்றுகிறேன்’ என்ற வார்த்தைகள் எப்போதும் அவர்களின் உதடுகளில் இருந்தும் அவர்களின் இதயங்களில் இருந்தும் வெளிப்படும். சதா அன்பான புத்திகளைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே வெற்றி இரத்தினங்கள் ஆக முடியும்.
சுலோகம்:
எனக்கு இது வேண்டும், எனக்கு இது வேண்டும் என்ற எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால், எதையாவது வேண்டுகின்ற இராஜரீகமான வழிமுறை ஆகும்.அவ்யக்த சமிக்ஞை: தூய்மையற்றதன் விதையை முடித்து, முற்றிலும் சுத்தமானவராக (தூய்மையானவராக) ஆகுங்கள்.
இந்தச் சங்கமயுகத்தில், பாப்தாதா குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் முதல் சத்தியத்தை வழங்கி உள்ளார்: நீங்கள் சம்பூரணமாகத் தூய்மை ஆகுவீர்களாக. இந்தத் தூய்மைக்கான சத்தியம், பிரம்மச்சரியத்திற்கான சத்தியம் மட்டுமல்ல. ஆனால், தந்தை பிரம்மாவைப் போல், ஒவ்வொரு வார்த்தையும் அதனுள்ளே தூய்மையின் அதிர்வலையை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒவ்வோர் எண்ணத்திலும் தூய்மையின் முக்கியத்துவம் இருக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் கர்மயோகி வாழ்க்கையின் அனுபவம் இருக்க வேண்டும். இதுவே பிரம்மாச்சாரி (பாதச்சுவடுகளைப் பின்பற்றுபவர்) மற்றும் பிரம்மச்சாரி (பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பவர்) ஆகுதல் எனப்படுகிறது.