22.02.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    05.02.2009     Om Shanti     Madhuban


சேவை செய்யும்போது, இலேசாகவும் ஒளியாகவும் உள்ள தேவதை ஸ்திதியில் நிலைத்திருங்கள். சரீரமற்றவராக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.


இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளின் மூன்று ரூபங்களைப் பார்க்கிறார். எப்படி உங்களுக்குத் தந்தையின் மூன்று ரூபங்களைத் தெரியுமோ, அதேபோல், அவர் குழந்தைகளான உங்களின் மூன்று ரூபங்களையும் பார்க்கிறார். அவையே இந்தச் சங்கமயுகத்தில் அவர்களின் இலட்சியமும் அதன் தகைமைகளும் ஆகும். ஒன்று, பிராமண ரூபம், இரண்டாவது, தேவதை ரூபம். மூன்றாவது, தேவ ரூபம். பிராமணர்கள் தேவதைகள் ஆகப் போகின்றார்கள், தேவதைகள் தேவர்கள் ஆகப் போகின்றார்கள். எனவே, தற்சமயம், உங்களுக்கு முன்னால் உள்ள விசேடமான இலட்சியம் என்ன? உங்களால் தேவதைகள் ஆகாமல், தேவதேவியர்கள் ஆக முடியாது. எனவே, தற்போதைய நேரத்திற்கும் உங்களின் முயற்சிகளுக்கும் ஏற்ப, உங்களின் இலட்சியம் ஒரு தேவதை ஆகுவதாகும். சங்கமயுகத்தின் முழுமை ரூபம், தேவதையே ஆகும். தேவதையே ஒரு தேவர் ஆகுவார். ஒரு தேவதையின் வரைவிலக்கணம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு தேவதை என்றால், பழைய உலகில் உள்ள உறவுமுறைகள், சம்ஸ்காரங்கள், எண்ணங்களில் இலேசாக இருப்பதாகும். பழைய சம்ஸ்காரங்களிலும் இலேசாக இருப்பதாகும். உங்களின் பழைய சம்ஸ்காரங்கள், சுபாவம், உலகில் இலேசாக இருப்பது மட்டுமல்ல, ஒரு தேவதை என்றால் அனைவருடனும் உறவுமுறையைக் கொண்டிருக்கும்போது இலேசான தன்மையைக் கொண்டிருப்பதுடன், அனைவரின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களிலும் இலேசாக இருத்தல் என்று அர்த்தம். இந்த இலேசான தன்மையின் அடையாளம் என்ன? அந்த தேவதை ஆத்மாக்கள் அனைவரிடமும் அன்பு வைத்திருப்பார்கள். சிலரிடம் மட்டும் அன்பு வைக்காமல், தந்தையிடம் அவர்கள் அன்பு வைப்பதைப் போன்று, அனைவரிடமும் அன்பு வைத்திருப்பார்கள். தந்தை பிரம்மாவை, நீங்கள் அனைவரும் உங்களின் தந்தையாகவே கருதுகிறீர்கள். ‘எனது பாபா!’ என்றே நீங்கள் சொல்கிறீர்கள். இத்தகையதோர் தேவதை என்றால் அனைவராலும் நேசிக்கப்படுபவர் என்று அர்த்தம். பிரம்மாபாபா பிரம்மாவாக இருந்தார் என்று சில குழந்தைகள் நினைக்கிறார்கள். ஆனால், உங்களைப் போன்ற பிராமண ஆத்மாக்களுக்கு இடையே, உங்களின் அதியன்பிற்குரிய தாதி அனைவராலும் நேசிக்கப்பட்டார், அனைவரும் தமது சொந்த அனுபவத்தில் மிகுந்த அன்புடன் ‘எனது தாதி’ என்றே கூறியதை நீங்கள் அனைவரும் கண்டுள்ளீர்கள். சுபாவம், சம்ஸ்காரங்களைப் பொறுத்தவரையும் மற்றும் இந்தப் பழைய உலகில் வாழும்போதும் அவர் அன்பாகவும் பற்றற்றவராகவுமே இருந்தார். அனைவரும் உரிமையுடன் ‘எனது தாதி’! எனக் கூறினார்கள். எனவே, அதற்கான காரணம் என்ன? அவர் தனது சுபாவத்திலும் சம்ஸ்காரங்களிலும் இலேசாக இருந்தார். அவர் அனைவருக்கும் சொந்தமாக இருக்கும் உணர்வைக் கொடுத்தார். அவர் ஓர் உதாரணமாக இருந்தார். நீங்கள் ஜெகதாம்பாவையும் கண்டீர்கள். அவர் உலகத்தாய் என்று சிலர் நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், தாதி உங்களின் பிராமணக் குடும்பத்தில் ஒரு சகபாடியாக இருந்தார். அவருடைய முயற்சிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்படும்போது அல்லது நீங்கள் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டால், அவர் எப்போதும், நாங்கள் கர்மாதீத் ஆகவேண்டும் என்றே சொல்லுவார். கர்மாதீத் ஆகவேண்டும் என்ற அவரின் ஆழமான ஆசையால், அவர் மீண்டும் மீண்டும் மற்றவர்களுக்கும் அதையே நினைவூட்டுவார். எனவே, இது ஒவ்வொரு பிராமணரினதும் விசேடமான இலட்சியமாகவும் தகைமையாகவும் இருக்க வேண்டும். அது இருக்கிறது, ஆனால் வரிசைக்கிரமமாக உள்ளது. இப்போது இந்த ஆசை மட்டுமே இருக்க வேண்டும்: நாங்கள் நிச்சயமாகத் தேவதைகள் ஆகவேண்டும். தேவதைகள் என்றால், தமது பௌதீகச் சரீரங்களில் இருந்து பற்றற்று இருப்பவர்கள், எப்போதும் ஒளியாலான சரீரங்களைக் கொண்டிருப்பவர்கள். தேவதைகள் என்றால் தமது பௌதீக அங்கங்களின் அரசர்கள் என்று அர்த்தம்.

கல்பம் முழுவதிலும் தூய பெருமையுடன், எனது ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரச குழந்தை, சுயத்திற்கே அதிபதி என்று சொல்லக் கூடியவர் ஒரேயொரு பாப்தாதா மட்டுமே என பாப்தாதா உங்களுக்கு முன்னரும் கூறியுள்ளார். ஒரு தேவதை சுய இராச்சிய அதிகாரியாக இருப்பவர் ஆவார். இத்தகைய சுய இராச்சிய அதிகாரி, ஒளியாலான ரூபத்தைக் கொண்டவர். இலேசாகவும் ஒளியாகவும் இருக்கும் ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கும் எவரையும் நீங்கள் சந்திக்கும் போதெல்லாம், ஒளியான ஆத்மாவின் விழிப்புணர்வு அவரின் நெற்றியில் புலப்பட வேண்டும். இப்போது, தீவிர முயற்சிக்கான இலட்சியத்தையும் தகைமைகளையும் எப்போதும் வெளிப்பட்ட நிலையில் வைத்திருங்கள். தந்தை பிரம்மாவை யாராவது சந்திக்கும்போது அல்லது அவரிடம் இருந்து திருஷ்டி எடுக்கும் போது என்ன தென்பட்டது என்பதை நீங்கள் கண்டீர்கள். அவரின் கடைசிக் காலப்பகுதியில், நடக்கும்போதும், தந்தை பிரம்மா பெரும்பாலும் இனிமையான, சரீரமற்ற ஸ்திதியிலேயே ஸ்திரமாக இருந்ததை நீங்கள் அனுபவம் செய்தீர்கள். மற்றவர்கள் எவ்வளவு சேவைச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டி இருந்தாலும், பாபா அவர்களுக்கு ஒரு விநாடியில் சரீரமற்றவராக இருக்கும் அனுபவத்தை வழங்குவார். எனவே, நீங்கள் முரளிகளில் சோதித்துப் பார்த்தால், எத்தனை தடவைகள் பாபா உங்களுக்கு ஆத்மாவிற்குரிய, ‘நான் ஒரு சரீரமற்ற ஆத்மா’ என்ற அதே பாடத்தை நினைவூட்டினார் என்பதை உங்களால் பார்க்க முடியும். எனவே இப்போது, காலத்திற்கேற்ப, விவரமான சிறிய விடயங்கள், மக்களின் சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களுக்குரிய விடயங்கள், உங்களைச் சரீரமற்ற ஸ்திதிக்கு அப்பால் எடுத்துச் செல்கின்றன. இப்போது, மாற்றம் நடக்க வேண்டும்.

சேவையின் பெறுபேறு நன்றாக இருந்ததை பாப்தாதா கண்டார். உங்களில் பெரும்பாலானோர் சேவை செய்வதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொண்டுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் தொடர்ந்து திட்டங்களையும் செய்கிறீர்கள். ஆனால் சேவை செய்வதுடன் கூடவே, செய்தியை வழங்குவதும் அவசியமாகும். இன்றும், வெவ்வேறு பிரிவுகளினதும் வெவ்வேறு இடங்களினதும் சேவையின் நல்ல பெறுபேற்றை பாப்தாதா கண்டார். எவ்வாறாயினும், சரீரமற்றவராக இருக்கும் சூழலுக்குக் குறைந்தளவு முயற்சியே தேவைப்படுகிறது. ஆனால், அது பெரிய விளைவை ஏற்படுத்தும். ஆமாம், மக்கள் தாம் கேட்பதை இரசிப்பார்கள். ஆனால், சரீரமற்றவராக இருக்கும் சூழலினூடாக ஓர் அனுபவத்தையும் திருஷ்டியையும் அவர்கள் பெறும்போது, அந்த அனுபவத்தை ஒருபோதும் மறக்க முடியாது. எனவே, இப்போது சேவையில், தேவதையாக ஆகுகின்ற அக்கறையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். அமைதி, சந்தோஷம், சுகம் அல்லது ஆன்மீக அன்பு என்பவற்றில் ஏதாவதோர் அனுபவத்தை வழங்குங்கள். உங்களின் நடத்தையின் அன்பு மற்றும் நீங்கள் கொடுக்கும் உபசாரத்தின் மூலம், உங்களின் உறவுமுறைகள் மற்றும் குடும்பத்தின் மூலம், அவர்கள் ஓர் அனுபவத்துடன் செல்வார்கள். ஆனால் இப்போது, சூழல் மற்றும் அதிர்வலைகளின் ஊடாக, விசேடமாக அதீந்திரிய சுகத்தின் உணர்வு மற்றும் அமைதியின் ஆன்மீக அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள். அவர்களுக்கு ஏதாவதொரு விசேடமான அனுபவத்தை வழங்குங்கள். அவர்கள் இங்கே பார்க்கும் சம்பிரதாயங்களைப் பார்த்து அதன் ஆதிக்கத்துடன் இங்கிருந்து செல்கிறார்கள், ஏனென்றால், இத்தகையதொரு குடும்ப அன்பின் சம்பிரதாயத்தை அவர்கள் வேறு எங்கும் காண மாட்டார்கள். எனவே, அவர்கள் ஏதொவொரு சக்தி அல்லது பேற்றினை இங்கே அனுபவம் செய்துவிட்டுச் செல்ல வேண்டும். இப்போது, 72 வருடங்கள் பூர்த்தியாகின்றன. தற்சமயம், பெறுபேறாக பாபா எதைக் கண்டார்? நீங்கள் கடினமாக உழைத்துள்ளீர்கள் என்பதை. எவ்வாறாயினும், இதுவரை, பிரம்மா குமாரிகள் இந்தப் பணியைச் செய்கிறார்கள், பிரம்மா குமாரிகளின் ஞானம் நல்லது என்று மட்டுமே அவர்கள் சொல்கிறார்கள். அதை வழங்கும் ஒரேயொருவர் யார்? இவை அனைத்தையும் நடத்துபவர் யார்? மூலாதாரம் யார்? உங்கள் அனைவரிடம் இருந்தும் ‘பாபா’ என்ற வார்த்தையைக் கேட்கும்போது, ‘அவர்களின் பாபா’ என்றே அவர்கள் சொல்கிறார்கள். ‘எனது பாபா அதே ஒருவரே’ என அவர்கள் சொல்வது, தந்தையின் அந்த வெளிப்படுத்துகை இன்னமும் இடம்பெற வேண்டியுள்ளது. அவர்கள், ‘பாபா, பாபா’ எனச் சொல்கிறார்கள். ஆனால் அது பலமில்லியன்களில் ஒரு கைப்பிடி அளவினரின் வாய்களில் இருந்து மட்டுமே வெளிப்படுகின்றது. இது எனது பாபா, நான் பாபாவிற்குச் சொந்தமானவன், பாபா என்னுடையவர்.

எனவே, சங்கமயுகத்தின் இலட்சியம் என்ன? எங்கள் அனைவரின் தந்தையும் வந்துள்ளார். நீங்கள் தந்தையிடம் இருந்து ஓர் ஆஸ்தியைப் பெறப் போகின்றீர்கள், அப்படித்தானே? உங்களின் தேவதை ஸ்திதியினூடாக அதன் ஆதிக்கம் அந்தச் சூழலில் பரவும். உங்களின் திருஷ்டியின் மூலம் அவர்கள் ஒளியைப் பெறுவதாகவும், அவர்களின் திருஷ்டியில் ஆன்மீகத்தின் ஒளி புலப்படுகின்றது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். எனவே, இப்போது இலேசாகவும் ஒளியாகவும் உள்ள தேவதை ஆகுகின்ற தீவிர முயற்சி செய்யும் இலட்சியத்தைக் கொண்டிருங்கள். நடக்கும் போதும் அசையும் போதும், தேவதை ரூபத்தின் அனுபவத்தை அதிகரியுங்கள். சரீரமற்ற ஸ்திதியின் அனுபவத்தை அதிகரியுங்கள். ஒரு விநாடிக்குள் எந்த எண்ணங்களையும் முடிப்பதற்கு, உங்களின் சுபாவத்திலும் சம்ஸ்காரங்களிலும் இலேசாகவும் ஒளியாகவும் இருங்கள். சில குழந்தைகள் தாம் இலேசாக இருப்பதாகவும் ஆனால், மற்றவர்களுக்குத் தங்களைப் பற்றித் தெரியாது என்றும் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், இத்தகைய இலேசான, ஒளியான தேவதைகளின், டபிள் லைற்றாக இருப்பவர்களின் ஒளியை மறைக்க முடியாது. ஒரு சிறிய டோர்ச் லைற் அல்லது எரியும் ஒரு நெருப்புக் குச்சியைக் கூட மறைக்க முடியாது. ஆனால், இது ஆன்மீக ஒளி. எனவே, உங்களின் சூழலினூடாக அவர்களுக்கு நீங்கள் யார் என்ற அனுபவத்தைக் கொடுங்கள். அது ஜெகதாம்பாவோ அல்லது தாதியோ, யாராக இருந்தாலும், எவருக்கும் தங்களைத் தெரியாது எனச் சொல்லவில்லை. அவர்கள் உருவாக்கிய சூழலினூடாக, அவர்கள் அனைவருக்கும் அன்பானவர்களாக இருந்தார்கள். இதனாலேயே, தாதியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், தந்தை பிரம்மாவிற்கு, அவருடன் சிவபாபா இருந்தார் என நீங்கள் நினைக்கிறீர்கள். தந்தை சிவனைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள்: அவர் எப்படியும் அசரீரியானவர். அவர் பற்றற்றவரும் அசரீரியானவரும் ஆவார். ஆனால் நாங்கள் பௌதீகமான, சரீரதாரிகள். நாங்கள் இத்தகைய பெரிய ஒன்றுகூடலில் வாழ்கிறோம். நாங்கள் அனைவரின் சம்ஸ்காரங்களின் மத்தியிலும் வாழ்கிறோம். உங்களின் சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பது என்றால், தேவதைகள் ஆகுதல் என்று அர்த்தம். சம்ஸ்காரங்களைப் பார்க்கும்போது, சில குழந்தைகள் மனச்சோர்வு அடைகிறார்கள். பாபா மிகவும் நல்லவர், பிரம்மா பாபாவும் மிகவும் நல்லவர், இந்த ஞானமும் மிகவும் நல்லது, பேறும் மிகவும் நல்லது. எவ்வாறாயினும், உங்களின் சம்ஸ்காரங்களை ஒத்திசைப்பது என்றால், சிலரை மட்டும் நேசிக்காமல், அனைவருடனும் அன்பாக இருத்தல் என்று அர்த்தம். ஏனென்றால், சிலரின் சிறப்பியல்புகளைப் பார்க்கும்போது உங்களுக்கு அன்பு ஏற்படுகிறது எனச் சில குழந்தைகள் கூறுகிறார்கள். ‘இவரின் உரை மிகவும் நல்லது. இவரிடம் இந்த மிக நல்ல சிறப்பியல்பு உள்ளது, இவர் மிக நன்றாகப் பேசுகிறார்’. நீங்கள் தேவதைகள் ஆகுவதற்கு இந்தத் தடைகள் ஏற்படும். நீங்கள் அன்பானவராக இருக்கலாம். ஆனால், ஆத்மாவான நீங்கள் ஒவ்வொருவரும் பற்றற்றவர்: உங்களின் பற்றற்ற ஸ்திதியுடன் அனைவரிடமும் அன்பாக இருங்கள். சிறப்பியல்பினால் அன்பானவர் ஆகாதீர்கள். நான் இவரின் நற்குணத்தை மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அதைக் கிரகிக்கலாம், ஆனால் அதன் காரணத்தால் அன்பானவர் ஆகுவது தவறானது. ஒரு தேவதை அனைவரையும் நேசிப்பார். ஒவ்வொருவரும் ‘எனது’ எனச் சொல்ல வேண்டும். சொந்தமாக இருக்கும் உணர்வு இருக்க வேண்டும். இத்தகைய தேவதை ஸ்திதிக்கு இரண்டு விடயங்கள் தடைகளை உருவாக்குகின்றன. ஒன்று சரீரத்தின் விழிப்புணர்வு (பான்). உங்கள் அனைவருக்கும் அதன் இயல்பான அனுபவம் உள்ளது. 63 பிறவிகளின் சரீர உணர்வு இயல்பாகவே வெளிப்படும். மற்றையது, சரீரத்தின் அகங்காரம் (அபிமான்). சரீரத்தின் விழிப்புணர்வு மற்றும் சரீர அகங்காரம். இந்த ஞானத்தில் நீங்கள் எந்தளவிற்கு முன்னேறுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களைப் பற்றிய அகங்காரமும் சிலவேளைகளில் உங்களுக்கு ஏற்படுகிறது. அந்த அகங்காரம் உங்களைக் கீழே கொண்டு வருகிறது. சரீரத்தின் அகங்காரம் ஏன் ஏற்படுகிறது? உங்களிடம் என்ன சிறப்பியல்பு உள்ளதோ, அந்தச் சிறப்பியல்பால் அகங்காரம் ஏற்படுகிறது. ‘நான் எந்தவிதத்திலும் குறைந்தவனா? அனைவரும் எனது உரைகளை விரும்புகிறார்கள். நான் செய்த சேவை, ஒரு விளைவை உருவாக்கி உள்ளது. நான் கையாளும் முறை மிகவும் நல்லது. நான் பாடநெறிகளைக் கொடுக்கும் முறை நல்லது’. இந்த ஞானத்தில் அல்லது சேவையில் நீங்கள் முன்னேறும்போது, உங்களைப் பற்றிய இந்த அகங்காரம் உங்களிடம் ஏற்படுகிறது. அல்லது, உங்களுக்கு மற்றவர்களின் நற்குணம், திறமை, சிறப்பியல்பின் மீது விருப்பம் ஏற்படுகிறது. எவ்வாறாயினும், நீங்கள் யாரை நினைவு செய்ய வேண்டும்? நீங்கள் சரீர உணர்வைப் பற்றி மட்டுமே உணர்ந்தவராக இருக்க வேண்டும். ‘இன்னாருக்கு மிக நல்ல புத்தி உள்ளது. நான் கையாளும் முறை மிகவும் நல்லது’. சேவையில் அல்லது தமது முயற்சிகளில் முன்னேறிச் செல்பவர்களுக்கு இந்த அகங்காரம் உள்ளது. எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். அகங்காரத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மையிலேயே அந்த அகங்காரம் உள்ளதா எனச் சோதித்துப் பார்க்கும் முறை: யாராவது அவர்களை அல்லது அவர்களின் அபிப்பிராயங்களை, அவர்களின் அறிவுரையை, அவர்களின் திறமையை அல்லது அவர்கள் கையாளும் முறையைச் சிறிதளவேனும் இகழும்போது (அப்மான்), அவர்கள் மிக விரைவாக அதனால் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் இகழப்படும்போது, அது அவர்களைக் கோபத்திற்கு உள்ளாக்குவது அதைவிட சூட்சுமமான அடையாளம் ஆகும். அத்துடன் அதிகாரத் தோரணையும் உள்ளது. அது உங்களைத் தேவதைகள் ஆக்குவதற்கு அனுமதிப்பதில்லை. எனவே, தற்சமயத்திற்கேற்ப, பாப்தாதா மீண்டும் ஒருமுறை ஒரு சமிக்கையை வழங்குகிறார்: உங்களின் வாழ்க்கையில், சங்கமயுகத்தின் இறுதி ரூபமான, உங்களின் தேவதை ரூபத்தை வெளிப்படுத்துங்கள். அதை உங்களின் பௌதீக ரூபத்தில் அணிந்து கொள்ளுங்கள். ஒரு தேவதை ஆகுவதன் மூலம், சரீரமற்றவர் ஆகுவது மிகவும் இலகுவாக இருக்கும். உங்களையே சோதித்துப் பாருங்கள்: உங்களின் சொந்தச் சிறப்பியல்பிற்கோ அல்லது வேறு ஒருவரின் சிறப்பியல்பிலோ சூட்சுமமான முறையிலேனும் பற்று இல்லை, அல்லவா? சிலவேளைகளில், அற்ப விடயங்களுக்கும் சில குழந்தைகளின் ஸ்திதி தளம்பல் அடைகிறது. அதன்பின்னர், சந்தோஷமான இதயத்தையும் சந்தோஷமான முகத்தையும் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அவர்களின் முகம் எண்ணங்களால் அல்லது கவலையால் நிரம்பி விடுகிறது. தொடர்ந்து முன்னேறும்போது அவர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். சந்தோஷமான இதயத்தைக் கொண்டிருப்பவர் ஆகுவதற்குப் பதிலாக, அவர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். எனவே, உங்களுக்குப் புரிகிறதா? இப்போது, உங்களின் தேவதை ஸ்திதிக்குரிய சம்ஸ்காரங்களை, சங்கமயுகத்தின் கடைசி ஸ்திதியை வெளிப்படச் செய்யுங்கள். நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள். நீங்கள் தந்தையைப் பின்பற்ற வேண்டும், அல்லவா? கடைசிக் காலப்பகுதியில், குழந்தைகள் தமது செய்திகளைக் கூற வரும்போது, பாபா அந்தச் செய்திகளுக்கு அப்பால் இருந்ததை, சத்தத்திற்கு அப்பால் இருந்ததைப் பல குழந்தைகள் அனுபவம் செய்துள்ளார்கள். அவர்கள் சூழ்நிலைகளைப் பற்றிய செய்திகளைக் கூற வருவார்கள், பல திட்டங்களைச் செய்தவண்ணம், ‘நான் இதைப் பற்றியும் இதைப் பற்றியும் பாபாவிடம் கூறுவேன், நான் இதைப் பற்றி பாபாவிடம் கேட்பேன்’ எனச் சிந்தித்த வண்ணம் வருவார்கள். ஆனால் அவர்கள் பாபாவின் முன்னால் வந்ததும், தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் மறந்து விடுவார்கள். அது தேவதை ஸ்திதி ஆகும். எனவே, நீங்கள் என்ன பாடத்தை இன்று உறுதியாக்கிக் கொண்டீர்கள்? நான் யார்? ஒரு தேவதை. சூழ்நிலைகள், சிறப்பியல்புகள், உங்களின் சொந்தச் சிறப்பியல்புகள் மற்றும் உங்களின் சரீரங்களின் விழிப்புணர்விற்கு அப்பாற்பட்டு இருங்கள். ஓர் இலேசான, ஒளியான தேவதை ஆகுங்கள். ஏனெனில், ஒரு தேவதை ஆகாமல் உங்களால் ஒரு தேவருக்குரிய உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் சத்தியயுகத்திற்குச் செல்வீர்கள். ஏனென்றால், நீங்கள் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் ஆஸ்தியைப் பெறுவீர்கள், ஆனால் மேன்மையான அந்தஸ்தை அல்ல. நீங்கள் சதா ஒன்றாக இருப்பீர்கள், நீங்கள் ஒன்றாக ஆட்சி செய்வீர்கள் என நீங்கள் சத்தியம் செய்துள்ளீர்கள். நீங்கள் சிம்மாசனத்தில் அமராமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் அரச குடும்பத்தின் உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் அந்த இடத்தின் அரச சபையைப் பார்த்திருக்கிறீர்கள், அல்லவா? அரச சபையின் உரிமையைப் பெற்றுள்ளவர்கள், திலகத்தையும் கிரீடத்தையும் பெற்றிருப்பார்கள். இராச்சியத் திலகம், இராச்சியத்தின் அடையாளம் கிரீடம் ஆகும். எனவே, நீண்ட காலப்பகுதிக்கு சுய இராச்சிய அதிகாரியாக இருக்க வேண்டும். அவ்வப்போது மட்டும் அல்ல. நீண்ட காலப்பகுதிக்கு சுய இராச்சிய அதிகாரியாக இருப்பவர், சிம்மாசனத்தில் அமராமல் போகலாம். குறைந்தபட்சம் அவர் அரச குடும்பத்தில் ஒருவராக இருக்கும் உரிமையைப் பெறுவார். அச்சா.

இங்கே முதல் தடவை வந்திருப்பவர்கள், எழுந்து நில்லுங்கள்! குறைந்த பட்சம், ஒன்றுகூடலில் முக்கால் பங்கினர் எழுந்து நிற்கிறார்கள். இங்கே பௌதீகமாக முதல் தடவை வந்திருப்பவர்களுக்கு பௌதீக ரூபத்தில் தந்தையைச் சந்திப்பதற்காகப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இங்கே முதல் தடவை வந்திருக்கும் குழந்தைகளான உங்கள் அனைவருக்கும் பாப்தாதா இந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: நீங்கள் ‘மிகவும் தாமதம் ஆகிவிட்டது’ என்ற நேரத்தில் வந்துள்ளீர்கள். ஆனாலும், வந்திருக்கும் புதிய குழந்தைளான உங்களுக்கு ஒரு விசேடமான ஆசீர்வாதம் உள்ளது. ‘எப்படி எங்களால் முன்னே செல்ல முடியும்?’ என்ற எண்ணத்தை ஒருபோதும் கொண்டிராதீர்கள். மிகவும் தாமதாக வந்திருப்பவர்களுக்கு - தற்சமயம், நீங்கள் தாமதம் என்ற நேரத்திலேயே வந்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் தாமதம் ஆகிவிடவில்லை. பாப்தாதாவும் பிராமணக் குடும்பத்தின் சகோதர, சகோதரிகளும் உங்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பிற்கான விசேடமான உணர்வுகளைக் கொண்டுள்ளார்கள். எஞ்சியுள்ள குறுகிய வேளையில், ஒவ்வொரு விநாடியையும் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். ஏனென்றால், குறுகிய வேளையில், நீங்கள் அதிகளவை அடைய வேண்டும். நீங்கள் ஒரு விநாடியையேனும் வீணாக்கக் கூடாது. தொடர்ந்து ஒரு கர்ம யோகியாக செயல்படுங்கள். செயல்களைச் செய்வதை நிறுத்தாதீர்கள். ஆனால், கர்மத்திற்கு யோகத்தைச் சேருங்கள். அத்துடன் கர்மத்திற்கும் யோகத்திற்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுங்கள். எனவே, இந்தச் சமநிலையைப் பேணுபவர்கள் மேலதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். பிந்தி வந்திருப்பவர்களுக்கு - எதிர்காலத்தில் அது மிகவும் தாமதாகி விடும் - இன்னமும் ஒரு வாய்ப்பு உள்ளது. உங்களால் குறுகிய காலத்தில் அதிகளவு முயற்சியைச் செய்ய முடியும். பாப்தாதா ஆசீர்வாதத்தை வழங்குகிறார்: குழந்தைகளான நீங்கள் தைரியத்தைப் பேணும்போது, நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடம் இருந்து உதவியைப் பெறுவீர்கள்.

எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் அனைவருக்கும், இதயபூர்வமான பாராட்டுக்களும் கோடானுகோடி மடங்கு வாழ்த்துக்களும் உரித்தாகுக. சிவராத்திரியில் தமது சேவை செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பவர்களுக்கு, சிவராத்திரிக்காக இப்போதே பாபா பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்குகிறார். வரவிருப்பவர்கள், தமது கடிதங்கள் மற்றும் ஈமெயில்களை அனுப்பியவர்கள் - அவை அனைத்தும் ஒரு விநாடிக்கும் குறைந்த நேரத்தில் பாப்தாதாவை வந்தடைகின்றன - அவர்கள் அனைவருக்கும் அத்துடன் பாப்தாதாவிற்காகத் தாகத்துடன் இருக்கும் ஆத்மாக்களுக்கும் பந்தனத்தில் இருப்பவர்களுக்கும் தாம் பெறுகின்ற அடிகளையும் தமது கழுத்து மாலையாக ஆக்குபவர்களுக்கும் இத்தகைய ஆத்மாக்களுக்கு அன்பும் நினைவுகளும் உரித்தாகுக. இப்போது வெளிப்படுகின்ற புதிய, அன்பான ஆத்மாக்களுக்கு, ஆனால் அதிக எண்ணிக்கையில் இல்லா விட்டாலும், அவர்கள் அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் இரட்டையாக இருக்க வேண்டும். எங்கும் உள்ள இளைஞர்கள், வயதான குழந்தைகள், தாய்மார்கள், பாண்டவர்கள் அனைவருக்கும் உங்களின் பிறந்த நாளுக்காகவும் தந்தையின் பிறந்த நாளுக்காகவும் முன்கூட்டியே வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் பௌதீகமான மற்றும் அசரீரியான தந்தைமார்களின் சகவாசத்தால் ஒவ்வோர் எண்ணத்திலும் வெற்றியாளர் ஆகுவதன் மூலம் சதா வெற்றி நிறைந்தவர் ஆகுவீர்களாக.

எப்படி ஓர் அசரீரி ஆத்மாவாலும் பௌதீகமான சரீரத்தாலும் அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்து செய்ய முடிகிறதோ, அவ்வாறே, உங்களின் ஒவ்வொரு பணியின் போதும் ஒவ்வோர் எண்ணத்தை உருவாக்கும் போதும் பௌதீமான மற்றும் அசரீரி தந்தைமார்களை நீங்கள் உங்களுடன் அல்லது உங்களுக்கு முன்னால் வைத்திருந்தால், நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். இது ஏனென்றால், பாப்தாதா உங்களின் முன்னால் தனிப்பட்ட முறையில் இருக்கும்போது, நீங்கள் அனைத்தையும் அவருடன் வேறு பிரித்தறிந்தே செய்வீர்கள். அதன்பின்னர் நீங்கள் அதை நம்பிக்கையுடனும் பயமில்லாமலும் செய்வீர்கள். இதைச் செய்வதன் மூலம், நீங்கள் உங்களின் நேரத்தையும் எண்ணங்களையும் சேமிப்பீர்கள். எதுவும் வீணாகிப் போகாது. அப்போது ஒவ்வொரு செயலும் இயல்பாகவே வெற்றிநிறைந்தது ஆகிவிடும்.

சுலோகம்:
ஆன்மீக அன்பு, பௌதீகச் செல்வத்தை விடப் பெறுமதி வாய்ந்தது. அதனால் மாஸ்ரர் அன்புக்கடல் ஆகுங்கள்.

அவ்யக்த சமிக்கை: ஒற்றுமை மற்றும் நம்பிக்கை என்ற சிறப்பியல்பால், வெற்றி நிறைந்தவர் ஆகுங்கள்.

மத அதிகாரத்தின் முன்னால் தூய்மை சக்தியை நிரூபியுங்கள். அரசியல் அதிகாரத்தின் முன்னால் ஒற்றுமையின் சக்தியை நிரூபியுங்கள். இந்த இரண்டு சக்திகளையும் காட்டுவதன் மூலம், இறை அதிகாரத்தின் கொடி, மிக விரைவில் ஏற்றப்படும். இவை இரண்டுக்கும் இப்போது விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். நீங்கள் எந்தளவிற்கு தொடர்ந்து, உங்களின் தூய்மை மற்றும் ஒற்றுமை சக்திகளைப் பயன்படுத்திய வண்ணம் அவர்களுடன் தொடர்பில் வருகிறீர்களோ, அந்தளவிற்கு அவர்கள் உங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள்.