22.03.26    Avyakt Bapdada     Tamil Lanka Murli    07.04.2009     Om Shanti     Madhuban


‘காரணம்’ என்ற வார்த்தையில் இருந்து விடுதலை அடைந்து, உங்களுடைய செயல்களினாலும் முகத்தினாலும் முக்தியைக் கொடுக்கின்ற, முக்தியை அருள்பவராக ஆகுங்கள். சேவையில் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பதுடன், எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவத்தைப் பேணுங்கள்.


இன்று, பாப்தாதா, இரட்டை அதிபதிகளான எங்கும் உள்ள குழந்தைகள் அனைவரையும் பார்த்தார். முதலாவதாக, நீங்கள் தந்தையின் பொக்கிஷங்கள் அனைத்தினதும் அதிபதிகளாகவும், இரண்டாவதாக, நீங்கள் சுயராச்சியத்தின் அதிபதிகளாகவும் இருக்கிறீர்கள். குழந்தைகளான நீங்கள் அனைவரும், இரண்டு அதிபதிகளுக்குமான அதிகாரத்தைத் தந்தையிடம் இருந்து பெற்றுள்ளீர்கள். நீங்களே குழந்தைகளும், அதிபதிகளும் ஆவீர்கள். நீங்கள் ‘எனது பாபா’ என்று கூறினீர்கள். பாபா, ‘எனது குழந்தைகளே’ என்று கூறினார். எனவே நீங்கள் குழந்தைகளாகவும் அதிபதிகளாகவும் இருக்கின்ற இரண்டு அனுபவங்களையும் பெற்றிருக்கின்றீர்கள்.

இன்று, பல குழந்தைகள் வந்துள்ளார்கள். இந்த வருடத்திற்கான (பருவகாலத்தில்) இறுதி முறை இதுவேயாகும். எனவே, இன்று பாப்தாதா குழந்தைகள் அனைவரதும் முயற்சியைச் சோதித்தார். எனவே, பாபா எதனைப் பார்த்திருப்பார் என்று பாபாவிடம் கூறுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே வினவ வேண்டும்: என்னுடைய முயற்சி என்ன? குழந்தைகள் அனைவரையும் பார்க்கும் போது பாபா களிப்படைகின்றார், ஆனாலும் தந்தைக்கு ஓர் எதிர்பார்ப்பு உள்ளது. அது என்னவென்பதை பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? தந்தையின் விருப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள், இல்லையா? பாபாவிற்கு ஒரேயொரு எதிர்பார்ப்பே உள்ளது. அவர் அதை உங்களுக்குச் சொல்லட்டுமா? அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம் என்பவர்கள், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! மிகவும் நல்லது. இது மிகச் சிறிய எதிர்பார்ப்பாகும், அதாவது, இன்றிலிருந்து நீங்கள் ஒரு வார்த்தையை மாற்றுங்கள். அது என்ன வார்த்தை? உங்களை மீண்டும் மீண்டும் கீழே இறக்கி விடுகின்ற ‘காரணம்’ என்ற வார்த்தையே அதுவாகும். ‘காரணம்’ என்ற இந்த வார்த்தையை மாற்றி, எப்பொழுதும் ‘தீர்வு’ என்ற வார்த்தையையே பயன்படுத்துங்கள். ஏனெனில் இப்பொழுது நீங்கள் செய்கின்ற சேவை என்ன? உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரது பிரச்சனைகளுக்கான காரணத்திற்கு தீர்வு காண்பதாகும். நீங்கள் அதற்கான தீர்வைக் கண்டவுடன், அவர்களை நீங்கள் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், நீங்கள் அனைவரும் முக்தியை அருள்பவர்கள் ஆவீர்கள். எனவே, நீங்களே பிறருக்கு முக்தியை அருள்பவர்கள் என்பதால், உங்கள் காரணங்கள் அனைத்திற்கும், நீங்கள் தீர்வினைக் காண வேண்டும், அப்பொழுதே உங்களால் அவர்களுக்கு முக்தியை அருளி, அவர்களை உங்களால் நிர்வாணாவிற்கு அனுப்ப முடியும். எனவே, இந்த ஒரு வார்த்தையை மாற்றுவது இலகுவானதா அல்லது கடினமானதா? அதைப் பற்றிச் சிந்தியுங்கள்!

இன்று, இங்கு வந்திருக்கின்றவர்களும், தங்களுடைய சொந்த இடங்களில் பார்த்தும், செவிமடுத்துக் கொண்டும் இருக்கின்றவர்களுமான குழந்தைகள் அனைவரும் ஒரு வார்த்தையை மாற்றுவதையே பாப்தாதா விரும்புகின்றார். ஏனெனில் ‘காரணம்’ உங்களை கீழே இறக்கி விடுகின்றது. நீங்கள் அரைக் கல்பமாக காரணங்களுடன் வாழ்ந்து வந்தீர்கள். ஆனால், இது தீர்வு காண்பதற்கான காலமாகும். நிர்வாரனும் (நிவாரணம்), நிர்வாணாவும் (சப்தத்திற்கு அப்பாலுள்ள உலகம்), அதாவது முக்தியாகும். எனவே, இன்று அதைக் கொடுப்பதற்கான தைரியம் உங்களிடம் உள்ளதா? இது இறுதி முறையாகும், அப்படியல்லவா? நீங்கள் அனைவரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வந்துள்ளீர்கள், பாப்தாதா ஒவ்வொருவரையும் பாராட்டுகின்றார். உறங்குவதற்கும், அனைவருக்கும் உணவளிப்பதற்கும் சிரமமாக இருந்தாலும், அனைத்துமே அன்புடன் செய்யப்படுகின்றது. அன்பு என்ற விமானம் உங்கள் அனைவரையும் மதுவனத்தை வந்தடையச் செய்தது. ஒவ்வொருவரின் அன்பையும் பார்க்கையில், பாப்தாதா ஒவ்வொருவருக்கும் இதயத்தில் இருந்து பலமில்லியன் மடங்கு அன்பைக் கொடுக்கின்றார். எவ்வாறாயினும் உங்களின் அன்பின் நிமித்தம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? யார் மீது நீங்கள் அன்பு கொண்டிருந்தாலும், அந்த அன்பின் நிமித்தம், நீங்கள் அவருக்கு ஒரு பரிசைக் கொடுப்பீர்கள். எனவே, இன்று பாப்தாதா ‘தீர்வு’ என்ற வார்த்தையை உங்களிடம் இருந்து ஒரு பரிசாக பெற்றுக் கொள்ள விரும்புகின்றார். பாப்தாதாவின் இந்த விருப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள், அல்லவா? மீண்டும் உங்களுடைய கைகளை உயர்த்துங்கள்! அதை நீங்கள் இங்கே விட்டுச் செல்லப் போகிறீர்களா? நீங்கள் இந்த கதவுகளைத் தாண்டிச் சென்றதுமே, ‘காரணம்’ என்ற வார்த்தை முடிந்து விட வேண்டும். அது தவறுதலாக வந்தாலும் கூட, அது நீங்கள் பாபாவிடம் ஒப்படைத்த பெறுமதியான விடயம் ஆகும். எனவே நீங்கள் இன்னொருவரிடம் எதனையாவது, ஒப்படைத்து இருந்தால் என்ன செய்வீர்கள்? அதனை நீங்கள் மீண்டும் கேட்பீர்களா? எனவே நீங்கள் அனைவரும் இதற்கான திடசங்கற்ப எண்ணத்தைக் கொண்டிருக்கின்றீர்களா? கொண்டிருக்கின்றீர்களா? உங்களுடைய கைகளை மீண்டும் ஒருமுறை உயர்த்துங்கள்! பின்னால் அமர்ந்திருப்பவர்கள், உங்கள் கைகளை அசையுங்கள்! (இன்று, கிட்டத்தட்ட 28000 - 29000 பேர் மண்டபத்திலும் வெளியிலும் அமர்ந்து முரளியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அனைவரும் தமது கைகளை அசைக்கிறார்கள்) நல்லது. மிக நல்லது. ஏனெனில், இப்பொழுது காலத்திற்கேற்ப, உங்கள் முன்னிலையில் ஒரு வரிசை நிற்கும். அந்த வரிசை எதற்காக நிற்கும்? ‘ஓ முக்தியை அருள்பவர்களே, எங்களுக்கு முக்தியை அருளுங்கள்!’ எனவே, இதை அருள்கின்ற, முக்தியை அருள்பவர்களே, ‘காரணம்’ என்ற ஒரு வார்த்தையில் இருந்து நீங்கள் முதலில் விடுதலை அடைந்தாலே, உங்களால் முக்தியைக் கொடுக்க முடியும்.

நீங்களும் விடுதலையாகி, மற்றவர்களுக்கு முக்தியை அருள்பவராக வேண்டும் என்பதே இந்த ஆண்டிற்கான வீட்டுவேலையாக இருக்க வேண்டுமென்பதை பாப்தாதா விரும்புகிறார். ஏனெனில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகளவு அதிகரிக்கவுள்ளன. எனவே, பிரச்சனைகள், தீர்வுகளின் வடிவமாக மாற்றப்பட வேண்டும். இப்பொழுது உங்களுடைய நேரமும் முயற்சியும் பிரச்சனைகளை முடிப்பதில் செலவிடப்படக் கூடாது. உங்களால் பக்தர்களின் அழைப்பையும் காலத்தின் அழைப்பையும் செவிமடுக்க முடியவில்லையா? எனவே, இப்பொழுது காலத்திற்கேற்ப, எந்த மாற்றம் அவசியம்? இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவத்தின் சொரூபமாகி, நிச்சயமாக ஒருவருக்கொருவர் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும். எனவே, முக்தியைக் கொடுக்கும், முக்தியை அருள்பவரின் குழந்தைகள் நீங்கள் என்பதை உங்கள் அனைவரது முகங்களும், செயல்களும் தெளிவாகக் காட்ட வேண்டும் என்பதே இப்பொழுது பாபாவின் விருப்பம் ஆகும். உங்களுடைய நெற்றியில் இருந்து பிரகாசமான நட்சத்திரங்களின் அனுபவத்தை அவர்கள் பெற வேண்டும். வெறுமனே அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கூறுவதால் அல்ல, ஆனால் அவர்கள் இதை உங்கள் முகத்தின் மூலம் அனுபவம் செய்ய வேண்டும். ஏனெனில் அனுபவம் அவர்களை நெருங்கி வரச் செய்யும். எனவே உங்கள் முகத்தினூடாகவும், செயல்களினூடாகவும் அந்த அனுபவத்தைக் காட்டுங்கள். விஞ்ஞானத்தின் கருவிகள், அவர்களுக்கு அனுபவங்களை ஏற்படுத்துவதைப் போன்று அவர்கள் இந்த அனுபவத்தையும் பெற வேண்டும். இப்பொழுது வெப்பமான காலநிலை. விஞ்ஞானம் உங்களுக்கு வெப்பத்தையும் குளிரையும் அனுபவம் செய்யும் வசதியை அளிக்கின்றது. விஞ்ஞானத்தின் கருவிகள் உங்களுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்க முடியுமானால், மௌன சக்தி உங்களுக்கு சக்தியின் அனுபவத்தைக் கொடுக்க முடியாதா? எனவே, குழந்தைகளான நீங்கள், அந்த அனுபவத்தின் ஸ்திதியில் உறுதியாக இருந்து, உங்களின் கண்களாலும் நெற்றியினாலும் அவர்களுக்கு ஏதாவதொரு சக்தியின் அனுபவத்தைக் கொடுப்பதையே இப்பொழுது பாப்தாதா விரும்புகின்றார். அவர்கள் எதைச் செவிமடுக்கிறார்களோ, அதைச் செவிமடுக்கும் போது விரும்புகிறார்கள். ஆனால், பின்னர் தடைகள் ஏற்படும் போது, அவர்கள் அதை மறந்து விடுகிறார்கள். எவ்வாறாயினும் ஓர் அனுபவம் வாழ்க்கையில் மறக்கப்படுவதில்லை.

பாபா ஒரு காரணத்தைப் பார்த்தார். அதற்கான பெறுபேற்றையும் பார்த்தார். அந்தப் பெறுபேற்றைக் கண்டதால் பாபா பற்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார். அது என்ன பெறுபேறு? இன்று வரை நீங்கள் சேவைக்கான நல்ல ஆர்வத்தையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கின்றீர்கள். எனவே, பாப்தாதா உங்களைப் பாராட்டுகின்றார். நீங்கள் சேவையை அதிகரிப்பதுடன், நல்ல திட்டங்களையும் வகுக்கின்றீர்கள். உங்களின் திறமைக்கு ஏற்ப, அதற்கான பெறுபேற்றைப் பெறுகின்றீர்கள். ஆனால், ஓர் அனுபவத்தைக் கொடுக்க வேண்டுமானால், நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சேவை இப்பொழுது மிகவும் பிரபல்யமாக உள்ளது. மக்கள் சந்தோஷம் அடைவதுடன், அவர்களது ஆர்வமும் இப்பொழுது அதிகரிக்கின்றது. எனவே, ஓர் அனுபவத்தைக் கொடுப்பதற்கான வழிமுறை என்ன? அதாவது, ஆர்வமும் உற்சாகமும் கொண்டிருப்பதுடன், இக்காலத்திற்கு ஏற்ப, நீங்கள் எந்தளவிற்கு அதிக ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் மனோபாவம் எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் முயற்சிக்கு எவராவது ஒருவர் பிரச்சனையாக இருப்பாராயின், எல்லையற்ற விருப்பமின்மைக்கான மனோபாவத்தின் குறைபாடே அதற்குக் காரணமாகும். இப்பொழுது, எல்லையற்ற ஆர்வமின்மையே அவசியமாகும். எல்லையற்ற விருப்பமின்மை எக்காலத்திற்கும் நீடிக்கின்றது. அது நேரத்திற்கு அமைய இடம்பெறுமாயின், நேரம் முதல் இலக்கத்தைப் பெற்று, நீங்கள் இரண்டாம் இலக்கத்திற்குத் தள்ளப்படுகின்றீர்கள். அதாவது நேரமே உங்களுக்கு ஆர்வமின்மையை ஏற்படுத்தி உள்ளது. எல்லையற்ற விருப்பமின்மை எக்காலத்திற்கும் நீடிக்கின்றது. ஒரு புறம் ஆர்வமும், உற்சாகமும், சந்தோஷமும் இருக்கும். மறுபுறம் எல்லையற்ற விருப்பமின்மை உள்ளது. எப்பொழுதுமே எல்லையற்ற விருப்பமின்மை நீடிக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன? சரீர உணர்வே அதற்குக் காரணம் என்பதை பாப்தாதா காணுகின்றார். ‘சரீரம்’ என்ற வார்த்தை பல விடயங்களுடன் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணத்திற்கு: சரீரத்தின் உறவினர்கள், சரீரத்தின் சொத்துக்கள், சரீரத்தின் சம்ஸ்காரங்கள் - சரீரம் என்ற வார்த்தை அனைத்திலும் உள்ளடக்கப்படுகின்றது. ஆனால் சரீர உணர்வு விசேடமாக எதில் வருகின்றது? இன்று வரை பழைய சம்ஸ்காரங்களே உங்களை ஆத்ம உணர்வில் இருந்து சரீர உணர்விற்குக் கொண்டு வந்து, நீங்கள் வீழ்ச்சி அடைவதற்குப் பிரதான காரணமாக உள்ளது என்பதை பாப்தாதா சோதித்துக் கண்டறிந்துள்ளார். நீங்கள் சம்ஸ்காரங்களை முடித்திருந்தாலும், இப்பொழுதும் ஏதாவது ஒரு சம்ஸ்காரம் சுபாவம் என்ற வடிவில் தனது வேலையைத் தொடர்ந்தும் செய்கின்றது. சரீர உணர்வின் சுபாவம் இயல்பாகவே உள்ளதைப் போன்று, ஆத்ம உணர்வின் சுபாவம் அவ்வாறு இயல்பாக இருப்பதில்லை. நீங்கள் அதனை முடித்து விட்டதாகக் கூறினாலும், அதன் விதையை நீங்கள் முற்றாக எரிக்கவில்லை. ஆகையாலேயே, நேரம் வரும்போது சரீர உணர்வு வெளிப்படுகின்றது. எனவே நாங்கள் விரும்பாவிட்டாலும் அது சிலவேளையில் வந்து விடுகின்றது என்று குழந்தைகள் கூறுவதால், இப்பொழுது மிகவும் சக்திமிக்க ஆத்ம உணர்வின் ஸ்திதியினால், சரீர உணர்வினதும் அதன் வம்சத்தினதும் சுபாவத்தை அழிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அது ஏன் வெளிப்படுகின்றது? அதன் சுவடு இன்னமும் இருப்பதனாலேயே, அதன் வம்சம் இன்னமும் வெளிப்படுகின்றது. எனவே இப்பொழுது சக்தியின் வடிவம் ஆகவேண்டிய அவசியம் உள்ளது. உங்களின் சரீர உணர்வின் பழைய சம்ஸ்காரங்கள், அதன் சுவடு என்ற வடிவில் இன்னமும் எஞ்சியுள்ளனவா என்ற சுய பரிசோதனை செய்து பார்ப்பதே இதற்கான வழியாகும். அப்போது, உங்களின் எல்லையற்ற ஆர்வமின்மை என்ற மனோபாவத்தினால் அது முடிவடைந்து விடும். நீங்கள் செய்யும் சேவையைப் பார்க்கும் போதும் அதனைப் பற்றி கேள்விப்படும் போதும் பாப்தாதா பூரிப்படைகின்றார். ஆனால் மக்கள் உங்களின் சேவையின் பிரகாசத்தையும் ஆன்மீக போதையையும் காண வேண்டும் என்பதே தந்தையின் இப்போதைய விருப்பமாகும். அவர்களால் சேவையினூடாக ஓர் அனுபவத்தைப் பெற முடியும். அவ்வாறே எல்லையற்ற விருப்பமின்மையின் மனோபாவத்தின் தாக்கமும் இருக்க வேண்டும். ஏனெனில், சேவையோடு சேர்ந்து உங்கள் புகழும் அதிகரிக்கும். சடப்பொருள் உங்கள் சேவகன் ஆகிவிடும். அவை உங்களின் மூலம் ஓர் அனுபவத்தைப் பெறும். வசதிகள் அதிகரிக்கும். ஆனால் நீங்கள் எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டிருப்பதன் மூலம், வசதிகளைப் பயன்படுத்துவதிலும் ஆன்மீக முயற்சி செய்வதிலும் ஒரு சமநிலையைப் பேணலாம். இல்லறத்தில் உள்ளவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யும் போதும் ஒரு கர்மயோகியாக அனைத்தையும் செய்யுங்கள் என்ற தாமரையின் உதாரணத்தை நீங்கள் காட்டுவதைப் போன்று, நீங்கள் அனைவருக்கும் சேவை செய்யும் போதும், நீங்கள் எல்லா வசதிகளைப் பெற்றுக் கொண்டாலும், அந்த வசதிகளுக்கும் ஆன்மீக முயற்சிக்கும் இடையில் ஒரு சமநிலையை பேணப்படும். எனவே, இப்பொழுது இது மேலதிகமாக சேர்க்கப்பட வேண்டும்: நீங்கள் செய்யும் சேவையோடு, எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்திற்கான அவசியம் உள்ளது. நீங்கள் நடமாடித்திரியும் போதெல்லாம், நீங்கள் விசேடமான ஆத்மாக்கள் என்ற அனுபவத்தை அவர்கள் பெற வேண்டும். நீங்கள் யோகத்தில் அமர்ந்திருக்கும் போதோ அல்லது சொற்பொழிவாற்றும் போதோ மாத்திரம் அல்லாது, நீங்கள் நடமாடித்திரியும் போதெல்லாம் அவர்கள் அமைதியின், சக்தியின், சந்தோஷத்தின் அனுபவத்தை உங்கள் நெற்றியினூடாகப் பெற வேண்டும். ஏனென்றால், காலம் இப்போது மாறுகின்றது.

நேரத்திற்கு நேரம், பாப்தாதா ஏற்கனவே உங்களுக்கு சமிக்கைகளைக் கொடுத்துள்ளார். ஆனால் இன்று, பாப்தாதா எல்லையற்ற ஆர்வமின்மைக்கான மனோபாவம் கொண்டிருப்பதையே விசேடமான சமிக்கையாகக் கொடுக்கின்றார். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும், ஆத்ம உணர்வுடையவர் ஆகுவதற்குத் தடையாக உள்ள சரீர உணர்வைச் சோதித்துப் பாருங்கள். நீங்கள் பலவகையான சரீர உணர்வுகளை அனுபவம் செய்கின்றீர்கள். நீங்கள் அவற்றை மாற்ற வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் உங்களது நீண்ட காலத்தைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். நீண்ட காலத்திற்கான பயிற்சியின் அவசியம் உள்ளது. நீண்ட காலத்திற்கான முயற்சி, நீண்ட காலத்திற்கான வெகுமதியைப் பெற்றுத் தருகின்றது. இப்பொழுது நீங்கள் நீண்ட காலத்திற்குக் குறைந்தளவு கவனம் செலுத்தினால், இறுதி நேரத்தில், நீண்ட காலத்திற்கான சேமிப்பை உங்களால் பெற்றுக் கொள்ள முடியாது. அப்பொழுது ‘காலம் கடந்து விட்டது’ என்று அறிவிக்கப்பட்டுவிடும். ஆகையாலேயே பாப்தாதா அடுத்த பருவ காலத்திற்கு வீட்டுவேலை கொடுக்கின்றார். இந்தச் சரீர உணர்வே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்றது. எனினும் சில குழந்தைகள் களிப்பு ஊட்டுகிறார்கள்: நாங்கள் நேரத்திற்கு சரியாகி விடுவோம் என்று தந்தைக்கு உறுதி அளிக்கிறார்கள். பாப்தாதா வினவுகின்றார்: நேரமா உங்கள் ஆசிரியர்? நீங்கள் நேரத்திற்கு தயாராக இருந்தால், உங்கள் ஆசிரியர் யார்? உங்கள் படைப்பான நேரம், உங்கள் ஆசிரியராக இருப்பதை நீங்கள் விரும்புவீர்களா? ஆகையாலேயே, நீங்கள் நேரத்தை நெருங்கச் செய்ய வேண்டும். நீங்களே நேரத்தை நெருங்கச் செய்யப் போகின்றவர்கள். நீங்கள் நேரத்தில் தங்கியிருக்கப் போவதில்லை. நேரத்தை உங்கள் ஆசிரியர் ஆக்காதீர்கள்.

எனவே, இன்று, பாப்தாதா மீண்டும் மீண்டும் உங்களுக்குக் கொடுக்கும் சமிக்கை: உங்களைச் சோதித்துப் பாருங்கள்! மீண்டும் மீண்டும் உங்களைச் சோதித்துப் பார்த்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! நீண்ட காலத்திற்கான மாற்றம், நீண்ட காலத்திற்கு வெகுமதிக்கான உரிமையைப் பெற்றுத்தரும். எனவே, இன்று வரை நீங்கள் மெதுவாக முயற்சி செய்பவராக இருந்திப்பினும், இறுதி இலக்கக் குழந்தையின் மீதும் தந்தைக்கு அன்புள்ளது. அவருக்கு அன்பு இருப்பதாலேயே நீங்கள் தந்தைக்கு உரியவராக உள்ளீர்கள். நீங்கள் தந்தையை இனங்கண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ‘எனது பாபா’ என்று கூறுகின்றீர்கள், எனவே நீங்கள் நேரத்தில் தங்கியிருக்கக் கூடாது. அந்த நேரம் வரமாட்டாது. நீங்கள் முடிவுக்கான காலத்தைக் கொண்டு வரவேண்டும். நீங்கள் அனைவரும் உலக மாற்றம் என்ற பாப்தாதாவின் பணிக்கான சகபாடிகள் ஆவீர்கள். தந்தை மாத்திரம் இப் பணியை மேற்கொள்ள மாட்டார். அவருக்கு குழந்தைகளான உங்களின் சகவாசம் தேவை. தந்தை கூறுகின்றார்: முதலில், குழந்தைகள். குழந்தைகளே முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, நீங்கள் அடுத்த பருவகாலத்திற்கும் இங்கு நிச்சயமாக வர விரும்பினால், நீங்கள் வீட்டுவேலையை செய்து முடித்து விடுவீர்கள், அல்லவா? நீங்கள் அதைச் செய்வீர்களா? ஆம், உங்கள் கைகளை உயர்த்துங்கள்! நல்லது. பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தமது கைகளை அசைக்கின்றார்கள்.

பாருங்கள், இன்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவர்கள் அனைவரும் எவ்வாறு உறங்குகின்றார்கள் என்றும் நீண்ட வரிசையில் நின்று உண்ணுகின்றார்கள் என்றும் பார்ப்பதற்கான சமிக்கையை பாப்தாதா இந்தக் குழந்தைக்குக் (தாதி குல்சாருக்கு) கொடுத்தார். எவ்வாறாயினும் அனைவரின் முகங்களிலும் சந்தோஷம் இருந்தது. ‘குறைந்தபட்சம் நாங்கள் மதுவனத்தில் இருக்கிறோம்’. எவ்வாறாயினும், இந்த சந்தோஷத்தை மதுவனத்திலேயே விட்டுச் சென்று விடாதீர்கள். அதனை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சூட்சும உலகில் அமர்ந்திருக்கும் பொழுது, நீங்கள் அனைவரும் உறங்குகின்ற மற்றும் வரிசையில் நின்று கொண்டிருக்கின்ற காட்சியை பாப்தாதா கண்டார். உங்களுக்குப் இப்பொழுதே போர்வைகளையும், மெத்தைகளையும் பொழிய வேண்டும் என்ற எண்ணம் பாப்தாதாவிற்கு ஏற்பட்டது. எவ்வாறாயினும், இதுவும் சந்தோஷமான ஒன்றுகூடல் ஆகும்! பாப்தாதா அதை மிகவும் தெளிவாகப் பார்த்தார். உங்களுக்கு எங்கு, எப்படி இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் உங்களில் பெரும்பான்மையானோர் அதில் மிகவும் சிறப்பாக சித்தி அடைந்து விட்டீர்கள். அதற்காக நீங்கள் கைதட்டலாம். எவ்வாறாயினும், இந்த வீட்டுவேலையை மறந்து விடாதீர்கள். இதற்கு நீங்கள் கைதட்டுகிறீர்கள் இல்லை. பாப்தாதா, விசேடமாக தந்தை பிரம்மா, குழந்தைகளே மதுவனத்தின் அலங்காரங்கள் என்று கூறுவதுண்டு. எனவே நீங்கள் அனைவரும் மதுவனத்திற்கு வந்துள்ளீர்கள். பாப்தாதாவும் இந்த பௌதீக வடிவினூடாக இந்த மிகப் பெரிய குடும்பத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றார். நீங்கள் இதனைச் சகித்துக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் சகிப்பதால், இது எக்காலத்திற்கும் உங்கள் சகிப்புத்தன்மைக்கான சக்தியை அதிகரிக்கும். நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றீர்கள், அல்லவா? உங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை, அல்லவா? இது பெரிய குடும்பமாக இருந்தாலும், எப்படியோ தொடர்ந்தும் உங்களுக்குத் தண்ணீர் கிடைத்தது. நீங்கள் அனைவரும் தண்ணீரைப் பயன்படுத்தினீர்கள், அப்படித்தானே? தட்டுப்பாடு இருப்பதால், நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இக்காலத்தில், வேறு இடங்களில் குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லாதுள்ளது. ஆனால் இங்கோ, உங்களுக்கு உடுப்பு தோய்ப்பதற்குக் கூட தண்ணீர் இருந்தது. இந்த மிகப் பெரிய குடும்பத்தைப் பார்ப்பதில் சந்தோஷமும் உள்ளது. முழுச் சக்கரத்திலும் இவ்வளவு பெரியதொரு குடும்பம் வேறு எவருக்கும் இருப்பதில்லை என்ற ஆன்மீக போதை பாப்தாதாவிற்கு உள்ளது. நல்லது.

பாப்தாதா ஆசிரியர்களான உங்களுக்கு ஒரு விசேடமான சேவையைச் செய்வதற்கு, நீங்கள் செய்ய வேண்டிய ஒரு வீட்டுவேலையை ஞாபகப்படுத்துகின்றார். ஆசிரியர்கள் தம்மை பாப்தாதாவின் உண்மையான சகபாடிகளாகவும், நெருங்கிய சகவாசிகளாகவும், தம் மூலமாகவே தந்தை வெளிப்படுத்தப்படப் போகின்றார் என்றும் கருத வேண்டும் என்பதே ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் வீட்டுவேலை ஆகும். உங்களைப் பார்ப்பவர்கள் வியக்க வேண்டும்: இவர்களை இவ்வாறு ஆக்கியவர் யார்? யார் இவர்களின் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார்? அவர்கள் உங்களைப் பார்க்கக் கூடாது, தந்தையையே பார்க்க வேண்டும். உங்களின் வீட்டுவேலையாக, நீங்கள் இந்த சுயமரியாதையில் இன்னமும் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் இருக்க வேண்டும். அதன் பின்னர் பாப்தாதா உங்கள் வீட்டுவேலையைப் பற்றி உங்களிடம் வினவுவார். நீங்கள் ஒவ்வொருவரும் அதில் எத்தனை சதவீதம் அடைந்துள்ளீர்கள்? பாபா அதிகளவு செய்திகளைப் பற்றி வினவ மாட்டார். ஆனால் வீட்டுவேலையில் எத்தனை சதவீதத்தை அடைந்துள்ளீர்கள் என்று வினவுவார். நீங்கள் தென்படக்கூடாது, தந்தையே தென்பட வேண்டும். அனைத்துத் தாரணையும் இதில் அடங்குகின்றது. பாப்தாதா மதுவன வாசிகளுக்கு அன்பையும் நினைவுகளையும் கொடுக்கின்றார். ஆனால் மதுவனத்தைச் சூழ உள்ளவர்களும், மதுவன வாசிகளும், மதுவனத்தைச் சேர்ந்த ஒவ்வோர் இரத்தினமும், தாம் தந்தையை வெளிப்படுத்துவதற்கான கருவிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, எப்பொழுதுமே மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், மனதினால் சேவை செய்பவர்களுக்கும், நடத்தையால் சேவை செய்பவர்களுக்கும் உதாரணமாக இருப்பதுடன் தந்தையைப் போன்றிருப்பவர்கள் என்பதற்கும் உதாரணமாக இருக்க வேண்டும். மதுவனத்தைச் சேர்ந்தவர்கள், இதற்கான பெறுபேற்றைக் காட்ட வேண்டும்: என் மூலமாக நான் தந்தையின் ரூபத்தைக் காட்டினேனா? அனைவரது உதடுகளிலும் ஆஹா பாபாவின் குழந்தைகளே ஆஹா! என்பதே வெளிப்பட வேண்டும். எனவே, நீங்கள் அனைவரும் என்ன செய்யப் போகின்றீர்கள்? நீங்கள் அனைவரும் உங்களை உதாரணங்களாகக் காட்ட வேண்டும். அது வரிசைக்கிரமமானவர்கள் அல்ல, ஆனால் முதல் இலக்கத்தினர் என்பதாக இருக்க வேண்டும். வரிசைக்கிரமமாக இருப்பதில் சந்தோஷம் இருப்பதில்லை. நீங்கள் ஏதாவது ஒன்றை அடைய விரும்பினால், அது முதல் இலக்கம் உடையவர் ஆக வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். வரிசைக்கிரமமாக வருவது பெரிய விடயமா? எனவே, நீங்கள் அனைவரும் ‘வெற்றியாளர் மற்றும் முதலாவது’ என்ற பெறுபேற்றையே கொடுக்க வேண்டும். நல்லது.

எங்கும் உள்ள, தந்தையின் இதயசிம்மாசனத்தில் அமர்ந்துள்ளவர்களும், நெற்றியின் நடுவில் உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளவர்களும், அத்துடன் எதிர்கால அரச சிம்மாசனத்தில் அமரப் போகின்றவர்களுமான, அத்தகைய நீண்ட காலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள பாப்தாதாவின் குழந்தைகளும், பற்பல மில்லியன் மடங்கு பாக்கியசாலிக் குழந்தைகளும், எப்பொழுதுமே தமது கண்களின் மூலம் ஆன்மீகத்தின் அனுபவத்தைக் கொடுப்பவர்களும், தமது முகத்தில் எப்பொழுதுமே சந்தோஷத்தின் பாக்கியத்தைக் கொண்டிருக்கின்றவர்களும், எப்பொழுதுமே தமது மனதில் சந்தோஷ நடனமாடிக் கொண்டிருக்கின்ற எங்குமுள்ள குழந்தைகள் அனைவருக்கும், உங்கள் முன்னிலையிலும் வருகின்ற எவரும் இத்தகையதொரு சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்ற அனுபவத்தைப் பெற வேண்டும். அதன் பின்னர் அவர்கள் இந்தப் பாடத்தைக் கற்றுத் திரும்பிச் செல்ல வேண்டும். இவ்வாறாக தந்தையின் ஒவ்வொரு குழந்தையும் தந்தையின் அனுபவத்தை தம் மூலமும், வார்த்தையின் மூலம் அறிமுகத்தையும் கொடுக்கின்றார்கள். எவ்வாறாயினும், உங்களின் கண்களினாலும், முகத்தினாலும் தந்தையின் காட்சியைக் கொடுப்பவர்களுக்கும், கடிதங்களும், ஈமெயிலும் அனுப்பியுள்ள எங்குமுள்ள அத்தகைய குழந்தைகள் அனைவருக்கும், நீங்கள் அனுப்பியவை அனைத்தும் பாப்தாதாவை வந்தடைந்தன. இவை நீங்கள் அனுப்புவதற்காக நினைத்த கணமே பாப்தாவை வந்தடைந்து விட்டன. ஆகையால், பற்பல பாராட்டுக்கள். இங்கும் வெளிநாட்டிலும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் உங்களின் இதயத்தில் கொண்டிருக்கின்ற அன்பிற்கான பிரதிபலனை பாப்தாதா கொடுக்கின்றார். எனவே, எங்கும் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், பாப்தாதா இதயபூர்வமாக பற்பல மில்லியன் மடங்கு அன்பையும் பிரியத்தையும் கொடுத்து, அனைவருக்கும் நமஸ்தே கூறுகின்றார்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர் இலகு மற்றும் இயல்பான யோகியாகி, செயல்களைச் செய்யும்போது, எந்தவிதமான கர்ம பந்தனத்தில் இருந்தும் விடுபட்டு இருப்பீர்களாக.

மகாவீர் குழந்தைகளால் இந்த பௌதீக உலகின் கவர்ச்சியான எதனாலும் ஈர்க்கப்பட முடியாது. அவர்கள் ஒரு விநாடியில் தங்களைப் பற்றற்றவர்களாகவும் தந்தையின் மீது அன்பானவர்களாகவும் ஆக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரு வழிகாட்டலைப் பெற்ற உடனேயே, தமது சரீரங்களில் இருந்து பற்றற்று இருப்பதை அனுபவம் செய்பவர்கள், சரீரமற்றவர்களாகவும் ஆத்ம உணர்விலும் இருந்து பந்தனத்தில் இருந்து விடுபட்டு இருப்பதுடன் யோகியுக்தாகவும் இருப்பவர்கள், இலகு யோகிகள், இயல்பான யோகிகள், கர்ம யோகிகள், மேன்மையான யோகிகள் ஆகுகிறார்கள். அவர்களால் தமது எண்ணங்களையும் தமது மூச்சையும், பிராணேஸ்வரரான தந்தையின் நினைவில், தாம் விரும்பிய வேளையில், விரும்பும் அளவு நேரத்திற்கு ஒன்றுகுவிக்க முடியும்.

சுலோகம்:
நிலையான மற்றும் ஸ்திரமான ஸ்திதி என்ற மேன்மையான ஆசனத்தில் அமர்ந்திருப்பதே, ஒரு தபஸ்வி ஆத்மாவின் அடையாளம் ஆகும்.

அவ்யக்த சமிக்கை: உங்களின் நம்பிக்கையின் அத்திவாரத்தைப் பலமானது ஆக்கி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் ஆகுங்கள்.

நீங்கள் தந்தைக்குச் சொந்தமானவர்களாகி, எண்ணற்ற தடவைகள் மாயையை வென்றவர்கள் ஆகியுள்ளீர்கள் என்ற நம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் சக்தியைக் கொண்டிருங்கள். எனவே, இப்போது அப்படி ஆகுவதில் என்ன சிரமம் உள்ளது? மேன்மையான ஆத்மாவான நீங்கள், பல தடவைகள் வெற்றியாளர் என்ற பாகத்தை நடித்துள்ளீர்கள் என்ற தெளிவான விழிப்புணர்வு உங்களுக்கு இல்லையா? இந்த விழிப்புணர்வு உங்களிடம் தெளிவாக இல்லாவிட்டால், நீங்கள் தந்தையின் முன்னால் உங்களைத் தெளிவாக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.