20.10.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, யோக சக்தியால் ஐந்து விகாரங்களான இராவணனை வெற்றி கொண்டு உண்மையான தசேராவைக் கொண்டாடுங்கள்.
கேள்வி:
இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? தசேரா எதனைக் குறிக்கின்றது?பதில்:
இராவணன் அழிக்கப்பட்டு, சீதைகள் விடுதலை அடைவதையே தசேரா குறிக்கின்றது. எவ்வாறாயினும், தசேராவைக் கொண்டாடுவதன் மூலம் நீங்கள் இராவணனிடம் இருந்து விடுதலை அடைவதில்லை. மகாபாரத யுத்தம் இடம்பெறும்போதே சீதைகள் அனைவரும் விடுதலை அடைகின்றனர். மகாபாரத யுத்தத்தின் மூலமாகவே இராவண இராச்சியம் முடிவடைகின்றது. எனவே, இராமாயணம், மகாபாரதம், கீதை ஆகியவற்றுக்கு இடையில் மிக ஆழமான தொடர்பு உள்ளது.பாடல்:
சந்தோஷமான விட்டில் பூச்சிகளின் ஒன்றுகூடலில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது.ஓம் சாந்தி.
நீங்கள் பிராமண சமுதாயத்தவர்கள் எனத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். தற்போது உங்களை தேவ சமுதாயத்தவர்கள் என்று அழைக்க முடியாது. நீங்கள் இப்பொழுது பிராமண சமுதாயத்தவர்கள், பின்னர் நீங்கள் தேவ சமுதாயத்தவர்கள் ஆகுவீர்கள். தசேரா தினமாகிய இன்று அவர்களின் இராமாயணம் முடிவடைகின்றது. எவ்வாறாயினும், அது உண்மையில் முடிவடைவதில்லை. இராவணன் மரணித்தால், இராமாயணக் கதை முடிவிற்கு வரவேண்டும், ஆனால் அது உண்மையில் முடிவடைவதில்லை. மகாபாரத யுத்தத்தின் மூலமாகவே முக்தி பெறப்படுகின்றது. இவ்விடயங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இராமாயணம் என்றால் என்ன? மகாபாரதம் என்றால் என்ன? உலகிற்கு இவை பற்றித் தெரியாது. இராமாயணனும், மகாபாரதமும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. மகாபாரத யுத்தத்தின் மூலம் இராவண இராச்சியம் முடிவிற்கு வருகின்றது. பின்னர் தசேரா போன்றவற்றைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. கீதையும், மகாபாரதமும் இராவண இராச்சியத்தை அழிக்கின்றன. இப்பொழுதே அதற்கான காலம் என்பதால் அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன: அவர்களுடையது வன்முறை, உங்களுடையதோ அஹிம்சை ஆகும். உங்களுடையது கீதை. நீங்கள் கீதை ஞானத்தைச் செவிமடுக்கின்றீர்கள். அதன் மூலம் என்ன நிகழும்? இராவண இராச்சியம் முடிவடையும். அவர்கள் இராவணனைக் கொன்றாலும், அதன் மூலம் இராம இராச்சியம் வருவதில்லை. இராமாயணனும், மகாபாரதமும் உள்ளன. மகாபாரத யுத்தம் இராவணனை அழிப்பதற்கே ஆகும். இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் ஆழமான விடயங்கள். இதற்கு மிகவும் பரந்த, எல்லையற்ற புத்தி தேவை. மகாபாரத யுத்தத்தின் மூலமாகவே இராவண இராச்சியம் அழிக்கப்படுகின்றது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். இராவணனைக் கொலை செய்வதால் இராவண இராச்சியம் அழிக்கப்பட்டுவிடும் என்றில்லை. அதற்கே சங்கம யுகம் தேவைப்படுகின்றது. இது இப்பொழுது சங்கம யுகம். நீங்கள் இப்பொழுது இராவணனை வெற்றி கொள்வதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றீர்கள். இதற்குத் தேவைப்படுவது பௌதீக ஆயுதங்களன்றி, இந்த ஞான ஆயுதங்களே ஆகும். அவர்கள் இராமருக்கும், இராவணனுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றதாகச் சித்தரித்திருக்கின்றார்கள். அச்சமய நூல்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை. நீங்கள் இப்பொழுது யோக சக்தியால் இராவண இராச்சியத்தை வெற்றி கொள்கின்றீர்கள். இது மறைமுகமான விடயம். நீங்கள் ஐந்து விகாரங்களான இராவணனை வெற்றி கொள்கின்றீர்கள். எவ்வாறு? கீதையினால். பாபா உங்களுக்கு கீதையைப் பேசுகின்றார். இது பாகவதம் அல்ல. பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக லீலைகள் காட்டப்பட்டுள்ளன, எனினும், ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக லீலைகள் என எதுவுமேயில்லை. மகாபாரத யுத்தம் அல்லது விநாசம் இடம்பெறும்போது, அதன் மூலமாக இராவண இராச்சியம் அழிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவும் ஏணிப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இராவண இராச்சியம் ஆரம்பித்தபோதே பக்தி மார்க்கம் ஆரம்பமாகியது. நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். கீதை மகாபாரதத்துடன் தொடர்புபட்டது. நீங்கள் கீதையைச் செவிமடுத்து, இராச்சியத்தை அடைகின்றீர்கள். உலகைச் சுத்தப்படுத்துவதற்காகவே யுத்தம் இடம்பெறுகின்றது. பாகவதத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வீக லீலைகள் யாவும் பயனற்றவை. சிவபுராணத்தில் அவ்வாறு எதுவுமே இல்லை. உண்மையில் கீதையே சிவபுராணம் என்று அழைக்கப்பட வேண்டும். சிவபாபா இங்கிருந்து இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். கீதையே அதிமேலானது. கீதையே அனைத்துச் சமய நூல்களிலும் மிகவும் சிறியதாகும், ஏனென்றால் ஏனைய சமயநூல்கள் ஓரளவு பெரியவை. அவர்கள் மக்களின் வாழ்க்கை வரலாறுகளையும் பெரியதாக பல்வேறு பாகங்களைக் கொண்ட நூல்களை உருவாக்குகின்றார்கள். நேரு இறந்தபோது அவரின் வாழ்க்கை வரலாறு பற்றி பெரிய பாகங்களைக் கொண்ட நூல்களை உருவாக்கினார்கள். சிவபாபாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகின்ற கீதை ஞானத்தின் பாகங்களே மிகப் பெரியதாக இருக்க வேண்டும். எவ்வாறாயினும், கீதையே மிகவும் சிறியதாக உள்ளது. ஏனெனில், தந்தை ஒரு விடயத்தை மாத்திரமே கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அத்துடன் சக்கரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான்! இதனாலேயே கீதை மிகவும் சிறியதாக உள்ளது. இந்த ஞானம் மனப்பாடம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். சின்னஞ்சிறிய எழுத்துக்களைக் கொண்ட கீதையை வைக்கக்கூடிய பேழைகளை மக்கள் உருவாக்குவதை நீங்கள் அறிவீர்கள். பாபாவும் இப்பொழுது உங்கள் கழுத்தில் திரிமூர்த்தியினதும், இராச்சியத்தினதும் பதக்கங்களை அணிவிக்கின்றார். பாபா கூறுகின்றார்: கீதை இரண்டு வார்த்தைகளைக் கொண்டது: அல்ஃபா, பீற்றா. இதுவே மன்மனாபவ என்ற இரகசிய மந்திரத்தைக் கொண்ட பதக்கம். அதாவது, என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். யோக சக்தியால் வெற்றியடைவதே உங்கள் கடமை. அதற்கு சுத்தமும் உங்களுக்குத் தேவை. உங்களின் யோக சக்தியால் இராவண இராச்சியம் அழிக்கப்பட வேண்டும் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். எப்பொழுது இராவண இராச்சியம் ஆரம்பமாகியது என எவரும் அறியமாட்டார்கள். இந்த ஞானம் மிக இலகுவானது, இது ஒரு விநாடிக்கான விடயம். 84 பிறவிகளின் ஏணிப்படத்தில், நீங்கள் பல பிறவிகளை எடுத்திருப்பது காட்டப்பட்டுள்ளது. இது மிகவும் இலகுவானது. தந்தை ஞானக்கடல் ஆவார். அவர் தொடர்ந்தும் இந்த ஞானத்தைப் பேசுகின்றார். முரளிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தாள்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் அதில் ஏராளம் இருக்கும். தந்தை உங்களுக்கு விபரமாக விளங்கப்படுத்துகின்றார். இரத்தினச் சுருக்கமாக அவர் கூறுகின்றார்: அல்ஃபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் வேறு எதற்காக உங்கள் நேரத்தைச் செலவிடுகின்றீர்கள்? உங்கள் ஒவ்வொருவரின் தலைமீதும் பெரும் பாவச்சுமை உள்ளது. நினைவினால் மாத்திரமே அது அகற்றப்பட முடியும். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் மீண்டும் மீண்டும் மறக்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்தால், உங்களுக்கு ஒருபோதும் எவ்வித தடைகளும் வராது. நீங்கள் சரீர உணர்விற்கு வரும்போதே தடைகளை அனுபவம் செய்கின்றீர்கள். இறுதியில் நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவீர்கள். பின்னர் அரைக் கல்பத்திற்கு எவ்வித தடைகளும் இருக்க மாட்டாது. இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் ஆழமான விடயங்கள். பாபா ஆரம்பத்தில் இருந்தே அதிகமானவற்றை உங்களுக்குக் கூறிவருகின்றார். அதிலும், அவர் கூறுகின்றார்:அல்ஃபாவையும், பீற்றாவையும் நினைவு செய்தாலே போதும்! ஒரு விருட்சம் பரந்து விரிவடையும் அதேவேளை அதன் விதையோ சின்னஞ் சிறியதாகவே உள்ளது. அதிலிருந்தே அந்தளவு பெரிய விருட்சம் வளர்கின்றது. இன்று தசேரா பண்டிகை. இராமாயணத்திற்கும், மகாபாரதத்திற்கும் இடையிலான தொடர்பை பாபா இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இராமாயணம் பக்தி மார்க்கத்திற்கு உரியது. அது அரைக் கல்பத்திற்குத் தொடர்ந்துள்ளது. இப்பொழுது இராவண இராச்சியம் நிலவுவதையே அது குறிக்கின்றது. பின்னர், மகாபாரத யுத்தம் இடம்பெறும்போது இராவண இராச்சியம் முடிவடைந்து, இராம இராச்சியம் ஆரம்பமாகின்றது. இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன? இராம இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும், இராவண இராச்சியம் அழிக்கப்பட வேண்டும். கீதையைச் செவிமடுப்பதால் நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். கீதையும், மகாபாரதமும் இராவண இராச்சியம் அழிக்கப்பட வேண்டிய இந்நேரத்திற்கானவை. அவர்கள் சித்தரித்துள்ள யுத்தம் தவறானது. ஐந்து விகாரங்களையும் வெல்வதற்கே யுத்தம் இடம்பெறுகின்றது. கீதையிலுள்ள மன்மனாபவ, மதியாஜிபவ என்ற இரு வார்த்தைகளைத் தந்தை உங்களுக்குக் கூறுகின்றார். இவ்விரு வார்த்தைகளும் கீதையின் ஆரம்பத்திலும், இறுதியிலும் காணப்படுகின்றன. கீதையின் அத்தியாயம் இப்பொழுது உண்மையிலேயே இடம்பெறுவதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் எவரிடமாவது இதைக் கூறினால், ‘ஸ்ரீகிருஷ்ணர் எங்கே?’ என அவர் கேட்பார். பாபா எங்களுக்குக் கொடுக்கின்ற விளக்கத்திற்கும், பக்தி மார்க்கத்து சமய நூல்கள் கூறுகின்ற விடயங்களுக்கும் இடையில் அதிக வித்தியாசம் உள்ளது. இராமாயணம் என்றால் என்ன, மகாபாரதம் என்றால் என்ன என்பதை எவருமே அறிய மாட்டார்கள். மகாபாரத யுத்தத்தின் பின்னரே சுவர்க்க வாயில்கள் திறக்கின்றன. எனினும் மக்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. எனவே, தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். இதை தந்தை முழு உலகிற்கும் கூறுகின்றார். அந்த ஒரு கீதையும் பொய்யாக்கப்பட்டு விட்டது. கீதை அனைத்து மொழிகளிலும் உபதேசிக்கப் படுகின்றது. உங்கள் இராச்சியத்தில் ஒரு மொழி மாத்திரமே இருக்கும். அங்கு சமய நூல்கள், புத்தகங்கள் எதுவுமே இருக்காது. பக்தி மார்க்கத்தில் செய்கின்ற எதுவுமே அங்கு இருக்காது. இராமாயணம், மகாபாரதம், கீதை ஆகியவற்றுடன் பாரதத்திற்குத் தொடர்பு உள்ளது. கடவுள் தனது குழந்தைகளுக்கு கீதையைப் பேசுகின்றார். அதன் மூலம் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். மகாபாரத யுத்தம் நிச்சயமாக இடம்பெறவே வேண்டும், அப்பொழுதே தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட முடியும். நீங்கள் கீதை மூலம் தூய்மை ஆகின்றீர்கள். தூய்மையாக்குபவரான கடவுள் இறுதியிலேயே வருகின்றார். அவர் கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி, நீங்கள் அதை வெற்றிகொள்ள வேண்டும். காம விகாரத்தால் ஒருபோதும் தோற்கடிக்கப்படாதீர்கள், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. பிரபல்யமான மக்கள், அமைச்சர்கள் போன்றோர் காமத்தின் காரணமாகவே அவதூறு செய்யப்படுகின்றனர். காமத்தாலேயே பலரும் சீரழிந்து போகின்றனர். இதனாலேயே தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கின்ற பல இளைஞர்கள் பாபாவிடம் வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் திருமணம் செய்ய மாட்டார்கள். அவ்வாறு வாழ்கின்ற பெண்களும் உள்ளனர். கன்னியாஸ்திரிகள் ஒருபோதும் விகாரத்தில் ஈடுபடுவதில்லை, எனினும் அவ்வாறு வாழ்வதால் அவர்களுக்கு எந்தப் பேறும் கிடைப்பதில்லை. தூய்மையாகி, பிறவி பிறவியாக சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவதே இங்குள்ள விடயம். ஒவ்வொருவரின் தலைமீதும் பல பிறவிகளின் பாவச்சுமை உள்ளது. அப்பாவங்கள் அழிக்கப்படும்போதே உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். இங்கே, மக்கள் தொடர்ந்தும் பாவங்கள் செய்கின்றனர். ஒரு சந்நியாசி ஒரு பிறவிக்குத் தூய்மையாக இருக்கக்கூடும், எனினும் அவர் விகாரத்தின் மூலமாகவே பிறக்கின்றார். இராவண இராச்சியத்தில் எவருமே விகாரமின்றிப் பிறக்க முடியாது. சிலர் கேட்கின்றனர்: அங்கு எவ்வாறு பிறப்பு இடம்பெறுகின்றது? யோக சக்தி என்றால் என்ன? இந்தக் கேள்விகளுக்கான அவசியமே இல்லை. அவ்வுலகம் முற்றிலும் விகாரம் அற்றது. அங்கு இராவண இராச்சியம் இல்லை. எனவே அந்தக் கேள்வி அங்கு எழுவதில்லை. நீங்கள் அனைத்தினதும் காட்சிகளைக் காண்பீர்கள். அங்கு ஒருவருக்கு வயதாகும்போது, அவர் எவ்வாறு மீண்டும் ஒரு குழந்தை ஆகுவார், எவ்வாறு தனது தாயின் கர்ப்பத்தினுள் பிரவேசிப்பார் என்ற காட்சியைப் பெறுவார். தான் எந்த வீட்டிற்குச் செல்வார் என்பதை அவர் அறியமாட்டார். தான் மீண்டும் ஒரு குழந்தையாக வேண்டும் என்பதை மாத்திரமே அவர் அறிவார். ஆண் மயில், பெண் மயிலின் உதாரணம் உள்ளது. ஆண் மயிலின் கண்ணீர் மூலமே பெண் மயில் கர்ப்பம் தரிக்கின்றது. பப்பாசி மரம் காய்ப்பதற்கும் ஆண், பெண் மரங்கள் அருகருகே நடப்படுகின்றன. இது ஓர் அற்புதம். புலன் உணர்வு அற்றவைகளே இவ்வாறாயின், சத்தியயுகத்தில் புலன் உணர்வு உள்ளவர்களுக்கு எதுதான் சாத்தியமில்லை? நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது இந்த விபரமான விடயங்களைப் புரிந்து கொள்வீர்கள். தந்தையை நினைவு செய்வதால் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதானாகி, உங்கள் ஆஸ்தியையும் கோரமுடியும் என்பதே பிரதான விடயம். அங்குள்ள சம்பிரதாயங்களை பின்னர் உங்களால் காண முடியும். நீங்கள் யோகசக்தி மூலம் உலக அதிபதிகள் ஆகின்றீர்கள். எனவே, அதன் மூலம் குழந்தைகள் ஏன் பிறக்க முடியாது? பலரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கின்றனர், அவர்கள் சரியான பதில்களைப் பெறாதபோது, வீழ்ந்து விடுகின்றனர்! அவர்களுக்கு அற்ப விடயங்களில் சந்தேகம் எழுகின்றது. சமய நூல்களில் அத்தகைய விடயங்கள் இல்லை. சமய நூல்கள் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. பரம தந்தை, பரமாத்மா வந்து பிராமண, சூரிய வம்ச, சந்திர வம்ச தர்மங்களை ஸ்தாபிக்கின்றார். பிராமணர்கள் சங்கம யுகத்திற்கு உரியவர்கள். பாபா சங்கம யுகத்திலேயே வரவேண்டும். ஓ, தூய்மையாக்குபவரே வாருங்கள்! என மக்கள் அழைக்கின்றார்கள். ஓ, விடுதலையளிப்பவரே, எங்களைத் துன்பத்தில் இருந்து விடுவியுங்கள்! என வெளிநாட்டவர்கள் அழைக்கின்றார்கள். தங்களைத் துன்பப்பட வைப்பவர் யார் என்பது அவர்களுக்குத் தெரியாது. இராவண இராச்சியம் முடிவிற்கு வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கின்றார். உங்கள் கல்வி முடிவடையும்போது, விநாசம் ஏற்படுகின்றது, அதுவே மகாபாரத யுத்தம் என்று அழைக்கப்படுகின்றது. மகாபாரத யுத்தத்தின் மூலமே இராவண இராச்சியம் அழிக்கப்படுகின்றது. தசேராவின்போது அவர்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள். அது எல்லைக்கு உட்பட்ட விடயம். ஆனால் இதுவோ எல்லையற்ற விடயம். முழு உலகமும் அழிக்கப்பட வேண்டும். சிறிய புதல்விகள் மகத்தான ஞானத்தைப் பெறுகின்றார்கள்! லௌகீக ஞானம் மெழுகு அல்லது மண்ணெண்ணெய் போன்றது. ஆனால் இந்த ஞானமோ உண்மையான நெய்யைப் (சுத்திரிகரிக்கப்பட்ட வெண்ணெய்) போன்றது. இதில் இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. இராவண இராச்சியத்தில் நீங்கள் எண்ணெயையே உண்ண வேண்டியுள்ளது. முன்னர் நெய் மிகவும் மலிவாக இருந்தது, ஆனால் இப்பொழுது அதன் விலை மிகவும் உயர்ந்து விட்டது. எனவே நீங்கள் எண்ணெயை உண்ண வேண்டியுள்ளது. முன்னர் எரிவாயு, மின்சாரம் போன்றவை இருக்கவில்லை. கடந்த 50, 60 வருடங்களில் பல விடயங்கள் மாறிவிட்டன. இவை அனைத்தும் இப்பொழுது அழியப் போகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். எங்களை இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆக்குவதற்காகவே சிவபாபா இப்பொழுது எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த பாபாவிற்கு அந்த போதை அதிகளவில் உள்ளது. மாயை குழந்தைகளாகிய உங்களை மறக்கச் செய்கின்றாள். நீங்கள் பாபாவிடம் இருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வந்திருக்கின்றீர்கள் என்று கூறுகின்றீர்கள். அப்படியாயின், நீங்கள் ஏன் அந்த போதையை உணர்வதில்லை? ஏனெனில் நீங்கள் உங்களது இனிய வீட்டையும், இனிய இராச்சியத்தையும் மறந்து விடுகிறீர்கள். தங்கள் எலும்புகளால் சேவை செய்பவர்கள் மகத்தான இளவரசர்கள் ஆகுவார்கள் என்பதை பாபா அறிவார். உங்களிடம் ஏன் அந்த போதை இல்லை? ஏனெனில் நீங்கள் நினைவில் இருப்பதில்லை. நீங்கள் சேவையில் முழுமையாக உங்களை ஈடுபடுத்துவதில்லை. சிலவேளைகளில் உங்களுக்கு சேவையில் அதிக ஆர்வம் உள்ளது, ஆனால் சில சமயங்களில் நீங்கள் பின்வாங்குகின்றீர்கள். இவ்வாறு நிகழ்கின்றதா என நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே கேட்டுப் பார்க்கலாம். சிலவேளைகளில் நீங்கள் தவறுகள் செய்கின்றீர்கள். இதனாலேயே பாபா உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டியுள்ளது. நீங்கள் அனைவருடனும் மிக இனிமையாகப் பேசி அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும். எவரும் கடுமையாகப் பதிலளிக்கக் கூடாது. பாபா அன்புக் கடல் ஆவார். பசு வதையைத் தடுப்பதற்காக மக்கள் அதிகமாக பிரயத்தனம் செய்கின்றார்கள். பாபா கூறுகின்றார்: காம வாளைப் பயன்படுத்துவதே மிகப்பெரிய வதையாகும். முதலில் அதை முடிவிற்குக் கொண்டு வாருங்கள். அவர்கள் எவ்வளவுதான் பிரயத்தனம் செய்தாலும், ஏனைய வதைகள் முடிவடையப் போவதில்லை. காம வாளும் பயன்படுத்தப்படக் கூடாது. மக்கள் கூறுவதற்கும், தந்தை கூறுவதற்கும் இடையில் அதிக வேறுபாடு உள்ளது. காமத்தை வெற்றி கொள்பவர்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவார்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தைக்குச் சமனாக, அன்புக்கடல் ஆகுங்கள். ஒருபோதும் கடுமையாக இருக்காதீர்கள். மிக இனிமையாகப் பேசி, அனைவரையும் சந்தோஷப்படுத்துங்கள்.2. உங்களின் எலும்புகளால் சேவை செய்யுங்கள். நீங்கள் உங்களின் பழைய சரீரத்தை நீக்கி, இளவரசனாகவும் இளவரசியாகவும் ஆகப்போகின்றீர்கள் என்ற போதையைப் பேணுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் ஆத்ம உணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து எப்போதும் விசேடமான பாகத்தை நடிப்பதன் மூலம் திருப்தி இரத்தினம் ஆகுவீர்களாக.விசேடமான நடிகர்களாக இருக்கும் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் விசேடமாகவே இருக்கும். அவர்களின் செயல்கள் எதுவுமே சாதாரணமாக இருக்காது. சாதாரணமான ஆத்மாக்கள் சரீர உணர்வில் இருந்தவண்ணம் எந்தவொரு செயலையும் செய்வார்கள். ஆனால் விசேடமான ஆத்மாக்கள் ஒவ்வொரு செயலையும் ஆத்ம உணர்வில் இருந்தவண்ணமே செய்வார்கள். ஆத்ம உணர்வில் ஸ்திரமாக இருந்தவண்ணம் செயலைச் செய்பவர்கள், சதா திருப்தியாக இருப்பதுடன் மற்றவர்களையும் திருப்திப்படுத்துவார்கள். இவ்வாறே அவர்கள் இயல்பாகவே திருப்தி இரத்தினங்களாக இருக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள்.
சுலோகம்:
பரிசோதனை செய்யும் ஆத்மாவாகி, யோகப் பரிசோதனையால் உங்களின் பொக்கிஷங்கள் அனைத்தையும் தொடர்ந்தும் அதிகரியுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: மற்றவர்களை ஈடேற்றும் மனப்பான்மையைக் கொண்டிருந்து, உங்களை இகழ்பவர்களையும் ஈடேற்றுங்கள்.
உங்களின் நன்மைசெய்யும் மனோபாவத்தாலும் உணர்வுகளாலும் உங்களால் எந்தவோர் ஆத்மாவையும் பராமரிக்க முடியும். ஓர் ஆத்மா எந்தளவிற்கு உங்களை இகழ்ந்தாலும் உங்களால் அந்த ஆத்மாவிற்கு நீங்கள் வழங்கும் பராமரிப்பின் மூலம் மற்றவர்களை ஈடேற்றுகின்ற ஆத்மா ஆக்க முடியும். ஓர் ஆத்மா எவ்வளவுதான் தூய்மை அற்றவராக இருந்தாலும் உங்களின் தூய்மையாக்குபவர் என்ற மனோபாவத்தால் உங்களால் அந்த ஆத்மாவைத் தூய்மையாக்க முடியும். ஒரு தாய் ஒருபோதும் தனது குழந்தைகளின் பலவீனங்களை அல்லது குறைபாடுகளைப் பார்க்க மாட்டார். அவற்றைச் சரியாக்கும் உணர்வையே அவர் எப்போதும் கொண்டிருப்பார். அதேபோல், மற்றவர்களைப் பராமரிக்கும் உங்களின் ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். அப்போது உங்களால் தொடர்ந்து மிகச்சரியான முன்னேற்றத்தைச் செய்ய முடியும்.